அரிது அரிது மானிடராய் பிறப்பது அரிது என்கிறார் ஒளவையார். அதனினும் அரிது மானிடராய் வாழ்வது. பறவை பறவையாக வாழ, விலங்கு விலங்குகளாகவே வாழ. எவரும் கற்பிப்பதில்லை ஆனால், மனிதன் மனிதனாக வாழ, காலங்காலமாக கற்பிக்கப் பட்டுக்கொண்டே இருக்கின்றன, புராணங்கள், இதிகாசங்கள் காப்பியங்கள் வழியாக.

tree on stoneசமுதாயம் எப்போதுமே / பழமைப் பற்றுதலுடையதாக / மாறுதல் விரும்பாததாக இருந்து வருகிறது / நிர்பந்திக்கப்பட்டாலொழிய / அது மாறுவதில்லை - என்கிறார் டாக்டர். அம்பேத்கர்

எந்தவொரு அடையாளமின்றிப் பிறந்த மானிடப் பிறவி சாதியாலும், மதத்தாலும், கட்டுண்டு, பசிப் பிணியில் சிக்கி வறுமையில் வதங்கி குடும்ப உறவுகளில் சிதறுண்டு அன்பின்றி, மனிதமின்றி, நம்பிக்கையின்றி, கருணையின்றி கால வெள்ளத்தில் கரையதுங்குகிறது. சமூகத்தில் புறக்கணிக்கப்படும் அவன் வாழ்வு கேள்விக்குறியாய் நீள்கிறது.

இந்த ஒரேயரு வாழ்வை மேம்படுத்தும் விதமாகத்தான் புதினங்கள், சிறுகதைகள், கட்டுரைகள் மற்றும் கவிதைகள் படைக்கப்பட்டு வருகின்றன. இவ்வகைப்பாடுகளில் மானுட மேம்பாட்டில் இன்றைய கவிதைகளைக் காணலாம்.

‘மனிதனுக்கு மேலொரு தெய்வமும் இல்லை - இந்த மானுடம் / போலொரு மெய்மையும் இல்லை / மனிதன் இயற்கையின் எதிரொளிச் சின்னம் உழைப்பு / மனம் இல்லையேல் அவன் விலங்காண்டி இன்னும்”

என்ற பாடலை உலோகாயதத் சித்தர் பாடல் மனம்தான் விலங்கின்றி நம்மைப் பிரித்துக்காட்டுகிறது என்கிறது.

மானுடம் - மானிடம்

மானுடம் மானிடவியல் எனும் அறிவுத்துறை மனித இனம் அதன் பண்பாடு, சமூகங்களின் அமைப்புகள், பழக்கவழக்கங்கள், நம்பிக்கைகள், உறவுமுறைகள், மொழிக்கூறுபாடுகள் ஆகியவற்றை யெல்லாம் கணக்கிலெடுத்துக்கொண்டு முழுமனிதனை அடையாளங் காண முயல்வது மானுடவியலின் நோக்கம் ஆகும்.

மனித சமுதாயம் பழங்குடி அமைப்பிலிருந்து அரசுடைமை சமுதாயமாக மாற்றமடைந்தபோது ஆதி மனித உணர்வு சமூக அழுத்தங்களுக்கும், நெருக்கடி களுக்கும் உட்பட்டது. இந்த அழுத்தங்கள் பல்வேறு மனநோய்களாக வெளிப்பட்டுக்கொண்டிருக்கின்றன.

உழைப்பின் பாத்திரம்

“கையின் வளர்ச்சியோடு, உழைப்புடன் இயற் கையின் மீது ஆளுகை கொள்வது தொடங்கியது. ஒவ்வொரு புதிய முன்னேற்றத்தோடும் மனிதனுடைய அறிவு எல்லை விரிவாகி வந்தது. இயற்கைப் பொருட் களின் அதுவரை அறியப்படாமல் இருந்த புதிய பண்புகளைத் தொடர்ந்தாற்போல அவன் கண்டு பிடித்துக் கொண்டிருந்தான். மற்றொரு புறம், பரஸ்பர ஆதரவு, கூட்டுச்செயல் என்பதற்கான வழக்குகளைப் பெருக்கியும் ஒவ்வொரு தனிநபருக்கும் இவ்வித கூட்டுச் செயலின் நல்லாதாயத்தைத் தெளிவுபடுத்தியும் சமூக உறுப்பினர்களில் நெருங்கக் கூடிவர உழைப்பின் வளர்ச்சி அவசியமாகவே உதவி புரிந்தது” என்கிறார் எங்கெல்ஸ்.

