(வரலாற்றுப் பொருள்முதல்வாதம் நூலுக்கான அணிந்துரை)

வி.கெல்லி,எம்.காவல்சோன் ஆகியோர் இணைந்து எழுதிய “வரலாற்றுப் பொருள்முதல்வாதம்: சமுதாயத்தைப் பற்றிய மார்க்சிய தத்துவத்தின் சுருக்கம்” என்ற இந்த நூலின் ரஷ்யப் பதிப்பு மாஸ்கோ புத்தகக் கடைகளில் எழுபதுகளின் கடைசி ஆண்டுகளில் கொஞ்சம் வித்தியாசமான அட்டைப்படத்துடன் கண்களில் பட்டதாக ஞாபகம்.ஆனால் அந்தப் புத்தகத்தை நான் அப்போது படிக்கவில்லை.

இப்போது தோழர் தா.பாண்டியன் அவர்களின் மொழிபெயர்ப்பில் வாசிக்கக் கிடைத் துள்ளது. எழுபது,எண்பதுகளில் மாஸ்கோவில் நான் மார்க்சியம் பயின்ற சூழல்களை நினைவுபடுத்துவதாக இந்நூல் அமைந்திருப்பது எனக்கு ஒரு திருப்தியை ஏற்படுத்துகிறது. ஏற்கனவே 1982-ஆம் ஆண்டில் இந்நூல் தமிழில் முதல் பதிப்பாக வெளிவந்து இப்போது இரண்டாவது பதிப்பாக வெளிவருகிறது.

அட்டைப்படத்தில் மட்டுமல்ல, உள்ளடக்கத்திலும் “கொஞ்சம் வித்தியாசமான” நூல் என்ற அந்தஸ்தை இந்த நூல் கொண்டுள்ளது என்பதைச் சொல்லியாக வேண்டும்.

மார்க்சியம் பயிலக்கூடிய நாம் பொருள்முதல்வாதம் என்ற அதன் தத்துவ நிலைப்பாட்டில் ஆர்வம் கொண்ட வர்கள்.அது நியாயமானது தான்.ஆயின் மார்க்சியப் பொருள்முதல்வாதத்தின் தனித்தன்மைகளைப் பலவேளைகளில் நாம் போதுமான அளவுக்குப் புரிந்துகொள்வதில்லை.மார்க்சியம் இரண்டு வகையான பொருள்முதல் வாதங்களைப் பற்றிப் பேசுகிறது.

ஒன்று:இயங்கியல் பொருள்முதல்வாதம்; அது இயற்கை, சமூக வாழ்வு, மனித சிந்தனை ஆகியவை குறித்து மிகப் பொதுவாக நின்று பேசுவது.

மற்றது:வரலாற்றுப் பொருள்முதல்வாதம்;இது சமூக வரலாற்றினுள் இயக்கநிலையில் உள்ள பொருளின் செயல்பாடுகளைப்பற்றிச் சிறப்பாகப் பேசும் பண்பு கொண்டது.

இந்தியத் தத்துவங்களிடையிலும் பொது,சிறப்பு என இரண்டு வகையாகப் பேசும் மரபு உண்டு என்பதை இங்குக் குறிப்பிட்டுச் செல்லுவோம்.

இயங்கியல் பொருள்வாதமும் வரலாற்றுப் பொருள் முதல்வாதமும் நெருக்கமாகத் தொடர்பு கொண்டவை; ஒன்றின் தொடர்ச்சியாக மற்றொன்று அமைகின்றது. இருப்பினும், இயங்கியல் பொருள் முதல்வாதத்தைவிட வரலாற்றுப் பொருள்முதல்வாதம் அதிகப் பிரத்தியட்சத் தன்மை (Concreteness)கொண்டது,ஏனெனில் அது சமூகத்தைப் பற்றி,வரலாற்றைப் பற்றிக் குறிப்பாகப் பேசுகிறது.கெல்லி,காவல்சோன் ஆகியோரின் இந்த நூல் வரலாற்றுப் பொருள்முதல்வாதத்தைப் பற்றியது.

வரலாற்றுப் பொருள்முதல்வாதத்தைப் பயில முனையும் போது, முதலில் ஒரு கேள்வியை முன்னிறுத்திக் கொள்வது நல்லது.சமூக வரலாற்றினுள் இயங்கும் பொருள் என்று மார்க்ஸ் எதனைக் குறிப்பிடுகின்றார்?என்பதே அந்தக் கேள்வி.சமூக வாழ்வினுள் பொருள் எனப்படுவது யாது?சமூக வரலாற்றினுள் தொழில்பட்டு வந்துள்ள,தொடர்ந்து தொழில்படுகிற இயக்க நிலையிலேயே உள்ள பொருள் என்பது யாது?

இயற்கைச் சூழல்களை மனதில் கொண்டு, பொருள் என்றால் என்ன? என்பதை மார்க்சுக்கு முந்தியே பல சிந்தனை யாளர்கள் பேசியிருக்கின்றனர்.இயற்கை என்பதே பொருள் மயமானது,பஞ்ச பூதங்கள் கலந்த மயக்கமாக உருவான இந்த உலகம் பொருள் வடிவிலானது,அணுக்கள் பொருள் எனப்படுகின்றன,மனித உடல் பொருள்மயமானது, மனிதரின் மூளையும் நரம்பு மண்டலமும் பொருள் வடிவிலானவை தான், என்பது போன்ற பல பதில்களை நாம் மார்க்சுக்கு முந்திய பொருள்முதல்வாதத் தத்துவ வாதிகளின் எழுத்துக்களில் சந்திக்கிறோம்.

ஆனால் இயற்கையைக் கடந்து அல்லது இயற்கையை உள்வயப்படுத்தி மனித சமூகத்தினை நெருங்கி வரும்போது சமூக வாழ் வினுள் பொருட்சக்தியாக அமைவது எது? என்பது முதன்மையான கேள்வியாகிறது. வரலாற்றுப் பொருள் முதல் வாதம் இயங்கியல் பொருள்முதல்வாதத்தை சமூக வரலாற்றினுள் நின்று அர்த்தப்படுத்துகிறது. மார்க்சின் மிகப் பெரிய சாதனையே, இயற்கை என்ற புறவயமான எதார்த்தத்தைக் கடந்து, சமூக வாழ்வினுள் இயங்கியல் பொருள்முதல்வாதத்தைத் தொழில்படச் செய்தமைதான்.

