பேராசிரியர் ந.முத்துமோகன் தமிழகத்தில் சிறப்பாகக் குறிப்பிடத்தக்க மார்க்சியத் தத்துவ அறிஞர்களுள் ஒருவர். தத்துவம், சமயம், பண்பாடு, தலித்தியம், பெண்ணியம், அமைப்பியல் ஆகியவற்றை மார்க்ஸிய ஒளியில் அணுகுபவர். மேடைகளிலும், ஏடுகளிலும் முழு வீச்சுடன் முற்போக்குக் கொள்கைகளை உரைத்து வருபவர்.

பேராசிரியர் ந.முத்துமோகன் உங்கள் நூலகம் இதழுக்கு அளித்த சிறப்பு நேர்காணல்:

* உங்கள் குடும்பச் சூழல், தாய் தந்தையர், உங்கள் கிராமத்தில் நிலவிய அரசியல் பண்பாட்டுச் சூழல் குறித்துச் சொல்லுங்களேன்.

திருநெல்வேலி மாவட்டம், களக்காடு அருகே யுள்ள சிதம்பரபுரம் எனது கிராமம். அப்பா நடராஜன், அம்மா பவானி. அப்பா விவசாயிகள் இயக்கத்தில் வேலை செய்தவர். களக்காட்டின் வடபுறம் பச்சையாறு பாயும் வடகரை, பத்ம நேரியிலிருந்து, தெற்கே நம்பியாறு பாசனத்தி லுள்ள திருக்குறுங்குடி வரை மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்திலுள்ள பத்துப் பதினைந்து கிராமங்களில் 60-70களில் விவசாய இயக்கம் வலு வாக இருந்தது. 50களின் மத்தியில் விளாத்திகுளம் பகுதியிலிருந்து தோழர் வேலுச்சாமித் தேவர் எங்கள் ஊரில் வந்து தலைமறைவாகத் தங்கியிருந்து அவருக்கு இருந்த வாதநோய்க்கு மருத்துவமும் பார்த்துக் கொண்டார் என்று என் வீட்டில் சொல்லுவார்கள். நான் குழந்தையாக இருந்தபோது தாத்தா வேலுச் சாமித் தேவர் எனக்குத் தொட்டில்கூட ஆட்டி யிருக்கிறாராம்! அம்மா சொல்லுவார்கள். அப்பா அந்தச் சூழலில்தான் கம்யூனிஸ்ட் ஆனார்.

அம்பா சமுத்திரம் பகுதியில் அப்பாவின் மைத்துனர் நவ நீதன் என்ற ஓவியர் அப்பாவுக்கு முந்தியே, தலை மறைவுக் காலத்திலிருந்தே கட்சித் தோழர்களோடு தொடர்பில் இருந்தவர். அவரது செல்வாக்கும் அப்பாவின்மீது உண்டு. தோழர் நல்லகண்ணு, கட்டளைத் தோழர்கள் முத்து மாணிக்கம், சண்முகம் வாத்தியார், எனது அப்பா நடராஜன் ஆகியோர் இந்த வட்டாரத்தில் வேலை செய்தார்கள். களக் காட்டை ஒட்டியுள்ள மேலப்பத்தை, கீழப்பத்தை, வடகரை, சிதம்பரபுரம் கிராமங்களில் செழிப்பான நன்செய் நிலங்கள் திருவாவடுதுறை மடத்துக்கும் களக்காட்டுப் பண்ணையாருக்கும் சொந்தமாக இருந்தன. எனது ஞாபகத்தில் மேலப்பத்தையில் விவசாயிகள் நடத்திய போராட்டங்கள்தாம் மிகப் பழையவை. மேலப்பத்தை, வடகரை கிராமங்கள் தலித் கிராமங்கள். சிதம்பரபுரம் தலித்துகளும் நாடார்களும் கொண்ட ஊர். மடங்களுக்கு எதிரான போராட்டங்கள் எங்கள் வட்டாரத்தில் தீவிர வடிவங்களில் நடந்தன. திருவாவடுதுறை மடம் எந்தத் திசையில் இருக்கிறது என்று வடகரை விவசாயிகளுக்குத் தெரியாது. பொன் விதைத்தால் பொன் விளையும் மிகச் செழிப்பான நிலம். ஆயிரக் கணக்கான ஏக்கர்கள். அந்த நிலங்களில் ஓராயிரம் ஆண்டுகளுக்கு மேலாக உழைத்து வந்த அந்த மக்களுக்கு வயல்களுக்கு நடுவில் ஒரு மண்திட்டில் குடிசைகளைத் தவிர வேறு எதுவும் கிடையாது. விவசாயிகள் அளக்கிற நெல்லுக்கு மடத்துக்காரர்கள் ரசீது கொடுப்பது கூடக் கிடையாது. நினைத்த நேரத்தில் சம்சாரியை நிலத்தைவிட்டு வெளியேற்றி விட அவர்களால் முடியும்.

