நம் இந்திய திருநாட்டில் அவ்வப்போது மழைக்கால காளான்கள் போல முளைக்கின்ற உண்ணாவிரதங்கள், ஆர்பாட்டங்கள், போராட்டங்கள், ஊர்வலங்கள், பேரணிகள், முழக்கங்கள் ஆகியவற்றைப் பார்த்துப் பார்த்து நம் கண்கள் பூத்துவிட்டிருக்கும். ஆனால், இந்நாட்டில் வாழக்கூடிய தாழ்த்தப்பட்ட மக்கள் இத்தகைய போராட்டங்களை மட்டுமே தங்களுடைய வாழ்க்கையாக வாழ்ந்துகொண்டிருப்பதை யாரும் கண்டுகொள்வதில்லை. கர்ப்பிணிப்பெண்கள் மருத்துவமனையை தேடும்போதும், காப்பிக்குடிக்க கடைக்குச் செல்லும்போதும், குடத்தில் தண்ணீர் எடுக்கும்போதும், கோவிலுக்குள் நுழையும்போதும், தேர்தலில் நிற்கும்போதும், தேவைக்காக போராடும்போதும், குத்தகை எடுக்கும்போதும், கூலியுயர்வு கேட்கும்போதும், இவையெல்லாம் ஏன்? செத்தவனை சுடுகாட்டில் புதைக்கும்போது கூட தீண்டாமை எனும்   பெயரில் தாழ்த்தப்பட்ட மக்களும் பழங்குடியினமக்களும் எதிர்கொள்கின்ற போராட்டங்கள்    இருக்கிறதே, அப்பப்பா! அவை சொல்லிமாளாதவை. வாழ்க்கை என்பது போர்களம் என்று சொல்லுவார்களே, அது யாருக்கு பொருந்துகிறதோ இல்லையோ, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அது அப்படியே பொருந்தும்.

ஆனால், தற்பொழுது இத்தகைய  கொடுமைகள் எல்லாம் ஓரளவிற்கு குறைந்துவிட்ட சூழலில், இன்று அரசுகளே இம்மக்களுக்கு எதிராக நேரடியாகவும், மறைமுகமாகவும் கடைபிடித்து வரும் நவீன தீண்டாமையை நினைக்கும்போது மிகவும் வருத்தமாகத்தான் இருக்கிறது. இதனை கொடியங்குளம் கலவரம், கண்டதேவி பிரச்சினை, உஞ்சனை, தாமிரபரணி படுகொலைகள், தமிழ்நாட்டில் இன்றுவரை நிரப்பப்படாமல் இருக்கும் 3 லட்சத்திற்கும் அதிகமான பின்னடைவு காலிப்பணியிடங்கள் என்கிற அத்தனை விடயங்களும் வெளிச்சம்போட்டு காட்டுகின்றன.

இவற்றோடு தற்போது புறப்பட்டிருக்கும் புதியதொரு பிரச்சினை என்னவென்றால், கடந்த 21.7.2010 அன்று தமிழ்நாடு அரசு, 'கிராம நிர்வாக அலுவலர் பணி'யின் தேர்வுக்கான விளம்பரத்தை வெளியிட்டது. அதில் பொது பிரிவினருக்கான (எஸ்.சி, எஸ்.டி, பி.சி, எம்.பி.சி.) காலியிடங்களோடு,  தாழ்த்தப்பட்ட மக்களுக்கான பின்னடைவு பணியிடங்கள் 1077க்கான அறிவிப்பும் இருந்தது. உடனே தாழ்த்தப்பட்ட இளைஞர்கள் இத்தனை ஆண்டுகளாக பூர்த்தி செய்யப்படாத பின்னடைவு பணியிட அறிவிப்பு வந்த மகிழ்ச்சியில், பெரும் ஆவலோடு இத்தேர்வுக்கு விண்ணப்பித்தனர். ஆனால், அவர்கள் விண்ணப்பிப்பதற்கு முன்பாகவே, 4.8.2010 அன்று மடிப்பாக்கத்தைச் சேர்ந்த சந்தோஷ்குமார் என்பவர்,  "1077  பின்னடைவு பணியிட அறிவிப்பை தமிழக அரசு திரும்பப்பெறவேண்டும்" என்று  சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.

