dance 450‘மரம் நட்டவன்’ என்னும் பிரெஞ்சுச் சிறுகதையன்று பல ஆண்டுகளுக்கு முன்னால் மஞ்சரி இதழில் வெளிவந்திருந்தது. என் பள்ளிப்பருவத்தில் நூலகத்தில் அதைப் படித்தேன். உலகமே போர்களில் திளைத்திருக்கிறது. புகுந்த ஊர்களையெல்லாம் அழித்து பாலைவனமாக்குகிறது. அதே நேரத்தில் அப்போரிலிருந்து வெளியேறிய ஒருவன் வறண்ட பொட்டல்வெளியை பல ஆண்டுகள் பாடுபட்டு ஒரு காடாக மாற்றுகிறான்.

மரங்களைத் தவிர வேறெந்த சிந்தனையும் அவன் மனத்தில் இல்லை. அந்தக் கதை பிரெஞ்சு வாசகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

ஒரு மனிதனின் வாழ்க்கை வரலாற்றின் சாயலில் எழுதப்பட்ட அக்கதையை உண்மை என நம்பிய பல வாசகர்கள் அந்த மனிதனைக் கண்டுபிடிக்கும் ஆவலில் தேடத் தொடங்குகிறார்கள். அப்போது எழுத்தாளர் அந்த மனிதன் தன் கற்பனையில் உருவானவனென்றும் மனிதர்களுக்கு மரங்கள் மீது ஓர் ஈடுபாட்டை உருவாக்கவேண்டும் என்னும் விழைவால் அக்கதையை எழுதியதாகவும் கூறினார். இலட்சியம் என்பது இன்னொருவரால் ஊட்டப்பட்டு ஒருவருக்கு அமைவதில்லை. ஒருவர் தன் வாழ்வின் போக்கில் தானாகவே கண்டடைந்து அதன் வழியில் செல்கிறார்.

கர்நாடகத்துக்கு நான் வந்த புதிதில் சாலுமரத திம்மக்கா என்பவரைப்பற்றிக் கேள்விப்பட்டு அவரைச் சந்தித்து உரையாடினேன். அவரும் அவர் கணவரும் சேர்ந்து சாலையோரமாக ஏறத்தாழ ஐந்து மைல் தொலைவுக்கு மரங்களை நட்டு வளர்த்தவர்கள். அது மட்டுமல்ல, அக்கம்பக்கத்தில் ஏராளமான தோப்புகளையும் இருவரும் சேர்ந்து உருவாக்கினார்கள். இன்று கணவர் இல்லை. திம்மக்கா மட்டும் மரங்களைத் தவிர வேறெதையும் அறியாதவராக வாழ்ந்து வருகிறார்.

அசாமில் பிரம்மபுத்திரா நதிக்கரையோரத்தில் வெள்ளத்தால் பொட்டல்காடாகிவிட்ட ஓரிடத்தில் இதேபோல ஒரு காட்டை ஜாதவ் பயேஸ் என்பவர் உருவாக்கினார் என்று படித்த நினைவுள்ளது. இப்படி வாழ்ந்தவர்களும் வாழ்பவர்களும் இந்த நாடுமுழுக்க இருக்கக்கூடும். ஒவ்வொரு வட்டாரத்திலும் இப்படிப்பட்ட மனிதர் ஒருவராவது உறுதியாக இருப்பார்கள். இவர்கள் தனிமனிதர்களே என்றபோதும், இத்தகையோரின் வாழ்க்கை எழுத்தில் பதிவு செய்யப்பட வேண்டும். நம் கண் முன்னால் வாழ்ந்த, வாழும் முன்னுதாரண மனிதர்களைப்பற்றி நாம் எழுதாவிட்டால், வேறு யார் வந்து எழுதுவார்கள்?

