உலகமயம், தனியார்மயம், தாராளமயம் என்னும் முப்பெரும் பூதங்களை இந்தியாவிற்குள் அனுமதித்ததன் விளைவுகளை மக்கள் அனு பவிக்கத் தொடங்கிவிட்டனர். வானத்தில் போன சனியனை ஏணி வைத்து இறக்கிய கதையாகி விட்டது. இப்போது சோழ நாட்டில் ஏற்பட்டுள்ள சோகமும் அதுதான்.

lenin 252இப்போது அமெரிக்க நாடு தீவிரவாதத்தை ஒடுக்குவதாகக் கூறிக்கொண்டு ஆங்காங்கு போர் களைத் தூண்டிவிடுவதும், முடியாத போது அதுவே நேரடிப் போரில் ஈடுபடுவதும் உலகம் அறிந்த உண்மையாகிவிட்டது. காரணம், இயற்கை வளங்களைச் சுரண்டுவதுதான்.

பன்னாட்டுத் தொழில் முனைவோரின் கொள்ளைகளுக்கு மலைகள், காடுகள், நிலத்துக்கு அடியில் உள்ள கனிம வளங்கள், கடல் வளங்கள் எல்லாமே இலக்காகிவிட்டன. மக்களின் வாழ் வாதாரங்கள் அழிக்கப்படுவது பற்றியோ, சுற்றுச் சூழல் கெடுவது பற்றியோ, எதிர்காலத் தலை முறைகள் பற்றியோ இவர்களுக்குக் கவலை யில்லை.

இவர்களின் பிரதிநிதியாகவே அரசுகள் செயல் படுகின்றன. அரசுகளும் இவர்களுக்காகவே சட்டம் போடுகின்றன. ஏழை எளிய நடுத்தர மக்களைப் பற்றி யாரும் கவலைப்படுவதில்லை. தேர்தல் நேரத்தில், ‘உங்களுக்காக உழைப்பதற்கு எங்களுக்கு வாக்களியுங்கள்’ என்று கைகூப்பிக் கேட்பார்கள்.

‘சோழநாடு சோறுடைத்து’ என்று தொன்று தொட்டுப் பாராட்டப்படும் காவிரிப் பாசனப் பகுதியான தஞ்சாவூர், திருவாரூர் நாகப்பட்டினம் மாவட்டங்களை பாலைவனமாக மாற்றிட மத்திய, மாநில அரசுகளும், தொழில் திமிங்கிலங்களும் கூட்டணி அமைத்துக்கொண்டு செயல்படுகின்றன.

இதனை எதிர்த்து பாதிப்புக்கு உள்ளாகும் பொதுமக்கள் கடந்த சில ஆண்டுகளாகப் போராடி வருகின்றனர். ‘வாழ்வா? சாவா?’ என்ற அந்தப் போராட்ட வரலாறு புத்தகமாக வெளிவந்துள்ளது. க.கா.இரா.இலெனின் எழுதிய, ‘காவிரி மக்களின் மீத்தேன் எதிர்ப்புப் போராட்ட வரலாறு’ அனை வரும் அறிந்து கொள்ள வேண்டிய சிறந்த பதிவாகும்.

காவிரிப் படுகையில் அமைந்துள்ள தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் பூமிக்கு அடியில் மீத்தேன் எரிவாயு அதிக அளவில் இருக் கிறது. பன்னாட்டு நிறுவனங்கள் இதனை எடுத்து இலாபம் சம்பாதிக்கத் துடிக்கின்றன. மத்திய அரசும் இதனை எடுக்க அனுமதி அளித்துள்ளது.

கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி கார்ப்பரேஷன் லிமிடெட் என்னும் நிறுவனத்துடன் மத்திய அரசு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. பூமிக்கு அடியில் உள்ள தண்ணீர் முழுவதும் உறிஞ்சி வெளியில் எடுத்த பிறகே மீத்தேன் வாயுவை எடுக்க முடியும். தண்ணீர் எடுத்த பிறகு அந்த வெற்றிடத்தைக் கடல்நீர் ஆக்கிரமித்துக் கொள்ளும்.

இதனால் விவசாய நிலங்கள் பாதிக்கப் படுவதோடு, குடிக்க நீரும் இல்லாமல் போகும். காவிரிப் படுகையே பாலைவனமாக மாறும். மீத்தேன் எடுத்த பிறகு நிலக்கரியும் எடுக்கப்படு மானால் பூமியில் அழுத்தம் ஏற்பட்டு பூகம்பமும் ஏற்படலாம்.

கோடிக்கணக்கான உயிர்கள் எங்கே போகும்? நண்டு, நத்தை, மீன், பாம்பு, உடும்பு, பறவைகள், கால்நடைகள், மூலிகைகள் உள்ளிட்ட ஏராள மான தாவர வகைகள் என்னவாகும்? கோயில் களுக்குரிய பேர்போன கும்பகோணம், மன்னார்குடி இராசகோபாலசுவாமி திருக்கோயில், தேருக்குப் பேர் போன திருவாரூர் கோயில், நாகூர் தர்கா, வேளாங்கண்ணி மாதாகோயில் போன்ற நமது கலாசார சின்னங்கள் என்ன ஆகும்?

