ஜல்லிக்கட்டுத் தடையை நீக்கக் கோரி சென்னை மெரினா கடற்கரையிலும், தமிழகம் முழுமையிலும் இந்த மாதம் 17ம் தேதி முதல் இளைஞர்கள் பொது வெளிகளில் கூடி இரவிலும் பகலிலும் அகலாமல் அமர்ந்து முற்றிலும் அமைதி வழியில் போராடினர். எந்த ஒரு குறிப்பான கட்சி அல்லது இயக்க வழிகாட்டலும் இன்றி தன்னெழுச்சியாகவும் முற்றிலும் அமைதியாகவும் நடைபெற்ற இந்தப் போராட்டம் பல வகைகளிலும் 2011- 12 களில் நியூயார்க்கில் நடைபெற்ற ‘வால்ஸ்ட்ரீட் அமர்வு’ போராட்டத்தை நினைவூட்டியது.

அனைத்துத் தரப்பினரின் ஆதரவுடன் நடைபெற்ற இப்போராட்டம் கொடுத்த அழுத்தத்தின் விளைவாக தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க நேர்ந்தது. மத்திய அரசை வற்புறுத்தி அவசரச் சட்டம் ஒன்றை இயற்ற வைப்பதில் தோல்வியுற்ற தமிழக அரசு சென்ற ஜன 21 அன்று ஜல்லிக்கட்டுத் தடையை நீக்கும் வகையில் மிருகவதைத் தடைச் சட்டத்தில் உரிய திருத்தங்கள் செய்து அவசரச் சட்டம் ஒன்றை இயற்றியது. அடுத்த நாளே மதுரை அலங்காநல்லூரில் ஜல்லிகட்டுப் போராட்டம் நடத்தப்படும் எனவும் முதலமைச்சர் அதில் கலந்து கொள்வார் எனவும் அறிவிக்கப்பட்டது.

எனினும் தமிழகமெங்கும் இருந்த இந்த அமர்வுப் போராட்டத்தினர் நிரந்தரச் சட்டம் வேண்டும் எனவும், தமிழகத்தைப் பாதிக்கும் பிற பிரச்சினைகள் குறித்துக் கவனத்தை ஈர்த்தும் தம் இடங்களைவிட்டு அகல மறுத்தனர். அலங்காநல்லூர் மக்களும் கூட ஜல்லிக் கட்டு நடத்தவிட மாட்டோம் என்றனர். இந்நிலையில் சென்ற ஜன 23 அன்று சென்னை, சேலம், கோவை, வேலூர், புதுக்கோட்டை, அலங்காநல்லூர் முதலான இடங்களில் கூடியிருந்த மக்களைக் காவல்துறையினர் வன்முறையாக வெளியேற்றத் துவங்கினர். வெளியேற மறுத்தவர்கள் தாக்கப்பட்டனர்.

காவல்துறையினரே வாகனங்களைக் கொளுத்துகிற படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகத் தொடங்கின. மெரினாவில் சாலை ஓரங்களில் நிறுத்தப்பட்டிருந்த போராட்டக் காரர்களின் வாகனங்களைப் போலீசாரே தாக்கி உடைத்தனர். சில இடங்களில் அவை எரியூட்டவும் பட்டன. காலைக் கடன்களை முடிப்பதற்காக அருகிலுள்ள நடுக்குப்பம் போன்ற பகுதிகளுக்குச் சென்ற போராட்டக்காரர்களுக்கு, குறிப்பாகப் பெண்களுக்கு அப்பகுதியில் வசித்த அடித்தள மக்கள் உதவினர். அப்படி வந்தவர்களைத் துரத்தி வந்து காவல்துறையினர் தாக்கியபோது நடுக்குப்பம், வி.ஆர்.பிள்ளைத் தெரு முதலான பகுதிகளில் இருந்த மீனவர் மற்றும் தலித் மக்கள் அவர்களுக்குப் பாதுகாப்பும் அளித்தனர்.

கோவை முதலான தமிழகத்தின் பல பகுதிகளில் கூடியிருந்த மக்கள் மீதான காவல்துறைத் தாக்குதல் கடுமையாக இருந்தது. நிரந்தரச் சட்டம் இயற்ற உள்ளதை ஏற்றுச் சில பகுதிகளில் மக்கள் கலையவும் செய்தனர்.

