சங்க இலக்கியம் தமிழர்களின் தொல்வரலாற்றிற் கான ஆவணமாக இருப்பது. இலக்கியம் என்ற நிலையைக் கடந்து மானிடவியல், வரலாற்றியல், ஒப்பியல் உள்ளிட்ட வாசிப்புகளுக்கும் இப்பிரதியானது இடமளிக்கின்றது. காலந்தோறுமான பன்முகப்பட்ட வாசிப்பினையும் பெற்றுவருகின்றது. சங்கப் பாடல்களில் பல்வேறு சடங்குகள் இடம்பெற்றுள்ளன. பெண்சார்ந்த சடங்குகளுள் வெறியாடல் குறிப்பிடத்தக்கது. இந்த வெறியாடல் களவுக் காதலில் ஈடுபட்டு அதன் விளைவாக மெலிவு ஏற்பட்ட பெண்களுக்கு நிகழ்த்தப் படுவது. எட்டுத்தொகையுள் (கலித்தொகை, பரிபாடல் தவிர்த்து) 36 பாடல்கள் வெறியாடல் நிகழ்வினைச் சுட்டியுள்ளன. அவற்றுள் மூன்று பாடல்கள் காமக் கண்ணியார் என்கிற பெண்பாற் புலவரால் பாடப் பட்டது. ஒரு பாடலை நல்வெள்ளியார் என்ற பெண் புலவர் பாடியுள்ளார். ஒரு பாடல் (அகம்.114) பாடிய புலவரின் பெயர் தெரியவில்லை. மேலும் இப்பாடல் வெறியாடலுக்குரிய குறிஞ்சித்திணை சார்ந்து அமையாது முல்லைத் திணையில் வினைமுற்றி மீளும் தலைவனின் கூற்றாக அமைந்துள்ளது. இங்கு வெறியயரும் களம் உவமைக்காக எடுத்தாளப்பட்டுள்ளது குறிப்பிடத் தக்கது. பிற முப்பத்தியோரு பாடல்களும் ஆண்பாற் புலவர்களால் பெண்நிலையிலிருந்து பாடப்பட்டவை. குறுந்தொகையில் 5 பாடல்கள், நற்றிணையில் 10 பாடல்கள், அகநானூற்றில் 11 பாடல்கள், ஐங்குறுநூற்றில் 10 பாடல்கள் என்ற நிலையில் வெறியாடல் குறித்த பதிவுகள் காணக்கிடைக்கின்றன. குறுந்தொகை, ஐங்குறுநூறு ஆகியவற்றைப் பொறுத்தவரை நேரடியாக வெறியாடல், அது தொடர்பான நிகழ்வுகள் மட்டுமே இடம்பெற்றுள்ளன. நற்றிணைப் பாடல்கள் சற்று விரிந்த நிலையில் காட்சிப்படுத்துகின்றன. அகநானூற்றுப் பாடல்கள் மூன்று பகுதிகளைக் கொண்டமைகின்றன. முதற்பகுதி தலைவனின் நாடு அல்லது இறைச்சிப் பொருள் குறித்ததாகவும், சில இடங்களில் தலைவியின் மெலிவிற்கான காரணத்தைக் கூறுவதாகவும் இரண்டாம் பகுதி வெறியாடலை மையமிட்டும், மூன்றாம் பகுதி வெறியாடலினால் நேர்ந்த விளைவு குறித்ததாகவும் அமைகின்றது.

நற்றிணையில் ஒன்று, அகநானூற்றில் இரண்டு என வெறியாடல் தொடர்பாகப் பாடிய மூன்று பாடல் களுக்காக மட்டுமே காமக்கண்ணியார் சிறப்புப் பெயர் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு இவர் காட்சிப்படுத்தியுள்ள வெறியாடல் நிகழ்வும் காரணமாக இருக்கலாம். சங்க இலக்கியத்தில் வெறியாடல், காமக்கண்ணியாரின் பாடல்கள் குறித்த கருத்துகளைக் கீழ்க்கண்ட நிலைகளில் தொகுத்துக் கொள்ளலாம்.

-              சங்க இலக்கியப் பிரதிகளில் வெறியாடல் என்ற நிகழ்வு பெற்றிருக்கும் முக்கியத்துவமும் அதன் சடங்கு முறைகளும்.

-              வெறியாடல் குறித்த தொல் இலக்கணமான தொல்காப்பியத்தில் இடம்பெற்றுள்ள பதிவு களும் அதற்கு உரையாசிரியர்கள் எடுத்துக் காட்டியுள்ள சங்கச் சான்றுகளும்.

-              மேற்குறித்த நிலைகளில் இருந்து காமக் கண்ணியாரின் பாடல்கள் மாறுபட்டுள்ள ஒத்துள்ள இடங்களும் வெறியாடலின் வழி விரிந்துள்ள அவர்தம் பெண்ணுலகமும்.

