தந்தை பெரியாரும், சிந்தனைச்சிற்பி சிங்கார வேலரும் இந்திய துணைக் கண்டத்தின் ஒப்புயர் வற்ற சிந்தனையாளர்கள், புரட்சிச் சிந்தனை யாளர்கள். உள்ளொன்று வைத்துப் புறமொன்று உரைக்க விரும்பாதவர்கள்; யாருக்கும் எதற்கும் அடிபணியாதவர்கள், முகமனுக்கோ தேவையற்ற சமரசத்திற்கோ இடமளிக்காதவர்கள்; உள்ளத்தில் பட்ட உண்மையை எந்நிலையிலும் மறைக்க அறியாதவர்கள்; அதனை உறுதியாக எடுத்து இயம்புபவர்கள்; “ நிலம் பெயரினும் நின்சொல் பெயரல்” என்பதற்கேற்ப வாழ்ந்தவர்கள்; உறுதிக்கே உறுதி சேர்த்தவர்கள்; உண்மை, நேர்மை, அஞ்சாமை, அறிவாளுமை ஆகியவற்றிற்கு இலக்கணமானவர்கள்; போராட்டம் என்பது இவர்களின் பிறவிக்குணம்; கொள்கைக்காக உயிரையும் இழக்கத் துணி பவர்கள்; இருவரும் புதுமை நோக்கம் கொண்ட முன்னோடி சிந்தனையாளர்கள்; பழுத்த அனுபவம் கொண்டவர்கள்.

இருவரும் சுதந்திரப் போராட்ட வீரர்கள்; ஒரே கால கட்டத்தில் காங்கிரசிலிருந்து வெளியேறி வர்கள்; ஒருவர் பார்ப்பன மேலாதிக்கத்தை எதிர்த்து வெளியேறியவர்; இரண்டாமவர் முதலாளித் துவத்தை எதிர்த்து வெளியேறியவர்; இருவரும் உறுதியான நாத்திகர்கள்; பகுத்தறிவையும், விஞ்ஞான சிந்தனையையும் இரு கண்ணெனக் கொண்டு அவற்றைப் பரப்ப உழைத்தவர்கள்; இவற்றில் இருவரும் ஈடிணையற்றவர்கள்; முன்னோடிகள். கல்லூரிக் கல்வி பெறாமலேயே சிந்தனையின் சிகரத்தை எட்டியவர் ஒருவர்; எல்லாக் கல்வியும் கற்று சிகரத்தை எட்டியவர் மற்றொருவர்.

இருவரும் சாதி-சமய மூடநம்பிக்கையை அடியோடு ஒழிக்க முனைந்தவர்கள். ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வுக்காகவே வாழ்நாள் முழுதும் உழைத்த வர்கள், பெண் முன்னேற்றம், பெண் சமத்துவம் ஆகியவற்றிற்காகப் போராடியவர்கள்; பகுத்தறி வையும் அறிவியல் சிந்தனையையும் பரப்ப இருவரும் எழுதியும் பேசியும் வந்ததுடன், அவற்றிக்காகச் சொந்தமாக இதழ்களை நடத்திய பெருமை கொண்டவர்கள்; இருவரும் நெடுங்காலம் வாழ்ந்த வர்கள்; ஒருவர் 94 ஆண்டுகள் (1879 - 1973) வாழ்ந்தவர்; மற்றொருவர் 86 ஆண்டுகள் (1860 - 1946) வாழ்ந்தவர். வாழ்நாளைப் போன்றே நெடும் பணிகளிலும் மூத்தவர்கள்; அனைத்திலும் இவர்கள் மூத்த முன்னோடிகள்; தனிப்பெரும் நாயகர்கள்; வரலாற்றுச் சாதனையாளர்கள்; வரலாற்றைப் படைத்து வரலாறாக அமைந்து விட்டவர்கள்;

தந்தை பெரியாரும், சிங்காரவேலரும் இணைந்து பணியாற்றிய காலம் தமிழகத்தின் மறக்க முடியாத முக்கிய காலம், சிந்தனைக் கிளர்ச்சியும், தத்துவ வளர்ச்சியும், அரசியல் எழுச்சியும் பெருகிய காலம், அக்காலமேயாகும். இந்தியாவுக்கு வழிகாட்டக் கூடிய சிந்தனைப் பள்ளியாகவும், மையப் புள்ளியாகவும் அக்காலப் பகுத்தறிவியக்கம் விளங்கியது. இந்தியாவிலேயே சாதி - மதத்திற்கு அப்பாற் பட்டும், கல்லாமைக்கு அப்பாற்பட்டும், தனிமனித மானத்தை, தனி மனிதச் சுயமரியாதையை உருவாக்கி வளர்த்தெடுத்த ஒரே இயக்கம் சுயமரியாதை இயக்கம் தான்; மானமும் மரியாதையும் ஒவ்வொரு மனிதனுக்கும் வேண்டிய தவிர்க்க முடியாத பண்புகளாகும்.