களக்காடு வட்டாரத்தை செக்டேரியன் வட்டாரம் என்று நெல்லை மாவட்டச் செயலாளராக இருந்த தோழர் வி.எஸ்.காந்தி சொல்லுவார் எனக் கேள்விப்பட்டிருக்கிறேன். திட்டமிட்ட வடிவிலான போராட்டங்கள் ஒரு பகுதிதான். எஞ்சியவையெல்லாம் அவ்வப்போது திடீர் திடீரென நிகழ்ந்துவிடும் மோதல்கள், போலீஸ் கைதுகள், அடிதடிகள் போன்றவை. பலவேளைகளில் நமது தோழர்கள் ஆயுதபாணிகளாகத்தான் அலைய வேண்டி வரும். இப்போது சொல்லுகிறார்களே, கம்யூனிஸ்டுகள் பொருளாதாரப் போராட்டங்களை மட்டும்தான் நடத்தினார்கள் என்று. அதெல்லாம் புத்தகப் படிப்பாளர்கள் கட்டிவிட்ட கதைகள். கிராமப்புறங்களில் மோதல் என வந்த பிறகு பொருளா தாரமாவது, புடலங்காயாவது. எல்லாவகை மோதல் களும், உயிர்ச்சேதம் வரையில் படபடவென நடந்து விடும்.

காட்டில் மரம் வெட்டிய பிரச்சினை, கள்ளச் சாராயம் காய்ச்சிய பிரச்சினை, தனியாகப் போன தோழனை அடித்துவிட்டார்கள், களக்காட்டுப் பிராமணத் தெருவில் நடக்கக் கூடாது என மறித்து விட்டார்கள், பெண்கள் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள், ஒரு காரணமும் இல்லாமல் போலீஸ் ஸ்டேசனில் பிடித்துக்கொண்டு போய்விட்டார்கள், தண்ணீர் பிரச்சினை, மடையை உடைத்து விட்டார்கள், களக்காடு சினிமா தியேட்டரில் மோதல், காட்டில் மிளா வேட்டைக்குப் போய்விட்டு வந்த நம் பையன் களை ஃபாரஸ்ட் ஆபீசர் கட்டி வைத்துவிட்டார்- இப்படி எல்லாப் பிரச்சினைகளையும்தான் விவசாயிகள் சங்கம் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இது சங்கப் பிரச்சினையல்ல என்று எதையாவது விலக்கி வைக்க முடியுமா, என்ன? “வர்க்க மோதல்கள் அல்லாத” பிரச்சினைகளில் ஏன் இறங்கினாய் என்று நம் தோழனிடம் கேட்கமுடியுமா? சரியோ தப்போ, பிரச்சினை என வந்துவிட்டால் இறங்கித் தான் தீரவேண்டும். நான் இப்போது சில வேளை களில் நினைப்பேன், தமிழ்நாட்டில் கிராமப் புறங்களில் கம்யூனிஸ்டுகள் எப்படி வேலை செய் தார்கள் என்பதைப் பற்றித் தனியாக நூல் எழுத வேண்டும் என்று. அவர்களது வேலைகளுக்கும் மாஸ்கோவில் கம்யூனிஸ்ட் அகிலம் எடுத்த முடிவு களுக்கும் டெல்லியில் கட்சியின் தேசிய கவுன்சில் எடுத்த முடிவுகளுக்கும் நேரடியாகத் தொடர்பு இருக்கும் என்றா நினைக்கிறீர்கள்? மாஸ்கோ முடிவுகள், டெல்லி முடிவுகள் ஆகியவற்றிலிருந்து மிக விலகிய சிக்கலான சூழல்களில், மிகப் பிரத்தி யேகமான சூழல்களில் கிராமப்புறக் கம்யூனிஸ்டுகள் வேலை செய்திருப்பார்கள்.

அப்பா பள்ளிப்படிப்பு மிகக் குறைவாகப் படித்தவர். அதனை ஈடுகட்டவோ என்னவோ பள்ளி ஆசிரியர்கள் பலரோடு நெருக்கமாகத் தொடர்பு வைத்திருந்தார். ஏராளமாக அவர்களோடு கலந்துரை யாடுவார். ஒரு கிராமப்புற அரசியலை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல அது அவருக்கு உதவியிருக்க வேண்டும். அவருக்கு ஏராளமான கிறித்தவ, இஸ்லாமிய நண்பர்கள் இருந்தார்கள். களக்காட்டு அரசியலில் முஸ்லிம்கள் அப்பாவுக்குப் பெரிய பலம்.