வெறியாடல் பெண்களைச் சார்ந்து பெண் களுக்காகப் பெண்களால் நிகழ்த்தப்படும் ஒரு சடங்கு. வெறியாடலின் பிரதானமாக அமைவது வேலன். பெரும்பாலும் செவிலித்தாயும், நற்றாயும் தலைவியின் மெலிவுகண்டு அதற்கான காரணத்தை ஆராய்வதற்காக வெறியாட்டினை ஏற்பாடு செய்வர். நிச்சயமாக இது பெண்களுக்கு மிகுந்த துன்பம் தருகின்ற நிகழ்வாகவே இருந்துள்ளது. அதனால்தான் வெறியாடலுக்கு முன்பு அது நடைபெறாமல் நிறுத்தும்பொருட்டு தோழி அறத்தோடு நிற்கின்ற நிலை ஏற்பட்டுள்ளது. முன்னர்க் குறித்தபடி வெறியாடல் குறித்த பதிவுகள் எட்டுத் தொகையில் பரவலாகக் காணப்படுகின்றன. இப்பதிவு களைக் கீழ்க்கண்ட நிலைகளில் தொகுக்கலாம்.

-              தலைவன் சிறைப்புறமாக இருக்கும்போது தோழி தலைவிக்கு வெறியாடல் நிகழவிருப் பதைக் கூறி வரைவிற்கு விரைவுபடுத்துதல், வெறியாடலினால் தலைவிக்கு நிகழ்ந்த துன்பத்தைத் தலைவன் கேட்குமாறு கூறுதல். (குறுந்.111,253, அகம். 182,232,242,382,388,272, நற்.47,251,273,282, 288,322, ஐங்.245,246,)

-              வெறியாடலின் போது வேலனிடம் கூறுவது போல் செவிலிக்கும் நற்றாய்க்கும் தோழி தலைவியின் உண்மைநிலையினை உணர்த்துவது. (குறுந்.214,362 நற்.34,173, ஐங்.241,242,243,244,247,248,249,250)

-              தலைவி தலைவனோடு ஏற்பட்ட உறவினால் தான் வெறிகளத்திற்குச் செல்ல வேண்டியிருப்பதையும், வெறியாடலினால் தனக்கு நேர்ந்த துன்பத்தையும் பதிவு செய்தல். (குறுந். 360, அகம்.138, 292, நற்.51,)

வரைவிற்கு விரைவு படுத்துதல் என்கிற நிலையில் வெறியாடல் என்னும் நிகழ்வு சங்கப் பாடல்களில் முக்கிய இடத்தினைப் பெற்றிருக்கின்றது. இந்த அகப் பொருண்மையினைக் கடந்து வெறியாடல் எவ்வாறு நிகழ்த்தப்பட்டிருக்கின்றது? குறிப்பிட்ட அப்பெண்ணின் மீதான சடங்குகள் எவை? என்பதையும் சில பாடல்கள் காட்சிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. சங்கப் பாடல்களில் வெறியாடல் நிகழ்த்தப்பட்ட முறைமை களில் சில ஒப்புமைகளும் வேற்றுமைகளும் காணப்படு கின்றன. குறிப்பாக வேலன் குறித்த பதிவுகள். வேலனை சினம் கொண்ட முதுவாய் வேலன் (குறுந்.362), (நற்.282) மடமை கூடிய வேலன் (நற்.34), மின்னலைச் செய்தமைத்தாற் போன்ற வேலைக் கையில் கொண்ட வேலன் (நற்.47) என்றெல்லாம் குறித்துள்ளனர். சில இடங்களில் வேலன் தெய்வமாகவே இருப்பினும் மெலி விற்கான உண்மையான காரணம் அறியாதவனாகையால் அவன் மடமை வாய்ந்தவனே என்கிற தொனியிலான பதிவினையும் காணமுடிகின்றது. அடுத்ததாக, வெறியாடல் நிகழ்ந்த முறைமை குறித்த பதிவுகளைக் கீழ்க்கண்டவாறு தொகுக்கலாம்.

