சிங்காரவேலர் அரசியல்தளத்திலும், தொழிற் சங்கக் களத்திலும் தொடர்ந்து இடையறாது பணியாற்றிக் கொண்டே இருந்திருக்கிறார். எழுபது வயதைக் கடந்து மூப்புத் தோன்றியபோதும், நோய் தொந்தரவு மிகுந்தபோதும் அவர் தளராமல் ஊக்கத் தோடு தொண்டாற்றி வந்திருக்கிறார். இவற்றுக் கிடையே தொடர்ந்து வாசித்துக் கொண்டும் சிந்தித்துக் கொண்டும், அவற்றை வெளிப்படுத்தும் வண்ணம் எழுதிக் கொண்டும், மேடைகளில் உரையாற்றிக் கொண்டும் இருந்திருக்கிறார். காற்று எல்லாத் திசைகளிலும் வீசுவதைப் போல இவரும் மக்கள் தொண்டில் அனைத்து நிலை யிலும் உழைத்திருக்கிறார். போதுமான போக்கு வரத்தும், விரைந்த தகவல் தொடர்பும் இல்லாத காலகட்டத்தில் அவர் திட்டமிட்டு முயன்று உழைத்திருக்கிறார். அவரது வாழ்க்கையை நோக்கு மிடத்து வள்ளுவரின் குறட்பாதான் நினைவுக்கு வருகிறது.

துன்ப முறவரினும் செய்க துணிவாற்றி

இன்பம் பயக்கும் வினை - 669.

இக்குறட்பாவுக்கு ஏற்பவே அவரது வாழ்வு தொடர்ந்திருக்கிறது. இதற்கு அவர் வாழ்க்கையில் நிகழ்ந்த ஒரு நிகழ்வை எண்ணிப் பார்த்தால் உண்மை விளங்கும். தந்தை பெரியார் நடத்திய குடியரசு இதழில் ---2-1933இல் சிங்காரவேலர் ஓர் சிறு அறிக்கையை வெளியிட்டிருக்கிறார். அந்த அறிக்கையைக் கீழே காணலாம்.

அறிக்கை

(ம. சிங்காரவேலு B.A., B.L.,)

அன்பு மிகுந்த சமதர்ம தோழர்களே! ஈரோடு, விருதுநகர், மாயவரம், வேலூர், காஞ்சி முதலிய ஊர்களிலிருந்து எனது திரேக நிலைமையைக் கேட்க விரும்புகிறார்கள். கூடுமானால் குறிப்பிட்ட தேதிகளில் அந்தந்த இடங்களில் கூட்டங்களுக்கு வரும்படியும் கேட்டுக் கொள்கிறார்கள். முதலில் எனது தேகநிலைமை படுக்கையுடன் கிடக்க வேண்டிய நிலையில் நிற்கிறது. கண்களைத் திறக்க முடியவில்லை. உபாதை சற்றுக் குறைந்து வருகிறது. குறைந்தது இன்னும் 15 நாள் வரை படுக்கையில் இருக்க வேண்டுமென்று என் டாக்டர்கள் கூறு கிறார்கள். எனக்கு வந்திருக்கும் நோயை அக்கி (HERPES) என்று கூறுகின்றனர். விசேஷமாக உழைப்பினால் வந்ததென்றும் அபிப்பிராயம். ஆனால், எனது தேகம் கிஞ்சித்தாயினும் இடம் கொடுக்குமாயின், எனது தோழர்களுக்கு உழைக் காமல் யாருக்கு என்தேகம் உபயோகப்படப் போகிறது? மாமண்டூர் 1000 குடிமக்கள் தோழர் களைச் சந்திக்க முடியவில்லையே என்ற மனக் கவலை இருந்துகொண்டு வாட்டுகிறது. என் செய்வேன்? யாரைத் திருப்தி செய்வது? டாக்டர் உத்தரவை மீறி ஒற்றைக் கண்ணைத் திறந்து இந்தக் கஷ்டத்தை தெரிவித்துக் கொண்டாகி விட்டது. இந்த மாதக் கடைசியில் தேகம் முற்றிலும் குணப் படுமென்று நம்புகிறேன். தோழர்களைப் போய் பார்க்கும்படி மனம் தூண்டுகின்றது. ஆனால் என் செய்வேன்? தேகம் என்னை விடவில்லையே! சற்று மன்னித்தருளவும்.” - குடியரசு 26-2-33.

