தமிழில் ஒரு குறிப்பிட்ட காலப் பரப்பில் சிற்றிலக்கிய நூல்கள் பல வெளிவந்தன. தமிழ் இலக்கிய உருவாக்க மரபில் ‘சிற்றிலக்கிய காலம்’ என்றே ஒரு காலப் பகுதியை அழைக்கும் வழக்கம் உருவானது. சிற்றிலக்கிய வகையுள் தூது இலக்கிய நூல்கள் பல உண்டு. உயர்திணை, அஃறிணை எனும் இருதிணைப் பொருட்களையும் தூதுக்குரியதாகக் கொண்டு தூது இலக்கியம் பாடப்பட்டது. திட்டமிட்ட யாப்பு அமைப்பு, பாடுபொருள் என வரையறுத்த விதிகளைக் கொண்டு தூது நூல்கள் எழுதப்பட்டன. நாம் அறிந்துள்ள சிற்றிலக்கிய காலப்பகுதிக்கு முன்னரே பழங்காலத்துப் புலவரொருவர் நாரையிடம் தூது சொல்லும் அமைப்பில் பாடலொன்றைப் பாடியளித் திருக்கிறார். அது

kaadiநாராய் நாராய், செங்கால் நாராய்

பழம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன

பவளக் கூர்வாய்ச் செங்கால் நாராய்,

நீயும்உன் மனைவியும் தென்திசைக் குமரியாடி

வடதிசைக்கு ஏகுவீ ராயின்

எம்ஊர் சத்திமுத்த வாவியுள் தங்கி

நனைசுவர்க் கூரைக் கனைகுரல் பல்லி

பாடுபார்த் திருக்கும்எம் மனைவியைக் கண்டு

எங்கோன் மாறன் வழுதி கூடலில்

ஆடையின்றி வாடையின் மெலிந்து

கையது கொண்டு மெய்யது பொத்திக்

காலது கொண்டு மேலது தழீஇப்

பேழையுள் இருக்கும் பாம்பென உயிர்க்கும்

ஏழை யாளனைக் கண்டெனம் எனுமே.

என்பதாகும்.

சங்கப் பாடல் தொகுப்பில் இடம்பெறாமல் தனிப்பாடல் தொகுப்பில் உள்ள இப்பாடல், வானில் பறந்து செல்லும் நாரையைப் பார்த்து விளித்துத் தன் குடும்ப வறுமையை எடுத்துக்கூறும் வகையில் சத்தி முத்தப் புலவர் என்பார் பாடியதாகும். புலவன் வறுமை நிலையை எதார்த்தமாகச் சித்திரிக்கும் இப்பாடலைப் பின்புலமாகக் கொண்டு பாரதிதாசன் ‘சத்திமுத்தப் புலவர்’ எனும் கற்பனை நாடகம் ஒன்றை இயற்றி யிருக்கிறார். தமிழ்ப் புலவனின் வறுமை நிலை பாரதிதாசன் கற்பனையில் ஆழ்ந்த சோகநிலையில் புனையப்பட்டிருக்கும். இந்நாடகத்தில், ஒரு காலைப் பொழுதில் தமது வீட்டில் சத்திமுத்தப் புலவரும் மனைவியும் உரையாடிக்கொள்வதாகக் கீழ்வரும் ஒரு காட்சி வருகின்றது.

மனைவி:எதைக் கொண்டு அரிசி வாங்குகின்றது

      அடுப்பில் பூனை   தூங்குகின்றது

      பெரிய பையன் கண்ணில் நீர்    தேங்குகின்றது

      கைப்பிள்ளை பாலுக்கு    ஏங்குகின்றது

      சொன்னால் உங்கள் முகம் சோங்குகின்றது

      எப்படிச் சாவைத்   தாங்குகின்றது

      இப்படியா உங்கள் தமிழ்  ஓங்குகின்றது

புலவர்:என் தந்தை தாய் தேடிவைத்த  

      பொருள்     கோடி

      பசியால்     வாடி

      என்னை     நாடி

      என்மேல் பாடிப் புகழ்ந்த

      புலவர்க்கு அள்ளிக் கொடுத்தேன் ஓடிஓடி

      இன்று பசிக்குப்பருக உண்டா

      ஒருதுளி புளித்த    காடி?

      நினைத்தால் தளர்கின்றது என்   நாடி

இரண்டாயிரம் ஆண்டுகால தமிழ் இலக்கிய உருவாக்க மரபில் இயைபுத் தொடையின் செழுமை நிலையைப் பாரதிதாசன் இயற்றிய இந்த நூலில் மட்டுமே காணமுடியும். நாடக வடிவில் இயற்றப்பட்ட தமிழ் இலக்கியத்துள் இயைபுத் தொடை முழுவதும் அமையப்பெற்ற முதல் நூல் இதுவேயாகும். இயைபுத் தொடை பயில்வு செழுமையாக அமையப்பெற்றிருக்கும் இந்த உரையாடலில்

இன்று பசிக்குப் பருக உண்டா

ஒருதுளி புளித்த காடி?