“ஒரு மூட்டை தானியத்தை / சுமந்து போகிறது எறும்பு / பசியுடன் பார்க்கிறான் ஒருவன்”

சோம்பியிருந்தால் கிடைப்பதற்கு ஒன்றும் இல்லை உழைத்தால் நிரம்ப இருக்கின்றன. பெறுவதற்கு வாழ்வுச் சுவையை அனுபவிக்க வியர்வை உப்பு நிறைய கொட்ட வேண்டியிருக்கிறது.

“உதடு பூக்காமலே இங்கு கைகள் காய்த்து விடுவது உண்மைதான்.” ஆனால் ஒருபோதும் உழைப்பு நம்மை ஏமாற்றாது.

நாளெல்லாம் உழைக்கின்றோம். / தேகத்தில் வியர்வை விழிகளில் செந்நீர் / வயிற்றுலே பசி வாழ்வில் வெறுமை / வேறென்ன கிடைக்கிறது / பாட்டாளிக்கு?

- கு.சின்னப்பன்

என்கிற விரக்தியான இக்கவிதை மூலம் உழைப்பு எனும் மானுடம் பேணப்படுகிறது.

முன்பு வயலில் களைபறிக்கும் போது / வரப்பில் கைகட்டி நிற்பர் / இன்று கண்காணிப்பு காமிராவில் கண்களை நட்டுவைக்கின்றனர். /

அஃறிணையிலிருந்து உயர்திணையாக பிரித்துக் காட்டுவது மனமும், உழைப்பும்தான்.

மனிதம் என்பது மனிதனிடமிருந்து வெகு தொலைவு போய்விட்டது. தொடர்பு எல்லைக்கும் அப்பால் என்பார்களே, அதுபோல் கடிதத்தோடு தொலைந்து போனது. நலம், நலமறிய ஆவல் என்ற சொற்கள்.

ஒருவர் தொலைபேசியில் தொடர்புகொண்டு வெளிநாட்டு நிறுவனத்தில் வேலை செய்யும் நண்பனிடம் “நலமா இருக்கிறியா?” என்று கேட்ட போது “ஏறக்குறைய இரண்டு மாதங்களுக்குப்பிறகு நன்றாக இருக்கிறியா என்று கேட்ட முதல் மனிதன் நீ தான்?” என்று மகிழ்ச்சியோடு சொன்னாராம்.

முதியோர் இல்லம் ஒன்றின் வாசகம், “குஞ்சுகள் மிதித்து முடமான கோழிகள் இங்கே!” மனிதம் இப்படி மடிந்துகொண்டிருப்பதை கல்யான்ஜி கவிதை ஒன்று மீட்டுருவாக்கம் செய்கிறது.

சைக்கிளில் வந்த / தக்காளி கூடை சரிந்து / முக்கால் சிவப்பால் உருண்டன / அனைத்துத் திசைகளில் பழங்கள் /             தலைக்குமேலே வேலை இருப்பதாய் / கடந்தும் நடந்தும் அனைவரும் போயினர் / பழங்களை விடவும் நசுங்கிப்போனது /       அடுத்த மனிதர்கள் மீதான அக்கறை

- கல்யான்ஜி

நம்முன் வாழும் மனிதம் துயரடையும் போது நாம் அது நசுங்கிப்போவதை வேடிக்கைப் பார்ப்பவர்களாக நிற்கிறோம். இந்த மனிதம் அடுத்தடுத்தது நசுங்கும் போது நாம் என்ன செய்யப்போகிறோம் என்ற கேள்வியையும் இக்கவிதை முன்வைத்துள்ளது.

“யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்கிறோம், நாம் ஊர்க்கார்களையே நீ யார்? என்கிறோம். இங்கே தீதும் நன்றும் பிறரால் வருகிறது.

