கடந்த 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட் சார்பில் வெளிவந்திருக்கும் இரண்டு நூல்கள்; 1. தமிழ்ச் செவ்விலக்கியங்கள் - அவை தோன்றிய சூழலும் சமஸ்கிருதத்தில் அவற்றின் சாயலும் (The Poems of Ancient Tamil Their: Milieu and Their Sanskrit Counterparts) 2. தமிழ் - சமஸ்கிருதச் செவ்விலக்கிய உறவுகள் (The Relation between Tamil and Classical Sanskrit Language). இந்த இரு நூல்களும் பேராசிரியர் ஜார்ஜ் எல்.ஹார்ட் அவர்களால் எழுதப் பெற்றவையாகும். இந்தக் கட்டுரை, தமிழ்ச் செவ்விலக்கியங்கள் குறித்த நூல் குறித்து மட்டும் பேசுகிறது. இதன் தொடர்ச்சியாக அடுத்த நூல் பற்றிய தனிக் கட்டுரை இடம்பெறும்.

தமிழ்ச் செவ்விலக்கியங்கள் - அவை தோன்றிய சூழலும் சமஸ்கிருதத்தில் அவற்றின் சாயலும் என்ற நூல் 368 பக்கங்கள் கொண்ட நூல் ஆகும். நூலாசிரியர் பேராசிரியர் ஜார்ஜ் எல்.ஹார்ட் 1960-களின் பிற்பகுதியில் தமிழ்நாட்டிற்கு வந்து அரிதின் முயன்று தமிழ் படித்தவர். அறிவியல் முறையியலான ஆய்வை நிகழ்த்தி, ஐங்குறுநூறு, குறுந்தொகை, நற்றிணை ஆகியவற்றின் தெரிவு செய்யப்பெற்ற பாடல்களையும், அகநானூறு, புறநானூறு முழுமையையும் கம்பராமாயண ஆரண்ய காண்டத்தையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துத் தமிழின் பெருமையை உலகறியச் செய்தவர். தமிழ் ‘செம்மொழி' என எடுத்துரைத்து, தொடர்ந்து தமிழ்த் தொண்டாற்றி வருபவர் இவர். மதுரையைச் சேர்ந்த கௌசல்யா என்ற தமிழ்ப் பெண்ணை மணந்தவர்.

கதகளி நடனக் கலைஞர் ஒருவர் ஒருமுறை தன்னோடு பேசும்போது, “சமஸ்கிருதம் இல்லையென்றால் இந்தியா இல்லை” என்று சொன்னதை நினைவுகூர்ந்து, அதே போல், “தமிழ் இல்லையென்றாலும் இந்தியா இல்லை” என்று குறிப்பிட்டு, தமிழை உயர்தனிச் செம்மொழி என மதிப்பிடுகிறார்.

tamil sevvilakkiyangalசங்க இலக்கியம் நமக்குக் கிடைத்துள்ள மூல இலக்கியம். சங்க இலக்கியத்தின் பண்பட்ட, குறிப்புப் பொருள் நிறைந்த, அழகியலில் சிறந்த மொழி நடை எப்படி உருவாகியது என்னும் கேள்வி, தேடத் தேட விடை தெரியாத கேள்வி. சங்க இலக்கியத் தன்மைகள் சில தமிழைக் கடந்து பிராகிருதம், சமஸ்கிருதம் ஆகிய மொழிகளில் இருப்பதைக் காட்டுவதே இந்த நூல் எடுத்துக்கொண்ட மையப் பொருள்.

தமிழின் மூல இலக்கியத் தன்மைகள் சுயம்புவாக வந்தவை என்பது ஒரு சாராரின் வாதம். மொழி ஞாயிறு தேவநேயப்பாவாணர் எழுத்துக்களைப் படித்தோர் இதனை நன்குணர முடியும். தமிழின் மூல இலக்கியத் தன்மைகள் சமஸ்கிருத இலக்கியங்களிலிருந்து மட்டுமே வந்திருக்க முடியும் என்பது மற்றொரு வாதம். இதன் சாயலை வையாபுரிப்பிள்ளை எழுத்துக்களில் பெரிதும் நாம் காணலாம். ஆனால், ஜார்ஜ் எல். ஹார்ட் அவர்களோ போக்குவரத்து இரண்டு பக்கங்களிலும் இருந்தது; பாமர இலக்கியத்திலிருந்தும் வந்தது என்று காட்டுகிறார்.

சங்க இலக்கியத்தின் கூறுகள் எங்கிருந்து வந்தாலும் (வந்தவை என்பது முற்றான முடிவு அல்ல) அவை உயரிய நிலைக்கு வளர்த்தெடுக்கப்பட்டன. இதில் குறிப்புப் பொருள் அக இலக்கியத்தில் உள்ளுறை உவமமாக வளர்ந்ததும் அடங்கும். திணை அடிப்படையில் இலக்கியக் கொள்கை உருவானதும் அடங்கும். இந்த வளர்ச்சிகள் தமிழுக்கே தனித்தன்மையானவை.

இந்த நூலுக்கு அப்பால் பயணிக்க இன்று இலக்கியத்திற்கு அப்பால் தொல்லியல் தரவுகள் இருக்கின்றன. அரிக்கமேடு, கொடுமணல், கீழடி ஆகிய இடங்களில் அகழாய்வு பண்டைய தமிழர் வாழ்முறையின் குறுக்குவெட்டுத் தோற்றத்தை உறுதிபடத் தருகிறது.

இந்த நூல் இரண்டு பகுதிகளில் 10 அத்தியாயங்களைக் கொண்டிருக்கிறது. பின் இணைப்புகள் இரண்டு வகையாக வழங்கப்பட்டுள்ளன. முதல் பகுதி அதாவது பகுதி அ - முதல் கட்டுரை, "பழந்தமிழ்ச் செய்யுட்களின் பின்னணி" என்ற தலைப்பில் அமைந்துள்ளது.

கி.பி. 604 வாக்கில் மதுரையில் உருவாக்கப்பட்ட சமணர்களின் ‘சம்ங்கா’ என்னும் பெயரிலான நிலையான சங்கமொன்று இருந்தது. இந்த சங்கத்தை மாதிரியாகக் கொண்டே, மரபு சங்கக் கதையைப் புனைந்திருக்க வேண்டும் எனத் தோன்றுகிறது. சங்கங்கள் பற்றிய முதல் தகவல்கள் தொகைப் பாடல்களுக்குக் குறைந்தது அறுநூறு ஆண்டுகளுக்குப் பிற்பட்டனவாக அமைகின்றன. எனவே, சங்கத் தமிழ் பற்றிய கதைகள் வரலாற்றுத் தரவுகளாகக் கொள்ள இயலாதவை என ஆசிரியர் நிராகரிக்கிறார்.

