மகாத்மா காந்தியாக அறியப்படாத காலத்திலிருந்தே தமிழ் மக்களுடனும், தமிழ்நாட்டுடனும் காந்தியடிகள் தொடர்பை வைத்திருந்தார். தென்னாப்பிரிக்காவில் வாழ்ந்த காலம் தொட்டு 1896-ஆம் ஆண்டு முதல்

1946-ஆம் ஆண்டு வரை தமிழகத்திற்கு 20 முறை வந்திருக்கிறார். தமிழகத்தின் கலாசாரத் தலைநகரமும், கீழ்த்திசை நாடுகளின் ஏதென்ஸ் நகரமுமான, மதுரைக்கு 5 முறை வந்திருக்கிறார். அது பற்றிய விவரங்களைக் கீழே காண்போம்.

1. 1919 மார்ச் 26 முதல் 28 வரை:

ரௌலட் சட்டத்தை எதிர்த்து மக்களைத் திரட்டுவதற்கான அகில இந்திய பயணத்தின் போது மதுரையில் ஆல்பர்ட் விக்டர் பாலம் அருகில் உள்ள ஜார்ஜ் ஜோசப் வீட்டில் தங்கியிருந்தார்.

2. 1921 செப்டம்பர் 20 முதல் 22 வரை:

இவ்வருகையில்தான் மேலமாசி வீதியில் 251 எண்ணுள்ள ராம்ஜி மற்றும் கல்யாண்ஜி என்பவர்களின் வீட்டில் தங்கியிருந்தபோது செப்டம்பர் 21, 1921 நள்ளிரவில் மேலாடை களைந்து அரைமுழ ஆடை தரித்தார். 22 -ஆம் தேதி காந்திப்பொட்டல் என்று அழைக்கப்படும் இடத்தில் (தற்போது காமராஜர் சாலையில் உள்ள சூ.ஆ.ராயலு மகப்பேறு மருத்துவமனை) அரைமுழ வேஷ்டியுடன் உரையாற்றித் தன் வாழ்வின் புதிய அத்தியாயத்தைத் துவக்கினார்.

3. 1927 செப்டம்பர் 28 முதல் 30 வரை:

கதர் பிரச்சாரத்திற்காக மதுரையில் மூன்று நாட்கள் தங்கியிருந்து காதி இயக்கத்திற்கு நிதி திரட்டவும், சுதேசி கொள்கையைப் பரப்பவும், கல்பாலத்திற்கு அருகில் சிவகங்கை ராஜா வீட்டில் (தற்போது மீனாட்சி அரசினர் கல்லூரி வரலாற்றுத்துறை கட்டடம்) தங்கியிருந்தார்.

4. 1934 செப்டம்பர் 28 முதல் 30 வரை:

ஹரிஜன மேம்பாட்டிற்கு நிதி திரட்ட தக்கர்பாபா மற்றும் மீராபென்னுடன் மதுரையில் ஊஆசு ரோட்டில் உள்ள சூஆசு சுப்புராமன் வீட்டில் தங்கியிருந்தார். அப்போது தான் ஹரிஜன மக்களுக்கு மீனாட்சி அம்மன் ஆலயத்திற்குள் அனுமதி மறுக்கப்படுவதைக் கண்டித்து ஹரிஜன ஆலயப் பிரவேச இயக்கத்தைத் துவக்கினார்.

5. 1946 பிப்ரவரி 2 முதல் 4 வரை:

இறுதியாக மதுரைக்கு வந்து ஹரிஜனங்களுக்காக 1939, ஜூலை 7-இல் திறந்துவிடப்பட்ட மீனாட்சி அம்மன் கோவிலில் வழிபடுவதற்காக வந்து, மகிழ்ச்சியோடு ஆலயப்பிரவேசம் செய்தார். அப்போது மூன்று நாட்கள் கிருஷ்ணராயர் தெப்பக்குளம் ரோட்டில் உள்ள வீட்டில் தங்கியிருந்தார்.

மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகம்

இவ்வாறு காந்தியுடைய ஒவ்வொரு மதுரை வருகையும் வரலாற்றுச் சிறப்புமிக்க வருகையாகவே அமைந்தது. எனவேதான், காந்தியடிகள் சுட்டுக்கொல்லப் பட்ட பிறகு தென்னிந்தியாவிற்கான ஒரே காந்தி மியூசியத்தை மதுரையில் அமைக்கலாம் என பண்டித ஜவஹர்லால் நேரு முடிவு செய்ததில் ஆச்சர்யம் ஒன்று மில்லை. இந்தியாவின் முதல் அருங்காட்சியகமும், புராதன கட்டடமுமான இராணி மங்கம்மாள் அரண்மனை என்ற தமுக்கம் அரண்மனையில் காந்தி அருங்காட்சியகம் அமைக்கப்பட்டதற்குக் காரணம் 1921-ஆம் ஆண்டு நிகழ்ந்த அரைமுழ ஆடை அணிந்த நிகழ்ச்சிதான்.

மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகம் அமைந்துள்ள இராணி மங்கம்மாள் அரண்மனை 1670-இல் நாயக்கர் கட்டடக் கலையால் கட்டப்பட்டது. இதற்கு தமுக்கம் அரண்மனை என்ற இன்னொரு பெயரும் உண்டு. இது விஜயநகர மன்னர்களின் கோடைக்கால அரண்மனையாக இருந்தது. பின்னர் இதன் தென்பகுதி 1877-இல் விஸ்தரிக்கப்பட்டு ஆங்கில நீதிபதிகள் மற்றும் கலெக்டர்களின் இல்லமாக விளங்கியது. இப்பகுதி ஆங்கிலேய கட்டடக் கலையை உள்ளடக்கியது. இதன் வடபகுதி 1958, 1959 ஆகிய ஆண்டுகளில் விஸ்தரிக்கப்பட்டு, தமிழர்களின் நவீன கட்டடக் கலையை உள்ளடக்கியது. எனவே, மூன்று கட்டடக் கலைகளை உள்ளடக்கி கம்பீரமாய், ஒரே கட்டடமாய் கம்பீரமாகக் காட்சி தருகிறது இந்த காந்தி அருங் காட்சியகக் கட்டிடம்.

காந்தி நினைவு அருங்காட்சியகத்தின் உள்ளே “இந்திய விடுதலைப் போரட்ட வரலாறு” சிறப்புக் கண்காட்சியும், “தென்மாநிலங்களின் கைவினைப் பொருட்கள்” கண்காட்சியும், “காந்தியடிகள் வாழ்க்கை வரலாறு” கண்காட்சியும், அரிய புகைப்படங்கள் மற்றும் விளக்கக் குறிப்புகளுடன் அமைந்திருக்கின்றன. மிக முக்கியமான பகுதியாகிய காந்தியடிகள் பயன்படுத்திய மூலப்பொருட்கள் மற்றும் மாதிரிப் பொருட்கள் அடங்கிய காட்சிக்கூடம் இந்தியாவின் வேறு எந்த நகரத்திற்கும் கிடைக்காத சிறப்புகளை உள்ளடக்கியதாகும். இங்குக் காந்தியடிகள் பயன்படுத்திய 14 மூலப்பொருட்களும், 32 மாதிரிப் பொருட்களும் பாதுகாத்து வைக்கப்பட்டு உள்ளன. மிக முக்கியமாக காந்தியடிகள் சுடப்பட்டு இறந்த நேரத்தில் (30.1.1948 மாலை 5.12 மணி)அணிந்திருந்த இரத்தக்கரை படிந்த துணி, கண்ணாடிப் பேழையில் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் இருந்து இதனைக் காண்பதற்கு அறிஞர்களும், அதிகாரி களும், தலைவர்களும் இங்கு வருகிறார்கள். காந்தியடிகள் பயன்படுத்திய ஒரு ஜோடி தோல் செருப்புகள் (இறந்த மாட்டுத்தோலில் செய்தது) ஒரு ஜோடி மரச்செருப்பு, லண்டன் வட்ட மேஜை மாநாட்டில் 1931 -ஆம் ஆண்டு அணிந்திருந்த சால்வை, அன்னாரின் மூக்குக் கண்ணாடி, நாப்கின், தலையணை உறை, கம்பளி போன்ற 14 பொருட்களும், அவர் பயன்படுத்திய மூங்கில் பேனா, மரத்தட்டு,மண்சட்டி, குரங்கு பொம்மை போன்ற 32 மாதிரிப் பொருட்களும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