-              மறியின் கழுத்தை அறுத்துத், தினைப்பிரப்பை வைத்துக் கவர்த்த வழியில் பல வாச்சியங் களும் ஒலிப்பத், தோற்றத்தாலன்றி உற்ற நோய்க்கு மருந்தாகாத அயலான தெய்வம் பலவற்றோடும் வாழ்த்திப், பேயாற் கொள்ளப் பட்டாள் இவள் என்று கூறுதல் நோவதற் குரியது. (பெருஞ்சாத்தன், குறுந்.263) சினம் கொண்டவன் வேலன், பல்வேறு நிறத்தினைக் கொண்ட சிலவாய அவிழ்களை யுடைய சோற்றோடு செம்மறியைக் கொன்று தலைவியின் நெற்றியில் தடவி வணங்கிக் கொடுத்தல்; (வேம்பற்றூர்க் கண்ணன் கூத்தன், குறுந்.362), தெய்வத்தான் அறியப்படுகின்ற கழங்கு, ஆட்டையறுத்து அன்னையால் வணங்கப் படும் முருகவேள் (நல்வெள்ளியார், நற்.47), ஆடு முதலிய பலியைப் பெறவிருக்கின்ற முருகவேளை வழிபட்டு மாதர் குழாத்தொடு கூடி ஒலிமிக்கு வெறியெடுக்கும் பொழுது (மதுரைப் பெருமதிள நாகனார், நற்.251), இந்நோய் முருகவேள் அணங்கியதா லுளதாயிற் றென்று அன்னை அறியும்படி சொல்லிப் படிமத்தான் (பூசாரி) தனது துடி முதலாகிய வாச்சியம் ஒலிக்கப் பாடி பலவாய பூக்களைத் தூவித் துதித்து இவ் யாட்டினை ஏற்றுக்கொள் ளென்று அதனை யறுத்துக் கொடுக்கும் பலி. (மதுரைப் பாலாசிரியன் சேந்தன் கொற்றனார், நற்.322), மெல்லிய தளிரையுடைய சிறிய தழையுணவைத் தின்னும், தாய் முலை யினைப் பெறாதொழியும், ஆட்டுக் குட்டி யினைப் பலிக்காகக் கொல்லுதலை விரும்பி வெறி யாடலைச் செய்யும் யாதும் இயை பில்லாத வேலன் மாலை தன் மார்பில் அசைந்திட வெறிஆடுவான் (கபிலர், அகம். 292), பலபிரப்பினை பலியாக வைத்து, உண்மை உணர மாட்டாத வேலை அழைத்து, வெறியாடும் பெரிய களம் பொலிவு பெறு மாறு துதித்து, ஆட்டுக்குட்டியின் உயிரை பலியிடல் (பேரிசாத்தனார், அகம்.242)

-              கார்காலத்து மலர்கின்ற நறிய கடப்ப மாலையைச் சூடீப் படிமத்தான் வேண்டுகை யாலே வெறி களத்துப் பலிபெற வந்த வேலன் (நற்.34)

-              வெறிக்களத்து முருகவேளின் முன்பு இடப் பட்ட கழற்சிக் கொட்டையைக் கொண்டு ஆராய்ந்து முருகணங்கென்று அம்முருக வேளைத் துதித்த லாலே தணியப்படுமாயின் அது மிக நல்லது. (நல்லூர் சிறுமேதாவியார், நற்.282)

-              கட்டுவிச்சியும் வேலனும் வேம்பினது நாற்ற முடைய பசிய இலையுடன் நீலப்பூக்களைச் சூடி, பாண்டியனுடைய பொதிய மலையில் அடைதற் கரிய உச்சியினின்று ஆரவாரித்து வருதலையுடை அருவி ஒலிபோல, ஒலிக்கும் சீரையுடைய இனிய வாச்சியங்கள் ஒலிக்க, கை யால் வணங்கி, அச்சம் தோன்றும் தலைமையை யுடைய முருகனை மனைக்கண் வருவித்து அவனது கடம்பினையும் களிற்றினையும் பாடி, பனந்தோட்டினையும் கடப்ப மாலையையும் கையிற்கொண்டணிந்து இர வெல்லாம் ஆடினர். (எழுப்பன்றி நாகன் குமரனார், அகம்.138)

-              கடம்பின் கொடியினைக் கட்டி, மாலை சூட்டி, பல்வேறு குரலை உடையனவாகிய தாளத்தின் வழிப்படும் ஒரு தூக்கினையுடைய இனிய வாச்சியங் களைக் கொண்டு, காட்டிற் பொருந்திய நெடிய முருகனைப் பாடும் பாட்டிற்குப் பொருந்த வெறியாட்டுச் செய்யும் பெரிய களம் சிறப்புற மெல்ல ஆடுதல் (கபிலர், அகம். 382)

-              நம் அன்னை, முருகனே என எண்ணி, புகழுரை கூறி, நல்ல நிறம் வாய்ந்த செந்தினையை நீரொடு தூவி, முருகனைப் பரவா நின்றாள் (மதுரை அறுவை வாணிகனிள வேட்டனார், 272)