அப்பா தொண்ணூறுகளில் முதுமை, உடல் பலவீனம் ஆகியவற்றால் நேரடிக் கட்சி வேலைகள் செய்ய முடியாமல் ஆகிவிட்டார். இன்னும் சில ஆண்டுகளில் அவரது நினைவுகள் தவறத் தொடங்கி விட்டன. எங்கள் வீட்டில் அம்மா, பிள்ளைகளை மறந்துவிட்டார். இருப்பினும், சில வேளைகளில் வீட்டாருடைய கண்களைத் தப்பி களக்காட்டை நோக்கி வேகமாக நடக்கத் தொடங்கிவிடுவார். வழியில் யாராவது அவரிடம் கேட்பார்கள், “அண்ணாச்சி, எங்கே போய்க்கொண்டிருக்கிறீர்கள்?” அப்பா தெளிவாகச் சொல்லுவார், “பார்ட்டி ஆபீசுக்கு போய்ட்டு இருக்கேன்”. எல்லாம் மறந்து போன பிறகும், மனைவி, பிள்ளைகளெல்லாம் மறந்து போய்விட்ட பிறகும் அந்த மனிதருக்கு ஒன்று மட்டும் மறக்கவேயில்லை, அது அவரது பார்ட்டி ஆபீஸ். அவரது கால்கள் மறக்காமல் பார்ட்டி ஆபீசுக்குப் போகும் வழியை மட்டும் நினைவில் வைத்திருந்தன. ஒருநாள் இப்படித்தான் வீட்டி லிருந்து இறங்கி நடந்து, வடகரை ஊருக்குச் சென்று சேர்ந்துவிட்டார். அங்கே ஒரு தோழரின் வீட்டில் சாப்பிட்டுவிட்டு அங்கேயே படுத்துத் தூங்கிவிட்டார். என் தம்பி தேடிப்போய்த் திரும்பக் கூட்டி வந்தான். அப்பாவையும் கட்சியையும் என்னால் பிரித்துப் பார்க்க முடியாமல் போய்விட்டது.

* உங்களது பள்ளிக் கல்வி, கல்லூரிப் படிப்பு பற்றி..

கிராமத்தில் ஒரு கத்தோலிக்கப் பள்ளியில் படித்தேன், பிறகு களக்காட்டில் மேல்நிலைப் பள்ளி, அரசுப் பள்ளி. அந்தச் சமயத்தில் எனக்குக் கிடைத்த தமிழாசிரியர்கள் ரொம்ப அபூர்வமான வர்கள். புதன்கிழமை தோறும் நடக்கும் தமிழ் மன்றத்தில் என்னைச் செயலாளனாக ஆக்கினார்கள். வாரம்தோறும் கூட்ட ஆரம்பத்தில், முந்திய வாரத்தில் நடந்த நிகழ்ச்சி குறித்து அறிக்கை எழுதி வாசிக்க வேண்டும். எழுதவும் படிக்கவும் அது ஒரு பெரிய பயிற்சியாக அமைந்தது. பள்ளியில் படிக்கும்போது களக்காட்டில் பெரிய தெருவை அடைத்துப் பந்தல் போட்டு கலை இலக்கியப் பெருமன்றம் முப்பெரும் விழாவை நடத்தியது. இயல், இசை, நாடகம் என மூன்று நாட்கள். “நகரத் தந்தை” என்ற ஓர் அரசியல் நாடகம். ஒரு பஞ்சாயத்துத் தலைவரின் மோசடி களைப் பற்றிய நாடகம்.

அந்தக் காலங்களில் சட்டமன்றத் தேர்தல்களை விட பஞ்சாயத்துத் தேர்தல்களே மிகச் சூடாக நடக்கும். அப்பா அந்த வேலைகளில் தீவிரமாக ஈடுபடுவார். பஞ்சாயத்துத் தலைவர் தேர்தலுக்கு முதல்நாள் ஓட்டுப் போட முடியாதபடி உறுப்பினர்களைக் கடத்திக் கொண்டு சென்றுவிடுவார்கள். காங்கிரஸ், தி.மு.க. மட்டுமின்றி நமது கட்சியும் இது போலக் கடத்தல் களில் ஈடுபடவேண்டி வரும். அப்பாவைக் கடத்த முயற்சிகள் நடந்தன. வீட்டையும் ஊரையும் சுற்றிக் கட்சிக்காரர்கள் இரவு முழுவதும் காவல் காத்த நாட்களெல்லாம் இன்னும் நினைவில் உள்ளன.

எம் அம்மா கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர். எனவே எனக்கு அந்த மாவட்டத்தோடு தொடர்பு அதிகம். பி.யு.சி. கல்லூரிப் படிப்புக்கு நாகர்கோவில் சென்றேன். அதை முடித்த பிறகு தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரிக்கு பி.எஸ்சி. வேதியியல் படிக்க வந்து சேர்ந்தேன்.

* பேராசிரியர் நாவாவை எப்பொழுது எப்படிக் கண்டு பிடித்தீர்கள்?

