பாரதி புத்தகாலயம் சிறப்பாக நடத்தி வரும் புத்தகம் பேசுது இதழ் உலகப் புத்தக தினச் சிறப்பு மலராகத் தமிழ்ப்புத்தக உலகம் (1800 - 2009) என்ற சிறப்பு மலரைச் சிறப்பாகவும் சீரியதாகவும் வெளியிட்டதற்கு அதன் வெளியீட்டாளர், ஆசிரியர், மலர்க்குழு ஆசிரியர்கள் எல்லோருக்கும் என் பாராட்டையும் வாழ்த்தையும் முதலில் தெரிவித்துக் கொள்கிறேன். 2008-ஆம் ஆண்டும் தமிழிலுள்ள முக்கியமான நூல்கள் பற்றியும் அவை எவ்வாறு வாசிக்கப்பட்டன என்பது பற்றியும் இத்தகைய ஒரு மலரை வெளியிட்டிருக்கிறார்கள். அதன் தொடர்ச்சியாகத் தமிழ்ப்புத்தக உருவாக்க முறைமை ஏட்டுச் சுவடியிலிருந்து அச்சு நூலாக மாறிய வரலாறு எப்படித் தமிழ்ச் சமூக வரலாற்றை அறியத் துணை செய்கிறது என்பதைத் தேடுவதுதான் இம்மலரின் பொதுப்பொருள்.

இந்தப் பொதுப் பொருள் பற்றித் தனிமனிதப் பதிப்புகள் (11), பொதுக் கட்டுரைகள் (27), நிறுவனம் சார்ந்த பதிப்புகள் (6) என்று அரிய 44 கட்டுரைகள் அடங்கிய இந்த மலர் தமிழ்ப் பதிப்புக் களஞ்சியம் ஒன்றைத் தயாரிக்க உதவும் அரிய தரவுகளை உள்ளடக்கியதாக அமைகிறது. இதை அத்துறையில் ஈடுபட்ட இளம் ஆய்வாளர்களும் முதிய ஆய்வாளர்களும் வழங்கியிருப்பது அதுவும் உலகின் பன்னாட்டைச் சேர்ந்தவர்களாக அவர்கள் இருப்பது சிறப்பாகக் குறிப்பிடத்தக்கது. ஈழம், சிங்கப்பூர், மலேசியா, ஐரோப்பா உள்ளிட்ட உலகளாவிய நாடுகளில் வெளியான தமிழ் நூல் பற்றிய விவரங்கள் இதில் அடங்கியுள்ளன.

இதிலுள்ள கட்டுரைகள் சில ஆவண ஆய்வாகவும், சில விவரண ஆய்வாகவும் சில விமர்சன ஆய்வாகவும் சில அறிமுக ஆய்வாகவும் அமைகின்றன. எல்லாக் கட்டுரைகளும் அடிப்படையான தரவுகளைத் திரட்டி அவற்றால் வெளிப்படும் சமூக வரலாற்றுப் பின்னணியை ஆராய முனைந்திருக்கின்றன என்பது குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய ஒன்று. தமிழ்ப்புத்தக உலகம் பற்றிய ஒரு முழுமையான பார்வையை உருவாக்க இதிலுள்ள கட்டுரைகள் துணை செய்யும். தலையங்கம் குறிப்பிடுவது போல இது ஒரு தொடர் ஓட்டம். விடுபட்டவைகளில் இன்னும் கண்டு ஆராய்ந்து சொல்ல வேண்டியவற்றை தமிழ் ஆராய்ச்சியாளர்களின் கவனத்திற்கு இம்மலர் கொண்டு வந்திருக்கிறது. பதிப்புக்கான மூல ஆவணங்கள் பெருகி வருகிற சூழலில் கடின உழைப்பின் மூலம் நுட்பமான தரவுகளின் அடிப்படையில் இக்கட்டுரை ஆசிரியர்கள் ஆராய்ந்துள்ளது பாராட்டிற்குரியது.

