‘குன்றிலிட்ட தீ’ என்ற இந்நாவல் மிகப் பழங் காலத்தில் நடந்த உண்மையான சம்பவங்களை வைத்துப் புனையப்பட்டிருக்கிறது. இந்நூலின் ஆசிரியர் ஹிமான் ஷு ஜோஷி தம் மாநிலத்தின் மூத்த குடிமகன் ஒருவர் தம் வாயிலாகக் கூறக் கேட்டு அக்கதையைத் தன்னுடைய நுட்பமான படைப் பாற்றலால் ஓர் அற்புதமான நாவலாகப் படைத் திருக்கிறார். இந்தி மொழியில் எழுதப்பட்ட இந் நாவலை, சிறந்த மொழிபெயர்ப்பாளருக்கான விருதைப் பெற்ற திருமதி அலமேலு கிருஷ்ணன் மொழிபெயர்ப்பு என்ற படிவமே படியா வண்ணம் அழகான நாவலாக நமக்குத் தந்திருக்கிறார்.

இனி கதைக்குள் செல்வோம். பெண் சுதந்திரம் என்றால் என்னவென்று அறியாக் காலத்தில் ஒரு பெண்ணை ஒட்டுமொத்த சமூகத்தினரே பாடாய்ப் படுத்தி வைத்திருந்தனர். அவள் தான் கோமதி. சிப்பிக்குள் பிறந்த நன்முத்தாகத் தோன்றிய அழகு தேவதை தன்னுடைய பன்னிரண்டாவது வயதிலேயே ஒரு மூர்க்கனுக்கு வாழ்க்கைத் துணையாகச் சென்றவள், சில தினங்களில் கைம்பெண்ணாகத் திரும்பி விடு கிறாள் - என்ன செய்வதென்றே அறியாத நிலையில். கோமதியின் விதவைத் தாய் அவளை பிரமா என் பவனுக்கு மறுமணம் செய்து கொடுத்தாள். அவர் களுக்கு ஓர் ஆண் குழந்தை பிறந்தது. அவன் பெயர் குன்னு.

இதற்குப்பின்தான் கோமதியின் வாழ்வில் அனைத்துத் துயரங்களும் நடந்தேறின. பிரமா தேவராம் இருவரும் சகோதரர்கள். சிறுவயதிலேயே பெற்றோரை இழந்த அவர்கள் சித்தப்பா கலியாவால் வளர்க்கப்பட்டனர். அவருக்கு ஒரு மகன். அவன் பெயர் தேஜ்வா. பிரமாவின் சகோதரன் தேவராம் இராணுவத்தில் பணியாற்றுகிறான். பிரமா பரமசாது. எனவே, கலியா சித்தப்பா அவனை ஓர் அடிமையைப் போல நடத்தலானார். கோமதி வந்தவுடன் எங்கே அவர்களின் சொத்தை அனுபவிக்காமல் போய் விடுமோ என்று அஞ்சி, பிரமாவை அடித்துப் பைத்தியம் ஆக்கியதோடல்லாமல் கோமதியை தினமும் அடித்துத் துன்புறுத்தி, அவள் நடத்தையைப் பற்றி அவதூறாகப் பேசத் தொடங்கினார். இவளுக்கு ஆதரவாய் இருந்த ஒரே ஜீவன் இராணுவத்தில் உள்ள தேவராம் மட்டுமே. அவனும் சில நாட்களில் இறந்துபட, அவளின் வாழ்வே கேள்விக்குறியானது. இச்சூழலில் கோமதிக்கு ஆதரவு யாருமில்லை என் பதை நன்றாக அறிந்துகொண்ட கலியா சித்தப்பா அவளிடம் தவறாக நடக்க முயன்று தோற்றார். அதன் பின்பு அவரின் மகனும் இதே காரியத்தில் ஈடுபடவும், அதனை வேடிக்கையாய் மட்டுமே எண்ணிய கணவனின் செயலைக் கண்டு வருந்தினாள்.

கோமதி இவர்களின் கொடுமையைப் பொறுக்க மாட்டாமல் தற்கொலை செய்து கொள்ளவேண்டும் என்று திட்டமிட்டு கிராமத்தைவிட்டே சென்று விட்டாள். பின் தன் மகன் குன்னுவிற்காக அம் முடிவை மாற்றி குசல்ராம் என்பவரிடம் தஞ்சம் அடைகிறாள். அவருக்கு இரண்டு மனைவிகள் இருக்கின்றனர். அவர்களுக்குக் குழந்தை இல்லை. எனவே அவர் கோமதியின் கணவருக்குப் பணத்தை ஈடுகட்டி அவளைத் தன் மனைவியாக்கிக் கொண்டார். ஆனால் அவளால் தன் மகன் குன்னுவையும், பாவப் பட்ட தன் கணவரையும் மறக்க முடியவில்லை. இந்நிலையில், கோமதி அங்கேயும் நிம்மதியாய் இருக்கமுடியாமல் வேறிடம் சென்றுவிடுகிறாள்.