தூத்துக்குடிக் கல்லூரியில் சேர்ந்து கட்டணம் செலுத்துவதற்காகக் கல்லூரி அலுவலகத்தில் வரிசையில் நின்றுகொண்டிருந்தேன். என்னோடு என் அப்பாவும் நின்றுகொண்டிருந்தார். திடீரென அங்கு வந்த ஒருவரோடு அப்பா பேசத் தொடங்கினார். என்னிடம் திரும்பி, “டேய், இவர் பேராசிரியர் சிவசுப்பிர மணியன், எனக்குக் கட்சி வகுப்பு எடுத்த ஆசிரியர். இங்குதான் பணிபுரிகிறார். இனி உனக்கு ஆசிரியர்” என்று அறிமுகப்படுத்தி வைத்தார். அவரது சொற்கள் பலித்துவிட்டன. கல்லூரி தொடங்கியபோது மாணவர் அமைப்பினர் என்னை நெருங்கி வந்தனர். பாரதி, அப்பாத்துரை என்ற இரட்டையர்கள். நான் முதலாண்டுக்குள் நுழையும்போது அவர்கள் இருவரும் மூன்றாம் ஆண்டில் படித்துக் கொண் டிருந்தார்கள். பாரதி, தோழர் நல்லகண்ணுவின் மைத்துனர். தோழர் அப்பாத்துரை இப்போது கட்சியின் தலைவர்களில் ஒருவராக உள்ளார். அவர்களுடன் சேர்ந்து பேராசிரியர் சிவசுப்பிர மணியனின் வீட்டுக்குச் செல்லத் தொடங்கினேன்.

தூத்துக்குடிக் கல்லூரி வாழ்வும் பல மாணவர் போராட்டங்களோடுதான் சென்றது. தோழர்கள் பாரதி, அப்பாத்துரைக்குப் பிறகு, ஜீவானந்தம் என்று ஒரு தோழர், தோழர் முருகானந்தத்தின் மகன் ஆறுமுகம், நாரைக்கிணறு கிராமத்தைச் சேர்ந்த பகத்சிங் என்ற தோழர், இப்படிப் பல தோழர்கள். தூத்துக்குடியும் அரசியலில் ஒரு சூடான வட்டாரம். ஒண்ணாம் கேட்டில் வெட்டு, மூணாம் கேட்டில் வெட்டு என்று செய்திகள் அடிக்கடி காதில் விழும். நகர அரசியலுக்கு இணையாக, கல்லூரியில் நாங்களும் சூடாகத்தான் செயல்பட்டோம். இவற்றின் ஊடாக, எப்படியோ பேராசிரியர் சிவம் அவர்களின் மாணவனாக ஆகிவிட்டேன். என்னைப் புத்தகம் படிப்பவனாக அவர் அடையாளம் கண்டுகொண்டார். அவர் வீட்டில் புத்தகங்கள் முழு நூலகமாகக் குவிந் திருக்கும். அவர் பேசுவதெல்லாம் புதிதாக இருக்கும். கல்லூரிப் படிப்புக்கு இணையாக இன்னொரு படிப்பு அப்போது தொடங்கியது. அவர் வாரந் தோறும் பாளையங்கோட்டை சென்று பேராசிரியர் நாவாவைச் சந்தித்து வருவார். கொஞ்சம் கொஞ்ச மாக என்னையும் அழைத்துச் செல்லத் தொடங்கினார்.

அந்த நாட்களில் ஆராய்ச்சிக் கூட்டம் முறையாக நடந்துகொண்டிருந்தது. பாளையங்கோட்டையில் பேராசிரியரின் தனிப்பயிற்சிக் கல்லூரியில்தான் ஆராய்ச்சிக் கூட்டங்கள் நடைபெறும். தூத்துக் குடியிலும் கூட்டங்கள் நடந்தன. ஒரு பெரிய அறிஞர் பட்டாளம் ஏதோ ஒரு முக்கியமான வேலையைச் செய்துகொண்டிருந்ததைப் போன்ற உணர்வுதான் என்னில் தங்கியது. படிக்க ஆரம் பித்தேன். எட்டயபுரம் பாரதி விழா, குமரி மாவட்ட முகாம்கள் ஆகியவற்றுக்குப் பேராசிரியர் நாவா எல்லோருக்கும் டிக்கட் எடுத்துக் கூட்டிச் செல்வார். நாலைந்து பேராசிரியர்கள், நாங்கள் நாலைந்து பேர், போடு, கருப்பட்டிகள், இளைஞர்கள். கொஞ்சம் பேசவும் எழுதவும் ஆரம்பித்தேன். 74 ஆம் ஆண்டாக இருக்கலாம். துக்ளக் சோ அவரது பத்திரிகையில் “நமது தலைநகரம் டில்லி அல்ல, மாஸ்கோ” என்று ஒரு தொடர்கட்டுரை எழுதினார். பத்துப் பன்னிரண்டு இதழ்களில் வெளிவந்தது.

