ஒவ்வொரு குழந்தையும் இவ்வுலகில் பிறந்தவுடன் பிழைத்து, வளர்ந்து, வாழ்ந்து காட்டவேண்டும். அதற்கு உறுதுணையாய் இருப்பது அந்தக் குழந்தைகள் மரபுவழி பெற்ற உள்ளுணர்வுகளும், அவர்களின் பெற்றோர்களும் சமூகமும் சொல்லிக்கொடுக்கும் பண்புகளும், திறன்களும்தான். அவர்கள் தினசரி வாழ்வில் தாங்கள் எதிர்நோக்கும் மன உடல் ரீதியான அழுத்தங்கள் எதுவும் தங்களைப் பாதிக்காமல் வாழக் கற்றுக் கொள்ள வேண்டும். அதற்கு அந்தக் குழந்தைகளுக்கு நல்ல பண்புகளும், திறன்களும் வேண்டும். திறன்களை இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம். ஒன்று, வாழ்க்கைத் திறன்கள் , மற்றொன்று வாழ்வாதாரத் திறன்கள். பெற்றோர்கள், குழந்தைகளுக்கு முக்கியமாகச் சொல்லிக் கொடுக்க வேண்டிய நற்பண்புகளையும் வாழ்க்கைத் திறன்களையும் பற்றி இந்தக் கட்டுரையில் பார்ப்போம்.

நற்பண்புகள்

குழந்தைகள் உயர்ந்த குறிக்கோள்களுடனும் நல்ல பண்புகளுடனும் வாழ்வதை விரும்பும் பெற்றோர்கள் அனைவரும் மனித வாழ்வோடு ஒன்றிப்போகும் நற்பண்புகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, சிறு வயதிலிருந்தே சொல்லிக் கொடுக்க வேண்டும். பண்புகள் என்று நான் இங்கே சொல்வது வாழ்க்கையை செம்மைப்படுத்தி நம்மை அற வழியில் நடக்க வைக்கும் கோட்பாடுகளே. நம் சமூகத்தாலும் கலாச்சாரத்தாலும் பெரிதும் மதிக்கப்பட்டு, வழி வழி வரும் அன்பு, நேர்மை, உண்மை பேசுதல், பிறரை மதித்தல், தன் செயலுக்குப் பொறுப்பேற்றுக்கொள்ளுதல் போன்றவைகள்தான். நல்ல ரோல்மாடல் பெற்றோர்களாக வாழ்ந்தாலே போதும். குழந்தைகளும் நம்மை இமிடேட் செய்து நற்பண்புகளை எளிதில் கற்றுக் கொள்வார்கள்.mother and childபண்புகள் நம்முள்ளேயே தங்கி நம் குணத்திற்கும் நடத்தைக்கும் காரணமாயிருந்து, நம்மை வெளி உலகுக்கு யார் என்று வெளிச்சமிட்டுக் காட்டும். நம்முடைய சொந்த உணர்வுகளுக்கும் நாம் பிறர்பால் காட்டும் உணர்ச்சி வெளிப்பாடுகளுக்கும் காரணமாயிருப்பது நம் பண்புகளே. காலங்களும் சூழ்நிலைகளும் மாறினாலும் அவ்வளவு எளிதில் நம் பண்புகள் மாறாது. நாம் வாழ்வில் எடுக்கும் முடிவுகளுக்கும் நம் பண்புகள்தான் காரணமாயிருக்கும். குழந்தைகளுக்கு நல்ல பண்புகளைச் சொல்லிக்கொடுக்க வீடு, பள்ளி, சமூகம் எனப் பல தளங்கள் இருந்தாலும் முக்கியமான தார்மீகப் பொறுப்பு வீட்டில் உள்ளவர்களுக்குதான். பச்சை மரத்தில் ஆணி அடிக்கும் உரிமையும் பொறுப்பும் அவர்களுக்குத்தானே உண்டு!

வாழ்க்கைத் திறன்கள்

வாழ்க்கைத் திறன்கள்தான் நம்மை சமூகத்தோடு சேர்ந்து வாழவும், அன்றாட வாழ்வில் வரும் சவால்களை ஆக்கபூர்வமாக எதிர்நோக்கவும் நமக்கு உதவும். குழந்தைகளுக்கு இந்தத் திறன்களை எப்படி சொல்லிக் கொடுத்து வளர்க்கலாம் என்று பார்ப்போம்.