இதற்கிடையில் ஜன 23 அன்று தொடங்கிய சட்டமன்றக் கூட்டத்தில் மாலை 5 மணிக்குக் கூடிய சிறப்பு அமர்வு மிருகவதைச் சட்டத்தில் உரிய திருத்தங் களைச் செய்து ஜல்லிக்கட்டின் மீதான தடையை நீக்கி நிரந்தரச் சட்டத்தை அனைத்துக் கட்சிகளின் ஆதரவுடன் இயற்றியது. இன்னொரு பக்கம் வன் முறையாக அமர்வுப் போராளிகள் வெளியேற்றப் படுதலும் தொடர்ந்தது.

jalikattu 600ஐஸ்ஹவுஸ் மற்றும் அம்பேத்கர் பாலம் அருகில் உள்ள குடியிருப்புகளில் காவல்துறை நடத்திய தாக்குதல்

சுமார் 12 மணி அளவில் யாரோ சில சமூக விரோதிகள் ஐஸ்ஹவுஸ் காவல் நிலையத்தைச் சுற்றி நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களுக்குத் தீ வைத்தனர். சற்று நேரத்தில் அந்தத் தீ பெரிய அளவில் மற்ற பகுதிகளுக்குப் பரவாமல் அணைக்கப்பட்டது. காவல் நிலையத்திற்குள் இருந்த பெண் போலீஸ் ஒருவரும் ஆபத்தின்றி காப்பாற்றப்பட்டார்.

பிற்பகலில், சுமார் மூன்று மணிக்குப் பிறகு ஐஸ் ஹவுசுக்கு அருகிலுள்ள மீனவர் மற்றும் தலித் குடியிருப்புப் பகுதிகளில் நுழைந்த காவல்துறையினர் மிகக் கொடூரமாக அம்மக்கள் மீது தாக்குதலைத் தொடங்கினர். சிறுவர்கள் உள்ளிட்ட கையில் அகப்பட்ட ஆண்களை அடித்துப் போலீஸ் வாகனங் களில் ஏற்றிச் சென்று ‘ரிமாண்ட்’ செய்தனர்.

இந்த அத்துமீறல்கள் எங்கள் கவனத்திற்கு வந்தபோது இது குறித்து ஆராய்ந்து அறிக்கை அளிக்க கீழ்க்கண்டவாறு குழு ஒன்று அமைக்கப்பட்டது.

குழுவில் பங்கு பெற்றோர்: பேரா.அ.மார்க்ஸ், முனைவர் ப. சிவகுமார், பேரா. மு.திருமாவளவன், வீ.சீனிவாசன், நட்ராஜ், பெரியார் சித்தன், முனைவர் ஜெ. கங்காதரன், பேரா.கோ.கார்த்தி, அகமது ரிஸ்வான்.

பார்வையிட்ட பகுதிகள்: 1.நடுக்குப்பம் எனும் மீனவர் குடியிருப்பு மற்றும் அவ்வை சண்முகம் சாலையில் உள்ள மீன் மார்க்கெட் 2. அம்பேத்கர் பாலத்திற்கு அருகில் உள்ள ரூதர்புரம் எனும் தலித் குடியிருப்பு 3. அம்பேத்கர் பாலத்திற்கு அருகில் உள்ள மீனாம்பாள்புரம் எனும் தலித் குடியிருப்பு 4. வி.ஆர்.பிள்ளைத் தெரு மற்றும் கால்வாய்த் தெரு. 5. முனுசாமி நகர் 6. அனுமந்தபுரம் 7. ரோட்டரி நகர்

நாங்கள் கண்டவை:

1. நடுக்குப்பம் : பெண்கள் சிறுவர்கள் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளனர். வீடுகள் தாக்கிக் கண்ணாடிகள் உடைக்கப்பட்டுள்ளன. கதவுகள், தொலைக்காட்சிப் பெட்டிகள் நொறுக்கப்பட்டுள்ளன. இராணி மேரிக் கல்லூரியை ஒட்டி அமைந்துள்ள மீன் மார்க்கெட் முற்றிலும் எரித்துச் சாம்பலாக்கப்பட்டுள்ளது. இலட்சக் கணக்கான மதிப்புள்ள மீன்கள், எறால்கள் கொளுத்தி நாசமாக்கப்பட்டுள்ளன. மோட்டார் சைக்கிள்கள், ஒரு ஸ்கார்பியோ உள்ளிட்ட சில கார்கள், ஆட்டோக்கள் தாக்கப்பட்டு நொறுக்கப்பட்டுள்ளதோடு இவற்றில் பல முற்றிலுமாய் எரிக்கவும்பட்டுள்ளன. ஏதோ ஒரு தூளைத் தூவி (பாஸ்பரஸ்?) எரியூட்டியதாக மக்கள் கூறினர். சிங்காரவேலர் பிறந்த இந்த நடுக்குப்பத்தில் இத்தகைய வன்முறைகளைக் கண்டதே இல்லை எனப் பலர் உணர்ச்சிவயப்பட்டுக் கூறினர். தமது வாழ்வாதாரமே அழிக்கப்பட்டு விட்டது எனப் பெண்கள் அழுதனர். போலீசார், குறிப்பாகப் பெண் போலீசார் தம்மை அடித்தும் கற்களை வீசியும் தாக்கியதோடு மிக மோசமான வார்த்தைகளில் இழிவாக ஏசியதாகவும் கூறினர். ஆண் போலீசார் தங்கள் முன் காற்சட்டை ‘ஸிப்’களை அவிழ்த்து ஆபாசமாகப் பேசியதாகவும் குற்றம் சாட்டினர். மெரினாவிலிருந்து அடிபட்டு ஓடி வந்த இளைஞர்களுக்கும் பெண்களுக்கும் உதவியதைத் தவிர நாங்கள் என்ன பாவம் செய்தோம் எனக் குமுறினர்.

2. ரூதர்புரம்: அம்பேத்கர் பாலத்தை ஒட்டி இரண்டு வேன்களும் தெருவை ஒட்டி ஒரு ஆட்டோவும் எரிக்கப்பட்டிருந்தன. தெரு நுழைவில் நிறுத்தப் பட்டிருந்த 6 ஆட்டோக்கள், 8 பைக்குகள், 2 சைக்கிள்கள், 1 சோஃபா செட் எரிந்து கிடந்தன. ஏன் உங்கள் பிள்ளைகளை மெரீனா போராட்டத்துக்கு அனுப்பினீர்கள் எனக் கேட்டுப் பெண் போலீஸார் தம்மைத் திட்டியதாகப் பெண்கள் குமுறினர். அங்கிருந்த சுமார் 100 பேர் திரண்டு சென்று ‘சிட்டி மால்’ அருகில் நின்று, “எங்கள் மாண்வர்களை அடிக்காதீர்கள்” என முழக்கம் எழுப்பியதாக ஞானம்மாள் என்பவர் கூறினார். அப்போது ஒரு வாகனத்தில் வந்து இறங்கிய போலீசார் கற்களையும் பாட்டில்களையும் வீசித் தாக்கியதாகவும் வாகனங்களைத் தீவைத்துக் கொளுத்தியதாகவும் ஒருவர் கூறினார்.

3. மீனாம்பாள்புரம் : லேடி வெலிங்டன் பள்ளியில் +2 படிக்கும் தன் 18 வயது மகன் கிருபாகரனை பள்ளியிலிருந்து வந்துகொண்டிருந்தபோது அடித்து இழுத்துச் சென்றதை அழுது கொண்டே சொன்னார் சிவகாமி (33) க/பெ தினகரன். காவல் நிலையத்திலிருந்த அவனுக்கு இரவில் சோறூட்டச் சென்ற போது அவன் கைகள் வீங்கி இருந்தன என்றார் அவர். அவனை விட்டுவிடுவதாகச் சொன்ன போலீசார் இறுதியில் ரிமாண்ட் செய்து புழல் சிறையில் அடைத்துள்ளனர். ரமேஷ் மனைவி கீதா சொன்னது: “எங்க வீட்டுக் காரருக்கு 45 வயசு.