காரணம் என்னவென்றால்,  "Tamilnadu state and subordinate service rules-1995, பிரிவு-22 என்ற விதிப்படி, 3 ஆண்டுகளுக்குள் பின்னடைவு பணியிடங்களை நிரப்பவேண்டும். அப்படி நிரப்பவில்லை எனில் 3 ஆண்டுகளுக்குப் பிறகு அக்காலியிடங்கள் தானாக பொதுப்பிரிவினருக்குச் சென்றுவிடும்" என்பதுதான் அவரது வாதம். தமக்கு எதிராக  வழக்கு தொடுக்கப்பட்டிருப்பதை அறியாத தாழ்த்தப்பட்ட  இளைஞர்கள் விண்ணப்பித்தது முதல், பயிற்சி பெறுவதற்காக பெரும் நகரங்களில் வாடகைக்கு குடியேறி, பயிற்சி நடுவங்களில் சேர்ந்து, இரவுபகல் பாராது கண்விழித்து படிக்க ஆரம்பித்தனர். இதற்கிடையில், சந்தோஷ்குமார் தொடுத்த வழக்கின்பேரில், 7.2.2011 அன்று தமிழ்நாடு உயர்நீதிமன்ற நீதிபதி திரு.மணிக்குமார் அவர்களால், "தாழ்த்தப்பட்ட  மக்களுக்கான 1077 பின்னடைவு பணியிடங்களை நிரப்புவதை நிறுத்திவைக்க வேண்டும்"  என்று நீதிமன்ற நிறுத்திவைப்பு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த நீதிமன்ற உத்தரவால் தாழ்த்தப்பட்ட இளைஞர்களுக்கு பாதிப்பு இருக்கிறது என்பதை அறிந்திருந்தும், அன்றைய தமிழக அரசு யார் பாதிப்படைந்தால் நமக்கென்ன என்ற மெத்தனத்தில் 20.2.2011 அன்று தேர்வையும் நடத்தியது.

எப்போதுமே தாழ்த்தப்பட்ட மக்களின் சம்பந்தி என்று சொல்லிக்கொண்டு, அவர்களுக்கு நன்மை செய்வதுபோல் செய்துவிட்டு, பிறகு அவர்களுக்கு தெரியாமலே அந்த நன்மைகள் அவர்களுக்கு கிடைக்காத அளவில் சட்டத்தின் மூலமாகவும், நீதிமன்றத்தின் மூலமாகவும் தடையை ஏற்படுத்தக்கூடிய மு.கருணாநிதி, இந்த விடயத்திலும் அதே கொள்கையையே பின்பற்றியிருப்பரோ என்று எண்ணுவதிலும் ஆச்சர்யப்படுவதற்கு ஒன்றுமில்லை. இதுபற்றி எதுவுமே தெரியாத தாழ்த்தப்பட்ட  இளைஞர்கள், தேர்வுக்கு முழுவதுமாக தயாராகி, 20.2.2011 அன்று நடைபெற்ற கிராமநிர்வாக அலுவலர் தேர்வை மனநிறைவோடு எழுதிமுடித்தனர். பின் தேர்வு முடிவு வெளியீடு நீண்ட நாட்களுக்குத் தள்ளிப்போனது. இதற்குக்கூட அனைவரும் சட்டமன்றத் தேர்தலைத்தான் காரணமாக எண்ணினார். அதுவும் ஏப்ரல் 13 ஆம் தேதி முடிந்து, மே 13 ஆம் தேதி முடிவு அறிவிக்கப்பட்டது. பின் சில நாட்கள் கழித்து, அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்திருந்த  வீ.ஏ.ஒ. தேர்வுமுடிவு ஜூலை 19 ஆம் தேதியன்று  வெளியானது. 

தேர்வுமுடிவை ஆவலோடு எதிர்நோக்கியிருந்த  தாழ்த்தப்பட்ட இளைஞர்கள், செய்தித்தாளை புரட்டிப்பார்த்தவுடனேயே அவர்கள் தலையில் பெரிய இடியே  விழுந்தது. ஆம்! அவர்களுக்கு மட்டும் தேர்வுமுடிவு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. வெற்றி பெற்றவர்கள் எல்லாம் வெற்றிக்களிப்பைக் கொண்டாடிய  வேளையில், இவர்கள் மட்டும் என்ன, ஏதென்று தெரியாமல் திண்டாடினர். பிறகுதான், நீதிமன்றத்தில் வழக்கு நடந்துகொண்டிருப்பது தெரியவந்தது. எனினும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான இந்த நீதிமன்ற உத்தரவை எதிர்த்து  மத்திய,மாநில எஸ்.சி, எஸ்.டி அரசு ஊழியர் கூட்டமைப்பின் மாநில அமைப்பாளர் திரு.கருப்பையா, வழக்கறிஞர் விஜயேந்திரன் மூலமாக முன்பே வழக்கு தொடுத்து, அது நிழுவையில் இருப்பதும், பிறகுதான் தெரிந்தது. மேலும், தாழ்த்தப்பட்ட இளைஞர்களுக்கு ஆதரவாக நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, திருநெல்வேலியில் 18.8.2011 அன்று  எஸ்.சி, எஸ்.டி. இடஒதுக்கீட்டு பாதுகாப்புக்குழு சார்பாகவும், புளியங்குடியில் 21.8.2011 மத்திய, மாநில அரசுப் பொதுத்துறை ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் நலச்சங்கம் சார்பாகவும் ஆர்ப்பாட்டங்கள்  நிகழ்த்தப்பட்டன.

