மரணத்தின் வாசலில் நின்று கொண்டு உயிர் பிழைக்க வழி தேடும் நிலையில் உள்ள பேரறிவாளன், முருகன் மற்றும் சாந்தனின் கருணை மனு கோரிக்கைகள் இந்திய ஜனாதிபதி அவர்களால் நிராகரிக்கப்பட்டது என்றும் அவர்கள் கூடிய விரைவில் தூக்கிலிடப்பட்டு படுகொலை செய்யப்படுவார்கள் என்றும் வெளிவந்த செய்திகள் பல்லாயிரக்கணக்கான உணர்வாளர்களின் மனங்களை அதிச்சியடையச் செய்தது.

எப்பொழுதெல்லாம் ஒடுக்கப்பட்டவன் ஆதிக்க வெறிகளின் காலடியை விட்டு திமிறுகிறானோ அப்பொழுதெல்லாம் அவன் தீவிரவாதியாகின்றான்; சாட்சிகள் தாயரிக்கப்பட்டு வேட்டை பிராணிகளாக்கப்படுகின்றான்.

20 ஆண்டுகள் இளமை தொலைத்து, உலகம் இருண்ட கம்பி சிறைகளுக்குள் அடைக்கப்பட்டு, மீதமிருக்கும் அவர்களின் உயிரையும் பறிப்பதற்காக தேசியம் காப்பவர்கள் நீண்ட திட்டங்களை தீட்டியபடி உள்ளனர். கொலை செய்யப்படுவதன் மூலம் தான் தேசியம் காக்கப்படும் என்று  நம்புகிறது அதிகார வர்க்கம்.

காங்கிரஸ் பொதுச்செயலாளர் சோனியா காந்தி உடல் நலம் இல்லாமல் புற்றுநோய்ப் பிரிவில் சேர்க்கப்பட்டிருக்கும் இந்த நேரத்தில், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு மரண தண்டனை அளிப்பது என்பது ஏதாவது ஒரு உள் நோக்கம் கொண்டதாக இருக்கும். குற்றவாளிகளை கொலை செய்வதன் மூலம் யாரையோ ஆறுதல்படுத்துவதற்கு முயற்சி செய்கிறார்கள் என்றுதான் தோன்றுகிறது. அல்லது ஒசாமா பின் லேடனை கொன்று அமெரிக்க மக்களிடம் தன் இழந்த செல்வாக்கை நிலை நாட்டிய ஒபாமாவைப் போல காங்கிரஸ் அரசாங்கத்தின் வரலாறு காணாத ஊழலை மறைத்து தேசப்பற்றாளர்கள் என்ற பெயரை வாங்குவதற்கான தந்திரத்தில் இம்மூவரையும் தூக்கிலேற்ற வேண்டும் என்ற சதி இருப்பதாகவும் தோன்றுகிறது.

இந்த அறிவிப்பு வெளிவந்த உடனே தமிழ் உணர்வாளர்கள் மாநிலம் முழுவதும் பரவலான  தொடர் போராட்டங்களையும், கண்டன ஆர்பாட்டங்களையும் நடத்திக் கொண்டிருப்பது ஓரளவிற்கு ஆறுதலான செய்தியாக உள்ளது.

பேரறிவாளன், முருகன் மற்றும் சாந்தன் இவர்களைப் போலவே ஜனாதிபதியால் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட, எந்த ஒரு அரசியல் அமைப்புகளின் வெளிச்சம் படாத ஒரு உயிர் முரட்டு தூக்கு கயிற்றின் கொடுர பசிக்கு இரையாகும் நிலையில் உள்ளது.

வட இந்திய அரசியல்வாதிகளில் யாருக்கும் அந்த உயிரினைக் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணமில்லை. ஏனென்றால் அவர் ஒரு காஷ்மீரி. மேலும் அவர் ஒரு முஸ்லீம். அதனால் அவர் தீவிரவாதி என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. அவர் முகம்மத் அஃப்சல் குரு.

அஃப்சல் குருவிற்கு எதிராக நேரடி சாட்சியங்கள் எதுவும் இல்லை என்பதை ஒத்துக் கொள்ளும் உச்ச நீதிமன்றம், "ஆனாலும் இந்திய குடிமக்களின் மன உணர்வுகளை தணிப்பதற்கு அஃப்சல் குரு தூக்கிலடப்பட வேண்டும்” என்று வேடிக்கையான தீர்ப்பு ஒன்றினை வழங்குகிறது.

