உலகில் இதுவரை வந்துள்ள அற்புதமான சினிமாக்களின் பட்டியலில் இடம் பிடிக்கிறது ஜேம்ஸ் நோலனின் இன்டெர்ஸ்டெல்லர். இது ஒரு பயண சினிமா. தமிழ் சினிமாப் பார்வையாளர்கள் யாராலும் பயணிக்க முடியாத பயணம் அது.

Interstellarபடத்தின் கதை இங்கு தேவையில்லை என்றே நினைக்கிறேன். இரண்டாவது முறை பார்க்க நினைப் பீர்கள். அப்போது கதையைப்பற்றி, இதுவரை வந்துள்ள விமர்சனங்கள் பற்றித் தெரிந்துகொண்டு அப்புறம் படம் பாருங்கள். இன்னும் பார்க்காதவர்களுக்காக கதை வேண்டாம்.

ஒரு பாக்கெட் பாப்கார்ன் நூறு ரூபாய்க்கும் ஒரு கப் காபி ஐம்பது ரூபாய்க்கும் பார்வையாளர்களை வாங்க வைக்க வேண்டுமே என்பதற்காக திரையரங்கத்தினர் படத்தினை இடையினில் நிறுத்தியபோது, “ஆஹா, இந்தப் படத்தை ஐன்ஸ்டீன் பார்க்காமல் போய் விட்டாரே” என்றே தோன்றியது. இந்தப்படம் ஐன்ஸ்டீனுக்கு சமர்ப்பணம் செய்யவேண்டிய படம். ஒரு டிக்கெட் நூற்றி இருபது ரூபாய், ஒரு பாக்கெட் பாப்கார்ன் நூறு ரூபாய். பணத்திமிரானது ஆடம் பரமாகப் பொங்கி வழிகின்ற திரையரங்கு அது. அல்லது பணம் படைத்தவர்களிடமிருந்து பணம் பிடுங்கும் வழி அது. ஆனால் இன்டெர்ஸ்டெல்லரைக் காண நாம் அதற்குள் போய்த்தான் ஆக வேண்டும். என்னதான் ஹோம்தியேட்டர் வைத்திருந்தாலும் அது பூர்த்தி யடையாது.

இன்டெர்ஸ்டெல்லர். திரையரங்கிற்கான படம். ‘புலூ ரே’ டிவிடி-க்கான படம் அல்ல. படம் முடிந்து வெளியில் வரும்போது “ஆஹா, இந்தப்படத்தை ஐன்ஸ்டீன் பார்க்காமல் போய்விட்டாரே” என்றும் தோன்றியது.

ரத்த உறவு உள்ளிட்ட பல்வேறு மனித சமூக உறவுகளைக் கொண்டு பார்வையாளர்களை உணர்ச்சி வசப்பட வைக்கும் படங்களைப் பார்த்திருக்கிறோம். பக்திப் பெருக்கில் பார்வையாளர்களை உணர்ச்சிவசப் பட வைக்கும் படங்களையும் பார்த்திருக்கிறோம். ஏன், அரசியலைக் கொண்டு பார்வையாளர்களை உணர்ச்சி வசப்பட வைக்கும் படங்களையும் கூடப் பார்த்திருக்கி றோம். ஆனால் அறிவியலைக் கொண்டு பார்வையாளர் களை உணர்ச்சிவசப்பட வைக்கும் படத்தினைப் பார்த்துண்டா? அதுதான் இன்டெர்ஸ்டெல்லர்.

வலுவான அறிவியல் அடித்தளத்தில் நின்று கொண்டு நோலன் வீசும் உணர்ச்சி வலைக்குள் சிக்காமல் நாம் தப்பிக்க முடியவில்லை. குறிப்பாக இரண்டு இடங்கள்.

1. தனக்கு சில மணி நேரங்களே ஆயுள் கடந்திருக்க தன் மகனுக்கு 27 வயது கடந்த நிலையினில் அவனைப் பார்த்ததும் அவனைக் கட்டித் தழுவ எண்ணி மானிடரைத் தொடும்போது அது நின்றுவிட்டு பின் அதில் தான் மிகவும் நேசிக்கும் தனது சிறுமியான மகள் மர்ஃப் பெரிய குமரியாக நிற்பதைப் பார்த்து கூப்பர் அழும் காட்சி. (உளுந்தவடை நாயகர்கள் இனி இதை உலக நாயகத் தரத்திற்குக் கொண்டு போவார்கள்).

