மானுட மேன்மைக்கான வாசிப்பும் களப் பணியும் சிந்தனைச் செலுக்கலும் உடையோரிடம் படைப்பாற்றல் எளிதில் பூப்பெய்தும். அவ்வாற்றல் தம் பண்பாட்டுக்குள்ளும், பிறமொழிப் பண்பாட்டுக் குள்ளும் அதிர்வுகளை நிகழ்த்தும். அத்தகைய ஓர் ஆளுமை சுப்ரபாரதிமணியன். அவர் கல்லூரியில் கால் வைத்த நாளிலிருந்தே வாசிக்கவும் எழுதவும் தொடங்கியவர். வாசிப்பும் படைப்பாற்றலும் அவருக்கு ஒட்டிப் பிறந்தவை. அதனால் அவை ஒன்றையொன்று உரசிப் பார்க்கும். 24 ஆண்டு களாக அவர் நடத்தி வரும் “கனவு” இதழ் ஓர் எளிய மனிதனின் இமாலய சாதனை. அவரை நோக்கிய ஒரு தேடல் தமிழ் வாசகர்களுக்கு இருக்கிறது.

சுப்ரபாரதிமணியன் தன் வாசிப்புத் தூரிகையால் மனக்குகையில் வரைந்த ஓவியங்களை ஒரு கண் காட்சியாக வைத்துள்ளார். அதுவே “மனக்குகை ஓவியங்கள்”. இதுவும் நுணுகி நோக்கி ஆயும் ஒருவகை நுண்கலைதான். இதில் 30க்கும் மேற்பட்ட படைப்பாளுமைகள் பற்றிய ஆய்வுகள், அலசல்கள்.

முதலில் ‘காப்காவின் கடிதங்கள், கதைகள், கட்டுரைகள்’ சா.தேவதாசின் தமிழாக்கம். கடிதங்கள், காப்கா தன் மூன்று காதலிகளுக்கு எழுதியவை. அவற்றை “அலைக்கழிக்கும் கனவுகள்” எனக் குறிப்பிடுகிறார் சுப்ரபாரதிமணியன். திருமணம் செய்ய அஞ்சிய காப்கா காசநோயை ஏற்றுக்கொள்ள வேண்டியதாயிற்று. அந்நேரங்களில் வாசிப்பும் எழுத்தும் அவருக்கு ஆறுதல் தந்திருக்கும் என்பது ஆசிரியர் கணிப்பு. காப்காவின் கடித வாக்குமூலம் “என்னிடம் கருணை காட்டுங்கள். ஜீவனின் ஒவ்வொரு மூலை இடுக்கிலும் பாவம் நிரம்பியவன் நான். ஆனால் எனது திறன் முற்றிலுமாக வெறுக்கக் கூடியன அல்ல. இதுபோன்ற அவர் புலம்பல்களை “வேதனை கலந்த வேடிக்கை” என விமர்சிக்கிறார் ஆசிரியர்.

காப்காவின் கதைகளில் “விவரிக்க முடியாத பாறைத்திரட்சி” கட்டுரைகள் அவரது வாழ்வையும் படைப்பையும் பிரமாண்டமானதாக்குகிறது என பிரமிக்க வைக்கும் வகையில் காப்காவின் வாழ்வையும் படைப்பையும் நம்முன் விரிக்கிறார் சுப்ரபாரதி மணியன்.

அடுத்து சிவராம் கரஞ்சந்தின் ‘சோமனதுடி’ கன்னட நாவல் தி.சு.சதாசிவத்தின் தமிழாக்கம். சோமனின் உடுக்கை ஒலி “காடு மற்றும் நிலம் சார்ந்த உடைமையாளர்களின் ஆதிக்கக் குரலுக்கு எதிர்வினை” எனக் குறிப்பிடும் ஆசிரியர் இப் படைப்பை (1931), தலித் இலக்கிய வகையின் முன்னோடி என வரையறுத்துள்ளார்.