சமயவேல் தன்னுடைய ’புனைவும் நினைவும்’ நூலில் இப்படிப்பட்ட ஒரு மனிதரைப்பற்றி எழுதியிருக்கிறார். அவர் பெயர் காளிக்குடும்பர். வெம்பூர் கண்மாய்க்கரையில் ஐந்நூறு புளியங்கன்றுகளை நட்டு வளர்த்தவர் அவர். ஒரு பெரிய மண்பானையில் நீர் சுமந்து சென்று மூன்று நாட்களுக்கொரு முறை அக்கன்றுகளுக்கு தண்ணீர் ஊற்றி குழந்தைகளைப்போல காப்பாற்றினார். அவருக்கு மனைவி கிடையாது. இருந்த ஒரே மகள் ஏதோ ஒரு கிறிஸ்துவ மடத்தில் சேர்ந்து வேறு ஏதோ ஓர் ஊருக்குப் போய்விட்டார்.

ஒவ்வொரு மரமும் உறுதியாய் நிலத்தின் வேரூன்றி நின்று கிளைபரப்பி பூத்துக் காய்க்கத் தொடங்கும் வரைக்கும் அவற்றை காளிக்குடும்பர் ஒற்றை ஆளாக நின்று கவனித்துக்கொண்டார். அவர் மறைந்து போனாலும் கண்மாயே காணாமல் போனாலும் அவர் நட்டு வளர்த்த புளியமரங்கள் ஊருக்கு நிழல் கொடுத்துக் கொண்டிருக்கின்றன. தொலைவிலிருந்து பார்த்தால் ஒரு நீண்ட புளியமர ரயில் ஊர்ந்து கொண்டிருப்பதைப்போல காட்சியளிக்கும் என்று எழுதுகிறார் சமயவேல். அம்மரங்கள் வழியாக காளிக்குடும்பர் ஒரு வரலாற்றுப் பாத்திரத்தைப் போல வாழ்ந்துவருகிறார்.

சமயவேல் பிறந்த ஊர் வெம்பூர். எட்டயபுரம் வட்டத்தில் அறுநூறு வீடுகளும் இரண்டாயிரம் பேர் மக்கள் தொகையையும் கொண்ட சின்ன கிராமம். ஊர் எல்லையில் கோவில். கோவிலை ஒட்டி தனித்தனியாகப் பிரியும் இரு பாதைகள். இடதுபுறப் பாதை சாதியின் மேலடுக்கில் இருப்பவர்கள் வாழும் குடியிருப்புகளை நோக்கி நீள்கிறது. வலதுபுறப் பாதை கீழடுக்கில் இருப்பவர்கள் வாழும் குடியிருப்புகளை நோக்கிச் செல்கிறது. தான் பிறந்து வளர்ந்த ஊரைப்பற்றியும் தன்னைச் சுற்றி வாழ்ந்த மனிதர்களைப் பற்றியும் அவர் எழுதிய பல கட்டுரைகளின் தொகுப்பு ’புனைவும் நினைவும்’. வெம்பூரைப்பற்றி அவர் அளிக்கும் சித்திரமே கவித்துவத்தோடு உள்ளது. வெட்டவெளியின் இசை விண்ணிலிருந்து இறங்கும் ஊர் என்று எழுதியுள்ளார் சமயவேல். வட்டவடிவத்தில் அங்கே நின்று அடிவானத்தைப் பார்க்கமுடியும். கீழ்த்திசையில் பூமி சரிந்து கடலில் முடிவதால் ஓர் அரை உருண்டையின் மீது நாம் நிற்பதுபோல உணரவைக்கும் ஊர். நாள்முழுதும் அமைதியில் உறையும் ஊர். 

