மா.கோ: பல்கலைக்கழகத்திலும் கல்லூரியிலும் இருபத்தைந்து ஆண்டுகள் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி உள்ளீர்கள்.  முப்பதுக்கும் மேற்பட்ட நூல்களைப் படைத்துள்ளீர்கள்.  தமிழக அரசின் தமிழ் வளர்ச்சிக் கழகப் பரிசினைப் பெற்றுள்ளீர்கள்.  தமிழறிஞர்  விருதினையும் வென்றுள்ளீர்கள்.  சிறந்த கல்வியாளராகப் பாராட்டப்பெறுகின்றீர்கள்.  இத்துணைச் சிறப்புகளைக் கொண்ட உங்களிடம் கல்வியைப் பற்றி ஒரு கலந்துரையாடல் செய்யலாம் என்று எண்ணுகின்றேன்.

ச. சு: அதற்கென்ன? அப்படியே செய்யலாமே.

மா.கோ: இன்றைக்குக் கல்வி கற்றவர்கள் தாம் உயர்ந்தவர்களாகக் கருதப்படுகின்றார்கள்.  இந்தக் கல்வி பற்றிய சிந்தனை உலகில் எப்பொழுது, எப்படித் தோன்றியிருக்கும்?

ச.சு: டார்வின் கொள்கைப்படி உயிர்ப்பரிணாம வளர்ச்சியின் உச்சநிலையாகக் குரங்கிலிருந்து மனிதன் தோன்றினான்.  ஐந்தாவது அறிவுக்கும் ஆறாவது அறிவுக்கும் இடைப்பட்ட ஐந்தரை அறிவினைக் கொண்டது குரங்கு.  இதனைத் தொல் காப்பியர்

“பிறவும் உளவே”

என்னும் நூற்பா அடியால் உணர்த்துகின்றார்.  மனிதன் பகுத்தறிவு கொண்டவன்.  இந்தப் பகுத் தறிவினைத் தொல்காப்பியர் ‘மனம்’ என்கிறார்.

ஒன்றறிவு அதுவே உற்றறிவு அதுவே

இரண்டறிவு அதுவே அதனொடு நாவே

மூன்றறிவு அதுவே அவற்றொடு மூக்கே

நான்கறிவு அதுவே அவற்றொடு கண்ணே

ஐந்தறிவு அதுவே அவற்றொடு செவியே

ஆறறிவு அதுவே அவற்றொடு மனனே

(தொல். மரபியல், 27)

மக்கள் தாமே ஆறறிவு உயிரே

(தொல். மரபியல், 33)

மனிதன் தன்னுடைய விருப்பு வெறுப்புகளைப் பிறரிடம் தெரிவிக்க முற்பட்டபோது, மொழி பற்றிய சிந்தனையும் கல்வி பற்றிய சிந்தனையும் தோன்றின.  மனிதனின் சிந்தனை சக்தியே அனைத் திற்கும் அடிப்படை.  மனிதன் பேச்சு மொழியை வளர்க்கிறான்.  அப்பேச்சு மொழியில் ஓரசை யாகச் சொற்கள் இருந்தன.  உலகமொழிகளில் உள்ள எண்ணுப் பெயர்கள், உடல் உறுப்புப் பெயர்கள், உறவுமுறைப்பெயர்கள் இவை பெரும் பாலும் ஒலி ஒற்றுமையுடையவையாகக் காணப் பெறுகின்றன.  ஓரசைச்சொற்கள் -ஒலி-பேச்சு-வரி வடிவம் எனப் பேச்சு மொழியும் அதனையடுத்து எழுத்து மொழியும் தோன்றின.  தொடக்க கால எழுத்துமொழி சித்திரம் போலவும் ஓவியம் போலவும் காணப்பெற்றது.  முதுமக்கள் தாழி, தமிழ் பிராமியக் கல்வெட்டு போன்றவற்றுள் எழுத்துக்கள் ஓவிய அமைப்பில் காணப்பெறுகின்றன.