பண்டைத் தமிழிலக்கியத்தில் வடக்கின் தாக்கம் இருப்பது உண்மையானாலும், நீலகண்ட சாஸ்திரி போன்றோர், அதன் அளவை மிகைப்படுத்திக் கூறுகின்றனர். நீலகண்ட சாஸ்திரி பண்டைத் தமிழ் இலக்கியங்கள் முழுமையும் வட சொற்களால் ஆனவை என எவ்வாறு வரையறுக்கிறார் என்பதை அறிவது உண்மையில் கடினமானதாக அமைகிறது. ஜெ.வி.செல்லையா என்பார், பத்துப்பாட்டில் இடம்பெறும் காலத்தில் பிந்தையதான ஒரு பாட்டான திருமுருகாற்றுப்படையில் வெறும் இரண்டு சதவீதம் மட்டுமே சமஸ்கிருதச் சொற்கள் இடம்பெறுவதாகக் கணித்துள்ளார். அவற்றுள்ளும், தற்போது திராவிட மூலத்தை உடையதாக அறியப்படும் மீன், தாமரை, முத்து முதலிய சொற்களும் சமஸ்கிருதச் சொற்களாகக் கொண்டு கணக்கிடப்பட்டுள்ளன. மகாபாரதத்தை ஆராய்ந்தால், அது அதிக சதவீதமான திராவிடச் சொற்களைக் காட்டும் என நான் நம்புகிறேன் என ஹார்ட் எழுதிச் செல்கிறார்.

அரசனும் அவனது அரசும் என்ற தலைப்பிலான இரண்டாம் கட்டுரையில்,

"நெல்லும் உயிர் அன்றே நீரும் உயிர் அன்றே

மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்

அதனால் யான் உயிர் என்பது அறிகை

வேன்மிகு தானை வேந்தற்குக் கடனே"

என்ற புறநானூற்றின் 186 ஆம் பாடலை எடுத்தாண்டு தமிழ்ச் சமூக அமைப்பில் மன்னன் பெறும் இடம், வட இந்திய மன்னனது இடத்திலிருந்து முரண்பட்டு அமைகிறது என்கிறார் ஆசிரியர். வடக்கே புனித ஆற்றல் பெரும்பாலும் பிராம்மணர்களின் பாதுகாப்பிலேயே அமைகிறது. வட இந்தியாவில் கடவுளுக்கு உரிய சொல்லான தேவன் என்பதே மன்னன் என்னும் பொருளில் வந்துள்ளது. ஆகவே தமிழில் இச்செயல்முறை தலைகீழாக அமைந்துள்ளது என்கிறார்.

இந்தக் கட்டுரையில் ஹார்ட், சங்க கால மன்னனின் செங்கோல், வெண்கொற்றக் குடை, காவல் மரம், சூடிக்கொண்ட மலர், முரசு போன்ற பல்வேறு சின்னங்களும் இலச்சினைகளும் (ACCOUTREMENTS OF AUTHORITY) பற்றி பல்வேறு ஆய்வுத் தகவல்களை முன் வைக்கிறார்.

இக்கட்டுரையை நிறைவு செய்யுமுன், இத்தொகைப் பாடல்களின் காலத்தில், பல்லவ சோழர் காலத்தின் பண்பாக விளங்கிய, சிறு பகுதிகளின் பிராமண - நிலவுடைமை மேலாதிக்கம் தொடங்கியிருக்கவில்லை என்பதைத் தெளிவாக்குகிறார்.

பழந்தமிழர் சமயத்தில் காணலாகும் சில தனித்தன்மைக் கூறுகள் என்ற கட்டுரை இந்த இயலின் மூன்றாம் கட்டுரையாக இடம்பெறுகிறது.

பழந்தமிழர்களின் கடவுளர், அச்சத்தை உண்டாக்கக்கூடிய சூர் அல்லது வருந்துதல் என்னும் பொருள் தரும் அணங்கு என்பதாகவே அமைகின்றன என்பது ஹார்ட் அவர்களின் கூற்றாகும். இறந்தவரின் ஆற்றல் உறையும் மற்றொரு இடமாக நடுகல் வழிபாடு நம்புகிறது. மறவர்களுக்காக எடுக்கப்பட்ட நடுகற்களுக்கு நெல் தூவி வழிபாடு நடத்தப்பட்டது. இன்றும் கேரளத்தில் வாழும் நாயாடி மக்கள் தங்களின் முன்னோர்கள் அவர்களுக்காக எழுப்பப்பட்ட நடுகற்களில் உறைந்திருப்பதாகவே நம்புகிறார்கள். இந்த இறைத்தன்மையே பிற்காலத் தமிழரிடையே சிவலிங்க வழிபாடாக உருமாற்றம் பெற்றுள்ளது.

கடவுள் என்னும் சொல்லின் பகுபத இலக்கணமாகக் கட (கடந்து வருதல்) உள் (மனம்) என்பன அமைகின்றன. உண்மையில் இச்சொல் மனத்தினைக் கடத்தல் என்னும் பொருண்மையில் அமைவதாகச் சொல்கின்றனர். இவ்வாறு கொண்டால், ஏழாம் நூற்றாண்டுவாக்கில் தோன்றிய தேவார திவ்யபிரபந்தங்கள் சுட்டுகிற இரக்கம், மீவியல்புத்தன்மை ஆகியவையே கடவுளரின் பண்புகளாகக் குறித்த எண்ணம் தொல் தமிழர்களிடம் நிலவியது என்று கொள்ள வேண்டியுள்ளது. எனினும் இவ்விலக்கணப் பகுப்பு எனக்குச் சரியாகத் தோன்றவில்லை. பழந்தமிழ் இலக்கியங்கள் சுட்டுகின்ற கடவுள் குறித்தான கருத்தாக்கங்களோடு இது பொருந்துவதாய் இல்லை. பழந்தமிழர்கள் இத்தகைய தன்மை வாய்ந்த கடவுளரை வழிபட்டனர் என எந்தவொரு பாடலும் சுட்டி நிற்கவில்லை. குறுந்தொகை 218ஆம் பாடல் ஒரு பெண் கடவுள் குறித்துப் பேசுகிறது. அவ்விடத்தில் அக்கடவுளரிடம் கடன் ஏதுமில்லை என்ற கருத்தைச் சுட்டுகிறது. அதாவது, நேர்த்திக்கடன் எனப்படும் உயிர்ப்பலி அல்லது, வேண்டுதல் என்னும் பொருளில் அமைகிறது. உள் என்னும் சொல் பெரும்பாலும் ஒரு பெயரின் பின்னொட்டாக அமைந்து, வேரிலிருந்து உருவாகும் ஒரு பெயர்ச்சொல்லை உருவாக்குவதாய் அமைகிறது. சான்றாக அர்+உள் = அருள், பொரு+அள்= பொருள். எனவே, கடவுள் என்னும் சொல் தியாகம் கடன் ஆகியவற்றோடு தொடர்புடையதாய் பழந்தமிழ்க் கடவுளர்கள் பெயர்களுக்கு ஏற்ப அமைந்திருக்கலாம்.