எனவே மார்க்சிய சிந்தனையைச் சரியாக அடையாளப் படுத்திப் புரிந்துகொள்ளுவதற்கு மார்க்சின் வரலாற்றுப் பொருள்முதல்வாதம் முக்கியமாகிறது.இந்த வகையில் இந்த நூல் நமது மார்க்சியப் புரிதலுக்கான அரிச்சுவடி ஆகிறது.இந்த நூல் அதன் முதல் பக்கத்திலேயே சமூக வாழ்வின் வரையறையை வழங்குகிறது.

“மனித சமுதாயம் ஒரு கதம்ப வடிவுரு உடையது. அது மனிதர்களுக்கும் இயற்கைக்கும் இடையிலானஊடுசெயலிலிருந்தும்,மனிதர்களிடையில்நடைபெறும் ஊடுசெயல்களிலிருந்தும் எழுகின்றது.”இதுவே வரலாற்றுப் பொருள் முதல்வாதத்தின் நுழைவாயில்.

மேற்குறித்த வரிகளில் எடுத்தாளப்படும் “ஊடுசெயல்கள்”என்ற சொல்லை நினைவில் வைத்துக்கொண்டு நாம் தொடங்குவோம்.வரலாற்றுப் பொருள்முதல்வாதம் எனில் சமூகச் சூழல் களைக் கொண்டு ஒரு நிகழ்வினை விளக்குவது என்ற ஓர் எளிய புரிதல் நம்மில் பலரிடையில் வழக்கில் உள்ளது.இந்த நூல் இயற்கைச் சூழல்கள் என்றோ சமூகச் சூழல்கள் என்றோ மார்க்சியப் பொருள்முதல்வாதத்தைத் தொடங்கவில்லை என்பது இங்கு நாம் கவனப்படுத்தவேண்டிய ஒன்றாகும்.

மார்க்சுக்கு முந்திய பொருள்முதல்வாதிகள் அப்படித் தொடங்கியதுண்டு.மாறாக,இந்நூல் மனிதரின் ஊடுசெயல்கள் என்ற கருத்தாக்கத்தை முதன்மைப் படுத்துகிறது.இந்த அடிப்படையான வேறுபாட்டை நாம் மனதில் கொண்டு இந்நூலை வாசிக்கத் தொடங்கினால் இந்த நூலை நெடுக, முழுக்க புரிந்துகொள்ளலாம்.

இயற்கையிலிருந்து மார்க்சியம் சமூக வாழ்வின் உள்ளீடான தளங்களை நெருங்கி வரும்போது அது தன்னை மறுவரையறை செய்துகொண்டு செழுமைப்படுத்திக் கொள்கிறது என்ற கருத்தை இந்நூலின் ஆசிரியர்கள் இன்னொரு விதமாகவும் உறுதிப்படுத்துகின்றனர். இருத்தல்(Being)என்ற மெய்யியல் கருத்தாக்கத்தை மார்க்சிய வரலாற்றுப் பொருள்முதல்வாதம் சமூக இருத்தல் (Social Being)என்று பிரித்துக் காட்டுகிறது என்று இந்நூல் எடுத்துரைக்கிறது.“இயற்கையின் இருத்தல் என்பதிலிருந்து,சமூக இருத்தல் என்பதனை முற்றிலும் வேறு பட்டதாகப் பொதுவாகப் பிரித்துக்காட்டியதன் மூலம்,கார்ல் மார்க்ஸ் வரலாற்றுப் பொருள்முதல்வாதத்தை உருவாக்கினார்”என்று இந்நூல் சுட்டிக்காட்டுகிறது (பக்.44).

நூலின் இரண்டாவது இயலில் மனிதரின் ஊடு செயல்கள்,சமூக இருத்தல் போன்ற கருத்தாக்கங்களை நூலாசிரியர்கள் மேலும் விரிவாகப் பேசுகின்றனர். “சமுதாயத்தைப் பற்றி ஆய்வு செய்யும் சமுதாய விஞ்ஞானமானது,சமுதாய உறவுகளின் அமைப்பாக மட்டும் ஆய்வதாக அல்லாமல்,அந்த அமைப்பின் தன்மையாக மட்டும் மனிதனைப் பாராமல், சமுதாய அமைப்பில் ஒரு துளியாக மட்டும் கருதாமல், இந்தச் சமுதாய உறவு களின் ஒரு பொருளாகவும், செயல்திறன் உள்ள தனி மனிதன் என்ற வகையிலும், ஆக்கபூர்வமாக செயல் உள்ளவன் என்ற முறையிலும்,தனக்கே உரித்தான ஒரு கருத்து உலகத்தைக் கொண்ட தனிமனிதன் என்ற வகை யிலும், விருப்பு-வெறுப்புகளைக் கொண்டவன் என்ற முறையிலும் பார்த்தாக வேண்டும்.” (பக்.50).

இங்கு மீண்டும் புறவயமாக நிலவுகின்ற அமைப்பின் விளைபொருளே மனிதர் என்ற சுருங்கிய கருத்தாக்கம் மறுக்கப்பட்டு, அந்தப் புறவயமான அமைப்பின் மீது ஆக்கபூர்வமாக, தன்னுணர்வுடன்செயல்படுபவர்கள் மனிதர்கள் என்ற கருத்துநிலை வலியுறுத்தப்பட்டுள்ளது. இங்குப் புறவயமான (இயற்கை மற்றும் சமூகச்) சூழல்கள், புறவய மான அமைப்பு என்ற ஒற்றை நிலையிருந்து விலகிய,மனிதச் செயல்பாடுகளை உள்ளடக்கிய அக-புற இயங்கியல் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளது என்பது கவனிக்கத்தக்கது.