2. 124 வயதினைக் கடந்திருந்தாலும் 35 வயது இளைஞனைப் போலவே இருக்கின்ற கூப்பர் சிறு வயதில் பிரிந்து போன தனது செல்லமகளை, மரண மடையப் போகும் கிழவியாக படுக்கையில் படுத்திருப் பதைப் பார்த்து உணர்ச்சிவசப்படும்போது, நீங்கள் வருவீர்கள் என எனக்குத் தெரியும் என மகள் கூறுகிறாள். எப்படி என கூப்பர் கேட்கும்போது எனது அப்பா நான் வருவேன் என்று என்னிடம் சத்தியம் செய்துவிட்டுத்தான் போனார் என அவள் பதில் சொல்லும் அந்தக் காட்சி.

கூப்பரும் மர்ஃபும் அமெரிக்கத் தங்கமீன்கள்.

டைட்டானிக்கில் கதை சொல்லத் தொடங்கும் ரோஸ் கிழவியை படம் முடியும்போது இளைஞன் ஜாக் வந்து சந்தித்தால் எப்படியிருக்கும்?

படம் குறித்த பல விமர்சனங்களையும் படித்தேன். அதிலுள்ள ஒரே சிறப்பு அவர்கள் எல்லோரும் நோலனைவிடப் பெரிய கற்பனையாளர்களாக இருந்து விட்டார்கள் என்பதுதான்.

“பேக் டு த ஃபியூட்சர்” படத்தில் ஸ்பீல்பெர்க் கேலியாகக் கையாண்ட ஃபிளாஷ்பேக்கில் நுழைவது போன்ற ஒரு விசயமாகவே இப்படத்தையும் அணுகுவது அபத்தமானது. இன்டெர்ஸ்டெல்லர் ஐன்ஸ்டீனின் கோட்பாடு.

இன்றைய இளையோர்கள் அனைவரும் காண வேண்டிய ஒரு படம் இது. அதோடு மாணவர்கள் இப் படத்திற்கு தங்களது பெற்றோர்களையும் அழைத்துக் கொண்டு போய்க் காட்டவேண்டும். படத்தில் வரு கின்ற புவியீர்ப்பு விசை, கிரகங்கள், பால்வீதி, கருந்துளை இதெல்லாம் என்னவென்று அதாவது உண்மையென்று அவர்களிடம் சொல்லுங்கள். வேகம் அதிகரிக்கும்போது காலத்தைத் தாண்டும் என்பதைப் புரிய வையுங்கள். அண்டவெளியினில் கடவுளுக்கு என எந்த வேலையும் இல்லாமலிருப்பதைக் காட்டுங்கள். கடைசிக் காட்சியில் சந்திரனில் கூப்பரின் பெயரால் அமைக்கப்பட்ட நகரத்தில் வீடுகட்டி, ஃபேஸ்பால் ஆடும் மக்களைக் காட்டி சனிப்பெயர்ச்சி கருமமெல்லாம் நம்பாதீர்கள் என்று சொல்லுங்கள். இதுவரையில் நீங்களும் கூட அந்தக் கருமங்களையெல்லாம் நம்பியிருந்தாலும் ஒரு கும்பிடு போட்டு அவைகளைத் தூக்கியெறியுங்கள். வேண்டுமானால் தலையைச் சுற்றித் தூக்கி எறியலாம்.

ஹான்ஸ் ஜிம்மெர் எனும் உலகின் மிகப்பெரிய மந்திரவாதிகளுள் ஒருவர் நடத்துகின்ற மாயாஜால வேலைகளைக் கேளுங்கள். நம்முடைய கொலைவெறி பைத்தியம் தீருவதற்கு அது நல்ல மருந்து. ஹான்ஸ் ஜிம்மெர் பிரபஞ்ச வெளியில் பயணிக்கும் போது பறக்கும் தூசிகளில் ஞானிகளும் புயல்களும் எங்காவது இருக்கிறார்களா என்பதை நாம் கண்டுபிடிக்க முயலலாம்.

