“அறிவுப் பொருளாதாரம் அதற்கு அடிப்படையான எண் இலக்கப் புரட்சி (Digital Revolution), கணினி மயம், ஒளி இழை தொலைத்தொடர்பு (Optical fibre communications) வழி தகவல் பரிமாற்றம் நிகழும் இன்றைய உலகமயச் சூழலில் கல்வி என்பது புதிய பரிணாமம் அடைந்துள்ளது. அறிவு என்பது இன்றைய சூழலில் நுணுக்கங்களைக் கூர்மைப்படுத்திக் கொள்வதாக மட்டுமே உள்ளது. நுணுக்கங்களை வளர்க்கும் நிறுவனமே சிறந்த கல்விக்கூடம். அறிவு தருவதற்கான கல்வி என்பது ஒரு சரக்கு. இந்தச் சரக்கு உற்பத்தியின் நுகர்வோர்கள் மாணவர்கள். இந்த நுகர்வோருக்குச் சமூகத்தைப் பற்றிய அக்கறையோ மனிதாயம், நாட்டு நலன் பற்றிய எண்ணமோ வளர்ப்பது இன்றைய உயர்கல்வியின் அத்தியாவசமான தேவை இல்லை. கார்ப்பரேட் நிறுவனத்துக்கு ஏற்ற மெய்மொழி (Body Language), கூர்மைப் படுத்தப்பட்ட நுண்ணறிவுத்திறன், லாகவமாக வணிகப்படுத்த வல்ல (Marketable) ஆங்கில மொழியைக் கையாளும் தன்மை, நிறுவனத்துக்கான அர்ப்பணிப்பு, தேவைப்படும் தொழில்நுட்பம் சார்ந்த புரிதல் இவை வழங்குவது மட்டுமே பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளின் வேலை.

இந்த வேலையைத் திறம்படச் செய்து வளாகத் தேர்வில் நூற்றுக்கு நூறு மாணவர்களைப் பன்னாட்டு நிறுவனத்துக்கு ஏற்ற சரக்காக உற்பத்தி செய்யும் கல்லூரி மற்றும் பல்கலைக் கழகத் தொழிற்சாலைகளைத் தனியார் நிர்வகிப்பதுதானே சரி என்பதுதான் இன்றைய கல்வி வியாபாரிகளின் மறைமுக எண்ணம். அந்தக் கல்வி வியாபாரிகளின் கவசமாக அனைவருக்கும் உயர்கல்வி தரவேண்டுமெனில் தனியாரும் பங்கேற்க வேண்டு மென்ற மத்திய, மாநில அரசின் கல்விக் கொள்கை அமைகிறது.

கல்வியும் மெக்டெனால்ட் உணவுகளும்

‘‘கல்வி என்பது மெக்டெனால்ட் மயமாகிவிட்டது (Mcdonaldisation of Education) எனக் கூக்குரலிடப்படுகிறது. மக்கள் சாப்பிடுகின்ற உணவுவகைகளில் மிக மிகச் சிறிய பகுதியே மெக்டெனால்ட் உணவக தயாரிப்பு. மெக்டெனால்ட் உணவை மக்கள் மிகவும் விரும்பும் காரணத்தினாலும், அந்த உணவகம் சில உணவுவகைகளை ஒரே மாதிரியான சுவையுடனும், ஒரே மாதிரியான தரத்துடனும் சரக்காக (Commoditiy) வழங்குவதுமே அதன் வெற்றிக்குக் காரணமாக அமைகிறது. கைத்தொழில்முறை யில் உருவாக்கப்பட்ட பொருள்கள் இன்று தரப்படுத்தப்பட்டு, பெருமளவில் உற்பத்தி செய்யப்படும்போது விலை மலிவாகிறது. செல்போன்களும் கணினிகளும் ஒரு காலத்தில் மேல்தட்டு மக்களின் சிறப்புவாய்ந்த சொந்தமாக இருந்தன. இன்று மக்கள் சந்தைப் பொருளாக அவை நுகர்வோர் தேவைக்கேற்ப மாறிவிட்டன. உற்பத்தியாகும் பொருள் சரக்காக மாறி சந்தை போட்டியில் ஈடுபடும்போது, உற்பத்தியாளர்களிடையே கடும் போட்டியும் லாபநிர்ணயம் குறைந்தும் நிலவவில்லையா? கல்வி தரும் பொருட்கள் சரக்காகக் கருதப்படுமானால் அனைவருக்கும் கல்வி வரும் வாய்ப்பு இல்லையா? திறந்தவெளி பல்கலைக் கழகங்கள் பல நாடுகளில் இந்த மாற்றத்திற்கு வழிகாட்டியாக உள்ளன’’ என்று கூறுவது யார் என்று நினைக்கிறீர்கள்? கல்வி வியாபாரிகள் அன்று. இன்று கல்வி வியாபாரத்தை உலக அளவில் நெறிப்படுத்த யுனெஸ்கோ நிறுவனம் மீது சில கல்வியாளர்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். அந்த யுனெஸ்கோ வின் கல்விக்கான உதவி இயக்குநர் ஜான் டேனியல்தான் இவ்வாறு கூறியுள்ளார். கல்வி சரக்குமயமாவதை (Commoditisation) எதிர்க்கவில்லை என்றும் வணிகமயத்தை (Commercialisation) எதிர்ப்பதாகவும் கூறுகிறார்.

இலக்கப் புரட்சியும் கல்வியும்

கல்வி மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட துறைகளைச் சேவைத் துறையில் இருந்து வியாபாரத்துக்கான சரக்காகக் கருதக்கூடிய சூழ்நிலை 1995இல் உலகவர்த்தகக் கழகமும் காட்ச் (GATS) எனப்படும் ‘வணிகம் மற்றும் சேவைக்கான பொது ஒப்பந்தமும்’ உருவாக்கியுள்ளன. செல்வம் என்பது எந்திரங்களிலும் தொழிற்சாலைகளிலும் தற்போது குறைவாகவே செறிந்துள்ளது. அறிவும் நுணுக்கங்களும் உலகப் பொருளாதாரத்துக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் தீர்மானகரமானதாகவும் உள்ளன. உலகமயச் சூழ்நிலைக்கு உறுதுணையாக இணையதள வலைப்பின்னலும் எண்ணிலக்கம் சார் கணினி பயன்பாடும் உள்ளன. மொழி என்பதும், அறிவியல் என்பதும், இலக்கியம் என்பதும், 0 மற்றும் 1 இலக்கங்கள் சார்ந்த கணினி ஆதிக்கத்திற்குச் சென்றுவிட்டன. எண் இலக்க இசை (Digital Music), எண் இலக்க புத்தகம் (Digital Book) என்று சந்தை சரக்குகள் மாறிவிட்டன. Intel நிறுவனம் Pentiam II, Pentiam III, Pentium IV Dual core, Core 2 Duo எனப் பல மில்லியன் எண்ணிக்கையில் டிரான்சிஸ்டர்கள் கொண்ட தொகுப்புச் சுற்று சில்லை (Integrated chip) உருவாக்குவதன் அடிப்படையானது அதிவேகத்தில் தகவல் பரிமாற்றம் (Information Exchange) தருவதாகும். இந்தத் தகவல் பரிமாற்றம் அதிவேகமாகச் செல்ல ஒளி இழை (Optical fibre) பயன்பாடு தற்போது புழக்கத்தில் உள்ளது. எனவே, மின்னஞ்சல் (e-mail), மின் புத்தகம் (e-book), மின் வணிகம் (e-trade), மின் கற்றல் (e-learning) என வணிக முறைகள் மாறிவிட்டன.