தூய்மைப் பணி நிறுவனம் ஒன்றில் தெருக்கூட்டுபவராக வேலை செய்கிறார். வேலை முடிஞ்சு வரும்போது போலீசுங்க அவரை மிருகத்தனமா அடிச்சுப் போட்டு இருக்காங்க.” வேலு மனைவி பொற்கொடி (35): “என் மவனைத் தேடிப் போனேன். ஒரு பெண் போலீஸ் என்னை அடிச்சதுல என் கை முறிஞ்சு போச்சு” எனத் தன் வீங்கிய கையைக் காட்டினார். கணவரை இழந்து வாழும் தமிழரசி (40): “வீட்டுக்குள்ள நுழைஞ்ச போலீஸ் என் புடவையைக் கிழிச்சாங்க” எனச் சொல்லிக் கிழிந்த தன் புடவையைக் காட்டினார். குப்பன் மனைவி காந்தா (60): “வீட்டுக் கதவை உடைச்சுட்டாங்க. மோட்டார் சைக்கிளையும் நொறுக்கிட்டாங்க. பாத்ரூமுல இருந்தவங்களை எல்லாம் ‘சீக்கிரம் வாங்கடீÕ”ன்னு சொல்லி கத்துனாங்க.”

4. வி.ஆர்.பிள்ளை தெரு: போலீஸ்காரர்கள் போராட்டக்காரர்களைத் துரத்திவந்தபோது தாங்கள் அதைப் பார்த்துக் கொண்டு நின்றதாகவும், பின் திடீரென வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த இவர்களையே போலீஸ் துரத்தித் தாக்கியதாகவும் பெண்கள் கூறி அழுதனர். பின் சுமார் 100 பேர் திரண்டு இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தபோது போலீசார் அவர்களை அசிங்கமாகத் திட்டினர் என்றனர். மீன்வளத்துறையில் பணியாற்றும் பழனி (58), “நாங்க எல்லாரும் மிரட்டப்பட்டோம். பெண்களை ரொம்ப மோசமாப் பேசுனாங்க. ஊரே பயந்து கிடக்கு” என்றார்.

5. முனுசாமி நகர்: ராஜீவ் என்பவரின் மனைவி தேவி (36): “என் வீட்டுக்காரர் ஒரு பெயின்டர். வீட்டில இருந்தவரைப் போட்டு அடிச்சுட்டாங்க. கையில் புத்தகப் பையோடு வந்த மாணவர்களையெல்லாம் துரத்தி அடிச்சாங்க. சம்பந்தமில்லாத எல்லாரையும் அடிக்க ஆரம்பிச்சாங்க. எங்க தெரு பொம்பளை ஒருத்தரோட 5 பவுன் சங்கிலியையும் அறுத்துட்டுப் போயிட்டாங்க.” அடிபட்டிருந்த அவரது கணவரையும் பார்த்தோம்.

6. அனுமந்தபுரம் - கால்வாய்த் தெரு: ஆட்டோ டிரைவர் கார்த்திக் (45); “நான் நேத்து வேலைக்கிப் போகல. ஆட்டோ வாசல்ல நின்னுச்சு. உள்ளே நுழைஞ்ச போலீஸ் என்னைக் கடுமையா அடிச்சுட்டாங்க.” அவர் உடலெங்கும் காயம். கட்டுகள் இருந்தன. வெளியில் நின்றிருந்த அவரது ஆட்டோ தாக்கப்பட்டுக் கண்ணாடி உடைந்திருந்தது. “ரெண்டு பிள்ளைங்கள நான் காப்பாத்தியாவணும். எப்ப எனக்கு இந்தக் காயங்கள் ஆறும், எப்பிடி நான் இந்த ஆட்டோவை சரி பண்ணி ஓட்டப்போறேன்னு ஒண்ணும் தெரியல.” என்று அவர் அழுதார். கட்டுமானப் பணி செய்யும் தங்கவேலு (33) உடலெங்கும் காயங்கள். அவர் காலொன்று உடைந்து கட்டு போடப்பட்டிருந்தது. வீட்டில் அடித்ததோடு போலீஸ் வேனில் ஏற்றிச் சென்று லேடி வெலிங்டன் பள்ளியில் வைத்து மீண்டும் அடித்ததாக அவர் கூறினார். பின் இன்னொரு இடத்திற்குக் கொண்டு சென்று அங்கும் அடித்தனராம். பின் அவர்களில் சுமார் 10 பேர்களைக் கொண்டு சென்று ஒரு இடுகாட்டில் தள்ளிச் சென்றுள்ளனர். அவர்களின் வீட்டார்கள் அவர்களைக் கண்டுபிடித்து மருத்துவ மனைக்குக் கொண்டு சென்றுள்ளனர்.

