சங்கச் சொல் அறிவோம் - 24

insectஉயிரினங்களுள் பறவையினங்களுக்கு மட்டுமே சிறகு உண்டு. காடை, கௌதாரி, ஆந்தை, மைனா குருவி, நொள்ளக் குருவி, சிட்டுக் குருவி, தேன் சிட்டு, தையல் சிட்டு, தித்திதாங் குருவி, தூக்கணாம் குருவி, டிக்டிக் குருவி, சாவுக் குருவி, வெட்டுக்கிளி, மரம்கொத்தி, வெள்ளக் குருவி, மஞ்சா குருவி, மானத்தாங் குருவி, கருவெட்லாங் குருவி, வண்ணாத்திக் குருவி, உள்ளாங் குருவி, அடைக்கலாங் குருவி, உருளைக் கட்ட குருவி, பச்சைக்கிளி, மீன்கொத்தி, கொக்கு, கோட்டான், தண்ணீர்க் கோழி, மயில், கோழி, சேவல் ஆகிய பறவைகள் அனைத்திற்கும் இரண்டு சிறகுகளும் இரண்டு கால்களும் உண்டென்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஆனால், பறவை இனத்து உயிரினம் ஒன்று இரண்டு சிறகுகளையும் ஆறு கால்களையும் கொண்டுள்ளது என்பது நாம் அறிந்திராத செய்தியாகும். அது வண்டு எனும் உயிரினமாகும். ‘வண்டு’ ஆறுகால் கொண்ட பறவை இனம் ஆகும். ஆம், வண்டுகளும் பறவை இனமே ஆகும். வண்டைப் பறவை எனச் சுட்டும் வழக்கம் நம்காலத்தில் இல்லை. அதனால் அச்செய்தி நம் கவனத்திலிருந்து மறைந்துபோய்விட்டது. பண்டைக் காலத்தில் வண்டைப் பறவை எனச் சுட்டி அழைக்கும் வழக்கம் இருந்திருக்கிறது. திருமூலர் திருமந்திரத்தில் இப்படி ஒரு பாட்டு வருகின்றது.

அறுகாற் பறவை அலர்தேர்ந் துழலும்

மறுகா நரைஅன்னம் தாமரை நீலம்

குறுகா நறுமலர் கொய்வன கண்டும்

சிறுகால் அரன்நெறி சேரகி லாரே (1470)

இந்தப் பாட்டு ‘அறுகாற் பறவை எனப்படுகின்ற வண்டுகள் தேன் உள்ள மலர்களையே தேடித் திரியும்; வெறும் மலர்களை நாடிச் செல்லாது. வெண்ணிறத்தையுடைய அன்னப் பறவைகள் தாமரை மலரையே விரும்பியடையும்; நீலப் பூவை அடையாது. அவை போலச் சிவ வழிபாடு செய்வோர் சிவனுக்கு உகந்த நல்ல மலர்களையே பறிப்பர்; பிற மலர்களைப் பறிக்கமாட்டார். இவற்றை எல்லாம் நேரில் கண்டும் நல்லறிவு இல்லாதவர் இளமைக் காலத்தில்தானே சிவனை வழிபட்டு சிவபுத்திரராய் விளங்கும் வழியை அறிகின்றவர் இல்லை’ என்னும் பொருளைத் தருகின்றது. இவற்றுள் நமக்கு வேண்டிய செய்தி வண்டை ‘அறுகால் பறவை’ எனக் குறித்திருப்பதாகும். திருமூலருக்கும் முன்னரே நமது சங்கப் புலவர்களுள் சிலர் ‘அறுகால் பறவை (வண்டை)’ பற்றிய குறிப்புகளைப் பதிவு செய்திருக்கின்றனர்.