ஆறுமுக நாவலரின் (1822 - 1879) பதிப்புப் பணியை மதிப்பிடும் பொ. வேல்சாமி ஆறுமுக நாவலர் பதிப்புகள் இன்று வரையில் செம்பதிப்புகளாகச் சிறந்து விளங்குவதையும் அவர் மீது அருட்பா மருட்பா போராட்ட விளைவுகளால் பெரிய புராணம் வில்லிப்புத்தூரார் பாரதம் சூடாமணி நிகண்டு ஆகியவற்றில் ஏடுகளில் இல்லாத பாடத்தைப் புகுத்திவிட்டார் என்ற குற்றச்சாட்டு வருண சிந்தாமணி (1901) என்ற நூலில் எழுந்திருக்க வேண்டும் என்பதையும் சுட்டிக்காட்டுகிறார். நாவலர் நன்னூல் காண்டிகையுரையில் காணப்படும் அப்பியாசப் பகுதி இன்றைய செயல்முறைக் கற்றல் முறையை ஒட்டி அமைகிற சிறப்புடையது. அவற்றை நீக்கி அச்சிடும் பிற்காலப் பதிப்பாளர் செயல் தக்கது அல்ல என்பதைக் கட்டுரையாசிரியர் எடுத்துக் காட்டுகிறார். விதிவிளக்க முறையாக அமையும் (Deductive method) இக்கற்றல் முறையை வகுப்பறையில் இன்றையத் தமிழாசிரியர்கள் பின்பற்றாத அறியாமையாலும் சோம்பலாலும் விளையும் பிற்போக்குத் தனமே தமிழ் இலக்கணக் கல்வியின் பாமர நிலைக்குக் காரணமாகும். நாவலர் காட்டிய இம்முறையுடன் விதிவருமுறையில் (inductive method) செய்யுள் உரைநடைப்பகுதிகளை ஐந்திலக்கண முறையில் பகுத்தாய்ந்து விளங்கிக் கொள்ளும் செயல்முறைப்பாடம் நடத்தும் முறையையும் தமிழாசிரியர்கள் மேற்கொண்டாலேயே மொழி இலக்கியக் கல்வி மேம்படும்.

சி.வை. தாமோதரம் பிள்ளை (1832-1910), உ.வே.சா. (1855 - 1942) ஆகிய இருவர் பதிப்புப்பணி பற்றி முறையே ஜ. சிவகுமாரும், அ. சதீஷ§ம் எழுதியுள்ள கட்டுரைகளில் தாமோதரம் பிள்ளை பற்றிய எதிர்க்கருத்துகளையும் உ.வே.சா. பற்றிய பாராட்டுக் கருத்துகளையும் மீளாய்வுக்கு உட்படுத்துகின்றனர். உ.வே.சா.வுக்கு ஒளிவட்டம் சமைத்தவர்கள் பதிப்பு முன்னோடியான சி.வை.தா.வுக்கு உரிய இடத்தைத் தரவில்லையே என்ற ஆதங்கத்தை இரு கட்டுரையாளர்களும் வெளிப்படுத்துகிறார்கள். சி.வை.தா., உ.வே.சா.வுக்கு முன்னதாகவே தமிழ் நூற்பதிப்புப் பணியில் ஈடுபட்டவர். மேலும் அவர் தம் பணியில் ஈடுபட்ட காலத்தில் ஏட்டுச் சுவடிப் பதிப்பின் நுட்பங்கள் மூலபாடத்திறனாய்வு இவை பற்றிய தெளிவின்மை இருந்தது. பல பழந்தமிழ் நூல்கள் அச்சில் வரவில்லை. அவரிடம் பல பழந்தமிழ் நூல்களும் ஏட்டுவடிவில் கையில் இருந்தனவா என்றும் தெரியவில்லை. மேலும் சி.வை.தா. தொடர்ந்து தம் பணியை மேம்படுத்த முனைந்தாரா என்பது பற்றியும் தெரியவில்லை. மரபு வழித் தமிழ்க்கல்வியில் பயிற்சி பெற்ற உ.வே.சா. ஆங்கிலம் மூலம் புதிய பதிப்பு முறைகளில் பயிற்சி பெறாதிருந்தும் தம் முயற்சியாலும் முனைப்பாலும் அவற்றை அறிந்தோ அறியாமலோ பின்பற்றியிருப்பது சிறப்பாகக் குறிக்கத்தக்கது. மேலும் உ.வே.சா. தொடர்ந்து பழந்தமிழ் நூற்பதிப்புப் பணியில் ஈடுபட்டதும் அதை நாள்தோறும் மேம்படுத்திக் கொண்டு வந்ததும் தம் நீண்ட வாழ்நாளாகிய 87 வயதில் 100க்கும் மேற்பட்ட நூல்களை வெளியிட்டிருப்பதும் அவரை மற்றவர்களிலிருந்து வேறுபடுத்துகிறது.

உ.வே.சா.வுக்கு முன் பல நூல்கள் அச்சேறி அவர் பார்வைக்குக் கிடைத்தும் உ.வே.சா. பல சுவடிகளைத் திரட்டி ஒரு நூலகம் போன்ற தொகுப்பை அமைத்துக் கொண்டதும் அவர் ஆராய்ச்சிக்கு உறுதுணையாக இருந்தன. இவ்வசதிகளை அவர் தம் பதிப்பு மேம்பாட்டிற் காகப் பயன்படுத்திக் கொண்டதை நாம் இங்கு குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். வரலாற்றுணர்வின்மை சரியாகப் புரிந்து கொள்ளாமை, அறியாமை, ஒருதலைச் சார்பு போன்றவற்றால் ஏற்படும் பாமரத்தனமான வழிபாட்டுணர்வே தமிழ்ப் பணியாற்றியவர்கள் பற்றிய இத்தகைய பார்வைக் குளறுபடிகளைத் தோற்றுவிக்கின்றன. இது பொதுவாகத் தமிழர்களின் தனிக்குணம். இதன் வெளிப்பாடே ஆராய்ச்சித் துறையிலும் வெளிப்படுகிறது. இருவர்க்கும் உரிய குறை நிறைகளுடன் ஏற்றுக் கொள்வதே அறிவுடமை என்ற கருத்துக்கு இட்டுச் செல்ல இக் கட்டுரைகள் உதவுகின்றன.