இந்த அறிக்கையில் ஒரு வரலாற்றுச் செய்தி ஒன்று உள்ளது. அதனைப் பின்னர் நோக்குவோம். இந்த அறிக்கையைக் குடியரசில் வெளியிடுவதற்கு மூன்று வாரங்களுக்கு முன்னர்தான் காஞ்சிபுரத்தில் மாமண்டூர் உழவர்களைப் பற்றி 1-2-33, 2-2-33, 3-2-33 ஆகிய மூன்று நாட்களிலும் அவர்களைக் குறித்துத் திட்டப் பாங்கோடு பேசியுள்ளார். மீண்டும் 6-2-33 அன்று மாமண்டூர் பிரச்சினை குறித்துப் பேசியுள்ளார். சரியான போக்குவரத்தும், மருத்துவ வசதியும் இல்லாத அக் காலத்தில், 73 வயதைக் கடந்த முதியவர் இவ்வாறு மீண்டும் மீண்டும் மேடையில் தோன்றியுள்ளார். தந்தை பெரியார் 90 வயதைக் கடந்தும், மூத்திரப் பையைச் சுமந்து கொண்டே நாள்தோறும் பட்டி தொட்டி யெல்லாம் சுற்றிச் சுற்றிப் பேசியுள்ளார். பகுத்தறி வாளர்கள் இப்படித்தான் இருப்பார்கள் போலும்! இவர்கள் அன்றோ உண்மை மானிடர்! காஞ்சி புரத்தில் சிங்காரவேலரும் அவருடன் மற்ற தலைவர் களும் சென்று உரையாற்றியதைக் குடியரசு 12-2-33 அன்று ஒரு செய்தியாக வெளியிட்டுள்ளது. அச்செய்தியைக் கீழே பார்க்கலாம்.

காஞ்சிபுரத்தில் சுயமரியாதை முழக்கம்

தோழர்களின் சொற்பொழிவுகள்

1, 2, 3-2-33-இல் நடந்த நிகழ்ச்சிக்குச் சென்னையி லிருந்து தோழர்கள் எம். சிங்காரவேலு பி.ஏ., பி.எல்., எஸ்.வி. லிங்கம், காரைக்குடி இராம. சுப்பையா, சு.ப. விசாலாட்சி, முதலியவர்கள் காரிலும், காரைக்குடி ப. ஜீவானந்தம், பூவாளூர் அ. பொன்னம்பலனார் முதலியோர் பஸ்ஸிலும் 31-3-33 செவ்வாய் மாலை இங்கு வந்து சேர்ந்தார்கள்.

1-2-33 புதன்கிழமைக் கூட்டம்

மாலை 6-மணிக்கு ஆடிசன்பேட்டை ஜவுளிக் கடை சத்திரத்தில் பெருந்திரளான கூட்டத்தி னிடையே தோழர் எம். சிங்காரவேலு பி.ஏ., பி.எல்., அவர்களின் தலைமையில் தோழர் ப. ஜீவானந்தம் “காங்கிரசும் பொதுவுடைமையும்” என்பது பற்றியும் தோழர் சு.ப. விசாலாட்சி அவர்கள் “பெண்களும் சுயமரியாதையும்” என்பது பற்றியும் தோழர் அ. பொன்னம்பலனார் “பார்ப்பனியம்” என்பது பற்றியும் பொதுமக்கள் மனங்கசியுமாறு பேசினார்கள். தலைவர் முடிவுரைக்குப்பின் இரவு 9-30 மணிக்கு கூட்டம் இனிது கலைந்தது.