இனக்குழு அடிப்படையில் மக்கள் வாழ்ந்த காலத்தில் வேட்டையாடுதலே முக்கிய தொழில்.   அப்போது பெண் தலைமையில் குடும்பம் நடை பெற்றது. ஆற்றங்கரை நாகரிகத்தில் மக்கள் தங்கி ஓரிடத்தில் வாழும்போது, பயிர்ச்சாகுபடி செய்து வாழும் காலத்தில் குழுவுக்கும் குடும்பத்திற்கும் ஆண் தலைமை வகித்தான்.  பயிர்ச்சாகுபடி செய்து வரும் நாட்களில் கல்வி பற்றிய சிந்தனை வளரத் தொடங்கியது.

வேட்டையாடி நாடோடிகளாக வாழ்ந்த காலத்தில் இயற்கைச் சீற்றங்களைக் கண்டு மனிதன் அஞ்சினான்.  அப்போது கடவுள் பற்றிய சிந்தனை தோன்றியது.  அந்தக் காலகட்டத்தில் கருத்து முதல் வாதம் தோன்றியது.

பயிர்ச்சாகுபடி செய்யத் தொடங்கி ஓரிடத்தில் வாழத் தலைப்பட்ட காலத்தில் பொருள் உற்பத்தி, சேமிப்பு பற்றிய சிந்தனை தோன்றியது. அந்தக் காலகட்டத்தில் பொருள்முதல் வாதம் தோன்றியது.

கருத்து முதல் வாதமும் பொருள் முதல் வாதமும் கலந்துகாணப்பட்ட நிலையும் இருந்தது.  உலகம் பற்றிய சிந்தனை இருந்தது.  இன்றைய அறிவியலார் ஆராய்ந்து விளக்கிக் கூறும் உலகம் பற்றிய சிந்தனையைத் தொல்காப்பியர்,

நிலம்தீ நீர்வளி விசும்பொடு ஐந்தும்

கலந்த மயக்கம் உலகம்.....

(தொல்.மரபியல், 91)

என்று தெளிவாகக் கூறியுள்ளார்.

அறிவியல் பூர்வமான கருத்தாகத் தொல் காப்பியர் குறிப்பிட்டாலும் உலகைக் கடவுள்தான் படைத்தார் என்றொரு கருத்தும் மதங்கள் வழித் தோன்றி நம்பப்பட்டு வரும் நிலையையும் பார்க்கிறோம்.

உலகம், பேச்சுமொழி, எழுத்து மொழி, கல்வி பற்றிய சிந்தனை வளர்ந்தபோது, கல்வி கற்ற வனையே பெரிதும் மதித்தனர்.  கல்வியின் இன்றி யமையாமை உணரப்பட்டது.  கற்றோர் மதிக்கப் பெற்றனர்.  கல்வி கற்றவன் மதிக்கப்பெற்ற செய்தியைப் பாண்டியன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்,

உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும்

பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே

பிறப்போ ரன்ன உடன்வயிற் றுள்ளும்

சிறப்பின் பாலால் தாயும் மனம்திரியும்

ஒருகுடிப் பிறந்த பல்லோ ருள்ளும்

மூத்தோன் வருக என்னாது அவருள்

அறிவுடை யோன்ஆறு அரசும் செல்லும்

வேற்றுமை தெரிந்த நாற்பால் உள்ளும்

கீழ்ப்பால் ஒருவன் கற்பின்

மேற்பால் ஒருவனும் அவன்கண் படுமே

(புறம்.183)

என்று பாடியுள்ளார்.

மா.கோ.: ‘வேற்றுமை தெரிந்த நாற்பால் உள்ளும்’ என்கிறார்.  அதைப் பற்றிச் சற்று விரிவாகக் கூறுங்கள்.

ச.சு: அது நால் வருணப் பாகுபாட்டைக் குறிக்கிறது.  அந்தணர், அரசர், வணிகர், வேளாளர், என்னும் நால்வகை வருணாசிரமக் கொள்கை.  நாமெல்லாம் இந்த நால்வகையுள் அடங்க மாட்டோம்.  ஐந்தாவது பாகுபாடு சூத்திரர்.  நால்வகையினும் கடையினர் ஐந்தாவது வகை சூத்திரர்.

நால் வருணப் பாகுபாடு தொல்காப்பியப் பொருளாதிகாரத்தில் காணப்பெறுகின்றது.

நூலே கரகம் முக்கோல் மணையே

ஆயுங் காலை அந்தணர்க் குரிய

(தொல். மரபியல், 71)

அறுவகைப் பட்ட பார்ப்பனப் பக்கமும்

ஐவகை மரபின் அரசர் பக்கமும்.....