உ.வே.சா.வை விட சி.வை.தா. விடமே மூலபாட ஆய்வுத்திறம் அதிகமாகக் காணப்படுவதாகக் கைலாசபதியை மேற்கோள் காட்டி சிவகுமார் எழுதுவது மூலபாடம் பற்றிய விவாதம் எனத் திருத்தம் பெறவேண்டும். மூலபாடம் பற்றிய விவாதங்களை சி.வை.தா. முன்வைப்பது உண்மையே. ஆனால் உ.வே.சா. போல பாடபேதங்களை அவர் தரவில்லை. மேலும் மூலபாட நிச்சயம் பற்றிய முறையியலை உ.வே.சா. உள்வாங்கவில்லை என்ற சதீஷ் கருத்தும் திருத்தம் பெறவேண்டும். உ.வே.சா. மூலபாட நிச்சயம் பற்றிய விவாதங்களில் ஈடுபடவில்லை எனினும் அவர் எல்லோரையும் விட, மூலச்சுவடி பாட நிச்சயம் போன்றவற்றில் தெளிவுடையவராக இருந்தார் என்றே தெரிகிறது. உ.வே.சா. பதிப்புகளை மூலச்சுவடிகளுடன் ஒப்பிட்டு ஆராயாமல் பொத்தம் பொதுவாகப் பேசுவது முறையல்ல. மேலும் புறநானூற்றிலுள்ள பார்ப்பார்த் தப்பிய என்ற தொடரை உ.வே.சா. குரவர்த்தப்பிய என்று திருத்தியதாகவும் ஐங்குறுநூற்றிலும் இவ்வாறு தம் மனம்போன போக்கில் திருத்தியதாகவும் இரு ஆய்வாளர்களும் குறிப்பிடுவதற்கு வலுவான ஆதாரங்கள் உள்ளனவா? உ.வே.சா. பதிப்பில் நுண் அரசியலைத் துருவிப்பார்ப்போர் கூறும் ஆதாரமற்ற குற்றச்சாட்டா? அல்லது உ.வே.சா.வுக்கு ஒளிவட்டம் சுற்றுபவர்கள் செயலுக்கு எதிரான செவிவழியாக வரும் மிகைக்கூற்றா?

கொங்குவட்டார நாட்டு இலக்கிய வரலாற்றுக்கு அடிப்படைத் தரவுகளான சிற்றிலக்கியங்களைப் பதிப்பித்த வட்டார இலக்கியப் பதிப்பு முன்னோடி தி.அ. முத்துசாமிக் கோனார் (1858 - 1944) பற்றிப் பெருமாள் முருகனும் ரா. இராகவையங்கார் (1870 - 1946) பற்றிக் கா. அய்யப்பனும் வ.உ.சி.யின் பதிப்புப் பணி பற்றி ஆ. சிவசுப்பிரமணியனும், மே.வீ. வேணுகோபாலப் பிள்ளை பற்றி கோ. கணேஷ§ம், வையாபுரிப்பிள்ளையின் சங்க இலக்கியப் பதிப்பும், திருமுருகாற்றுப்படைப் பதிப்புகளும் பற்றி பு. ஜார்ஜும், மு. அருணாசலம் அவர்கள் பதிப்புப் பணிகள் பற்றி உல. பாலசுப் பிரமணியமும், உரை மரபிலிருந்து பதிப்பு மரபை நோக்கி... தி.வே. கோபாலையரின் பதிப்புகளில் வெளிப்படும் புலமைத் தன்மை குறித்த உரையாடல் பற்றி பா. இளமாறனும் அரிய செய்திகளைத் திரட்டிக் கட்டுரைகள் வழங்கியுள்ளனர்.

