மாதொரு பாகன் நாவலின் பிரதிகளை தீயிட்டுக் கொளுத்தியும், அதை எழுதிய நாவலாசிரியர் பெருமாள் முருகனை கைது செய்ய வேண்டுமென வலியுறுத்தியும் இந்துத்துவ அமைப்புகள் திருச்செங்கோடு பகுதியில் ஆர்ப்பாட்டம் நடத்தின.

perumal murugan 400அடிப்படைவாதிகளின் பல முகங்களில் இதுவும் ஒன்று. மாதொருபாகன் என தனது பண்பாட்டியல் நோக்கிலான படைப்பிலக்கியத்தை பெருமாள் முருகன் எழுதியிருக்கிறார். இதோடு இந்துத்துவ வாதிகள் உடன்படவில்லையென்றால் அவர்களுக்கான நாவலை அவர்கள் எழுதட்டும், வெளியிடட்டும். கொண் டாடட்டும். அதை விட்டுவிட்டு படைப்பாளியை அச்சுறுத்துவதும், நாவலை எரியூட்டுவதும் சரியான அணுகுமுறையல்ல...

ஆக்ராவில் மறுமதமாற்றம், தாஜ்மஹால் இந்துக் கோவில், பகவத்கீதை தேசிய நூலாக்கவேண்டும், சமஸ் கிருத வாரம், காந்தி மகாத்மாவை கொன்ற கோட்சேக்கு சிலை என்பதான அண்மைக்கால இந்துத்துவ அடிப் படைவாதக் குரல்களின் தொடர்ச்சியாகவே பெருமாள் முருகன் படைப்புக்கெதிரான வன்முறையைக் கருத வேண்டும்.

எழுத்துரிமைக்கும் படைப்பாளிக்கும், அவரது மனைவி குழந்தைகளுக்கும் பாதுகாப்பின்மை அதிகரித்து வரும் இச்சூழலில் சட்டரீதியாகவும், சமூக ரீதியாகவும் பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகள் தொடரவேண்டும்.

பெருமாள் முருகனின் எழுத்துலகம்

எழுத்தாளர் பெருமாள் முருகன் தமிழின் முக்கிய நாவலாசிரியர்களில் ஒருவர். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியைச் சேர்ந்தவர். 2010 ஆம் ஆண்டில் வெளிவந்த இவரது நாவல் மாதொரு பாகன். இந் நாவலை அனிருத்தன் வாசுதேவன் ONE PART WOMAN என ஆங்கில மொழிபெயர்ப்பு செய்து 2013 ஆம் ஆண்டில் வெளிவந்துள்ளது. பெருமாள் முருகன் ஏறுவெயில் (1991) நிழல்முற்றம் (1993), கூளமாதாரி (2000) கங்கணம்(2007) ஆளண்டாப்பட்சி (2012) பூக்குழி (2013) ஆகிய நாவல்களை எழுதியுள்ளார். 2004 இல் வ.கீதா கூளமாதாரி நாவலின் ஆங்கில மொழி பெயர்ப்பு SEASONS OF THE PALM தலைப்பில். நிழல் முற்றம் நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பும் CURRENT SHOW எனவும் வெளிவந்தது.

திருச்செங்கோடு என்ற பெயரிலேயே 1994 இல் இவரது முதல் கதைத்தொகுப்பு வெளிவந்துள்ளது. நீர் விளையாட்டு (2000). பீக்கதைகள் (2006) வேப் பெண்ணெய்க் கலயம் (2012) ஆகிய கதை நூல்களும் வெளிவந்துள்ளன.

கவிதைத்துறையிலும் தனது கவனத்தை செலுத்தி யவர். 1991களில் முதல் தொகுப்பாக நிகழ் உறவு வெளிவந்தது. கோமுகி நதிக்கரையில் கூழாங்கல் (2000) நீர்மிதக்கும் கண்கள்(2005) வெள்ளி சனி புதன் ஞாயிறு (2012) உள்ளிட்ட கவிதை நூல்களும் வெளிவந்துள்ளன.