“செயல்கள் மூலம்தான் மனிதன் உலகத்தை மாற்றுகிறான்;அதனால் தானும் மாறுதலடைகிறான்.மனிதனின் செயல்களில்தான் அவனது சக்தி வெளிப்படுகிறது.அது சடப்பொருள் வடிவத்தையும் பெறுகிறது.உழைப்பினால் மனிதன் உருவாக்கப்பட்டதைக் கூறுவதே வரலாறு ஆகும் என்றார் மார்க்ஸ். அதாவது, அவனது செயல்கள் மூலமே அவன் உருவாக்கப்படுகிறான் என்பதே இதன் பொருளாகும். அவனது செயல்களுக்கு அப்பால், ஒரு வரலாறும், எந்தவொரு சமுதாயமும், ஏன் மனிதனே கூட இல்லை எனலாம்.  மார்க்சியத்தில், செயலுக்கான கோட்பாடு என்பது அமைப்புரீதியில் பொருள்முதல்வாதத்துடனும், இயக்கவியலுடனும் இணைப்புக் கொண்டதாகும்” (பக்.51).   

இயற்கைக்கும் மனிதருக்கும் இடையில் நிகழும் ஊடுசெயல்களை உழைப்பு என்கிறோம். வேறு வார்த்தைகளில் சொல்லுவதானால்,இயற்கையை மனிதர் உரு மாற்றும் ஊடுசெயலை உழைப்பு என்கிறோம். இன்னும் விரிவாக அதனை உற்பத்தி என்கிறோம். அவ்வுற்பத்திச் செயல்பாட்டின் முதன்மையான கூறுகளாக உற்பத்திச் சக்திகள்,உற்பத்தி உறவுகள் ஆகியவற்றை அடையாளப் படுத்துகிறோம்.அவற்றிற்கிடையிலான இயங்கியலைச் சுட்டிக்காட்டுகிறோம். அதே போல சமூக அமைப்பை, சமூகச் சூழல்களை மாற்றியமைக்கும் மனிதச் செயல் பாடுகளை வர்க்கப் போராட்டம் என்கிறோம்.

சமூகப் புரட்சி என்பது ஆகப் பெரிதான வர்க்கப் போராட்ட நிகழ்வு;உழைப்பு என்னும் மானுடச் செயல்பாடே ஒரு பண்டத்தின் மதிப்பையும் உபரி மதிப்பையும் உற்பத்தி செய்கிறது என்று மார்க்சிய அரசியல் பொருளாதாரம் கூறுகிறது.ஒரு கலைஞனின் செயல்பாட்டில் இது போன்ற மனித உழைப்பே படைப்பாற்றலாக விளைகிறது என்று மார்க்சிய அழகியல் கூறுமாக இருக்கலாம்.அதுவும் உலகை மாற்றியமைக்கும் ஓர் ஊடுசெயலே.

இவ்வாறாக, மார்க்சியத்தின் தத்துவம், வரலாற்றியல், பொருளாதாரவியல், புரட்சி பற்றிய கோட்பாடு,அழகியல் ஆகிய சகல பகுதிகளையும் தொகுத்து நிற்கும் கருத்தாக்க மாக சமூக வாழ்வில் மனிதரின் செயல்கள் விளங்குகின்றன என்பதைக் காண்கின்றோம்.இந்த அற்புதமானதத்துவநோக்கை இந்த நூல் முன்னிலைப்படுத்துவதால் தான்,இந்நிலைப்பாட்டை போதுமான தெளிவுடன் இந்நூல் எடுத்துரைப்பதால்தான்,அந்நோக்கை மரியாதைக் குரிய தோழர்.தா.பா.அவர்கள்மிகஉணர்வுபூர்வமாகமொழிபெயர்த்துவழங்கியிருப்பதால்தான்,இந்நூல் ஒரு வித்தியாசமான நூல் என நான் முகப்பில் சொல்லியுள்ளேன்.நூலின் முதல் இரண்டு இயல்களும் மேற் குறிப்பிட்ட அடிப்படையான மார்க்சிய மெய்யியல் நிலைப்பாட்டைத் துலக்கமாக வெளிப்படுத்துகின்றன. 

“சமூக அமைப்புகள்” என்று தலைப்பிடப்பட்டுள்ள மூன்றாவது இயல், வரலாற்றில் வழக்கில் இருந்து வந்துள்ள சமூகப் பொருளாதார வடிவங்களை அவற்றின் வரிசையில் விளக்குகின்றது. புராதனப் பொது உடைமைச் சமூகம், அடிமைச் சமூகம், நில உடைமைச் சமூகம்,முதலாளியச் சமூகம்,சோசலிச சமூகம் ஆகிய அடுத்தடுத்து வரும் சமூக அமைப்புகளைஇவ்வியல் விளக்குகிறது.வெவ்வேறு சமூகங்களில் மிகப் பொதுவானவையும், மிக முக்கிய மானவையும்,மீண்டும் மீண்டும் நிகழும் அம்சங்களும் சமூக அமைப்புகள் என்ற கருத்தாக்கத்தின் மூலம் எடுத்துரைக்கப்படுகின்றன.இருப்பினும் இந்நூல் சில முக்கியமான எச்சரிக்கைகளையும் வழங்குகிறது.சமூகப் பொருளாதார வடிவம் என்ற கருத்தோட்டம் குறிப் பிட்ட ஒரு சமுதாயத்தைப் பற்றிய திட்டவட்டமான அறிவைப் புரிந்துகொள்ளப் போதுமானதாக இல்லை என்பதை இந்நூல் ஒத்துக்கொள்ளுகிறது (பக்.62).

“வரலாற்றின் வளர்ச்சி ஏற்றத்தாழ்வுடையதாக இருப்பதால், இவை வெவ்வேறு நாடுகளில் வெவ்வேறு கட்டங்களில் நிகழ்கின்றன.வரலாற்று வளர்ச்சியில் சில நாடுகள் பின்தங்கி விடும் போது சில நாடுகள் முன்னேறிச் செல்லுகின்றன.எனவேதான்,ஒரே காலத்தில், வெவ்வேறு நாடுகளில் வெவ்வேறான வளர்ச்சிக் கட்டங்களையும்,வெவ்வேறான சமூக வடிவங்களையும் காண்கிறோம்”என்று கூறும் இந்நூல்,“அந்தந்த சமூகத்தினைப் பற்றிய ஆராய்ச்சிகளுக்குப் பதிலாக இதுவே (கோட்பாட்டுரீதியாக அறிவே)போதும் எனக் கொள்ளக்கூடாது” என எச்சரிக்கிறது (பக். 68-69). 