(தொல். புறத்திணையியல், 20)

வைசிகன் பெறுமே வாணிக வாழ்க்கை

(தொல். மரபியல், 78)

வேளாண் மாந்தர்க்கு உழுதூண் அல்லது

இல்லென மொழிய பிறவகை நிகழ்ச்சி

(தொல். மரபியல், 81)

உயர்ந்தோர்க் குரிய ஓத்தி னான

(தொல். அகத்திணையியல், 33)

ஓதலும் தூதும் உயர்ந்தோர் மேன

(தொல். அகத்திணையியல்,28)

சங்க காலத்தில் கல்வி பரவலாக இல்லை.  ஆனால் அதன் முக்கியத்துவம் உணரப்படுகிறது.  சங்கம் மருவிய காலத்தில் கல்விக்கு மிகவும் சிறப்புத் தரப்படுகின்றது.  பரவலே முக்கியமான காரணமாக இருந்திருக்க வேண்டும்.  நீதி இலக்கியங்களில் கல்வி வலியுறுத்தப்படுகின்றது.  கற்றார், கல்லாதார் என்ற பாகுபாடு சொல்லப்படுகின்றது.

எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்

கண்ணென்ப வாழும் உயிர்க்கு

(திருக்குறள், 392)

கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு

புண்ணுடையர் கல்லா தவர்

(திருக்குறள், 393)

கல்வியின் சிறப்பினையும் பெருமையினையும் இன்றியமையாமையையும் கூறும் திருவள்ளுவர், கருத்து முதல் வாதத்தின் அடிப்படையிலும் பொருள் முதல் வாதத்தின் அடிப்படையிலும் பேசுகின்றார்.  கருத்து முதல் வாதத்தினை அடிப்படையாக வைத்து,

ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு

எழுமையும் ஏமாப் புடைத்து

(திருக்குறள், 398)

என்னும் திருக்குறளைப் படைக்கின்றார்.  அடுத்துப் பொருள் முதல் வாதத்தினை அடிப்படையாக வைத்து,

கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு

மாடல்ல மற்றை யவை

(திருக்குறள், 400)

என்னும் திருக்குறளைப் படைக்கின்றார்.  மேலும் கல்லாதவரை ‘விலங்கு’ என வசைபாடுகின்றார்.

விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல்

கற்றாரோடு ஏனை யவர்

(திருக்குறள், 410)

மா.கோ.: என்ன ஆச்சரியம்! பத்தொன்பதாம் நூற்றாண்டில் தோன்றிய மார்க்சிய சித்தாந்தம் கருத்து முதல் வாதம், பொருள் முதல் வாதம் என்னும் கொள்கை திருவள்ளுவர் காலத்தில் வெளிப்படுத்தப்பட்டது சிந்தனைக்குரியது.  உண்மை என்றைக்கும் மாறாது.  சங்கம் மருவிய காலத்தில் கல்வியின் பெருமை பேசப்பட்டாலும் பெண்கல்வி எந்த அளவுக்கு இருந்திருக்கும்).

ஒவ்வோர் இனத்திற்கும் ஒரு வரலாறு உண்டு.  அதனை வெளிப்படுத்தப் பல்வேறு அகச்சான்றுகளும் புறச் சான்றுகளும் கிடைக்கின்றன.  காரல் மார்க்ஸ் வெறுமனே கற்பனை செய்து பொதுவுடைமைச் சித்தாந்தத்தை எழுதவில்லை.  உலக வரலாறு, பொருளாதாரம், அரசியல் என அனைத்தையும் ஆராய்ந்தே கோட்பாடுகளை வகுத்துள்ளார்.  அவற்றுவழி நம்முடைய செவ்வியல் இலக்கியங் களைப் பார்க்கும்போது இப்படிப்பட்ட சிந்தனை களை எல்லாம் அறிய முடிகின்றது.

ச.சு: சங்க காலத்தில் ஒளவையார், ஒக்கூர் மாசாத்தியார், நக்கண்ணையார், வெள்ளி வீதியார், காக்கை பாடினியார் நச்செள்ளையார், காவற்பெண்டு முதலான பெண்பாற்புலவர்கள் இருந்தனர்; பெண் கல்வி சிறப்பாக இருந்தது.