தீவிரத் தமிழ் வாசகர்களையும் தாண்டி கவனம் பெற்ற இரு கட்டுரை நூல்களை குறிப்பிடலாம். அவற்றில் ஒன்று 2011இல் வெளிவந்த ‘கெட்ட வார்த்தை பேசுவோம்.’ மற்றொன்று 2014 இல் வெளிவந்த ‘சகாயம் செய்த சகாயம்.’

இவைதவிர ஆர்.சண்முகசுந்தரத்தின் படைப் பாளுமை-2000, துயரமும் துயர நிமித்தமும்-2004, கரித்தாள் தெரியவில்லையா தம்பி-2007, பதிப்புகள் மறுபதிப்புகள்-2011, வான்குருவியின் கூடு-2012, நிழல் முற்றத்து நினைவுகள் - 2012 போன்றவையாகும். இரண்டாயிரத்தில் இவர் தொகுத்து வெளியிட்ட கொங்கு வட்டாரச் சொல்லகராதி (-) அகராதி, நிகண்டு வரிசையில் சொல்லத்தகுந்த ஒரு கலைக்களஞ்சிய இலக்கியப்பணியாகும்.

பெருமாள் முருகனை தொகுப்பாசிரியராகக் கொண்டு பிரம்மாண்டமும் ஒச்சமும் உடைந்த மனோரதங்கள், சித்தன் போக்கு (பிரபஞ்சன்), கொங்குச் சிறுகதைகள், தலித் பற்றிய கொங்குச் சிறுகதைகள் ,உ.வே.சா. பன்முக ஆளுமையின் பேருருவம், தீட்டுத் துணி (அறிஞர் அண்ணா) தொகுப்புகளும் வெளி வந்துள்ளன.

கொங்குநாடு (தி.அ.முத்துசாமிக் கோனார்), பறவைகளும் வேடந்தாங்கலும் (மா.கிருஷ்ணன்), சாதியும் நானும் (அனுபவக் கட்டுரைகளின் தொகுப்பு), கு.ப.ரா. சிறுகதைகள் (முழுத் தொகுப்பு) ஆகிய நூல்களின் பதிப்பாசிரியராகவும் இருந்துள்ளார்.

விளக்கு விருது, கதா விருது, கனடா இலக்கியத் தோட்ட விருது - அபுனைவுப் பிரிவு என பல்வேறு விருதுகள் பெற்றிருந்தாலும் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற தக்கலைக் கிளையின் ஏலாதி விருது பெருமாள் முருகனின் 2007 இல் வெளியான கங்கணம் நாவலுக்கு கிடைத்திருக்கிறது.

மாதொருபாகனில் தேர் நோம்பியின் பதினாலாவது நாள் திருவிழா

‘மாதொருபாகன்’, ‘பெண்ணிற்கு தன் இடப் பாகத்தைக் கொடுத்து ஆண் பாதி, பெண் பாதி எனக் காட்சி தரும் அர்த்தநாரீஸ்வரர் வடிவத்தைக் குறிக்கும் பெயர்’ என்று ஆசிரியர் இந்நாவலின் தலைப்பை அறிமுகப்படுத்துகிறார் என்பதாக என சொல்வனத்தில் அனுக்ரஹா எழுதி இடம் பெற்ற மாதொருபாகன் குறித்த விமர்சனத்தின் சில பகுதிகள் இடம் பெறு கின்றன.