மேலும், சந்தோஷ்குமார் சுட்டிக்காட்டக்கூடிய  அதே Tamilnadu state and subordinate service rules-1995 எனும் விதியில் இருக்கக்கூடிய பிரிவு  22c "பின்னடைவுக் காலிப்பணியிடங்களை நிரப்பிய பிறகே மற்ற காலியிடங்களை நிரப்பவேண்டும் என்று கூறுகிறது". இதை காரணம் காட்டி, பின்னடைவு பணியிடங்களுக்கான தேர்வு முடிவை நிறுத்திவைத்துவிட்டு, பொதுப்பிரிவினருக்கான தேர்வு முடிவை  தமிழக அரசு வெளியிட்டிருப்பது சட்டப்படி தவறு, எனவே தாழ்த்தப்பட்ட மக்களுக்கான 1077 பின்னடைவுக் காலிப்பணியிடங்களை நிரப்பும்வரை, தற்போது தேர்வுமுடிவு அறிவிக்கப்பட்டுள்ள பொதுப்பிரிவினருக்கு பணிநியமன ஆணை வழங்குவதை நிறுத்திவைக்க வேண்டும் என்று 17.8.2011 அன்று செல்வகண்ணன், பால்சாமி, அழகேஸ்வரன் ஆகியோர் சார்பாக சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. அது 19.8.2011 அன்று விசாரணைக்கு வந்து, நீதிபதி.திரு.மணிக்குமார் அவர்களால், "இரண்டு வாரங்களுக்குள் இதற்கு பதில் அளிக்கும்படி தமிழ்நாடுஅரசு மற்றும் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் ஆகியவற்றுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது".

இந்த சூழ்நிலையில், தற்போது செல்வகண்ணன், பால்சாமி, அழகேஸ்வரன் ஆகியோரது  இந்த மனு திடீரென்று தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. எல்லா முயற்சிகளையும் செய்துவிட்ட நிலையில் தாழ்த்தப்பட்ட இளைஞர்கள் தற்போது நம்பியிருப்பது புதிய தமிழகம் கட்சித் தலைவர் மாண்புமிகு  டாக்டர்.க.கிருஷ்ணசாமி எம்.டி.,எம்.எல்.ஏ.,  அவர்களையும், நிழுவையில் உள்ள திரு.கருப்பையா அவர்கள் தொடுத்த வழக்கையும், தமிழ்நாடு சட்டப்பேரவையில் வரவுள்ள பட்டியலின/பழங்குடியின நலத்துறை மற்றும் பணியாளர் சீர்திருத்தத்துறை மானியக்கோரிக்கை கூட்டத்தொடர் ஆகியவற்றை மட்டுமே. ஒவ்வோர்  ஆண்டும் பிற இனங்களைச் சேர்ந்தவர்கள் எல்லாம்  மகிழ்ச்சியோடு அரசுப்பணியில் சேர்கிறார்கள். ஆனால், தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும் அரசுப்பணியில் சேர்வதற்கு எத்தனை போராட்டங்கள்? எத்தனை உண்ணாவிரதங்கள்? எங்களுக்கு மட்டும் உரிமைகள் மறுக்கப்படுகிறதே, நாங்கள் என்ன அயல்நாட்டு அகதிகளா என்று ஏங்கும்  தாழ்த்தப்பட்ட இளைஞர்கள் விடுதலை பெற்ற இந்தியாவில் விடுதலை எனும் விடியலை நோக்கி விழித்துக் கொண்டிருக்கிறார்கள் இரவு முழுவதும். கண்டிப்பாக ஒருநாள் விடியும், விளக்கேறும்.

- வாசு.க.தமிழ்வேந்தன்.

Pin It