உலக அளவிலான முஸ்லிம்களின் பண்பாட்டு அரசியலை அறிமுகப்படுத்தும் வகையில் தீவிரமான உரையாடல்களை தமிழ் சூழலுக்கு இந்நூல் கொண்டு வந்து சேர்க்கிறது. இத்தொகுப்பில் இடம்பெற்றிருக்கும் பதினாறு கட்டுரைகளும் மிகுந்த உழைப்புத் தகுதி யுடனும் எழுத்தின் மீதான அர்ப்பணிப்பு உணர்வுடனும் எழுதப்பட்டுள்ளன. உயிர் எழுத்து, உங்கள் நூலகம், புத்தகம் பேசுது, திணை, தி இந்து போன்ற இதழ்களில் இத் தொகுப்பின் பெருவாரியான கட்டுரைகள் வெளிவந்துள்ளன.

hg rashool 238தமிழக இஸ்லாமிய பண்பாட்டுசூழலில் மீனாட்சி புர மதமாற்றப் பின்னணியையும், அது தொடர்பான நெருக்கடிகளையும் தனது புனைவின் மூலம் வெளிப் படுத்திய அன்வர் பாலசிங்கத்தின் ‘கருப்பாயி என்ற நூர்ஜஹான்’ அரபுநாடுகளில் அந்நியப்பட்டுப்போன முஸ்லிம் இளைஞர்களின் கண்ணீர்கதைகளை, துயரங் களை எழுதிச் சென்ற மீரான் மைதீனின் ‘அஜ்னபி’, ‘மீன்காரத்தெரு’ மூலம் அடித்தள முஸ்லிம்களின் படைப்புலகத்தை அகழ்ந்து பார்த்த கீரனூர் ஜாகிர் ராஜாவின் பக்கிர்ஷாக்களின் துன்பியல் வாழ்வை எழுதிப்பார்த்த வலி நிறைந்த சொற்களின் உலகமான ‘ஜின்னாவின் டைரி’ போன்ற நாவல்கள் குறித்த விமர்சன தொனி மிக்க ஆய்வுக் கட்டுரைகள் இந்நூலில் இடம் பெறுகின்றன. ஒரு நாவலை மொழியியல்ரீதியாகவும், படைப்புரீதியாகவும் ஆய்வுரை செய்யும் கோட்பாடு சார்ந்த ஒரு முறையியலை இந்த ஆய்வுகள் முன் வைக்கின்றன. பக்கிர்ஷாக்கள் என்னும் முஸ்லிம் நாட்டுப்புறக் கதை சொல்லிகள் பற்றிய கட்டுரை தமிழ் மண்ணின் மரபுகளோடும், இசைப்பாங்கோடும் வாழும் இசைப்பாணர்களின் வாழ்வியலை கிஸ்ஸா, நாமா, மஸ் அலா உள்ளிட்ட தமிழக படைப்பிலக்கியத்தின் வழி எழுதிச் செல்கிறது.

பச்சிளம் குழந்தைகளின் ரத்தத்தால் எழுதப்படும் பாலஸ்தீன் காஸாவின் துயரமும், தலிபான்களை கல்வியால் வென்று, சர்வதேச முகமாக மாறிவிட்ட மலாலா குறித்த நீண்டதொரு வாழ்வியல் வரைபடமும், இலங்கையில் தமிழ் முஸ்லிம்களுக்கு எதிரான பவுத்த இனவெறி அரசியலும் விரிவான முறையில் எடுத்துரைக்கப் படுகின்றன. இஸ்லாமிய அரசின் பேரால் முஸ்லிம்கள் மீதான எதிர் பிம்பத்தை கட்டமைத்த ஐ.எஸ். போராளி களால் சிதைவுறும் சிரியா, ஈராக் நாடுகள் பற்றிய வரலாற்று இழப்புகளும், அங்கோலாவில் சிறுபான்மை மதமாக இருக்கும் இஸ்லாத்தின் மீதான தடையும் இந்நூலில் எரியும் பிரச்சினைகளை விவாதிக்கும் ஆற்றல்மிகு ஆக்கங்களாக உள்ளன. முஸ்லிம் நாடான சவுதி அரேபியாவில் ரிஸானா நபீகுக்கு வழங்கப்பட்ட மரணதண்டனை எவ்வளவு வன்மமானது என்பதை விவரிக்கும் ஆக்கமும், கறுப்பினப்போராளி நெல்சன் மண்டேலா சிறுபான்மை முஸ்லிம்களுக்கு வழங்கிய உரிமைகள் பற்றி அறியப்படாத தகவல்களும் இக் கட்டுரைகளை வாசிப்பதற்கான நன்மதிப்பை கூட்டு கின்றன.