அறிவு மூலதனம்

இந்தத் தகவல் தொழில்நுட்பப்புரட்சி அறிவை, கல்வியை, அறிவியலை, தொழில்நுட்பத்தைச் சரக்காக மாற்றிவிட்டது. இந்தச் சரக்குகளின் மூலதனக்குவிப்பை ‘அறிவு மூலதனம்’ (Knowleege capitlal) எனலாம். உயர்கல்வி நிறுவனம் என்பது உயர் நுணுக்கமுடைய மனிதவள மூலதனத்தை (Human Capital) உற்பத்தி செய்யும் இடமாகத்தான் பார்க்கவேண்டும். மனித வள மூலதனத்தை உற்பத்தி செய்யும் அறிவுத் தொழிற்சாலைகளை யார் நிர்வகிப்பது என்பதே இன்றைய கல்விச் சூழலில் நிலவும் மாற்றங்களாகும்.

மோட்டார் வாகன உறுப்புகளுக்கான உதிரி பாக தயாரிப்பு, வடிவமைப்பு ஆகியவற்றில் டிப்ளமோ அல்லது பட்டம் பெற்ற பொறியாளனின் படிப்பறிவு, தொழிலாளியின் உடலுழைப்பு ஆகியவை இணைந்து செயல்பட்ட உற்பத்தி முறை இன்று மாறிவிட்டது. கணினி உதவியுடன் வடிவமைப்பைப் (CAD) பயன்படுத்தி பொறியாளர்கள் இன்று காரின் வடிவத்தை அமைக்க முனையும்போது, உடலுழைப்புச் சார்ந்த உற்பத்தி முறை கணினி சார் அறிவு அடிப்படை உற்பத்தி முறையாக மாறிவிட்டது. கணினி சார் அறிவு மனித வளமாகக் கருதுகின்ற காலத்தில், அந்த மனித வளம் உருவாக்கும் கல்வியும் பரிமாற்ற மதிப்புடையதாகிவிட்டது (Exchange value). இந்த மாற்றங்கள் படுவேகமாக நிகழ்ந்து கொண்டிருக்கின்ற சமயத்தில் 80கள் தொடங்கி உயர்கல்வி தருவதைக் குறித்து உலக வங்கியின் கருத்தும், 95இல் உலகவர்த்தகக் கழகத்தின் பங்கும் என்ன வென்று தெரிந்துகொள்வது இன்றியமையாததாகும்.

உலகவங்கியும் 1986ஆம் ஆண்டு புதிய கல்விக்கொள்கையும்

வளரும் நாடுகளில் கல்வி மற்றும் மக்கள் நலத் திட்டங்களுக்கு அரசு மான்யத்தின் திறன் குறித்து 1986இல் இமானுவேல் ஜிமெனெஸ் (Immanuvel jimenez) உலக வங்கிக்கு அளித்த அறிக்கை உயர்கல்விக்கான நிதி ஒதுக்கீடு குறித்து உலக நாடுகள் பரிசீலனை செய்ய தூண்டியது. இந்த உலகளாவிய அழுத்தம் உயர் கல்வி மற்றும் உடல்நலத் துறையில் தனியாரின் ஆதிக்கம் அபரிதமாக வளரவும், அரசு மான்யம் இவ்விருதுறைகளிலும் குறையவும் வழிகோலியது.

அந்த அறிக்கையில் ‘‘1. இலவசமாக வழங்குவது என்பது இலவசமாக நுகர்வதாகாது. 2. பொதுத்துறையில் (கல்வி, மக்கள் நல்வாழ்வு) கட்டணம் ஏதும் வசூலிக்கப்படாவிட்டாலும் நுகரும் சக்தியைத் தீர்மானிப்பது தனிநபர் வருமானமே. 3. வறிய நிலையில் உள்ள மக்கள் கடன் பெறுவதோ, காப்பீடு பெறுவதோ எளிதாகக்- கிடைக்காததால், கல்வி மற்றும் நல்வாழ்வு பெற செலவழிக்கும் தொகை அதிகமாக உள்ளது. 4. வசதி படைத்த பிரிவினர் நுகர்கின்ற பொது சேவைத்துறையான உயர்கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசு மருத்துவமனைகளில் தங்குமிட அறை வசதி போன்றவற்றிற்கு மான்ய உதவி அதிகமாக உள்ளது. 5. கல்வி மற்றும் நல்வாழ்வு (Health) போன்ற சமூகநலத் துறைகளில் மான்ய உதவியும் கட்டுப்பாடுகளும் திறன் அற்ற நிலையை உருவாக்குகின்றன. 6. தனியார் துறை முதலீட்டுக்குப் பெரும் தடை உள்ள காரணத்தால் சமூக நல சேவைத் துறைகளில் குறைந்த அளவே முதலீடு உள்ளது. 7. அரசின் நிதி ஒதுக்கீடு கல்வியின் பல்வேறு பிரிவுகளிடையேயும், நல்வாழ்வுத் துறையிலும் சரிவர பங்கீடு செய்யப்படவில்லை. தொடக்கநிலை கல்வியைக் காட்டிலும் உயர்கல்விக்கு அதிக ஒதுக்கீடும், நோய் தடுப்பு நடவடிக்கைக்குப் பதிலாக மருத்துவமனை உள்நோயாளி சிகிச்சைக்கு அதிகமாகவும் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது’’ என்று இமானுவேல் ஜிமெனெஸ் கூறியுள்ள கருத்துகள் கவனிக்கத் தக்கவையாகும்.

அதே அறிக்கையில் பொதுத்துறைக்கு மான்யம் கண்டபடி தருவதைத் தவிர்த்து தேர்வு செய்து தரவேண்டும் என்றும், புறவிளைவுகள் (Externalities) ஒருசிலவே உள்ள துறைகளுக்கு, அதாவது தனிப்பட்ட நபருக்கு மட்டுமே மிக்க பயன்பாடு உடைய தாகவும் சமூகத்துக்குப் பயன்பாடு குறைவாகவும் உள்ள துறைகளுக்கு மான்யம் தருவதைக் குறைக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக உயர்கல்விக்கான நிதி ஒதுக்கீடு குறைப்பது, மான்யம் நீக்குவது, கட்டணத்தை உயர்த்துவது போன்ற நடைமுறைகள் அமலாக்கப் பரிந்துரைக்கப்பட்டது.