2-2-33 வியாழக்கிழமை கூட்டம் மாலை 6-மணிக்குச் சங்கூசாப் பேட்டை மைதானத்தில் தோழர் ம. சிங்காரவேலு அவர்கள் தலைமை யிலேயே தோழர் ப. ஜீவானந்தம் அவர்கள் “இந்தியாவும் ரஷ்யாவும்” என்பதைக் குறித்தும், தோழர் அ. பொன்னம்பலனார் அவர்கள் சமதர்ம இயக்கத்தின் அவசியம் பற்றியும் தோழர் எஸ்.வி. லிங்கம் அவர்கள் கராச்சி காங்கிரஸ் திட்டத்தின் சூழ்ச்சியைப் பற்றியும் விரிவாகப் பேசினார்கள். தலைவர் முடிவுரையில் காஞ்சிபுரத்திற்கு 8 மைல் தூரத்திலுள்ள மாமண்டூர் கிராமத்தில் நிலச் சொந்தக் காரர்களுக்கு (பார்ப்பன ஐயங்கார்கள்)ம் பயிரிடுவோர்களாகிய விவசாயிகளுக்கும் (நாயக்கர்க்கும், ஆதிதிராவிடர்க்கும்) ஏற்பட்ட வாரத் தகராறுகளினால் விவசாயத் தொழி லாளிகள் வேலை நிறுத்தம் செய்திருப்பதனால் அவர்களின் பசிக்கு உதவி செய்யவேண்டுமென்று கேட்டுக்கொண்டு கூட்டத்தை இரவு 9-மணிக்கு கலைத்தார்.

3-2-33 வெள்ளிக்கிழமைக் கூட்டம்

நோட்டிஸில் அறிவித்திருந்தபடி பெரிய காஞ்சி புரம் பதினாறுகால் மண்டபத்தில் நடக்கவிருந்த கூட்டம் நடைபெறின் தங்கள் அயோக்கியத்தனம் வெளிப்படுமென அஞ்சி, முன் 22-1-33-இல் செய்த படியே பார்ப்பனர்கள் என்று சொல்லிக் கொண்ட வர்கள், அம்மண்டபத்தில் ஒரு கல்லில் செதுக்கப் பட்டிருந்த ஆறுதலை சாமி என்ற கற்சிலைக்கு அபிசேகமெனப் பெரிய மேளங்களை அடித்துக் கொண்டிருந்தபடியால் அடுத்தாற் போலுள்ள தேரடி மைதானத்தில் (பெரிய காஞ்சிபுரம்) மாலை 6-மணிக்குத் தோழர் ம. சிங்கார வேலு பி.ஏ., பி.எல்., அவர்கள் தலைமையில் கூட்டம் கூடிற்று. அது சமயம் தோழர் அ. பொன்னம்பலனார் “மூடப் பழக்க வழக்கம்” என்னும் பொருள்குறித்தும் தோழர் ப. ஜீவானந்தம் “இந்த இயக்கத்தின் முன்னிற்கும் வேலை” என்பது குறித்தும், தோழர். எஸ்.வி. லிங்கம், மாமண்டூர் விவசாயத் தொழி லாளர்கள் வேலை நிறுத்தம் என்பது பற்றியும், காஞ்சிபுரவாசிகள் அவர்களுக்கு உணவு அளிக்க வேண்டிய அவசியத்தைப் பற்றியும் விரிவாகப் பேசினார். மேலும், காங்கிரசுக்காரர்கள் கேட்ட கேள்விகளுக்கு எஸ்.வி. லிங்கம் அவர்களால் செவ்வனே பதிலிறுக்கப்பட்டு, தலைவர் முடி வுரைக்குப் பின் கூட்டம் இனிது முடிந்தது. சீக்கிரத்தில் ஜில்லா மாநாடு கூட்ட பெருமுயற்சி யுடன் வேலை செய்யப்பட்டு வருகிறது.

கூட்டத்தை நடத்த பேராதரவு காட்டிய தோழர்கள் மு. ரங்கசாமி நாயக்கர், ந. சையத் காசிம், சுல்தான் பேக் முதலியவர்கள் போற்றுதற் குரியவராவார்கள். - குடியரசு 12-2-33-ஒரு நிருபர்.

சிங்காரவேலர், காஞ்சிபுரத்தில் தொடர்ந்து மூன்று நாள்களில் உரையாற்றியதுடன் மீண்டும் அங்கே 6-2-33 அன்றும் உரையாற்றச் சென்று உள்ளார். அந்நிகழ்ச்சியையும் குடியரசு வெளி யிட்டிருப்பதைக் கீழே நோக்கலாம்.