மாதொரு பாகனின் கதை காளியும் பொன்னாவும் தம்பதி என இணைந்த ஒரு அலகாக, சமூகத்தை எதிர் கொள்வதைப் பற்றியதுதான். ஆணானாலும் பெண்ணா னாலும், அவர்களுக்கான சமூக பாத்திரங்களை ஏற்கக் கடமைப்பட்டிருக்கிறார்கள். அந்த விதத்தில், இருவரும் ஒரு உருவத்தில் பிணைக்கப்பட்டவர்களே. குழந்தை யில்லாத தம்பதியாக அவர்கள் இருவருமே, சமூகத்தின் பேச்சுகளுக்கும், தீர்ப்புகளுக்கும் ஆளாக வேண்டி யிருக்கிறது. உடற்கூறியலின்படி வலது மூளை இடப் பக்க உடலையும் இடது மூளை வலப்பக்க உடலையும் இயக்குவது போல, சமூகத்திற்கான அவர்களது எதிர்வினையும், நமது பரவலான எதிர்பார்ப்புகளுக்கு மாறாகவே இருக்கின்றது. குழந்தை இல்லாத குறையை யாரும் சுட்டிக்காட்டிச் சொன்னால், பொன்னா ஆண்மையுடன் சீறுவதும், காளி தலைகுனிந்து விலகுவதுமாக எதிர்வினையாற்றுகிறார்கள்.

பிரிட்டிஷ் இந்தியாவின் இறுதிக் காலகட்டத்தில், திருச்செங்கோடு அருகே உள்ள கிராமத்தில் நிகழ்கிறது கதை. பொன்னாவை, அவளது பதினாறாம் வயதில் காளி காதலித்து மணமுடிக்கிறான். திருமணமாகிப் பன்னிரண்டு வருடங்களாக அவர்களுக்குக் குழந்தை இல்லை. அவர் களும் செய்யாத பரிகாரங்கள் இல்லை, வேண்டாத தெய்வங்கள் இல்லை. ‘காட்டு சாமிகளுக்கு கிடா வேண்டுதல், கோயில் சாமிகளுக்கு ‘பொங்கல் பூசை’ என்று எல்லா முயற்சிகளையும் எடுக்கின்றார்கள். குழந்தை இல்லாமையால், இருவரும் அவரவர் வட்டங் களில் அவரவர் அன்றாடங்களில் சமூகத்தில் எதிர் கொள்ளும் விலகல், தனிமை ஆகியவற்றைப் பற்றி பேசுகிறது நாவல். மிக விரிவான ஆராய்ச்சி மூலம், அக்காலத்துக் கொங்கு சமூகத்தை அவர்கள் வாழ்க்கை முறையை, விழுமியங்களை, சடங்குகளை நம் கண்முன் நிறுத்துகிறார் ஆசிரியர். அதோடு நாவலில் அமைந் திருக்கும் கொங்கு வட்டார வழக்குகளும் வாசிப்பதற்கு அலாதியான உணர்வை அளிக்கின்றன.

பொன்னாவும் காளியும் செய்யும் ஒவ்வொரு பரிகாரத்தின் மூலமும் அவர்களது சமூக நம்பிக்கை களையும் அவற்றின் பின்னணியையும் அறிந்துகொள்ள முடிகிறது. இப்பரிகாரங்களின் வரிசை, கொங்குச் சமூகத்தின் அப்பகுதியின் ஒரு உப கதையாக, வரலாற்றுத் துண்டாகவும் விரிகிறது.

குழந்தையில்லாவிட்டால் என்ன என்று ஒவ்வொரு முறை அவர்களுக்கிடையே சமாதானம் செய்துகொள்ளும் போதும், அவர்களைச் சுற்றிய சமூகம் அவர்களை மெல்ல மெல்ல விலக்குகிறது. வாரிசில்லாமல் சொத்து சேர்த்து என்ன செய்யப் போகிறார்கள் என்று அவர்கள் சொத்தின் மீது பக்கத்துவீட்டு பெண்ணிலிருந்து காளியின் உறவினர்கள் வரை எல்லாருக்கும் ஆசை வருகிறது. பொன்னா, உழுத நிலத்தில் விதைப்பதற்கும், சமைந்த பெண்ணிற்கு சடங்கு செய்வதற்கும் தடை செய்யப்படுகிறாள். காளி தானாகவே, தன் நண்பர் வட்டத்திலிருந்து தனித்து, தானுண்டு தன் தொண்டு பட்டி உண்டு என்று மாறுகிறான்.