1986ஆம் ஆண்டு உலகவங்கி கருத்துரு தொகுப்பில் உள்ள இந்த அறிக்கைக்கும் ராஜீவ்காந்தியின் 86ஆம் ஆண்டு புதிய கல்விக் கொள்கைக்கும் வித்தியாசமில்லை. உயர்கல்விக்கான மான்யம் குறைப்பு, உயர்கல்வித் துறையில் தனியார் வேரூன்ற சுயநிதிக்கல்லூரி, கல்லூரிகளுக்குத் தன்னாட்சி தகுதி (தனியார் சுயநிதிக் கல்லூரிகள் தன்னாட்சியாகி நிகர்நிலைப் பல்கலைக் கழகமாகிப் பல கோடி பணம் புரளும் கல்விச் சந்தையை தோற்று வித்துள்ளது இன்றைய கதை) என்று வலியுறுத்தியுள்ளதைக் கவனிக்க வேண்டும். நடுவண் அரசு மட்டுமன்று தமிழ்நாட்டில் அப்போது கல்வித்துறையில் சுயநிதிக் கல்லூரி தொடங்க அனுமதித்த சட்டமன்ற அறிக்கையும் இதையே பிரதிபலித்தது. 1986இல் ஆரம்பித்த தனியார்மயம் வெளிப்படையாகக் கல்வியைச் சரக்காகக் கருதவில்லை. அரசும் நிதிச்சுமையைக் குறைக்கவே தனியார்மயத்திற்கு அனுமதி என்றது.

கல்வி பொதுநலப் பொருளா? தனிநபர் பொருளா?

1995ஆம் ஆண்டு உலக வர்த்தகக் கழகம் ‘GATS’ எனப்படும் ‘‘சேவைத் துறையில் வணிகத்திற்கான ஒப்பந்தத்தில்’’ கல்வி, நல்வாழ்வு (Health) உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட சேவைத் துறைகளை வணிகப் பொருளாக வரையறை செய்து உலக நாடு களைக் கல்வி வியாபாரத்தில் ஈடுபட உந்து சக்தியாகச் செயல்பட்டது.

கல்வி என்பது பொதுநலப் பொருள் (Public good) என்றுதான் கருதப்பட வேண்டும். கல்வியைத் திறன்சார் பொருளாகவோ (Merit good), தனிநபர் பொருளாகவோ (Private good) கருத வேண்டும் என்பது இன்று கல்வி சரக்குமயம் (Commodification of Education) ஆக்கப்பட வேண்டும் என்ற நோக்கமுடைய வளர்ந்த நாடுகள் மட்டுமல்ல, வளரும் நாட்டு அரசுகளும் கடைப் பிடிக்கும் கொள்கையாகிவிட்டது.

கல்வி என்பது சேவைத் துறையா இல்லையா என்பது விவாதத்துக்குரிய பொருளே அன்று. இந்த கல்வித் துறை பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சியை வடிவமைக்க வல்லது. சமூகம் மற்றும் மனிதாயம் உள்ளிட்ட மதிப்பீடுகளை, விழுமியங்களை உள்ளடக்கிய அறிவுத்திறனோடு மனித வளத்தைக் கட்டமைப்பதே கல்வியின் நோக்கம். இது பொதுநலப் பொருளாக (Public good) இருக்கும்வரைதான் அரசின் உதவியோடு அனைவருக்கும் கிடைக்க வாய்ப்பு உண்டு. இந்தியாவில் 18 வயது முதல் 24 வயது வரை உள்ள இளைஞர் களில் 8 முதல் 10 சதவீதம் பேர் மட்டுமே உயர்கல்வி பெறும்போது கல்வி திறன்சார் பொருளாகவோ (Merit good) தனிநபர் பொரு ளாகவோ (Private good) கருதப்பட்டுக் கல்விச் சரக்கு வணிகமும் தனியார் மயமும் வெளிநாட்டுப் பல்கலைக்கழகமும் ஊக்குவிக்கப் பட்டால் சாதிய ரீதியாக ஒடுக்கப்பட்ட, வறிய நிலையில் உள்ள மக்களுக்கு உயர்கல்வி கிட்ட வாய்ப்பே இல்லை. இதை இன்னும் தெளிவாகப் புரிந்துகொள்ள கல்வி வியாபார முன்னோடிகளான அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற நாடுகளின் ஆதிக்கத்தை நாம் சற்றே கூர்ந்து நோக்க வேண்டி உள்ளது. அந்த நாடுகளின் வருகை வெளிநாட்டுப் பல்கலைக் கழகம் மூலம் பெருமளவில் நிகழப்போகிறது.

GATS ஒப்பந்தமும் விளைவுகளும்

1995 காட்ஸ் ஒப்பந்தமும் அதையட்டிய நிபந்தனைகளும் என்னவென்று காண்போம். கல்வி வியாபார வழிகள் நான்காக வரையறுக்கப்பட்டுள்ளன.

1: எல்லை தாண்டிய விநியோகம்

இந்த வழியில் கல்வி தருவோரும் நுகர்வோரும் தங்கள் இடத்திலிருந்தபடியே கல்வி பெறுவது. அஞ்சல்வழிக் கல்வி மற்றும் ஈ - கற்றல் ஆகிய இரண்டுவழியும் இதில் அடங்கும். ‘ஈ’ கற்றலுக்கான உலகச்சந்தை 2005ஆம் ஆண்டில் 230 கோடி அமெரிக்க டாலர்கள் ஆகும். இந்த ஈ கற்றலுக்குத் துணையாகப் புத்தகம் மற்றும் குறுந்தகடு வியாபாரமும் பெருகும். புத்தக வெளியீட்டிலும் இணைய வழி கற்பித்தல் நடத்துவதிலும் பன்னாட்டுக் கம்பெனிகளுக்கு நல்ல வியாபாரச்சந்தை இந்த வழி விநியோகத்தால் சாத்தியம்.

இந்த வழியில் 2000ஆம் ஆண்டு கணக்குப்படி அமெரிக்க கல்விச்சரக்கு ஏற்றுமதி மூலம் 1,000 கோடி டாலர்களும், பிரிட்டன் 370 கோடி டாலர்களும், கல்வி வியாபாரத்தில் மூன்றாவது இடம் வகிக்கும் ஆஸ்திரேலியா 200 கோடி டாலர்களும் சம்பாதித்துள்ளன.