 இந்த இயலின், “தொகைப் பாடல்களின் காலத்தில் தமிழ் நாட்டில் காணப்பட்ட வடமரபுக்கூறுகள்” என்ற நான்காம் கட்டுரையைக் காண்போம். இக்கட்டுரையில் முதலாவதாக பிராமணர்களைக் குறித்த ஆய்வு தொடங்குகிறது. மிகச்சிறந்த தமிழ்ப் புலவர்கள் பலர் பிராமணர்களாக இருப்பதையும் பிராமணரல்லாத புலவர்கள் பயன்படுத்தும் ஆரிய சமஸ்கிருதக் கூறுகளைக்கூட இவர்களின் பாடல்களில் காண முடியாமையையும் கூறலாம். அதே வேளையில், சில பிராமணர்கள் வடபகுதித் தோற்றம் வாழ்க்கை முறை ஆகியவற்றைத் தக்க வைத்துக்கொண்டு வாழ்ந்துள்ளனர். வேதத் தியாகங்கள் (புறம் 166), அதனோடு தொடர்புடைய வேள்வித் தூண்களையும் (புறம் 224, 400) அறிமுகப்படுத்தினர். முத்தீ வழக்கத்தைக் கையாண்டனர் (புறம் 02) பிராமணன் வடக்கிலிருப்பதைப் போலவே, ஓதுதல் தியாகம் செய்தல், மற்றவர்களை அவ்விரு செயல்களையும் செய்ய வைத்தல், கொடுத்தல், ஏற்றல் என்னும் ஆறு செயல்களையும் செய்வதை, பதிற்றுப்பத்து 24 ஆம் பாடல் குறிப்பிடுகிறது. இது மனுஸ்மிருதி 10.75 உடன் மிகச் சரியாகப் பொருந்துவதாக அமைகிறது.

புத்த ஜாதகக் கதையில் இடம்பெறும் ஒரு புறாவிற்காகத் தனது வாழ்க்கையைத் தியாகம் செய்யத் தயாராகும் சிபி என்னும் மன்னன் கதை, புறம் 37,39 ஆம் பாடல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. இங்கு சமஸ்கிருதப் பெயர் செம்பியன் எனத் தமிழில் மாற்றப்பட்டுள்ளதும் அது தமிழுக்கு மிக இயல்பான ஒன்றாக அமைவதும் குறிப்பிடத்தக்கதாகும்.

சொர்க்கம் குறித்தான பல வடபகுதிக் கருத்தாக்கங்கள் பாடல்களில் கிடைக்கின்றன. நான்கு பாடல்களில் நரகம் குறித்த செய்திகள் பேசப்பட்டுள்ளன. எல்லாப் பாடல்களிலும் சமஸ்கிருதத்திலிருந்து கடன் பெற்ற சொல்லான நிரைய (சமஸ்கிருதத்தில் நிரய) என்னும் சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. நாகலோகம் குறித்துப் பேசும் புறம் 06, அமிர்தத்தைக் குறிக்கும் குறுந்தொகை 83, தேவர்களைக் குறிக்கும் புறம் 62, இந்திரன் அரண்மனையைக் குறிக்கும் புறம் 241, ஊழ்வினையைக் குறித்துப் பேசும் புறம் 213,214 ஆம் பாடல்களைக் குறிப்பிடலாம். புறம் 361 ஆம் பாடல், ஊழ்வினைக் கோட்பாட்டை பிராமணக் கண்ணோட்டத்தில் பார்க்கிறது. பண்டைய தமிழர்களின் சமய அமைப்புகள், வட இந்திய அமைப்புகளைக் காட்டிலும் இயற்கையானதாய் அமைந்தன என்பதை விளக்குவதற்கு புறநானூற்றின் 162 ஆம் பாடலான, “யாது ஊரே யாவரும் கேளிர்” என்ற பாடல், அமைகிறது. எனது மதிப்பீட்டில், ஊழ்வினையை விளக்கும் எந்த வடமரபுக் கருத்தாக்கமும் ஆழமானதாகவும், கவிதை நயத்தால் நன்கு விளக்கப்பட்டதாகவும் அமையவில்லை' என்பது ஜார்ஜ் ஹார்ட்டின் துணிபு.

சோதிடம், தேர்கள் போன்ற ஆரியர்களால் அறிமுகப்படுத்தப்பட்டவை பற்றிய குறிப்புகளும் உள்ளன. பழந்தமிழ்ப் பண்பாட்டில் புனித ஆற்றலின் இடம் என்னும் ஐந்தாம் கட்டுரையில், தமிழர்களின் தொல் சடங்குகள் பற்றிப் பேசுகிறார் ஜார்ஜ் எல். ஹார்ட்.

சில சடங்குகள் தமிழர்களுக்கு மாத்திரமே இருப்பதாகவும், சில தமிழர்கள் ஆரியார்களுக்குப் பொதுவாக இருப்பாதாகவும் விளக்குகின்றார்.

மன்னன், கற்புடைப் பெண்மை போன்றவற்றில் புனித ஆற்றல் உள் பொதிந்துள்ளதாகத் தமிழர்கள் கருதியதையை ஆசிரியர் இக்கட்டுரையில் எடுத்துரைக்கிறார்.

பெண்ணின் கற்புடைமை குறித்த கருத்தாக்கத்திற்கு வேத கால வட இந்தியாவில் மிகக் குறைந்த அளவிலான முதன்மையே தரப்பட்டது.

விதவை தனது தலையை மழித்துக்கொள்ளல் என்னும் வழக்கமும் அதனோடு தொடர்புடைய பிற விதவைக் கூறுகளும் தமிழில் காணப்பட்டதற்கான பிறகான ஆறு நூற்றாண்டுகள் வரையிலும்கூட வடக்கில் நுழையவில்லை. ஒரு குழு உருவாவதற்கு முன்னதாகவே பிராமணர்கள் அக்குழுவுடன் தொடர்புகொண்டு அக்குழுவினரால் மிகவும் மதிக்கப்படுவனவற்றை அவர்களின் நன்மதிப்பைப் பெறுவதற்காகச் செய்யத் தொடங்கினர் என்பது அவரது விளக்கமாக உள்ளது.

