கொடுமணல், கீழடி, ஆதிச்சநல்லூர், பொருந்தல் போன்ற பல இடங்களில் அகழாய்வுகள் நடைபெற்று வருகின்றன. இக் களங்களில் ஏராளமான பழந்தமிழ் எழுத்துப் பொறிப்புகளைக் கொண்ட மண்பாண்டம் போன்ற பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன. கல்வெட்டு, செப்பேடு, ஓலைச் சுவடி போன்றவற்றில் பழந்தமிழ் எழுத்துக்கள் ஏராளமாகக் காணப்படுகின்றன. தொல்லியல் ஆய்வுகளை முறையாகவும் முழுமையாகவும் மேற்கொள்ள வேண்டுமெனில் பழந்தமிழ் எழுத்துகளைப் படிக்கும் முழுத்தகுதி மிக்க இளம் வல்லுனர்கள் அதிக எண்ணிக்கையில் தேவைப்படுகின்றனர்.

tamil peravai 500பழமைமிக்க தமிழ் எழுத்துகளைப் படிப்பதற்கென்று தனிப் பயிற்சியும் நீண்ட அனுபவமும் உள்ளவர்கள் மட்டுமே இப்பணியைச் செய்ய முடியும். அத்தகைய வல்லுனர்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து வருகிறது. தமிழ்மொழி மற்றும் தமிழர்களின் வரலாற்றை முழுமையாக ஆவணப்படுத்த வேண்டிய காலகட்டத்தில் நாம் வாழ்கிறோம். அத்தகைய நுட்பமான தமிழ்ப் பணிகளுக்கு ஆட்படுத்திக் கொள்ள மாணவர்கள் தங்களைத் தகுதிப்படுத்திக் கொள்வது காலத்தின் கட்டாயமாகும்.

சமயப்பணிகளை மேற்கொள்வதற்காக இந்தியா வந்த ஜி.யு.போப் அப்பணிக்கு அவசியப்படும் என்பதற்காக தனது பதினேழாவது வயதில் தமிழ் மொழியைப் படிக்கத் தொடங்கினார். தமிழ் மொழியைப் படிக்கப் படிக்க அதன் தனிச்சிறப்பை உணர்ந்து தமிழ்மொழி ஆராய்ச்சியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். திருக்குறள், நாலடியார், திருவாசகம் போன்ற பல தமிழ்ப் படைப்புகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். திருக்குறளை முதன்முதலில் முழுமையாக ஆங்கிலத்தில் மொழிபெயர்த்ததுடன் அதனைப் பதிப்பித்தும் லண்டன் மாநகரிலேயே வெளியிட்டதன் மூலம் திருக்குறளை உலகறியச் செய்தவர் ஜி.யு.போப். இந்த ஆண்டு அவர் பிறந்த 200 ஆவது ஆண்டு.

ஓலைச்சுவடி வடிவில் பல்லாண்டுகளாகக் கேட்பாரற்றுக் கிடந்த புறநானூறு போன்ற பல சங்கத் தமிழ் நூல்களை அரிதின் முயன்று தேடிக் கண்டுபிடித்ததோடு அவற்றை ஆய்வு செய்து பிழைதிருத்தி, பதிப்பித்து வெளியிட்டவர் உ.வே.சாமிநாத ஐயர். அவரது வாழ்வும் பணியும் பற்றி அடுத்த தலைமுறைக்கு அழுத்தமாக எடுத்துச் சொல்லப்பட்டால் தமிழாய்வுப்பணியில் இளைஞர்கள் பலர் ஈடுபட வாய்ப்பாக அமையும்.

தமிழ் வளர வேண்டுமெனில் தமிழர்கள் கல்வி, அறிவியல், வணிகம், ஆய்வு, தொழில், கலை, இலக்கியம், அரசியல் போன்ற அனைத்துத் துறைகளிலும் வளர்ச்சியடைய வேண்டும். மொழி மட்டும் தனியாக வளர்வது சாத்தியமில்லை. தமிழ் இளைஞர்கள் உ.வே.சாமிநாத ஐயர் எழுதிய ‘என் சரித்திரம்’, ம.பொ.சிவஞானம் எழுதிய ‘எனது போராட்டம்’ போன்ற நூல்களை வாசித்தால் தமிழ் உணர்வோடு தன்னம்பிக்கையும் பெறுவார்கள்.

(19-09-2019 அன்று சென்னை கிறித்துவக் கல்லூரி தமிழ்ப் பேரவைத் தொடக்க விழாவில் ஆற்றிய உரையின் கட்டுரை வடிவம்)