பாபர் மசூதி நிலம் சம்பந்தமான அலகாபாத் நீதிமன்ற தீர்ப்பும் வரலாற்று ஆதாரங்கள் இல்லாதபோதும், பெரும்பான்மையான மக்களின் மன உணர்வுகளை மதித்து அங்கு தான் ராமன் பிறந்தார் என தீர்ப்பு கூறியது. ஆக பெரும்பான்மையினரின் உணர்வுகளைத் தணிப்பதற்காக இங்கு சிறுபான்மையினரின் உயிர்களும், உரிமைகளும் பறிக்கப்படும் அபாயம் உள்ளது.

புலனாய்வு நிறுவனங்களால் பொய்யான சாட்சியங்களை உருவாக்கி, சித்திரவதைகளால் துன்புறுத்தப்பட்டு, திட்டமிட்டு குற்றம்சாட்டப்பட்டு பின் அதன் அடிப்படையில் பத்திரிக்கைகளில் செய்திகளை பரப்புரை செய்து அஃப்சல் குரு ஒரு தீவிரவாதியாக உருவாக்கப்படுகிறார். பின் தேச நலன் காக்க அவருக்கு மரண தண்டனை வேண்டும் என நீதிமன்றங்களும், இந்துத்துவ ஃபாசிஸ்டுகளும் தொடர்ந்து போராடி வருகின்றன.

தன் மீது சாட்டப்பட்டுள்ள குற்றத்திற்கு எதிராக தன்னைத் தானே காத்துக் கொள்வதற்கும் கூட அனுமதிக்கப்படாமல் சககுடிமகன் ஒருவனை தூக்கில் தொங்கவிடுவதன் மூலம் தான் இந்திய மக்களின் கூட்டு மனச்சாட்சி திருப்தியடையும் என இந்த நீதிமன்றங்கள் நம்புகின்றன.

1)       அஃப்சல் குரு மனம் திருந்தி அரசிடம் சரணடைந்த முன்னால் போராளியாவர். அவர் காஷ்மீர் சிறப்பு காவல் படையினரால் (STF) பாராளுமன்ற துப்பாக்கி சூட்டுவழக்கில் சதி செய்து சேர்க்கப்படுகிறார்.

2)        பொதுவாக இந்த சிறப்பு படைகளிடம் சிக்கிய எந்த இளைஞர்களும் உயிருடன் திரும்புவதில்லை என்று காஷ்மீரீகள் நம்புகின்றனர். இதுவரை 6000 இளைஞர்கள் இந்த சிறப்பு படையினரால் விசாரிக்க அழைத்து செல்லப்பட்டு இதுவரை வீடு திரும்பவில்லை. அவர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என்றுதான் நம்பபடுகிறது.  முன்னால் போராளிகளின் குழந்தைகள் 8000க்கும் மேற்பட்டவர்கள் யாருடைய பராமரிப்பும் இன்றி அனாதைகளாய் வாழ்கின்றனர். இன்னும் காஷ்மீரத்துப் பெண்கள் பலர் தங்களின் எதிர்காலம் என்னவென்று தெரியாமல் கணவனை தொலைத்துவிட்டு அரை விதவைகளாக வாழ்கின்றனர். கடைசியில் அஃப்சல், சிறப்பு காவல்துறையினரின் காட்டுமிராண்டித்தனமான சித்திரவதைகளிலிருந்து தன் குடும்பத்தினரை பாதுகாத்திடும் நோக்கில் காவல்துறையினரின் மிரட்டல்களுக்குப் பணிந்து குற்றவாளியாக சித்தரிக்கப்பட்டார்.

3)       போலிஸ் விசாரனையின்போது (interrogation) வழக்கறிஞரின் உதவியைப் பெறுவதற்கு அஃபசல் அனுமதிக்கப்படவில்லை.

4)       அரசு வழக்கறிஞராக வாதாட வந்தவரே அஃப்சலுக்கு மரண தண்டனை அளிக்கப்பட வேண்டும் என வாதிட்டார். மேலும் அஃப்சல் தூங்கில் தொங்கி சாவதற்கு விரும்பவில்லை அதனால் விஷ ஊசி ஏற்றப்பட்டு சாவதற்கு விரும்புகிறார் என்று அஃப்சல் வாக்குமூலம் கொடுத்தாக அவருக்குத் தெரியாமலே ஊடகங்களில் வெளியிடப்பட்டது.