சமூக அமைப்புகள் குறித்த மூன்றாவது இயலிலேயே,அடித்தளமும் மேற்கட்டுமானமும் குறித்த மார்க்சிய சிந்தனை விவாதிக்கப்பட்டுள்ளது.இக்கருத்தாக்கங்கள் மார்க்சிய முறையியலை உருவாக்குவதில்,குறிப்பாக அதன் பகுப்பாய்வு முறையைச் செதுக்கியெடுத்ததில் முக்கியமான பங்காற்றின என்பதை நூலாசிரியர்கள் எடுத்துரைக்கின்றனர்.இருப்பினும்,அவை இரண்டுக்கு மான இயங்கியல் உறவு புறக்கணிக்கப்பட்டு விடக் கூடாது என்பதில் நூல் கவனம் செலுத்துகிறது. “எலும்புக் கூடே ஒரு முழு உடலின் அமைப்பாக ஆகிவிட முடியாததுபோல,அடிப்படையே சமூகம் முழுவதற்கு மான மொத்த வடிவமாக ஆகிவிடாது.

சமூக வடிவ அமைப்பின் மிக மையமான கட்டமைப்பு எதுவெனில்,எலும்புக்கூட்டை மறைத்துப் போர்த்திநிற்கும் சதை யையும் ரத்தத்தையும் போல்,சமூகத்தின் மேல்கட்டு மானம் இவற்றை மூடி வடிவம் தருகிற நிலையே!” (பக். 91). அடித்தளம், மேற்கட்டுமான உறவுகளை இயங்கியல் ரீதியாக விளக்க,லெனின் எலும்பு,சதை,ரத்தம் போன்ற உவமைகளைப் பயன்படுத்தினார்.

இந்நூலும் அவ்வகை உவமைகளை எடுத்தாண்டுள்ளது.மேற்கட்டுமான வடிவங்களை இரண்டாம் பட்சமாகக் கருதி அவற்றை அலட்சியப்படுத்தும் போக்கு இந்நூலில் இல்லை. சித்தாந்த வடிவங்கள், மதங்கள், செய்தித்துறை, கல்வித் துறை, பெருவாரி மக்களின் சமூக மனப்போக்கு ஆகியவை இந்நூலில் குறிப்பான கவனத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளன (பக்.92-93).மேற்கட்டுமான அமைப்புகள் திடப்பட்டு அவற்றினுள் உருவாகும் நிறுவனங்களைப் பற்றிய இந்நூலாசிரியர்களின் கருத்துக்களை இங்குக் குறிப்பாகச் சொல்லவேண்டும். மேற்கட்டுமான நிறுவனமான அரசு அமைப்பு,அரசியல் கட்சிகள்,அவற்றின் அதிகார நிறுவனங்களான ராணுவம், காவல்துறை, சிறைச் சாலைகள் போன்றவை “சித்தாந்த ரீதியில் மட்டு மல்லாது, அவை சடப்பொருள் சக்தியாகவும் திகழ் கின்றன” என்று இந்நூலாசிரியர்கள் தெரிவிக்கின்றனர் (பக்.97).

இது போன்ற கருத்துக்களைப் பேசி விவாதிப் பதற்குப் பல வேளைகளில் நாம் தயங்கி வந்திருக்கிறோம் என்பதை இங்குச் சொல்லியாக வேண்டும்.இந்நூல் அவ்வகைத் தயக்கங்களைத் தாண்டி நடைபோடுகிறது. ஒரு புரட்சியாளன் மிகத் தீவிரமாகக் கவனத்தில் கொள்ள வேண்டிய சமூக சக்திகள் மேற்கட்டுமானங்களும் அவற்றின் நிறுவனப்பட்ட வடிவங்களும் என்று இந்நூல் அறுதியிட்டுக் கூறுகிறது.

அடித்தளம்,மேல்கட்டுமானம் இவற்றுடன் கூடவே சமுதாயத்தின் இதர அங்கங்களான வாழ்க்கை முறை,குடும்பம்,பள்ளிக்கூடம்,மொழி,விஞ்ஞானநிறுவனங்கள் போன்றவற்றையும் பிரத்தியேகமாகப் பரிசீலிக்க வேண்டும் என இந்நூல் வலியுறுத்துகிறது.அதுபோலவே மக்கள் தொகுதியினரை முன்னிறுத்தி அணுகும்போது, இனம் அல்லது குழு, தேசிய இனம், தேசம், வர்க்கங்கள், சமூகக் குழுக்கள் ஆகியவையும் தனித்த கவனத்துடன் கணக்கில் கொள்ளப்பட வேண்டும் என்பது உணர்த்தப்படுகிறது (பக்.100).

வாழ்க்கை முறை என்பது தனிநபர்கள் உழைக்கும் நேரத்திற்கு அப்பாற்பட்ட நேரத்தில் நுகர்வுச் செயல் பாடுகளில் ஈடுபடுவதும் ஆன்மிக விஷயங்களைக் கிரகிப்பதும் ஆகும் என்பது சுட்டிக்காட்டப்படுகிறது.மொழி குறித்து இந்நூல் எடுத்துச் செல்லும் விவாதம் மிகச் சுவையானதாக உள்ளது. “உணர்வு எவ்வளவு தொன்மை யானதோ அவ்வளவிற்கு மொழியும் தொன்மையானது;உணர்வு மொழியுடன் நேரடி இணைப்பும் கொண்டது.எனவே இது இயல்பாகவே,சமூக வாழ்க்கையில் நுண்ணுணர்வுகளான ஆன்மிகத் துறைப் பிரிவைச் சேர்ந்ததாகும்.மொழியின் இருப்புக்கும் வளர்ச்சிக்கும் அதன் தனித்தன்மைகளுக்கும் பொருளாதாரம் அடிப்படை அல்ல.

ஆதலால் மொழியை மேல்கட்டுமானமாகக் குறிப்பிட இயலாது.நாம் மொழியை மேல்கட்டுமானம் என்று கூறுவோமானால், பழைய அடிப்படை மீது எழுந்ததான மொழியைப் புரட்சிகரமாகத் தகர்த்தாக வேண்டும் என்று கோரவேண்டி வரும். புதிய அடிப் படை மீதான, அதற்கொத்த மொழியைப் படைக்க வேண்டும் என்றும் கோரவேண்டி இருக்கும்”(பக்.107) என்று இந்நூலாசிரியர்கள் கூறுகின்றனர்.