அவை, வளர்த்துக் காக்க வேண்டிய முக்கியப் பண்புகளாகும். அவற்றை வலியுறுத்திய ஒரே இயக்கம் சுயமரியாதை இயக்கமேயாகும். அவ்வியக்கமே மூடநம்பிக்கைகளை, சாதி-சமய- வருணப் பாகுபாட்டை ஒழிக்கும் பகுத்தறிவு இயக்க மாக வளர்ந்தது. இவ்வியக்கத்திற்கு மூலவராக இருந்தவர் தந்தை பெரியார். இதன் முக்கியத் துவத்தைக் காரண - காரியங்களோடு விளக்கி அதற்கு விஞ்ஞான வெளிச்சத்தை அளித்தவர் சிங்காரவேலர்.

மனிதன் விலங்குகளிலிருந்து, மனித அடிமைத் தனத்திலிருந்து விடுபட்டு, சரியான மனிதனாக வாழ்வதற்கு தன்மானமும், சுயமரியாதையும், பகுத்தறிவும் இன்றியமையாத பண்புகளாகும். இந்தப் பண்புகளைப் பெறாத மனிதன் மனிதன் அல்லன்; அவையே மனித மாண்புகளுக்கும், விழுமியங்களுக்கும் அடிப்படைப் பண்புகளாகும்.

இவற்றை, அரசியல் லாபம் கருதாது, மானுட வளர்ச்சி கருதி உயிர்க்கொள்கையாக வலியுறுத்திய இந்தியாவின் ஒரே இயக்கம் சுயமரியாதை - பகுத்தறிவு இயக்கம் தான், உலகிலேயே இப்படிப் பட்ட இயக்கம் இருந்ததாகத் தகவல் இல்லை; இங்கிலாந்தில், லண்டனில் தோன்றிய சமய மறுப்பு இயக்கம் விஞ்ஞான வெளிச்சத்தைப் பரப்பியது உண்மைதான்; ஆனால் அது மக்கள் இயக்கமாக மலரவில்லை; மாறவில்லை; தமிழகத்தில் தோன்றிய பகுத்தறிவு இயக்கமோ மக்கள் இயக்க மாகவே இயங்கியது; இதுதான் அதன் செம்மாந்த வெற்றி; நாளடைவில் அதன் வீரியமும் வீச்சும் குன்றியது உண்மைதான்; அதற்குப் பல்வேறு காரணங்கள் உள்ளன; உலகமயமாக்கம், தனி யுடைமையாக்கம், தாராளமயமாக்கம், எனும் பேரழிவுகளால் அவ்வியக்கம் சில பிரிவுகளாக இயங்கிக்கொண்டிருந்தாலும், “கடுகு குறைந் தாலும் காரம் குறையாது” என்பதற்கேற்ப அவை காத்திரமாகச் செயல்பட்டுக் கொண்டுதான் இருக் கின்றன; அவை போதாது என்பது உண்மை தான்; எனினும் அவை எப்படியோ தொடர்ந்து செயல் படுவது வியப்புதான்; அதற்குக் காரணம், அக்கொள்கையின் ஊற்றம்தான், உறுதிதான்; 1925 முதல் 1934 வரையுள்ள காலகட்டம் தந்தை பெரியாரும் சிங்காரவேலரும் ஒருங்கிணைந்து செயலாற்றிய காலம்.

1934ல் ஈரோட்டுத் திட்டம் காரணமாக ஏற்பட்ட கருத்து வேற்றுமையால், தந்தை பெரியாரிடமிருந்து சிங்காரவேலர் பிரிந்து சென்றார். இக்கருத்து வேற்றுமைக்குக் காரண மானவர் யார் என்பது மிக முக்கியம்; இதன் உண்மைக் காரணத்தை இங்கு விளக்க முடியாது; அதற்கு ஏற்ற இடமும் இதுவன்று; அதனை மற்றொரு கட்டுரையில் விரிவாகக் காண்போம்.