ஊரில் கொண்டாடப்படும் இரு அம்மன்களைப்பற்றிய தகவல்கள் ஒரு கட்டுரையில் இடம்பெற்றுள்ளன. ஒன்று வடக்கத்தி அம்மன். இன்னொன்று சோலையம்மன். சில நூற்றாண்டுகளுக்கு முன்பு வடக்கிலிருந்து வந்து வெம்பூரில் குடியேறிய அம்மை ஒருவர் வேப்பங்குழையால் மந்தரித்து நோய்நொடிகளிலிருந்து கிராம மக்களை குணப்படுத்திவந்தார். அவர் இறப்பதற்கு முன்பு மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை தனக்கு பண்டிகை கொண்டாட வேண்டுமென்றும் அன்றைய தினம் தன்னை நினைத்து மக்கள் ஒருவருக்கொருவர் கஞ்சி ஊற்றி அருந்த வேண்டுமென்றும் தன்னை நினைத்து வாசலில் வேப்பந்தழையைச் செருகி வைத்தால் அந்த வீட்டில் எவ்விதமான நோயும் அண்டாமல் காப்பாற்றுவதாகவும் சொல்லிவிட்டு மறைந்தார். அந்த வாக்குக்குக் கட்டுப்பட்டு இரு நூற்றாண்டுகளாக அந்தப் பண்டிகையைக் கொண்டாடி வருகிறார்கள் மக்கள். 

இன்னொரு தெய்வம் சோலையம்மன். அவருக்கு 21 பிள்ளைகள் பிறந்து, எல்லோரும் பிறந்த வீட்டிலேயே இறந்துவிட்டார்கள். பெற்றெடுத்த பிள்ளைகள் அனைவரையும் பறிகொடுத்த சோகத்தில் ஆழ்ந்துவிட்டார் சோலையம்மன். இறுதியில் அவர் ஒரு முடிவெடுக்கிறார். அவரும் அவர் கணவரும் உயிருடன் உடன்கட்டை ஏறிவிடலாம் என திட்டமிடுகிறார்கள். ஊர்மக்கள் தடுத்தும் கேளாமல் இருவரும் மணக்கோலத்தில் நின்று சிதைக்கு ஏற்பாடு செய்கிறார்கள். அதனால் ஊர்மக்கள் சிதைக்கு வைக்கவிருந்த நெருப்புக்கட்டையைப் பிடுங்கிக் கொண்டு வந்து விடுகிறார்கள். யாரும் அவர்களுக்கு நெருப்பு தரக்கூடாது என ஊர்க்கட்டளை விதிக்கப்படுகிறது.

21 நாட்கள் காத்திருந்து, 21 ஆம் நாள் அடுத்த ஊரிலிருந்து பொய்சொல்லி நெருப்பு வாங்கிவந்து சிதையை ஏற்றிவிட்டு இருவரும் மாண்டு போய் விடுகிறார்கள். குழந்தைகளை இழந்த துக்கம் அவ்விருவரையும் மரணத்தை நோக்கித் தள்ளிவிடுகிறது. அவர்களைக் காப்பாற்ற முடியாத ஊர்மக்கள் அந்தச் சாம்பலை ஒரு பெட்டியில் வைத்து வணங்கத் தொடங்குகிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் அவருக்குப் படையலிட்டு கஞ்சி ஊற்றி வணங்குகிறார்கள். தன் துன்பம் என்னும் தொடர்கதை தன்னோடு முடிந்துபோகவும் தன்னைச் சுற்றியுள்ள மக்கள் துன்பத்தின் நிழலே படியாமல் வாழவும் தெய்வமாக நின்று அருள்புரிகிறார் சோலையம்மன்.

இரு பெண்தெய்வங்களில் ஒருவர் கருணையின் அடையாளம். இன்னொருவர் துக்கத்தின் அடையாளம். இருவரிடமும் அருள்வேண்டி கைகுவித்து நிற்கின்றனர் மக்கள். ஒருவர் சமுதாய மேலடுக்கின் தெய்வம். இன்னொருவர் அடியடுக்கின் தெய்வம். ஒரு நாணயத்தின் இருபக்கங்களைப்போல இரு தெய்வங்களும் ஒரே ஊரின் இரு அடையாளங்கள். இருவராலும் மதிப்படைகிறது ஊர். அழகான சித்தரிப்புகள் வழியாக, ஊரின் தன்மையை உணர வைக்கிறார் சமயவேல். 

