2012-ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாதெமி விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 24 படைப்புகளுள் முற்போக்கு எழுத்தாளர் டி.செல்வராஜ் எழுதிய ‘தோல்’ நாவல் தேர்வு செய்யப்பட்டுள்ளது. நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் வெளியிட்டுள்ள இந்த முற் போக்கு நாவல் திண்டுக்கல் பகுதியில் தோல் தொழிற்சாலைகளில் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த தொழி லாளர்கள் அடிமைப்படுத்தப்பட்டமை, அவர்கள் தொழிற் சங்கம் அமைத்து, தொழிற்சாலை நிர்வாகத்தை எதிர்த்துப் போராடி வெற்றி பெற்றமையைக் களமாகக் கொண்டு எழுதப்பட்டது. இதில் 1920 முதல் 60 வரையிலான திண்டுக்கல் நகர அரசியல், சமூக, பொருளாதார வரலாறு கோவையாகப் பின்னப் பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில், மாவடி என்னும் சிற்றூரில் 14-01-1938 அன்று பிறந்தவர் செல்வராஜ். இவருடைய தாய் - தந்தையர் கேரள - தமிழ்நாடு எல்லையில் உள்ள கண்ணன் தேவன் தேயிலைத் தோட்டத்தில் பணியாற்றியவர்கள். இந்தக் குடும்பச் சூழலின் மூலம் இவரது இளம் வயதில் வர்க்கப் பிரிவினையின் தோற்றத்தைத் தெளிவுபடுத்திக் கொள்ள முடிந்தது. பின்னர், திருநெல்வேலியில் இளங்கலைப் பட்டமும் சென்னையில் சட்டத்தில் பட்டமும் பெற்று வழக்குரைஞரானார்.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி இதழான ஜனசக்தி இதழில் முதன்முதலாக சிறுகதை எழுதிய டி.செல்வ ராஜ் தொடர்ந்து தாமரை, சரஸ்வதி, செம்மலர், சாந்தி, நீதி, கண்ணதாசன் ஆகிய இதழ்களிலுமாக 120-க்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதியிருக் கிறார்.

தோழர் ப.ஜீவானந்தம் அவர்களின் பொதுவுடைமைக் கொள்கையினால் ஈர்க்கப்பட்ட செல்வராஜ் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் இணைந்தார்.

திருநெல்வேலி மாவட்டத்தில் நடைபெற்ற விவசாயப் போராட்டத்தைப் பின்புலமாகக் கொண்டு செல்வராஜ் எழுதிய மலரும் சருகும் (1967) நாவல் தமிழில் எழுதப்பட்ட முதல் தலித் இலக்கியம் எனப் புகழ்பெற்றது. அவர் எழுதிய முற்போக்கு நாடகங்களுள் ஒன்றான யுகசங்கமம் (1968) நாடகத்துக்குத் தமிழ்நாடு அரசு பரிசு வழங்கியது. அந்நாடகம் டெல்லி பல்கலைக்கழகத்தில் தமிழ் ஆய்வுத் துறையில் பாடநூலாக வைக்கப்பெற்றுள்ளது.

1973-இல் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் நிறுவனம் வெளியிட்ட செல்வராஜின் தேநீர் நாவல், தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் துயரத்தையும், எதிர்ப்புப் போராட்டத்தையும் பின்னணியாகக் கொண்டது.

மூலதனம் (1977), அக்னி குண்டம் (1980), ஜீவா (சாகித்ய அகாதெமி வெளியீடு, 2005), சாமி சிதம்பரனார் (சாகித்ய அகாதெமி, 2006), பிரதோஷம் (வரம், சென்னை, 2007) ஆகிய சிறந்த நாவல்களையும் இயற்றிய எழுத்தாளர் செல்வராஜுக்கு, தோல் நாவலுக்கு, தமிழ்நாடு அரசின் சிறந்த நாவலுக்கான விருதை (2010), தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா 13, ஏப்ரல், 2012 அன்று வழங்கினார்.