இப்பதிவுகளைத் தொகுத்து நோக்கும் போது வெறியாட்டு என்பது பலியோடு தொடர்பு கொண்ட, கழங்கு, கடப்பமாலை, மிகுந்த ஓசை எழுப்பும் வாச்சியங் களோடு செய்யப்படுகின்ற நிகழ்வு என்பது தெரிகின்றது. களவில் ஈடுபட்டு அதன் விளைவால் மன அழுத்தம் பெற்ற ஒரு பெண்ணை இத்தகு சடங்கில் பங்கேற்கச் செய்வது எத்தகைய துன்பத்தை ஏற்படுத்தும் என்பதனையே வெறியாடல் தொடர்பான பாடல்களுள் பெரும்பான்மையானவை சுட்டிச் செல்கின்றன. இதன்மூலம் வரைவை விரைவுபடுத்த வேண்டும் என்கிற நோக்கம் புலப்பட்டாலும் ஒரு பெண் களவு வாழ்க் கையில் ஈடுபடுவதால் இத்தகு துன்பத்தை அடைய நேரிடும் என்பதை மறைபொருளாக இப்பாடல்கள் உணர்த்துகின்றனவோ என்று எண்ணத்தோன்றுகின்றது. காமக்கண்ணியாரால் பாடப்பட்ட மூன்று பாடல் களைத் தவிர்த்த முப்பத்துமூன்று பாடல்களுள் நான்கு மட்டுமே வெறியாடலுக்கு ஆட்பட்ட தலைவியின் கூற்றாகப் பாடப்பட்டுள்ளன. அவை தன்னிரக்கம் மிகுந்தவையாக உள்ளன.

சங்க இலக்கியத்தில் பரவலாக அறியப்பட்ட வெறியாடல் தொடர்பான பதிவு தொல் இலக்கணப் பனுவலான தொல்காப்பியத்தில் மூன்று இடங்களில் மட்டுமே உள்ளது. வெறியாடல் குறித்த விளக்கங்களை உரைகாரர்களே தருகின்றனர். நச்சினார்க்கினியர் புறத்திணையியலில் இடம்பெற்றுள்ள நூற்பாவிற்கும் களவியலில் இடம்பெற்றுள்ள நூற்பாவிற்கும் காமக் கண்ணியாரின் பாடலையே சான்றாகக் காட்டுகின்றார். இரண்டு நிலைகளில் அச்சான்றுகள் அமைந்திருக் கின்றன. ‘வெறியறி சிறப்பின் வெவ்வாய் வேலன்’ (தொல்.புறத்.60) என்ற நூற்பாவின் உரையில்,

வேலனாடுதல் அகத்திணைக்குச் சிறந்தது. உதாரணம்:

‘ அணங்குடை நெடுவரை யுச்சியி னிழிதருங்

கணங்கொ ளருவிக் கான்கெழு நாடன்...’ (அகம்.22)

‘பனிவரை நிவந்த’

என்னும் அகப்பாட்டும் (98) அது

இவற்றுட் சேயோன் கருப்பொருளாக மைவரை யுலகத்துக் கூதிர்யாமம் பொழுதாகச் சிறப்பறியும் வேலன் ஆடுதலின், வெறியாடிய காந்தள் அகத்திற்கு வந்தது. (தொல்.புறம். நச்.163)

அக இலக்கியத்தில் வேலனாடுதல் என்பது சிறந்த பகுதியாக நச்சினார்க்கினியரால் கருதப்பட்டிருக்கின்றது. மேலும் களவியலில் தலைவி கூற்று நிகழும் இடங் களைச் சுட்டும் நூற்பாவில் இரண்டு இடங்களில் காமக் கண்ணியாரின் பாடல்களைச் சான்று காட்டுகின்றார். ‘பழிதீர் முறுவல் சிறிதே தோற்றல்’ என்ற பகுதிக்கு,

தலைவனால் தோன்றிய நோயும் பசலையும் முருகனால் தீர்ந்த தென்று அவன் கேட்பிற் கற்பிற்குப் பழியாமாதலிற் பழி யென்றார். உதாரணம்

அணங்குடை நெடுவரை யுச்சியி னிழிதருங்...

இதனுட் பழி தீர அவன் வந்து உயிர்தளிப்ப முயங்கி நக்க நிலையைத் தோழிக்குத் தலைவி கூறியவாறு காண்க. (தொல்.களவு.நச்.411)

அடுத்ததாக ‘வெறியாட்டிடத்து வெருவின் கண்ணும்’ என்னும் பகுதிக்கு,

தலைவி வேறுபாடு எற்றினானாயிற் றென்று வேலனை வினாய் வெறியாட்டு எடுத்துழி தலைவி அஞ்சும் அச்சத்தின் கண்ணும் அது பண்டேயுந் தன் பரத்தமையான் நெகிழ்ந்தொழுகுவான் இன்று நம் ஆற்றாமைக்கு மருந்து பிறிதுமுண்டென்றறியின் வரை நீடுமென்று அஞ்சுதல். உதாரணம்:

‘பனிவரை நிவந்த பயங்கெழு கவாஅற்...’