இதனால் பாதிக்கப்படுவது காவிரிப் படுகை மட்டுமல்ல, உணவுப் பற்றாக்குறையால் தமிழ் நாடே பாதிக்கும்; இது இந்தியாவையே அச் சுறுத்தும், எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கி விடும். இது பாதிக்கப்படப்போகும் மக்களுக்குத் தெரிய வேண்டாமா?

இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் தலை மையில் போராட்டக் குழு அமைக்கப்படுகிறது. ஊர் ஊராக சந்திப்பு இயக்கம் இரவும், பகலும் நடக்கிறது. ஊர்வலம், பேரணி, கருத்தரங்கம், பொதுக் கூட்டம் மூலம் வரப் போகும் ஆபத்தை மக்களுக்குத் தெரியப்படுத்தப்படுகிறது.

வாழ்வாதாரங்கள் பாதிக்கப்படும் என்பது அறிந்து மக்கள் பொங்கி எழுந்து நிறுவனங்களின் கட்டுமானங்களை பெயர்த்து எறிகின்றனர். ஓர் இடத்தில் மட்டுமல்ல, ஒவ்வொரு இடத்திலும் இப்படியே நடந்துள்ளது. அரசின் காவல்துறையின் துணையோடு வந்த நிறுவனம் செய்வது அறி யாமல் திகைத்து நின்றது.

“காலம் காலமாக வந்தவர்களையெல்லாம் வாழ வைத்த இந்த பூமியைக் குடைஞ்சு உள்ளே இருக்கிற மீத்தேன், நிலக்கரி இன்னபிற கனிம வளங்களையெல்லாம் எடுத்துப்புட்டு இந்த பூமியை அப்படியே ஒரு புதைகுழியா மாத்துறதுதான் இந்த மீத்தேன் எடுக்கிற திட்டம்...” என்று நம்மாழ்வார் பேசுகிற போது மக்கள் நம்பினர்; போராட்டக் காரர்களாகவே மாறினர்.

சமூக ஆர்வலர்களும், ஆசிரியர்களும், மருத் துவர்களும், பொறியியலாளர்களும் மக்களோடு இணைந்து இந்தப் போராட்டத்தை எடுத்துச் சென்றுள்ளனர். இது ‘வாழ்வா? சாவா?’ பிரச்சினை யாக இருப்பதால் எதைப் பற்றியும், யாரைப் பற்றியும் கவலைப்படவில்லை. காந்திய வழியில் வன்முறைக்கு இடம் கொடுக்காமல் போராட்டக் குழு செயல்பட்டு வருவதைப் பாராட்ட வேண்டும்.

போராட்டம் உச்சக்கட்டத்தில் இருந்த போது வழிநடத்திச் சென்ற ஐயா நம்மாழ்வார் உடல்நலமின்றி 31-12-2013 அன்று காலமான சோகம் காவிரிப் பாசன மக்களை பதற்றமடையச் செய்துவிட்டது.

“ஐயா இந்த மண்ணையும், மக்களையும் காப்பதற்காகப் போராடி, போராட்டக் களத்திலே உயிரை விட்டிருக்கிறார். கடைசி இரண்டு நாட் களாக, ‘மண்ணைக் கெடுக்கப் போறாங்களே, பாலைவனமாக்கப் போறாங்களே’ என்று இரவு பகலாகப் புலம்பியபடியே இருந்தாரு...” என்று போராட்டக்குழு பொதுச் செயலாளர் இலெனின் ‘புதிய தலைமுறை’ தொலைக்காட்சியின் பேட்டியில் கதறி அழுதுவிட்டார்.

‘ஒரு தனி நபராகவே அரசுகளின் தவறான வேளாண் கொள்கைக்கு எதிராக நின்று போராடி இயற்கை வேளாண்மையை மக்களிடம் கொண்டு சென்றவர், சுற்றுச்சூழலையும், காவிரி மண்ணையும், மக்களையும் காப்பதற்காகப் போராடிய இந்த மாமனிதர், மீத்தேன் எடுப்பதை எதிர்க்கும் போராட்டத்தில் மீதி வேலையைத் தன்னுடைய தலையில் சுமத்திவிட்டுச் சென்றுவிட்டாரே என்ற கவலை துக்கமாக மாறியது’ என்று ஆசிரியர் எழுதுகிறார்.

நம்மாழ்வாரும், இலெனினும் சேர்ந்து எடுத்த முடிவின்படி 25-1-2014இல் மன்னார்குடியில் மீத்தேன் எடுக்கும் திட்டத்தைக் கைவிடக் கோரி மாபெரும் மக்கள் பேரணி நடத்தப்பட்டது. இலெனின் தலைமையில் நடந்த பொதுக் கூட்டத்தில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் த.வெள்ளையனும் கலந்துகொண்டார். இந்தப் பேரணியும், பொதுக் கூட்டமும் மக்களிடையே நம்பிக்கையை உருவாக்கியது எனலாம்.