உயிர்ப்புமிகு அறிவுஜீவிகள் மாறும் சமூகத்தோடு தனது கருத்தியலையும் செயலையும் மதிப்பீடு செய்து தாம் வாழும் சமூகத்தை ஒரு படியேனும் முன்னே கொண்டு செல்வார்கள். அந்த வகையில் முஸ்லிம் சமூகத்தின் உயிர்ப்புமிகு அறிவுஜீவியாக வாழ்ந்த இந்திய முஸ்லிம் அறிஞர் அஸ்கர் அலி இன்ஜினியர், இஸ்லாமிய பெண்ணியலாளர் ஆமினா வதூத் போன்ற அறிஞர்களின் எழுத்து, சிந்தனை உலகம், செயல்பாட்டுத் தளம் பற்றிய அறிமுகங்கள் தன்னுணர்வுமிக்க வாசகர் களுக்கு அறிவின் வாசலை திறந்து வைக்கிறது.

ஜிகாதி நூலின் ஆசிரியர் ஹெச்.ஜி.ரசூல் தமிழின் முக்கிய கவிஞர்களில் ஒருவர். மைலாஞ்சி கவிதைத் தொகுப்பின் மூலமாக படைப்புலகில் விரிவான சலனங்களையும் தாக்கங்களையும் ஏற்படுத்தியவர். மைலாஞ்சி தொகுப்பை தற்போது நியூசெஞ்சுரி நிறுவனம் மறுபதிப்பாக வெளியிட்டுள்ளது. ஜனகனமன, என் சிறகுகள் வான் வெளியில், புதுக்கவிதையில் நவீனப் போக்குகள் போன்ற நூல்களையும் நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் துவக்க காலத்தில் வெளியிட்டுள்ளது. ஹெச்.ஜி.ரசூல் எழுத்திற்காகவே பல ஆண்டுகளாகவே கடும் நெருக்கடிகளையும், துயரங்களையும் சந்தித்தவர். உம்மா கருவண்டாய் பறந்து போகிறாள் கவிதை நூலும், சூபி விளிம்பின் குரல், தலித் முஸ்லிம் பின்காலனிய உரையாடல் போன்ற நூல்களும் வெளிவந்திருக்கின்றன.

இந்நூலுக்கான முன்னுரையில் நூலாசிரியர் ஹெச்.ஜி.ரசூல் இத்தொகுப்பின் முக்கியத்துவம் குறித்தும், சமகால இஸ்லாமியப் பண்பாட்டுப் பிரச்சினைப்பாடுகள் குறித்தும் கீழ்க்கண்டவாறு விவாதிக்கிறார்.

முஸ்லிம்களின் மீது பிறரும், முஸ்லிம்கள் தமக்குள்ளும் நிகழ்த்தும் போரின் சிதைவுச் சித்திரங்கள் இந் நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. இது பக்கிர்ஷாக்கள் என்னும் முஸ்லிம் நாட்டுப்புற கதை சொல்லிகளில் துவங்கி ஈராக், அங்கோலா, தென்னாப்பிரிக்கா காஸா

என பயணித்து, ஜாகிர்ராஜா, மீரான்மைதீன், அன்வர் பாலசிங்கம் எனத் தமிழ் கதைசொல்லிகளின் ஊடாக நுழைந்து அஸ்கர் அலி இஞ்சினியர், ஆமினாவதூத் என முஸ்லிம் ஆளுமைகளின் மாற்றுக் குரல்களைச் சுமந்து சர்வதேச அளவில் கவனத்திற்கு உட்பட்ட முஸ்லிம் களுக்கான கல்விப் போராளி மலாலாவிடம் முடிகிற தெனச் சொல்லலாம். நீண்ட நெடிய தேடல்கள், கருத்துருவாக்கங்கள், விமர்சன தொனி என இதன் இருப்பு உருவாகியுள்ளது.