எனும் இரு அடிகள் முக்கியமானவையாக இங்கு அமைகின்றது. ‘காடி’ என்றால் என்ன? அவற்றுள்ளும் ‘புளித்த காடி’ என்றால் என்ன? என்ற இரு செய்திகள் நம் சிந்தனையைக் கிளப்பச் செய்கின்றன. பழைய இலக்கிய வழக்கில், குறிப்பாகச் சங்க இலக்கியங்களில் தேடுகின்றபோது ‘காடி’ என்ற சொல் பல வேறுபட்ட பொருளில் பயின்று வந்துள்ளதைக் காணமுடிந்தது.

ஆயர் குலத்து ஆடவனொருவன் அதே குலத்தைச் சேர்ந்த, பருவ வயதை நிரம்பப் பெறாத இளைய பெண் ஒருத்திமீது ஒருதலையாகக் காதல்வயப்பட்டு (அவள் அறியாமலேயே) துன்பம் எய்திக்கொண்டு வருந்திப் பாடுவதாகக் கலித்தொகையில் ஒரு பாட்டு வருகின்றது. அந்தப் பாட்டில்

யார்க்கும் அணங்காதல் சான்றாள் என்று ஊர்ப் பெண்டிர்

மாங்காய் நறுங்காடி கூட்டுவேம், யாங்கும்

எழு, நின் கிளையடு போகென்று தத்தம்

கொழுநரைப் போகாமற் காத்து முழுநாளும்

வாயில் அடைப்ப வரும் (கலி. 109: 22-26)

என்றொரு செய்தி வருகின்றது.

“ஊர்ப்பெண்கள் இவள் யார்க்கும் காமநோயை உண்டாக்குவாள் என்று கருதி, அஞ்சிக்கொண்டு ‘இன்றைக்கு மோருக்கு மாறாக மாவடு ‘நறுங்காடியை’ வைத்துக் கொள்வோம், நீ வேறு எங்கும் மோரை விற்றுக் கொள். உன் சுற்றத்தோடு செல்க’ என்று கூறி, தத்தம் கணவன்மாரைத் தெருவில் செல்லாமல் காவல் செய்து கொண்டு நாள் முழுதும் வாயிலிலேயே நிற்பர். அத்தகைய இவள் எனக்கும் நோய் உண்டாக்கிச் செல்கின்றாளே அல்லாமல், அதற்கு மருந்தாக மாட்டாள்” என்று ஆடவன் புலம்புவதாக மேற்கண்ட பாடலடிகள் அமைந்திருக்கின்றன. இந்தக் கலித் தொகைப் பாடலடி ஆயர்கள் ‘மோருக்கு மாறாக மாங்காயை நறிய காடியாகக் கூட்டி உண்பர்’ என்ற குறிப்பைத் தருகின்றது. இங்குக் ‘காடி’ என்பது மாங்காயை நறுக்கி ஊறவைத்துச் செய்த ‘ஊறுகாய்’ என்று நச்சினார்க்கினியர் சுட்டுகிறார் (கலித்தொகை, நச்சர் உரை, சி.வை.தா. பதிப்பு, 1887, ப. 358).

உமணரின் உப்பு வண்டியில் ‘கூத்தாடும் மகளிர், களத்தில் ஆடுவதற்காகக் கொண்டு வரப்பட்ட வாரால் இறுக்கிக் கட்டிய மத்தளத்தை ஒப்பக் ‘காடி’ வைத்த மிடா கயிற்றால் வரிந்து கட்டப்பட்டிருந்தது’ என்ற குறிப்புப் பெரும்பாணாற்றுப்படையில் வருகின்றது.

நாடக மகளிர் ஆடுகளத்து எடுத்த

விசிவீங்கு இன்இயம் கடுப்பக் கயிறுபிணித்து

காடி வைத்த கலனுடை மூக்கின் (பெரும். 55 - 57)

இதில் வரும் ‘காடி’ என்பது ‘புளியங்காய் நெல்லிக்காய் முதலியன ஊறவிட்டு வைத்தது’ என் கிறார் நச்சினார்க்கினியர் (பத்துப்பாட்டு, நச்சினார்க் கினியர் உரை, 1986, ப. 216).