நற்றிணையின் ஐம்பத்து ஐந்தாம் பாட்டு ‘பெருவழுதி’ என்னும் புலவர் பாடியது. அப்பாட்டு, திருமணம் செய்யும் பொருட்டுப் பொருள் தேடித் தலைவன் பிரிந்து செல்கிறான்; அவன் பிரிவால் மெலிந்த தலைவியை ஆற்றுவித்த திறத்தை மீண்டு வந்த தலைவனுக்குத் தோழி உரைப்பதாக அமைந்தது. அப்பாடல்,

“ஓங்கு மலை நாட! ஒழிக, நின் வாய்மை!

காம்பு தலைமணந்த கல் அதர்ச் சிறு நெறி

உறு பகை பேணாது, இரவின் வந்து, இவள்

பொறி கிளர் ஆகம் புல்ல, தோள் சேர்பு

அறுகாற் பறவை அளவு இல மொய்த்தலின்

கண் கோள் ஆக நோக்கி, பண்டும்

இனையையோ? என வினவினள், யாயே

அதன் எதிர் சொல்லாளாகி, அல்லாந்து

என் முகம் நோக்கியோளே, அன்னாய்!

யாங்கு உணர்ந்து உய்குவள்கொல்? என, மடுத்த

சாந்த ஞெகிழி காட்டி

ஈங்கு ஆயினவால் என்றிசின் யானே.”

என்பதாகும். பிரிந்து சென்ற தலைவன் மீண்டும் வந்தபோது “ஓங்கிய மலை நாடனே! நீ கூறிய உண்மை பொய்த்துப் போகட்டும். மூங்கில்கள் நிறைந்த கற்பாறைகள் உள்ள வழியில் வரும் துன்பத்தைப் பார்க்காது; துணிந்து இரவில் வந்து எம் தலைவியின் மார்பினைக் கூடி மகிழ்ந்தாய். அதனால் இவளின் உடலில் புதுமணம் தோன்றியது. புதுமணத்தால் அளவற்ற அறுகால் பறவைகள் (வண்டுகள்) இவள் உடலை மொய்த்தன. இதனைக் கண்ட எம் அன்னை கொல்லுபவள்போல் அவளை நோக்கி ‘நீ இதற்கு முன்னர் இப்படி அறுகால் பறவைகளால் (வண்டுகள்) மொய்க்கப்பெற்றயையோ?’ எனக் கேட்டாள். அதற்குப் பதில் சொல்லத் தெரியாது தலைவி என்னை நோக்கினாள். அவளின் நிலை அறிந்த நான், அடுப்பிலிட்டிருந்த சந்தன விறகினைக் காட்டியவாறே “அன்னையே இவ்விறகை அடுப்பிலிட, இதில் மொய்த்திருந்த அறுகால் பறவைகள் (வண்டுகள்) அகன்றுபோய் இவள் தோள்களிலே மொய்த்தன’ என்று கூறினேன்” என்று தோழி தலைவனுக்குச் சொல்லுகிறாள். உடலில் மொய்த்த வண்டினங்களை ‘அறுகால் பறவைகள்’ எனச் சுட்டியிருப்பது வண்டைப் பறவை இனத்துள் வைத்தெண்ணிய சங்ககால வழக்கம் தெரியவருகின்றது. புறநானூற்றுப் பாடலொன்றிலும் அறுகால் பறவை பற்றிய குறிப்பொன்று வருகின்றது. சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவனிடம் பாணன் ஒருவனை ஆற்றுப்படுத்துவதாகக் கோவூர் கிழார் பாடியது புறநானூற்றின் எழுபதாம் பாட்டு.