இவர்களுக்கு சமாதானம் அளிப்பவராக நல்லுப் பையன் சித்தப்பா இருக்கிறார். காளியை மறுமணம் செய்துகொள்ளத் தூண்டாதவர்களே இல்லை. அவனது அம்மா, மாமியாரிலிருந்து அத்தனை நண்பர்களும் உறவினர்களும் அதை மறைமுகமாகவேனும் குறிப்பிடு கிறார்கள். காளியும் அதைப் பற்றி முற்றாக யோசிக் காமல் இல்லை. அது அவனுக்கு சமூகம் நேரடியாக வழங்கும் உரிமை. பொன்னாவின் மனப்பதைப்பை அவன் உணர்ந்துகொண்டாலும், அதையும் தாண்டி அவன் மீதே இருக்கும் நம்பிக்கையின்மையால்தான் அவன் இன்னொரு திருமணத்தை நிராகரிக்கிறான். இன்னொரு பெண்ணையும் சேர்த்துக்கொண்டு, அவளுக்கும் குழந்தை இல்லாமல் போய்விட்டால், அது அவனால்தான் என்றாகிவிடும். பொன்னா, திருச்செங் கோட்டு தேர் நோம்பியின் பதினாலாவது நாள் திரு விழாவிற்கு அனுப்பப்படுவது, அவளுக்கு அளிக்கப் பட்ட மறைமுகமான சலுகை. அதுவும் அவனது குடும்ப வாரிசுக்காக அளிக்கப்பட்ட ஒன்று. அங்கு அன்று வரும் ஆண்கள் எல்லோரும் தெய்வத்தின் வடிவங்கள். அவர்கள் அளிக்கும் பிள்ளை தெய்வத்தின் குழந்தை என்று நம்பப்படுகிறது. குடும்பம் என்ற அமைப்பை நிலைநிறுத்த இப்படி சில மீறல்கள் மறைமுகத் தூண்களாக இருப்பது நமது மரபில் மகாபாரத காலத்திலிருந்து வருவதுதான். ஆனால், இதை ஒரு ஒழுக்க மீறலாக மட்டுமே காளியால் பார்க்கமுடிகிறது.