பழங்களை விடவும் நசுங்கிப்போனது என்று சொல்லியது, பிறர் மீது எந்தளவு நம்பிக்கை வைக்கப் படுகிறது என்பதையும் கேள்விக்குட்படுத்துகிறது.

பொதுவாக விழாக்களை நாம் கொண்டாடு வதற்காக சொல்கிறோம். உண்மையில் விழாக்கள் தான நம்மைக் கொண்டாடிக் கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு பண்டிகையையும் கடன் வாங்கியே கொண்டாட வேண்டியிருக்கிறது.

விழாக்கள் மூலம் நாம் மனிதத்தை புதுப்பித்துக் கொண்டே இருக்கிறோம். பொருளாதார சூழ்நிலை காரணமாக குடும்பங்களைப் பிரிந்து வெளியூரில் வசிக்கும் உறவுகள் இந்தச் சமயத்தில்தான் ஊர் திரும்ப வாய்ப்பிருக்கும்.

வெளியூரில் மற்றும் வெளிநாடுகளிலிருந்து தந்தை பணமாக மட்டுமே வருகிறார். பணத்தை மட்டுமே வைத்து உறவுகளை வலுப்படுத்த முயல்கிறோம்.

“பணம் சம்பாதிக்கத்தான் அப்பா வெளிநாட்டில் வேலைசெய்கிறார்” என்று குழந்தைகளிடம் கூறுகிறோம்.

திருவிழா

மழையில் குளித்த / மாமரம் / சற்றே தாழ்ந்து / முருங்கைக்கிளை மீது வடிக்கிறது / துளிபாரம் தாளாத / இலைகள் / தங்கையென நின்றிருக்கும் / பப்பாளி இலைகளில் / சொரிகிறது / தொடங்கிவிட்டது / உங்கள் பண்டிகை

- சங்கர ராம சுப்ரமணியன்

பிரியத்தை, அன்பை, மனிதத்தை எளிமையாக பந்தி வைக்கும் எளிமையான அமர்த்தியான கவிதை இது. உணவை ஊட்டுவது என்பது வேறு; பந்தி வைப்பது என்பது மற்றொன்று.

பூசை லயிக்கவில்லை / போஜனம் ருசிக்கவில்லை / இனிப்பு ஏறியும் / இன்சுலின் போட இஷ்டமில்லை / இலவசமாய்க் கிடைத்த / புதுப்புடவை கூடப் பூரிப்பைத் தரவில்லை / வருடத்திற்கு ஒரு முறையேனும் / வந்து போகும் மகன் வராததால்.

- செ.சீனிவாசன்

யுகபாரதி ஒரு கவிதையில் சொல்லுவார்

கொண்டாடுவதற்கென்று / தோற்றுவித்த பண்டிகைகள் / சந்திப்பதற்கென்றாகிப் போனது / ஊரில் வாழும் அம்மாக்களுக்கு.

வெவ்வேறு பாடுபொருட்களைக் கொண்டு மனித மாண்பை இம்மியளவேனும் உயர்த்த வேண்டு மென்பதில் தற்காலக் கவிஞர்கள் முயல்கிறார்கள்.

புல்லாங்குழல் வாசித்தேன் / இரத்தம் கசிந்தது / ஈழத்து மூங்கில்

- நீதி தாசன்

இக்கவிதை சொந்தவீடு, சொந்த ஊர், சொந்த நாடு பிரச்சினைகளைத் தாண்டி யோசிக்க வைக்கிறது.

உயிர் இரக்கத்தையும் மீறி இன அழிப்பைக் புல்லாங்குழலுக்குள் நிறைத்து, செவிகளில் பாய்ச்சு கிறது. நம் உள்ளம் கனக்கச் செய்தாலும் பிடித்த பாடல் ஒலிக்கும் தருணம் ஒலி அளவைக் கூட்டி மூழ்கி விடுகிறோம். இசை வெள்ளத்தில் நம் மேதையான பல செயல்களுக்கு பின்னால் துயருரும் மனிதத்தின் குரலை ஊமைக்கவிடுகிறாம்.