7. ரோட்டரி நகர்: பெருங் கூட்டமாகத் திரண்டு வந்த பெண்கள் தாங்கள் எவ்வாறெல்லாம் அசிங்கமாகத் தூற்றப்பட்டோம் எனச் சொல்லி அழுதனர். அவர்களில் ஒருவரின் கை உடைந்திருந்தது. பெண் போலீசாரே இப்படிச் செய்ததாக அவர்களும் கூறினர்.

இறுதியாக நாங்கள் மயிலாப்பூர் காவல் நிலையத் துணை ஆணையர் வி.பாலகிருஷ்ணன் மி.றி.ஷி அவர்களைச் சந்தித்தோம். தான் மெரினாவில் கண்காணிப்புப் பணியில் இருந்ததாகவும் இங்கு நடந்தவை குறித்து அதிகம் தெரியாது எனவும் காவல்துறை அத்துமீறல்கள் பற்றி நிரூபணங்களுடன் சொன்னால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இனி யாரையும் கைது செய்யும் உத்தேசம் தமக்கு இல்லை எனவும் அவர் கூறினார். சில ஆண்டுகள் முன் இரட்டைக் கொலை ஒன்று இப்பகுதியில் நடந்ததாகவும் அதைப் புலனாய்ந்த ஒரு காவல்துறை அதிகாரியே தற்கொலை செய்து கொள்ள நேர்ந்த தாகவும் அதனால் இப்பகுதி மக்கள் காவல்துறைமீது கோபம் கொண்டவர்களாகவே உள்ளதால்தான் காவல் வாகனங்களையெல்லாம் இவர்கள் கொளுத்தினர் எனவும் அவர் கூறினார்.

எமது பார்வைகளும் கேள்விகளும்

1984-ல் எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்தபோது இப்பகுதி மக்கள் மீது தொடுக்கப்பட்ட தாக்குதலுக்குப் பிறகு இதுதான் இம்மக்கள் சந்திக்கும் மிகப் பெரிய காவல்துறை அத்துமீறல். காவல்துறை மீது இப்பகுதி மக்களுக்கு ஒரு பகையும் கோபமும் இருந்ததாக துணை ஆணையர் கூறுகிறார். அது உண்மையோ பொய்யோ காவல்துறைக்கு இப்பகுதி அடித்தள மக்களின் மீது ஒரு பகையும் கோபமும் இருப்பது இன்று அரங்கேறியுள்ள கொடும் வன்முறைகளில் வெளிச்சமாகிறது. போராட்டக் காரர்களுக்கு இம்மக்கள் ஆதரவு காட்டியதையும் அவர்களால் ஏற்க முடியவில்லை. மெரினாவிலிருந்து போலீஸ்காரர்களால் துரத்தப்பட்டு ஓடி வந்த ஒரு பெண் ஓடிக் கொண்டிருக்கும்போதே கருச்சிதைவுக்கு ஆளாகியதையும் அவரை ரோட்டரி நகர் பெண்கள் காப்பாற்றியதையும் அவர்களில் ஒருவர் கூறினார்.

மெரினாவில் அமைதியாக அமர்ந்து போராடிக் கொண்டிருந்த இளைஞர்களிடம் முதலமைச்சரும் அவரது சக அமைச்சர்களும் நேரடியாக வந்து பேசி உறுதி அளித்திருந்தால் இந்தப் போராட்டம் அமைதியாக முடிந்திருக்கும். இறுதிவரை காவல்துறையினர்தான் அரசுத் தரப்பில் போராட்டக்காரர்களுடன் பேசினரே ஒழிய முதலமைச்சர் வந்து பேசாததே இத்தனை வன்முறைகளுக்கும் கொடுமைகளுக்கும் காரணம்.