காஞ்சிபுரம் - விவசாயத் தொழிலாளர் பொதுக்கூட்டம்

6-2-33 ஆம் தேதி மாலை 6-30மணிக்கு ஆடிசன் பேட்டை ஜவுளிக்கடைச் சத்திரத்தில் தக்கோலம் தோழர் செல்லப்பன் அவர்கள் தலைமையில், சென்னைத் தோழர் எம். சிங்காரவேலு பி.ஏ., பி.எல்., அவர்கள் செய்யாறு தாலுக்கா, 106-நெ, மாமண்டூர் கிராமத்தில் விவசாயத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்திருப்பதை ஆதரித்து தொழி லாளிகளுக்குக் காஞ்சி வியாபாரிகள் பொருளுதவி செய்து ஆதரிக்க வேண்டுமென்று பேசினார்கள். பிறகு தலைவரவர்கள் கீழ்க்கண்ட தீர்மானத்தைக் கொண்டு வந்தார்.

“செய்யாறு தாலுக்கா நெ-106, மாமண்டூர் கிராமத்திலிருக்கும் விவசாயத் தொழிலாளிகளுக்கும், முதலாளிகளுக்கும் வராக விஷயத்தில் தகராறு ஏற்பட்டிருப்பதால், தொழிலாளிகள் சுமார் 27 தினங்களாக வேலை நிறுத்தம் செய்திருக்கிறார்கள். வேலை நிறுத்தத்தை முன்னிட்டு தொழிலாளி களுக்கு மிகவும் பசி அதிகரித்திருப்பதால் காஞ்சி வியாபாரிகள் பொருளுதவி செய்து விவசாயத் தொழிலாளிகளை ஆதரிக்க வேண்டுமென்று இந்தக் கூட்டம் தீர்மானிக்கிறது.”

இதை நாத்திகத் தோழர் சி.கே. குப்புசாமி அவர்கள் ஆதரித்துப் பேசியதும், தலைவர் முடிவுரைக்குப்பின் கூட்டம் கலைந்தது. குடியரசு 26-2-33 -ஒரு நிருபர்.

இந்த மூன்று செய்திகளையும் ஒப்பிட்டு நோக்கினால் மாமண்டூர் உழவர்களின் வேலை நிறுத்தமே அக்கூட்டங்களில் முக்கியப் பொருளாக இருந்துள்ளது. அதற்குப் பெருங்காரணம் சிங்கார வேலரே ஆவார். மாமண்டூர் போராட்டம் குறித்துக் குடியரசில் 12-2-33 அன்று தனியாக ஒரு கட்டுரையும் எழுதியுள்ளார். இதற்கு முன்னர் ஏற்கனவே நாம் இக்கட்டுரையில் அவரது நான்கு கூட்ட நிகழ்ச்சிகளைப் பார்த்தோம். அதற்கு அடுத்துதான் ஒரு கட்டுரையையும், எழுதியுள்ளார். இவற்றிலிருந்து அப்போராட்டம் அவரை எத் துணையளவு பாதித்துள்ளது என்பதை உணரலாம். அப்போராட்டம் 27 நாட்களுக்கு மேல் தொடர்ந்து நடந்ததாலும், அந்நாள்வரை ஏழை உழவர்களின் பட்டினியைக் கருதியும் அவர் நண்பர்களுடன் மாமண்டூர் சென்று நேரடியாகப் பண்ணையாளர் களிடத்தும், உழவர்களிடத்தும் விவாதித்திருக் கிறார். ஆனால், பண்ணையுரிமையாளர்கள் உடன் பாட்டுக்கு இசையவில்லை.

இதிலொரு முக்கிய செய்தியும் உள்ளது. சிங்காரவேலர் மாமண்டூர் சென்றபோது அங்கு முக்கிய பண்ணையாளராக இருந்தவர் பார்த்த சாரதி அய்யங்கார் என்பவரும் ஒருவர். அவர் சிங்காரவேலரின் பழைய நண்பராக இருந்தும் அவரும் இசையவில்லை. அதனால் போராட்டம் நீடித்தது. பண்ணையாளர்கள் இறுதி வரை உடன் பாட்டுக்கு இசையவில்லை. முதலில் உழவர்கள் வயல்களில் இறங்கி வேலை செய்யட்டும்; அடுத்து தான் பேச்சுவார்த்தை என்றனர். பண்ணையாளர்கள் உழவர்களோ, இதுவரை கொடுத்த கூலி மிகக் குறைவு, ஆதலால் கூலி எவ்வளவு என்பதை முதலில் கூறினால்தான் வயல்களில் இறங்குவோம் என்றனர். இதனால் போராட்டம் 27 நாட்களுக்கு மேல் தொடர்ந்தது. இதன் காரணமாக ஏழை உழவர்கள் பசி, பட்டினியில் வாடினர். இது குறித்துச் சிங்காரவேலர் எழுதியிருப்பது நம் கவனத்திற்கு உரியது.