பாணன், அந்தணர் வாழும் ஊருக்குச் சென்றால் பலவகைச் சிறந்த உணவுடன் ‘மாங்காயின் பசிய வடுவினைப் பல நாளாக போட்டு வைத்துச் செய்த காடியும் (ஊறுகாய்) பெறுவான்’ என்று பெரும் பாணாற்றுப் படையில் (308 - 310) ஆற்றுப்படுத்தப் பெறுகிறான் (பத்துப்பாட்டு நச்சினார்க்கினியர் உரை, 1986, ப. 240). கலித்தொகையில் வரும் ஒரு குறிப்பு (109), பெரும்பாணாற்றுப்படையில் இரு குறிப்புகள் (57, 310) வழியாக ‘காடி’ எனும் சொல் ‘ஊறுகாய்’ எனும் பொருளில் பயின்றுவந்திருப்பது தெரிகின்றது. இந்த மூன்று இடங்களிலும் நச்சினார்க்கினியர் உரைக் குறிப்புகள்தான் ‘காடி’யை ஊறுகாய் என்று விளக்கம் தருகின்றன.

நெடுநல்வாடையின் ஓரிடத்தில் வரும் ‘காடி’ எனும் சொல் ‘கஞ்சி’ என்ற பொருளைச் சுட்டி நிற்கின்றது. இந்நூலில் அந்தப்புர செய்தி - அதில் வரும் அரசியின் வட்டக் கட்டில் அமைப்பு - கட்டிலின் மேல் அமைந்த படுக்கையின் சிறப்பு கூறுமிடத்தில்,

மெல்லிதின் விரிந்த சேக்கை மேம்பட,

துணைபுணர் அன்னத் தூநிறத் தூவி

இணையணை மேம்படப் பாயணை இட்டு,

காடி கொண்ட கழுவுறு கலிங்கம் (நெடுநல். 131 - 134)

என்றொரு குறிப்பு வருகின்றது. ‘கட்டில் படுக்கை மேம்பட அன்னச் சேவலின் தூய நிறத்தையுடைய சூட்டாகிய மயிரைப் பரப்பி அணையிட்டு அதன்மீது காடி (கஞ்சி) இட்ட வெளுத்த ஆடை விரிக்கப் பட்டிருந்தது’ என்ற செய்தியை மேற்கண்ட பாடலடிகள் சுட்டிநிற்கின்றன (மேலது, ப. 459). இங்கும் நச்சினார்க் கினியர்தான் காடியைக் கஞ்சி என்று சுட்டுகிறார். பழங்காலத்தில் வெள்ளை நிற ஆடைகளுக்குக் கஞ்சி இட்டு பயன்படுத்தும் வழக்கமிருந்ததையும், ‘கஞ்சி’யைக் காடி என்று சுட்டும் புலமை வழக்கையும் நெடுநல் வாடை நூல் வழியாக அறிந்துகொள்ள முடிகின்றது.

‘உணவு சமைக்கும் பெண் (அடுமகள்) பூணிட்ட உலக்கையால் குற்றிய வெண்ணெல் அரிசியைக் கொண்டு காடி வெள்ளுளையில் சோறு சமைத்தாள்’ என்ற குறிப்பு புறநானூற்றுப் பாடலில் வருகின்றது.

அடுமகள் முகந்த அளவா வெண்ணெல்

தொடிமாண் உலக்கைப் பரூஉக் குற்று அரிசி

காடி வெள்உலைக் கொளீஇ (புறம். 399: 1-3)

இதில்வரும் ‘காடி’ என்பதைப் ‘புளித்த நீர்’ என்று புறநானூற்றுப் பழைய உரை சுட்டுகின்றது.

பெரும்பாணாற்றுப்படை (50) உரையில் காடியை ‘நெய் என்று சுட்டுவாரும் உண்டு’ என்றும் ‘இனிப் பாரின் கழுத்தானவிடத்தே வைத்த மிடா வென்றுமாம்’ என்றும் எனும் இரு குறிப்புகளை நச்சினார்க்கினியர் தருகிறார் (பத்துப்பாட்டு, நச்சினார்க்கினியர் உரை, 1986, ப. 216). நச்சினார்க்கினியரின் இந்தக் குறிப்பினால் ‘நெய்’, ‘கழுத்து’ எனும் வேறு இரு பொருளையும் காடி எனும் சொல் சுட்டிநிற்பது தெரிகின்றது.