20-ஆம் நூற்றாண்டில் மிகப் பெரிய விவாதங்களைச் சந்தித்துள்ள இப்பிரச்சினையை இந்நூலாசிரியர்கள் கையாண்டுள்ள முறை வித்தியாசமாக உள்ளது.இவ்விவாதத்தின் முடிவாக அவர்கள் கூறும் கருத்துக்கள் இன்னும் அதிகமாக நம் கவனத்தைக் கவருகின்றன.“இந்தக் கருத்தின் அடிப்படையான முக்கியத்துவம் என்னவெனில், ‘அடித்தளம்', ‘மேல்கட்டுமானம்' என்ற இருவகைப் பகுதிகள் மட்டுமே, வரலாற்று வளர்ச்சிப் போக்கின் மீது செல்வாக்கைச் செலுத்தும் எல்லாவகைப் போக்குகளையும் உட்கொண்டவை அல்ல என்பதுதான்” (அதே பக்கம்).

இந்நூலின் நான்காவது இயல்,சமூக அமைப்பு களின் உள்ளீடாகத் தொழில்படும் இயங்கியலை அதன் எல்லாச் சிக்கல்களோடும் எடுத்துரைக்கிறது.இயற்கைக்கும் சமூகத்திற்கும் இடையிலான உறவு,உற்பத்திச் சக்திகளுக்கும் உற்பத்தி உறவுகளுக்கும் இடையிலான உறவு,உலக வரலாற்றில் முந்தையச் சமூக அமைப்புகள் அடுத்தடுத்த பாய்ச்சல்களால் மாறிவந்த நிகழ்வுகள் இவ்வியலில் விளக்கப்படுகின்றன.ஆங்காங்கே, வளர்ச்சி என்பது முறிவு இல்லாத நேர்க்கோடு அல்ல (பக்.133),முதலாளியச் சமூகத்தில் உற்பத்திச் சக்திகளின் படைப்புத் தன்மை சிதைக்கப்படும் நிலை (பக்.143),பழஞ்சமூகங் களில் இனமே உற்பத்திக் குழுக்களாகத் தொழில்பட்ட செய்தி (பக்.153), எகிப்து, இந்தியா, சீனா போன்ற நாடு களில் நிலவிய ஆசியபாணி உற்பத்தி முறை (பக்.159),காலனியத்தின் பண்புகள் (பக்.167) ஆகியவை பற்றி இந்நூல் பேசுகிறது.

இவ்வியலின் இறுதிப்பகுதி, மார்க்சியம் இன்று உலக அளவில் வெவ்வேறுவகையான சமூக அமைப்புகளின் பலதரப்பட்ட பிரச்சினைகளை,பன்முக அமைப்புகளை எதிர்கொள்ளும் ஆற்றல் கொண்டதாக முதிர்ச்சி பெற்று வருகிறது என்று கூறுகிறது (பக்.184-186).இந்த முடிவும்கூட இந்நூலின் வித்தியாசமான அணுகு முறையை எடுத்துக்காட்டும் ஒரு சந்தர்ப்பமாகும்.

நூலின் ஐந்தாவது இயல் “சமுதாயமும் பண்பாடும்” எனத் தலைப்பிடப்பட்டுள்ளது. பண்பாடு குறித்துத் தனியாகப் படிக்க வேண்டியது அவசியம் என்பதை மார்க்சிய சமூக விஞ்ஞானம் வலியுறுத்துகிறது என்ற சொற்றொடருடன் இவ்வியல் தொடங்குகிறது (பக்.193). இயற்கை, சமுதாயம், பண்பாடு ஆகியவற்றிற்கிடையிலான ஒன்றிணைவையும், அவற்றைப் பிரித்துப் பார்க்க வேண்டிய அவசியத்தையும் முறையியல்ரீதியாக முன்வைத்துப் பேசத் தொடங்குகிறது.

20ஆம் நூற்றாண்டில் முன்னுக்கு வந்த வரைவடிவ இயல் (Semiotics), மனித இன வரலாறு (Ethnology, Anthropology) போன்ற துறைகளின் புதிய கண்டுபிடிப்புகளை உள்வாங்கி இவ்வியல் வளருகிறது.பண்பாட்டை வரலாற்றுரீதியாகப் பார்க்காமல்,அதனை ஒரு மாறாத நிரந்தர அமைப்பாக அணுகும் முறையை இந் நூல் விமர்சிக்கிறது. அதே வேளையில், உடைமைச் சமூக முரண்பாடுகளைக் கொண்ட சமுதாயத்தில் பண்பாடு களின் சமத்துவம் என்னும் கருத்து,மக்களின் உரிமைகளை உறுதிப்படுத்துவதற்கான ஆதாரம் என்பதையும் வலியுறுத்துகிறது.முதலாளியம்,காலனியம் போன்ற எதார்த்தங்கள் முழு தேசிய இனங்களையும்,அவற்றின் கலாசாரங்களையும் அழித்தொழிப்பதில் கொண்டு போய்ச் சேர்க்கின்றன என்பதைச் சுட்டிக்காட்டுகிறது (பக். 206-207). சமூகப் புரட்சியோடு இணைந்து நடக்க வேண்டிய கலாசாரப் புரட்சியின் முக்கியத்துவத்தை இவ்வியல் விளக்குகிறது.

ஆறாவது இயல், வரலாற்று நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்லும் சமூக சக்திகளான பெருவாரி மக்கள், வர்க்கங்கள், கட்சிகள், தனிநபர்கள் ஆகியவை பற்றிப் பேசுகிறது. மனிதருக்கு வெளியேயுள்ள புறவயமான விதிகளே வரலாற்றை இயக்குகின்றன என்ற கருத்தை இவ்வியல் மறுக்கிறது. “பொதுவான விதிமுறைகளி லிருந்து, ஒரு குறிப்பிட்ட வரலாற்று வளர்ச்சியை உடனடியாக விளக்கப் புகுவது என்பது இயலாத காரியமாகும். அவ்வாறு செய்தால் வரலாற்றுக்கு முகமே இருக்காது.