எதிர்க்கட்சியாக இருக்கும் வரை மக்களுக்காக பரிந்து பேசுகிறவர்கள் ஆட்சிக்கு வந்ததும் அப்படியே தலைகீழாக மாறிப் போகிறார்கள். இந்தத் திட்டம் கடந்த முறை ஆட்சியிலிருந்த காங்கிரஸ் ஆட்சியில்தான் கொண்டுவரப்பட்டது. கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி கார்ப்பரேஷன் லிமிடெட் என்னும் பன்னாட்டு நிறுவனத்துடன் 29-7-2010 அன்று ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. தமிழ் நாட்டில் திமுக ஆட்சியின் போதுதான் கடந்த 4-1-2011 அன்றுதான் புரிந்துணர்வு ஒப்பந்தம் கை யெழுத்தானது.

ஆட்சிகள் மத்தியிலும், மாநிலத்திலும் மாறிய பிறகும், காட்சிகள் மாறவில்லை. தமிழகத்தில் ஆட்சி மாறியதும் மக்களின் எதிர்ப்பின் காரண மாக இந்த ஒப்பந்தத்திற்கு தடைவிதிக்கப்பட்டது. இப்போது கடந்த 4-1-2014 உடன் இந்த புரிந் துணர்வு ஒப்பந்தமும் காலாவதியாகிவிட்டது. ஆனால் திட்டம் கைவிடப்படவில்லை. திட்டம் கைவிடப் படும் வரை போராட்டம் தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

உயர்நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு, “நாம் எப்பவும் நம்ம வேலை உண்டு, வீடு உண்டு, தொழில் உண்டுண்ணு மட்டும் இருக்கக் கூடாது. நம்மைச் சுற்றி நடக்கிற அவலங்களை எதிர்த்து நாம் தாமாக முன்வந்து களத்தில் இறங்கிப் போராட வேண்டும். மீத்தேன் எடுக்கும் திட்டத்தை காவிரிப் பாசனப் பகுதியில் இருந்து விரட்டியடிக்க வேண்டும். அதற்காக நானும் போராடத் தயார்...” என்று பேசியுள்ளார்.

அண்மையில் நாடாளுமன்ற உறுப்பினர் களான து.ராசாவும், டி.கே.ரங்கராசனும் காவிரிப் பாசனப் பகுதி விவசாய சங்கப் பிரதிநிதிகளையும் அழைத்துப் போய் பிரதமர் மோடியைச் சந்தித் திருக்கிறார்கள். காவிரியில் மீத்தேன் எடுக்கும் திட்டத்தைக் கைவிடவும், கர்நாடகம் காவிரியின் குறுக்கே அணைகட்டுவதை தடை செய்யவும் கோரியுள்ளனர்.

“இப்போது இந்தக் காவிரிப் பாசனப் பகுதியில் மீத்தேன் எடுக்கும் பிரச்சினையில் கருத்து வேறு பாடு இல்லாமல் தமிழகத்திலுள்ள அனைவரும் ஒன்றுபட்டு நிற்பது பாராட்டுக்குரியது. இந்த விழிப்புணர்வு முன்னேயே வந்திருந்தால் இயற்கை ஞானி நம்மாழ்வாரை இழந்திருக்க மாட்டோம். பரவாயில்லை, நம்மாழ்வார் என்ற விதை முளைத்து மரமாகிப் பலன்தர ஆரம்பித்துவிட்டது. நிச்சயம் நமது போராட்டம் வெல்லும், காவிரிப் பாசனப் பகுதி பாதுகாக்கப்படும்...” என்று நூலாசிரியரும், பேரழிப்பிற்கு எதிரான பேரியக்கத்தின் தலை வருமான க.கா.இரா.இலெனின் நூலின் முடிவுரையில் கூறியுள்ளார்.

மரம் அமைதியை விரும்பினாலும் காற்று அதனை அனுமதிப்பதில்லை. காவிரிப் படுகை மக்கள் எப்போதும் அமைதியை விரும்புகிற வர்கள்; உழைத்து உழைத்து ஓடாகிப் போன வர்கள். அவர்களை மீத்தேன் பூதம் சீண்டிப் பார்க்கிறது.

அவர்கள் எப்போதும் வலுச்சண்டைக்குப் போக மாட்டார்கள். வந்த சண்டையை விடவும் மாட்டார்கள். ஊர் கூடித் தேர் இழுப்போம், வாருங்கள்.

காவிரி மக்களின் மீத்தேன் எதிர்ப்புப் போராட்ட வரலாறு

ஆசிரியர்: அக்கு ஹீலர் க.கா.இரா.இலெனின்

வெளியீடு: பேரழிப்பிற்கு எதிரான பேரியக்கம்

கலை காம்ப்ளக்ஸ், நடேசன் தெரு,

மன்னார்குடி, திருவாரூர் மாவட்டம்

விலை - 100/-

Pin It