பழந்தமிழ்ப் பாடல்கள் கீழ்ப் பிறப்பு மக்கள் குறித்துப் பலமுறை சுட்டுகின்றன.

புறம் 335 ஆம் பாடலில் தனித்து விளங்கும் ஒரு நிலத்தின் தன்மையை விளக்கும் புலவர், ‘துடியன், பாணன், பறையன், கடம்பன் என்று இந்நான்கல்லது குடியும் இல்லை' எனக் குறிப்பிடுகிறார்.

தாழ்த்தப்பட்டவர்கள் என்பதற்கான சான்றுகளாக இங்கு சுட்டப்பட்டவர்கள் யாவரும் வெளிப்படையாக ஒரு பொதுக் கூறினைத் தம்முள் பகிர்ந்து கொள்கின்றனர். இவர்கள் யாவரும் தாங்கள் செய்யும் தொழிலின் காரணமாகப் புனித ஆற்றல் உறையப் பெற்று ஆபத்து வாய்ந்தவர்களாக அமைகின்றனர்.

ஒரு குழுவைச் சேர்ந்த ஆண்,பெண் குழந்தைகள் தந்தையின் அதே தொழிலைப் பின்பற்றுவதாக அகம் முதற் பாடல் விளக்குகிறது. தனது தலைவிக்கு உறுதியளிக்கும் தலைவன், சிறுகாரோடன், பயினோடு சேர்த்திய கல் போல் பிரியலம் என்ற சொல்தான்” என விளக்குகிறாள். இதையொத்த பாடல்களில், தச்சரின் மகன்கள் (புறம் 206), குயவரின் மகன்கள் (புறம் 32), ஆநிரை மேய்ப்பவரின் மகன்கள் (குறுந்தொகை 241), வெள்வாய் வேட்டுவரின் மகன்கள் (புறம் 324), ஆகியோர் தமது செயல்களால் தமது தந்தைக்கு உதவும் செய்திகள் குறிப்பிடப்பட்டுள்ளன.

உயர்குடியைச் சேர்ந்த பிராமணரல்லாத எவனொருவனும், தீண்டத்தகாத தாழ்த்தப்பட்ட குடியைச் சேர்ந்தவர்களைத் தங்களின் வீட்டிற்குள் அனுமதிக்க வில்லை. இது தவறுதலாகச் சமஸ்கிருதமயமாக்கம் எனப்படுகிறது. இது பிராமணரல்லாதவர்கள் பிராமணர்களைப் பின்பற்றுதலாலும் அவர்களின் மதிப்பைப் பெற விரும்பியதாலும் ஏற்பட்டதன்று. மாறாகச் சமூகத்தில் உயர் நிலையை அடைய விரும்பும் எந்தக் குழுவும் தன்னைத் தூய்மைக் கேட்டிற்கு உள்ளாக்கும் கூறுகளிலிருந்து வேறுபடுத்திக்கொள்ள எடுக்கும் முயற்சியின் விளைவாகும். இந்தப் போக்கு, பிராமணர்களின் வருகைக்கு முன்பாகவே தமிழகத்தில் காணப்பட்டது. இதன் காரணமாகவே, மனித ஆற்றலைக் கையாள்பவர்கள் தாழ்நிலையினராகக் கருதப்பட்டனர். எவ்வாறாயினும், பிராமணர்கள் இச்செயல்பாட்டிற்குக் கிரியா ஊக்கிகளாகச் செயல்பட்டனர் என்ற ஜார்ஜ் ஹார்ட் கருத்து பொதுவான புரிதலுக்கு மாறானதாக சிந்திக்க வேண்டிய ஒன்றாக உள்ளது.

பழந்தமிழ் நாட்டுப் பாணர்களும் புலவர்களும் என்ற ஆறாம் கட்டுரையில், பழந்தமிழ் நாட்டில் இசையும் நடனமும் சமய முதன்மை பெற்றிருந்தன என்கிறார் ஆசிரியர் ஜார்ஜ் எல்.ஹார்ட். எனவே, ஆடும் பெண்கள், பரத்தமைத் தொழிலை மேற்கொள்ளுபவராகப் பிற்காலத்தில் கோயிலோடு தொடர்புபடுத்தப் பட்டிருத்தல் வேண்டும் என்பது இயற்கையானதாகத் தோன்றுகிறது என வரையறுக்கிறார்.

பாணர்கள்- இக்குழுவில் கோட்டியர்கள், வயிரியர்கள், ஆடல் ஆண்கள், பெண்கள் ஆகியோர் அடங்குவர். கிணை இசைப்பவர்கள் - இக்குழுவின் அகவுநன்களும் துடியன்களும் அடங்குவர். முதல் இவ்விரு குழுக்களும் தொழிலால் நன்கு வேறுபடுத்தப்பட்டன. கிணை இசைப்பவர்கள், பாணர் குழுவைக்காட்டிலும் மதிப்புக் குறைந்தவர்களாய் இருந்தனர். துடி இசைப்பவர்களின் இசை, கிணை இசைப்பவர்களின் இசையைக் காட்டிலும் குறைவானதாய் மதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. நிகழ்த்துக் குழுவினரின் மூன்றாம் பிரிவினராகப் புலவர் அல்லது கவிஞர்கள் அமைகின்றனர். இவர்கள் எழுதிய பாடல்களின் பெரும்பாலான கருப்பொருள்கள், பாணர்கள், பிறர் ஆகியோரிடமிருந்து பெற்றுக் கொண்டனவாகவும் குறிப்பிட்ட அளவு அவர்களின் சொந்த வாழ்க்கையிலிருந்து பெறப்பட்டனவாகவும் அமைந்தன. எனினும், புலவர்கள் யாவரும் ஆதிக்கக் குடியைச் சேர்ந்தவர்கள் என்பதையும் அதே நேரம் பாணர்கள் யாவரும் தாழ்த்தப்பட்ட குடியைச் சேர்ந்தவர்கள் என்பதையும் மனதில் கொள்ள வேண்டும்.

இந்திய இசை, கவிதை ஆகியவற்றின் பெரும்பகுதி, தென்னிந்தியத் தாழ்த்தப்பட்ட குடிகளான பாணர்களின் கலைகளிலிருந்து தோற்றம்பெற்றன என்பது உறுதியானால் அதுவே ஆர்வந்தரக்கூடியதுவும் மகிழ்ச்சியளிக்கக்கூடியதுவுமான உண்மையாகும்.