நிரந்தரச் சட்டம் இயற்றிய பின்னும் அது குறித்த முழு விவரங்களையும் போராட்டக்காரர்களுக்கு அதிகாரபூர்வமாகத் தந்து விளக்கி இருக்க வேண்டும். ஏன் அதில் தயக்கம் காட்டப்பட்டது எனத் தெரிய வில்லை.

தமிழகமெங்கும் 23 ந்தேதி மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டிய ஒன்று. இதே போன்று நடந்த வால்ஸ்ட்ரீட் அமர்வுப் போராட்டத்தின்போது அமெரிக்க அரசு இப்படி நடந்துகொள்ளவில்லை. பல மாதங்கள் தொடர்ந்து நடந்த போராட்டம் அது. சர்வாதிகாரிகளின் ஆட்சிக்கு எதிராக நடந்த அரபு வசந்தப் போராட்டங்கள் கூட இப்படி ஒடுக்கப்படவில்லை. அடிப்படை ஜனநாயகப் பண்பு அற்ற அரசுகளாகவே நமது அரசுகள் உள்ளன என்பதற்கு இந்த அடக்குமுறை இன்னொரு சாட்சியாக உள்ளது.

ஜன 23 அன்று பள்ளி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுப் பின் அன்று நடந்த இந்த தாக்குதல் களின் ஊடாகப் போக்குவரத்தை நிறுத்திப் பள்ளிப் பிள்ளைகளுக்கும் பெற்றோர்களுக்கும் உருவாக்கப்பட்ட சிரமங்கள் இந்த அரசின் பொறுப்பின்மையையும் திறமை இன்மையையுமே காட்டுகின்றன.

பரிந்துரைகள்

மெரீனாவை ஒட்டியுள்ள தலித் மற்றும் மீனவர் குடியிருப்புகளில் மேற்கொள்ளப்பட்ட இந்தத் தாக்குதலை விசாரிக்க நீதிபதி ஒருவர் தலைமையில் ஆணையம் ஒன்று அமைக்க வேண்டும்.

மீன்வளத்துறையின் மூலம் உடனடியாக தீப்பிடிக்காத கூரையுடன் கூடிய மீன் மார்க்கெட் ஒன்றை நடுக்குப்பத்தில் அரசு கட்டித்தர வேண்டும்.

நடுக்குப்பத்தைச் சேர்ந்த மீன் வணிகம் செய்து கொண்டிருந்தவர்களுக்கு உடனடியாக இடைக்கால நிவாரணமாக ஒவ்வொருவருக்கும் உடனடியாக ரூ 25,000 அளிக்கவேண்டும்.

தலித் மற்றும் மீனவர்களின் வீடுகள், வீட்டுப் பொருட்கள் மற்றும் வாகனச் சேதங்களை ஒரு மாதத்திற்குள் உடனடியாக மதிப்பிட்டு உரிய இழப்பீடுகளை அரசு வழங்க வேண்டும்.

கைது செய்யப்பட்டுள்ள அனைவரையும் எந்த நிபந்தனையும் இன்றி உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.

இந்த அத்துமீறல்கள் குறித்த விசாரணை முடியும் வரை உயரதிகாரிகள் உட்பட இதற்குப் பொறுப்பானவர் களைக் கட்டாயக் காத்திருப்பில் வைக்க வேண்டும். வன்முறையிலும் தீவைப்பிலும் ஈடுபட்ட காவல் துறையினர் உடனடியாக சஸ்பென்ட் செய்யப்பட வேண்டும்.

பெண் போலீசார் இப்படிப் பெண்கள் மீதே வன்முறையாக நடந்து கொண்டது குறித்துக் காவல் துறையும் அரசும் கவனம் கொள்ள வேண்டும். அவர் களுக்கு உரிய உணர்வூட்டும் பயிற்சிகள் அளிக்க வேண்டும்.