சங்க இலக்கியங்கள் வழி ‘காடி’ என்பது ஊறுகறி (ஊறுகாய்), புளித்த நீர், கஞ்சி எனும் மூன்று பொருட் குறிப்பையும், நச்சினார்க்கினியர் உரைக் குறிப்பினால் நெய், கழுத்து எனும் இரண்டு பொருட்குறிப்பையும் சுட்டிநிற்பது தெரிகின்றது. இவற்றுள் பின்னைய இரண்டு பொருளும் நச்சினார்க்கினியர் காலத்தில் வழக்கில் இருந்திருக்க வேண்டும். அதனால்தான் ‘சுட்டுவாரும் உண்டு’, ‘என்றுமாம்’ என்ற கூடுதல் குறிப்பையும் தந்திருப்பது தெரிகின்றது.

பொருநராற்றுப்படையில் வரும் ‘கரிகாற் பெரு வளத்தான் வேண்ட, முனை முறியாத, விரல் போன்று நெடுகின அளவொத்த சோற்றையும் நன்கு பொரிக்கப் பட்ட பொரிக்கறிகளையும் காடி (கழுத்து) வரையில் வந்து நிரம்புமாறு உண்டனர்’ (பொரு. 112 - 116) எனவரும் நச்சினார்க்கினியர் உரைக் குறிப்பு ‘காடி’ கழுத்தென்பதைக் குறித்து நிற்கின்றது.

சங்க இலக்கியங்களில் பத்துப்பாட்டில் கலித் தொகை, புறநானூறு, பத்துப்பாட்டுள் பெரும்பாணாற்றுப் படை, பொருநராற்றுப்படை, நெடுநல்வாடை ஆகிய நூல்களில் மட்டும் காடி எனும் சொல் பயின்று வருகின்றது. இவற்றுல் புறநானூறு தவிர்த்த ஏனைய இடங்களில் வரும் ‘காடி’ எனும் சொல்லிற்கு நச்சினார்க்கினியர் உரைக் குறிப்புகளே பல பொருளைக் குறித்திருப்பது கவனத்துக்குரியதாகும்.

சங்க காலம் தொடங்கி உரையாசிரியர் காலம் வரையில் பல்வேறு பொருளில் பயின்றுவந்துள்ள ‘காடி’ எனும் சொல்லை பாரதிதாசன் ‘பசிக்குப் பருக உண்டா ஒரு துளி புளித்த காடி’ (பழைய கஞ்சி) என்று குறித்துக் ‘கஞ்சி’ எனும் பொருளில் கையாண்டிருப்பது சங்க மரபின் நீட்சியைக் காட்டுகின்றது. பாரதிதாசனால் இயைபுத் தொடை அமைப்பில் பாடியதால் மட்டுமே காடியை எடுத்தாளமுடிந்திருக்கிறது. இயைபுத் தொடை அமைப்பில் பாடப்பெறாமல் போயிருப்பின் இச்சொல்லை அவர் கையாண்டிருக்க வாய்ப்பில்லை என்றே கருதத் தோன்றுகின்றது. புதிய மரபுகளை ஏற்றுக்கொண்டு அவற்றை நமது பழம் மரபின் துணைகொண்டு படைப் பாக்கங்களை நிகழ்த்துகின்றபோதுதான் வளமையாக நம்மிடமுள்ள சொற்கள் பலவற்றை மீட்டெடுத்து அடுத்தடுத்த தலைமுறையினருக்குக் கையளித்துச் செல்ல முடியும் என்கின்ற சிந்தனையை இச்சொல் வழக்கு காட்டிநிற்கிறது.

துணைநின்ற நூல்கள்

1.     தாமோதரம் பிள்ளை, சி.வை. (ப.ஆ.). 1887. நல்லந்துவனார் கலித்தொகை மூலமும் நச்சினார்க்கினியர் உரையும், மெட்ராஸ்: ஸ்காட்டிஸ் பிரஸ்.

2.     சாமிநாதையர், உ.வே. (ப.ஆ.). 1986 (நிழற்பட பதிப்பு). பத்துப்பாட்டு மூலமும் நச்சினார்க்கினியர் உரையும், தஞ்சாவூர்: தமிழ்ப் பல்கலைக்கழகம்.

3.     பரிமணம், அ.மா. & பாலசுப்பிரமணியன், கு.வெ. 2004. பத்துப்பாட்டு மூலமும் உரையும், சென்னை: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்.

4.     பாரதிதாசன். 2008. பாரதிதாசன் நாடகங்கள், சென்னை: பாரிநிலையம்.

5.     சிவகன்னியப்பன், புலவர் (ப.ஆ.). 2004. தனிப்பாடல் திரட்டு மூலமும் தெளிவுரையும், சென்னை: முல்லை நிலையம்.

6.     பரிமணம், அ. மா. & பாலசுப்பிரமணியன், கு. வெ. (ப. ஆ.); 2011 (4ஆம் பதிப்பு). சங்க இலக்கியம் புறநானூறு (தொகுதி 2) சென்னை: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்.

Pin It