முத்துசாமி கோனார் சுவடி தேடிய முயற்சிகள், இராகவையங்கார் பதிப்பு நெறிகள் உ.வே.சா. வை ஒத்துச் செல்வது, வ.உ.சி. போலியான கைந்நிலையை உண்மை என நினைந்து பதிப்பித்தது, மே.வீ. வேணுகோபாலப் பிள்ளை, மு. அருணாசலம் போன்றோர் இரண்டாம் தலைமுறைப் பதிப்பாசிரியர்களாக விளங்கினமை, ச. வையாபுரிப்பிள்ளையின் பதிப்புச் செப்பங்கள், கால ஆராய்ச்சியில் காட்டிய அறிவியல் பண்பு, தயாராக்கிய அடிப்படை அடைவுகள், தி.வே. கோபாலையர் தம் பதிப்புகளைப் பயன்பாட்டுப் பதிப்புகளாக மாற்றி நூல் விளக்கத்திலும், உரை விளக்கத்திலும் மேற்கொண்ட பணிகளால் தமிழ் கற்பார்க்கு விளைந்த நன்மைகள் ஆகியவற்றை இக்கட்டுரைகள் எடுத்துரைக்கின்றன.

பொதுக் கட்டுரைகள் பகுதியில் கீழ்க்கண்ட 27 கட்டுரைகள் இடம்பெறுகின்றன. பழமைக்கும் புதுமைக்கும் பாலமாகும் புதுச்சேரி - புதுவை ஞானகுமாரன், ஈழத்தமிழ்ப் பதிப்புலகம் - பிரச்சனைகளும் செல்நெறியும் - ந. இரவீந்திரன், சிங்கப்பூர் பதிப்புத் துறை - எம்.எஸ். ஸ்ரீலக்ஷ்மி, மலேசியத் தமிழ்க் கட்டுரை இலக்கியம் - ரெ. கார்த்திகேசு, தமிழ் நூற்பதிப்பும் ஆய்வுமுறைகளும் - கார்த்திகேசு சிவத்தம்பி, சென்னைக் கல்விச் சங்க வெளியீடுகள் - தாமஸ் ஆர். டிரவுட்மேன், ஐரோப்பிய மொழிகளில் தமிழ் இலக்கண நூல்கள் (1550 - 1950) - ஆர்.இ. ஆஷர், தமிழ் முஸ்லிம்களின் அச்சுக் கலாசாரம் (1835 - 1947) - ஜெ.பி.பி. மோரே, பத்தொன்பதாம் நூற்றாண்டில் தமிழ் அச்சுப் பண்பாடும் புத்தக உருவாக்கமும் - வீ. அரசு, 19-ஆம் நூற்றாண்டில் தமிழ் இலக்கியப் பதிப்புகளின் போக்குகள் - வெ. ராஜேஷ், இசை நூல் பதிப்புகள் - அரிமளம் பத்மநாபன், நிகழ்த்து கலைப்பதிப்புகள் - கும்மி அச்சுப் பிரதிகள் - அ. கோகிலா,

நாட்டார் வழக்காற்றுத் தொகுப்புகள் - ஆ. தனஞ்செயன், தமிழில் சிறார் இலக்கியம் - சில குறிப்புகள் - வ. கீதா, காற்றில் கலந்த புத்தகங்கள் - டி. தருமராஜன், நூற்றொகை பதிப்புகள் - து. குமரேசன், மொழிபெயர்ப்புப் பதிப்புகள் - ந. முருகேச பாண்டியன், கிறித்தவத் தமிழ்ப் பதிப்புகள் - அமுதன் அடிகள், பௌத்தத் தமிழ் நூல் பதிப்புகள் - கே. சந்திரசேகரன், வைணவப் பதிப்புகள் - சு. வேங்கடராமன், கம்பராமாயணப் பதிப்புகள் - நூற்பட்டியல் -அ.அ. மணவாளன், கையேடுகளின் நிரந்தர ஆட்சி - தமிழ்மகன், பொதுவுடைமை இயக்கப் பதிப்புகள் - ஆர். பார்த்தசாரதி, தலித் பிரசுரங்களும் நூல்களும் (1910 - 1990) - ஸ்டாலின் ராஜாங்கம், தமிழ் நிகண்டுகளின் பதிப்புத் தடம் - மா. சற்குணம், கமில் சுவலபில் பார்வையிலான தமிழ்ப் பெயரடை - வினையடை வரையறைகளும் தமிழிலக்கண தமிழ் அகராதியியல் மரபுகளும் - பெ. மாதையன்