சித்திரைக்கொண்டாட்டம் ஊரின் இன்னொரு முக்கியமான திருவிழா. பிள்ளைகளுக்கு கனவுப் பலகாரமான தோசை கிடைக்கும் நாள். அன்று புத்தாண்டு நாளேர் ஓட்டவேண்டும். ஏரோட்டுவதற்கு புதிய தார்க்குச்சிகள் வேண்டும். தார்க்குச்சிகளைத் தேடி பிள்ளைகள் ஓடுகிறார்கள். தலையாரி மூலம் ஊர் சாட்டுகிறார்கள். எல்லோரும் மாடுகளைக் குளிப்பாட்டி கொம்புகளுக்கு வர்ணமடித்து மஞ்சள் குங்குமப்பொட்டு வைத்து நிலத்துக்குச் சென்று ஆரவாரத்துடன் ஏர்பூட்டி உழுகிறார்கள். உழுதுமுடித்து திரும்பும் இளைஞர்கள் மேல் முறைப்பெண்கள் மறைந்திருந்து மஞ்சள் நீர் ஊற்றி விளையாடுவார்கள். எந்த வீட்டுக்கும் சென்று யார் வேண்டுமானாலும் பானக்காரம் அருந்திவிட்டுச் செல்லலாம்.

இன்னொரு சுவாரசியமான திருவிழா பங்குனிப் பொங்கலுக்கு இறுதியில் நடைபெறும் சேத்தாண்டி ஊர்வலம். தண்ணீர் வற்றிய குளத்தில் எஞ்சியிருக்கும் சேற்றை உடலெங்கும் பூசிக்கொண்டு சுண்ணாம்பையும் கண்மையையும் கொண்டு எழுதப்பட்ட கரும்புள்ளி செம்புள்ளிகளோடு கையில் ஏந்திய வேப்பிலைக் கொத்துகளோடு பிள்ளைகள் நிகழ்த்தும் ஊர்வலம் இது. மேளதாளம் ஒலிக்க ஆஹா அய்யாஹோ என்று குரலெழுப்பியபடி கண்மாய்க்கரையிலிருந்து ஊர்வலம் ஊருக்குள் நுழையும். அருள் வரப்பெற்றவர்கள் தரையில் உருள்வார்கள். கோவில் வாசலை நெருங்கியதும் பூசாரி வெளியே வந்து சாமிக்கு திருநீறு பூசி மலையேற்றிவிடுவார். சேறு பூசிக்கொண்டிருந்த சிறுவர்கள் எல்லோரும் கூச்சலிட்டபடி திரும்பியோடி கிணற்றில் விழுந்து தேய்த்துக் குளிக்கத் தொடங்குவார்கள். மாம்புலி கொளுத்தும் கார்த்திகைக் கொண்டாட்டமும் வெம்பூர்க்காரர்களின் பண்டிகைகளில் ஒன்று.

விழா சமயங்களில் நடைபெறும் பாவைக்கூத்து முக்கியமான பொழுதுபோக்கு நிகழ்ச்சி. சின்னஞ்சிறு ஊர்களில் எழுபது எண்பது கடந்தவர்களின் மரணம்கூட ஒரு திருவிழாத்தன்மையைக் கொண்டு வந்துவிடுகிறது. இறந்தவரை அமரர் நாற்காலியில் உட்கார வைத்துவிட்டு செய்யப்படும் இறுதி ஊர்வல ஏற்பாடுகள் ஒவ்வொன்றும் திருவிழா ஏற்பாடுபோலவே இருக்கும். இரவெல்லாம் கண்விழித்து படிக்கப்படும் நல்லதங்காள் கதை எல்லோரையும் உருகவைத்துவிடும். வெளியூரில் வசிப்பவர்களுக்கு சாவுச் செய்தியை சொல்லியனுப்புவதில் தொடங்கி இறுதித் தேருக்கான பூ அலங்காரம் வரை ஒவ்வொரு சடங்கையும் துல்லியமாக விவரிக்கிறார் சமயவேல்.