பேராசிரியர் நாவா ஒருநாள் திடீரெனக் கேட்டார், “துக்ளக் சோ கட்டுரைகளுக்குப் பதில் எழுதுகிறாயா?” நான் ஒத்துக்கொண்டேன். பேராசிரியரின் வீட்டிலும் இன்னும் பல இடங்களிலும் நூல்களைச் சேகரித்துப் பத்துக் கட்டுரைகள் எழுதினேன். தோழர் பழனியப்பன் நடத்தி வந்த “சாந்தி” பத்திரிகையில் தொடர்ச்சி யாக அவை வந்தன. கடைசிக் கட்டுரை “சோ ஒரு நடுநிலைவாதியா?” என்ற பொதுத் தலைப்பில் எழுதினேன். அதைப் படித்துப் பார்த்துவிட்டு, பேராசிரியர் நாவா மேலும் சில பக்கங்கள் முன்னும் பின்னுமாக எழுதிச் சேர்த்தார். கட்டுரையை ஜன சக்தி வார இதழுக்கு அனுப்பி வைத்தார். ஜனசக்தி நடுப்பக்கத்தில் அது ஒரு பெரிய கட்டுரையாகப் பிரசுரமாயிற்று. எனக்குத் தலைகால் புரியாத சந்தோஷம். சென்னையிலிருந்த சில தோழர்கள் என்னைக் கவனிக்க ஆரம்பித்தனர். தோழர் விருத்தகிரி அவர்களில் ஒருவர். ‘மார்க்சிய ஒளி’ பத்திரிகையில் மொழிபெயர்த்து வெளியிடுவதற்குக் கட்டுரைகள் அனுப்பி வைத்தார். மார்க்சியக் கோட்பாட்டுக் கட்டுரைகள் அவை. என் சக்திக்கு மீறியவை. சிரமப்பட்டு ஆனால் விருப்பத்துடன் செய் தேன். பேராசிரியரும் முதுகில் தட்டிப் பாராட்டு வார்.

பாளையங்கோட்டையில் பேராசிரியரின் தொடர்பு கிடைத்த நாட்களில் சனி, ஞாயிறு விடுமுறை நாட்களில் பேராசிரியர் எங்களுக்கென மார்க்சிய வகுப்புகள் ஏற்பாடு செய்வார். வகுப்பில் மாணவர்கள் என நாங்கள் நாலைந்து பேர் மட்டுமே. மங்கை அக்கா, காசி விஸ்வநாதன், ராமச்சந்திரன், நான், இன்னும் ஒன்றிரண்டு பேர் இருக்கலாம். இயங்கியல் பொருள்முதல்வாதம், வரலாற்றுப் பொருள்முதல்வாதம், மார்க்சிய அழகியல், விஞ்ஞான தொழில்நுட்பப் புரட்சி என்ற தலைப்புகளில் வகுப்புகள். வகுப்புகளையெல்லாம் டேப் ரிக்கார்டரில் பதிவு செய்துவிட்டோம். பின் அவற்றை எடுத்து எழுதி நூலாக்கம் செய்யும் பொறுப்பு எனக்குத் தரப்பட்டது. நான்கு முக்கியமான நூல்கள் அந்த நேரத்தில் என்சிபிஎச் வெளியீடாக வந்தன.

பேராசிரியர் அதிகாலையில் எழுந்துவிடுவார், இரவு தாமதமாகத்தான் தூங்கச் செல்லுவார். பகலில் சில மணி நேரங்கள் தனிப்பயிற்சிக் கல்லூரி வகுப்புகள். எஞ்சிய எல்லா நேரமும் படிப்பும் எழுத்தும் ஆராய்ச்சி, கலை இலக்கிய முகாம்கள் வேலையும்தான். இப்படி ஒரு முழுநேரச் சிந்தனை யாளரை நான் பார்த்ததில்லை.

பேராசிரியர் கடுமையான பிடிவாதக்காரர். அந்தப் பிடிவாதம்தான் அவரைப் பெரிய வேலை களைச் செய்ய வைத்தது எனப் பின்னால் நினைத் திருக்கிறேன். ஆனால் சாதாரண விஷயங்களிலும் அவர் பிடிவாதக்காரர். வெளியூரில் ஏதாவது கூட்டத்திற்காக ஒரு ஓட்டலில் போய்த் தங்கி யிருப்போம். சிகரெட் வாங்கி வரச் சொல்லுவார். அந்தத் தெருக்கோடியில் கடைசியில் ஒரு சிறு கடை இருக்கிறது, அதில் போய் வாங்கி வா என்பார். ‘நீங்கள் சொன்ன இடத்தில் அப்படி ஒரு கடை இல்லை, எதிரே இருக்கிறது, வாங்கி வரு கிறேன்’ என்பேன். விடமாட்டார். அந்த இடத்தில் ஒரு கடை இருக்கிறது என்று உறுதியாக வாதிடு வார். சரி என்று சொல்லிவிட்டு நான் கீழே இறங்கி வந்து விடுவேன். அங்கே அந்தக் கடை உண்மையில் இருக்காது. வேறு கடையில் சிகரெட் வாங்கிக் கொண்டு வந்து கொடுப்பேன். எந்தக் கடையில் வாங்கினாய் என்று கேட்பார். நான் எதிரே இருந்த கடையில் என்பேன். அவர் சொன்ன கடை அங்கே இல்லை என்று சொல்லுவேன். அப்படியும் ஒத்துக் கொள்ளமாட்டார். மாலையில் அந்த வழியாக நடந்து செல்லுவோம். அப்போதும் அப்படி ஒரு கடை முன்பு இருந்தது, இப்போது இடத்தை மாற்றிவிட்டார்கள் என்பார். நானும் நண்பர்களும் அவரது சிறுபிள்ளைப் பிடிவாதத்தை ரசித்து சிரிப்போம்.