ஈழத் தமிழ்ப் பதிப்புலகம் பற்றிய கட்டுரையில் காணப்படும் பின்னிணைப்பில் சேர்ந்துள்ள நூலடைவு பதிப்பகங்கள் பற்றிய விவரத் தொகுப்பு பயனுடையது. சிங்கப்பூரில் தமிழ் படிப்போர் குறைவதும் இலக்கிய அறிவு தாகம் தமிழரிடையே குறைந்து காணப்படுவதும் அது வெறும் அரசியல் புகழுக்கான அடையாளமாக உள்ளது என்பதும் தமிழ் நாட்டிற்கும் பொருந்தும். ஆனால், அவற்றையும் மீறித் தமிழ்நாட்டில் பதிப்புத்துறை ஓரளவு நல்ல நிலையிலேயே உள்ளது விளங்காத புதிராகவே உள்ளது. தமிழைப் பொழுதுபோக்குக்கும் வம்பு தும்பு அரசியலுக்கும் பயன்படுத்தும் தமிழ்நாட்டுத் தமிழர், ஈழத்தமிழரைப் போல மலையாளிகளைப் போலத் தம் மொழியை அறிவைப் பெறுவதற்கும் பயன்படுத்தினால் தமிழ் நூற்பதிப்பு இன்னும் வளம்பெறும் வாய்ப்புகள் உள்ளன என்று தோன்றுகிறது. டிரவுட்மேன் கட்டுரை 19-ஆம் நூற்றாண்டுத் தமிழ் இலக்கியம், புலவர்கள் போன்றோர் வரலாற்றை எழுதத் தேடவேண்டிய தரவுகளின்பால் வழிநடத்துகிறது. அத்தடத்தில் மயிலை சீனி. வேங்கடசாமி அவர்கள் எழுதிய 19-ஆம் நூற்றாண்டில் தமிழ் இலக்கிய வரலாற்றை இங்கு குறிப்பிட வேண்டும். அந்நூலைச் செம்மையாக ஆதாரங்களையும் சேர்த்து வெளியிட வேண்டும். ஆஷருடைய கட்டுரை தமிழ் இலக்கணம் எழுதிய ஐரோப்பியர்கள் இலக்கியத்தமிழ் பேச்சுத்தமிழ் என்ற தமிழின் இரட்டை வழக்கை எதிர்கொண்ட விதம் பற்றிய பல சிந்தனைகளை முன்வைக்கிறது. சிவத்தம்பி இப்பொருள் பற்றிய ஆராய்ச்சிக்குத் தரவுகள் கிடைக்காதது பற்றிய குறையைக் குறிப்பிடுகிறார்.

வீ. அரசு, நாவலர் சங்க இலக்கியங்களின்பால் கவனம் செலுத்தாதது மதப்பற்றால் விளைந்த வரலாற்றுப்பிழை என்று குறிப்பிடுகிறார். மாறாக வரலாற்று நோக்கில் பார்த்தால் மொழி நாடு சார்ந்த அடையாளங்கள் குடியேற்றத்திற்கு முற்பட்ட தமிழகம் உள்ளிட்ட இந்தியத் துணைக்கண்டத்தில் வெறும் மத அடையாளங் களாகச் சுருங்கிக் கிடந்ததையும் உள்நாட்டு மதங்கள் ஓரளவாவது தமிழ் இலக்கிய மொழி மரபைக் கட்டிக் காத்தன என்பதையும் அவற்றுக்கு வெளிநாட்டு மதங்களாலும் குடியேற்ற அரசாலும் நேர்ந்த நெருக்கடிகளுக்கிடையே அவர்கள் அவ்வாறுதான் செயல்பட்டிருக்க முடியும் என்பதையும் பிற்காலத்தில் மொழி நாடு சார்ந்த மதச்சார்பற்ற தேசிய மறுமலர்ச்சிக்கு மதமும் மதம் சார்ந்த அடையாள மீட்சியும்தான் முன்னோடியாக இந்தியா முழுமையும் விளங்கியதையும் ஒப்பிட்டுக் காணும்போது இப்பார்வையோடு உடன்படுவதற்குத் தயக்கமே ஏற்படும்.