 2: வெளிநாட்டு நுகர்வு

நுகர்வோரான மாணவர்கள் வெளிநாட்டுக்குச் சென்று படிப்பது இதன் மூலம் சாத்தியம் ஆகும். இதற்குத் தடைகளாக உள்ளவை விசா நிபந்தனைகள், கல்வித் தகுதி நிபந்தனைகள், படிக்கும்போதே மாணவர் வேலை செய்ய நிபந்தனைகள் ஆகியவை. 2002இல் இந்தியாவில் சேவைத்துறை சார்ந்த இறக்குமதி செய்து அமெரிக்கா சம்பாதித்தது 300 கோடி டாலர்கள். அமெரிக்காவில் படிக்கின்ற வெளிநாட்டு மாணவர்கள் மூலம் அமெரிக்கா 2002-03 ஆம் ஆண்டில் மட்டும் சம்பாதித்தது 1200 கோடி டாலர்கள். அதில் இந்திய மாணவர்கள் மூலம் அமெரிக்கா பெற்றது 127 கோடி டாலர்கள். அதாவது 4,280 கோடி ரூபாயாகும்.

வெளிநாட்டு நுகர்வு வழிக் கல்வி மூலம், கல்விச் சந்தை லாபகரமானதாக இருக்கும்போது வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்கள் வணிக ரீதியாக நேரடியாக வர முயற்சிப்பது நியாயந்தானே.

வணிகரீதியான நேரடி வருகை

வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் இங்கே நேரடியாகக் கிளைகள் தொடங்குவது. ஒரு நாட்டுப் பல்கலைக்கழகம் மற்றொன்றுடன் ஒருங்கிணைந்து பாடவகுப்பு நடத்துவது. அதாவது, சில மாதங்கள் வெளிநாட்டில் தங்கி படிப்பது ஆகியவை வணிக ரீதியான நேரடி வருகை ஆகும். வெளிநாட்டுப் பல்கலைக்கழகக் கிளைகள் தொடங்குவதில் தடைகள் என்ன? வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் நம் நாட்டுப் பல்கலைக்கழகங்களுக்கு நிகராக அனைத்துச் சலுகை களும் கோர முடியும். அதுதான் விவாதப் பொருளாக உள்ளது.

கடந்த பத்தாண்டுகளாக இந்தியாவில் உள்ள நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களும், சுயநிதிக் கல்லூரிகளும் ஒருங்கிணைந்து இயங்கும் திட்டப்படி வெளிநாட்டுப் பல்கலைக்கழகங் களுடன் ஒப்பந்தம் போட்டுச் செயல்படுகின்றன. இந்தச் சுயநிதி நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் எந்தவித தர நிர்ணய மேற்பார்வையும் இல்லாமல் கோடிக்கணக்கில் சம்பாதிக்க வணிக ரீதியான நேரடி வருகை உதவுகிறது. ஏறத்தாழ 150-க்கும் மேற்பட்ட ஒருங்கிணைந்த செயல்பாடு நிகழ்கிறது. இதில் பல வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் தங்கள் சொந்த நாட்டில் அங்கீகாரம் பெறாதவை. வெளிநாட்டு முதலீடு ஊக்குவிக்கும் வாரியம் (Foreign Investment Promotion Board) மூலம் இந்த 150 நிறுவனங்களும் நுழைந்து கல்வி வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளன.

இயற்கை நபர்களின் தோற்றம்

சேவைத்துறையில் சேவை வழங்குபவர்கள் நேரடியாக மற்றொரு நாட்டிற்கு வருவது. ஆசிரியர்களும் ஆராய்ச்சி யாளர்களும் இயற்கை நகர்களின் தோற்றம் மூலம் சேவை வழங்கும் நாட்டின் சார்பாக மற்றொரு நாட்டிற்குக் குறைந்த காலத்திற்குச் சென்று பணியாற்றுவது. மனிதவளம் மிகுந்த இந்தியா, சீனா, மெக்சிகோ உள்ளிட்ட 14 வளரும் நாடுகள், இதற்கான நிபந்தனைகளைத் தளர்த்த பரிந்துரைகள் வைத்து, சேவைத்துறை வணிக ஒப்பந்த விவாத மாநாட்டில் வாதிடு கின்றன. இதைப் பயன்படுத்தி ஆசிரியர் மற்றும் ஆராய்ச்சியாளர் களை மட்டுமன்று, தொழிலாளிகளையும், பொறியாளர்களையும் அனுப்ப முடியும் என்று வாதிடுகின்றன. கல்வி வியாபாரத்தைப் பொறுத்தவரை, வெளிநாட்டுப் பல்கலைக்கழகக் கிளையில், அந்நாட்டவரே பணியாற்றினால் நமது ஆசிரியர், அறிவியலாள ருக்கு என்ன இடம்?

உலக மயம், என்பது எல்லை கடந்து உலகத்தையே ஒரு சிற்றூராக்கிவிட்டது (Global village) என்று சிலர் மகிழ்ச்சி அடை கின்றனர். ஆம், ஏகாதிபத்திய சந்தைக்குச் சிற்றூராவதுதானே வசதி.

வெளிநாட்டுப் பல்கலைக்கழக வருகை

வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் நேரடியாக கிளைகள் தொடங்க அனுமதிக்கும் மசோதா இன்னும் நிறைவேறாத நிலையில் Chronicle of Higher Education என்னும் இதழில் வந்த செய்தி கவனிக்கத்தக்கது.

இந்த ஆண்டு நவம்பர் மாதம் இந்திய பிரதம அமைச்சர் மன்மோகன் சிங்கும், அமெரிக்க குடியரசுத் தலைவர் ஒபாமாவும் உயர்கல்வித் துறையில் இரு நாடுகளும் ஒப்பந்தமிடுவது குறித்து விவாதித்துள்ளனர். ஹார்வர்டு, யேல் மற்றும் விமிஜி போன்ற பல்கலைக்கழகங்கள் வெளிநாட்டுப் பல்கலைக்கழக மசோதா நிறைவேறும் வரை காத்திருப்பதாகக் கபில்சிபலிடம் கூறியுள்ள தாகத் தெரிகிறது. கபில்சிபல் தயாரித்து பிரதமர் அலுவலகத் திற்கு அனுப்பியுள்ள திருத்தப்பட்ட மசோதாவில், வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் தாங்கள் விரும்பும்படி கட்டணம் நிர்ணயிக் கலாம் எனவும், மாணவர் சேர்க்கையில் இடஒதுக்கீட்டிற்கு விதி விலக்கும் அளிக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளதாகவும் ஆனால், பிரதமர் அலுவலகம் அதற்கு ஒப்புதல் தரவில்லை எனவும் சிலீக்ஷீஷீஸீவீநீறீமீ ஷீயீ பிவீரீலீமீக்ஷீ ணிபீuநீணீtவீஷீஸீ இதழில் செய்தி வந்துள்ளது.