சங்கம் மருவிய காலத்தில் பெண் கல்வி குறைந்தது.  அதற்கும் சமண மதம் தழைத் தோங்கியது காரணமாக இருக்கலாம்.

தொல்காப்பியர் சமண முனிவர், நாலடியார் பாடல்களைப் பாடியவர்கள் சமண முனிவர்கள்.  இப்படிச் சமண மதத்தைச் சார்ந்தவர்கள் பலர்.  அதனால் பெண்களுக்குக் கட்டுப்பாடுகள் பல இருந்தன.

இப்படிப்பட்ட ஒரு நிலை இஸ்லாமிய மதத்தில் காணப்படுவதும் பல நாடுகளில் நடைமுறைப் படுத்துவன கூட எண்ணிப் பார்க்கலாம்.

மனைக்கு ஆக்கம் மாண்ட மகளிர்

(நான்மணிக்கடிகை, 20)

நிறைநின்ற பெண் நன்று

(நான்மணிக்கடிகை, 15)

ஆனாலும் சமணர்கள், பௌத்தர்கள் இவர் களின் கல்விக் கோட்பாடு மக்களிடம் விழிப் புணர்வை ஊட்டியது.  கல்வி கற்ற அறிவுடையவர் தேவர்க்குச் சமமாக மதிக்கப்படுகின்றார்.

தேவர் அனையர் புலவரும்

(புலவர் - அறிவுடையவர்) (நான்மணிக்கடிகை, 76)

சங்கம் மருவிய காலத்தில் கருத்து முதல் வாதம் மிகுதியாகவும் பொருள் முதல் வாதம் குறை வாகவும் கூறப்பெற்றுள்ளன.

அந்தணர் ஓத்துடைமை ஆற்ற மிகஇனிதே

(இனியவை நாற்பது, 7)

ஆவோடு பொன்னீதல் அந்தணர்க்கு முன்இனிதே

(இனியவை நாற்பது, 23)

கற்றறிந்தார் கூறுங் கருமப்பொருள் இனிதே

(இனியவை நாற்பது, 32)

கல்லார் உரைக்கும் கருமப் பொருளின்னா

(இன்னா நாற்பது, 15)

சமணர்கள் கல்வியின் வாயிலாகப் பொருள் முதல் வாதத்தை வலியுறுத்துகின்றார்கள்.

எம்மை உலகத்தும் யாங்காணேம் கல்விபோல்

மம்மர் அறுக்கும் மருந்து

(நாலடியார், 132)

செல்வத்தைப் போல் ஒருவனுக்கு வலிமை யுடையது வேறு எதுவும் இல்லை.  கற்ற அறிவைப் போல் உற்ற நேரத்துக்குப் பயனாவன வேறு இல்லை.  வறுமையைப் போல் துன்பம் உடையது வேறு இல்லை என்னும் பொருள் முதல் வாதக் கருத்தினை விளம்பிநாகனார்,

திருவின் திறலுடையது இல்லை ஒருவற்குக்

கற்றலின் வாய்த்த பிறஇல்லை - எற்றுள்ளும்

இனிமையின் இன்னாதது இல்லை.....

(நான்மணிக்கடிகை, 39)

என்கிறார்.

கல்வி

அறிவு

ஆத்திகக் கண்ணோட்டம்    நாத்திகக் கண்ணோட்டம்

கருத்து முதல் வாதம் பொருள் முதல் வாதம்

வேத காலக் கல்வி ஆத்திகக் கண்ணோட்டம்.  பெரும்பாலும் பரம்பொருளைப் பற்றிய தோத்திரங்களே.  அங்கு மனப்பாடமே முக்கியம்.  அது கருத்து முதல் வாதத்துள் அடங்கும்.  ஆத்திகக் கண்ணோட்டத்தில் அறிவியலுக்கோ விவாதத் திற்கோ அதிக இடமில்லை.

நாத்திகக் கண்ணோட்டத்தில் அறிவியலுக்கும் சிந்தனைக்கும் விவாதத்திற்கும் இடமுண்டு.