தமிழ் முஸ்லிம்களின் அச்சுக் கலாசாரம் (1835 - 1947) என்ற தலைப்பில் ஜெ.பி. பி. மோரே எழுதிய கட்டுரை சில புதிய உண்மைகளைக் கண்டுபிடித்து வழங்குகிறது எனலாம். தமிழ் முஸ்லிம்கள் முதலில் வெளியிட்ட நூல்கள் திருக்குரானும், ஹதீதும் அல்ல. மாறாக இஸ்லாமிய உள்ளடக்கம் கொண்ட தமிழ் நூல்களாகும். திருக்குரான் முற்றிலும் அரபியிலிருந்து மொழிபெயர்க்க 1940 வரை காத்திருக்க வேண்டியதாயிற்று என்று மோரே கூறுவது குறிப்பிடத்தக்கது. இதற்கு அரபுமொழிக் கல்வி தொடக்கத்தில் நன்கு வேரூன்றாதது காரணமாகலாம் என்ற அவர் கருத்து சரியானதே. இசுலாமியத் தமிழ்ப் பதிப்பு வரலாறு காட்டும் இம்முறை ஏனைய வேத சமண பௌத்த ஆசீவகம் போன்ற சமய நூல்கள் தமிழில் அறிமுகமான முறையைப் போன்றே உள்ளது. இம்மதங்களின் கதைகள் புராணங்கள் போன்றவை தமிழ் இலக்கிய வடிவில் தமிழில் அறிமுகப்படுத்தப்பட்ட பின்பே மூல மத நூல்கள் தமிழாக்கப்பட்டன. ஆனால் கிறித்தவம் மட்டும் இதற்கு விலக்காக அமைகிறது. விவிலியம் முதலிய மத நூல்களே தமிழில் முதலில் மொழிபெயர்க்கப்பட்டன. அதைத் தொடர்ந்து கிறித்தவம் சார்ந்த இலக்கியங்கள் தமிழ் இலக்கிய வகை வடிவில் எழுந்திருக்கின்றன. இது தமிழ் இலக்கியம் அறிவுத்துறை பற்றிய வரலாற்றில் முக்கியமான நீரோட்டமாகக் கவனிக்கத்தக்கது. இதற்கு மதப் பரப்புநர்கள் மேற்கொண்ட அணுகுமுறை மத நூல்கள் எழுந்த மூலமொழிகள் கற்க ஏற்ற வசதிகள் போன்றவை காரணமாக இருந்திருக்கலாம். இன்னும் 19-ஆம் நூற்றாண்டின் இறுதியில் தமிழ் முஸ்லிம்கள் நிறைய நூல்களை வெளியிட்டு அதற்கு முன்பு இருந்த நிலையை ஈடுகட்டுகின்றனர் என்றும் ஆசிரியர் கூறுவது கவனிக்கத்தக்கது. தமிழ் நூல் அச்சுப் பதிப்பு வரலாறு பற்றிய நுட்பமான வரலாறுகள் வரவேண்டும் என்பது வெ. ராஜேஷ் கருத்து.

இப்பகுதியில் இசைத்துறை, கும்மி போன்ற நிகழ்த்து கலை, நாட்டார் வழக்காற்றியல் தொகுப்புகள், மொழிபெயர்ப்பு நூற்பதிப்புகள், நிகண்டு நூற்பதிப்புகள், கிறித்தவம், பௌத்தம், வைணவம் ஆகிய மதம் சார்ந்த பதிப்புகள் பற்றிய கட்டுரைகளில் அரிய செய்திகள் அடங்கியுள்ளன. சைவம், சமணம் சார்ந்த பதிப்பு முயற்சிகள் பற்றிய கட்டுரைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றிருக்க வேண்டும்.

பெரியாரிய நூல் வெளியீடுகள் கையேடுகளாக வந்தமை தெரிகிறது. பொதுவுடைமைக் கட்சி வெளியீடுகள் பற்றிய கட்டுரையில் இடம்பெறாத நூல்கள் பற்றிய விவரங்கள் தனி நூல் அடைவாக அமைக்கப்பட்டுள்ளன. தலித் பிரசுரங்களும் நூல்களும் பற்றிய கட்டுரை அரிய சிறு வெளியீடுகள், அறிக்கைகள், நூல்கள் போன்ற தரவுகளைத் தருவதைக் குறிப்பிட வேண்டும். அரசியல் சமுதாய இயக்கங்களின் எழுச்சிக்குப் புத்தக வெளியீடும் அச்சுத்துறையும் ஆற்றிய பங்கை மதிப்பிட இத்தகைய ஆய்வுகள் வழிகாட்டும்.

தமிழில் சிறார் இலக்கியம் குறித்த சில சிந்தனைகளை முன்வைக்கிற வ. கீதாவின் கட்டுரை இன்னும் விரிவுபெற வேண்டும். குழந்தைத் தொழிலாளிகளை உற்பத்தி செய்யும் தமிழ்ச் சமூகத்தின் தாய்மார்கள் குழந்தைகளின் உடல், உள்ள ஆளுமை வளர்ச்சியில் அக்கறை காட்டாத பிற்போக்குத்தனத்தில் இரண்டாயிரம் ஆண்டு பழமையுடையது என்பதைப் ‘பாலில் வறுமுலை’ பற்றிப் பாடும் சங்கச் செய்யுளைக் காட்டி நாம் வேதனையோடு பீற்றிக்கொள்ளலாம். குழந்தைகளின் மொழி, கற்பனை வளர்ச்சி ஆகியவற்றில் குழந்தை இலக்கியத்தின் பங்கைத் தமிழர்கள் உணர்ந்திருந்தால் தமிழில் குழந்தை இலக்கியம் செழித்து வளர்ந்திருக்கும். அதன்வழி நல்ல அறிவார்ந்த மொழிவளம் மிக்க தலைமுறைகள் உருவாகியிருக்கும். இந்த நிலைமை மலையாளம் போன்ற மொழிகளோடு ஒப்பிடும்போது அங்கு செழித்திருக்கும் குழந்தை இலக்கியம் இதழ்கள் போன்றவை தமிழில் இல்லாமல் இருப்பதன் அறிவு, வறுமை வரலாற்று அவமானமாக இன்றும் நிலைபெற்று நிற்பது கண்டு நாம் வெட்கித்தான் தலைகுனிய வேண்டும்.