இனி இரண்டாம் இயலுக்குள் நுழைகிறோம். அதன் முதற் கட்டுரை தமிழ் இந்தோ ஆரிய மரபில் உட்பொருள் உத்தி என்ற தலைப்பில் ஆனதாகும்.

புறம் 86, 277, ஐங்குறுநூறு 57, 186, 454, குறுந்தொகை 03, 192, 307, 373, 387 ஆகிய பாடல்களை முன் எடுத்துக்காட்டுகளாக ஜார்ஜ் எல்.ஹார்ட் எடுத்தாண்டு, தமிழ்ப் புலவர்களின் உத்திகள் குறித்துத் தெளிவாக்குகிறார்.

ஒவ்வொரு படிமமும் பெரும்பாலும் சிக்கலான குறியீட்டுப் பண்புகளைக் கொண்டனவாக அமைகின்றன. குறிகளின் இருதிசைப்பண்பு பாடல்களை, வாசகர் மனதில் அதிர்வுத் தன்மையுடையனவாய் மாற்றுகின்றன. ஆர்வந்தரத்தக்க வகையில் இந்த உத்தி சமஸ்கிருத த்வனிக் கோட்பாட்டோடு பொருந்துவதாக அமைகிறது. இக்கோட்பாட்டை ஆனந்தவர்த்தனா என்பவர் தனது த்வனியாலோகா என்ற நூலில் மிகச் சிறப்பாக விளக்கியுள்ளார்.

மேலும், அவர் "மகாபாரதத்தில் குறைவான புரிதல் திறன் உடையவராக இருந்தால் மட்டுமே எந்தவொரு அணியின் ஒட்டுமொத்தக் கருத்தையும் தவற விட முடியும். அதே நேரம், தமிழில் இடம்பெறும் பாடல்கள் யாவும் மிகவும் சிக்கல் வாய்ந்தனவாக அமைகின்றன. அவற்றின் இரு நிலைப் பயன் விளைவுகளும் அணிகளின் தாக்கங்களும் பொதுத்தன்மை வாய்ந்தனவாகத் தோற்றமளித்தாலும் சில இடங்களில் மிகவும் கடினமானதாகவும் இன்றும் கூட அவை குறிப்பிடும் மையப்பொருளை, உறுதியாக விளக்க முடியாதனவாகவும் அமைகின்றன” என்றும் கூறுகிறார்.

தமிழில் காணப்படும் பல மரபுக்கூறுகளும் உருவகங்களும் சத்யசயீ இன் வழியாக இந்தோ ஆரியத்தில் முதலாவதாக தோற்றம்பெறுகின்றன என்பது பின்னர் விளக்கப்படும். தமிழில் இரண்டு பொருட்களை ஒப்பிடும்போது பெரும்பாலும் ‘போல’ முதலிய உவம உருபுச்சொற்களும் வெளிப்படையான உருவகமும் பயன்படுத்தப்படுவதில்லை. மாறாக, இரு பொருட்களும் பாடலின் வெவ்வேறு இடங்களில் குறிக்கப்பட்டு, அவை வாசகரால் தொடர்புபடுத்தப்படும்படி விடப்படுகின்றன. இந்தோ ஆரியத்தில் இத்தகைய அமைப்பு தமிழைப் போன்று பொதுவானதாக அமையவில்லை.

நல்ல தமிழ்ப்பாடல் என்பது முடிவில்லாத நதியைப் போன்றதாக அமைகிறது. சமஸ்கிருதச் செய்யுட்களும் அதன் வெளிப்பாட்டிற்கு உட்பொருளைச் சார்ந்துள்ளபோதும் அவை அரிதாகவே நல்ல தமிழ்ச் செய்யுட்கள் கொண்டுள்ளதைப் போன்று இருதிசைப் பயன்விளைவைப் பெற்றனவாக அமைகின்றன.

உட்பொருளைத் தெளிவாக வெளிப்படுத்தும் தமிழின் மற்றுமொரு பண்பாக, ஒரே தொடரில் எளிமையாகப் பல தெளிவற்ற உறவுடைய பொருட்களை இணைத்துக்கொள்ளுதல் என்பது அமைகிறது. இதனை ஆங்கிலத்தில், தனித் தனித் தொடர்களாக அமைக்க வேண்டியுள்ளது. ஒரு சொல் அல்லது சொற்றொடருக்கான பொருள், ஆங்கிலம் அல்லது சமஸ்கிருதத்தைக் காட்டிலும் மிக இயல்பாக வாசகரின் மனதில் கடத்தப்படுகிறது.

இந்தோ ஆரியத்திலும் தமிழிலும் வெவ்வேறு வகையான கவிதைகள் இடம்பெறுவதற்கான மற்றொரு காரணம், வடக்கிலும் தெற்கிலும் நிலவிய வெவ்வேறு வகையான சமயங்களே. சமஸ்கிருதத்தின் சமய மரபு அதன் இலக்கியத்தை எடுத்துரைப்புக் கதை சொல்லல் முறைக்கும் விளக்க முறைக்கும் மாற்றியுள்ளது. இவை, வெறுமனே கதை சொல்லல் முறையின் ஒரு பகுதியாகவும் தமிழில் காணப்படுவது போன்று உள்ளுணர்வோடு தொடர்புடைமை, பெயர் சுட்டாமை, உட்பொருளை முதன்மையாகப் பயன்படுத்தும் அக நோக்குத் தன்னுணர்வுப் பாடல்களைக் கொண்டுள்ளமை ஆகியவற்றுக்கு மாறானதாக அமைகின்றன. தமிழ்ப் பாடல்கள் அர்த்தங்களின் சிக்கலான ஊடாட்டத்தின்போது உட்பொருளை வெளிப்படுத்துவதில்லை.