இவைபோல் எல்லாவற்றையும் எடுத்துரைத்தால் அது இன்னொரு நூல் ஆகிவிடும். சில குறிப்பிட்ட இலக்கிய ஆளுமைகளைப் பற்றி மட்டும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

தொ.மு.சி.ரகுநாதனின் ‘புதுமைப்பித்தன் வரலாறு’ பற்றியது நம் கவனிப்புக்குரியது. எந்தச் சாதாரண வாசகர்களும் புதுமைப்பித்தன் குறித்த திறந்த வாழ்க்கையை அறிந்துகொள்வதற்காக இந்நூல் வடிவமைக்கப்பட்டதாகச் சுப்ரபாரதி மணியன் கூறுகிறார். புதுமைப்பித்தன் தம் படைப்புகள் மூலம் தம்மை ஒரு பிரம்மராட்சசன் என நிறுவியிருப்பவர். அவர் “தம் படைப்புகளில் சக மனிதர்களோடு உறவாடுவதில் ஒருவகை ஆனந்தம் கொண்டாலும், சக எழுத்தாளர்கள், குடும்பத்தினர், நண்பர்களுடனான அவர் உறவு கசப்பாக ஓர் எல்லை வரை நின்றிருக்கிறது” என ஆசிரியர் முன்வைக்கிறார். இதை ஒரு படைப் பாளியின் வாழ்வுக்கும், அவர் படைத்த இலக்கிய மாந்தருக்கும் இடையிலான துருவ வேறுபாடு எனலாம். இந்த வேறுபாட்டில் உள்ள துயரத்தின் தொனி நம் உணர்வைக் கலங்கடித்து விடுகிறது.

‘சிற்பி கவிதைப் பயணங்கள்’ கவிதைகளுக்குள் மூழ்கிக் கரைந்து போயுள்ளார் சுப்ரபாரதிமணியன், சிற்பியின் கவிதைகள் “மரபின் நீட்சியும் புதுமையின் நவீனத்துவமும் கொண்டவை” “ஆழியாற்றின் வெள்ளப் பெருக்காய் கொங்குமண்ணின் அனுபவங் களைப் பொதுமைப்படுத்தி நிரப்பியிருக்கின்றன” என்பதோடு, சிற்பி “கொங்கு மண்ணின் ஆளுமை” என நீலமலையின் உச்சியில் நிறுத்திப் பெருமிதங் கொள்கிறார். அவரின் ‘மகாத்மா’ கவிதைகளை “பெருங்காப்பியங்கள் தரும் கவிதையனுபவப் பாதிப்பை எண்பது பக்க நூல் ஆதிமூலத்தின் ஓவியங்களுடன் சாதித்திருக்கிறது” என உலக அதிசயம் போல் சுட்டுவிரல் நீட்டி நமக்குக் காட்டு கிறார்.

தோப்பில் முகமது மீரானின் சமீப சிறுகதை களை “நினைவுக் கிடங்கும் ஆறாத ரணங்களும்” என வியப்பும் வலியும் கலந்த உணர்வாய் நமக்குள் இறக்குகிறார். “மீரான், எழுத்திற்காகத் தன் வாழ்க் கையை ஒட்டின அனுபவங்களையே தேர்வு செய் கிறார். அதுதான் இலக்கியம் என்றும் நம்புகிறார். தமது நினைவுக் கிடங்கிலிருந்து அள்ளி அள்ளி எடுத்து வைக்க பல அனுபவங்கள் மீரானுக்கு இருக்கின்றன. தீராத சுனையாக அது ஊறிக் கொண்டே இருக்கிறது” என மெய் மயங்குகிறார் சுப்ரபாரதிமணியன். அதில் மீரானின் அனுபவங் களில் தோயவும், சுனையில் நீராடவும் வாசகனைக் கைப்பிடித்து அழைத்துச் செல்லும் பாங்கைப் பார்க்க முடிகிறது.

திலகவதி நாவல்கள் யதார்த்த உலகத்தை முன்வைப்பவை. லட்சியவாதப் பாத்திரங்களை ஒவ்வொரு நாவலிலும் காண முடிகிறது. இன்னொரு பரிமாணம் - சமூக அறவியலைக் கேள்விக்கு உள்ளாக்குவது. பெண்கள் மீதான அதிகார வன் முறை, அவர்களுக்கு வழங்கப்படாத நியாயங்கள் போன்றவற்றை முன்வைக்கின்றன. இப்பதிவுகள், யதார்த்த உலகை அறியவும், சமூக அறவியல் மீது எதிர்வினையாற்றவும் உறுதி கொண்ட நெஞ்சினரே வாருங்கள்! திலகவதி நாவலுக்குள் புகுந்து பாருங்கள் என்று லட்சிய வாதிகளுக்கு அழைப்பு விடுக்கும் வகையில் அமைந்துள்ளன.