சிந்தித்தல்

குழந்தைகளுக்கு சிறு வயதிலேயே பெற்றோர்களால் எளிதில் சொல்லிக் கொடுக்கக் கூடியது இந்த சிந்திக்கும் திறன்தான். இயல்பாகவே குழந்தைகள் நடக்க ஆரம்பித்து இந்த உலகைப் புரிந்துகொள்ள முயலும்போது, தாங்கள் இருக்கும் இடத்தையும் சுற்றுப்புறத்தையும் மிகவும் உன்னிப்பாகக் கவனித்து, நம்மைக் கேள்வி மேல் கேள்வி கேட்டுத் திணற அடிப்பார்கள். அவைகளுக்கெல்லாம் அசராமல் பெற்றோர்கள் பதில் சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும். சொல்லும் பதில்கள் அவர்களை மேலும் சிந்திக்கத் தூண்ட வேண்டும். அவர்கள் மனதில் ஏன், எதற்கு, எப்படி என்று கேள்விகளை எழுப்ப வேண்டும். சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால் அவர்கள் திறந்த மனதுடன் இந்த உலகைப் பார்க்க உதவ வேண்டும். புதிர்கள், விடுகதைகள், நீதிக்கதைகள் எனச் சொல்லி அவர்களின் சிந்தனையும், கற்பனையும், பகுத்தறிவும் வளர உதவ வேண்டும். வாழ்வில் சிறந்த சரித்திர நாயகர்கள், அறிஞர்கள், அறிவியல் மேதைகள் போன்றோர்களின் வாழ்க்கை பற்றிப் சொல்லி ஆர்வத்தைத் தூண்டலாம். இதனால் அவர்களுக்கும் நாளடைவில் வாழ்வில் சிக்கலான நேரங்களில் முடிவெடுக்கும் திறன் தானாகவே வந்துவிடும்.

சமூகத்தோடு பழகுதல் (COMMUNICATION AND SOCIALISATION) இன்றைய காலகட்டத்தில் குழந்தைகளுக்கு மிகவும் தேவையானது சமுதாயத்தோடு பழகும் திறமை. இதற்கு பெரும்பாலான குழந்தைகளுக்கு கூச்சமும் பயமும் பெரிய தடைக்கல்லாக இருக்கின்றன. பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளுக்கு ஒரு பாதுகாப்பு வளையத்தை உண்டுபண்ணி, அவர்கள் சமூகத்தோடு பழகும் வாய்ப்பைக் குறைத்துவிடுகிறார்கள். இதனால் குழந்தைகளும் எளிதில் ‘இன்ட்ரோவெர்ட்' என்று சொல்லுவதுபோல பிறரிடம் பழகுவதைத் தவிர்த்தே வளர்கிறார்கள். இப்படிக் கூண்டுக்கிளியாக இல்லாமல் வெளியில் வந்து தன்னம்பிக்கையோடு தைரியமாகவும் தெளிவாகவும் பேசும் திறனை வளர்த்துக்கொள்ள வேண்டும். முதலில் வீட்டிற்கு வரும் உறவினர்கள், நண்பர்கள் எனத் தங்களைச் சுற்றியுள்ள சமூகத்தோடு உரையாட, பழகக் கற்றுக்கொள்ள வேண்டும். மாற்றுக் கருத்தாக இருந்தாலும் தைரியமாக, எதிராளியின் மனம் கோணாதவாறு சொல்லிப் பழக வேண்டும். அதுபோலவே அவர்களை மதிப்பதும், மரியாதையுடன் பேசுவதும் இயல்பாகவே வர வேண்டும். மரியாதைக் குறைவாகப் பேசுவதையோ அல்லது செயல்படுவதையோ பெற்றோர்கள் அனுமதிக்கக் கூடாது.