5)        குடும்பத்தினரை காவல் துறையின் பிடியில் வைத்துக் கொண்டு அஃப்சலை பொய் சாட்சி கூற நிர்பந்தித்தும், தான் மரணத்தருவாயில் இருந்தபோதும், சிறப்பு காவல் துறையின் பெரும் எச்சரிக்கைகளையும் மீறி நீதிமன்றத்தில் அஃப்சல், ஆஜ்தக் நிருபரின் ஒளிப்பட சாட்சிகளை வைத்து பேரா.ஜீலானி அவர்களின் விடுதலைக்கு துணை நின்றார். அதன் மூலம் பேரா.ஜீலானி குற்றமற்றவர் என்று உறுதியாகி மரனதண்டனையிலிருந்து காப்பாற்றப்பட்டார்.

6)       காவல்துறை சார்பாக சுமார் 80 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். இவர்களில் ஒருவர் கூட அஃப்சலுக்கு ஏதேனும் ஒரு பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு இருந்ததாக குற்றம் சாட்டவில்லை.

7)       இராம்ஜெத்மலானி இவர் வழக்கில் வாதிட விரும்பியபோது இவரின் மும்பை இல்லம் சிவசேனை குண்டர்களால் நொறுக்கப்பட்டது, அதனால் அவர் வாதிடாமல் வெளியேறிவிட்டார்.

8)       பயங்கரவாத அமைப்புகளுடனோ அல்லது கும்பல்களுடனோ தொடர்பு என்பது குறித்த "பொடா"வினை உச்ச நீதிமன்றம் உள்ளிட்ட மூன்று நீதிமன்றங்களுமே நிராகரித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

9)       பாராளுமன்ற குண்டுவெடிப்பில் முக்கிய குற்றவாளிகளான மசூத் அசார், காஸிபாபா, தாரிக் அகமது ஆகியவர்களை புலனாய்வுத் துறை இந்த வழக்கில் சேர்க்கப்படவில்லை. ஏனென்றால் துப்பாக்கி சூட்டின்போது மூவருமே சுட்டுக் கொல்லப்பட்டு விட்டனர்.

பலியிடப்படுவதற்காகவே வளர்க்கப்படும் சிறை மிருகமாக சிறுபான்மை மக்களை ஃபாசிஸ்டு அரசுகள்  நடத்துகின்றன. அப்துல் நாசர் மதானியிலிருந்து அஃப்சல் குரு வரையிலும் இன்னும் கோவை சிறையில் இருக்கும் அப்பாவி முஸ்லீம்கள் வரையிலும் இது தொடர்கிறது. சிறைச்சாலைகளில் மட்டுமே இஸ்லாமியர்களுக்கு தனது மக்கள் சதவீதத்திற்கும் அதிகமாக இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.

நடுநிலையாளர்கள் என்று சொல்லுக் கொள்பவர்கள் கூட இஸ்லாமிய கைதிகளின் விசயத்தில் ஒரு தலைபட்சமாகத்தான் நடந்து கொள்கின்றனர். பாகிஸ்தானில் குண்டுவெடிப்பில் குற்றவாளியாக கைது செய்யப்பட்ட சரப்ஜீத் சிங்கிற்கு மரணதண்டனை விதிக்கப்பட கூடாது என்றும் அவர் காப்பாற்றப்பட வேண்டும் என்றும் குரல் எழுப்பியவர்கள், இந்தியா-பாகிஸ்தான் அரசு உறவுகள் மூலம் அவரின் விடுதலைக்காக தொடர்ந்து குரல் கொடுத்தவர்கள் கூட அஃப்சல் குரு விசயத்தில் மட்டும் அவர் கண்டிப்பாக தூக்கிலிடப்பட வேண்டும் என்று வலியுறுத்துவது முரணாகும்.

"மனித உயிரை விரும்பியபோது எடுத்துக் கொள்ளக் கூடிய  நிறுவனமயப்பட்ட அரசுரிமைதான் மனித ஆளுமையில் கண்ணியத்திற்கு இழைக்கக் கூடிய  மாபெரும் இழிவாக இருக்க முடியும்" என்று உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஆர்தர் ஜெ.கோல்ட்பெர்க்  அவர்கள் கூறியது போல, தூக்கு தண்டனை என்பது சிறுபான்மை மற்றும் ஒடுக்கப்பட்ட இன மக்களுக்கு எதிரான ஒரு வகையான அச்சுறுத்தலாகும்.  மரண தண்டனை சதிகளிலிருந்து  பேரறிவாளன், முருகன் சாந்தன் மற்றும் அஃப்சல் குரு அவர்கள் அனைவரையும் காப்பாற்றும் முயற்சியில்  நாம் அனைவரும் இணைந்து போராடுவோம்.

அவர்களின் மரணத்திற்கு நாமும் சாட்சிகளாகி விடமால் அவர்களின் சுதந்திரத்திற்கு  நாம் சாட்சிகளாய்  இருப்போம்.
Pin It