வணிக ரீதியான நேரடி வருகை மூலம் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் அனுமதிக்கப்பட்டால் நம் நாட்டு நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் கல்வி வியாபாரத்தில் போட்டி போட முடியுமா என்பது கேள்விக்குறி?

கிழக்கிந்திய கம்பெனியும் கல்வியும்

1854இல் உயர்கல்வி குறித்து உட் அறிக்கை சமர்ப்பித்தபோது, பல்கலைக்கழகங்கள் தொடங்குவதற்குக் கடும் எதிர்ப்பை லண்டன் பாராளுமன்றத்தில் தெரிவித்தனர். உட், பல்கலைக் கழகம் தொடங்க விரும்பவில்லை. ‘‘உயர் கல்வி பெறும் இந்த நாட்டு மக்கள், வேலை கிடைக்காவிட்டால் மன நிறைவற்றவர் களாகிவிடுவர், அவர்களால் ஆபத்து’’ என்று கருதினார். கிறித்துவ பாதிரிமார்கள் தந்த அழுத்தமும் கிழக்கிந்திய கம்பெனியின் நிர்வாகத் தேவைக்கும் பல்கலைக்கழகங்கள் உருவாக்கப்பட்டன. 1857இல் சென்னை, மும்பை மற்றும் கொல்கத்தா பல்கலைக் கழகங்கள், லண்டன் பல்கலைக்கழக மாதிரியில் உருவாக்கப்பட்டன. கலை, இலக்கியம் மட்டுமே பாட உள்ளடக்கமாக இருந்தன. 1882 இந்தியக் கல்விக்குழு, 1917 கல்கத்தா பல்கலைக்குழு, 1944 சார்ஜன்ட் குழு போன்ற பல்வேறு குழுக்கள் இயற்கை அறிவியலும் தொழில்நுட்பப் பாடங்களும் பாடதிட்டத்தின் உள்ளடக்கத்தில் கொண்டுவர பரிந்துரைத்தன. முழுமையான கல்வி இந்திய மக்களுக்குக் கொண்டுவரவில்லை.

கிழக்கிந்திய கம்பெனியின் நிர்வாகம், வணிகம், பொருள் ஏற்றுமதி இறக்குமதி இவற்றிற்கும் காலனி அரசாங்க நிர்வாகத் திற்கும் நில அளவையாளர்கள் தேவைப்பட்டனர். தலைமை பொறியாளர் பிரிட்டிஷாராக இருந்தபோது அவருக்குக் கீழே பணியாற்ற டிப்ளமோ பொறியாளர் தேவைப்பட்டனர். கங்கை போன்ற ஆற்றில் பெருகி வரும் நீரை ஆற்றுப்படுத்த கால்வாய் அமைக்க பொறியாளர் தேவைப்பட்டனர். இந்தப் பணி நிலைகள் அடிப்படையில், தேவையின் காரணமாக 1847இல் முதல் பொறியியல் கல்லூரி ரூர்க்கியில் தொடங்கப்பெற்றது. 1842இல் கிண்டியில் தொழிற்பள்ளி தொடங்கப்பெற்றது. 1856-57இல் கொல்கத்தா, மும்பை, சென்னையில் கிண்டி என மூன்று ஊர்களில் பொறியியற் கல்லூரிகளைத் தொடங்கினர். எப்போதுமே அரசின் நிர்வாகம், உற்பத்திமுறை சார்ந்த அரசியல் பொருளாதாரப் பின்னணியில்தான் கல்விக் கொள்கைகள் உருவாக்கப்பட்டன.

கோத்தாரி குழுவும் இன்றைய கல்வி வியாபாரமும்

1947-க்குப் பின் கனரகத் தொழிற்சாலை, அணு ஆராய்ச்சி தொடக்கம், உலகளாவிய அடிப்படை அறிவியல் சார்ந்த உயர்கல்வி வளர்ச்சியின் தாக்கம், பொதுத்துறையான ரயில்வே, தபால்- தந்தி துறைகளின் வளர்ச்சி இவற்றின் பின்னணியில் 1948 ராதாகிருஷ்ணன் குழு போன்றவற்றின் அடிப்படையில் பொறியியல் கல்லூரிகளும் IIT போன்ற நிறுவனங்களும் தொடங்கப்பெற்றன. 1966 கோத்தாரிக்குழு, கல்விக்கான நிதி ஒதுக்கீடு குறைந்தபட்சமாக மொத்த தேசிய வருமானத்தில் 6 சதம் ஒதுக்கப்பட வேண்டும், பொதுப்பள்ளி - அண்மைப் பள்ளி அமைக்கப்பட வேண்டும், கல்லூரிகளுக்குத் தன்னாட்சி தரப்பட வேண்டும் என பரிந்துரைத்த காலத்தில் கூறப்பட்ட கருத்துக் களைக் கவனிக்க வேண்டும். ‘‘தற்போதைய கல்விமுறையில் நிலபிரபுத்துவ மற்றும் வழமையான சமூக வரம்புக்குள் ஏகாதிபத் திய நிர்வாக அமைப்புக்கான தேவைக்கேற்பவே கல்விமுறை அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் கல்வி முறையை ஜனநாயக சோசலிச சமூகத்தை நவீனப்படுத்தும் தேவைக்கேற்ப புரட்சிகர மாற்றங்கள் கொண்டுவர வேண்டும்’’ என கோத்தாரி கூறியது குறிப்பிடத்தக்கதாகும். மேலும், ‘‘கல்வி உரியமுறையில் வளர்ச்சி பெற வேண்டும் எனில் 1950-51இல் கல்விக்கான செலவினம் 114 கோடியே 40 லட்சத்திலிருந்தது. இது 1965-66இல் 600 கோடியாக அதிகரித்துள்ளது. 1985-86இல் இச்செலவினம் 4036 கோடியாக அதிகரிக்கப்பட வேண்டும். 1965-66இல் மொத்த தேசிய வருமானத்தில் 2.9 சதம் கல்விக்கான நிதி ஒதுக்கீடு இருந்தது. இது 1985-86இல் 6 சதமாக அதிகரிக்க வேண்டும்’’ எனவும் கோத்தாரி குழு கூறியது.

ஆனால், புதிய கல்விக் கொள்கை கல்விக்கான மொத்த நிதி ஒதுக்கீட்டை கோத்தாரி குழு அறிக்கைக்குப் பின்னும் 6 சதம் அதிகரிக்காதது குறித்து விமர்சிக்காமல், கல்விக்காக ஒதுக்கப்படும் நிதியிலிருந்து உயர்கல்வித்துறை பெரும் பங்கை எடுத்துக் கொள்வதால் தொடக்கக் கல்வி பாதிக்கப்படுகிறது எனக் கூறியதோடில்லாமல், இதற்குத் தீர்வு உயர் கல்வியில் சுயநிதிப் பிரிவை ஊக்குவிக்க வேண்டும் என பரிந்துரைத்தது. உயர் கல்வியில் தனியார்மயம் தொடங்கியது, வியாபாரம் பெருகவும் புதிய கல்விக் கொள்கை வித்திட்டது.