படைப்பில் புனைவும் வரலாறும்

ஒரு பிரதியை புரிந்துகொள்வதில் உள்ள சிக்கல் இது. அனைத்து சமய, சாதியவாதிகளும் தங்கள் புனிதம் சார்ந்த விழுமியங்கள் மீது கொண்டிருக்கும் பற்றுறுதியின் விளைவாகவும் இது நிகழ வாய்ப்பிருக்கிறது ...இதற்கு அடிப்படைக்காரணமாக ஒரு சடங்கியல் நிகழ்வின் பண்பாட்டு மானுடவியல் அடிப்படைகளை பொதுப் புத்தியில் புரிந்துகொள்வதற்கான வாய்ப்பு உருவாக்கப் படாததுதான். குழந்தைபேறு இல்லாத பெண் ஒரு திருவிழா இரவில் குழந்தைக்காக தன் விருப்பப்பட்ட வனோடு கலவி செய்வதற்கான அனுமதி என்பது விதிவிலக்காக பண்பாட்டில் அனுமதிக்கப்பட்ட ஒன்று ... இது செழிப்புச் சடங்கோடு சம்பந்தப்பட்டது... பல ஊர்களின் கிராமப்புற கோவில் திருவிழா பண்பாடுகளில் இடம்பெறுகிறது என்பதாக பண்பாட்டியல் ஆய் வாளர்கள் கூறுகின்றனர். இப்பிரச்சினையை இந்துத்துவ வாதிகளிடமும், வெகுஜன சாதி அடையாளத்தோடு வாழும் மக்களிடமும் எவ்வாறு உரையாடி புரியவைக்கப் போகிறோம் என்பதில்தான் படைப்பாளிகள், விமர்சகர் களின் பங்கு இருக்கிறது. மற்றபடி நமது ஆர்ப் பாட்டங்கள், கண்டனங்கள் அனைத்தும் பாதுகாப்பு சார்ந்த அரசியல் நடவடிக்கையாக மட்டுமே இருக்கும். சில நேரம் பிரச்சினையையும், படைப்பாளியையும் இன்னும் சிக்கலுக்குள் ஆளாக்கிவிடும். பொது வாசகர்கள் எதிர்ப்பாளர்கள் ஆவேசப்படும்படி கடுஞ் சொற்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டியதும் இருக்கிறது. பேரா.ஆ.சிவசுப்ரமணியம், முனைவர் தொ.பரமசிவம், முனைவர் பக்தவத்சல பாரதி, முனைவர் இ.முத்தையா, அ.கா.பெருமாள், ஆ.தனஞ்செயன் போன்ற நாட்டுப்புறப் பண்பாட்டியல், மானுடவிய லாளர்கள் இதுபோன்ற சடங்கியல் நிகழ்வின் மறை பொருள் விளக்கங்களை தமிழர்களின் பொதுப்புத்திக்கு எடுத்துச் செல்ல தொடர்ந்த உரையாடல்களை நிகழ்த்த வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

முனைவர் அ.கா.பெருமாள் இச் சடங்கியல் குறித்து இவ்வாறாக புராணவியல் சார்ந்து விளக்குகிறார்.

குழந்தையில்லா பெண், விதவையைப் போல் நடத்தப்படுவாள், சுபகாரியங்களில் துக்கிவைக்கப் படுவாள். இதை எதிர்கொள்ளுவது சவாலான காரியம். ஒருவகையில் விதவைகளைவிட மலடிகள்தாம் குத்தல் பேச்சுக்களால் அதிகம் தாக்கப்படுவர்.

குழந்தை இல்லாமைக்கு பெண்ணை மட்டுமே குற்றம் சாட்டுவது என்பது நடைமுறை. வாரிசை உருவாக்குவதற்கான வழிமுறைகள் பல்வேறு சமூகங் களில் பரம ரகசியமாகவே பேசப்பட்டிருக்கின்றன. நாட்டார் வழக்காற்றில் தொகுக்கப்படாத பகுதி இது.

மகாபாரத காலத்திலிருந்தே வரும் வழக்கம் இது. குருகுல முன்னோர் விசித்திரவீரியனின் மனைவிகள் அம்பிகை, அம்பாலிகை. விசித்திரவீரியன் காசநோயால் வருந்தி இறந்தான். அவனுக்குச் சந்தான பாக்கியம் இல்லை. குலத்துக்கு மூத்தவளான - சத்தியவதி மகன் முறையில் உள்ள பிதாமகனான பீஷ்மரிடம் “இந்த இரண்டு பெண்களையும் புணர்ந்து வம்சவிருத்தி செய்ய வேண்டும்; இது தர்மம்” என்கிறாள்.