பின்பு ஓராண்டுக்காலம் கூலி வேலை செய்து பணத்தைச் சேர்த்து அதனைக் குசல்ராமிடம் கொடுத்துவிட்டுக் கணவரையும் மகன் குன்னுவையும் பார்க்கச் சொல்கிறாள். அந்தோ பரிதாபம், அங்கே அவள் கணவர் இறந்து கிடக்கிறான்.

ஒவ்வொரு காலகட்டத்தில் கோமதி தன்னைக் காப்பாற்றிக் கொள்ள முயலும்போது இக்கட்டான நிலையில் இருந்தாலும் தன் கணவன் உயிருடனாவது இருக்கிறானே என்ற தகவலும் அவருடைய அந்த முடிவை மாற்றச் செய்தது.

இக்கதையில் வரும் கோமதியின் பால்ய காலத்திய கணவன் முதற்கொண்டு அவள் வாழ்வில் சந்தித்த அனைவரும் அவளை ஒரு பெண்ணாக - இல்லை- ஒரு மனிதப் பிறவியாகக் கூடக் கருதவில்லை. இவள் அனுபவித்த அனைத்துத் துன்பங்களுக்கும் காரண மான - அந்த ஆடவர்களின் பின்னால் பெண்களே பெரிதும் காயப்படுத்தியிருக்கின்றனர். பெண்ணிற்குப் பெண்ணே எதிரிகளாய் இருக்கின்றார்கள் என்றால் மிகவும் வெட்கக்கேடான ஒன்றுதானே!

“பெண் என்றால் பேயும் இரங்கும்” என்று ஒரு பழமொழி உண்டு. பேய் என்றால் நம் கருத்திற்கு எட்டிய வகையில் பொல்லாத ஒன்று அப்பேர்ப் பட்ட ஒன்றே இரங்கும் பெண்ணிடம் இவர்கள் தங்களின் இச்சையைத் தீர்த்துக் கொள்வதற்காக அவளைப் படுத்திய பாடுகளைச் சொல்லவோ எழுதவோ வார்த்தைகளே இல்லை. பால்ய கணவன், கலியா சித்தப்பா, அதிகாரிகள், தேஜ்வா, குசல் ராம், கூலித் தொழிலாளிகளின் தலைவன் என அனைவரும் அப்பப்பா..... இதில் எங்கே இருக் கின்றது - பெண்ணிற்கு உரிமை, சுதந்திரம். உணர்ச்சி, எல்லாம்! பெண்ணாகப் பிறந்ததில் அவளின் தவறென்ன?

பெண் என்பவள் இப்படித்தான் இருக்க வேண்டு மென்று பல நெறிமுறைகளைக் கடைப்பிடிக்கச் செய்யும் சமுதாயம் ஏன் ஆண்களுக்கென்று குறைந்த பட்ச அடிப்படை நெறிமுறையைக்கூடக் கற்றுக் கொடுக்கத் தவறவிட்டிருக்கிறது?

இந்நூலாசிரியர் இக்கதையை ஏதோவொரு கிராமத்தில் நடந்த உண்மைச் சம்பவங்களைக் கொண்டு எழுதியிருந்தாலும், இது இன்றைய நவ நாகரிக காலத்திலும் மாறாத ஒன்றாகத்தான் இருக் கிறது. இந்நிலை மாற்றப்படவேண்டும்.

இத்தனை துயரங்களைச் சந்தித்தும்கூட, கதைத் தலைவி கோமதி இறுதியில் தனக்கேயுரிய துணிவு, பொறுப்புடன் தனது மகனை அழைத்துக்கொண்டு, இருளில், எங்கோ செல்வதாகக் குறிப்பிட்டு, ‘பொழுது விடியப் போகிறது’ என்று நம்பிக்கை தெரிவிக் கிறார், ஆசிரியர். அவளுடைய அந்த விடியலில் சமூகத்துக்கும் அக்கறையுண்டு என்பது நமது கவனத்துக்குரியது.

***

குன்றிலிட்ட தீ

ஹிமான்ஷு ஜோஷி

தமிழில் : அலமேலு கிருஷ்ணன்

வெளியீடு : என்.சி.பி.எச்.

விலை : ரூ.60.00