தமிழ் நாட்டில் பெரும்பாலும் புராணம் என்பதே இடம்பெறவில்லை. குறைந்தபட்சம் பழைய பாடல்களிலிருந்தும் பிற்கால மரபுகளிலிருந்தும் கடவுளர் பற்றிய பெரும்பாலான கதைகள் யாவும் வடக்கிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டன என்பதைத் தீர்மானிக்கலாம். வட இந்தியக் கூறுகளின் தாக்கத்தினால் பண்டைத் தமிழர்களின் சமயத்தில் ஏற்பட்ட உருமாற்றமே அவர்களின் இலக்கியத்தில் காணப்பட்ட உட்பொருள் உத்தி மெதுவாகத் தரமிறங்கியமைக்கான முதன்மைக் காரணம் என எனக்குத் தோன்றுகிறது. சிலப்பதிகாரக் காலத்திலேயே உட்பொருளின் பயன்பாடு மிகக் குறைந்த முதன்மையையும் தொகைப் பாடல்களில் இடம்பெற்றதைக் காட்டிலும் மிகக் குறைந்த நுட்பத்தையும் பெற்று, வட மூலங்களிலிருந்து எடுக்கப்பட்ட அல்லது நகல் செய்யப்பெற்ற கடவுளர் பற்றிய கதைகள் நிறைந்தனவாய் அமைந்தன. தமிழ்ப் புலவர்கள் எப்போதும் தமிழ் மரபுகளைப் பயன்படுத்தியும் பெரும்பாலான தமது எண்ணங்களைப் பண்டைத் தமிழ் இலக்கியங்களிலிருந்தும் பெற்று வந்துள்ளனர். புராணக்கதைகள் மிகுந்த புகழைப் பெற்றதும், பக்தி சமயத்தின் முதன்மைக் கூறாக அமைந்ததும் மட்டுமல்லாது உட்பொருள் பொதிந்த சிறிய தன்னுணர்வுப் பாடல்கள் மெல்ல மெல்ல அருகத் தொடங்கின. இருப்பினும், இத்தகைய பாடல்கள் தமிழிலக்கியப் பரப்பு முழுவதிலும் ஓரளவு எழுதப்பட்டுள்ளன. இன்று பெரும்பாலான தமிழர்களின் தமிழிலக்கியத்தின் மிகச் சிறந்த படைப்பாக கம்ப இராமாயணம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இதன் சமஸ்கிருத எதிரிணைகளிடமிருந்து மிக முதன்மையான வேறுபாடுகளையும் கொண்டுள்ளது கம்பராமாயணம். இந்தப் பாடல்களின் விவரிப்பின் நோக்கம், உட்பொருளின் சிக்கலான ஊடாட்டத்தைத் தோற்றுவித்தல் என்பதைக் காட்டிலும் ஒரு குறிப்பிட்ட மன நிலையை உருவாக்குதல் என்பதே ஆகும்.

 நூலின் எட்டாம் கட்டுரையாக, யாப்பியல் - தமிழ் - இந்தோ ஆரிய இணை நிலைகள் குறித்து ஆசிரியர் ஆய்வு செய்கிறார்.

தமிழ் யாப்பமைப்பு சீர், தளை, அடி என்ற முதன்மையான மூன்று கூறுகளைக் கொண்டுள்ளது. கலித்தொகை, பரிபாடல் தவிர்த்த பிற தொகைப் பாடல்கள் அனைத்தும் எழுதப்பட்ட பொதுவான யாப்பாக ஆசிரியப்பா (அகவலோசை) அமைகிறது. கலித்தொகைப் பாடல்களில் குறிப்பிட்ட அளவில் பயன்படுத்தப்பட்டு, தொகைப் பாடல்களின் காலத்திற்கு இரண்டு நூற்றாண்டுகளுக்குப் பிறகு எழுதப்பட்ட பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் பெரும்பாலும் பயன்படுத்தப்பட்ட யாப்பாக வெண்பா யாப்பு (செப்பலோசை) அமைகிறது. ஆசிரியப்பா யாப்பைக் காட்டிலும் வெண்பா யாப்பில் தளை அதிகம் பயன்படுத்தப்படுகிறது. “இந்த அமைப்பு முதலில் பார்ப்பதற்கு செயற்கைத்தன்மை வாய்ந்ததாகத் தோன்றினாலும் சமஸ்கிருத யாப்பைக் காட்டிலும் மேன்மை பொருந்திய இதன் தன்மை வியக்கத்தக்கதாக அமைகிறது; தமிழிலிருந்து இயல்பானதாக உருவாகி, 512 நீண்ட அடிகளைக்கூட உருவாக்க முடியும் என்பதன் வழி, வெண்பா யாப்பின் சிறந்த மெல்லிசை குறித்து தெளிவாக அறிய முடிகிறது” என்கிறார் ஜி.யூ.போப்.

சமஸ்கிருதத்திற்கு உரிய மரபார்ந்த செவ்வியல் யாப்புகள் பொதுமக்கள் பாடல்களிலிருந்து எடுக்கப்பட்டவையாகத் தோன்றவில்லை. நாட்டுப்புறப் பாடகராலும் பாணராலும் பாட முடியாத வகையில் மிகக் கடினத்தன்மை வாய்ந்தவையாக இவை அமைகின்றன. மாறாக, இவை யாவும் பெரும்பாலும் செவ்வியல் புலவர்களால் செயற்கைத் தன்மையில், நவீன சமஸ்கிருதக் கவிதைகளுக்கு ஏற்ப அமைக்கப்பட்டுள்ளன. இவற்றுள் தமிழ் இணை நிலைகளைத் தேடுவது பயனற்றதாகிவிடுகிறது.

நூலின் ஒன்பதாம் கட்டுரை, "தமிழ்க் கவிதையியல் மரபுகளும் இந்தோ ஆரிய இணை நிலைகளும்” என்பது பற்றியதாகும்.

புறப்பாடல்கள் தொல்காப்பியத்தாலும் அப்பாடல்களில் இடம்பெறும் குறிப்புகளாலும் வகைப்படுத்தப்பட்டுள்ளன. இக்குறிப்புகள் திணை அல்லது அது கையாளும் கவிதையியல் சூழல் அல்லது துறை என்பனவாக அமைகின்றன. ஒரு சில புறப்பாடல் அடிக்கருத்துக்களே இந்தோ ஆரிய இணை நிலைகளைக் கொண்டனவாக அமைகின்றன. புறம் 135 ஆம் பாடல், “என் பின்னே வளையல் அணியப் பெற்ற விறலி, புலி உறையும் உயரமான மலைகளின் சிறிய வழியின் கண் வந்தமையால் துன்புற்று நிற்கிறாள். எம் தலைவனே, உனது புகழை நினைத்தபடி, சிறிய யாழை ஒரு கையில் அணைத்தபடி நின்பால் வந்தேன். நினது அவையில் பரிசிலர்களைக் காணும் போதெல்லாம் அவர்களுக்கு யானைகளை வழங்கக்கூடியவன் நீ” சுபாஷித 1435 ஆம் பாடல் இதை ஒத்ததாய் அமைகிறது.

“எனது முதல் முடிவின்போது பயிர் முளை விட்டது.

கிளம்பியவுடன் இலைகள் உருவாயின.