பல்லவர் காலத்தில் நால் வருணப் பாகுபாடு மிகுதியானது.  அந்தக் காலத்தில் கல்வி கற்கும் வாய்ப்பு எல்லோருக்கும் கிட்டவில்லை.  உழைக்கும் மக்களிடத்தில் கல்வி எந்த அளவுக்கு இருந்தது என்பது பற்றிச் சரியாகத் துல்லியமாகத் தெரிய வில்லை.  பக்தி, இலக்கியங்களில் மக்களைப் பற்றிய கருத்துக்கள் மிகக் குறைவு.

சங்க இலக்கியத்திலும் காப்பியங்களிலும் பொருள் முதல் வாதமே மிகுதியாகப் பேசப்படு கின்றது.  பக்தி இலக்கியத்தில் கருத்து முதல் வாதமே பேசப்படுகின்றது.  சங்கம் மருவிய இலக்கிய மாகிய பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் விழுமிய வாழ்க்கைக்கான கருத்து முதல் வாதமும் பொருள் முதல் வாதமும் சொல்லப்பெறுகின்றன.

பக்தி இலக்கிய காலம் எளிய வாழ்க்கையைக் காட்டுகின்றது.  இந்த எளிய வாழ்க்கைக்கு அடிப் படையாய் அமைந்தவர்கள் சமணர்களும் பௌத்தர் களும்.  சமணத்தை அழிக்கச் சைவமும் வைணவமும் முயற்சி செய்கின்றன.

சமணம் வீழ்ச்சியடைந்து சைவமும் வைணவமும் தழைத்தோங்கிய காலகட்டத்தில், மன்னர்கள் நிலங்களைக் கோயில்களுக்கும் அந்தணர்களுக்கும் இறையிலி நிலங்களாய்த் தானம் செய்தனர்.  இந்தச் சூழலில் தனியுடைமை தோன்றியது.  மன்னர் காலத்தில் நிலம் வைத்திருப்போர் அனைவரும் ஆறில் ஒரு பங்கு வரி செலுத்தினர்.

மடாதிபதிகளுக்கு நிலங்கள் தாரை வார்க்கப் பட்ட பிறகு, அந்நிலத்தின் வரி அரசுக்குப் போய்ச் சேராது.

இன்னொரு மிகப் பெரிய முரண்பாட்டையும் பார்க்க முடிகிறது.  கடவுள் தொடர்பான கருத்து முதல்வாதம் மும்முரமாகப் பேசப்பட்டாலும் எழுதப்பட்டாலும் உணவு உற்பத்திக்கு அடிப் படையான நிலங்கள் முழுவதும் கோயில், மடங்கள், பார்ப்பனர்களுக்கே உரிமை ஆகின.  உழைக்கும் மக்கள் அவற்றுக்கு அடிமைப்படுத்தப்பட்டார்கள்.  விதி, பிறவிப் பயன் போன்ற கருத்துக்கள் அவர்களின் உரிமைக் குரல்களை அடக்கிவிட்டன.

சோழநாட்டில் சைவத் தலங்கள் - ஆலயங்கள் அதிகம்; மடங்களும் மடாதிபதிகளும் அதிகம்.  அந்தக் காலத்தில் உழைப்பவர்கள் கீழ்நிலைக்குத் தள்ளப்பட்டார்கள்.  இடைக்காலத்தில்தான் வருணப் பாகுபாட்டின் உச்சநிலையாகச் சாதிப் பாகுபாடு தலைவிரித்து ஆடியது.  இதே காலத்தில்தான் ‘அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பு எதற்கு?’ என்று பெண்களுக்குக் கல்வி மறுக்கப்பட்டிருக்க வேண்டும்.

பொதுவாக உழைப்பாளிகளுக்குக் கல்வி மறுக்கப்பட்டது.  வருணாசிரமத்தைப் பின்பற்றி

யவர்கள் உழைப்பாளிகளுக்கும் கல்வியைத்தர முழுமையாக ஒத்துக்கொள்ளவில்லை.  அன்றும் இன்றும் அடித்தட்டு மக்களும் பெண்களும் உழைக்கும் வர்க்கத்தில்தான் இருக்கின்றார்கள்.