வீட்டில் வறுமை இருந்தாலும் நண்பர்களுடன் பேசியும் விளையாடியும் அலைந்தும் பொழுதுகளைக் கழித்த பால்யம் வெகுவிரைவில் முடிந்துவிட சட்டென இளம்பருவத்தின் வாசலுக்கு வந்துவிடுகிறார் சமயவேல். ஊரில் நண்பர்களைச் சேர்த்துக் கொண்டு ஒரு படிப்பகத்தைத் தொடங்கி அனைவரையும் படிக்கத் தூண்டுகிறார். படிப்பு நம் அகக்கண்களைத் திறக்கும் ஆற்றல் கொண்டதென தொன்றுதொட்டு நிலவிவரும் நம்பிக்கை அவரையும் இயக்குகிறது. பள்ளியிறுதியில் முதல் மதிப்பெண் பெற்று தேறி கல்லூரியில் சேர்ந்து படிக்க நகரை நோக்கிப் புறப்படுகிறார். சாதிச் சான்றிதழ் கொடுக்க வேண்டிய கிராம முன்சீப் “இவனுக்கெல்லாம் எஞ்சினீயரிங் படிப்பா?” என்ற மனவெக்கையில் சான்றிதழ் தராமல் முடிந்தவரையில் அலைய வைக்கிறார். இரட்டைக்குவளை முறையை கடைபிடிக்கும் தேநீர்க் கடைக்காரர், அதை மீறியதற்காக அவர் முன்னாலேயே அந்தத் தம்ளர்களை கடைக்கு வெளியே வீசியெறிந்து உடைக்கிறார். வெம்பூரில் சாதிப்பூசல்கள் எதுவும் நிகழ்ந்ததில்லை. ஆனால் ஒவ்வொருவர் நெஞ்சிலும் சாதியம் ஏதோ ஒரு விதத்தில் வெள்ளைவேட்டியில் படிந்திருக்கும் ஒரு கறைபோல படிந்திருக்கிறது. 

ஊரின் வறட்சிக்கு ஊரின் சூழலும் ஊர்க்காரர்களுமே ஒரு வகையில் காரணமாக இருப்பதை சமயவேலின் ஆய்வுமனம் கண்டடைகிறது. ஊரில் மிகமுக்கியமான தொழில் விவசாயம் மட்டுமே. நீரின்றி விவசாயமில்லை. நீருக்கு நீர்நிலைகள் மிகமிக முக்கியம். நீர் ஆதாரமாக விளங்கும் காடு அழிகிறது. அதைத் தடுக்க ஆளே இல்லை. அருகிலிருந்த அணைக்கட்டிலிருந்து நீரைக் கொண்டுவர கட்டப்பட்ட தடுப்பணை தேவையை நிறைவேற்றவில்லை. கண்மாய்க்கும் தடுப்பணைக்கும் இடைப்பட்ட மேட்டுப்பகுதியை மீறி தண்ணீரால் ஏறிவர முடியவில்லை. அதைக் கண்டுபிடிப்பதற்குள் ஆண்டுகள் உருண்டு விடுகின்றன. கிராமத்துப் புகார்களை அதிகாரிகள் புறக்கணிக்கிறார்கள். கண்மாய் கொஞ்சம்கொஞ்சமாகத் தூர்ந்து வறட்சிக்காலம் தொடங்கிவிடுகிறது. சாதி ஆணவத்துக்கும் அரசியல் ஆணவத்துக்கும் ஒரு கிராமமே கரிய பாலைவனமாக மாறிவிடுகிறது.