பொருள் தேடிச் செல்லும் பாணன் ஒருவனைப் பார்த்து ‘இனிய இசையைத் தரும் யாழை உடைய பாணனே! ஆமையை அம்பில் கோத்தது போல நுண்ணிய கோலால் கட்டப்பட்ட உடுக்கையின் ஓசையைக் கேட்கும் இடத்தில் சிறிது நேரம் தங்கிப் போக என்று சொல்லி என்னை வினவும் இரவலரே! நான் சொவதைக் கேள், தை மாதம் குளிர்ந்த குளம் போலக் கொடுக்கக் கொடுக்கக் குறையாத சோறு நிறைந்த அந்நாட்டுத் தலைவன் கிள்ளியை நினைத்தீர்’ என்று மன்னனைப் புகழ்ந்து பாடிக்கொண்டுவரும் புலவர், இடையில்

“கிள்ளி வளவன் நல்லிசை யுள்ளி,

நாற்ற நாட்டத்து அறுகாற் பறவை

சிறுவெள் ளாம்பல் ஞாங்கர், ஊதும்

கைவள் ஈகைப் பண்ணன் சிறுகுடிப்

பாதிரி கமழும் ஓதி, ஒண்ணுதல்!” (புறம். 70: 10 - 14)

என்றொரு குறிப்பமையப் பாடுகிறார். அதாவது ‘தேன் எடுக்கும் அறுகால் பறவையும் (வண்டும்) அல்லி மலரும் நிறைந்த பண்ணன் ஊரிலிருந்து நீயும் உன் விறலியும் மெல்ல நடந்து வளவன் நகரை அடைக’ என ஆற்றுப்படுத்துவதாக அமைகிறது அப்பாடலடிகள். பிறகு, அங்குச் சென்றால் ‘விறகு வெட்டச் சென்றவனுக்கு எதிர்பாராமல் பொன் கிடைத்தது போல இல்லாமல் நிச்சயமாக அவனிடம் வேண்டிய பொருள் கிடைக்கும்’ என்று பாடி முடிக்கிறார். பாட்டின் இடையில், ஆம்பல் மலரில் தேனெடுக்க மொய்க்கும் வண்டுகளை ‘ஆறுகால் பறவைகள்’ என்று குறித்திருப்பது கவனத்துக்குரிய செய்தியாகும்.

மற்றொரு சங்கப் புலவர் ஒருவரும் வண்டைத் ‘தாதுண்பறவை’ (ஐங். 82) என அழைத்து மகிழ்கிறார். சங்க இலக்கியப் பாடல்களில் வருகின்ற ‘ஆறுகால் பறவை’ பற்றிய செய்தி பறவையியலாளர்களின் சிந்தனையைக் கிளப்புவதாய் உள்ளது. ‘வண்டு’ பறவை இனம் என்பதைப் பழந்தமிழ்ப் பாடல்கள் வெளிப்படுத்துகின்றன.

சங்க இலக்கியப் பாடல்கள் தொடங்கி, திருமந்திரப் பாடல் காலம்வரையில் வண்டைப் பறவை எனச் சுட்டி அழைக்கும் வழக்கம் இருந்திருக்கிறது. அதற்குப் பின்னர் அவ்வழக்கம் இருந்தது பற்றிய குறிப்புகள் இல்லை. இதனால் வண்டு பறவை இனம் என்பது காலப்போக்கில் மறைந்துபோயுள்ளது. நம் காலத்தில் வண்டு அறிதாகக் காணக்கூடிய பட்டியலில் இருக்கின்றது. பறவை இனங்களுள் உருவத்தில் பெரிதளவு கொண்டனவற்றை மட்டுமே (மயில், வான்கோழி, சேவல் தொடங்கி கீழ்நோக்கி அளவிட்டால் தெரியும்) பாதுகாப்பது குறித்து கவனம் செலுத்தப்படுகின்றது. அவ்வினத்துள் மிகச் சிறிதான வண்டுகளை நாம் கண்டுகொள்வதே இல்லை; கவனம் செலுத்தவும் நேரமிருப்பதில்லை. பேரிரைச்சலில் மூழ்கிப்போன மனிதச் சமூகத்திற்கு வண்டின் ‘ஓசை’ கூட காதில்விழ வாய்ப்பில்லை என்கின்றபோது அதன் இனத்தையும் பெயரையும் எப்படி தெரிந்துவைத்துக்கொள்ள முடியும்; மெல்ல மறந்து மறைந்து போகத்தான் செய்யும்.

Pin It