kamodi ramayanam 450இராமாயணம் மொத்தம் எத்தனை என்பதை முழுமையாகச் சொல்லிவிடமுடியாது. இந்தியாவில் வால்மீகி, கம்பன், துளசிதாஸ், எழுத்தச்சன், அஸ்ஸாமிய, வங்காளி, சமண இராமாயணங்களே பல கிடைக்கின்றன. இந்திய பெரும்பான்மையான மொழிகளில் இராமா யணங்கள் இயற்றப்பட்டிருக்கின்றன. 300 இராமாயணம் என்று ஆங்கிலத்தில் ஏ.கே.இராமானுஜம் கட்டுரை எழுதிய காலத்திற்குப் பின்னர்ப் பல இராமாயண நூல்கள் பழைய நூலகங்களிலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளன.

அப்படியாகவே மாத்தளைசோமு கம்போடியா போயிருந்தபோது புத்தகக்கடையில் PREAH REAM PREAH LEAK என்ற புத்தகத்தைப் பார்த்தபோது அது வடமொழி இராமாயணத்தைத் தழுவிய இராமாயண நூலாக இருந்திருக்கிறது. அந்த நூலை எழுதியவர் பெயர் கொடுக்கப்படவில்லை. தொகுத்தவர் பெயர் VANSOPHEAK என்று கொடுக்கப்பட்டிருந்தது. இந்த இராமாயணம் கம்போடிய கெடரு மொழியில் எழுதப் பட்டுள்ளது. வடமொழியிலும் தமிழிலும் இருப்பதைப் போலக் காவியமாக இன்றி நெடுங்கதையாக மட்டுமே இருக்கிறது.

கம்போடியா, இந்தோனேசியா, இலங்கை, மலேசியா போன்ற நாடுகளைத் தென்னக மன்னர்கள் கைப்பற்றிவிட்டு அங்குக் கோயில்களை எழுப்பினர். அக்கோயில்களில் இராமாயணக்கதைகளைச் சிற்பமாகச் செதுக்கினர். இராமாயணக்கதைகள் வாய்மொழி வழியாகவே இந்நாடுகளில் பரவியிருக்கின்றன.

அப்படியாகவே கம்போடியாவிலும் இராமாயணம் பரவி யிருக்கிறது. ஆனால் அங்கு வழங்கும் இராமாயணக் கதையில் பெயர்கள், நிகழ்வுகள் அவர்களின் கலாச்சாரச் சூழலுக்கு ஏற்ப வடிவம் பெற்றிருக்கின்றன. ரீம், லீக், பிரேபைரட், சத்ருட், ஜானுக், சீதா, சூர்ப்பனகா, குரோங்ரீப், சுக்ரீப், அனுமான், பீயலி, கும்பாகர், இந்திரஜிட், மண்டோல்கிரிட், ரீம்லீக், ஜுப்லிக் என்று வரக்கூடிய பாத்திரங்கள் முறையே இராமன், இலக்குமன், பரதன், சத்ருக்கன், ஜனகன், சீதா, சூர்ப்பனகை, இராவணன், சுக்ரீவன், அனுமன், வாலி, கும்பகர்ணன், இந்திரஜித், மண்டோதரி, லவ, குசா என வழங்கப்படுகின்றன.

கம்போடிய இராமாயணம் வால்மீகி இராமாயணத் தோடு பல இடங்களில் ஒத்துப்போகின்றது. தசரதனுக்கு மூன்று மனைவியர், விசுவாமித்திரர், இராமனையும் இலக்குவனையும் காட்டிற்கு அழைத்துச் சென்று, அரக்கர்களைக் கொல்லுதல், சீதையை வில்லைத் தூக்கி மணத்தல், பலராமனை எதிர்த்தல், பரதன் காட்சி, இராணவன் சீதையைக் கவர்ந்து செல்லுதல், குகன் சந்திப்பு, மாயமான், அனுமன் சுக்ரீவன் சந்திப்பு, வாலியைக் கொல்லுதல், இலங்கை செல்லல், மீட்டல், லவகுசா போர் அவர்களை மகனாக ஏற்றல் என்று இராமாயணத்தைத் தழுவியே நின்றாலும் பல இடங்களில் முரண்பாடும் வேறுபாடான கதை மாறல்களையும் கொண்டதாக அமைந்திருக்கிறது.