“வேலை நிறுத்தம் எந்தக் காரணத்தால் நேர்ந்தபோதிலும் சுமார் 1000 மக்கள் பசியும் பட்டினியுமாக வதைபடுவது சகிக்க முடியாத காட்சியாகும். இதனைக் காஞ்சிபுர வாசிகளுக்கு எடுத்துக் காட்டினோம். நமக்கு ஜாதி-சமய வித்தியாசத்தைக் குறித்துக் கவலையில்லை. யாராயிருப்பினும் கஷ்டகாலத்தில் உதவிபுரிவதே மானசீகமாகும். முதலாளி-தொழிலாளிகளுக் கிடையே நேரிடும் போராட்டத்தில் வதைந்து சிதைந்து போகிறவர்கள் தொழிலாளிகளே. அந்த விதமான திட்டத்தில் நமது கடமை இவ்விதத்தவர் களுக்கு உதவிபுரிவதே புருஷலட்சணம் என்போம். ஆனால் ஒன்று சொல்லக் கடமைப்பட்டுள்ளோம். ஏழைகள் பசி பொறுக்காமல் சரணாகதி அடை யாளம். ஆனால் அந்த வருத்தம் மனத்தில் இருந்தே வரும். இதனால் இரு தரத்தாரும் சுகமடைய மாட்டார்கள்.

சில போலீஸார் ஏழைகளை வேலைக்குப் போகும்படி பயமுறுத்துகிறதாகவும் கேள்வி; அது உண்மையானால் வெறுக்கத்தக்கதே; தொழிலாளி- முதலாளி போராட்டத்தில் அதிகாரிகள் நடுநிலைமை வகிப்பதுதான் அழகு என்போம். அதற்கு மாறாக நடந்தால் நியாயத்திற்கும், நீதிக்கும் பொருந்தா வென அறிய வேண்டும்” - குடியரசு 12-2-17

உழவர்களின் பசிப்பிணியை அறிந்து, அவர் வருந்தி எழுதியதோடன்றி, அவர்களின் பசியைக் களைய ஒரு வண்டி நெல்மூட்டைகளை அவர் களுக்கு அனுப்பியதுடன் காஞ்சிபுரத்திலுள்ள தம் நண்பர்களை உதவி செய்ய வேண்டியுள்ளார். இதனை மேற்குறித்த கட்டுரையில் பதிவு செய் துள்ளார். மற்றும் வேலை நிறுத்தத்தை முன்னிட்டுப் போலீஸார் உழவர்கள் மீது 111-சட்டப்பிரிவுக்குள் வழக்குப் போட்டுள்ளனர். அவர் அதனையும் அக் கட்டுரையில் கடிந்து எழுதியதுடன், காஞ்சிபுரத்தி லுள்ள வழக்கறிஞர்கள் அவ்வழக்கினை தள்ளுபடி செய்ய உதவுமாறு வேண்டுகோளும் விடுத்துள்ளார். அவ்வேண்டுகோள் விட்டபோது சிங்காரவேலர் உடல்நலம் குன்றி இருந்துள்ளார். சிங்காரவேலர் இவ்வாறான உதவிகளைச் செய்ததுடன், மாமண்டூர் உழவர்களின் பசித்துயரை நீக்க சென்னை-மற்றும் காஞ்சிபுரத்திலுள்ள அன்பர்கள் பொருளையோ அரிசியையோ உடனே வழங்கி உதவி செய்யுமாறும், அவ்வாறு செய்ய விரும்புபவர்கள் திரு.குப்புசாமி எண் 40, இராஜவீதி, பெரிய காஞ்சிபுரம் எனும் முகவரிக்கு அனுப்பிவிடுமாறு அதே கட்டுரையில் அறிவிப்புச் செய்துள்ளார்.