என் நூற்றாண்டு

துணியில் வாயைப் பொத்தி அழுதபடி / ஒரு பெண் சாலையில் நடந்து போகிறாள் / என் பஸ் நகர்ந்து விட்டது / தண்டவாளத்தில் ஒரு இளைஞன் அடிபட்டு / தண்ணீர் தண்ணீர் என்று / கையசைத்துக் கொண்டிருக்கிறான் / என் டிரெயின் நகர்ந்துவிட்டது / எவ்வளவு நேரம் தான் நான் இல்லாமல் இருப்பது / எவ்வளவு முடியுமோ அவ்வளவு நேரம் / இருபத்தொன்றாம் நூற்றாண்டு எவ்வளவு நேரமோ.. / அவ்வளவு நேரம்

- தேவதச்சன்

சாதியும், மதமுமம்

இந்த ஜனநாயகம் எனும் தேர் உருள சாதியும், மதமும் இரண்டு சக்கரங்களாக இருக்கிறது. அச் சக்கரத்தின் அடியில் காலம் காலமாக நசுங்கிக் கொண்டே இருக்கிறது மானுடம்.

இப்போதெல்லாம் / யானைகளுக்கு மதம் பிடிப்பதில்லையாம் / மனிதர்களுக்கு மதம் பிடித்திருப்பதால் / எங்கு பார்த்தாலும் வன்முறை என்று / கோயிலுக்குச் சென்றேன் / ஆயுதத்தோடு தெய்வம்

இதுபோன்ற கவிதைகள் சாதி மதத்திலிருந்து மானுடத்தை சிந்திக்க வைக்கிறது.

கவிஞர்.மு.மேத்தா மானுடத்தை வழக்கு சொல்லாடலில் சிந்திக்க வைக்கிறார்

இந்துவே திரண்டு வா என்றோ / கிருஸ்தவனே

கிளம்பி வா என்றோ / இஸ்லாமியனே எழுந்து வா என்றோ / எழுப்பாதீர்கள் முழுக்கம் / மனிதனே இணைந்து வா! என்று முழங்கி / மானுடத்தை இனியேனும் / மகத்துவப்படுத்துங்கள்

என்கிறார்

மாற்றம் என்பது எப்படி நிகழவேண்டும், எங்கே இருந்து தொடங்க வேண்டும் என்றும் கீழ்க்கண்டவாறு கற்பிக்கிறது கவிதை ஒன்று

பொய்க்குதிரை / அய்யனார் குதிரையைப் பார்த்து / பயந்த குழந்தையிடம் / அது ஒன்றும் செய்யாது / பொய்க்குதிரை / தொட்டுப்பார் என்று / பல வகையில் மெய்ப்பித்த தந்தை / அய்யனாரும் ஒன்றும் செய்யாது / என்பதையும் சொல்லியிருக்காலம்

- பூர்ணா

மாற்றங்கள்

பிரகாரம் /        நுழைந்தவுடன் / கனியாகி விடுகிறது /எலுமிச்சை / தீர்த்தமாகி விடுகிறது தண்ணீர் / பிரசாதமாகி விடுகிறது / திருநீறும் பொட்டும் / எந்த மாற்றமுமின்றி / வெளியேறுகிறான் பக்தன்

- புன்னகை சேது

பக்தனாய் மாறுவதில் குறியாய் இருக்கும் மனிதன் எப்போது மனிதனாக மாறப்போகிறான் என்ற வினா. இங்கே தொக்கி நிற்கிறது. தமிழ்க் குலத்தின் பழம் பெருமையையும் இன்றைய நிலையையும் கருதி மனம் நொந்த பாரதி

“விதியே தமிழ்ச் சாதியை என்செய நினைத்தாய்”

என்று கேட்டார்

“கேளடா மானிடா இங்குக் கீழோர் மேலோர் இல்லை”

என்றார்.

இருக்கத்தான் செய்கிறது கீழ்த்தட்டு, மேல்தட்டு, இரட்டைக் குவளை முறை. மறந்து குவளைப்பூக்கள் ரசிக்கும் மானுடமாக மாறப்போகிறோம்.

