‘வேட்டுவன்’ எனும் சொல் ‘வேட்டை’ எனும் வினையடியைக் கொண்டுள்ள சொல்லாகும். வினை என்பது தொழிலைக் குறித்து வருமென்பதால் ‘வேட்டை’ என்பது வேட்டையாடும் தொழிலைக் குறித்து நிற்கின்றது. இதனால் ‘வேட்டுவன்’ என்பது ‘வேட்டையாடும் தொழிலைச் செய்பவன்’ எனும் பொருளைக் குறிக்கின்றது. பண்டைக் காலத்தில் இந்த ‘வேட்டுவன்’ என்ற சொல் குறிஞ்சி நிலத்து ஆடவனைக் குறிக்கும் பொதுப்பெயராக வழங்கியதைப் பழந்தமிழ் இலக்கியங்கள்வழித் தெரிந்துகொள்ள முடிகின்றது. பண்டை வழக்கில் குறிஞ்சி நிலமென்பது மலையைக் குறித்திருக்கின்றது. மலைக்கும் வேட்டுவனுக்குமான தொடர்பைப் பலவாறு உரைக்கின்றன சங்க இலக்கியங்கள். மலைக்கும் வேட்டுவனுக்குமான தொடர்பை இலக்கியச் சான்றுகளைக் கடந்து பார்க்கின்றபோது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ‘கழுகுமலை’ யில் ஒற்றைப் பாறையில் செதுக்கப்பட்ட ‘வேட்டுவன் கோவில்’ வரலாற்று ஆவணமாக இன்றைக்கும் இருந்துவருகிறது.

birds 255வேட்டுவன் எனும் சொல் இலக்கியங்களிலும், ஆவணங்களிலும், கொங்கு வட்டாரப் பகுதியில், குறிப் பிட்ட ஒரு சமூகத்தினர் பெயருக்கு முன்னொட்டாகச் (வேட்டுவக் கவுண்டர்...) சமகால வழக்கிலும் நீடித்து நிற்பது அந்தச் சொல்லின் நீண்ட வரலாற்றுப் பின்புலத்தை வெளிப்படுத்துகின்றது. பழந்தமிழ் இலக்கியங்களுள் சிறப்புமிக்க சங்க இலக்கியங்களில் ‘வேட்டுவன்’ எனும் சொல் புலமைத்துவத்துடன் ஆளப்பட்டுள்ளமை நம் கவனத்தை ஈர்க்கின்றது.

மாற்பித்தியார் என்ற புலவர் புறநானூற்றுப் பாடல் (252) ஒன்றில் ‘சொல்வலை வேட்டுவன்Õ என்று குறித்திருக்கிறார். அப்பாடல்,

கறங்கு வெள் அருவி ஏற்றலின், நிறம் பெயர்ந்து

தில்லை அன்ன புல்லென் சடையோடு

அள் இலைத் தாளி கொய்யுமோனே

இல் வழங்கு மடமயில் பிணிக்கும்

சொல்வலை வேட்டுவன் ஆயினன், முன்னே!

என அமைந்துள்ளது. இந்தப் பாடல் இவ்வகைப் பொருளைத் தருகின்றது.

‘ஒலிக்கும் வெள்ளிய அருவியில் பலகாலம் நீராடு வதால் தன் கருநிறம் மரித் தில்லை இலைபோன்று நிறம் மரிய சடையோடு கூடியவனாக அடர்ந்த தாளி இலையைப் பறித்துக்கொண்டிருக்கிறானே, இவனே தான், முன்னர் மயில்போன்ற இளம் அழகிகளை வேடன் வலையை விரித்துப் பறவைகளைப் பிடிப்பது போல வார்த்தை வலை விரித்துத் தன்வசம் விழச் செய்தவன்’. வேடன் வலைவிரித்து விலங்கினைப் பிடிப்பதுபோலச் சொல்லால் வலைவீசிப் பெண்களை தன்வசப் Ôபடுத்து பவன் என்பதால் ‘மடமயில் பிணிக்கும் சொல்வலை வேட்டுவன்’ எனப் புலவர் சுட்டியிருக்கிறார். ‘வல்வில் வேட்டுவன்’ (புறம். 150), ‘யானை வேட்டுவன்’ (புற. 214) போன்ற சொல்லாட்சிகளும் சங்க இலக்கியங்களில் காணப்படுகின்றன.

வேட்டுவர்களிடமிருந்த அரிய வழக்கங்கள் பற்றிய பதிவுகளும் சங்க இலக்கியங்களில் காணப்படுகின்றன. அவற்றுள் குறிப்பிட்ட சில வழங்கங்கள் தற்கால வழக்கிலும் இருக்கின்றன. சில ஆண்டுகளுக்கு முன்னர் வெளிவந்த ‘கும்பி’ என்ற தமிழ்த் திரைப்படத்தில் காட்டருகில் உள்ள ஊரில், பழக்கப்படுத்தப்பட்ட யானை ஒன்றை வைத்து பயிர்களைச் சேதப்படுத்த வரும் காட்டு யானைகளை விரட்டுவதுபோன்ற காட்சி அமைப்புகள் இடம்பெற்றிருந்தன. தமிழ்த் திரைப் பார்வையாளர்களுக்கு அக்காட்சிகள் புதுமையானதாக இருந்திருக்கக்கூடும். காட்டிலுள்ள விலங்குகள் ஊருக்குள் வந்து உயிர், பயிர்களைச் சேதப்படுத்துவதைத் தடுத்துக் காப்பதற்கு விலங்கினைப் பழக்கப்படுத்தி வைத்திருக்கக்கூடிய வழக்கம் மிகப் பழமையானது. இது மிருகத்தினை வைத்தே தாக்கவரும் மிருகங்களைத் தடுத்துக் காத்துக்கொள்ளும் வகையில் மனிதச் சமூகம் ஏற்படுத்திக் கொண்ட தற்காப்பு உத்தி முறையாக நெடுநாட்களாக இருந்து வருகின்றது.

தாக்குதலிலிருந்து தற்காத்துக்கொள்வதற்கு மட்டுமின்றி மிருகங்களைப் பிடிப்பதற்கும் மிருகத்தைப் பழக்கப்படுத்திப் பயன்படுத்திக் கொள்கின்ற வழக்கம் மனித இனத்திற்கு இருந்திருக்கிறது. இவ்வழக்கம் தற்காலத்திலும் வழக்கிலிருப்பதைக் கள ஆய்வுகளின் வழியாகக் கண்டுணர முடியும். தமிழ்ச் சமூகத்தில் நெடுங்காலமாக இவ்வழக்கம் இருந்துவருவதைப் பழந்தமிழ் இலக்கியங்கள் வழியாக அறிந்துகொள்ள முடிகின்றது. காடை, கௌதாரிகளைப் பிடிக்கக் கருதும் வேட்டைக்காரர்கள் கண்ணியை வைத்துவிட்டுச் சற்றுத் தொலைவிலிருந்து காடை, கௌதாரியைப் போன்றே சீழ்க்கை செய்து அழைத்து அவைகளைப் பிடிக்க முயற்சிப்பதுண்டு. இனப் பறவைகள் அழைப்பதாக நம்பி வந்து கண்ணியில் மாட்டிக் கொள்ளும். பறவை இனங்களைப் பிடிக்கும் வேட்டைச் சமூகம் பின்பற்றுகின்ற இந்த வழக்கம் மிருகங்களைப் பிடிக்கும் வழக்கத்திற்கு இணையானதாகக் கருதத்தக்கது.

பழந்தமிழகத்தில், மிருகங்களைப் பிடிப்பதற்குப் பழக்கிய விலங்கினைப் ‘பார்வை மிருகம்’ என்று அழைத்துள்ளனர். இதுபோன்று ‘பார்வைப் புள்’ (புள் - பறவை) என்பது பறவை இனத்தைச் சுட்டியிருக்கின்றது. நற்றிணையில் உள்ள குடவாயிற் கீரத்தனார் எனும் புலவர் பாடிய இந்தப் பாடலில் (212) ‘பார்வைப் புள்’ பற்றிய குறிப்பு வருகின்றது.   

“பார்வை வேட்டுவன் படு வலை வெரீஇ,

நெடுங் கால் கணந்துள்அம் புலம்பு கொள் தெள்விளி

சுரம் செல் கோடியர் கதுமென இசைக்கும்

நரம்பொடு கொள்ளும் அத்தத்து ஆங்கண்

கடுங் குரற் பம்பைக் கத நாய் வடுகர்

நெடும் பெருங் குன்றம் நீந்தி, நம் வயின்

வந்தனர்; வாழி - தோழி! - கையதை

செம் பொன் கழல்தொடி நோக்கி, மா மகன்

கவவுக் கொள் இன் குரல் கேட்டொறும்,

அவவுக் கொள் மனத்தேம் ஆகிய நமக்கே.”

இந்தப் பாடல் ‘தோழி நீ நெடுங்காலம் வாழ் வாயாக! பறவைகளைப் பிடிக்கக் கருதிய வேட்டுவன் பார்வைப் பறவையை வைத்தமைத்த வலையை வீசுவான். கொடிய வலையைக் கண்ட நெடிய கால்களைக் கொண்ட கணந்துள் பறவை அச்சம் கொண்டு தன் துணையை அழைக்கக் கூவும். அதனுடைய தனிமைக் குரல் அவ்வழிச் செல்லும் கூத்தரது யாழிசையோடு ஒத்து ஒலிக்கும். காட்டின் வழியிடத்தே வடுகர் தமது பம்பையை முழங்கிக்கொண்டு சினம் கொண்ட நாயுடன் வருவர். அத்தகைய வழியிடத்தே உள்ள நெடியதும் பெரியதுமான குன்றத்தைக் கடந்து நம்முடைய தலைவர் நம் ஊருக்கு மிக அருகில் வந்துகொண்டிருக்கிறார். பிரிவு காரணமாக உனது கையில் அணிந்துள்ள தொடி கழன்று போக, நம் மகன் ‘உனது தொடி கழன்று போவது ஏனோ அன்னாய்’ கூறுவாய் என்று மழலைக் குரல் எழுப்பும் போதெல்லாம் நீ மனம் தளர்ந்து துயரத்தை அடைகின்ற நம்மிடத் திற்குத் தலைவன் வெகு சீக்கிரம் வந்து சேருவர். துன்பம் நீங்கி மகிழ்வாயாக’ என்று பொருள் கொள்ளப் படுகின்றது.            

இந்தப் பாடலில் வரும் ‘பார்வை’ என்பது ‘கைப்புள்’ (வளர்க்கப்பட்ட, பழக்கப்படுத்தப்பட்ட பறவை) என்று பொருள் கொள்ளப்பட்டுள்ளது. ‘வேட்டுவன்’ என்றால் ‘வேட்டைக்குச் செல்பவன்’. பழக்கப்படுத்தப்பட்ட பறவையைக் கொண்டு பிற பறவைகளை வரச் செய்து, வளைக்குள் அவை வந்து அகப்பட்டுக்கொள்ள, அவற்றை எளிதாகப் பிடிப்பது வேட்டையாடுவோர் கொள்ளும் மரபு என்பது தெரிகின்றது. பார்வை என்பதற்குக் ‘கவனம்’ என்றொரு பொருளும் கொள்ளப்படுகின்றது.

பத்துப்பாட்டுத் தொகுப்பிலுள்ள பெரும்பாணாற்றுப் படையில் ‘பார்வை யாத்த பறைதாள் விளவின், நீழல் முன்றில்...’ (95) எனும் பாடலடிகள் வருகின்றன. இந்தப் பாடலடிக்கு ‘(எயிற்றியர்) குடிசை முற்றத்திலுள்ள விளாமரத்தின் நிழலில் பார்வை மான்கள் கட்டப் பட்டிருக்கும்’ என்று பழையவுரை பொருள் தருகின்றது. இங்குப் ‘பார்வை’ என்பது பார்வை மானைக் குறித்திருக்கிறது. யானையை வைத்து யானையைப் பிடிப்பது போல தாம் வளர்த்த மானைக் காட்டி மானைப் பிடிப்பது எயினர் வழக்காக இருந்திருக்கிறது. கட்டப்பட்டுள்ள பார்வை மானைப் பிடிக்கவரும் ஏனைய மிருகங்களைப் பிடிப்பதற்கும் இந்த வழக்கம் பயன்பட்டிருக்கலாம் எனக் கருதத் தோன்றுகின்றது.

பண்டைப் புலவர்கள் ‘பார்வை மான்’, ‘பார்வை மிருகம்’, ‘பார்வை வேட்டுவன்’ போன்ற சொற்களைத் தம் சமகாலத்து நிகழ்வுகளோடும் இயற்கைப் பொருள் களோடும் நுட்பமாக இணைத்துச் சுட்டிக்காட்டி விவரித்திருப்பது சிறப்புக்குரியதாகவும் அவர்களின் புலைத்துவ வெளிப்பாட்டின் கூறுகளுள் ஒன்றாகவும் கருதத்தக்கது.