கல்வி வியாபாரம் செழித்தோங்கும் களமாகக் குறிப்பாகத் தென்மாநிலங்களான ஆந்திரா, கர்நாடகம், தமிழ்நாடு ஆகிய வற்றைக் குறிப்பிடலாம். 1985-க்குப் பின் 2009 வரையிலான ஒப்பீட்டளவில் சுயநிதி கலை, அறிவியல் மற்றும் சுயநிதி பொறியியல் கல்லூரி வளர்ச்சி எவ்வாறு உள்ளதெனக் காண்போம்.

தமிழ்நாட்டின் கலை-அறிவியல் கல்லூரிகள்

ஆண்டு      அரசு கல்லூரி  உதவிபெறும் கல்லூரி     சுயநிதி கல்லூரி                

1984-85        53      134    6

1988-89        54      133    23

1998-99        58      132    150

2008-09        62      133    353 

தமிழ்நாட்டின் பி.எட்-உடற்கல்வி கல்லூரிகள்

        அரசு கல்லூரி அரசுஉதவி பெறும் கல்லூரி சுயநிதி கல்லூரி            

1988-89        7       -       15      3       -       -

1998-99        7       -       14      3       1       1

2008-09        7       -       14      3       543    10

தமிழ்நாட்டின் பொறியியல் கல்லூரிகள்

        அரசு கல்லூரி அரசு உதவிபெறும்  கல்லூரி    சுயநிதி கல்லூரி               

1984-85        6       3       17

1998-99        6       3       71

2008-09        6       3       335

கலை அறிவியல் கல்லூரிகளில் சுயநிதி கல்லூரிகள் எண்ணிக்கை 98-99இல் 150 ஆக இருந்தது 353 ஆகவும், சுயநிதி பொறியியல் கல்லூரிகள் எண்ணிக்கை 98-99ல் 71ஆக இருந்தது ஐந்து மடங்கு அதிகரித்து 335 ஆகவும், சுயநிதி கல்வியியல் கல்லூரி 1998-99இல் 1ஆக இருந்தது 2008-09இல் 543ஆக அதாவது ஐநூறு மடங்கு அதிகரித்திருப்பதைக் காணலாம்.

குறிப்பாகச் சுயநிதி கல்வியியல் கல்லூரியில் நடக்கும் வியாபாரம் ஒருபுறம் இருக்க, அஞ்சல்வழிக் கல்வி மூலம் பி.எட். கற்பித்து தனியார் பல்கலைக்கழகங்கள் அடித்த கொள்ளை சொல்லில் அடங்காது. ஏதாவது ஒரு பட்டவகுப்புக்குப்பின் பி.எட். படித்தால் மெட்ரிகுலேசன் பள்ளியிலாவது வேலை கிடைக்குமென மாணவர்கள் 70 ஆயிரம் முதல் 11/2 லட்சம் வரை கட்டாய / மறைமுக நன்கொடை தந்து படிக்கின்றனர். ஒரு பி.எட். கல்லூரியில் குறைந்தபட்சம் ஒரு வகுப்புக்கு 100 பேர் என 200 பேர் படிக்கின்றனர். கணக்கு போட்டுக்கொள்ளவும். இந்தக் கல்லூரிகளுக்கு ஒப்புதல் அளித்த தேசிய அளவிலான NCTE நிறுவன ஊழல் முடை நாற்றம் அடிக்க அந்த குழுவையே நடுவண் அரசு கலைத்துவிட்டது.

நிகர்நிலைப் பல்கலைக்கழக வியாபாரம் தனி. இந்தக் கல்வி வியாபாரிகளோடு வெளிநாட்டு வியாபாரிகளும் இனி போட்டியிட உள்ளனர். இந்தியா முழுமையும் உள்ள கல்லூரி மற்றும் பல்கலைக் கழகங்களைக் கணக்கில் எடுப்போமானால் பின்வரும் வளர்ச்சி வீதத்தைக் காணலாம்.

இந்தியாவில் கல்லூரி பல்கலை வளர்ச்சி

        1950   2008

பல்கலைக்கழகங்கள்      25      431

கல்லூரிகள் 700    20,677

மாணவர்கள்       1.7 இலட்சம் 116.12 இலட்சம்

இந்தியாவின் பல்கலைக்கழகங்கள்

மைய பல்கலைக்கழகங்கள்            25

மாநிலப் பல்கலைக்கழகங்கள்          230

நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள்             113

தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனங்கள் (மாநிலம்) 5

தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனங்கள் (மையம்) 33

தனியார் பல்கலைக்கழகங்கள்          28

        மொத்தம்    431

116.12 இலட்சம் மாணவர்கள் படிக்கின்றார்களே மிகப்பெரிய முன்னேற்றம் அல்லவா! என்று நினைக்கலாம். உயர் கல்விக்குத் தகுதியுடைய 18-24 வயதுடைய இளைஞர்களில் உயர்கல்வி படிப்புக்கான சேர்க்கை வீதம் (Gross Enrollment Ratio) தேசிய அளவில் 11.55 சதம் உள்ளது. தமிழ்நாட்டில் நிணிஸி வீதம் 16.5 சதமும் பீகாரில் 5.86 சதமும் உள்ளது. உயர்கல்விக்குப் பெரும் எண்ணிக் கையில் மாணவர்கள் சேர வாய்ப்புள்ளதால் 2011ஆம் ஆண்டுக்குள் இந்த தேசிய சதவீதத்தை 11.55லிருந்து 15 சதமாக்க வேண்டுமாம்.

யஷ்பால் அறிக்கை

1500 பல்கலைக்கழகங்களைத் திறக்க வேண்டும், 50 தேசிய அளவிலான பல்கலைக்கழகங்கள் திறக்கப்பட வேண்டும் என தேசிய அறிவு சார் ஆணையம் கூறியுள்ளது. இக்கருத்தை மீண்டும் வலியுறுத்தி பேராசிரியர் யஷ்பால் தலைமையிலான குழு அறிக்கைத் தந்துள்ளது.