மற்றவர்கள் பேசும்போது குறுக்கிடாமல், முழுவதையும் கேட்டு உள்வாங்கிப் புரிந்துகொள்வதை மிகச்சிறந்த திறன். வார்த்தைகளால் பேசாமலேயே உடல்மொழி, சைகைகள், முக பாவனைகள் மூலமும் தொடர்ந்து தொடர்பில் இருக்கலாம். இந்தத் திறமை இருப்பவர்களால்தான் பிறருக்காக அனுதாபப்படவோ, உதவி செய்யவோ முடியும். தான் தவறு செய்திருந்தால் வருந்த முடியும். வாழ்க்கையில் திருந்தவும் முடியும். இந்த கம்யூனிகேஷன் திறன் இருந்தால் வாழ்வில் தன்னம்பிக்கையும், ஆளுமைத்திறனும் தானாகவே வந்துவிடும் சமூகத்தோடு பழகும் திறன் வரவில்லை யென்றால் வாழ்க்கையில் நிறைய குழந்தைகள் தனிமைப்பட்டு, பெரியவர்களாக வளர்ந்த பிறகும் சிரமப்படுவார்கள். சில நேரங்களில் சமூகத்தால் தனிமைப்படுத்தப்படுவார்கள்.

உணர்ச்சிகளைக் கையாளுதல்

அடுத்ததாக, குழந்தைகளுக்குத் தேவையான முக்கியத் திறன், தங்களுடைய உணர்ச்சிகளைக் கையாளும் திறமை. பயம், கோபம், துக்கம், மகிழ்ச்சி என அனைத்து உணர்ச்சிகளையும் கையாளக் கற்றுக்கொள்ளும் குழந்தையாக வளர்க்க வேண்டும். இதை வீட்டில் உள்ளவர்களால் எளிதில் சொல்லிக்கொடுக்க முடியும். முதலில் குழந்தைகளின் அடத்தையும் அழுகையையும் பெற்றோர்களுக்கு கையாளத் தெரிய வேண்டும். குழந்தைகளைத் தொட்டாற்சிணுங்கியாகவோ அல்லது முன்கோபியாகவோ வளர்ப்பதில் அர்த்தமில்லை. தோல்விகள், ஏமாற்றங்கள், சருக்கல்கள் முதலியவைகளைக் கண்டு துவளாத மன நிலையை உருவாக்க வேண்டும். ஆத்திரத்தையும் கோபத்தையும் கட்டுக்குள் வைக்கும்படி பழக்க வேண்டும். மகிழ்ச்சியான தருணங்கள் எல்லோருக்கும் தேவைதான். ஆனாலும் குழந்தைகள் கேட்பதையெல்லாம் வாங்கிக் கொடுத்து உடனடி மகிழ்ச்சி என்ற போதைக்கு அவர்களை அடிமையாக்கக் கூடாது. உணர்வுகளைக் கையாளத் தெரிந்த குழந்தைக்கு அன்றாட வாழ்க்கையில் சந்திக்கும் மன அழுத்தங்கள் அதிகம் பாதிக்காது.

தன் உடல் ஆரோக்கியம் பேணுதல்

குழந்தைகளுக்குத் தங்கள் உடலைச் சுத்தமாக வைத்துக்கொள்ளத் தெரிய வேண்டும். சிறு வயதிலிருந்தே தாங்களாகவே பல் துளக்குவது, குளிப்பது, டாய்லெட்டை உபயோகிப்பது போன்றவைகளைப் பழக வேண்டும். தங்கள் குழந்தைகளுக்கு எதுவும் தெரியாது என்று சொல்லிக் கொண்டு பெற்றோர்கள் உதவுவதை நிறுத்திவிட்டு, அவர்கள் கற்றுக்கொள்ளும்படி செய்ய வேண்டும். உடல் ஆரோக்கியம் என்றால் என்னவென்று கற்றுக்கொள்ள வேண்டும். தொற்று நோய்கள் வராமல் காத்துக் கொள்ளவும், ஆரோக்கிய வாழ்க்கை வாழவும் தெரிய வேண்டும். நல்ல உணவுப் பழக்கம், மேனரிசம் எல்லாம் சிறுவயதிலேயே கற்றுக் கொடுக்க வேண்டும்.