எண் எழுத்து இகழேல்

(ஒளவையார், ஆத்திசூடி, 7)

இளமையில் கல்

(ஒளவையார், ஆத்திசூடி, 29)

எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்

(கொன்றை வேந்தன், 7)

என்றெல்லாம் இடைக்கால இலக்கியம் கல்வியின் அவசியம், பெருமை இவற்றைக் கூறினாலும் பெண் கல்வி பற்றிப் பேசவில்லை.  மாறாக,

தையல்சொல் கேளேல்

(ஒளவையார், ஆத்திசூடி, 63)

என்றெல்லாம் கூறி வந்துள்ளனர்.  அதுமட்டும் அன்று.  ஆணாதிக்கத்தினையும் வெளிப்படுத்தி யுள்ளனர்.  தான் பிறந்த குடி தொடரத் தன் மனைவியை மலடி ஆக்கிவிடக் கூடாது என்கிறது ஒரு பாட்டு.

சந்ததிக்கு அழகு வந்தி செய்யாமை

(கொன்றை வேந்தன், 26)

(வந்தி - மலடு).  பெண் குழந்தையைப் பெற் றெடுப்பதையே முக்கிய நோக்கமாகக் கூறுகின்றனர்.  ஆனால் அஃது இன்றை நடைமுறையில் ஒத்து வருகின்றதா? இல்லை.  பெண்ணுக்குத் திருமணம் ஆகும்போது வயது முப்பது, நாற்பது என்றாகி விடுகின்றது.  அந்த வயதில் எங்குப் பிள்ளைப் பேறு அடைவது.  அதனால்தான் ஒளவையார்,

பருவத்தே பயிர் செய்

(ஆத்திசூடி., 22)

என்கிறார்.  பருவத்தே பயிர் செய்ய எல்லோருக்கும் வாய்ப்பு கிடைப்பதில்லை.  இடைக்காலத்தில் கருத்து முதல் வாதம் மிகுதியாகப் பேசப்பட்டாலும் ஆங்காங்கே பொருள் முதல் வாதமும் பேசப்படு கின்றது.

சீரைத் தேடின் ஏரைத் தேடு

(கொன்றைவேந்தன், 29)

மேழிச் செல்வம் கோழை படாது

(கொன்றை வேந்தன், 77)

அறிவுடை ஒருவனை அரசனும் விரும்பும்

(வெற்றிவேற்கை)

ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்

(உலக நீதி, 1)

தான் கற்ற

நூல் அளவே ஆகுமாம் நுண்ணறிவு

(மூதுரை, 7)

இவ்வாறு கல்வியும் கல்வியில் பொருள் முதல் வாதமும் வலியுறுத்தப்பெறுகின்றது.

ஒரு நாடு அடுத்த நாட்டின்மேல் படை யெடுப்பது அந்நாட்டுச் செல்வங்களைச் சுரண்டித் தன் நாட்டுக்குக் கொண்டு வருவதற்காகும். 

வேந்துவிடு முனைஞர் வேற்றுப்புலக் களவின்

ஆதந்து ஓம்பல் மேவற்று ஆகும்.

(தொல். புறத்திணையியல், 2)

எஞ்சா மண்நசை வேந்தனை வேந்தன்

அஞ்சுதகத் தலைச்சென்று அடல்குறித்தன்றே

(தொல்,புறத்திணையியல்,6)

ஆங்கிலேயர்கள் இந்தியாவில் பல பொருள் களைச் சுரண்டிச் சென்றுள்ளார்கள்; இந்திய மக்களுக்குப் போதைப் பொருட்களைக் கொடுத்து மயங்க வைத்துள்ளார்கள்; கிறித்துவ மதத்தைப் பரப்பினார்கள் என்னும் கருத்துக்களும் பேசப்படு கின்றன.  மதம் மாறியவர்களுள் பெரும்பாலோர் சமுதாயத்தில் - பொருளாதாரத்தில் மிகவும் ஒடுக்கப்பட்டவர்கள் ஆவார்கள்.

உழைப்பது மட்டுமே அவர்களுக்கு உரிமை.  அப்படிப்பட்டவர்களைத் தீண்டத்தகாதவர்களாகக் கருதினர்.  இப்படிக் கருதப்பட்டவர்கள் ஆங்கிலேயர் களின் வருகைக்குப் பிறகு மதம் மாறினார்கள்.  தஞ்சாவூர் மாவட்டத்தில் கண்ணந்தங்குடி, அணைக் காடு போன்ற ஊர்களில் வசித்த பிற்படுத்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்கள் கிறித்தவ மதத்திற்கு மாறினார்கள்.