இன்னவாக்கி நிறுத்த எவ்வம் என்பது அவன்பயிற் பரத்தைமை. உயிர்வாழ்தல் அரிது என்பது தன்வயினுரிமை. அவை வெறியஞ்சியவழி நிகழ்ந்தன. (தொல். களவு. நச்.411)

சங்க இலக்கியத் தொகுப்பாளர்களுக்குப் பிறகு காமக்கண்ணியாரின் பாடலுக்குப் பொருளுரைத்தவராக நச்சினார்க்கினியரைக் கொள்ளமுடியும். முதல்நிலையில் அகப்பாடல்களில் வேலனாடுதல் சிறப்பு என்ற நிலையில் வெறியாடலுக்கான சான்றாகக் காமக்கண்ணியாரின் பாடலைக் காட்டிய நச்சர் இரண்டாம் நிலையில் வெறியாடலின் பொருட்டு தலைவி அச்சம் கொண்ட நிகழ்விற்கான சான்றுப் பாடலாகக் கொள்கிறார். இவ்வுரை மரபினைத் தாண்டி காமக்கண்ணியாரின் பாடல்கள் சில அர்த்தப் புலப்பாட்டினைக் கொண்டிருக்கின்றன.

நச்சர் எடுத்துக் காட்டியுள்ள அகநானூற்றின் இரண்டு (அகம்.22,98) பாடல்களோடு நற்றிணையில் ஒரு (நற்.268) பாடலென மூன்று பாடல்கள் காமக் கண்ணியாரின் பாடல்களாகக் கிடைக்கின்றன. இம்மூன்று பாடல்களுமே வெறியாடலுக்குட்படுத்தப் பட்ட தலைவியின் கூற்றுகளாக அமைந்தவை. காமக்கண்ணியார் காட்சிப்படுத்தியுள்ள வெறியாடல்,

...

களநன் கிழைத்துக் கண்ணி சூட்டி

வளநகர் சிலம்பப் பாடிப லிகொடுத்

துருவ செந்தினை குருதியடு தூஉய

முருகாற்றுப் படுத்த புருகெழு நடுநா...        (அகம். 22)

பிற புலவர்கள் காட்சிப்படுத்தியுள்ள வெறியாடலி லிருந்து பெரிதும் மாறுபடவில்லை. வெறியாடலுக் குரிய களம், மாலை, பலி, செந்தினை என்று முன்னர்க் குறிப்பிட்ட சடங்குகளே இப்பாடலிலும் இடம் பெற்றுள்ளன. ஆனால் இச்சடங்கினால் ஏற்படுகின்ற துன்பம் இப்பாடலில் பிரதானப்படவில்லை. மாறாக, இச்சடங்கு தலைவிக்கு நகைப்பிற்குரியதொன்றாகக் கட்டமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையிலேயே காமக்கண்ணியார் பிற புலவர்களிலிருந்து மாறுபடுகிறார்.

பொதுவாகச் சங்கப் பெண்பாற் புலவர்கள் தங்கள் காமத்தை அழகியலோடு வெளிப்படுத்தியுள்ளமை யினைக் காணமுடியும். காமக்கண்ணியார், பிற புலவர்களால் தன்னிரக்கத்தோடும் துயரத்தோடும் நோக்கப்பட்ட வெறியாடல் சடங்கினைத் தனது காமத்திற்கான அழகியல் வெளிப்பாடாகக் கட்டமைத் துள்ளார். அப்பாடலடிகள் வருமாறு,

... முருகாற்றுப் படுத்த புருகெழு நடுநா

ளார நாற வருவிடர்த் ததைந்த

சாரற் பல்பூ வண்டுபடச் சூடிக்

களிற்றிரை தெரீஇய பார்வ லொதுக்கி

னொளித்தியங்கு மரபின் வயப்புலி போல

நன்மனை நெடுநகர்க் காவல ரறியாமைத்

தன்னசை யுள்ளத்து நந்நசை வாய்ப்ப

வின்னுயிர் குழைய முயங்குதொறு மெய்ம்மலிந்து

நக்கனெ னல்லனோ யானே யெய்தந்

நோய்தணி காதலர் வரவீண்

டேதில் வேலற் குலந்தமை கண்டே    (அகம்.22)

பிற புலவர்களின் பாடல்களில் களவு வாழ்க்கை யினால் நேர்ந்த துயரமாக, வெறியாடலை எதிர் கொண்ட தலைவியரைக் காணமுடியும். ஆனால் காமக் கண்ணியாரோ வெறியாடல் நிகழ்ந்த அன்று சந்தனம் மணம் வீச, பக்க மலையில் உள்ள அரிய முழைஞ்சுகளிற் செறிந்த பல பூக்களை வண்டுமொய்த்திட சூடியும், களிறாகிய இரையைத் தெரிதற் பொருட்டு ஒதுங்கிய பார்வையடு மறைந்து இயங்கும் இயல்பினையுடைய வலிய புலியினைப் போல, நமது நல்ல மனையின் கண்ணுள்ள நெடிய இல்லின் காவலாளரும் அறியா வண்ணம், தான் மெலிதற்கு ஏதுவாய இந்நோயைத் தணித்தற்குரிய காதலர்வந்து, தன்னை நச்சுதலை யுடைய உள்ளத்தின் விருப்பம் நிறைவேறும்படி, இனிய உயிர்குழையும்படி முயங்குந்தோறும், இந்நோய்க்குச் சற்றும் தொடர்பில்லாத வேலனுக்கு வெறியெடுத்ததை நினைத்து உடல்பூரிக்கச் சிரித்த தலைவியைக் காட்டுகிறார். இதனைக் காமக்கண்ணியாரின் கூற்றாகக் கொள்ளவேண்டும். தான் மேற்கொண்ட காமம், களவு. அது தனக்கான வெளி. அதில் எந்தக் குற்ற உணர்வும், துயரநிலையும் தனக்கில்லை. அந்தக் களவானது எத்தகைய இடையீடு ஏற்படினும் தொடர்ந்து கொண்டே இருக்கும் என்பதையே இப்பாடலின் மூலம் உணர்ந்து கொள்ளமுடிகின்றது.