இதே குழு சுயநிதி கல்லூரிகளில் சட்டபூர்வமாக இல்லாமல் வசூலிக்கப்படும் கட்டணக் கொள்ளை பற்றி குறிப்பிடுகிறது. ‘‘சட்டப்பூர்வமாக இல்லாமல் பொறியியற் கல்லூரிகளில் 1 முதல் 10 லட்சங்களும், மருத்துவக் கல்லூரிகளில் 20 முதல் 40 லட்சங் களும் பல் மருத்துவக் கல்லூரிகளில் 5 முதல் 12 லட்சங்களும் கலை, அறிவியல் கல்லூரிகளில் 30,000 முதல் 50,000 வரையும் வசூலிக்கப்படுகின்றன’’ என்று யஷ்பால் அறிக்கை குறிப்பிடுவ தோடு, ‘‘கட்டாய நன்கொடை கட்டணம் தொடர்பான பிரச் சினைகள் ஒழுங்காற்றுப்படுத்தும் நிறுவனங்களின் கட்டுக்குள் அடங்காததோடு, இந்தப் பிரச்சினையைத் தீர்க்க உயர் மட்ட அளவில் தயக்கம் நிலவுகிறது’’ எனவும் அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.

குறைந்தபட்சம் GNP இல் 10% கல்விக்கான நிதியை ஒதுக்கி உயர்கல்வி மாணவர் சேர்ப்பு வீதத்தை அதிகரிப்பது குறித்தோ, அரசியல்வாதிகள் அனைவரும் சுயநிதிக் கல்லூரிகளின் பினாமியாகச் செயல்பட்டு கொண்டு கல்விக் கொள்கை பேசுவது குறித்தோ இந்த அறிக்கை எதுவும் குறிப்பிடவில்லை. பிர்லாவும்-அம்பானியும் தனியார் கல்லூரி வருகைக்காகக் கொள்கை அறிக்கை தரும் சூழலில் நடுவண் அரசுகள் இயங்கும்போது; கல்வி தனியார்மய வரவேற்பில் காங்கிரசுக்கும் பா.ஜ.க. வுக்கும் வித்தியாசம் இல்லாதபோது; இந்த இரு கட்சிகளுக்கும் ஒத்தூதும் மாநிலக் கட்சிகளுக்கு ஏது திராணி? கல்வி வியாபாரிகளின் முக்கியமான கோரிக்கை,

‘IT நிறுவனங்களுக்கு அமைத்துக் கொடுத்தது போல் சிறப்புக் கல்வி மண்டலங்கள் (Special Education Zone) அமைக்க அனுமதி வேண்டும். இந்த SEZ கல்வி நிறுவனங்களின் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவியாக இருக்கும்’’ என்பதாகும். சென்னையில் பிப்ரவரி 2009 தென்மண்டல இந்திய தொழில் கூட்டமைப்பு (CII) நடத்திய கல்விக் கருத்தரங்கில் கலந்துகொண்ட சுயநிதி கல்லூரி நிர்வாகிகளும், ஒரு நிகர்நிலைப் பல்கலைக்கழகத் துணைவேந்தரும் வைத்த கருத்து ‘‘சிறப்பு கல்வி மண்டல’’ கோரிக்கையாகும். இதை தேசிய அறிவுசார் ஆணையத்தலைவர் சாம் பிட்ரோடாவும் வழிமொழிந்தது ஆச்சரியமல்ல.

மேலும் இந்தக் கல்வி வியாபார நிறுவனங்களுக்கு ‘டிரஸ்ட்’ என்பதிலிருந்து மாற்றம் செய்து கம்பெனி சட்டம் பிரிவு 25இன் படி அந்தஸ்து தரவேண்டும் என்பதும் கோரிக்கை ஆகும்.

கல்வி வியாபாரமும் கல்வியின் தரமும்

நிதி பற்றாக்குறையினால் தனியார் நிறுவனங்கள் தோற்று விக்கப்பட்டு கல்வி வியாபாரம் நடப்பது காரணமாக ஏற்படும் சீரழிவும் ஒடுக்கப்பட்ட பிரிவினருக்கு உயர்கல்வி இல்லாமல் போவதும் ஒரு பக்கம். அதே நேரத்தில் பல்கலைக்கழக கல்வித்தரம் என்று எடுத்துக்கொண்டால் நிதிபற்றாக்குறை காரணமாக அஞ்சல் வழிக் கல்விமூலம் நிதிபெருக்க முனைந்து பல்கலைக்கழகக் குறிக்கோளுக்குத் தொடர்பில்லாத பாட வகுப்புகளையும் நடத்துவது வியாபாரத்தால் வந்த சீரழிவு இல்லாமல் வேறென்ன? எடுத்துக்காட்டாக, தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் வணிகவியல், கணினி அறிவியல் பட்ட முதுநிலை வகுப்புகளை அஞ்சல் வழி நடத்துவது எந்த விதத்தில் மேம்பாடுடைய செயல்?

ஆந்திர மாநிலத்தில் குப்பம் என்னும் ஊரில் இருக்கும் திரா விடப் பல்கலைக்கழகம் தொடங்கியபோது திராவிட வரலாறு, மொழி மற்றும் கலாச்சாரம் தொடர்பான ஆய்வுக்காக என்ற நிலை போய் சந்திரபாபு நாயுடு முதல்வராக இருந்தபோது பல்கலைக் கழகம் நிதி ஆதாரத்துக்கு கணினி அறிவியல், நிர்வாக மேலாண்மை என்று தொடங்கப்பெற்று இன்று அஞ்சல் வழி பிஎச்.டி. என்கிற அளவுக்கு வியாபாரச் சீரழிவு நடைபெறுவதைக் காணலாம்.

இந்தியாவில் சில மாநிலங்களில் 1980கள் தொடங்கி நடைபெற்றுவரும் கல்வி வியாபாரச் சந்தை GATS ஒப்பந்தப்படி உயர்கல்வி முழுவதையும் வணிக சரக்காக மாற்றி வெளிநாட்டு பன்னாட்டு நிறுவனங்களின் மூலம் அரங்கேறப்போகும் உலகக் கல்விச் சந்தைக்குப் பெரிதும் உதவும்.

இலவசக் கல்வி - இலவச நுகர்வு

தற்போது IIT போன்ற நடுவண் அரசு நிறுவனங்களில் இட ஒதுக்கீடு இருந்தாலும் SC மற்றும் ST பிரிவினர் சேர முடிவதில்லை. இக்கட்டுரையில் முதலில் குறிப்பிட்டவாறு இந்த நடுவண் அரசு நிறுவனத்தில் கல்வி பெறுவது இலவசமாக இருந்தாலும், அதனுள் நுழைவதற்கான தனிப் பயிற்சிக்குச் செலவழிக்கக் காசு இல்லாதபோது எவ்வாறு நுழைய முடியும்? உயர்கல்வித் துறையில் Free Education என்றாலும் Free Consumption இல்லை.