ஆனால், மிக முக்கியமாகக் குறிப்பிட வேண்டிது ஒன்றுண்டு; அதாவது, தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும் ஏற்பட வேண்டிய முக்கிய மாற்றம் பெரியார் - சிங்காரவேலர் பிரிவால் ஏற்படாமல் போய் விட்டது; இது மிகச் சோகமானது; துன்பமானது. அப்பிரிவு ஏற்படாமல் இருந்திருந்தால், கேரளாவுக்கு முன்பாக, மேற்கு வங்கத்திற்கு முன்பாகப் பொது வுடைமை ஆட்சி, தமிழகத்தில்தான் உருவாக்கப் பட்டிருக்கும். அதற்கு வாய்ப்பு இல்லமாற் போய் விட்டது. அந்த வாய்ப்பு ஏற்படுவதற்குச் சூழல் அமைந்திருந்தால், தமிழகத்தின், இந்தியாவின் தலைவிதியே (அரசியல் நிலை) வேறாக மாறியிருக்கும். இதனையும் நாம் எண்ணிப் பார்க்க வேண்டும்.

வரலாற்றைத் திரும்பிப் பார்த்தால்தான் உண்மையான வரலாற்றை நம்மால் உருவாக்க முடியும்; சரியான புரிதல் இல்லாமல், சரியான செயல்பாட்டை உருவாக்க முடியாது; கடந்த கால வரலாற்றைச் சரியாக அறியாமல், நம்மால் நிகழ் காலத்தில் சரியான வரலாற்றைப் படைக்க முடியாது; இதன் முக்கியத்துவத்தை நன்கு உணர்ந்துதான் ஜெர்மானிய தத்துவஞானி, பினோசா ஒன்றைக் குறிப்பிட்டார்.

அதாவது, “வரலாற்றிலிருந்து நாம் அறிந்து கொள்வது என்னவென்றால், வரலாற்றி லிருந்து ஒன்றும் அறிந்து கொள்ளவில்லையென்பது தான்” என்றார். இது எத்துணை அருமையான உண்மை; இந்த உண்மையை நாம் இன்றும் அறியாமலேயே உள்ளோம். அந்த உண்மையை ஒருவாறு விளக்குவதுதான் இக்கட்டுரை.

தந்தை பெரியாரும் சிங்காரவேலரும் இணைந்து செயலாற்றிய காலத்தில் பகுத்தறிவு இயக்கத்தால் நிகழ்த்தப் பெற்ற கருத்தரங்குகள், மாநாடுகள் மிக முக்கியமானவை. அவை, சாதி-சமய மூடநம்பிக்கை குறித்தும், பகுத்தறிவின் முக்கியத்துவம் குறித்தும், நல்ல புரிதலையும், தெளிவையும் ஏற்படுத்தின; மேற்சாதிகளின் ஆதிக்கத்தை ஆட்டங் காண வைத்ததோடு, மனிதனை மானத்தோடும் சுயமரியாதையோடும் வாழி வழி வகுத்தது.

இதில் சமுதாயத்தின் அடித்தட்டு மனிதர்களும் விழிப்புப் பெற்றனர். இதுதான் மிக முக்கியமானது. அதாவது முன் எப்போதும் இல்லாத ஒரு மறுமலர்ச்சி அப்போது ஏற்பட்டது; மாவட்டங்கள் தோறும் சுயமரியாதை மாநாடு, பகுத்தறிவு மாநாடு, சமதர்ம மாநாடு, சாதியொழிப்பு மாநாடு என்று நிகழ்ந்த வண்ணமே இருந்தன. இவற்றில் மிக முக்கியமானது என்னவென்றால், அம்மாநாடுகளில் பெண்கள் மிகுதியாகக் கலந்து கொண்ட தோடு, பெண்களும் பங்கேற்றுப் பேசியுள்ளது தான். இதுவும் அதுவரை தமிழகம் காணாத காட்சியாகும்.

ஏன் இந்தியாகூடக் காணாத காட்சி தான் அது. தந்தைபெரியார் இம்மாநாடுகளிலும், இயக்கச் செயற்பாடுகளிலும், தம் குடும்பப் பெண் களைப் பங்கேற்கச் செய்தார் என்பது கூடுதலான செய்தியாகும். இதனை தலைவர் பலரிடத்துக் காணமுடியாது.