வீதியில் நடந்து போகும்போது என் தோளில் கைபோட்டபடி பேசிக்கொண்டே வருவார். எதிரே ஒரு பத்து அடி தூரத்தில் ஒரு பள்ளத்தில் நீர் தேங்கி நிற்கும். “அதோ பள்ளத்தில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. கவனமில்லாமல் மிதித்து விடாதே” என்பார். சரி என்று சொல்லுவேன். அவர் பேசிக் கொண்டே வருவார். பள்ளத்தில் கால் வைக்காமல் நான் தாண்டி விடுவேன். ஆனால் அந்த இடத்தில் வரும்போது சரியாக அந்தத் தண்ணீரில் அவர் காலை வைத்து விடுவார். வேட்டி நுனி ஈரமாகி விடும். அய்யய்யோ என்பார்.

வீட்டிலிருந்து கல்லூரிக்குப் புறப்படும்போது பேனாவுக்கு மை ஊற்றுவார். நல்ல வெள்ளை நிறத்தில் வேட்டியும் சட்டையும் போட்டிருப்பார். மையைச் சட்டையிலும் வேட்டியிலும் கொட்டி விடுவார். பேனாவுக்கு நான் மை ஊற்றித் தருகிறேன் என்று யார் சொன்னாலும் கேட்கமாட்டார். தன்னால் சரியாக மை ஊற்ற முடியும், ஊற்றியே தீருவேன் என்று பிடிவாதமாக இருப்பார். என்றைக் காவது ஒருநாள் சிந்தாமல் மை ஊற்றிவிட்டால் கூப்பிட்டுச் சொல்லுவார், “பார், சிந்தவேயில்லை” என்று. அற்புதமான மனிதர் அவர். வீட்டில் காப்பித் தூள் வாங்கி வரச் சொல்லி அனுப்புவார்கள். அவர் அந்த நேரத்திலும் உட்காரவைத்து மார்க்சியம் சொல்லிக்கொண்டிருப்பார். காப்பித் தூள் வாங்கப் போக வேண்டும் என்று நான்கு முறை சொன்ன பிறகுதான் கவனிப்பார்.

எனது ஆசிரியர் சிவசுப்பிரமணியன் பற்றிச் சொல்லும்போது பேராசிரியர் நாவா, “உன் சின்ன வாத்தியார்” என்பார். அதாவது, அவர் எனது பெரிய வாத்தியார். பேராசிரியர் சிவம் என் சின்ன வாத்தியார். இப்படி இரண்டு வாத்தியார்கள் கிடைத்ததால்தான் என் கதை இன்றுவரை ஓடுகிறது. ஆராய்ச்சிக் குழுவில் பேராசிரியர்கள் தோதாத்ரி, தி.சு.நடராஜன், வெ.கிருஷ்ணமூர்த்தி, கா. சுப்பிர மணியன், ஆ.சுப்பிரமணியன் எல்லோருமே எனக்கு ஆசிரியர்கள் தாம்.

* மாஸ்கோவில் உங்கள் கல்வி, பிற அனுபவங்கள் பற்றிச் சொல்லுங்கள்.

எனது குடும்பத்திற்கு உதவவேண்டும் என் பதற்காகத் தான் பேராசிரியர் என்னை மாஸ்கோ விற்கு அனுப்பினார். தூத்துக்குடியில் படித்த ரசாயனப் பாடத்தையே தேர்வு செய்தோம். இந்தோ-சோவியத் நட்புறவுக் கழகத்தின் சார்பாக மாஸ்கோவிற்குத் தேர்வு செய்யப்பட்டேன். துக்ளக் சோவின் கட்டுரை களை விமர்சித்து எழுதிய கட்டுரைகள் என் தேர்வுக்கு உதவின. மற்றபடி, எல்லா ஏற்பாடுகளையும் செய்தவர் பேராசிரியர்தான். ஐந்து வருடப் படிப்பு. கூடுதலாக ஒரு வருடம் ரஷ்ய மொழிப் பயிற்சி. மூன்று ஆண்டுகள் பொது ரசாயனம், அடுத்த இரண்டு ஆண்டுகள் அங்கக ரசாயனம் (Organic Chemistry). அங்கிருந்த படிப்பு முறையைப் பற்றிக் கொஞ்சம் சொல்லியாக வேண்டும்.