மனிதர்களும் மனிதர்களாக அல்லாமல் பொம்மைகளாக இருக்கவேண்டும்” (பக். 224). எனவே, புறச் சூழல்களும் மானுடச் செயல்பாடுகளும் இணையும் அக-புற இயங்கியலே வரலாற்றுப் போக்குகளை உருவாக்குகிறது என இவ்வியல் கூறுகிறது. மார்க்சின் வர்க்கங்கள், வர்க்கப் போராட்டங்கள் என்னும் கருத்தாக்கங்கள் இங்கு இயல்பாகவே முன்னுரிமை பெறுகின்றன.

முதலாளிய அரசியல் பொருளாதார அறிஞர்களும்கூட சமுதாயத்தில் வர்க்கங்களின் இருப்பை அங்கீகரித்தனர்.ஆனால் அவர்கள் சமுதாயத்தின் விநியோகத்தளத்தில் வர்க்கங்களும் வர்க்க ஏற்றத்தாழ்வுகளும் உருவெடுக்கின்றன என்று கருதினார்கள். மார்க்ஸ், இதனை மறுத்து,வர்க்கங்கள் தோன்று வதும் அவை முரண்படுவதும் போராடிக்கொள்வதுவும் மிக முக்கியமாக உற்பத்தித்தளத்தில் என்று நிரூபித்துக் காட்டினார். லெனின் அவரது “மாபெரும் தொடக்கம்”என்னும் கட்டுரையில் வர்க்கம் என்பதற்கான விரிவான வரையறையை வழங்கினார் (பக்.231).

தொழிலாளர் வர்க்கம் என்ற மார்க்சியத்தின் கோட்பாட்டு நிலை, விவசாயிகள், அறிவாளிகள், அலுவலகத் தொழிலாளர்கள் என்றெல்லாம் விரிவுபடுவதை இவ்வியல் எடுத்துக்காட்டுகிறது. இன்னும் கூடுதலாக, புரட்சியை நோக்கி ஒரு சமூகம் நகரும்போது, பெருவாரி மக்கள் திரள் என்ற கருத்தாக்கம் முக்கியப்படுகிறது.

ஒரு மாபெரும் அரசியல் பொது நிலையை நோக்கிச் சமூகம் நகருவதை இது சுட்டிக்காட்டுகிறது.மார்க்சியம் பொருளாதார வாதம் அல்ல.லெனின் பொருளாதார வாதிகளை எதிர்த்துப் போராடினார். “தொழிலாளி வர்க்கப் போராட்டத்தை பொருளாதாரக் கட்டுக்கோப்புக்குள் மட்டும் நிறுத்தினால் தொழிலாளி வர்க்கத்தை அது நிரந்தரமாக அடிமைப்படுத்தவே உதவும் என்று லெனின் கூறினார்”(பக்.257)என்பதை இந்நூல் எடுத்துக்காட்டுகிறது.பொருளாதாரத்தில் வேர்கொண்டிருக்கும் சமூகமுரண்கள் பலவகையாக வடிவம் பெற்று,அவை ஒருங்கிணைக்கப்படும்போது,பெருவாரி மக்களைத் திரட்டும் அரசியல் பொதுநிலையை எட்டுகின்றன என்பதே புரட்சியின் இயங்கியல்.

ஏழாவது இயல் மேலே பேசிய அரசியல் பொது நிலை உருவாவதை விரிவாகப் பேசுகிறது. சமூகத்தின் பொருளாதார மற்றும் பொருளாதாரமல்லாத முரண்கள் அரசியலில் ஒன்றுகுவிக்கப்பட்ட வடிவத்தைப் பெறு கின்றன என்பதை இவ்வியல் எடுத்துரைக்கிறது. வர்க்க சமூகத்தில் ஆளும் வர்க்கத்தின் கைக்கருவியாகும் அரசு எந்திரத்தைக் கைப்பற்றுவதைப் புரட்சி அதன் முதன்மையான கடமையாகக் கொள்ளுகிறது.உழைக்கும் மக்களின் அரசு அதிகபட்ச சனநாயகப் பண்பு கொண்டதாக அமைகிறது.சோசலிசத்திற்கு முந்திய புரட்சிகள் ஓர் அடிப்படையான முரண்பாட்டைத் தம்மில் கொண்டிருந்தன.அவை ஒருவகைத் தனிஉடைமையை இன்னொரு வகைத் தனிஉடைமையாக மாற்றினவேயழிய சொத்துடைமையை அவை அடியோடு ஒழிக்கவில்லை.எனவே சுரண்டல் நீடித்து நிலைத்துத் தொடர்ந்தது.

சோசலிசப் புரட்சி சொத்துடைமையை மிக அடிப்படையாக அழித்தொழிக் கிறது (பக்.299). சோசலிசப் புரட்சியின்போது சனநாயக சக்திகளுக்கும் சோசலிச சக்திகளுக்கும் உறுதியான கூட்டணி உருவாகிறது.ஏகாதிபத்திய காலனிய ஆட்சி களின் சூழலில் தேசிய விடுதலை இயங்கங்களின் பண்பு சோசலிச சக்திகளுக்கும் ஜனநாயக சக்திகளுக்கும் இடை யிலான கூட்டணியின் முக்கியத்துவத்தை மேலும் கூடுதலாக்குகிறது. ஆசிய, ஆப்பிரிக்க, லத்தீன் அமெரிக்க நாடுகளில்,“சோசலிஸ்டுக் கருத்துக்களுக்கு இருக்கக் கூடிய ஈர்ப்பு,கவர்ச்சி ஆகியவை ஒருபுறத்திலும்,வளர்ச்சி யடையாத சமூக நிலைமைகள் அந்நாடுகளில் இருப்பது மறுபுறத்திலும் ‘ஆப்பிரிக்க', ‘ஆசிய', ‘தேசிய' மாதிரி சோசலிசங்கள் பிறப்பதற்கு இடமளிக்கக் கூடும்” என்று இந்நூல் முன்னறிவிக்கிறது (பக்.318).நூலின் எட்டாவது இயல் “வரலாற்றுப் போக்கில் ஆன்மிக அம்சம்” என்ற தலைப்பினைப் பெற்றுள்ளது.