வாழ்வாதாரத் திறன்கள்

வாழ்வாதாரத்திற்கான திறன்கள் நாம் வாழ்க்கையில் வெற்றிகரமாக வாழ நமக்கு உதவும். இதனால் நாம் பணம், பொருள், புகழ், அதிகாரம் ஈட்டலாம். வாழ்க்கையையும் வளப்படுத்திக் கொள்ளலாம். பெரும்பாலான திறன்களுக்கு நமக்கு திடமான மனதும், உடலின் உறுப்புகளின் இயங்கு சக்தியின் ஒத்துழைப்பும் தேவை. நம்முடைய முயற்சி மற்றும் கடின பயிற்சியினால் நம் திறமையை வளர்த்துக் கொள்ளலாம். புதுப்புது திறமைகளை எந்த வயதிலும் பெறலாம். பிறந்ததிலிருந்து நம் வாழ்நாள் முடியும் வரையிலும் ஒவ்வொரு கால கட்டத்திற்கும் தக்கவாறு இந்தத் திறன்களைக் கற்றுக் கொண்டே இருக்கலாம். மீண்டும் மீண்டும் பயிற்சி செய்வதன் மூலம் நம் திறமையை செம்மைப்படுத்திக் கொண்டு நம் இலக்கை எளிதில் அடையலாம். உலகம் முழுதும் எல்லோருக்கும் ஒரே மாதிரியான வாழ்வாதாரத் திறமைகள் இருக்காது, தேவையும் இல்லை. அவர்கள் வாழும் இடம், நாடு, இனம், மொழி, கலாச்சாரம் என பலவேறு காரணிகளால் தேவைப்படும் வாழ்வாதாரத் திறமைகள் வேறுபடலாம். படிப்பு, மொழி, கலைகள், கணிதம், கம்ப்யூட்டர் போன்றவைகள் எல்லாம் நம் வாழ்வாதாரத் திறன்களே. இவைகளைப் பள்ளிகளும், பல்கலைக்கழகங்களும் நமக்கு சொல்லிக் கொடுத்து விடும்.

பண்புகளும் திறமைகளும்

வாழ்வாதாரத் திறன்கள் சூழ்நிலைகளால் வேறுபட்டாலும் பண்புகளும் வாழ்க்கைத் திறன்களும் எல்லோருக்கும் ஒன்றுதான். பிறந்ததிலிருந்து வாழ்க்கையே ஒரு போராட்டம்போல் இருக்கும் போது, திறமையும் நற்பண்புகளும் ஒருசேர இருந்தால்தான் மனிதன் வெற்றி வாழ்க்கை வாழ முடியும். குழந்தைகள் நற்பண்புகளுடனும், வாழ்க்கைத் திறன்களுடனும் வளர்ந்தால், அவர்கள் வாழும் சமுதாயத்திற்கு முக்கிய பங்களிக்கும் நபராக ஆகிவிடுவார்கள். நல்ல பண்புகளும் திறமைகளும் ஒன்றை ஒன்று மேம்படுத்தும். பண்புகள் அற்ற திறமையினால் ஒரு பயனும் இல்லை. அம்மாதிரி நபர்களால் சமூகத்திற்கு கேடுகள்தான் விளையும்.

எப்போது சொல்லிக் கொடுக்க வேண்டும்?

குழந்தைகள் பள்ளிக்கூடம் போகும் முன்னரே அவர்களை மனதளவில் நல்ல பண்புகளும் வயதுக்கேற்ற திறமைகளும் உள்ள குழந்தையாக வளர அடித்தளம் போட வேண்டும். நல்ல பண்புகளையும் திறன்களையும் குழந்தைகளுக்கு பெற்றோர்களும் வீட்டில் உள்ளவர்களும்தான் சொல்லிக் கொடுக்க வேண்டும். பண்புகள் நம்முடன் வாழ்நாள் வரையும் இருந்து நாம் திறன்களைக் கற்றுக்கொள்ள அடிப்படையாக அமையும். ஒவ்வொரு வேலையையும் செம்மையாக முடிக்க நமக்கு நல்ல பண்புகள் தேவை. பண்புகள் மனிதனை நல்ல குணநலன்கள் உள்ளவனாக உலகுக்கு பறைசாற்றும். பண்புகள் மனிதர்களை ஒன்றுசேர்க்கும். பெற்றோர்கள் சிறுவயதிலிருந்தே நற்பண்புகளையும், வாழ்க்கைத் திறன்களையும் குழந்தைக்கு அறிமுகப்படுத்தி சொல்லிக்கொடுத்தால் ஒரு நல்ல இளைய சமுதாயத்தை உருவாக்கலாம். அதுவே அவர்கள் வீட்டிற்கும் நாட்டிற்கும் செய்யும் பெரிய தொண்டாக இருக்கும்.

- மருத்துவர் ப.வைத்திலிங்கம், குழந்தைகள் நல மருத்துவர்.