முதலில் ரஷ்ய மொழிப் பயிற்சி குறித்து. எழுத்துக்களை முதலில் படித்துக் கொடுக்கும் பழக்கம் கிடையாது. முதல் வகுப்பிலேயே உரை யாடல் வடிவத்தில்தான் வகுப்புகள் தொடங்கும். முதல் நாள் வகுப்பிற்கு ஆசிரியர் முந்தி வந்து அமர்ந்து விட்டார். நாங்கள் வகுப்புக்குள் நுழையும் போதே “வணக்கம்” என்பதற்கான ரஷ்யச் சொல்லை உச்சரித்தபடி எங்களை வரவேற்றார். முதலில் என்ன வென்று தெரியாமலிருந்தாலும் அவர் வணக்கம் சொல்லுகிறார் என்பதைப் புரிந்துகொண்டு அதே ரஷ்யச் சொல்லை நாங்களும் திருப்பிச் சொல்லு வோம். ஆக, முதல்நாளே எங்களை ரஷ்ய மொழியில் பேசவைத்து விட்டார். இப்படித்தான் எல்லா வகுப்புகளும் பேச்சாகவும் உரையாடலாகவுமே நகரும். இடையிடையே போர்டில் எழுதிப்போடத் தொடங்குவார். சக மாணவர்களோடு எப்படி அறிமுகமாகிக் கொள்ளுவது? ஆஸ்பத்திரியில் எப்படிப் பேசுவது? பஸ்சில் எப்படிப் பேசிக் கொள்வது? கேன்டீனில் என்ன உணவை எப்படிக் கேட்டு வாங்குவது? இப்படித்தான் எல்லா வகுப்பு களும் நகரும். பத்துப் பதினைந்து வரிகளாவது பேசத் தெரிந்த பிறகுதான் எழுத்துக்கள் வாசிப்பது எல்லாம்.

ரசாயனம் படிக்கும்போது, 60-70 மாணவர் களுக்கு மொத்தமாக லெக்சர் கிளாஸ். எங்களுக்குப் புரிகிறதா புரியவில்லையா என ஆசிரியர் யோசிக்க மாட்டார். லெக்சரை விரிவாக எடுத்துவிட்டுப் போய் விடுவார். அன்று மாலையே செமினார் வகுப்பு நடக்கும். 10-15 மாணவர்கள் மட்டும்தான் அதில் இருப்பார்கள். காலையில் லெக்சரில் கேட்டதை அக்குவேறு ஆணிவேராகப் பிய்த்து விரிவாக விளக்க மாக இன்னொரு ஆசிரியர் வகுப்பு நடத்துவார். செமினார் வகுப்பில் ஆசிரியர் ஏராளமாக மாணவர் களை அந்தப் பாடம் குறித்துப் பேசவைத்து விடு வார். பாதி நேரத்துக்கு மேல் மாணவர்கள் தாம் மேடையில் நின்று பாடத்தை விளக்கவேண்டும். நம் ஊரில் குழந்தைகளுக்குத் தான் அதிகம் வீட்டுப் பாடங்கள் தருகிறார்கள். ரஷ்யாவில் பள்ளிக் கல்வி முடிவது வரையில் விஷேசமாக வீட்டுப்பாடங்கள் கிடையாது. ஆனால் உயர்கல்வியில், அதாவது கல்லூரிகளில், பல்கலைக்கழகங்களில் தினசரி வீட்டுப் பாடங்கள் தருவார்கள். ஒவ்வொரு அடுத்த வகுப்பிலும் வீட்டுப் பாடங்கள் கறாராக சரி பார்க்கப்படும். வீட்டுப் பாடங்களைப் போட வேண்டுமானால், லெக்சர் வகுப்புகளைக் கவன மாகப் பின்பற்ற வேண்டும். நூலகங்களுக்குச் சென்றாக வேண்டும். பிற மாணவர்களோடு (அல்லது மாணவிகளோடு) சேர்ந்து அமர்ந்து படித்தாக வேண்டும்.

ரஷ்ய கல்விமுறையில் உள்ள ஓர் அற்புதமான விஷயம், ஆரம்பத்திலிருந்தே நாம் படிக்கும் பாடங்கள் குறித்து நம்மை வாயைத் திறந்து பேசவைத்து விடு வார்கள். பேப்பரில் எழுதி ஆசிரியரிடம் கொண்டு கொடுத்தால் அவர் அதைப் படித்தெல்லாம் பார்க்க மாட்டார். பேப்பரில் எழுதியதை நீயே கையில் வைத்துக்கொள், என்ன எழுதியிருக்கிறாய், அதைச் சொல் என்றுதான் ஆசிரியர் கேட்பார். இது ஓர் அற்புதமான முறை, பரிட்சைகளும் அப்படித்தான். பரிட்சைக்கு வரும் எல்லாக் கேள்விகளையும் ஒரு வாரத்துக்கு முன்னதாகவே நோட்டீஸ் போர்டில் போட்டு விடுவார்கள். ஏதாவது இரண்டு கேள்விகள் பரிட்சைக்கு வரும். பரிட்சை ஹாலுக்குள் நுழைந்து அந்த இரண்டு கேள்விகளைப் பெற்றுக் கொண்டு அந்த அறைக்குள் அமர்ந்து தாளில் எழுதிப் பார்த்துக் கொள்ளலாம். ஆனால் ஆசிரியரின் முன்னால் போய் அமர்ந்து விட்டால் வாயைத் திறந்து பேசி அந்தக் கேள்வி களுக்கான பதில்களை மாணவர் விளக்கியாக வேண்டும். அந்தப் பாடத்தில் முழுதாக எந்தப் பகுதியிலிருந்தும் குறுக்குக் கேள்விகள் கேட்பதற்கு ஆசிரியருக்கு உரிமை உண்டு. அதாவது, அந்தப் பாடம் போதுமான அளவு முழுமையாகத் தெரிந்தால் தான் மாணவர் பரிட்சையில் தேற முடியும்.