சிங்காரவேலர் எதனைச் செய்தாலும், அதனைச் சமூக இயக்கமாக மாற்றும் முயற்சியுடையவர். மாமண்டூர் உழவர் போராட்டம் குறித்துத்தாம் பேசியதோடன்றிப் பிறரையும் பேச வைத்துள்ளார். அந்த அடிப்படையில் தான் 3-2-33 அன்று பெரிய காஞ்சிபுரம் தேரடி மைதானத்தில் எஸ்.வி. லிங்கம் அவர்களைப் பேச வைத்துள்ளார். இவ்வாறு பேசவைத்ததுடன் 6-2-33 அன்று, காஞ்சிபுரத்தின் ஆடிசன்பேட்டை ஜவுளிக்கடை மைதானத்தில் நிகழ்ந்த பெருங்கூட்டத்தில் உழவர்களின் துயர் களைய ஒரு தீர்மானத்தை எல்லோர் சார்பிலும் நிறைவேற்றிப் பதிவு செய்துள்ளார்.

சிங்காரவேலர் இந்த மாமண்டூர் பிரச்சினையில் மட்டுமின்றி தொடக்கக் காலந்தொட்டே, தொழி லாளர் மற்றும் உழவரிடத்து ஆழ்ந்த அக்கறை யுடனும், கொள்கைத் திட்டத்துடனும் செயல் பட்டு வந்தார். காங்கிரசு பேரியக்கத்தில் இருந்த போது, 1922-ஆம் ஆண்டில் கயாவில் நடந்த அகில இந்திய காங்கிரசு மாநாட்டில் தொழிலாளர்-உழவர் ஆகியோரைக் குறித்து ஒரு வேலைத் திட்டத்தை உருவாக்க வேண்டுமென்று முதன் முதலில் திட்டம் வைத்தவர் அவர்தான். அதனால், அவ்வியக்கம் அவரை உறுப்பினராக இணைத்து, தொழிலாளர் நலக்குழுவை அமைத்தது. குறிப்பிடத் தக்கது. இந்தியாவிலேயே தொழிலாளர் தினமான மே தினத்தை முதன் முதலில் 1-5-1923 அன்று கொண்டாடியதோடு அதே நாளில் அதே போன்று முதன் முதலாக ஆங்கிலத்தில் டுஹக்ஷடீருசு ஹசூனு முஐளுளுஹசூ ழுஹஷ்ழஹகூகூநுநு என்ற ஆங்கில மாத இதழைத் தொடங்கி நடத்தியதுடன் பின்னாளில் தொழிலாளி என்ற இதழையும் அடுத்து தோழர் என்ற இதழை நடத்தி யதும் இங்கு எண்ணிப் பார்க்கத்தக்கது. இவை யெல்லாம் அவர் உழைக்கும் மகளிடத்துக் கொண்ட ஈடுபாட்டையும் அவர்களை உயர்த்த அவர் கொண்ட கொள்கையையும் வெளிக்காட்டுவனவாகும்.

1921-ஆம் ஆண்டில் சென்னையில் பி அண்டு சி மில் வேலை நிறுத்தம் பல மாதங்களாகத் தொடர்ந்த போது, தொழிலாளர்கள் ஊதிய மின்றி பசி, பட்டினியால் வாடியபோது, அப்போது திருச்சியில் நிகழ்ந்த காங்கிரசு மாநாட்டின் கவனத்திற்குக் கொண்டுவந்து, காங்கிரசு சார்பில் தொழிலாளர் கட்கு ரூ.10,000/- வழங்கக் காரணமாக இருந்திருக் கிறார். மேலும், தொழிற்சங்கத் தலைவர்களுடன் இணைந்து மயிலை, திருவல்லிக்கேணி, புதுப் பேட்டை, போன்ற பகுதிகளில் மடிப்பிச்சை ஏந்திப் பொது மக்களிடத்து உணவுப்பொருள் களையும், பணத்தையும் பெற்றுத் தொழிலாளர் களுக்கு வழங்கியுள்ளார். இவை போன்ற செயல் பாடுகள் அவரது வாழ்க்கையில் பல உள்ளன.