அவர்கள் இங்கு வந்து மருத்துவம், கல்வி போன்றவற்றைக் கொடுத்ததற்கு அடிப்படைக் காரணமே மக்களைக் கிறித்துவமதத்திற்கு மாற்றத் தான் என்றொரு வாதத்தைப் பலர் பேசுகின்றார்கள், எழுதுகின்றார்கள்.  அப்படி ஒன்றும் பெரிய அளவில் மாற்றிவிட முடியவில்லை.  வாதத்திற்காகப் பேசு வோம்.  அப்படியே மாற்றினால்தான் என்ன? தம் மதத்தில் வைத்துக் கொண்டு மேல்தட்டு மக்கள் ஒடுக்கப்பட்டவர்களுக்கு எதைக் கொடுத்தார்கள்! மாடாக உழைத்தவனுக்குக் கால் வயிற்றை நிரப்பிக் கொள்ளக் கூலி கொடுத்தார்கள்.  சாதி, தீண்டா மையால் சொல்ல முடியாத கொடுமையை அனுபவித் தார்கள்.  அவர்கள் உதவிக்கரம் நீட்டினார்கள்.  தமிழகத்தின் வட பகுதியில் கல்வி, வாய்ப்புகளை அதிகமாகச் சென்ற தலைமுறையிலிருந்துதான் மக்கள் பெற ஆரம்பித்தார்கள்.  ஆனால் தென் மாவட்டங்களில் கிறித்தவத்திற்கு மாறியவர்கள் சென்ற தலைமுறைக்கு முந்தைய தலைமுறையி லிருந்து அவற்றை எல்லாம் பெற்று வருகிறார்கள்.

ஆங்கிலேயர்களின் வருகையால் இந்த ஒடுக்கப் பட்ட மக்களுக்கு மருத்துவம், கல்வி போன்றவை இலவசமாகக் கிடைத்தன.  மேல்தட்டு மக்களே கல்வி கற்று வந்த சூழல் மாறி, ஆங்கிலேயர்கள் காலத்தில் எல்லா நிலையிலும் உள்ள மக்கள் கல்வி கற்க வேண்டும் என்ற விழிப்புணர்வு கொண்டு வரப்பட்டது.  ஆங்கிலேயர்கள் கல்வியில் சமத்துவம் கண்டார்கள்.  கல்வியை அனைவர்க்கும் சமமாகத் தந்தார்கள்.  ஆங்கிலேயர் ஆட்சியில்தான் முதன் முதலாகக் கல்விக் கூடங்கள் அரசு சார்பில் அமைக்கப்பெற்றன.  மேல்தட்டு மக்களுக்கும் தனி நபர்க்கும் சொந்தமாக இருந்த கல்வியை ஆங்கிலே யர்கள் அனைவருக்கும் பொதுவுடைமையாக ஆக்கினார்கள்.  ஆங்காங்கே அரசு சார்பில் பள்ளிக் கூடங்கள் தோன்ற ஆரம்பித்தன.  அவ்வாறு பொது நிறுவனங்களாகப் பள்ளிக் கூடங்கள் ஏற்பட்ட போதும், சமுதாயத்தில் நிலவிய நால் வருணப் பாகுபாட்டை வயதான பெரியவர்கள் இன்றும் நினைவு கூர்கின்றார்கள்.

பள்ளிக்கூடத்தில் ஒடுக்கப்பட்டோர்களின் குழந்தைகள் தனியாக உட்கார இடம் ஒதுக்கியிருந் தார்கள்.  ஆங்கிலேயர்கள் மக்களிடம் விழிப்புணர்வு உண்டாக்க மிகுந்த ஆர்வத்தைக் காட்டியிருக் கின்றார்கள்.  ஆனாலும் இங்குள்ளவர்கள் அதற்கு முழுமையாக ஒத்துழைப்பு தரவில்லை.  வேறு வழி யில்லாமல் அனைவருக்கும் கல்வி பொதுவுடைமை யாக்கப்பட்டதை ஒத்துக்கொண்டார்கள்.  இதற்கு வரலாற்றுச் சான்றினையும் கூறலாம்.  இராசாசியின் குலக்கல்விமுறை....

(அடுத்த இதழில் தொடரும்....)

Pin It