ஜிகாத் என்ற சொல்லுக்கு கடினமாக முயற்சி செய், போராட்டம், புனிதப்போர் என அர்த்தங்கள் சூழல் சார்ந்து மாறுபாடடைகிறது. புனிதப்போரை செய்பவன் ஜிகாதி என்று பொதுவாக அழைக்கப் படுகிறான். இந்த நூலின் ஜிகாதி பல்வித அடையாளங் களோடு நூலின் நிலமெங்கும் பரந்து திரிகிறான். எதிரிகளின் தாக்குதலில் இருந்து தப்பிப்பதற்காக பதுங்கு குழியில் மறைந்திருக்கிறானா, இல்லை எதிரிகளை தாக்குவதற்கு பதுங்குகுழியில் காத்திருக்கிறானா என்பது வாசகர்களின் முடிவையும் புரிதலையும் சார்ந்தது.

ஜிகாதை இஸ்லாம் அல்லாதவரை வன்முறையின் மூலமாக இஸ்லாம் ஆக்குவதற்கும், இஸ்லாமிய அரசை நிறுவுவதற்குமான புனிதப்போர் என ஒற்றையாக அர்த்தப்படுத்திப் பார்க்கும் கருத்தியலை நாம் நிராகரிக்க வேண்டி இருக்கிறது. ஆட்சியாளரின் முன்னே உண்மையைப் பேசுவதும் ஜிகாதென கருத்தியல் போராட்டத்தை முதன்மைப்படுத்தும் அர்த்தமும் இதற்கு உண்டு. சூபிகளின் பரிமாணத்தில் தீமையை அடக்கி நன்மையை உருவாக்கும் மனஇச்சைக்கு எதிரான பெரியபோர் ஜிகாதுல் அக்பர்.

தற்கால உலகச் சூழலில் இது வேறொரு முக்கியத்துவம் பெறுகிறது. தானும் தன் சமூகமும் அழிக்கப்படும்போது பாதுகாப்பிற்கும், வாழ்வின் இருப்பிற்காகப் போராடுவதும் ஜிகாத் ஆகிறது. இது ஆக்கிரமிப்பிற்கு எதிரான பாதுகாப்பிற்கான யுத்தம். இன்று உலகளவில் இயங்கிக்கொண்டிருக்கும் வகாபிய ஆதரவு தீவிரவாத அமைப்புகளின் வன்முறை அரசியல் குறித்தும் கலை, இலக்கிய கருத்து நிலைகளில் முன்வைக்கும் கலாச்சார அடிப்படைவாதம் குறித்தும் வெகுஜன மக்கள் மத்தியில் வலுவான பரப்புரையைச் செய்ய வேண்டிய தேவை இருக்கிறது.

இஸ்லாத்தின் பெயரை வைத்துக்கொண்டு வகாபிசமோ பிற சமயக் கடவுள்களைத் தாக்குகிறது. புத்தசிலைகளை தகர்க்கிறது. சூபிகளின் சமாதிகளை தரைமட்டமாக்குகிறது. ஒடுக்கப்பட்ட முஸ்லிம்களின் உரிமைகளுக்காகப் போராடுவதை தவிர்க்கிறது. தீவிர வாதத்தை பரப்புரை செய்கிறது. இவ்வியக்கங்களால் தான் முஸ்லிம்கள் அனைவரும் தீவிரவாதிகள் என்கிற ஒரு மாயையான கருத்துருவாக்கம் முஸ்லிம் அல்லாதவர் களின் பொதுப்புத்தியில் உருவாகி இருக்கிறதோ என்கிற சந்தேகம் வலுவடைந்து உள்ளது.