சமூக உணர்வின் பலவகையான வடிவங்களை இவ்வியல் விரிவாக ஆய்வு செய்கிறது. விஞ்ஞானம், கருத்தியல், சட்டம், ஒழுக்கம், மதம், கலை, இலக்கியம், மெய்யறிவு என்ற பல வடிவங்களை அது ஏற்கிறது.பழைய சமூகங் களில் மட்டுமின்றி,விஞ்ஞானங்கள் வளர்ச்சியடைந்துள்ள தாகச் சொல்லப்படும் நவீன காலத்திலும் உழைக்கும் மக்களை மயக்கித் திசை திருப்பும் கருத்தியல்கள் பொய்யுணர்வாகச் செயல்பட்டுவருவதை இவ்வியல் எடுத்துச் சொல்லுகிறது.எனவே கருத்தியல் தளங்களில் முற்போக்கு வர்க்கங்கள் விரிவாகக் கவனம் செலுத்த வேண்டியுள்ளது.

அவை தமது முற்போக்கான கருத்தி யலை உருவாக்கிப் பெருவாரியான மக்களிடையில் நிலை நிறுத்த வேண்டியதும் அவசியமாகிறது.இந்த முயற்சியில் அவை,வரலாற்றில் தமக்கு ஆதரவாக உள்ள கருத்தியல் ஆதாரங்களை மீட்டெடுக்க வேண்டியது அவசிய மாகிறது. புராதன பொது உடைமை சமூகத்தின் வீழ்ச்சிக் காலத்திலிருந்தே புராதன சமத்துவம் குறித்த ஓர் ஏக்கம் நம்மில் வாழ்ந்து வருகிறது.உடைமைச் சமூகங்களில் நிகழ்ந்துள்ள போராட்டங்களின் போதெல்லாம் அப்புராதன சமத்துவம் குறித்த தன்னுணர்வு மீண்டும் மீண்டும் மேலெழுந்து வந்துள்ளது. வரலாற்று அடுக்கு களிலிருந்து அவற்றை மீட்டெடுத்து எதிர்காலம் நோக்கிய கருத்தியல்களுடன் நாம் ஒன்றிணைத்துக் கொள்ள வேண்டும்.

ஒன்பதாவது இயல்,சமுதாயத்திற்கும் தனிநபருக்கும் இடையிலான உறவுகளைப் பயிலுகிறது.மார்க்சியம் தனிநபரைப் புறக்கணிக்கிறது என்ற குற்றச்சாட்டை இவ்வியல் மறுக்கிறது. மனிதன் சாராம்சத்தில், சகல சமூக உறவுகளின் கூட்டு மொத்தமாவான் என்று மார்க்ஸ் கூறினார். இருப்பினும், மனிதன் சமுதாயத்தில் கரைந்து மறைந்து போய் விடுவது கிடையாது. மாறாக,சமுதாயத்தின் பொதுப் போக்கிலிருந்து மாறுபட்ட ஏதோ ஒன்றை அவன் செய்துகொண்டே இருக்கிறான்.

இதுவே அவனது தனிநபர் பண்பை உறுதிப்படுத்துகிறது (பக்.430). மார்க்சியம், தனிமனிதனைச் சமூக உறவுகளின் தொகுப் பாகப் பார்க்கிறது. அந்தச் சமூக உறவுகளை மாற்று வதற்காகச் சிந்திப்பவனாகவும் செயல்படுபவனாகவும் பார்க்கிறது.மனிதனை அது ஒரு சமூக வர்க்கத்தின் பிரதி நிதியாகப் பார்க்கிறது.சமூகத்திலிருந்து அந்நியப்பட்டு நிற்பவனாகவும் பார்க்கிறது.அவனது எல்லாச் செயல் பாடுகளையும் மார்க்சியம் பெருவாரி மக்கள்திரளின் செயல்பாடுகளோடு பொருத்திப் பார்க்கிறது. முதலாளியச் சிந்தனையாளர்கள் பெரும்பாலான வேளைகளில் தனி நபர் சுதந்திரம் என்பதை ஓர் அராஜகச் சொல்லாடலாகவே முன்வைக்கின்றனர்.ஆயின் அதே முதலாளியம்தான் தனிநபரை அதிகபட்சமாக எந்திரங்களுக்கும் மூலதனத்துக்கும் அடிமைப்படுத்தி அந்நியப்படுத்தி வருகிறது. சோசலிசம் தனிநபருக்கும் பெருவாரி மக்களுக்கும் இடையில் முரண்பாடுகள் எழுவதை அங்கீகரித்து அவற்றுக்குத் தீர்வுகாணுதலை ஏற்கிறது.

நூலின் இறுதி இயல் “சமூக முன்னேற்றம்” என்ற கருத்தாக்கத்தை ஆய்வு செய்கிறது. எது முன்னேற்றம்? என்ற கேள்வி இங்கு பிரதானமாகிறது. வரலாற்றில் முன்னேற்றம் குறித்துப் பல வரையறைகள்,புரிதல்கள் உள்ளன.தொழில்நுட்ப வளர்ச்சி, பரிணாமம், மாற்றம் போன்றவை அவை. உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சி, உற்பத்தித் திறனின் வளர்ச்சி என்ற சில வரையறைகளும் உண்டு. மார்க்சியத்தைப் பொருத்தமட்டில், “வளர்ச்சியடைந்த உற்பத்திச் சக்திகளுக்கு ஏற்றவாறு, எந்தப் பொருளாதார உறவு முறையின் அமைப்பு உள்ளதோ, அது மிகவும் முற்போக்கானதாகும்.

மார்க்சிய சமூக முன்னேற்றத் தத்துவத்திற்கு எந்த வகையான முன்னேற்றம் என்பது அடிப்படை முக்கியத்துவமுடையதாகும்”(பக்.478,485).சமூக முன்னேற்றம் என்பது முரண்பட்ட பண் புடையது என்பதை அது அங்கீகரிக்கிறது. 