தனது காமத்தின் மீதான பெருமிதத்தைக் கொண் டிருக்கும் அதே நேரத்தில் வெறியாடலினால் நிகழும் பிறிதொரு விளைவையும் காமக்கண்ணியார் இயல்பாகக் காட்சிப்படுத்துகின்றார். நச்சினார்க்கினியரால் வெறி யாடல் மீதான அச்சத்திற்குச் சான்றாகக் காட்டப்பட்ட ‘பனிவரை நிவந்த பயங்கெழு கவாஅன்’ என்ற அப்பாடலின் அடிகள் வருமாறு,

... சூருறை வெற்பன் மார்புறத் தணித

லறிந்தன ளல்ல ளன்னை வார்கோற்

செறிந்திலங் கெல்வளை நெகிழ்ந்தமை நோக்கிக்

கையறு நெஞ்சிலனள் வினவலின் முதுவாய்ப்

பொய்வல் பெண்டிர் பிரப்புளர் பிரீஇ

முருக னாரணங் கென்றலி னதுசெத்...         (அகம்.98)

தனக்கு இன்பத்தை அளித்த களவு வாழ்க்கையின் நீட்டித்தலாவது வெறியாடலுக்கு வழி வகுக்கின்றது. அந்த வெறியாடல் இரண்டு நிலையிலான துன்பத்தை ஏற்படுத்துகின்றது. பிற புலவர்கள் வெறியாடலால் நேரிடுகின்ற துன்பத்தைக் காட்சிப்படுத்தியுள்ள முறையினின்று காமக்கண்ணியார் இவ்விடத்தில் மாறுபடுகின்றார். முந்தைய பாடலில் மெலிவிற்கான காரணத்தை வேலன் என்று முதுவாய்ப் பெண்டிர் கூறினர். இப்பாடலிலும் அவர்களே கூறுகின்றனர். ஆனால் அம்முதுவாய்ப் பெண்டிர் அறிவற்ற பொய் பெரிதும் கூறுகின்றவர்களாக உள்ளனர். இது தலைவியின் நிலையில் இயல்பாக எழுகின்ற கோபத்தின் வெளிப்பாடாக இருக்கின்றது.

... கூடுகொள் ளின்னியம் கறங்கக் களனிழைத்

தாடணி அயர்ந்த அகன்பெரும் பந்தர்

வெண்போழ் கடம்பொடு சூடி யின்சீர்

ஐதமை பாணி யிரீஇக்கை பெயராச்

செல்வன் பெரும்பெய ரேத்தி வேலன்

வெறியயர வியன்களம் பொற்ப வல்லோன்

பொறியமை பாவையிற் றூங்கல் வேண்டி

னென்னாங் கொல்லோ தோழி...         (அகம்.98)