கருந்துளைக்குள் செல்லும் பயணம், ஆகப் பிரம்மாண்டமான காட்சி. மனிதனின் அதிகபட்ச ஆசை அல்லது கனவு இதுவாகத்தான் இருக்க முடியும். அது நினைவாகவும் ஆகலாம். ஆனால் அதற்கு ஐன்ஸ்டீன் சொன்னது போல பூமியில் சோசலிசம் வரவேண்டும். படத்தில் வருகின்ற நாசகார நாஸாக்காரர்கள் நினைப்பது போலெல்லாம் முடியாது. அதனால்தான் அவர்கள் சினிமாவில் ஓயாமல் சொல்லி வருகிறார்கள்.

கேமரூனும் ஸ்பீல்பெர்க்கும் இனி ஆசுவாசப் படுத்திக் கொள்ளத்தான் வேண்டும். ஏனெனில் இனி அவர்கள் நோலனைத் தாண்டியாக வேண்டும்.

முதலாளிகளின் கிரகம் தாண்டிய கனிமவளக் கொள்ளையை அவதார் காட்டியது. அதேபோல முதலாளிகளின் கிரகம் தாண்டிய ரியல் எஸ்டேட் கொள்ளையைத்தான் இப்படமும் காட்டுகிறது. அமெரிக்கக்காரந்தான் உலகைக் காப்பாற்றுவான் என்றுதான் அமரிக்கக்காரன் படம் எடுப்பான். அதற்காக அதை நாம் நம்பக்கூடாது. லிங்கேஸ்வரனை நாம் நம்புகிறோமா என்ன? நாஸா விஞ்ஞானி பிராண்ட்டே படத்தில் ஒரு பொய்யன்தானே?

படத்தில் மனிதர்களுக்கு ஏற்படும் நிலை பூமியில் வசிப்பவர்களுக்கு வராது. காற்று மாசுபடுதல், தண்ணீர் மாசுபடுதல், இவற்றிற்காக கிரகத்தைவிட்டு ஓடுவது எனும் நிலை மனித இனத்திற்கு ஏற்படவே ஏற்படாது. ஒருவேளை பன்னாட்டு முதலாளிகளுக்கும் அவர்களுக்கு ஆதரவாக இருந்து வரும் ஆட்சியாளர்களுக்கும் ஏற்படலாம். இப்படியெல்லாம் பீதியூட்டுவதே பூமியிலுள்ள முதலாளிகள்தான். தாங்கள் பூமியை மாசுபடுத்துவதை மறைக்கவும், தொடர்ச்சியாக மாசுபடுத்தப் போவதை மக்கள் எதிர்க்காமல் இருக்கவும்தான் அவர்கள் இவ்வாறு பீதியூட்டுகிறார்கள். மாசுபடுத்த ஒருவன் இருக்கும்போது அவனை அப்புறப்படுத்த ஆள் வராமல் போய்விடுமா என்ன?

கூப்பரும் மர்ஃபும் உணர்கின்ற ஆவிகளின் வேலைகள் ஒரு அற்புதமான கவிதை. ஆவியின் மர்ம முடிச்சு அவிழும்போது தந்தை மகள் உறவிலுள்ள வலிமை நம்மை அல்லது என்னைச் சிலிர்க்க வைக்கிறது.

நீங்கள் இந்தப் படத்தைப் பார்த்து அந்தப் பயணத்தை அனுபவியுங்கள். அந்த அனுபவம் உங்களின் சிந்தனையை மாற்றும். ஜோதிடத்தைப் பல்கலைக் கழகங்கள் பாடமாக வைத்திருக்கிற கேடுகெட்ட சூழ்நிலையில் அதைப் பொய் என்று நிரூபிக்கக்கூடிய பிரபஞ்ச வெளிதனில் பயணிக்கின்ற பாசம் கொண்ட மனிதனின் பயணத்தைப் பார்ப்பது நமக்கு அவசிய மானது.

திரையரங்க சினிமாக்களின் கற்பனைகளைத் தாண்டிய மற்றுமொரு அற்புத சினிமா இன்டெர்ஸ்டெல்லர். அது நோலனால் மட்டுமே முடிந்து வந்திருக்கிறது. அவரை முறியடிக்க இனிமேல் பிரபஞ்ச வெளியில் இருந்துகூட யாரும் வரலாம். எதிர்பார்த்திருப்போம்.

Pin It