சி.ஆர்.ரவீந்திரனின் ‘மணியபேரா’ நாவலில் “இருளர்களின் ஆதிவாசிப் பெருமைப் பண்புகளும் உரையாடலும் ஏராளமான தொன்மங்களின் குவியலும் தீவிரத் தன்மையுடன் காணக் கிடைக் கின்றன. சமூக மாற்றத்துக்கான தேவையையும் நம்பிக்கையையும் அவை கொண்டிருக்கின்றன” என்கிறார் சுப்ரபாரதிமணியன். இந்த மொழிதல், மாற்றத்தில் நம்பிக்கை உடையோருக்கு நல்ல மகசூலையும், நம்பிக்கை வறண்டோருக்கு வள மண்ணையும் சுட்டிக் காட்டுகிறது. அது இந்நாவலை வாசிக்க இருதரப்பினரையும் உந்தித் தள்ளும்.

‘வைரமுத்துவின் இலக்கியத்தடம்’ குறித்த ஆசிரியரின் பார்வை நம்மைக் கவரக்கூடியது” இலக்கியம், திரைத்துறை இரண்டும் ஒன்றின் ஆக்கத்திற்கு மற்றொன்று என்ற இவரது சார்பு இளம் கவிதை வாசகனுக்கு என்றும் உவப்புத் தருவதாகவே உள்ளது. வைரமுத்து அவருடைய வாசகனுடன் நெருக்கமாகவும் இணக்கமாகவும் இருக்கிறார். கவிதை பற்றியும், அவர் அக்கறை கொண்டுள்ள சமூகத்தைப் பற்றியும் நிறையவே சொல்லித் தருகிறார் எனச் சுப்ரபாரதிமணியன் எழுதுகிறார். இது படைப்பாளி, படைப்பு, வாசகர், சமூகம் இந்நான்குக்குமான உறவு நெருக்கமே ஒரு படைப்பாளியை பிரபலமாக்குகிறது; நீடித்து நிலைக்கச் செய்கிறது என அறுதியிட வைக்கிறது. இந்நூலை இளம் படைப்பாளிகள் தம் கையேடாக ஏற்கத்தக்க விதமாக ஆசிரியர் முன்னிறுத்துகிறார்.

‘வின்சென்டின் அனுபவக்குதிர்’ என ‘மீண்டெழுதல்’ சிறுகதைத் தொகுப்புப் பற்றியது. இத்தொகுப்பில் “விளிம்புநிலை மக்களைச் சார்ந்த அனுபவங்கள், வெவ்வேறு வகையான மனிதர்கள், கதாப்பாத்திரங்கள். மொழி மென்மையாகவும், பொதுவானதாகவும் இல்லாமல் நுணுக்கத் தன்மை உடன் விளங்குகிறது. இந்த வெற்றியை அடைவதற்கு நுணுக்கமான பார்வையும், பகிர்ந்து கொள்ளும் மொழி லாவகமும், வாழ்க்கை குறித்த தரிசனமும் அவசியம். இந்த அவசியத்தைப் படிக்கிற வாசகனும் உணரச் செய்கிறார், வின்சென்ட்” என அணிந் துரைக்கிறார் சுப்ரபாரதிமணியன். இது வாசகனை, படிக்கவும், கதைகளுக்குள் கரைந்து போகவும் தூண்டும் வகை இது. இதையும் தம் ஓவியங்களுள் ஒன்றாக வைத்திருப்பது எனக்குப் பெருமை கூட்டும்.

இவர்களோடு பாரதியார், சுந்தர ராமசாமி, ஞானி, சுஜாதா, தகழி, சா.கந்தசாமி, சிவபாத சுந்தரம், மு.வேலாயுதம், சிவகாமி, பால் பாஸ்கர், தங்கர் பாச்சன், நீலபத்மநாபன், முத்தமிழ் விரும்பி, சூரியநிலா போன்ற படைப்பாளுமைகள் அலசப் பட்டுள்ளனர். வேறு சிலவும் உள்ளன.

சுப்ரபாரதிமணியனின் “மனக்குகை ஓவியங்கள்” தமிழகத்தின் தலையாய படைப்பாளிகளின் படைப்புகள், ஆற்றல்கள், தனித்தன்மைகள் போன்ற வற்றை எடுத்துரைக்கின்றன. அதனால் படைப்புகள் ஊடான இந்த வாசிப்புப் பயணப் பதிவுகள் இலக்கிய அந்தஸ்தைப் பெற்று விடுகிறது. வாசகக் களத்திலிருந்து படைப்பாற்றல் தளத்திற்கு வாசகனை அழைத்துச் செல்ல இதுபோன்ற நூல்கள் உதவுவது திண்ணம்.

மனக்குகை ஓவியங்கள்

ஆசிரியர் : சுப்ரபாரதிமணியன்

வெளியீடு : என்.சி.பி.எச்.

விலை : ரூ.50.00

Pin It