பீஷ்மன் “அம்மா பரதவம்ச சந்தான விருத்திக்கு நீங்கள் கூறும் வழி நியாயமானது. ஆனால் நான் ஏற்கெனவே கொண்டுள்ள பிரக்ஞைக்கு இது தடை; அதனால் நல்ல குணவான பிராமணனை உபசரித்து அந்தப் பெண்களுடன் பிரஜை உற்பத்தி செய்யலாம்” என்று வழி சொல்லுகிறார். பீஷ்மரின் ஆலோசனைப்படி வியாசரை வேண்டுகிறாள் சத்தியவதி. வியாசர் அம்பிகை அம்பாலிகைக்கு சந்தான பாக்கியம் அளிக்க இணங்கு கிறார். அதனால் திருதராஷ்டிரன், பாண்டு என்னும் இரு மக்கள் பிறக்கின்றனர். பாண்டு இறந்த பின்புதான் குந்தியும், மாத்ரியும் ஐந்து தேவர்களுடன் கலந்து ஐவரைப் பெறுகின்றனர். இதனால் ஐவரைப் பாண்டு மக்கள் என எப்படிக் கூறலாம் என்ற கேள்வி, பாரதப் போர் ஆலோசனைக் கூட்டத்தில் எழுகிறது. வம்சம் அற்றுவிடாமல் இருக்க பிற ஆடவனைப் புணர்தல் என்பதை தர்மமாகப் பார்த்தல் என்ற மரபு செம்மொழிக் காவிய புராணங்களில் மட்டுமல்ல, நாட்டார் மரபிலும் உண்டு. வட்டார ரீதியான இச்செயல்பாடு பெரும் பாலும் விழா / சடங்கு தொடர்பாக இணைக்கப் பட்டுள்ளது. மகப்பேறில்லாத பெண்ணைத் திருவிழாக் களுக்கு அழைத்துச் செல்வது; திருவிழாக் கூட்டத்தில் ஒரு ஆணைத் தேர்ந்தெடுத்து அப்பெண்ணை அவனுடன் அனுப்புவது என்ற வழக்கம் தென்மாவட்டங்களில் சில ஊர்களில் இருந்திருக்கிறது. தூத்துக்குடி மாவட்டம் கும்மரெட்டியாபுரம் கிராமத்தில் மாசி மாதம் நடக்கும் தட்டைக்காட்டுத் திருவிழாவில், பெண் தான் விரும்பிய ஆணை அழைத்துக்கொண்டு சோளத்தட்டைப் பயிருக்குள் சென்று உடலுறவு கொள்ளலாம் என்ற வழக்கம் 40 ஆண்டுகளுக்கு முன்பு வரை இருந்திருக்கிறது. (ஆ. சிவசுப்பிரமணியன், மந்திரமும் சடங்குகளும், 2010, ப.64)

இந்து மரபின் நியோக தர்மத்திற்கு The system of appointing a kinship to raiseup seed to childless person by consorting with his wife .... ஆங்கில அகராதி பொருள்விளக்கம் சொல்கிறது.

பேசப்படாத வார்த்தைகள்

‘மாதொருபாகன்’ நாவலில் இடம் பெற்றுள்ள நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் உள்ள அர்த்தநாரீசுவரர் கோவில் திருவிழாவில் நடைபெறும் சடங்கியல் சம்பவ கருத்துக்களில் உள்நோக்கம் இல்லை என்றும் திருச்செங்கோடு என்ற ஊரின் பெயரை அகற்றி விடுவதாகவும், ஆசிரியர் பெருமாள் முருகன் உத்தர வாதம் அளித்தும், போராட்டக்காரர்கள் கடைகளை அடைத்து, மாவட்டம் முழுவதும் ‘பந்த்’ நடத்தினார்கள். இதுவொரு சட்டம் ஒழுங்கு பிரச்சினையாய் உருவெடுத்த போது நாமக்கல் மாவட்ட வருவாய் அலுவலர் முன் பேச்சு வார்த்தைக்காகக் காவல் துறையினரால் பாது காப்பாக அழைத்து வரப்பட்டார். கொங்குவேளாள கவுண்டர் சமூக அமைப்பினரும் இந்துத்துவ இயக்கங் களைச் சேர்ந்த முப்பது பிரதிநிதிகளும் தனியருவராக எழுத்தாளர் பெருமாள் முருகனும் இப்பேச்சு வார்த் தையில் கலந்து கொண்டனர். பேச்சுவார்த்தையில் பெருமாள்முருகனுக்கு ஆதரவாக எந்த அமைப்புகளும் கலந்துகொண்டதாகத் தெரியவில்லை. எதிர்ப்புக் களத்துக்குள் நின்று பெருமாள்முருகனுக்கு ஆதரவாக பேசுவதற்கும் எதிர்ப்புக் களத்திற்கு வெளியே நின்று ஆதரவு தெரிவிப்பதற்கும் இடையில் ஏராளமான வித்தியாசம் உண்டு என்பது நாம் அறியாததல்ல. இந்தச் சூழலில்தான் சர்ச்சைக்குரிய தனது நூலின் பகுதிகளை திரும்பப் பெறுவதாக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு உள்ளார். இந்த தனிமைப்பட்ட, விரக்தி சார்ந்த அறிவிப்பே பெருமாள் முருகன் செத்துவிட்டான் என்ற முகநூல் அறிக்கையாகும்.

