ஆசிரியர்களா, மக்களா, மாணவர்களா? இன்றைக்கு (அனைவரும் சொல்வதுபோல) கல்வித்தரம் குறைந் திருப்பதற்கு யார் காரணம்? ஆண்டுதோறும் திரும்பத் திரும்ப வரும் கலைத்திட்டம், ஆசிரியரை மையப் படுத்தும் விளக்கவுரை பயிற்றுமுறை, நினைவாற்றலை மட்டுமே சோதிக்கும் தேர்வுகள், பணம் பண்ணும் வழியாக பொறியியல் மருத்துவப் படிப்புகளைக் கருதி தங்கள் குழந்தைகளைப் புதை குழிகளுக்குள் தள்ளும் பெற்றோர்- இவர்கள் மத்தியில் அல்லலுறும் ஆசிரியர்கள்.

பணபலத்தையும், அதிகாரத்தையும், பதவிகளையும், திரைப்பட மினுமினுப்புகளையும் ஆராதிக்கும் சமுதாயம்!

இவையனைத்துமே காரணம் என்று பலர் எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள். என்ன பயன்? மேல் பூச்சான மாற்றங்களைத்தான் காண்கிறோம். அடக்குமுறைக் கல்வி,  நிறுவனமயமாக்கப்பட்ட சமுதாயத்தின் நிறுவன மாக்கப்பட்ட கல்விக் கூடங்கள்  எப்போது விடுதலை பெறும்?

இத்தகைய ஆதங்கங்களால் உந்தப்பட்ட கல்வி யாளர் பேராசிரியர் மாடசாமி தனது மனக்குமுறல்களை குழந்தைகளின் நூறு மொழிகள் என்ற நூலில் வெளிப் படுத்தியிருக்கிறார். பதினான்கு கட்டுரைகள் கொண்ட இத்தொகுப்பில், ஒரு கட்டுரையைத் தவிர அனைத்தும் வகுப்பறை தொடர்பானவை. ‘கொலையும் கொண் டாட்டமும்’ கட்டுரை நாட்டுப்புறத் பெண்தெய்வங் களின் ஆய்வில் புதிய செய்திகளைச் சொன்னாலும் அது இத்தொகுப்பில் ஒட்டவில்லை என்று தோன்றுகிறது.

‘அதிகாரம்’ என்னும் கருத்தியல் குடியேற்ற ஆதிக்க நீக்கம் ஏற்படும்போது அதிகமாகவே உணரப்படுகிறது. சுயமதிப்பின்மையும் அடிமைத்தனமும் தமிழரின் கூட்டு அடிமனத்தில் ஆழமாகப் பதிந்து விட்டது போலிருக்கிறது. அதுவே அதிகார ஆசையை வளர்க்கிறது. ஆட்சியாளர் முதல் அரசு அலுவலகப் பணியாளர் வரை அதிகாரத்திற்குப் பணிவதும், தமக்குக் கீழுள்ளோர்மேல் அதிகாரம் செலுத்துவதும் நமது வாழ்க்கை முறையாகிவிட்டது. கல்விக்கூடம் இதற்கு விலக்காக இருக்க முடியுமா?  முதல்வர்/தலைமை ஆசிரியர் அதிகாரம், துறைத் தலைவர் அதிகாரம், வகுப்பில் ஆசிரியர் அதிகாரம்! ஆனால் விடுதலை பெற்ற வகுப்புதான் பேராசிரியர் மாடசாமியின் கனவு.

ஆசிரியர் அதிகாரம் செலுத்தாத வகுப்பறை எப்படி இருக்கும்?

விடுதலைபெற்ற குழந்தைகள் என்ன செய்வார்கள்? அமெரிக்காவில் ரெக்கியோ எமிலியாவின் கோட் பாட்டைப் பின்பற்றும் ஒரு பள்ளியைப் பற்றி முதல் கட்டுரையில் ஆசிரியர் குறிப்பிடுகிறார். (அமெரிக் காவில் எல்லாப் பள்ளிகளும் இப்படி இருப்பதில்லை.) அங்கே விடுதலைச் சூழலில் குழந்தைகளிடம் பொங்கி வழியும் புதியன காணும் ஆர்வத்தையும், படைப் பாற்றலையும் உண்மையான கற்றலின் வெளிப்பாடாகக் காண்கிறார் ஆசிரியர்.