டி. தருமராஜன் கட்டுரை தமிழில் கதை படித்துக் காட்டும் மரபு இருப்பதைக் கதைபோலச் சொல்லிப் பதிவு செய்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்தது. தொழில்முறைக் கதை சொல்லிகள் சங்கரன் கோயில் பகுதியில் எழுத்தறிவு குறைந்த சில வகுப்பாரிடையே பிரபலமாக இருப்பதும் அவர்கள் பெரிய எழுத்துக் கதைப் புத்தகங்களை அதற்குப் பயன்படுத்துவதும் அரிய தகவல்கள் ஆகும். கோயில்களில் பாரதம், இராமாயணம் படிக்கும் மரபு முன்பு தமிழில் இருந்தது. இது சிற்றூர்களில் இந்த நூற்றாண்டின் நடுப்பகுதி வரை சமுதாய வழக்கமாக இருந்தது. கேரளத்தில் இது இன்னும் கோயில்களில் வழக்கில் இருக்கிறது. தென் கேரளத்தில் கோயில்களில் பாரதம் போன்றவற்றுடன் மதுரை திருவிளையாடல் புராணத்தைக் கூட மலையாள மொழியில் அமைந்த ஹாலாஸ்யம் என்ற பெயரில் இன்றும் வாசித்து வருகிறார்கள்.

பஞ்ச மாதமாகிய ஆடிமாதத்தில் இராமாயணம் படிக்கும் பழக்கம் இன்றும் கேரளத்தில் வழக்கில் உண்டு. ஆடி என்கிற கார்க்கிடகம் இராமாயண மாதம் என்றே கேரளத்தில் அழைக்கப்படும். இதைப் படிக்கிற வகுப்பார் ஆசான் கணியான் என்றெல்லாம் அங்கு அழைக்கப்படுவார்கள். அவர்கள் கோயில் சார்ந்த கலைஞர்கள், யாழ்ப்பாணம் பகுதியிலும் கந்தபுராணம் இவ்வாறு ஓதப்படும். இது கதாகாலட்சேப மரபிலிருந்து வேறுபட்டதாகும். இவற்றையெல்லாம் இன்னும் நுட்பமாக ஆராய இக்கட்டுரை தூண்டுகிறது.

நூற்றொகைப் பதிப்புகள் பற்றிய து. குமரேசன் கட்டுரை, அ.அ. மணவாளன் தந்துள்ள கம்பராமாயணப் பதிப்புகள் - நூற்பட்டியல் என்ற இரண்டும் நல்ல தொகுப்பு முயற்சிகள். தமிழில் நூற்றொகைப் பற்றிய கட்டுரை இன்னும் விரிவான பட்டியல்களுடன் விரிவு பெற வேண்டியது. இவற்றில் சென்னைக் கீழ்த்திசை சுவடி நூலக அட்டவணைப்போல திருவேங்கடவன் பல்கலைக்கழகம்,கேரளப் பல்கலைக்கழகம், ஆசியவியல் நிறுவனம், தமிழ்ப் பல்கலைக்கழகம் போன்ற நிறுவனங்களின் பட்டியல்களையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். அமெரிக்க அரசால் வெளியிடப்படும் தென்னாசிய நூலடைவும் இங்குக் குறிக்கத்தக்கது. வலைத் தளத்தில் இருக்கும் கொலோன் பல்கலைக்கழகத் தமிழ் நூலடைவும் குறிக்கத்தக்கது.

நூலடைவு என்ற சொல்லுக்குச் சமமாக ஆய்வடங்கல் என்ற சொல்லைப் புழங்க விட்டதுடன் அத்தகைய தமிழக முயற்சிகளுக்கு முன்னோடியாக அமைந்தது கேரள பல்கலைக்கழகத்தின் வாயிலாகப் பேரா. ச.வே.சு. வழிகாட்டலில் 1972-இல் காசிராஜனைக் கொண்டு வெளியிட்ட சிலப்பதிகார ஆய்வடங்கல் முயற்சியாகும். மேலும் தமிழ் அகராதிகள் பற்றிய அ. தாமோதரன் வெளியிட்ட நூலடைவு, பா.ரா. சுப்பிரமணியன் செந்தமிழ் இதழ்க் கட்டுரைகள் பற்றிய வெளியீட்டடைவு, முகமது உசேன் வெளியிட்ட உரையாசிரியர் நூலடைவு, மாதையனின் தமிழியல் நோக்கு நூலடைவு, தமிழண்ணலின் தமிழியல் ஆய்வு, திருமலை முத்துச்சாமியின் திருக்குறள் அடைவு என்று பல நூலடைவுகள் விடுபட்டுள்ளன. எல்லாவற்றையும் இங்கு சொல்ல இடமில்லை. அவற்றையெல்லாம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