அறிவு மூலதனக் குவிப்பை நோக்கி அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் திட்டமிடும்போது, தானும் கல்வி வியாபாரத்தில் ஈடுபடும் நோக்கத்துடன் இந்திய அரசாங்க வணிகத்துறை அமைச்சரும் மனிதவள மேம்பாட்டு அமைச்சரும் WDO உள்ளிட்ட அரங்கங்களில் பேசுவதும் ஒப்பந்தமிடுவதும் தொடர்கின்றது. இன்னும் இந்த நிலை நீடித்தால் ஐந்து ஆண்டுகளுக்குள் அரசு கல்லூரிகள் மற்றும் அரசு நிதி எதிர்பார்த்து நிற்கும் மாநிலப் பல்கலைக்கழகங்களும் நிலைத்து நிற்க முடியாது. கடையை மூட வேண்டியதுதான்.

அறிவு மூலதனமும் ஆசிரியர் கடமையும்:

கல்வி என்பதைப் பொதுநலன் பொருளாகக் கருதி அரசே கல்விதரும் பொறுப்பை ஏற்க வலியுறுத்த வேண்டும். முதற்கட்டமாகக் கல்விக்கான நிதி ஒதுக்கீடு GNPல் குறைந்த பட்சமாக 10 சதமாவது ஒதுக்க வேண்டும். உயர்கல்வி குறித்த யஷ்பால் அறிக்கையை ஆசிரியர் மாணவர் விவாதத்திற்கு உட் படுத்திய பின்னரே அமலாக்க வேண்டும். வெளிநாட்டுப் பல்கலைக் கழகக் கிளைகள் திறக்க அனுமதிக்கக் கூடாது. மறைமுக நன்கொடை வாங்காத சுயநிதி கல்லூரிகளே இல்லாத போது அந்த கறுப்புப் பணப் புழக்கத்தைக் கட்டுப்படுத்த வக்கில்லாதவர் கள் ‘‘தரத்தினைக் காப்போம்’’ எனக் கல்விமான்ய அறிக்கையில் முழங்குவது கேவலமானது. தொடக்கக் கல்வியில் நடக்கும் வியாபாரம் உடனடியாகக் கட்டுப்படுத்த தாய்மொழிக் கல்வி மட்டுமே என முடிவெடுக்கும் தைரியம் இல்லையெனில் எவ்வாறு இவர்கள் உயர்கல்வி வியாபாரத்தைத் தடுப்பார்கள்?

உயர்கல்வி பெற்று தங்கள் Corporate நிறுவனத்துக்குத் தேவையான நுணுக்கங்கள் உடைய மாணவனை வளாகத்தில் பொறுக்கி எடுத்து மனித வளத்தைக் கொண்டு ‘அறிவுப் பொரு ளாதார’ உற்பத்தியில் ஈடுபட்டுள்ள பன்னாட்டு IT நிறுவனங்கள் மீது கல்விக்காகத் தனிவரி விதித்து அரசாங்கம் பணம் திரட்ட வலியுறுத்த வேண்டும். அறிவு உற்பத்திக்குத் தேவைப்படும் கச்சாப் பொருள் மனிதவளம் அல்லவா? அந்த மனிதவள உற்பத்திக்கு ஆகும் செலவில் ஒருபங்கைக் கேட்க ஏன் நடுவணரசு தயங்குகிறது?

சிறப்புப் பொருளாதார மண்டலம் என்ற பெயரில் நல்ல வரிச் சலுகைகளுடன் நமது நாட்டின் நிலவளம், நீர்வளம் மிக்க இந்த நாட்டு மக்களின் காடுகளையும் ஏரிகளையும் மலைகளையும் வயல்களையும் பன்னாட்டு நிறுவனங்களுக்குக் காவு கொடுப்பதை எதிர்த்து அந்தந்தப் பகுதி ஆதிவாசிகளும், உழைக்கும் மக்களும் போர்க்கொடி தூக்குகின்றனர்.

‘சிறப்புக் கல்விமண்டலம்’ அமைக்க அரசு முனைகிறது. முளையிலேயே அதைக் கிள்ளி எறிய ஆசிரியர்கள் மாணவர்கள் ஒருங்கிணைந்து போராட வேண்டிய கட்டமிது. கல்லூரி பல்கலைக்கழக ஆசிரியர்களுக்குச் சமீபத்தில் புதிய ஊதிய விகிதம் அமலாக்கப்பட்டுள்ளது. நிர்வாகத்தில் கூடுதல் செயலருக்கு இணையான ஊதியம் பெறும் வாய்ப்பு கல்லூரி, பல்கலை ஆசிரியருக்குக் கிடைத்துள்ளது. மகிழ்ச்சியான விஷயம். ஆனால், அந்த ஊதியம் பெற்ற காரணத்தால் மேல்தட்டு மனப்போக்குடன் அடிப்படை மக்களுக்கான, ஒடுக்கப்பட்ட தலித் மற்றும் சிறுபான்மை மற்றும் பெண்களுக்கான கல்வி உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கவில்லை எனில் இந்த ஏகாதிபத்திய ‘அறிவு மூலதனம்’ அவர்களையும் சேர்த்து விழுங்கிவிடும்.

- ப.சிவகுமார்

பார்க்க:

1. Report of the Education Commission 1964-66

2. New Education Policy Document 1986

3. Essays in the History of Indian Education, Aparna Basu, Concept Publishing Company

4. Facing Global and Local Challenges, The New Dynamics for Higher Education, 2009 Country Report - INDIA.

5.  Report of “The Comittee to advise on Renovation and Regunavation of Higher Education” - Prof. Yashpal

6.      GATS and Higher Education some Reflections, Rhihini Shni, Sumita Kale.

8.  Higher Education a Public good, a state Duty, Jose Dias Sobrino, UNESCO conf. on Higher Education, 2009

9.  CABE committee on Financing Higher and Technical Education.

10. The Chronicle of Higher Education Nov.29, 2009.

11.     FDI in Higher Education Aspirations and reality mainstream, vol. XLV, No.25 

The major responsibility for teaching should lie with the local faculty. Ten years ago, the total number of teachers, spread in 11,000 colleges of the country, was above 2.5 lakh.

For quality teaching they need to be activated / involved in research. Five years ago, only three per cent of research money was used for extramural research (the research conducted in colleges, universities and IITs). The rest was used in research laboratories with hardly any teaching component.

A very major shift in the distribution of research funding and research policy is required. In order to impart technical / professional skills to every student, from the perspective of his/her self –reliance, the walls between professional / technical and non-professional colleges must fall. In march 2007, the country had 2,439 Engineering colleges and 1,917 Polytechnics with an intake of 6.36 lakh (B.Tech. first year) and 3.38 lakh (Diploma first year). Besides, 996 institutes offered MCA and 1,119 offered MBA programs with annual intake of 53,000 and 89,500 respectively. 

V. K. Tripathi 

Critique of Yashpal committee report on higher education from the perspective of self-reliance and freedom

 The Hindu, Sep 27, 2009

Pin It