மேலும், மகாகவி பாரதியாரைப் பாராட்டி காந்தியடிகள் தமிழில் எழுதிய “பாரதி ஞாபகார்த்த பிரயத்தனங்களுக்கு என் ஆசீர்வாதம்” மற்றும் தமிழில் “மோ.க. காந்தி”என்ற தமிழ் வாசகங்கள் இக்கூடத்தை அலங்கரிக்கின்றன. மேலும், சர்வாதிகாரி ஹிட்லர், அமெரிக்க ஜனாதிபதி ஃபிராங்கிளின் ரூஸ்வெல்ட் மற்றும் அன்னிபெசன்ட் அம்மையார் ஆகியோருக்கு எழுதிய கடிதங்களின் நகல்களும் இங்குக் காட்சிக்கு வைக்கப் பட்டுள்ளன.

அமெரிக்க காந்தி மார்டின் லூதர் கிங்கும், அவரது துணைவியார் திருமதி கொரேட்டா ஸ்காட் கிங்கும் காந்தியடிகளின் அஹிம்சை கொள்கையைக் கற்றுக் கொள்வதற்காக 1959-இல் இவ்வளாகத்திற்கு வந்து காந்திய அறிஞர்களோடு உரையாடிச் சென்றிருக்கின்றனர். அதன் பின்னர்தான் அமெரிக்காவில் கருப்பு இன மக்களுக்கு அஹிம்சை முறையில் அவர்கள் போராடினர்.

பண்டித ஜவஹர்லால் நேரு, இந்திராகாந்தி அம்மையார், ஜெயபிரகாஷ் நாராயணன், மொரார்ஜி தேசாய், டாக்டர் ஜாஹிர் ஹுசைன், டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன், திரு.வி.வி.கிரி மற்றும் நோபல் அமைதி பரிசு பெற்ற தலாய்லாமா, வட அயர்லாந்தை சேர்ந்த திருமதி மைரட் மாகுயர் காரிகன் அம்மையார் இன்னும் பலர் இங்கு வந்து மகிழ்ந்திருக்கின்றனர்.

காந்தியடிகள் வாழ்ந்த சேவா கிராமம் காந்தி குடிசையின் மாதிரியும் இங்கு அமைக்கப்பட்டுள்ளது. காந்தியடிகளின் அஸ்தி உலகம் முழுவதும் நதிகளிலும், சமுத்திரங்களிலும் கரைக்கப்பட்டது. ஒரு சில இடங் களிலேயே அது பாதுகாத்து வைக்கப்பட்டிருக்கிறது. அவ்வாறு காந்தி மியூசிய வளாகத்தில் அமைதிப் பூங்காவில் அது பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளது. சர்வதேச பிரமுகர்கள் இங்கு மலர் வளையம் வைத்துச் செல்வது வழக்கம்.

மேலும், 35,000-க்கும் மேற்பட்ட புத்தகங்கள் மற்றும் கையெழுத்துப் பிரதிகள் இந்நூலகத்தில் அறிஞர்களுக்கும், மாணவர்களுக்கும் பயன்படுகிறது. பொதுமக்களுக்கும், மாணவர்களுக்கும் பயன்படும் வகையில் யோகா மையம் இங்குச் செயல்படுகிறது.

சிறப்புமிக்க மதுரை காந்தி நினைவு அருங்காட்சி யகத்தின் தலைவராக அருட்செல்வர் பத்மபூஷன் டாக்டர் நா.மகாலிங்கம் அவர்களும், துணைத்தலைவராக காந்திய அறிஞரும், சர்வோதய இலக்கியப்பண்ணையின் தலை வருமான வழக்கறிஞர் மு. மாரியப்பன் அவர்களும் பதவி வகிக்கின்றனர். இன்னும் பல கல்வியாளர்கள், அதிகாரிகள் காந்தியத் தலைவர்கள் காந்தி மியூசியத்தில் கௌரவ உறுப்பினர்களாகப் பதவி வகிக்கின்றனர். இது ஆண்டின் எல்லா நாட்களிலும் பொதுமக்கள் வசதிக்காக காலை 10.00 மணி முதல் மாலை 5.45 மணி வரை திறந்திருக்கும். அனுமதி இலவசம்.