இவ்விடத்தில் தமிழில் ஆண்டுதோறும் வெளியாகும் அச்சு நூல்கள் பற்றிய அடைவு ஆங்கிலத்தில் புக்ஸ் இன் பிரிண்ட் போல வெளியாக வேண்டும் என்பது பேரா. ச.வே. சுப்பிரமணியனாரின் அவா. அதற்காக அவர் 80-ல் தமிழ் போன்ற தலைப்பில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் வழி சில நூல்களை வெளியிட்டுள்ளார். அதுபோன்றே தமிழியல் முதலிய துறைகளில் நிகழ்ந்த நிகழும் ஆராய்ச்சிக் கட்டுரைகள் நூல்கள் பற்றிய தொடர்ச்சியான அடைவுகள் வெளியாக வேண்டும். இத்தகு ஆவண நூலடைவு முயற்சி தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் தொடங்கியது தொடராமற் போனது நம் கெட்டகாலமே. அவற்றை நடைமுறைப்படுத்த வேண்டும்.

இத்தொகுப்பில் மாதையன் கட்டுரை பெயரடை, வினையடை என்பவை மரபிலக்கணங்களில் உரிச்சொல்லாக வகுக்கப்பட்டதையும் அவை இலக்கணப் பாகுபாடு மட்டுமல்ல அகராதிப் பொருள் தரும் பண்புடையவை என்பதையும் எடுத்துக்காட்டி அகராதிகள் இவ்வாராய்ச்சிக்குத் தரவாக அமைவதை கமில் சுவலபில் கருத்தோடு ஒப்பிட்டு ஆராய்ந்து விளக்குகிறார்.

நிறுவனம் சார்ந்த பதிப்புகள் என்ற மூன்றாம் தலைப்பில் எளிய அமைப்பு, மலிவு விலை: சாக்கை ராஜம் பதிப்புகள் - இரா. வெங்கடேசன், பதிப்புத் துறையில் பாண்டித்துரைத் தேவரின் நான்காம் தமிழ்ச் சங்கம் - ஒரு பார்வை -

பா. தேவேந்திர பூபதி, தஞ்சை சரஸ்வதி மகால் நூலகமும், தமிழ்ச் சுவடிப் பதிப்புகளும் - ப. பெருமாள், சென்னைப் பல்கலைக்கழகப் பதிப்புத்துறை - வ. ஜெயதேவன், அண்ணாமலைப் பல்கலைக்கழகப் பதிப்பு - கல்பனா சேக்கிழார், உலகத் தமிழாராய்ச்சி நிறுவன வெளியீட்டுப் பணிகள் - மு.வளர்மதி ஆகிய கட்டுரைகள் பல்வேறு விதமான செய்திகளையும் பட்டியல்களையும் கொண்டு அமைந்துள்ளன. உலகத் தமிழாராய்ச்சி நிறுவனப் பதிப்புப் பணிகள் முதலியவற்றை முதலில் நன்கு திட்டமிட்டு விரிவுபடுத்தி அதன் இயக்குநராக விளங்கிய ச.வே. சுப்பிரமணியன் அப்பணிகளைச் செவ்வனே நடத்திய இராமர் இளங்கோ போன்றோர் பங்கினையும் குறிப்பிடுவது பொருத்தமுடையதாகும்.

இப்பகுதியில் கேரளப் பல்கலைக்கழகத் தமிழ் வெளியீடுகள் போன்றவற்றையும் சேர்த்துக்கொள்ள வேண்டும். மேலும் இலண்டன் பிரிட்டிஷ் நூலகம், கொலோன் பல்கலைக்கழக இந்தியவியல் தமிழியல் துறை நூலகம், அமெரிக்க நூலகங்கள் போன்றவற்றின் பணிகளையும் சேர்த்துப் பார்க்கலாம். முற்கால அச்சகங்கள் பற்றிய பட்டியல் ஒன்றும் இதில் உள்ளது.

மொத்தத்தில் தமிழ்ப் பதிப்புக் களஞ்சியம் ஒன்றை உருவாக்குவதற்குரிய அடிப்படைச் செய்திகளின் தொகுப்பாக அமையும் இச்சிறப்பிதழ் ஆண்டுதோறும் புதுப்பொலிவோடும் விரிவோடும் வெளியாக வேண்டும் என்ற பெரு விருப்பத்தை எழுப்புகிறது.

இதைத் தயாரித்தவர்கள், எழுதியவர்கள், வெளியிட்டவர்கள் எல்லோருக்கும் வணக்கமும் வாழ்த்தும் கூறிப் பாராட்டுவோமாக!

(தமிழ்ப் பதிப்புலகம் 1800 - 2009, வெளியீடு: பாரதி புத்தகாலயம், ரூ.95, பக்கம்: 320)

- கி.நாச்சிமுத்து

Pin It