இந்திய நாட்டிற்குள் வழங்கப்படும் இராமாயணக் கதைகள் பெரும்பாலும் வேறுபடவில்லை. கம்போடிய நாட்டில் வழங்கப்படும் இராமாயணம் பல புதுமை களைத் தன்னகத்தே கொண்டிருக்கிறது. அந்த இடங்கள் சுவாரஸ்யமாக இருக்கின்றன. கம்போடிய இராமா யணத்தில் இராவணனுக்கு இரண்டு மனைவிகள் முதல் மனைவி மண்டோல்கிரிட், இரண்டாவது மனைவி அகிநட்? தியா. சீதை இராவணனுக்கு மகளாகப் பிறந்தவளாகவே காட்டப்படுகிறாள். அக்குழந்தையால் அழிவு வரும் என்றவுடன் பானையில் வைத்துக் கடலில் விடப்படுகிறாள் என்று கதை வருகிறது.

மண்டோதரிக்கு அண்ணனாகக் குரோங்கர் என்பவன் வருகிறான். இராவணனுக்குத் தங்கையாகச் சூர்ப்பனகை காட்டப்படவில்லை. மாறாக (குரோங்ரிப்) உறவுக்காரியாக வருகிறாள். இலங்கையில் சீதையைத் தேடிச் செல்லும் அனுமனின் வாலில் நெருப்பு பற்ற வைக்கப்படுகிறது. வாலில் பிடித்த நெருப்பை அணைக்கத் தெரியாத அனுமன் ஒரு துறவியிடம் சென்று தன் வாலில் உள்ள நெருப்பை எப்படி அணைப்பது என்று கேட்க அவர் புன்னகைத்துவிட்டு  ‘உன் வாயின் உள்ளே வாலின் நுனியை வைத்தால் நெருப்பு அணையும்’ என்றார் (ப.19). அவர் சொற்படியே அனுமனின் வாலிலுள்ள நெருப்பு அணைக்கப்படுகிறது.

அரசவைக் கூட்டத்தில் இராணவனுக்கு அறிவுரை கூறிய விபீஷணனை இராவணன் செருப்பால் அடிக் கிறான் (ப.20). பலர் அமர்ந்திருக்கும் அவையில் அண்ணன் தன்னைச் செருப்பால் அடித்து அவமானப் படுத்திவிட்டானே என்று நினைத்து இராமனிடம் சேர்கிறான்.

இராமனைத் திசைதிருப்ப மாயசீதை விடப் படுகிறாள். மாயசீதாவாக வருபவள் விபீஷணனின் மகள் புன்காய். மாயசீதாவை எரித்தபோது அதனுள் இருந்த புன்காய் வெளிப்படுகிறாள். அவளின்மீது அனுமன் காதல் கொள்கிறான். அதன் விளைவாக அவள் கர்ப்ப மாகிறாள்.

இலங்கைக்குப் பாலம் அமைக்கும்போது கடலில் கற்கள் போடப்படுகின்றன. இந்தக் கற்களைச் சோவனமச்சா கடலுக்குள் இழுத்துச் செல்கிறாள். போடப்பட்ட கற்களைத் தேடி அனுமன் கடலுக்குள் சென்று அதற்குக் காரணமான சோவனமச்சாவைக் காண்கிறான். அவர்களுக்குள் காதல் நிகழ்கிறது. சோவனமச்சா கர்ப்பமுற்றுக் குரங்கு உடலும் மீன் உடலுமான குழந்தையைப் பெற்றெடுக்கிறாள். இதற்கு மச்சாநுப் எனப் பெயர் வைக்கின்றனர்.

போர்க்களம் செல்லும்முன் கும்பகர்ணன் தியானம் செய்கிறான். அதனை அனுமன் பெண் உருக்கொண்டு கலைக்கின்றான் (ப.30)

இறந்துபோன அரக்கர்களை எழுப்ப மண்டோதரி தவம் செய்யப்போகும் நேரத்தில் இராவணனைப் போல மாறிய அனுமன் மண்டோதரியோடு காதல் மொழி பேசுகிறான். தியானம் செய்யும் மண்டபம் சிதைக்கப் பட்டதைக் கண்ட இராவணன் நடந்தது குறித்துக் கேட்க மண்டோதரி உங்களைப் போல ஒருவன் வந்தான் எனக் கூறுகிறாள். அப்போது உன்மீது எந்தக் குற்றமும் இல்லை எனக் கூறுகிறான். மண்டோதரியை இராவணன் சந்தேகப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது (ப.43)

இராவணனின் உயிர் துறவியிடம் இருப்பதாகக் காட்டுதல் (ப.45).

அனுமன் வைப்பாட்டிகளோடு அரச பூங்காவிற்குச் செல்வதாகக் காட்டப்பட்டுள்ளது (ப.51).