பெண்களின் தற்கொலைகளைப் பற்றிய கட்டுரையை மனம் பதறாமல் யாராலும் படித்துக் கடந்துவிடமுடியாது. சிவராம காரந்த் கன்னட மொழியில் எழுதிய முக்கியமானதொரு நாவல் சோமனின் உடுக்கை. இன்பத்திலும் துன்பத்திலும் வாழ்நாள் முழுக்க அவனுக்குத் துணையாக நிற்பது அவன் உடுக்கை. இறுதியில் தன் உடுக்கையை இசைத்தபடியே அவன் இறந்துபோவான். உடுக்கையோசை என்பதே மரணத்தின் அடையாளமாக நாவல் முழுதும் ஒலித்தபடி இருக்கும். சமயவேல் தன் கிராமத்தில் ஒலிக்கும் உருமியின் ஓசையைப்பற்றி எழுதுகிறார். ஊருக்குள் எழும் ஒற்றை உருமியின் ஓசை யாரோ ஒரு பெண்ணின் அகால மரணத்தை அறிவிக்கும் ஓசையாக அமைந்திருக்கிறது. ஒவ்வொரு ஓசையைத் தொடர்ந்து அவர் நினைவிலிருந்து உதிரும் அக்காமார்களின் நினைவுச்சித்திரங்கள் மனம் கலங்க வைக்கின்றன.

ஊரின் நினைவுகளோடு தன் நெஞ்சில் சமயவேல் இன்னும் சுமந்திருக்கும் மனிதர்களைப்பற்றிய சித்திரங்களும் இந்தத் தொகுப்பில் ஏராளமாக நிறைந்திருக்கின்றன. கனியக்காவின் கதையைப் படிப்பவர்கள் யாரும் கனியக்காவை மறந்துவிட முடியாது. காடை சண்முகம், லாந்தர் இருளாண்டி, கோழி ஆறுமுகம், மூக்கையா ரெட்டியார், மொட்டை இருளப்பர் என ஒவ்வொருவரையும் தன் வாழ்வோடு இணைத்துவைத்திருக்கும் ஒரு சிறு சம்பவச் சித்தரிப்போடு சமயவேல் தீட்டிக்காட்டும் கோட்டோவியங்கள் மகத்தானவை. அவற்றின் வழியாக அவர்களையும் நாம் அறிந்து கொள்கிறோம்.

சற்றே தன்வரலாற்றுச் சாயலுடன் சமயவேல் வழங்கியிருக்கும் வெம்பூர் வரலாறு மிகமுக்கியமான ஓர் ஆவணம் என்றே சொல்லவேண்டும். திருவிழா, கொண்டாட்டம், சாவு, கலை என தாவித்தாவிச் சென்றாலும் வெம்பூரின் பண்பாட்டு அம்சங்கள் அனைத்தையும் பதிவு செய்திருக்கிறார் சமயவேல். 

சென்னை வரலாறு, மதுரை வரலாறு போல சிற்றூர்களின் வரலாற்றை யாரும் எழுதுவதில்லை. எப்போது தோன்றியது, யார் உருவாக்கினார்கள், எப்படி வளர்ந்தது என்கிற புள்ளிவிவரங்களைத் திரட்டிக் கொண்டு வைப்பது மட்டுமல்ல வரலாறு. ஒருவர் நிலத்துடன் கொண்டிருக்கும் உறவு, அருகில் இருக்கும் சகமனிதர்களோடு கொண்டிருக்கும் உறவு, கோவில்கள், பண்டிகைகள், கொண்டாட்டங்கள், மரணங்கள், விளையாட்டுகள் போன்றவற்றைப் பற்றிய சித்திரங்களின் தொகுப்பையும் ஒருவகையில் வரலாறு என்றே சொல்ல வேண்டும். வாழ்கிற விதத்தை முன்வைப்பதன் வழியாக எழுந்து நிற்கும் மற்றொரு வரலாறு. சமயவேல் எழுதியிருக்கும் வெம்பூர் கிராம வரலாறு அத்தகைய ஒன்று. மணல்வீடு பதிப்பகத்தின் வெளியீடுகள் அனைத்துமே அழகுற அமைந்திருப்பவை. சமயவேலின் புத்தகம் அந்த அழகின் உச்சம்.