என் பயணத்தினூடே தவிர்க்கத் துவங்கியது

நகரத்தை அடைந்த போது கிளைகள் பரவின

காலையில் மக்களைக் காணும் போது மொட்டுக்கள் அரும்பின

மன்னா, இப்போது உன்னைக் கண்டவுடன்

என் உள்ளத்து ஆசை என்னும் மரம்

மலர்ந்து கனியாக உருவெடுத்துள்ளது

(சுபாஷித 1435)

சமஸ்கிருதத்தில் இடம்பெறுவதைப் போலவே, தமிழில் இடம்பெறும் மிகுதியான புறப்பாடல்கள் மன்னனைப் போற்றுதலோடு பாடாண் திணை தொடர்புடையனவாய் அமைகின்றன. இவ்விரண்டும் ஒத்த தன்மையனவாய், பெரும்பாலும் போரில் ஈடுபடும் மன்னனின் வீரம், அவனது பகைவர்களின் துயர நிலை ஆகியவற்றை விளக்குவனவாய் அமைகின்றன.

தமிழில் அகப்பாடல்கள் யாவும் ஒரு குறிப்பிட்ட சூழலில் இடம்பெறும் பாத்திரங்களின் வாயிலாகப் பேசப்படுவனவாக அமைக்கப்பட்டுள்ளன. இத்தகைய பாத்திரங்களாகத், தலைவன், தலைவி, நற்றாய், செவிலித்தாய், தோழி, தோழன், தூதாக அனுப்பப்படும் தலைவனது பாணன், உடன்போக்குச் செல்லும் இணையரைக் காணும் கண்டோர், சுற்றத்தார், பரத்தை, பரத்தையரின் தோழி ஆகியோர் அமைகின்றனர். ஆர்வந்தரத்தக்க வகையில் எந்தவொரு பாடலிலும் தலைவியின் தந்தை, தலைவனது உறவினர்கள் ஆகியோர் கூற்று நிகழ்த்துபவர்களாக அமையவில்லை. இம்மரபுகள் முதன்முதலாக இந்தோ ஆரிய சத்யசயீ-யில் காணப்படுகின்றன. எனினும், இவற்றை இப்படைப்பின் எல்லாப் பாடல்களிலும் காண முடிவதில்லை. இங்குள்ள பெரும்பாலான பாடல்களில் புலவரே கூற்று நிகழ்த்துபவராக அமைகிறார்.

இந்த இந்தோ ஆரிய மரபுகள் தமிழிலிருந்து நேராகக் கடன் பெற்றிருக்குமாயின், அவை தமிழ் மரபுகளைத் தற்போது செய்வதைக் காட்டிலும் இன்னும் கூடுதலாகப் பிரதிபலித்திருக்கும். எனவே, இவ்விரு மரபுகளும் ஒரு பொதுவான மூலத்திலிருந்து பெறப்பட்டிருத்தல் வேண்டும்.

தமிழின் குறிஞ்சி, பாலை, முல்லை, நெய்தல், மருதம் மற்றும் தூதுப்பாடல்கள் மரபுகளும் சமஸ்கிருத மரபுகளும் எவ்வாறு ஒத்திசைவாக அமைகின்றன என்பதை இந்த அத்தியாயத்தில் பல பக்கங்களில் சில எடுத்துக்காட்டுகளுடன் ஜார்ஜ் எல் ஹார்ட் நிறுவி முடிவுரையில் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார்.

தமிழ் மற்றும் சமஸ்கிருத கவிதை மரபுகளும் பொதுவான, புகழ் பெற்ற ஐயத்திற்கு இடமின்றி வாய்மொழி மரபிலிருந்து வளர்ச்சியடைந்தனவாக அமைகின்றன. இந்த மரபு தக்காணப் பண்பாடு முழுவதிலும் மிகச் சிறப்புடைய பழமையானதாக செழிப்புற்றிருக்க வேண்டும். எனவே, தக்காணம் முழுமையும் பரவியிருந்த ஓர் இலக்கிய மரபு, ஆரியமும் தக்காணப் பண்பாடும் கலந்திருந்த மஹாராஷ்ட்ராவிலும், தக்காணப் பண்பாட்டிலிருந்து வெளிப்படையாய் உருவாகி, சிறிய அளவிலான ஆரியம் மற்றும் பிற வெளிப்புற ஊக்கிகளைப் பெற்றிருந்த தமிழ் நாட்டிலும் குறிப்பிடத்தக்க வகையில் ஒரே மாதிரியான கவிதையியலைத் தோற்றுவித்தது என்பது ஏற்கத்தக்கதாய் அமைகிறது.

பழைய தக்காணக் கவிதை மரபுகளை மாறாமல் தமிழர்கள் பாதுகாத்ததற்கான காரணம் பெருங்கற்காலப் பண்பாட்டிற்கும் பாடல்களின் தொகையாக்க காலத்திற்கும் இடைப்பட்ட காலத்தில் தமிழ்நாடு பெரிய அளவில் வேற்றுப் பண்பாட்டினரின் தாக்கத்திற்கு உட்படவில்லை என்பதும் ஆகும். இக்கால கட்டத்தில் வட நாட்டிலிருந்து பல புதிய வரவுகளும் சிந்தனைகளும் வரத் தொடங்கின. ஆரியக் கடன் வாங்கலால், தொகைப் பாடல்களின் மொழி பெரிதும் மாறவில்லை. பழைய திராவிட வழக்கங்கள் பெரும்பாலும் கோலோச்சின. சமஸ்கிருதத்தில், திராவிடத்திற்கே உரிய அடிக்கருத்துகள் கூடுதல் மாறுதல்களையும் புனித நீக்கத்தையும் அடையப் பெற்றன. தமிழ்ச்சமூகம் முதன்மையாக ஒரு தார மணத்தைக் கொண்டுள்ளமையால், இங்குப் பொறாமையைத் தூண்டுவதற்கு புலவன் தலைவனது பரத்தமை ஒழுக்கம் பற்றிப் பேச வேண்டி நேர்ந்தது. பல தார மணம் நிறுவனப்படுத்தப்பட்டதே ஆரிய இலக்கியங்களில் திருமணம் பற்றியான திராவிட மதிப்பீடுகள் புனித நீக்கம் செய்யப்பெற்றமைக்குப் பெரிதும் காரணம் ஆகலாம்.

பல உதாரணங்களின் அடிப்படையில், தமிழ்க் கவிதைகளை உருவாக்கிய தென்னிந்திய மரபுகளுக்கும் முற்கால சமஸ்கிருதக் கவிதைகளுக்கும் இடையே ஓர் உறவு இருப்பது தெளிவாகிறது. இந்த உறவு குறித்து விளக்குவதற்கு மூன்று விளக்கங்கள் சாத்தியமாகின்றன. அவை,

1.            தமிழ் சமஸ்கிருதத்திலிருந்து கடன் பெற்றிருத்தல் வேண்டும்.