சமூகம்

நெல்மூக்கு அளவேனும் இச்சமூகத்தை உயர்த்த வேண்டும் என்ற அயரா முயற்சியில் சமூகம் சார்ந்து கவிதை படைக்கப்பட்டுக்கொண்டே இருக்கின்றன. சக மனிதனுக்கு சமூகத்தின் மீது இருக்கும் அதிகப்படியான கோபம் இங்குக் கவிதைகளாக முளைக்கின்றன. நிலம் சார்ந்த எழுத்துகளும், பொருளாதார நெருக்கடி சார்ந்த எழுத்துகளும் நம் போராட்டங்கள் கணுக்களை துருப்பிடிக்காமல் பாதுகாக்கின்றன. தற்சமயம் குறிஞ்சி நகராகவும் முல்லை நகராகவும் மாறிவிட்ட தன்நிலம் கண்ணெதிரே களவாடப்பட்டதை கவிஞர் ஸ்ரீதர் பாரதி சொல்கிறரர்

வித்திட்டோம் / பயனில்லை / வித்துட்டோம்

இங்கே நிலம் மட்டும் விற்கப்படவில்லை; ஆதிகுடிகள் விற்கப்பட்டிருக்கிறது.

பணியின் நிமித்தமாக கணவன் மனைவிக்குள் நிகழும் பரஸ்பரம் செல்லிடைப் பேசி வழியாகவே காற்றில் பறந்துகொண்டிருக்கிறது.

சாணிப்பால் முற்றத்தில் / நிலாக்காயும் இராவெளியில் உன்னோடு / கவிதை பேச ஆசை ஆனால் / பகலெல்லாம் / பாரவண்டி இழுத்த களைப்பில் / நானும் / தீப்பெட்டி

ஆபீசில் / தீயாய் பறந்த களைப்பில் / நீயும் கண்ணயர்ந்து உறங்குகையில் / கவிதையாவது? கழுதையாவது?

- கண்மணிராசா

உணர்வுப் பொருள் நுகர்வுப் பொருளாக மாற்றப்பட்டு நம் முன்னே வாழ்ந்தே தொலைக்க வேண்டிய கட்டாயமும் இங்கு உண்டு.

இப்பிரபஞ்சம் புவி அரசியல், பண்பாட்டு ரீதியாக மேற்கு, கிழக்கு என்ற இருபெரும் பிரிவினைக்கு உட் பட்டிருக்கிறது. மேற்கு என்பதில் ஐரோப்பா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா போன்ற கண்டங்கள் உள்ளடங்குகின்றன. இதில் மேற்கு என்பதற்கு ஐரோப்பா என்பதாகவே பெரும்பாலும் இன்று பொருள் கொள்ளப்படுகிறது. புவியியல், பண்பாடு, அரசியல், மதம், அறம் ஆகிய கூறுகளின் தொகுப்பாகும். மேற்கின் அரசியல் வரலாற்றுக்கூறு என்று நீண்டகால ஆதிக்கம், அதிகாரம், வன்செயல், கலாச்சாரப் பறிப்பு இவற்றோடு இணைந்திருக்கிறது.

கவிஞர் இசையின் “மலர்கள்” என்ற கவிதை மேற்கு கலாச்சாரங்கள் தம் மீது திணிக்கப்பட்டுள்ளது, அது நம் ஆதி நிலங்களை நம் தலைமுறைகளைக்கொண்டு அழிக்கிறது என்பதை இக் கவிதை மூலம் சுட்டுகிறார்.

துருவேறிய சைக்கிளில் / மேற்கிலிருந்து கிழக்காக வந்தார் / ஆஸ்துமா பிடித்த ஒரு கிழவர் / புதுயுகத்தில் ஊர்தியில் / புத்திளைஞனொருவன் / கிழக்கிலிருந்து மேற்காகப் போனான் / தவறி விழும் மூச்சுக்களை /அள்ளிப்பிடித்தபடியே / தூக்கிக் கொண்டிருக்கும் சைடு ஸ்டேண்டுக்கு / சைகை செய்தார் கிழவர் / அப்போது / அவர் தலைக்கு மேல் நின்றிருந்த மஞ்சரளி / செடிக்கு / ஒரு குடம் நீர் வார்க்கப்பட்டது / அப்போதே ஒரு பூவும் பூத்தது / அந்த சைடு ஸ்டேண்ட் மலருக்கு / சாட்சி மலர் நான்.