அதிகாரம் பயன்படுத்தப்படாத, விடுதலை பெற்ற வகுப்பறைகளில் குழந்தைகள் உரிமையோடு சுற்றி வருவார்கள். ஆடலும் பாடலும் கற்றலில் இனிமையின் அனுபவங்கள், அந்த வகுப்பறையில் மாணவர்களின் பேச்சொலி, சிரிப்பொலி இருக்கும், கலகலப்பு இருக்கும், கூச்சல் இருக்காது. ஒழுங்கமைவுள்ள குழப்பம் இருக்கும். அச்சம் இருக்காது துணிவு இருக்கும், மறுப்புச் சொல்லும் மனஉறுதியும் இருக்கும், இந்தக் கருத்துக்கள் பல இடங்களில் பேசப்படுகின்றன.

‘காந்தியின் வகுப்பறை’ என்ற கட்டுரை இரண்டு கருத்துக்களை முன்வைக்கிறது. முதலாவது, “தரம், ஒழுக்கம் என்ற அதிகாரப் பேச்சுக்கு, மாற்றாக ‘குழந்தை களின் சுதந்திரம், Òகுழந்தைகளின் கற்பனைத் திறன்” என்ற டால்ஸ்டாயின் இசைக்குரல்... இரண்டாவது உடல் உழைப்புடலான கல்வி, முதலாவது உரிமையை முன்னிறுத்துகிறது என்றால் இரண்டாவது சமத் துவத்தைக் கற்பிக்கிறது. உடலுழைப்பின் அருமை யினைக் கைத்தொழில் வகுப்புக்ளில் முன்னரெல்லாம் மாணவர்கள் அனுபவ வாயிலாகக் கற்பார்கள்., அது இப்போது காணாமல் போய்விட்டது என்று அங்கலாய்க் கிறார் ஆசிரியர்.

விடுதலை பெற்ற வகுப்பறையில் உரிமை இருக்கும், அங்கே அச்சுறுத்தலும், அச்சமும் இருக்க முடியாது. அச்சுறுத்தலும், அச்சமும் இருந்தால் சுதந்திரமான பயிற்று முறைகள் பயனற்றுப் போகும். இதை Òநாற்றம் அடிக்கும் வகுப்பறை” எடுத்துக்காட்டுகிறது.  நல்ல விவாதங்கள் உரிமைச் சூழலில்தான் நடைபெறும் என்பதை ஒரு நிகழ்வினைக் கொண்டு ஆசிரியர் விளக்குகிறார். “பயம் நாற்றத்துக்குக் காரணமாகிறது. எதிராகப் பாயும் விமர்சனங்களைப் பதற்றம் இல்லாமல் சந்திக்கும் பக்குவப்பட்ட ஆசிரியருடைய மணம் வகுப்பறையின் நறுமணத்துக்கு உத்திரவாதம் ஆகிறது.

வகுப்பறையில் மாணவனுக்குரிய இடத்தைத் தரவேண்டும் என்பது ஆசிரியரின் ஆழமான நம்பிக்கை. மாணவனுக்கு உரிமை கிடைக்கும்போது தான் அவனுக்குரிய இடம் கிடைத்ததாக ஆகும், இது கல்வியில் பெருத்த மாற்றம் ஏற்பட்டால்தான் சாத்தியமாகும். அதாவது விடுதலைக்கான, விடுதலை பெற்ற கல்வி  வேண்டும்? அது எது?

மாணவன் தானாக, தான் விரும்பியதை, தான் விரும்பியவாறு கற்க வாய்ப்பளிப்பது. ஆசிரியர்களையே சார்ந்து மாணவர் இருக்காத நிலை.

மாடசாமி சொல்கிறார்:

“கல்வி ஆசிரியரிடமிருந்து தொடங்குகிறது, மாணவரிடமிருந்து அல்ல.

மாணவர்களுக்கு கற்பிப்பதைவிட அவர்கள் தம்மைத்தாமே கண்டுபிடித்துக் கொள்ள உதவுவதுதான் ஆசிரியரின் முதன்மையான பணி.--”

“வகுப்பறையில் இடஒதுக்கீடு” என்ற கட்டுரையின் ஒரு பகுதியில் மாணவனுக்கு அளிக்கப்பட வேண்டிய உரிமையை இவ்வாறு வலியுறுத்துகிறார்.