பல மாநாடுகளில் பெண்களே தலைமை யேற்று உரையாற்றி உள்ளார்கள்; மாநாடுகளில் உரையாற்றியதோடு நில்லாமல், குடியரசு, பகுத்தறிவு, புரட்சி ஆகிய இதழ்களில் அறிவார்ந்த கட்டுரை களை எழுதியுள்ளார்கள்; வாதப் போர்களில் ஈடுபட்டு அரிய கட்டுரைகளை வரைந்துள்ளார்கள்; மேற்குறித்த மாநாடுகளில் பலவற்றில் சிங்கார வேலர் தலைமையேற்று ஆற்றிய உரைகள் பொருள் மிக்கவை; புதுமைச் சிந்தனைகள் கொண்டவை.

குறிப்பாக, அவர் நாத்திக மாநாட்டிலும், சமதர்ம மாநாட்டிலும் ஆற்றிய உரைகள் மிகக் காத்திர மானவை; அவ்வுரைகள் காற்றோடு கலந்துவிட இடம் தராமல், அவற்றை தந்தை பெரியார் குடியரசில் வெளியிட்டு வருங்காலத்திற்குப் பயன் பட வைத்துள்ளார். சிங்காரவேலரின் மேதைமையை நன்றாக உணர்ந்தவர் தந்தை பெரியார். அதனால் அவர் அவரைக் குடியரசில் தொடர்ந்து எழுத வைத்தார், சிங்காரவேலரும், நாத்திகம், பகுத்தறிவு, பொருளியல், உளவியல், அரசியல், மெய்யியல், சமதர்மம் போன்றவை குறித்து ஆழமான கட்டுரை களை எழுதினார்.

இந்த எழுத்துகள் குடியரசுக்குப் புதுப்பொலிவைத் தந்தன. அப்போதுதான் தமிழகம் சமதர்மம் குறித்து ஒரு தெளிவைப் பெற்றது. பல துறையைப் பற்றிய அவரது கட்டுரைகள் குடி யரசுக்குக் கனத்தையும் அடர்த்தியையும் தந்தன; அவ்வெழுத்துக்கள் தமிழகத்தில் கிளர்ச்சியையும் எழுச்சியையும் அளித்தன. இவை குறித்து, சாமி. சிதம்பரனார் எழுதியிருப்பது நாம் உளங்கொள்ளத் தக்கது.

“தோழர் எம். சிங்காரவேலு, பி.ஏ. பி.எல்., அவர்கள் குடியரசில் எழுதி வந்த கட்டுரைகள் தமிழ்நாட்டில் சமதர்ம வெள்ளம் பெருக்கெடுத்து ஓடச் செய்தன.

இதன்பிறகு சுயமரியாதை இயக்கம் சமதர்ம பிரச்சாரத்திலும் நாளடைவில் இறங்கிவிட்டது; இதுவே இயக்கத்தின் குறிக்கோள் என்பதை ஈ.வெ.ரா பலமுறை கூறியுள்ளார்.”

தமிழர் தலைவர் - பக். 113, 109 இம்மேற்கோளால் சிங்காரவேலரின் எழுத்து களால் ஏற்பட்ட பயன்பாட்டை அறியலாம். இங்கு மற்றொன்றும் சிந்தித்துப் பார்க்கத்தக்கது. அக்காலத்தில் குடியரசு இதழ் தந்தை பெரியாரால் வெளியிடப்படவில்லை என்றால், சிங்காரவேலரின் ஆளுமையை நம்மால் அறிந்து கொள்ள முடியாத சூழல்தான் ஏற்பட்டிருக்கும். அல்லது பெரும் காலத் தாழ்வு ஏற்பட்டிருக்கும். இதற்கு நாம் தந்தை பெரியாருக்குத்தான் நன்றி செலுத்தவேண்டும்.

குடியரசு இதழ் ஓர் அறிவுக்கருவூலம்; சிந்தனைச் சுரங்கம்; தத்துவம் களஞ்சியம். இந்தப் பெருமைக்கு இந்த இரு பெரியார்கள் தாம் காரணம். குடியரசுக்கு வெள்ளையர் அரசு தடை விதித்தபோது, இதழும் பிரச்சாரமும் தொடர்ந்து நடைபெற தந்தை பெரியார் அடுத்தடுத்து பகுத்தறிவு, புரட்சி இதழ் களை நடத்தினார். அதே கொள்கையில் அதே நோக்கில் நடத்தினார். புதுமைக் கருத்துகளுக்கும், உலக சிந்தனைகளுக்கும் அவற்றில் இடம் அளித்தார்.