காதலின் சின்னமாக தாஜ்மஹாலைப் போற்றி வருகின்றனர். ஆனால், போற்ற வேண்டியது எது என்பதை கபிலன் கவிதை சுட்டுகிறது.

நாடு சுடுகாடாய் / இருப்பதால் / உலக அதிசயமாய் /ஒரு கல்லறை

சமூகத்தின் சாறு இந்த எழுத்துக் கோப்பைக்குள் பிழிந்து ஊற்றப்பட்டிருக்கிறது.

கை சுதந்திரம் பெற்றுவிட்டது என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். நம் விரல் அடிமையாய் இருப்பதை உணராமல்.

பெண்ணியம்

பொட்டப்புள்ளையா என்றார்கள் / வெகு சாதாரணமாக / தேவதை பிறந்திருப்பதை

இந்த கவிதையும் பெண்ணியம் வேருக்கு நீர் வார்க்கும்

“வரலாற்றில் எல்லா இடங்களிலும் பெண்கள் தமது குழந்தைகளைப் பராமரித்தனர். கால்நடைகளில் பால் கறந்தனர், வயல்களில் உழவு வேலை செய்தனர், துணிகளை வெளுத்தனர், ரொட்டி சுட்டனர், வீட்டைச் சுத்தம் செய்தனர், துணிகளைத் தைத்தனர், நோயுற்றவர் களைப் பராமரித்தனர், மரணப் படுக்கையிலிருந்தவர் களின் அருகில் அமர்ந்து கண்ணீர் வடித்தனர், இறந்தவர் களைப் புதைத்தனர், பெண்ணின் இந்த அரும்பணிகள் இன்றும் உலகில் தொடர்ந்து கொண்டேதான் இருக்கின்றன”.

வலி

ஓங்கி ஒலிக்கும் / கெட்டி மேளத்தில் / அமுங்கிப் போகிறது / யாரோ ஒருவனின் / விசும்பல் சத்தம் எப்போதும்

- வித்யாஷங்கர்

மனம் சார்ந்ததாக இருந்த திருமணம் இப்போது பணம் சார்ந்ததாக மாறிற்று. சில மனங்கள் பொருளீட்டும் வியாபாரமாக இருக்கிறது என்பதை கவிதை எடுத்தியம்புகிறது.

வலியின் ஒலி / வாழ்ந்து கெட்டவனின் / பரம்பரை வீட்டை / விலை முடிக்கும்போது / உற்றுக்கேள் /கொல்லையில் / சன்னமாக எழும் / பெண்களின் விசும்பலை

- மகுடேசுவரன்

இப்பிரபஞ்சத்தில் எத்தனையோ ஆயுதம் இருப் பினும் பெண்களின் கண்ணீர் ஆயுதத்தைக் காட்டிலும் கூர்மையானது எதுவுமில்லை, விசும்பல் என்ற ஒற்றைச் சொல்லில் வரலாறு எழுதப்பட்டிருக்கிறது.

ஈரமாய் பசைத்தடவி / இழுத்து / எட்டாய் மடித்து / ஒட்டினாள் என் தங்கை / தீப்பெட்டியையும் / அவள் ஆசைகளையும்

- கண்மணிராசா

வெறுமனே கழிவிரக்கம் இல்லை இது. அநீதிக்கு முன் நீட்டப்படும் துண்டு அறிக்கை.

புலியை முறத்தால் / அடித்தாள் / அது சாதனையல்ல / பெண் இயல்பு

- தமிழ்ப்பித்தன்

ஒரு வட்டம் போட்டு அதைத் தாண்ட விடாமல் பாதுகாக்கப்படுகிறாள் பெண்

 இப்படித்தான் நடக்கவேண்டும், இப்படித்தான் பேசவேண்டும், இப்படித்தான் ஆடை உடுத்த வேண்டும், இன்னும் இப்படித்தான் கற்பிக்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றனர்.

பெண் இயல்பு என்பது முடமாகி ஒரு போலியான வாழ்வை வாழ நிர்ப்பந்திக்கப்படுகிறாள்.