மீட்கப்பட்டு அயோத்திவந்த சீதையிடம் இராவணனைப் பற்றிப் பணிப்பெண்கள்    கேட்க ஒரு சிறிய பலகையில் இராவணனை வரைகிறாள். அதனைப் பார்த்த பணிப்பெண்கள் வியக்கிறார்கள். அதனை அழிக் கிறாள் சீதை. அது அழியவில்லை. வேறு வழியின்றித் தன் படுக்கை அறையில் தன் தலையணைக்குக் கீழ் வைக்கிறாள். அதனைச் சோதித்த இலக்குவன் இராவணனின் உருவத்தைப் பார்க்கிறான். சீதையின்மேல் சந்தேகப்பட்ட இராமன் சீதையை வாளால் வெட்டிக் கொல்ல ஆணையிடுகிறான். இலக்குவன் சீதையை வெட்டப்போகும்போது வாள் மாலையாக மாறுகிறது. சீதையை உயிரோடு விடுகிறான் (ப.55).

மாயவேலைக்காக இராவணனிடம் சேர்ந்த அனுமனுக்குக் குரங்குப்படையை வென்றதற்காக இறந்துபோன தனது மகன் இந்திரசித்தின் மனைவி சோவன்கன்யுமாவைக் கொடுக்கிறான் (ப.46).

கோபித்துக்கொண்டு சென்ற சீதையைத் தேடி இராமன் செல்லுதல். இராமனைச் சீதை ஏற்க மறுத்தல். பழைய நிகழ்ச்சிகளையெல்லாம் நினைத்துப்பார்த்த சீதா நான் அயோத்தி மாளிகைக்கு வரவேண்டுமானால் இராமன் செத்திருக்க வேண்டும் எனக் கூறுகிறாள் (ப.68).

மீண்டும் சீதாவோடு சேரவேண்டும் என இராமன் விரும்பியபோது தன்னை மீண்டும் திருமணம் செய்து கொள்ள வேண்டும் எனக் கூறித் திருமணம் நடக்கிறது. மகன்களோடு ஆட்சியை நடத்துகிறான் இராமன் என நிறைவுபெறுகிறது கம்போடிய இராமாயணம்.

இந்திய இராமாயணங்களுக்கு எந்தவிதத்திலும் குறைவில்லாததாகக் கம்போடிய இராமாயணம் இருக்கிறது. பண்பாடு சார்ந்த நுட்பங்கள் இந்த இராமாயணத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தப் பண்பாட்டின் வேறுபாடு காரணமாகக் கற்பனைகள் சேர்த்துக் கதை வேறுவிதமாகச் சொல்லப்பட்டுள்ளது. இராமாயணக் கதையைத் தழுவி எழுதப்பட்டது என்றாலும் கம்போடிய மக்களின் வாழ்முறைகளைப் பதிவுசெய்துள்ளது. இந்த இராமாயணம் பல இடங்களில் மாறுபட்டு இருந்தாலும் மூன்று இடங்கள் தனித்தன்மையோடு விளங்குகிறது.

1. இந்திய இராமாயணங்களைப் போல இராமனைச் சித்தரிக்காமல் இராமனைக் குற்றம் உடைய வனாகக் காட்டுகிறது. அவன் நல்லவன் எனக் காட்டவில்லை.

2.  இராவணன் தன் மனைவி அனுமனோடு இருந்தாள் எனத் தெரிந்தும் மண்டோதரியின் மேல் தவறு இல்லை என வெளிப்படையாகத் தெரிவிக்கிறான்.

3. அனுமன் பல பெண்களைத் திருமணம் செய்கிறான். அவர்களுக்குக் குழந்தைகளும் பிறக்கின்றனர். கம்போடிய ராமாயணத்தைப் பொறுத்தவரை அனுமன் அதிகமான பெண் களை மணந்தவனாகக் காட்டப்படுகிறான்.

இந்தப் புதுமைகள் கம்போடிய இராமாயணத்தைப் புதிதாகக் காட்டுகின்றன. மனத்திற்கு நெருக்கமான மொழிபெயர்ப்பாக இருக்கிறது. மொழிநடை கதை சொல்முறை இயல்பாக இருக்கிறது. இன்னும் நாடுகளில் வழங்கும் இராமாயணங்கள் இனிமேல் வெளிவரும் என்ற நம்பிக்கையை கம்போடிய இராமாயணம் வெளிப் படுத்தியிருக்கிறது. கம்போடிய நாட்டார்சார் மரபினை வெளிப்படுத்துவதாக இந்நூல் அமைந்திருப்பது முக்கிய விடயமாகும்.

கம்போடிய இராமாயணம்

ஆசிரியர்: மாத்தளை சோமு

வெளியீடு: அறிவு பதிப்பகம் (பி) லிட்.,

16 (142) ஜானி ஜான் கான் சாலை,

இராயப்பேட்டை, சென்னை - 600 014

தொடர்புக்கு : 044 - 28482441

விலை: ` 70.00

Pin It