சிங்காரவேலர் இவ்வாய்ப்பை நன்கு பயன்படுத்திக் கொண்டு அறிவியல் சார்ந்த கட்டுரைகள் நுட்ப மான எழுதி வரலானார். இக்கட்டுரைகளைப் பின்னர் தந்தை பெரியார் சுயமரியாதை இயக்க நூல்களாகக் கொண்டு வந்தார்.

கடவுளும் பிரபஞ்சமும், மெய்ஞ்ஞான முறையும் மூடநம்பிக்கையும், (இருபாகங்கள்) சுயராஜ்யம் யாருக்கு? மனித உற்பவம் ஆகிய நூல்கள் அப்படி வெளிவந்தவையேயாகும். புத்தகங்கள் வெளி வருவதற்கு முன்னர் அவை குடியரசில் அறிவிப்பு களாக வெளிவந்துள்ளன. சிங்காரவேலர் கால மான பின்னரும், தந்தை பெரியார் அவற்றைத் தொடர்ந்து வெளியிட்டுக்கொண்டே இருந்தார். இப்போதும் வெளியிடப்பட்டுதான் வருகிறது.

இது பெரிதும் பாராட்டத்தக்கது. ஈங்கு மற்றொரு நிகழ்வை நினைவு கூர்தல் மிக முக்கியம். வெள்ளையர் அரசு கர்ப்பத்தடைச் சட்டத்தை நிறைவேற்றிய போதும், நாட்டு வறுமைக்கு மக்கள் தொகைப் பெருக்கமே முக்கியக் காரணமென்று அவ்வரசு அறிவித்தபோதும், தந்தை பெரியாரும், பலரும் அவற்றை ஆதரித்து குடியரசில் எழுதினர். சிங்கார வேலரோ அவற்றை ஏற்காது மறுத்து விஞ்ஞான அடிப்படையில் விளக்கிக் கட்டுரைகளை எழுதினார்.

தந்தை பெரியார் அறிவு நேர்மையோடு அவற்றை குடியரசில் வெளியிட்டார். மேலும் “சுயமரியாதை இயக்கமும் தற்கால நெருக்கடியும்” எனுங் கட்டுரையில் சிங்காரவேலர் இயக்கத்தினரைச் சற்றுக் கடுமையாகத் தாக்கி எழுதியிருந்தார். தந்தை பெரியார் அதற்குச் சிறிதும் சலனம் காட்டாமல் அதனையும் வெளியிட்டார். வேறு சில மாறுபட்ட கட்டுரைகளையும் அவர் வெளி யிட்டிருக்கிறார். இவை, பெரியாரின் அறிவாண் மையையும், சான்றாண்மையையும் காட்டுகின்றன. இந்த ஜனநாயகப் பண்பு யாருக்கு வரும்? அவர் தான் தந்தை பெரியார்.

சிங்காரவேலர் தந்தை பெரியாரைக் காட்டிலும் 19 வயது மூத்தவர். அவர் வயதில் மூத்தவரானாலும், தந்தை பெரியாரைத் தலைவராகக் கருதியவர். இதோ சிங்காரவேலர் கூறுவதை நோக்குங்கள்.

“தலைவர் இராமசாமியார் மார்டின் லூதரைப் போல் மதக் கற்பனைகள் நமது நாட்டினின்று ஒழியுமாறு தம் இயக்கத்திற்கு வழிகாட்டியுள்ளார். அவர் காட்டிய வழியைக் கடைப்பிடித்து நமது 35 கோடி பாமர மக்களின் அறியாமையைப் போக்க வேண்டுமென உங்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.” (1931-இல் நிகழ்ந்த சென்னைச் சுயமரியாதை மாநாட்டின் உரை). இந்தப் பெரும்பண்பு வாய்ந்தவர்தான் சிங்கார வேலர். இவர்களின் இணைவும் நட்பும் எப்படி யிருக்கிறது பாருங்கள்; சரி, அது இருக்கட்டும். சிங்காரவேலரைப் பற்றித் தந்தைபெரியார் என்ன கூறியுள்ளார்? கீழே பாருங்கள்.