ஆப்பிரிக்கநாடான மாலியில், சோமாலியாவில், மற்றும் ஈராக்கில் சூபிஞானிகளின் நினைவிடங்களை ஆயுதங்களால் தகர்த்து அழித்துக் கொண்டிருக்கும் வகாபிய இயங்கங்களை ஆதரித்து தமிழ்சூழலில் எழுது பவர்கள் உண்டு. முஸ்லிம்களிடம் வகாபிய வன்முறை மனத்தை உருவாக்கும் இயக்கங்களின் நிலைப்பாடை எதிர்த்தும் பரப்புரை செய்யவேண்டும். சூபிகளின் அன்பின் குரல் எங்கும் பரவ வேண்டும். இதுவே பல்சமயசூழலில் வாழும் தமிழக முஸ்லிம்களின் ஜனநாயக உணர்வை, சகிப்புத்தன்மையை உலக மக்களுக்கு உணர்த்தும்.

இந்துத்துவமா, கிறிஸ்தவமா, இஸ்லாமா, பௌத்தமா எனத் தொடரும் இந்த சமய மேலாண்மை விவாதங்கள் அறிவுத்தளத்தைத் தாண்டி சமூக வெளிக்குள் (social space) நகர்ந்து, வெகுமக்களின் பொதுப் புத்திக்குள் ஊடுருவும் போது ஒரு சமயத்தை மற்றொன்று அழித்தொழிக்கும் பாசிச கருத்தாக்கமாக உருவாகிறது. இது அபாயகரமானது. சமயங்களின் ஆன்மீக, சமூக, வரலாற்று, பண்பாட்டு அரசியல் சாராம்சங்களை புரிந்து கொண்டோமென்றால் இந்த அடிப்படைவாத மனோ பாவங்களை ஒழித்துக் கட்டலாம். எமிலிதர்கைமும், மாக்ஸ்வேபரும் சமயங்களின் தோற்றுவாய் குறித்து விரிவாக எழுதியுள்ளனர். அஸ்கர் அலி இஞ்சினியரின் இஸ்லாத்தின் தோற்றம் வளர்ச்சி உள்ளிட்ட பல நூல்கள், இம்தியாஸ் அகமதுவின் இஸ்லாமிய பண்பாட்டியல் ஆய்வுகள், யோகிந்தர் சிக்கந்தின் அடித்தள முஸ்லிம்கள் ஆய்வுகள், தாரிக் அலியின் அடிப்படைவாதங்களின் மோதல்கள், ஏ.ஜி.நூரானின் ஆய்வுகள், சூபிய பண்பாட்டுக்கள நூல்கள் என விரிவான அபூர்வமான நூல்கள் இஸ்லாம் குறித்த ஒரு நிதானமான பண் பாட்டியல் மாற்றுவாசிப்பை நம்மிடையே உருவாக்கு கின்றன. இத்தகைய திசைவழியிலான வாசிப்புகள், உரையாடல்கள் நம்மிடமுள்ள அடிப்படைவாத கட்டுமானத்தை தகர்த்து, ஜனநாயகபூர்வமாக இஸ்லாம் பற்றி அறிந்து கொள்ள உதவக் கூடும்.

இந்த வகையில் தமிழின் வாசகர்கள் கூடுதல் கவனம் செலுத்தி வாசிக்க வேண்டிய முக்கிய நூலாக இதனைக் கருதலாம்.

ஜிகாதி - பதுங்கு குழியில் மறைந்திருக்கும் ஒரு சொல்

ஆசிரியர்: ஹெச்.ஜி.ரசூல்

வெளியீடு: பாரதி புத்தகாலயம்

7, இளங்கோ சாலை,

தேனாம்பேட்டை, சென்னை - 600 018

விலை- 80.00/-

Pin It