சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் விடுதலைப் போராட்ட வீரர் என்பதையும், பொதுவுடைமை இயக்க முன்னோடி என்பதையும், தொழிற்சங்க இயக்கத் தந்தை என்பதையும் நம்மில் பலர் நன்கு அறிவோம். அவர் இயங்கிக் கொண்டிருந்த அனைத்து இயக்கங்களிலும் போராட்ட குணம் வாய்ந்தவராகவே இருந்துள்ளார். இந்தப் போராட்ட வுணர்வு அவருக்கு இறுதி நாள்வரை இருந்து வந்தது; சுருங்கக்கூறின் அவரொரு போராட்டம் மிகுந்த தலைவர்; மனித உரிமைப் போராளி. இப்பண்பு இவரிடம் உறுதிப்பட்டிருந்ததால் எதிலும் கண்டிப்புள்ளவராகவே இருந்துள்ளார்.

singaravelar 350இந்தக் கண்டிப்பும், கட்டுப்பாடும் அவரது எழுத்திலும் பேச்சிலும் நடைமுறை வாழ்விலும் பின்னிப் பிணைந்தே இருந்தன; இவற்றால் எதிலும் சமரசம் செய்து கொள்ளாமல் “வெட்டு ஒன்று, துண்டு இரண்டு” என்ற நோக்குடையவராகவே வாழ்ந்து உள்ளார்; எதனையும் மூடி மறைக்கவோ மழுப்ப வோ அவருக்குத் தெரியாது; எதனையும் வெளிப் படையாகவே பேசுபவர்; அஞ்சாமை அவரது பிறவிக்குணம் “அஞ்சாமை அல்லால் துணை வேண்டா” என்னும் குறளுக்கு அவர் இலக்கண மானவர்; அதனால்தான் புரட்சிக்கவிஞர் பாரதி தாசனார் அவரைப் “போர்க்குணம் மிகுந்த செயல் முன்னோடி” என்றும் “கூரிய எஃகினும் ஊட்டம் வாய்ந்தவன்” என்றும் போற்றிப் பாடினார்.

இப்பண்புகள் அவரிடம் குடிகொண்டிருந்த தால் காலம் தவறாமையில் அவர் குறியாக இருந்துள்ளார். எந்த நிகழ்ச்சிக்குச் செல் வதாக இருந்தாலும் நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பே அவர் சென்று விடுவார் என்று ம.பொ.சி எழுதியிருப்பது இங்கு எண்ணத்தக்கது. இதனைப் போன்றே யாராவது தன்னைச் சந்திக்க விரும்பினால் முன்கூட்டியே அறிவித்துக் குறித்த நேரத்தில் வர வேண்டுமென விரும்பியுள்ளார்.

முன் அறிவிப் பின்றி அவரைச் சாதாரணமாகச் சந்தித்து விட முடியாது. ஒருமுறை தொழிற்சங்கத் தலைவர் தன்னைச் சந்திக்க வரும்போது ஏற்கனவே அறிவித் திருந்த நேரத்திற்கு மாறாகச் சற்றுக்காலம் கடந்து வந்ததால் அவரை அவர் பார்க்க மறுத்திருக்கிறார்; இதிலிருந்து அவரது கண்டிப்பையும் கடுமையையும் உணரலாம். இந்தக் கண்டிப்பும் கடுமையும் அவரது ஆளுமையின் ஒருபுறம்; கனிவு அவரது மற்றொரு புறம். இந்தக் கனிவுதான் அவரைக் குழந்தை களிடத்துப் பேரன்பு கொண்டவராக ஆக்கியது.

அவருடைய இல்லத்தில் அவரைச் சந்திப்பவர் யாரானாலும் முன்கூட்டித் தெரிவித்துத்தான் செல்லவேண்டும்; ஆனால் குழந்தைகளோ (பிற வீட்டுக் குழந்தைகளும்) அவரைக் கேளாமலேயே அவரது இல்லத்தில் செல்லலாம். குழந்தைகளுக்கு மட்டும் அந்த அனுமதி உண்டு; காரணம், குழந்தை களிடத்து அத்துணை அன்பு கொண்டிருந்தார் என்பதேயாகும். 1923-ஆம் ஆண்டில் முதன்முதலாக மே நன்னாளைக் கொண்டாடிய போதும், அதனைத் தொடர்ந்து கொண்டாடிய போதும், ஒவ்வொரு முறையும் குழந்தைகளுக்கு இனிப்பு வழங்குவதை அவர் என்றும் மறந்ததில்லை. அதனை அவர்
ஒரு முக்கிய குறிக்கோளாகவே கொண்டிருந்து உள்ளார். குழந்தைகளை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்துவதற்காகத் தம் இல்லத்தில் குழந்தை களுக்காக ஒரு நாளைத் தெரிந்தெடுத்துப் பால் பாயசம் நாள், லட்டு நாள் என்று அறிவித்து வீட்டுக் குழந்தைகளுக்கும் பிற குழந்தைகளுக்கும் அவற்றை வழங்குவதை அவர் வாடிக்கையாகக் கொண்டிருந்துள்ளார்.

1924-ஆம் ஆண்டில், அவர் சென்னை நகராண்மைக் கழகத்தில் உறுப்பினராக இருந்த போது, 1921-ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்திய மாணவர்களுக்கான பகலுணவுத் திட்டம் நிறுத்தப் பட்டிருந்ததை அறிந்து மீண்டும் அந்தத் திட்டத் திற்கு உயிர் கொடுத்துத் தொடர வைத்துள்ளார். அதோடு, அவர் நிறைவு கொள்ளாமல் பள்ளிக் குழந்தைகளுக்குப் பால் வழங்கவும் ஏற்பாடு செய்துள்ளார். மத்திய உணவுத் திட்டத்தை நிறை வேற்றி நகராண்மைக் கழகத்தில் அவர் கீழுள்ள வாறு உரையாற்றிருப்பது இங்குக் குறிக்கத்தக்கது.

“வறுமை என்பது என்னவென்பது நமக்குத் தெரியும். உணவும் உடையுமில்லாமல் எழுதும் பலகைகளுக்கும், புத்தகங்களுக்கும் எவ்வளவு பணம் செலவழித்தாலும் அது வீண். பல குழந்தை களுக்கு ஒரு நாளைக்கு ஒருவேளை உணவு கூடக் கிடைப்பதில்லை என்பது நமக்குத் தெரியும். இதை அளிப்பதற்கு நாம் ஏற்பாடு செய்தால் சட்டத்தின் படியும், பொது சுகாதாரத்துக்காகச் செய்ய வேண்டிய கடமைப் பணிகள் என்றுள்ள சட்டத்தின் படியும் ஏழைக் குழந்தைகளுக்கு உணவளித்து உடையையும் அளிக்க நமக்கு நகராண்மைக் கழகத்திற்கு அதிகாரம் உண்டு”.

இக்குறிப்பை நோக்கினால், அவர் அக்காலத்தி லேயே சிறார்களுக்கு உணவு அளிப்பதோடு உடையையும் வழங்க விரும்பியுள்ளார் என்பதை உணரலாம். மேலும் மாதம் ரூ 50-க்கும் குறைவான வருமானமுடைய குடும்பத்து ஏழைக் குழந்தை களுக்குப் பணவுதவி செய்யும் திட்டத்தைக் கொண்டு வந்துள்ளார். மற்றும் குழந்தைகளின் பயன்பாட்டிற் காகத் தனிபூங்காக்களை அமைக்க வேண்டுமெனத் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றியுள்ளார். வடசென்னை, இராயபுரம் பாலத்தையொட்டி அமைந்துள்ள மாடிப் பூங்கா அப்படிக் குழந்தை களுக்காக அமைக்கப்பட்டதேயாகும்.

சிங்கார வேலர் நகராண்மைக் கழக உறுப்பினராக இருந்த போது கல்வி நிலைக்குழுவின் தலைவராக இருந்து குழந்தைகளின் வளர்ச்சிக்காகத் தனிக்கவனம் செலுத்தியுள்ளார். அப்படித் தலைவராக இருந்த போது நகராட்சி ஆளுகையிலிருந்த 78 பள்ளி களை மூன்றாண்டுகளில் 94 பள்ளிகளாகப் பெருக்கி யுள்ளார். இது, அவரது தனித்திறனைக் காட்டுவ தாகும். மற்றும் சென்னையிலுள்ள தனியார் பள்ளிகளை நகராண்மைக் கழகமே ஏற்று நடத்த வேண்டும் என்றார். ஏழைக் குழந்தைகளின் கல்விக் காகவே அவ்வாறு முயன்றுள்ளார்.

சென்னையில் 1926-ஆம் ஆண்டில், பள்ளி களில் குழந்தைகளைப் பிரம்பால் அடிக்கும் உரிமை வேண்டுமென்று ஆசிரியர் சங்கம் முடிவெடுத்துச் செய்தித்தாளில் அறிவித்தபோது, அதனையறிந்து வெகுண்டு சிங்காரவேலர் பிரம்பால் அடிக்கும் முடிவைத் தடுத்து நிறுத்தினார். தத்துவப் பேரறிஞர் பெர்ட்ராண்டு ரசல் தம் மனைவியோடு இணைந்து குழந்தைகள் பள்ளி நடத்தியபோதுதான் குழந்தை களின் மனநிலையை உள்ளவாறு புரிந்துகொள்ள முடிந்தது என்றார். குழந்தைகள் மீது எந்நிலையிலும் வன்முறையைப் பயன்படுத்தக் கூடாது என்றார். இதனைச் சிங்காரவேலரின் செயற்பாட்டோடு ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். குழந்தைகளை அன்பான சொற்களாலும், அன்பான ஆதரவான செயல்களாலுமே குழந்தைகளை அணுகவேண்டு மென்பது அவரது நிலைப்பாடு.

சென்னையில் 1925-ஆம் ஆண்டில் குழந்தைகளின் இறப்பு அதிகமாக இருந்ததால் அதனைத் தடுக்க நகர சபையில் பேசி குழந்தை இறப்பைத் தடுக்க நகராட்சி பெருந்தொகையை ஒதுக்கி நகர சுகாதாரத்திற்கும், மருத்துவ உதவிக்கும் செய லாற்ற வேண்டுமென வலியுறுத்தியுள்ளார். நகர சுகாதாரத்தில் இவரைப் போன்று அக்கறை கொண்ட வேறொருவரைப் பார்ப்பது மிகக் கடினம்.

நோய்கள் பெரிதும் சுகாதாரமின்மையால் வரு வதால் அவர் சுகாதாரத்தில் மிகுந்த ஈடுபாடும் அக்கறையும் கொண்டவராக இருந்துள்ளார். சென்னையில் இவரது முயற்சியினால்தான் பாதாள சாக்கடை அமைக்கும் பணி பல இடங் களில் அமைக்கப்பட்டன. சாக்கடையின் கழி வாலும் கொசுக்களாலும் தொற்றுநோய் மிகுதி யாகப் பரவுவதால் அவர் பாதாள சாக்கடை யையும், மருத்துவ உதவியையும் பெருக்கிக் காட்டி யுள்ளார். இவற்றையெல்லாம் பெரிதும். குழந்தை களின் நலனை முன்னிட்டே அவர் செய்துள்ளார்.

1823-ஆம் ஆண்டில் அவர் தொடங்கிய இந்தியத் தொழிலாளர்- விவசாயி கட்சியின் செயல்திட்டத்தில் 16- வயதுவரை எல்லோர்க்கும் இலவசக் கல்வியை அறிவித்த அவர், குழந்தைகள் ஓடி ஆடி விளையாட நல்ல விளையாட்டுத் திடல் களையும், வாசக சாலையும், நூலகமும் அமைக்க வேண்டுமென்றும் வலியுறுத்தியுள்ளார்.

மற்றும் அவர்களின் மகிழ்ச்சிக்காகப் பொழுதுபோக்கு வசதிகளையும் அமைத்துத்தர வேண்டுமெனக் கூறியுள்ளார். இவரது குழந்தைகளின் வளர்ச்சியை முன்னிட்டுப் பலநிலைகளிலும் தொலை நோக் கோடு சிந்தித்த சிந்தனையாளர்தான் அவர். குழந் தைகள் மீது அக்கறை கொண்டதில் அவரொரு தனிநாயகர். அவரது குழந்தை அன்பு அத்தகையது. அதனாற்றான் அவரை,

“திங்கள் ஒளிபோல் அன்பில் குளித்தவன்
செங்கதிர் ஒளிபோல் அறிவில் தெளிந்தவன்”

என்றார் பாரதிதாசனார்.