“தோழர் என்று கொடுக்கப்படும் அடை மொழி அவருக்குத்தான் இருந்தது; பொதுவுடைமை, பகுத்தறிவுச் சம்பந்தமாக அவரைப் போன்று அறிந்த வர்கள் அப்போது இல்லையென்றே கூறலாம்; அவர் எப்போதும் படித்துக் கொண்டே இருப் பார்; அவர் வீடே புத்தகச் சாலையாக இருந்தது.

எதனையும் ஆராய்ச்சி செய்யும் பண்பும், துணிச்சலும், தைரியமும் உடைய அவரைப் போன்ற ஆராய்ச்சியாளர்கள், நிறைய விஷயம், அறிந்து வாதிப்பவர்கள் அவருக்குப் பிறகு தோன்றவே இல்லை; தோழர் சிங்காரவேலு அவர்கள் சமுதாயக் கோளாறுகள் ஒழிவதற்காகவே பாடுபட்டவர். தோழர் சிங்காரவேலுவின் கருத்துகள் நமக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டும்”. (பொன்மலை ரயில்வே பணிமனையில் சிங்கார வேலரின் திருவுருவப் படத்தை 28. 09. 1952-இல் திறந்து வைத்து தந்தை பெரியார் ஆற்றியவுரை). தந்தை பெரியாரும் சிங்காரவேலரும் மறக்க முடியாத முன்னோடிகள், பின்பற்ற வேண்டிய வழிகாட்டிகள்; வியக்கக் கூடிய தனியாளுமைகள்; தமிழகமும், தமிழகத் தலைவர்களும் இதனைச் சரியாக உணர்ந்ததாகத் தெரியவில்லை.

இது குறித்து ஒரு நிகழ்ச்சியை எண்ணிப் பார்த்தல் மிக முக்கியமானது. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த கே.டி.கே. தங்கமணி அவர்களை, அக்கட்சியின் மூத்த தலை வரும், மேற்கு வங்கத்தின் நாடாளுமன்ற உறுப் பினராக இருந்த போராசிரியர் ஹிரேன் முகர்ஜி ஒரு கேள்வி கேட்டாராம்; அவரை நோக்கி, “இன்னும் நூறு ஆண்டுகள் கழிந்த பின்னரும், இந்திய மக்களால் போற்றப்படும் இருதலைவர்களின் பெயரைக் கூறுங்கள்” என்றாராம் ஹிரேன் முகர்ஜி. அதற்கு கே.டி.கே. தங்கமணி அவர்கள், காந்தியடிகள் நேரு போன்ற தலைவர்களின் பெயர்களைக் கூறினாராம்.

“இல்லை; இல்லை” என்றாராம் முகர்ஜி. உடனே கே.டி.கே அவர்கள் “நீங்களே சொல்லுங்கள்” என்றாராம். அதற்கு முகர்ஜி, “நூறு ஆண்டுகளுக்குப் பின்னரும் இந்திய மக்களால் போற்றப்படுபவர்களாக இருக்கும் சமுதாயத் தலைவர்கள் பெரியாரும் சிங்கார வேலரும் தாம்” என்றாராம். இதனைத் தங்கமணி அவர்கள் தினமணி நாளிதழில் எழுதியிருந்த ஒரு கட்டுரையில் குறிப்பிட்டிருந்தார். இதனை இந்திய மக்கள் சரியாக உணர நாம் வழி செய்ய வேண்டும். இந்துத்துவா பேயாட்டம் போடும் இக்காலத்தில் அதன் அவசியம் மிகத் தேவையானது; முக்கிய மானது. மதவெறியை, வருணமேலாதிக்கத்தை வேரோடுகளைய அவ்விருவர்களின் சிந்தனைகள் நமக்கு வேண்டிய அறிவாயுதங்களாகும். அவற்றை நாம் சரியாகச் சரியான நேரத்தில் பயன்படுத்தத் தவறிவிட்டோம்;

சிங்காரவேலரும் தந்தை பெரியாரும் 1934-க்குப் பின்னரும் இணைந்து தொடர்ந்து இயக்கப்பணி ஆற்றியிருந்தால், தமிழகத்தின் அரசியல் நிலை மாறியிருக்கும். அதன் வீரிய வீச்சு இந்தியாவின் மற்ற மாநிலங்களிலும் பரவியிருக்கும். எப்படியோ அது நடக்காமல் போய்விட்டது. எனினும், இனி மேல் நாமாவது அவ்விரு மேதைகளின் சிந்தனை களை இணைத்து மேலே எடுத்துச் செல்ல வேண்டும். அதற்கு வழி ஏற்படுத்துவோமாக!