ஒரு எழுத்தாளனின் மரணம்

எழுத்தாளர் பெருமாள் முருகன் தன் அதிகாரபூர்வ முகநூலில் வெளியிட்ட அறிக்கை தமிழ் படைப்பாளிகள், வாசகர்கள் மத்தியில் ஒரு அதிர்ச்சியையும், பச்சாதா பத்தையும் எதிர்ப்பையும் ஒருசேர வரவழைத்தது.

“எழுத்தாளன் பெருமாள் முருகன் செத்துவிட்டான். அவன் கடவுள் அல்ல, ஆகவே உயிர்த்தெழப் போவதில்லை. மறுபிறவியில் அவனுக்கு நம்பிக் கையும் இல்லை. இனி அற்ப ஆசிரியனாகிய பெ.முருகன் என்பவன் மட்டுமே உயிர் வாழ்வான். பெருமாள் முருகன் தொகுத்த, பதிப்பித்த நூல்கள் தவிர அவன் எழுதிய எந்த நூலும் விற்பனையில் இருக்காது. நூல்களை வெளியிட்டுள்ள பதிப் பகத்தார் அவன் நூல்களை விற்பனை செய்ய வேண்டாம். பெருமாள் முருகனின் நூல்களை இதுவரை வாங்கியோர் தாராளமாக அவற்றைத் தீயிட்டுக் கொளுத்தி விடலாம். இனி எந்த இலக்கிய நிகழ்வுக்கும் பெருமாள் முருகனை அழைக்க வேண்டாம் அவனை விட்டுவிடுங்கள்.”

என்பதாக பெருமாள் முருகன் என்ற படைப்பாளி செத்து விட்டதாக பெ.முருகன் என்ற சாதாரண மனிதன் அறிவித்தார்.

இதனை படைப்பாளியின் தோல்வியாகவும், பின்வாங்கலாகவும் சில கருத்தாளர்கள் கருதி எதிர்ப் பினையும் வெளிப்படுத்தினர். இந்த அறிக்கையின் தீவிரத்தன்மையின் விளைவாக தன்னிச்சையாக பெருமாள் முருகனுக்கு ஆதரவாகவும் இந்துத்துவ அமைப்புகளின் அச்சுறுத்தலுக்கு எதிராகவும் தமிழகம் முழுவதும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாலர் கலைஞர்கள் சங்கம், தமிழ்நாடு கலை இலக்கியப் பெரு மன்றம் மற்றும் எழுத்தாளர் அமைப்புகள், சிற்றிதழ் இயக்கம், புதுடெல்லி ஜவகர்லால் பல்கலைக்கழக மாணவர்கள், கேரள தமிழ்சங்கத்தினர் என இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள், கண்டன கருத்தரங்கள் நிகழ்ந்தன. இதுகுறித்த பெருமாள் முருகனுக்கு ஆதரவான குரல்களும் அறிக்கையும் இந்தியகம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் தோழர் ஆர்.நல்லக்கண்ணு, தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன், விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் தமிழ்த் தேசிய பேரியக்கத்தின் தலைவர் பெ.மணியரசன் போன்றோர் களத்தில் நின்றனர்.

சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து தோழர் ஆர்.நல்ல கண்ணு ஒவ்வொரு கலைஞனுக்கும் எழுத்துரிமையும், பேச்சுரிமையும் அவசியம். பெருமாள் முருகன் தனக்கான உரிமைகளை மீறவில்லை. சாதி, மத வன்முறைகள் குறித்து எழுதியுள்ளார். தமிழக அரசே மறந்துவிட்ட உ.வே.சாமிநாத ஐயரின் எழுத்துகளை தொகுத்துள்ளார். திருச்செங்கோடு பகுதியின் வளர்ச்சி குறித்து பதிவு செய் துள்ளார். எழுத்தாளராக மட்டுமல்லாமல் சிறந்த பேராசிரியராகவும் திகழும் பெருமாள் முருகனுக்கு மரியாதை தராமல், அவரை அச்சுறுத்தி எழுத்துலகத்தை விட்டே வெளியேற்றியிருப்பது மிகவும் வேதனைக்குரிய தாகும் என்பதாக தனது எதிர்ப்பை பதிவு செய்தார்.

தமிழ், ஆங்கிலம், மலையாளம் உள்ளிட்ட பத்திரிகை ஊடகங்கள், காட்சி ஊடகங்கள், ‘வாஷிங்டன் போஸ்ட்’, ‘தி கார்டியன்’ என சர்வதேச ஊடகங்கள் மற்றும் முகநூலில் பெருமாள் முருகன் குறித்த விரிவான செய்திகள் விவாதிக்கப்பட்டு வருவதும், ஆதரவுக்குரல் வலுவடைந்து வருவதும் கருத்தியல் சுதந்திரத்திற்கு கிடைத்த நல்லதொரு அறிகுறியாகவே இருக்கிறது.

உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

திருச்செங்கோடு மக்கள் சார்பில் ‘பெருமாள் முருகன் மீது ஏற்கனவே கொடுக்கப்பட்டுள்ள கிரிமினல் புகார் மீது உள்ளூர் போலீசார் வழக்குப்பதிவு செய் துள்ளனர்.’ இதனிடையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தமுஎகச அமைப்பின் தலைவர் தோழர் ச.தமிழ் செல்வன், பொதுநல மனுவொன்றை தாக்கல் செய் துள்ளார். மாதொருபாகன் புத்தகத்தையே திரும்ப பெறுவதாக பெருமாள்முருகன் எழுதிக் கொடுத்துள்ளார். அதிகாரிகள், போராட்டக்காரர்கள் ஆகியோரது நிர்பந்தத்தால், அவர் இந்த முடிவினை எடுத்துள்ளார். எனவே, இந்த சமரசக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவினை ரத்து செய்ய வேண்டும். அந்த சமரசக் கூட்டமே செல்லாது என்று அறிவிக்க வேண்டும். பெருமாள்முருகனுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும்.

இந்த மனு தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தபோது இந்த வழக்கில் பெருமாள்முருகனை ஒரு மனுதாரராக சேர்க்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. பெருமாள்முருகனின் நிலைப்பாடு சார்ந்த ஒரு பிரச்சினையை அவரின்றி பிறரால் ஒரு வழக்காக தொடுக்கப்பட்டிருப்பது எந்தவகையில் இவ்வழக்கிற்கு வலுச் சேர்க்கும் என்பது ஒரு சர்ச்சைக்குரிய விசயமாகவே கருத இடமிருக்கிறது. ஒரு அவசரத்தன்மையின் விளைவும் தீர்ப்பும் எதிர்காலத்தில் எழுத்தாளர் அனைவரையுமே சுதந்திரமாக எழுதவிடாமல் மிரட்டும் ஒரு ஆயுதமாக மாறிவிடக்கூடாது என்ற கவலையே இப்போது முன் நிற்கிறது.

Pin It