இணைந்த பலவாய இனிய வாச்சியங்கள் ஒத்து ஒலிக்க வெறியாடும் களனை இயற்றினர். ஆடுதற்கேற்ற அழகு செய்த அகன்ற பெரிய பந்தலிலே வெள்ளிய பனந் தோட்டினைக் கடப்பமலரொடு சூடினர். இனிய சீர் அழகியதாக அமைந்த தாளத்தொடு பொருத்தி முருகக் கடவுளின் பெரும் புகழினைத் துதித்தனர். அந்த வேலன் வெறியாடும் பெரிய களம் அழகுபெற வல்லோன் ஆட்டும் பொறியமைந்த பாவையைப் போல ஆடுதலை விரும்பின் என்ன ஆகுமோ தோழி என்று தலைவி வினவுகிறாள். இப்பாடலில் இடம்பெற்றுள்ள ‘வல்லோன் ஆட்டும் பொறியமைந்த பாவை’ என்ற கூற்று கவனத்திற்குரியது. சங்ககாலப் பெண்களின் நிலையினை இதைவிட சிறந்த சான்றினால் கூற முடியாது. களவு வாழ்வில் ஈடுபடுவது பெண்களின் தனிப்பட்ட வெளியாக இருக்கும் அதே நேரத்தில் அக்களவு வெளிப்பட்ட பின்னரான வாழ்வானது வல்லோன் ஒருவனால் ஆட்டுவிக்கப்படுகின்ற பாவையைப் போன்றதாகவே இருக்கின்றது. இத்தகு ஆர்ப்பாட்டத் தோடு மேற்கொள்ளப்படுகின்ற வெறியாட்டினால் தனது மெலிவு தீரவில்லை எனில் தான் கொண்ட களவு வெளிப்பட்டு அலருக்கு வாய்ப்பை ஏற்படுத்தும். ஒரு வேளை அம்மெலிவானது தீர்ந்துவிட்டது என்றால் தலைவன் தன்னை சந்தேகிக்க நேரிடும். இதனை வெறியாடல் மீதான அச்ச உணர்வு என்பதைவிட அந் நிகழ்வினால் ஏற்படுகின்ற சூழ்நிலை குறித்த நிதர் சனத்தை வெளிப்படுத்துவதாகக் கொள்ளலாம். இந்த இருநிலைப்பட்ட துயரத்தில் உள்ள தலைவியின் மனநிலை இறப்பை நாடுகின்றது. ஒரு பெண்ணின் மனோநிலையினை அவளைச் சுற்றி நிகழும் நிகழ்வுகளின் அடிப்படையில் துல்லியமாகச் சித்திரிக்க பெண் களுக்கே கைகூடும் என்பதற்கு இவ்விரண்டு பாடல் களும் சான்றுகளாகின்றன.

நற்றிணையில் இடம்பெற்றுள்ள பாடல் தலைவியின் காமத்தைத் தலைவனுக்குத் தெரிவிப்பதாக உள்ளது. அதற்கு வெறியாடல் பயன்படுகின்றது. இத்தன்மையும் புதுமையானதாகவே இருக்கின்றது.

சூருடை நனந்தலைச் சுனைநீர் மல்க

மால்பெய றலைஇய மன்னெடுங் குன்றத்துக்

கருங்காற் குறிஞ்சி மதனில வான்பூ

வோவுக்கண் டன்ன வில்வரை யிழைத்த

நாறுகொள் பிரச மூறுநா டற்குக்

காதல் செய்தலுங் காதல மன்மை

யாதெனிற் கொல்லோ தோழி வினவுகம்

பெய்ம்மணன் முற்றங் கடிகொண்டு

மெய்ம்மலி கழங்கின் வேலற் றந்தே. (நற்.268)

முற்றத்தில் மணலைப் பரப்பி சிறப்பித்து மெய்ம் மையை மட்டும் கூறுகின்ற கழங்கிட்டு குறிபார்த் தலையுடைய படிமத்தானை அன்னை வீட்டிற்கு அழைத்திருக்கிறாள். அவனிடம் கேட்பதற்கு எனக்கும் ஒருகேள்வியுண்டு. அச்சத்தைத் தருகின்ற இடமகன்ற சுனையில் நீர் நிறையும்படியாக மேகம் மழைபெய்து விட்ட மிக்க நெடிய குன்றம். அதில் கரிய காம்பை யுடைய குறிஞ்சியின் வன்மையில்லாத மெல்லிய வெளிய பூவினை ஓவியன் மலையிடத்தே சித்திரித்தாற் போன்ற வேட்டுவர் இல்லங்கள். அவற்றில் இழைக்கப் பட்ட தேனடைக்கு வேண்டிய அளவு மணங்கொண்ட தேனூறுகின்ற நாட்டையுடைய தலைவனுக்குப் பல படியான காதலை நான் கொண்டிருந்தும் அவனுக்கு என் மீது காதலிக்கப்படுகின்ற தன்மையே இல்லாமலிருப்பது ஏனோ? என்று தலைவி கேட்பதாக இப்பாடல் அமைந் துள்ளது.

தலைவன் மீதான தனது காதலே இன்று வெறியாடும் நிலைக்குக் கொண்டு சேர்த்திருக்கிறது. அந்த அளவிற்கு மிகுந்துள்ள காமத்தினைத் தலைவன் புரிந்து கொள்ளாமல் இருப்பது ஏன்? என்ற கேள்வியை தலைவி எழுப்புகிறாள். இப்பாடலிலும் வெறியாடல் இரண்டாம் நிலையினையே பெறுகின்றது. வெறியாட லினால் நேர்கின்ற துன்பம் பெரிதாகவில்லை. தான் கொண்ட காதலைத் தலைவன் புரிந்து கொள்ள வேண்டும் என்கிற ஆவலே மிகுதியாக உள்ளது.

