செந்திலின் முகத்தில் பஞ்சு பஞ்சாய் அப்பிக் கொண்டிருந்தது போல் நாவலைப் படித்து முடித்தவுடன் மனதில் குட்டி இளவரசர்களின் சிதிலமாகிப்போன பனியன் கம்பெனி வாழ்க்கைத் துணுக்குகள் நம் மனதில் அப்பிக் கொள்கிறது. ஒரு கள, காலப் பதிவுகளின் முரண்களற்ற வெற்றிதான். இது “சாயத்திரைÓ போன்ற நட்சத்திர நாவல்.

subrabharathi manian novelகதை சொல்லியின் மொழி எந்த இடத்திலும் வாசகனுக்குச் சிக்கலை ஏற்படுத்தாத எளிமையான எதார்த்த மொழி.

கதைக் களத்தில் சிறுவர்களின் வாழ்க்கை எவ்வாறு பனியன் கம்பெனிகளின் வாசலுக்கு அவர்களைக் கொண்டு வந்து நிறுத்துகிறது என்ற கேள்விக்கான பதில்கள் நாவலெங்கும் ஆங்காங்கே யதார்த்தமான விவரணையில் கதாபாத்திரங்களின் மொழியில் சொல்லப்படுவதும் அந்த வாழ்வில் அவர்கள் இழந்து போன சுகங்களும் அவ்வாழ்க்கையில் கதாபாத்திரங்கள் ஒருவிதமான தப்பித்தலை உணர்வது போலும். இவ்வாழ்வின் சிக்கலான இண்டு இடுக்குகளையும் சொல்வதுடன் பெண்களின் அவலமான நிலையும் தாய்க்கும் மகளுக்கும் மறைப்பு ஒரு கவசமாக மாறி விடுவதும், கம்பெனியில் ஆண்களின் சிறுசிறு தொடுதல் களிலிருந்து தப்பிக்க வேண்டும் என்று மனம் நினைத்த போதிலும் தொடுதலின் சுகத்தில் காலூன்றி விடும் ஒரு தன்னிலைச் சிக்கல் சார்ந்த பெண்களின் வாழ்வும் அழகாகச் சொல்லப்பட்டிருக்கிறது.

இடையிடையே சொல்லப்படும் அம்மா சொன்ன கதை, ஆசிரியர் சொன்ன கதை, தொலைக்காட்சி சொன்ன கதை போன்ற இவையாவும் தங்கள் வாழ்வை பனியன் கம்பெனிகளில் தொலைத்த சிறுவர்களின் ஆசுவாசப்படுத்திக் கொள்ளும் இடைவேளைகளாக மிஞ்சிப் போய்விடுகின்றன. அல்லது அவை தங்கள் வாழ்வில் நினைவு கூரத்தக்க அகவய நிகழ்வுகளின் படிமங்களாக மாறி கரடுமுரடான வாழ்க்கைப் பாதைகளின் இடையே வேர் விட்டு நீட்டும் சிறிய பசிய இலைகளாக நிற்கின்றன புதிய உத்தி.... ...அடுத்து

1.         அம்மாவின் புடவை வாசனை மூக்கை இழுத்துக் கொள்ளச் செய்தது

2.         குடித்தால் சிவப்பாகி விடலாம் என்ற சிறுவர் களின் கற்பனை

3.         தேவடியாக்கீரை என்ற பெயர் இருப்பதையும் அம்மா சொன்னபோது ரொம்பவும் வெட்க மாக இருந்தது கனகுவுக்கு.

4.         என்ன சமாதானம் வேண்டியிருக்கு. இனிமேல் சிகரெட்டெல்லா குடிக்க மாட்டேன்னு சத்தியமா பண்ணனும். போடா... தலையைக் குனிந்து கொண்டு சொன்னான் செந்தில்.

போன்ற வரிகள் சிறியவர்கள் எனக் கணித்துவிட முடியாதபடிக்கு வாசிப்போடு வளர்ந்து விடும் சிறுவர்கள் தங்கள் நடவடிக்கைகளால் பெரியவர் களானாலும் தாங்கள் இன்னும் சிறுவர்களே என சட்டென நிஜத்தைத் தழுவும் கணங்கள். ஞாயிறுகளில் அவர்கள் விளையாட முடியாமல் போகையில் அவர் களுடன் நம்மையும் மனம் கனக்கச் செய்யும். சிறுவர் களின் வாழ்க்கை பறிக்கப்பட்டு பனியன் கம்பெனிகள் என்னும் பிணக்கிடங்கினுள் அவர்கள் தள்ளப்பட்டு, அவர்கள் தங்கள் வீட்டிற்குச் சம்பாதித்துக் கொடுக்கும் பணம், கனகுவின் அப்பாவின் வார்த்தைகளில் “உன்னப் படிக்க வெக்காமெ உன்னெ சம்பாதிக்கச் சொல்லி செலவு பண்ரம் பாரு அது திருட்டுப் பணமில்லாமெ என்னடா... கள்ளப்பணம்” போன்ற வரிகள் ஒளிக் கீற்றுகளாக, யதார்த்தம் சார்ந்த தீர்வுகளையும் முன் வைக்கின்றன என்ற வகையில் “பிணங்களின் முகங்கள்” உயிர்த்துடிப்புடன் இருக்கிறது.

பிணங்களின் முகங்கள்

சுப்ரபாரதிமணியன்

வெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்

41-B, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட்,

அம்பத்தூர், சென்னை - 600 098

ரூ.200/-