தமிழ் நாட்டில் செமெஸ்டர் தோறும் கட்டுக் கட்டாக டன் கணக்கில் பேப்பர்களில் மாணவர்கள் பரிட்சை எழுதித் தள்ளுகிறார்கள். அதை நூற்றுக் கணக்கான ஆசிரியர்கள் உட்கார்ந்து மதிப்பிட்டு, மார்க் போட்டுத் தள்ளுகிறார்கள். ஆனால் படித்த பாடத்தை வாயைத் திறந்து எடுத்துச் சொல் என்றால் எந்த மாணவருக்கும் சொல்லத் தெரிவதில்லை. இதையும் தாண்டி, படிக்கும் பாடங்களைப் பற்றி விவாதிக்கும் பண்பு எந்த மாணவரிடமும் இருப்ப தில்லை. ஆராய்ச்சிப் பட்டம் படிக்கும் மாண வருக்குக் கூட விவாதிப்பதற்கான பயிற்சி இருப்ப தில்லை. ஆனால் ஆரம்பத்திலிருந்தே பாடங்களைப் புரிந்து படித்து, அது குறித்து இன்னொருவரின் முகம் பார்த்துப் பேசத் தெரிந்த மாணவரால், ஒரு கட்டத்திலிருந்து அது குறித்து விவாதிக்கவும் தெரிந்து விடும். நமது கல்வி முறையும் தேர்வு முறையும் பேசுவதற்கும் விவாதிப்பதற்கும் எதிரானது.

மாஸ்கோவில் முதலில் ரசாயனம் படித்தேன். அதன் பின்னர் மெய்யியலுக்கு மாறிவிட்டேன். ஒரு வாய்மொழித் தேர்வுக்குப் பிறகு மெய்யியலில் ஆராய்ச்சி செய்வதற்கு அனுமதி தந்தார்கள். நான் ரசாயனம் நான்காவது ஆண்டு படிக்கும்போது பேராசிரியர் நாவா மறைந்து விட்டார். ஒரிஸ்ஸாவி லிருந்து தோழர் பரிதா என்ற ஒரு மொழிபெயர்ப் பாளர் மாஸ்கோவில் பணிபுரிந்தார். அவர் கட்சி சார்பு கொண்ட மாணவர்களோடு நெருக்கமாகத் தொடர்பு வைத்திருந்தார். அவர் மனதில் ஒரு விசித்திரமான ஆசை. டில்லியில் மார்க்சியத்துக் காக ஓர் ஆராய்ச்சி நிறுவனம் உருவாக்க வேண்டும் என்பது தான் அந்த ஆசை. மாஸ்கோவில் படித்துக் கொண்டிருந்த நான்கு மாணவர்களை அவர் அந்த மார்க்சிய ஆராய்ச்சி நிறுவனத்திற்காகத் தயார் செய்ய வேண்டும் என முடிவு செய்தார். அபிஜித் பட்டாச்சார்யா, ஜே.எஸ்.மணி (தமிழ் நாட்டுக் காரர்), நான், இன்னொரு அஸ்ஸாம் மாணவர் ஆகிய நால்வரையும் அவரவர் பாடங்களை மாற்றிக் கொண்டு அரசியல் பொருளாதாரம், மெய்யியல், வேளாண்மைப் பொருளாதாரம் ஆகிய பாடங் களில் ஆராய்ச்சி செய்யச் சொன்னார். இப்படித் தான் எனது படிப்பின் ஐந்தாவது ஆண்டில் ஒரு கனவு உருவாயிற்று. ரசாயனம் படித்த நான் மெய்யி யலில் ஆராய்ச்சிப் பட்டம் படிக்கத் தொடங்கினேன்.

* அந்த டில்லி மார்க்சிய நிறுவனம் என்ன ஆயிற்று?

நாங்கள் முனைவர் பட்டத்தை முடிப்பதற்கு ஒரு வருடத்திற்கு முன்னதாக தோழர் பரிதா இந்தியாவிற்குத் திரும்பி வந்தார். ஒரிஸ்ஸாவிற்குச் சென்றார். அடுத்த ஆண்டில் ஒரிஸ்ஸாவில் ஒரு தேர்தல் வந்தது. அந்தத் தேர்தலில் போட்டியிட்டார். சேமித்து வைத்திருந்த பணத்தையெல்லாம் செல வழித்துவிட்டார். அதோடு அவரது கனவும் காணாமல் போய்விட்டது. நாங்கள் படித்து முடித்து வந்து சொந்தமாக வேலைகளைத் தேடவேண்டியதாயிற்று.

* ரஷ்யாவில் எத்தனை ஆண்டுகள் இருந்தீர்கள்? சோவியத் சமூகம் குறித்த உங்கள் மதிப்பீடு என்ன? அங்கு மார்க்சியம் தொடர்பாக என்னென்ன சிந்தனைப் போக்குகள் இருந்தன? விரிவாகச் சொல்லுவீர்களா?

(அடுத்த இதழில்)