சின்னக்கா

ஷாம்பு வாங்கிய ரெண்டு ரூபாயைக் கணக்கெழுதி / ரவிக்கை கிழிய அண்ணன் சட்டையை எடுத்துடுத்தி / தம்பி கழுத்தை இறுக்கிக் கட்டி / தெருவைச் சுற்றி / கருக்கலில் அப்பா எழுப்பி, பாடம் படிச்சு / ராப்பகலா அக்கா கூட வேலை செஞ்சு / அம்மாவுக்கு நெஞ்சுவலி என்றதும் / மூணுமணி பஸ்ஸில் வந்த சின்னக்கா / திரும்பிக்கூட பாக்காம / அஞ்சுமணி பஸ்ஸ§க்கு ஓடுது - லேட்டாப் போனா / மாமா திட்டுவாருன்னு

- பச்சோந்தி

இந்தக் கவிதைக்கு விளக்கம் தேவை இல்லை. திருமணமான ஒவ்வொரு பெண்ணும் அனுபவித்த ஒன்று, அனுபவிக்கும் ஒன்றும் கூட...

ஆதியிலிருந்தே மானுடம் நசுக்கப்பட்டுக் கொண்டும் ஒடுக்கப்பட்டுக்கொண்டும், சிதைக்கப் பட்டுக்கொண்டும் இருக்கின்றன. அகவியலாகவும், புறவியலாகவும் இச்சமூகத்தில் அவனை உயர்த்திப் பிடிக்கும் கொலுகொம்பாக இலக்கியங்கள் துணை புரிகின்றன. அவ்வகையில் கவிதை முக்கியத்துவம் வாய்ந்ததாக விளங்குகிறது.

இரண்டு வரிகளில் ஒரு வாழ்வை, ஒரு வரலாறை சொல்லிவிடுகிறது.

சமூக அவலங்களை வாழ்வியல் பிரச்சினைகளை அவதானித்து கருப்பொருளாக்கி எழும் படைப்பு மட்டுமே மானுட மேம்பாட்டுக்கான கவிதையாகி விடாது. அப்பிரச்சினைக்கான தீர்வும் அதற்குள் இருக்க வேண்டும். இன்றைய கவிதை உலகில் காத்திரமான படைப்புகள் நிரம்ப வந்தவண்ணம் உள்ளன.

நேர்மறை எண்ணங்கள் தான் எப்போதும் நம்மை முன்னுக்கு அழைத்துச் செல்லுகின்றன, நின்று நிதானித்து பேசக்கூட அவகாசம் இல்லாமல் அவசர உலகத்தில் ஓடிக்கொண்டிருக்கும் நம்மை சிந்திக்கத்தான் வைக்கிறது, கடலை வாங்கித் தின்னும் துண்டுக் காகிதத்தில் இருக்கும் நான்கு வரி கவிதையும்.

பார்வை நூல்கள்

1.            பாரதியார் கவிதைகள் - பாரதியார்

2.            கீழைச் சிந்தனையாளர்கள் ஓர் அறிமுகம் - எச். பீர்முஹம்மது

3.            தடங்கலுக்கு மகிழ்கிறோம் - தினகரன்

4.            பெண் என்ன செய்தாள் - ரோஸலிண்ட் மைல்ஸ்

5.            உழைப்பின் பாத்திரம் - எங்கெல்ஸ்

6.            இலக்கிய மானிடவியல் - பக்தவத்சல பாரதி

7.            கற்றற்ற கவிதை அத்துமீறும் பயணம் - இரா.காமராசு

8.            லெட்சுமி குட்டி - கண்மணிராசா

9.            முத்திரைக் கவிதைகள் - விகடன்

10.          சொல்வனம் - விகடன்

11.          இலக்கியக் கதிர் - பொ.மா.பழனிச்சாமி

12.          தமிழ் இலக்கியத்தில் மதமும் மானுடமும் - கார்த்திகேசு சிவத்தம்பி

13.          கொஞ்சோண்டு - தமிழ்ப்பித்தன்

14.          மனித சாரம் - ஜார்ஜ் தாம்ஸன்

15.          இரவென்னும் நல்லாள் - பூர்ணா

17.          பஞ்சாரம் - யுகபாரதி

18.          செவ்வந்திகளை அன்பளிப்பவன் - ஸ்ரீதர் பாரதி