இம்மூன்று பாடல்களிலும் வெறியாடல் என்கிற நிகழ்வு விரிவாகப் பதிவு செய்யப்பட்டிருப்பினும் அதன்வழி விரிவது காமக்கண்ணியாரின் உலகமாகவே இருக்கின்றது. அவ்வுலகத்தில் தனது காமம் குறித்த பெருமிதம் இருக்கின்றது. விளைவுகள் மீதான கோபம் இருக்கின்றது. தலைவன் மீதான ஐயமும் இருக்கின்றது. இந்த உணர்வுநிலைகளுக்கான களனாக வெறியாடல் அமைகின்றது. இந்தப் பின்புலத்திலேயே வெறியாடல் தொடர்பான பிற புலவர்களின் பாடல்களிலிருந்து காமக்கண்ணியார் தனித்துவத்துடன் வேறுபடுகின்றார். பல புலவர்கள் வெறியாடல் குறித்துப் பாடியிருப்பினும் இவருக்குச் சிறப்புப் பெயர் அளித்ததற்கான காரணம் புலப்படவில்லை. ஒருவேளை மிகுதியான பாடல்

களை இப்பொருண்மையில் இவர் பாடி அவை இன்று கிடைக்காமலிருக்கலாம் என்கிற வழக்கமான வாய் பாட்டு முடிவினையே மேற்கொள்ள வேண்டியுள்ளது.

நிறைவாக

-              சங்கப்பாடல்களில் சடங்குகள் கணிசமான இடத்தினைப் பெற்றுள்ளன. அவற்றுள் வெறி யாடல் அகம் சார்ந்த புனைவுகளில் முக்கிய இடத்தினைப் பெற்றுள்ளது.

-              பெரும்பாலான புலவர்கள் வெறியாடலை ஒரே மாதிரியான சடங்குகளோடு காட்சிப்படுத்தி யுள்ளனர். வெறியாடலின் பிரதானமாக வேலனும், மறியாட்டின் பலியும் இடம் பெற்றுள்ளது.

-              காமக்கண்ணியாரைத் தவிர்த்துப் பிற புலவர்கள் வெறியாடலினால் பெண்களுக்கு ஏற்படுகின்ற துன்பத்தையும் மன அழுத்தத் தையும் வெளிப் படுத்தியுள்ளனர். இதன் மூலம் அவர்கள் கொண்ட களவு வாழ்க்கையின் மீதான அச்சத்தை வலியுறுத்தி யுள்ளனர்.

-              தொல்காப்பியம் வெறியாடல் குறித்த சில பதிவுகளை மட்டுமே கொண்டிருக்கின்ற நிலையில் உரைகாரர்கள் சங்கச் சான்றுகளின் வழி வெறி யாடலை விளக்கியுள்ளனர். குறிப் பாக நச்சினார்க் கினியர் காமக்கண்ணியாரின் பாடல்களை வெறியாடலுக்குப் பொருத்தி உரை வரைந்துள்ளார்.

-              காமக்கண்ணியார் வெறியாடலைக் காட்சிப்படுத்து வதில் பிற புலவர்களிடமிருந்து பெரிதும் மாறுபட வில்லை. ஆனால் வெறி யாட்டின் வழி விரிகின்ற பெண்ணுலகத்தை நுண்ணிய அழகியலோடு அவர் காட்சிப் படுத்துகின்றார். இப்பின்புலத்தில் சங்கப் பாடல்களில் இடம்பெற்றுள்ள வெறியாடல் என்ற உள்ளடக்கம் உருமாற்றத்தைப் பெற்று இவர்தம் பாடல்களில் அழகியலோடு மிளிர்கின்றது.

துணைநின்ற நூல்கள்

-              1915, எட்டுத்தொகையுளன்றாகிய நற்றிணை, பின்னத்தூர் அ.நாராயணசாமிஐயர் அவர்கள் எழுதிய உரையுடன், சைவவித்தியா நூபாலனயந்திர சாலை, சென்னை.

-              1915, எட்டுத்தொகையுளன்றாகிய குறுந் தொகை மூலமும், திருக்கண்ணபுரத்தலத்தான் திருமாளிகைச் சௌரிப் பெருமாளரங்கன் இயற்றிய புத்துரையும், வித்தியா ரத்னாகர அச்சுக்கூடம், வேலூர்.

-              1903, எட்டுத்தொகையுள் மூன்றாவதாகிய ஐங்குறுநூறும் பழையவுரையும், சாமிநாதையர், உ.வே., (ப.ஆ.), வைஜயந்தி அச்சுக்கூடம், சென்னை.

-              1940, பாட்டும் தொகையும், வையாபுரிப் பிள்ளை, ச., (ப.ஆ.), பாரிநிலையம், சென்னை

-              2002, எட்டுத்தொகையுள் ஒன்றாகிய அகநானூறு, உரை கணேசையர், சிவலிங்க ராஜா, எஸ்., (ப.ஆ.), தலைக்குமி புத்தக சாலை, கலாசாலை வீதி, திருநெல்வேலி.

-              2007, தொல்காப்பியம், பொருளதிகாரம் - முதல்பாகம், கணேசையர் பதிப்பு, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை.