‘சட்ட மன்றத்தில் நேரடி மோதல் : எதிர்க் கட்சித் தலைவர் விஜயகாந்த் பத்து நாட்கள் வரை அவை நடவடிக்கையில் இருந்து நீக்கம்’ என்ற அரசியல் தகவலுடன்தான் பிப்ரவரி மாதம் தொடங்கியது.  அதற்குக் காரணம், பிப்ரவரி முதல் நாள் சட்டமன்றத்தில் ஆளுநர் உரை மீது நடை பெற்ற விவாதத்தின் போது, மிக மிக அடிப்படைத் தேவையான பாலின் விலையையும், பேருந்துக் கட்டணத்தையும் உயர்த்தியது தொடர்பாக அரசை  நோக்கி தேமுதிக கேள்வி கேட்டதுதான்!

சட்டமன்றத்தில் நடந்தது என்ன?

‘பால் விலையையும், பேருந்துக் கட்டணத்தையும் உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்னரே உயர்த்தியிருந்தால் அதிமுக வெற்றி பெற்றிருக்குமா?’ என்பது தேமுதிகவின் கேள்வி.  அதற்கு முதல்வர் ‘ஜெயலலிதா திராணி இருந்தால் சங்கரன் கோவில் தொகுதி இடைத்தேர்தலில் தனித்துப் போட்டியிடத் தயாரா?’ என்றொரு எதிர்ச் சவாலை எழுப்பினார்.  அதற்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் ‘பென்னா கரத்தில் அதிமுகவுக்கு டெபாசிட்டே போனது’ என்று பதில் கொடுத்தார்.  உடனே அதிமுக உறுப்பினர்கள் பலர் குரல் எழுப்ப, விஜயகாந்த் நாக்கைக் கடித்து, கையை உயர்த்தி, அநாகரிகமாகப் பேசியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டது.  விளைவு, பேரவையிலிருந்து விஜயகாந்த் நீக்கப்பட்டார்.

இலங்கைத் தமிழர்களின் உரிமைப் பிரச்சினை, முல்லைப் பெரியாறு சிக்கல், இந்திய மீனவர்கள் கடலில் சிறைப்பிடிக்கப்படுதல் எனப் பல பிரச் சினைகள் தமிழகத்தில் தீர்க்கப்படாமல் நீடித்து நிற்க, அவற்றையெல்லாம் தீர்க்க முனைவதில், நாங்களெல்லாம் எந்தக் கசப்புணர்வுக்கும் இடம் கொடாமல் அரசுக்கு ஒத்துழைப்போம் என்று பொதுவுடைமைக் கட்சிகளும் தமிழ்நாட்டின் பிற மாநிலக் கட்சிகளும் முன்வருகிற வேளையில், தனிப் பெரும்பான்மையில் பெருமிதம் கொள்ளும் ஆளும் கட்சி, இந்தத் தமிழர் அடையாள அரசியல் உணர்வைச் சரியே பயன்படுத்திக் கொள்வதே அறிவுடைமையாகும்.

ஆனால், அண்மையில் சட்ட மன்றத்தில் நடந்துள்ளது மேற்படிக் கூற்றுக்கு நேர் எதிரானது. 

இலங்கைத் தமிழ் மக்கள் படுகொலைக்கு இலங்கை அதிபர் ராஜபக்சே பொறுப்பேற்க வேண்டும் என்ற தீர்மானம், ‘தானே’ புயலால் பாதிக்கப்பட்ட கடலூர், விழுப்புரம் மாவட்டங் களில் தீவிர நிவாரண உதவி, அரசு அறிவித்துள்ள சிறப்பான விவசாய நலத்திட்டங்கள் என மக்கள் நலத்தில் அக்கறை காட்டும் அரசின் நடவடிக்கை களையெல்லாம், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி உள்பட பெரும்பாலான கட்சிகள் பாராட்டின.

இப்படியிருக்க, பால் விலை உயர்வு, பேருந்துக் கட்டண உயர்வு போன்ற மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளைப்பற்றி சட்டப் பேரவைக் கூட்டத்தின்போது எதிர்க்கட்சி கேள்வி கேட்பதில் தவறு என்ன இருக்க முடியும்?

விஜயகாந்த் என்பவர் தனிநபருமல்லர்; சென்ற சட்ட மன்றத்தில் இடம் பிடித்தது போலத் தனியொரு உறுப்பினருமல்லர்! எதிர்க்கட்சித் தலைவர் என்ற பொறுப்பு அவருக்கு உண்டு! ஆகவே, சட்டமன்றத்தில், மக்கள் பிரச்சினையில் கட்சி அரசியலைக் கலக்காமல் பேச வேண்டிய நிதானம் வேண்டும்!

அதேபோன்று, எதிர்க்கட்சித் தலைவராகவும் முதல்வராகவும் ஏற்கெனவே பதவி வகித்துப் பட்டறிவும் பக்குவமும் பெற்ற ஜெயலலிதாவும் மக்களின் கவனத்துக்குரியவர்.  எதிர்க்கட்சியும் இதர கட்சிகளும் எழுப்பிய ஒவ்வொரு கேள்விக்கும், தாமே நேரடியாகவும், அமைச்சர் மூலமாகவும் தெளிவாக விளக்கமளித்த அவர் எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த் சபையில் கேள்விக் குரல் எழுப்பிய போது, அமளி ஏற்படாமல் தடுத்து நிறுத்தி, இந்தத் தற்காலிக நீக்கத்தையும் தவிர்த் திருக்கலாம்!

அப்படியானால், மேலே குறிப்பிடப்பட்ட வாறு இலங்கைத் தமிழர்கள் உரிமை, முல்லைப் பெரியாறு, நதிகள் இணைப்பு, மணற்கொள்ளைத் தடுப்பு உள்ளிட்ட தமிழர்களின் நலன் பேணும் முனைவுகள் பலவற்றில் தமிழகக் கட்சிகள் ஒன்று திரண்டு வருகின்ற முன்னேற்றச் சூழலை ஆளுங் கட்சி விரும்பவில்லையா?