2.            ஐயத்திற்கு உரியதாக அமையும் அடிக்கருத்துகள், முழு இந்தியத்தன்மை வாய்ந்தனவாக சமஸ்கிருதக் காப்பியக் காலத்திற்கு முன்பே இருந்திருத்தல் வேண்டும்.

3.            சமஸ்கிருதம், காப்பியங்கள் உருவான காலகட்டத்தில் தென்னிந்திய மரபுகளைப் பெற்றிருத்தல் வேண்டும்.

இந்த சாத்தியக் கூறுகளுள், முதலாவது முற்றிலும் தள்ளுபடி செய்யக்கூடியதாக அமைகிறது. இந்த அடிக்கருத்துகள் இந்தோ - ஆரியப் பண்பாடுகளைக் காட்டிலும் தமிழ்ப் பண்பாட்டோடு நன்றாகப் பொருந்துவனவாக அமைகின்றன. பழந்தமிழ் நாட்டில் மலர்கள் பல்வேறு பயன்பாடுகளைக் கொண்டிருந்தன. இம்மலர்களை அடிப்படையாக வைத்து சில நிகழ்வுகளை நடத்துவது தமிழ்ச்சமூகத்தில் குறிப்பிடத்தக்க அம்சங்களுள் ஒன்றாக அமைகிறது. அதே நேரம், இந்தோ - ஆரிய வாழ்க்கை முறையில் மலர்கள் இத்தகைய முதன்மை இடம் பெறவில்லை.

சமஸ்கிருதக் காப்பியக் காலத்திலேயே குறிப்பிடத்தக்க திராவிடக் கூறுகள் இந்தோ ஆரியத்தில் நுழைந்தன. இந்த நுழைவு சொற்களாக, பண்பாடுகளாக, யாப்புகளாக அமைந்தன. கவிதையியல் மரபுகளும் அத்திராவிட உட்புகுதலோடு சேர்க்கத்தக்கதாய் அமைகிறது. காளிதாசரின் காலத்தில் சமஸ்கிருதக் கவிதைகளில் பல புதிய கூறுகள் தென்னிந்திய மரபிலிருந்து நுழைந்தன. காளிதாசருக்குப் பிற்கால சமஸ்கிருத ஆசிரியர்கள் உணர்திறன் குறைந்தவர்களாகவே எனக்குத் தோன்றுகின்றனர். இவர்களிடம் நுட்பமான செய்யுட்களை அரிதாகவே காண முடிகிறது. விதிவிலக்காகப் பெயர் அறியாப் புலவர் இயற்றிய பாகவத புராணம் அமைகிறது. இந்த ஆசிரியர், தனக்கான உந்துதலை தமிழ் வைஷ்ணவத் துறவிகளின் படைப்புகளிலிருந்தும் அவர்களது மரபிலிருந்தும் பெற்றுக்கொண்டார் எனலாம்.

சமஸ்கிருதம் தவிர்த்த இந்தியாவின் பிறமொழி இலக்கியங்களுள் தமிழ் ஒப்புயர்வற்ற இடத்தைக் கொண்டுள்ளது. இதுவே மூத்ததும், சமஸ்கிருதத்தை மிகக் குறைந்த அளவில் சார்ந்திருப்பதும் ஆகும். தமிழ்க் கவிதைகளின் தொகைப் பாடல்களில் கொண்டிருந்த விரிவான மற்றும் நேர்த்தியான உட்பொருள் உத்திகளைத் தக்கவைக்கவில்லை என்பதை வருந்துவதற்குரியதாக சிலர் கருதுகின்றனர். ஆனால், உட்பொருள் உத்திகள் தொகைப் பாடல்களின் காலத்திலேயே முழுமை அடைந்துவிட்டதாக நான் கருதுகிறேன். அதனை அதற்கு மேலும் வளர்த்தெடுக்க முடியாது. தமிழ்க்கவிதை மரபு சிலப்பதிகாரத்தின் வழியாகப் புதிய பாதைகளைக் கண்டறிந்ததை நற்பேறாகவே கருதுகிறேன். உண்மையில், இடைக்கால இலக்கியத்தின் உச்சமாக கம்பராமாயணம் அமைகிறது. நவீன தமிழ்க்கவிதை பழைய தொகைப் பாடல்களின் காலத்திலிருந்து துவங்கி தற்போது அரை வட்டத்தை அடைந்துள்ளது.

இன்று தமிழ்த் தொகைப் பாடல்கள் தமிழ் எழுத்தாளர்களால் படிக்கப்படுவதில்லை. ஒரு வேளை தமிழர்கள் தங்களது மிகப் பழைய இலக்கியங்களை மீட்டெடுத்து அவற்றின் உத்திகளைச் சரியாகப் புரிந்து கொண்டால், தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளில் புதிய பரிமாணம் உருவாகும். அது நிகழுமானால், தமிழ் நாடு மீண்டுமொரு முறை உலகின் நுட்பமான இலக்கியங்களின் இல்லம் ஆகும் என ஜார்ஜ் ஹார்ட் முத்தாய்ப்பாக நிறைவு செய்கின்றார்.

மொத்தத்தில் இந்த நூல் தமிழர்கள் தங்களைத் தாங்களே அறிய ஓர் அரிய பொக்கிஷம் எனலாம்.

மொழிபெயர்ப்பாளர் பு.கமலக்கண்ணன், தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் ஆய்வு மாணவர். இந்த நூல், அவர் ஒரு சிறந்த மொழிபெயர்ப்பாளராகவும், ஆய்வாளராகவும் மிளிர இருக்கின்றார் என்பதைக் கட்டியம் கூறுகின்றது எனலாம்.

தமிழ்ச் செவ்விலக்கியங்கள்

அவை தோன்றிய சூழலும் சமஸ்கிருதத்தில் அவற்றின் சாயலும்

(The Poems of Ancient Tamil: Their Milieu and Their Sanskrit Counterparts)

மூல நூல்: பேராசிரியர். ஜார்ஜ் எல் ஹார்ட்

தமிழில்: பு.கமலக்கண்ணன்

வெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்.,

சென்னை - 50 | விலை: ரூ.460/-

- சண்முக.ஞானசம்பந்தன், இலக்கியத் திறனாய்வாளர். மதுரை அகில இந்திய வானொலி ஓய்வுபெற்ற நிகழ்ச்சித் தயாரிப்பாளர்.