பல பிரச்சினைகளை மிக லாவகமாகக் கையாண்டுள்ள இந்நூலைப் படிக்கும்போது குறிப்பிட்ட ஓர் உணர்வு மேலோங்குவதைத் தவிர்க்க முடியவில்லை. மார்க்சியம் குறித்து சுதந்திரமாகச் சிந்திப்பதற்கும் விவாதிப்பதற்கும் மார்க்சியமே ஏராளமாக இடமளிக்கிறது. அது யாரையும் இப்படித்தான்,இந்த எல்லைகளுக்குள்தான் நின்று யோசிக்கவேண்டும் என்று உத்தரவுகளைப் பிறப்பிக்க வில்லை.உழைக்கும் மக்களின்,ஒடுக்கப்பட்ட மக்களின் நலன்களை முன்னிலைப்படுத்தும் இச்சிந்தனை அதிக பட்ச சுதந்திரத்தன்மையும் படைப்புத்திறனும் கொண்டது.

உலகின் பல்வேறு பகுதிகளை நோக்கி,கடந்த ஒரு நூற்றாண்டுக்கும் மேலாகப் பயணப்பட்டுப் பரவி வந்துள்ள மார்க்சியச் சிந்தனை, ஒவ்வொரு நாட்டு மக்களின் போராட்ட அனுபவங்களிலிருந்தும், அந்நாடு களில் உள்ள சிக்கலான சமூக அமைப்புகளின் பண்புகளி லிருந்தும் படைப்புரீதியாக தனது கருத்தியல் தளத்தை விரிவுபடுத்திக் கொண்டே வந்துள்ளது. மார்க்ஸ், ஏங்கெல்ஸ், லெனின் போன்ற அற்புதமான சிந்தனையாளர்கள் வழங்கி யுள்ள வலுவான கருத்தியல் கருவிகளைக் கொண்டுள்ள இச்சிந்தனை,எந்த வகையிலும் ஒரு சூத்திரவாதமாகத் தன்னைச் சுருக்கிக் கொள்ளும் இயல்பு கொண்டதல்ல.

அது இந்நூலாசிரியர்களே தெரிவிப்பதுபோல, இன்று பன்மீய அமைப்புகளை எதிர்கொள்ளும் மெய்யியல் முதிர்ச்சியை ஈட்டியுள்ளது. வர்க்கம், சாதி, பழங்குடிகள், கருப்பின மக்கள், தேசிய இனங்கள், பாலினங்கள், சுற்றுச்சூழல் போன்ற பலவகையான பிரச்சினைகளைக் கையாளும் திறன் கொண்டதாக அது பரவிவருகிறது.

இந்நூலை கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மூத்த தோழர் தா.பாண்டியன் அவர்கள் மொழிபெயர்த்துத் தந்துள்ளார் என்பது இந்த நூல் குறித்த கூடுதல் கவனத்தைக் கோருகிறது.500பக்கங்களைத் தாண்டும் இந்நூலை தனது தினசரி கட்சிப் பணிகளுக்கிடையில் மொழி பெயர்ப்பதற்காக தோழர் தா.பா.அவர்கள் ஏற்றுக் கொண்டிருக்கிறார் எனில் இந்நூலின் கோட்பாட்டு ரீதியான சில வித்தியாசமான பண்புகளை உணர்ந்தே அதனை அவர் செய்திருக்கிறார் எனக் கருதுகிறேன். ஆங்கிலம், தமிழ் ஆகிய இரண்டு மொழிகளிலும் அவர் பெற்றிருக்கும் ஆன்ற புலமை இந்நூலை அவர் மொழி பெயர்த்து வழங்குவதற்கு பெரிதும் உதவியிருக்கின்றன.

முன்னேற்றப் பதிப்பக மொழி பெயர்ப்புகளில் வழக்கமாக நாம் சந்திக்கும் கடினமான மார்க்சியச் சொற் பிரயோகங்களை இந்நூலில் நாம் காண முடிவதில்லை.பெரும்பாலான மார்க்சியக் கலைச் சொற்களை தோழர் தா.பா.அவர்கள் உணர்வுபூர்வமாகவே சிறிது மாற்றிப் பயன்படுத்தியுள்ளார் எனத் தோன்றுகிறது. கதம்பம், ஊடுசெயல்கள், மார்க்சியம் ஒரு மந்திரக் கோல் அல்ல,அது ஒரு மார்க்கம் அல்ல,குறுக்கும் நெடுக்குமாகப் பின்னிப் பிணைந்து, மூலைக்கல், பளிச்சென்று என்பது போன்ற சொற்களையெல்லாம் இதற்கு முன்பு நீங்கள் மார்க்சிய நூல்களில் சந்தித்திருக்க மாட்டீர்கள்.

மார்க்சியம் போன்ற காத்திரமான தத்துவத்தைச் சொல்ல சாதாரண வழக்குச் சொற்களால் இயலுமா, என்று நமது பழைய தோழர்கள் கருதிவிட்டார்களோ, என்னமோ! பல மார்க்சியச் சொற்கள் இந்நூலில் தமிழிலேயே ஒலிக் கின்றன.“இயக்கவியல் ஒரு வகையில் திட்டவட்ட மானதாகவும் மறுபுறம் நெளிவு சுளிவுள்ளதாகவும் இருத்தல் அவசியம்”என்று ஓரிடத்தில் எழுதுகிறார்.இயற்கையில் தன்னிச்சையாக நடைபெறும் சம்பவத்தைக் குறிக்க “ஊடுநிகழ்வு” என்ற சொல்லையும் சமூகத்தில் மனிதப் பங்கேற்புடன் நிகழும் சம்பவத்தை “ஊடு செயல்” என்றும் அற்புதமாக வேறுபடுத்திக் காட்டுகிறார். சொற்களின் தேர்வே இங்கு பொருள் வேறுபாட்டைத் துல்லியப்படுத்திவிடுகிறது.வித்தியாசமான இந்நூலை ஈடுபாட்டுடன் மொழிபெயர்த்துத் தந்துள்ள தோழர் தா.பா. அவர்களுக்கு நாம் நன்றி சொல்ல வேண்டும்.

மார்க்சிய மெய்யியல் சிந்தனையை நவீன தமிழ் மரபின் ஓர் அங்கமாக ஆக்கிவரும் நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்தாருக்கும் இந்நூலை சிறப்புற வெளியிட்ட மைக்காக நன்றி பாராட்டுவோம்.

Pin It