அடுத்து, கல்வித் திட்டம், கற்பிக்கும் முறை ஆகியவற்றைப் பற்றிய கட்டுரைகள் நம்மைச் சிந்திக்க வைக்கின்றன. ஆத்திசூடியில் வரும் ‘இயல்வது கறவேல்’  என்றால் என்ன பொருள் என்று தெரியுமா? இந் நூலைப் படித்த பிறகு நானும் இந்தக் கேள்வியை ஆசிரியர் பயிற்சி அரங்குகளில் கேட்டேன். யாருக்கும் தெரிய வில்லை. Òஅலங்காரத் தமிழ்” என்ற கட்டுரை தமிழ் பாடத்திட்டத்தை மட்டும் குறிப்பிடுவதாக எடுத்துக் கொள்ளக் கூடாது. எல்லாப் பாடங்களுக்கும் பொருந்தும். ஒரு பாடத்தை, அல்லது ஒரு அலகை எதற்காகப் பாடத்திட்டத்தில், பாட நூலில் வைக் கிறார்கள்? அலங்காரத்திற்காகவா? கடினமான பகுதிகள் இருந்தால்தான் மதிப்பு என்பதற்காகவா?  எந்த நோக்கத் திற்காக வைக்கப்பட்டிருக்கிறது? ஆசிரியர் சொல்வது போல ‘மிரட்டும் தமிழ்’ ‘மிரட்டும் பாடத்திட்டம்’!

கற்பிக்கும் முறையில் விவாத முறை ஆசிரியரைக் கவர்ந்திருக்கிறது. பாலோ ஃபிரையரினுடைய பயிற்று முறை வினாவிடை வழியாகக் கற்பித்தல், அது சாக்ரட்டீசின் வழி. அதோடு குழுஆய்வு முறை சேரும் போது வகுப்பறைப் பரிமாற்றம் பயனுள்ளதாக இருக்கும். இப்போது அதிகமாகப் பேசப்படும் கூட்டுறவுக் கற்றல் முறையில் (Co-operative Learning) குழு ஆய்வு ஒரு பகுதியாகவே இருக்கிறது.

Òவிவாதமும் கற்பனையும்,” Òவகுப்பறைக்குப் பொருத்தமான பாலோ ஃபிரையர் கல்விமுறை” ஆகிய கட்டுரைகள் இதனை விளக்குகின்றன.

வகுப்பறையில் மாற்றம் வேண்டும், ஆசிரியர்கள் மாறவேண்டும் என்பது தான் பேராசிரியரின் முதன்மையான விவாதப் பொருள். குழந்தைகளை விலங்குகளாக கருதும் மனப் போக்கு மாறவேண்டும்: (கல்வியும் கலாச்சாரமும்); பயமில்லாத பள்ளிக்கூடம் வேண்டும் (இணைக்கவா, விலகவா?).

கல்வித்திட்டத்தில் ஹார்வர்டு கார்டனர் சொல் கின்ற பத்து நுண்திறன்களில் விருப்பமானவற்றை, தனக்கு இயல்பாற்றல் இருக்கின்றவற்றை மாணவர் தேர்ந்து கொள்ளும் உரிமை வேண்டும் (குழந்தைகளின் நூறு மொழிகள்) என்ற ஆழமான, புதுமையான கருத்துக்கள் இந்நூலில் இடம்பெற்றிருக்கின்றன. ஒவ்வொன்றுமே ஒரு நூலாக வளரத்தகுந்தவை.

பேராசிரியருடைய கல்லூரி அனுபவங்களோடு அறிவொளி இயக்கத்தில் ஈடுபட்ட நேரடிக் கள ஆய்வுகளின் விளைவுகளும் சேர்ந்து, கல்வி பற்றிய அவருடைய கருத்துக்களுக்கு உரம் சேர்க்கின்றன. மேலும் ஹார்வர்டு கார்டனர், பியாஜே, பாலோ ஃபிரையர், ஹோல்ட் போன்ற உளவியல் கல்வியாளர்களின் தாக்கம் அவருடைய கருத்துக்களுக்கு வலு வூட்டுகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக ஆசிரியருக்குக் குழந்தைகள் மீதான கரிசனை, கல்வியின்பாலுள்ள அக்கறை, ஆசிரியருடைய மனிதாபிமானம் ஆகியவை நூலெங்கும் விரவிக் காணப்படுகின்றன. எளிய இனிய தமிழில் எழுதப்பட்டிருக்கும் இந்நூலைக் கல்வி யாளர்கள் மட்டுமின்றி அனைவரும் வாசித்துக் பயன்பெறவேண்டும்.

குழந்தைகளின் நூறு மொழிகள்

ஆசிரியர் : ச.மாடசாமி

வெளியீடு: புக்ஸ் ஃபார் சில்ரன்

7, இளங்கோ சாலை,

தேனாம்பேட்டை, சென்னை - 600 018

விலை: ` 80/-