பத்தொன்பதாம் நூற்றாண்டில் மொழிகளின் அடிப்படையில் அடையாளம் காணப்பட்ட தேசிய இனங்கள் தம் தம் வரலாற்றினை ஆயும் / எழுதும் முயற்சியில் ஈடுபட்டன. மொழிக்குடும்பங்கள் பற்றிய ஆய்வு மொழிக் கூட்டங்களின் அடிப்படையில் இனக்கூட்டங்களை அடையாளம் காணும் முயற்சிக்கு வழிவிட்டது. இந்தோ-அய்ரோப்பிய, இந்தோ-ஆர்ய மொழிக் குடும்பங்கள் என்ற கருத்தியலின் பின்னணியில் அய்ரோப்பாவில் எல்லை தாண்டிய பேரினவாதம் கருத்துரு பெற்றுக்கொண்டிருந்த நிலையில் எதிர் நிலையில் பிறிதொரு இனக்கூட்டத்தினையும் கண்டறியும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இந்தியத்துணைக் கண்டத்தில் தென்னக வரலாற்றினை காலனிய அதிகாரிகளும், மிசினரிமார்களும் எழுதும் முயற்சி மேற்கொண்டனர்.

தென்னகத்தில் இனம், மொழி பற்றிய ஆய்வு மேற்கொள்ளப் பட்டுள்ளபோதே அகழாய்வு முயற்சிகளும், கல்வெட்டுப் படியெடுப்புகளும் பழந்தமிழ் இலக்கியங்களைப் பதிப்பித்தலும் மேற்கொள்ளப்பட்டன.1 இவற்றின் அடிப்படையில் எழுதும் வரலாற்றில் மேலைத்தேயத்து வரலாற்றாசிரியர்களின் விதந்தோதும் பாணி பேணப் பட்டதால் இனம் பற்றிய சுயமதிப்பீட்டில் பெருமை பேணுதல் பின்பற்றப்பட்டது. வளர்ந்துவரும் இந்திய தேசிய விடுதலைஇயக்கச் சூழலில் எஸ்.கி.அய்யங்கார் 1916-இல் இந்தியவரலாற்றில் தென்னிந்தியாவின் பங்கு என்ற தலைப்பில் கல்கத்தா பல்கலைக்கழகத்தில் உரை யாற்றினார். இதற்குப் பிறகே இந்திய வரலாற்றில் தமிழகத்தின் பங்கு கவனம் பெறத்துவங்கியது. இந்தியப் பொதுக் கூறுகளுக்குள்ளும், உலகின் பொதுக் கூறுகளுக் குள்ளும் தமிழகத்தின் தனித்த கூறுகள் இனம் காணப் பட்டன. இந்தியாவின் பொது நீரோட்டத்தில் வரலாறு தொடங்கும் காலத்திலேயே தமிழகம் கலந்துவிட்டிருந்ததனை பி.எஸ்.சுப்பிரமணி சாஸ்திரி செம்மொழிப்பாக்களையும், சமஸ்கிருத இலக்கியங்களையும் பகுத்தாய்ந்து வெளிக் கொணர்ந்தார்.2

இயற்கையும் மனிதச் சமூகமும்

இயற்கையினைத் தகவமைத்துக்கொண்டு வாழும் சமூகமே வரலாற்றில் தடயங்களைப் பதிக்கிறது. தமிழ்ச் சமூகம் வெவ்வேறு இயற்கைச்சூழலைத் திணை என்று பகுத்தறிந்து அந்நிலைகளுக்குத்தக்கபடி சமூக நிகழ்வு களை நிறுவனப்படுத்தியுள்ளது. இயற்கையே பண்பாட்டுக் கூறுகளை நிர்ணயித்துள்ளது. இக்கூறுகள் அன்றாடப் பழக்க வழக்கங்களில் பிரதிபலித்துள்ளன. காட்டாக, இறப்புச் சடங்கு. இக்கூறு நிலப்பரப்பியலின் தன்மைக்கேற்ப வெளிப் படுத்தப்பட்டுள்ளது. இப்படித் தமிழகத்தின் கிழக்கில் மணற்பாங்கான நிலப்பகுதிகளில் இறந்தோரை மண் தாழிகளில் இட்டுப் புதைத்துள்ளனர்; கருங்கல்மலை களும், கரடுகளும் கொண்ட தமிழகத்தின் வடக்கு, மேற்குப் பகுதிகளில் தரைக்கீழ்க் கல்லறைகளை உருவாக்கி இறந்தோரை இட்டுள்ளனர். இதனை நெய்தல், குறிஞ்சி- முல்லைத் திணைகளிடையேயான வேறுபாடுகள் என்று கருதினாலும், இருவேறு இனக்கூட்டங்களிடையேயான பண்பாட்டு வேறுபாடுகள் என்றும் கருதவேண்டியுள்ளது.3 இப்புதைகுழிகளில் கிடைத்த மிகுமதிப்பு கொண்ட பொருள்களின் அடிப்படையில் இவை பெரும்பாலும் அல்லது பொதுவாக இனக்குழுக்களின் தலைவர்களுக்கே இவ்வைப்புகள் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும் என்று கருதவைக்கின்றன.

புதைகுழிகளில் கிடைத்த பொருள் களின் அடிப்படையில் சில வரலாற்றுக் கூறுகளை அறியலாம். இரும்புக்கருவிகளும், மிகுமதிப்பு கொண்ட பலநிறமணிகளும் கற்களும், பல வடிவங்கள், அளவுகளில் கிடைத்த மட்கலங்களும், நெல்மணிகளின் உமி இன்ன பிற பொருள்களும் வேளாண் சமூகக்கூறுகளை வெளிப் படுத்துகின்றன. இருந்தாலும், வேட்டைச்சமூகம் வேளாண் சமூகமாக மாறிவரும் காலகட்டத்தினை பிரதிபலிப்ப தாகவும் கருதலாம். இரும்புமுனைக் குத்தீட்டிகளும், வேட்டைக்கான பிறவகைக் கருவிகளும் இதனை உறுதிப்படுத்துகின்றன.4 இதுபோன்ற இரும்புக் கருவிகளே பானையோடுகளில் எழுத்துகளைப் பொறிக்கப் பயன் பட்டிருக்கும். இவை நன்கு வளர்ந்த இரும்புத்தொழில் நுட்பம் இன்றி நிகழ்ந்திருக்காது. இச்சூழலில்தான் ‘காடு கொன்று நாடாக்கிக் குளம்தொட்டு வளம்பெருக்கி’ என்ற பட்டினப்பாலைப் பாடல் வரிகளைக் கவனத்தில் கொள்ள வேண்டும். தொடக்கத்தில் குறிஞ்சித் திணையில் எரிபுனச் சாகுபடியினை மேற்கொண்டிருந்த பழந்தமிழர், பாசனச் சாகுபடிக்காக மருதத்திற்குத் திரும்பி கையில் உழு கருவிகளைச் செய்தற்குக் கொல்லர்கள் தேவைப் பட்டிருப்பர். இவ்விடத்தில் கொல்லர்க்குக் கடனே என்ற செம்மொழிப்பாடலை நினைவுகூர வேண்டும்.5

வரலாற்றுச்சான்றுகளும் செவ்வியல் இலக்கியங்களும்

எழுத்துச்சான்றுகள் (குறியீடுகள் அன்று) உருவான காலகட்டத்தினையே வரலாற்றுக் காலத்தின் தொடக்கம் என்பர். தமிழர் வரலாறு, வரலாறு பற்றிய எழுத்துச் சான்றுகள் தொல்லியல் சான்றுகளோடு இயைந்து அமைவது ஒரு சிறப்பு. இலக்கியச் சான்றுகளில் உள்ள பதிவுகள் கல்வெட்டுச்சான்றுகளிலும், தொல்லியல் சான்றுகளான புதைகுழிகளில் கிடைத்த பானையோடு களிலும் காணக்கிடைக்கின்றன. இதனடிப்படையில் இம்மூவகைச் சான்றுகளின் ஒத்த தன்மைகளையும் ஒப்பிட்டு இலக்கியச் சான்றுகளின் காலவரையறையினை உறுதிப்படுத்தலாம். இம்மூவகைச் சான்றுகளும் ஒரே மாதிரியான சமூகக்கூறுகளை வெளிப்படுத்துகின்றன.6 ஆனால், இம்மூவகைச் சான்றுகளையும் உருவாக்குதற்கு ஒரு தொழில்நுட்பம் தேவை. அதுவே உலோகம். தமிழகம் பொருத்து அது இரும்புக்காலம்.

வரலாறும் தொழில்நுட்பமும்

வரலற்றுச் சம்பவங்கள் என்பன இருவர்க்கங்களுக்கு இடையேயான சண்டைகள் என்பதனையும், வரலாறு என்பது மனிதனுக்கும் இயற்கைக்கும் இடையேயான உறவு என்பதனையும் ஏற்றுக்கொண்டால் இவ்விரண்டும் தமிழக வரலாற்றில் நடந்தேறின என்று அறிய வேண்டும். வரலாற்றுத் தொடக்க காலத்தில் இவை நிகழ்ந்துள்ளன என்பதற்குச் சான்றுகள் உண்டு. இயற்கையுடனான தம் உறவினைத் தமிழர்கள் இருவகையில் வெளிப்படுத்தி யுள்ளனர். இதுவே முன்பு சொல்லப்பட்ட இறந்தோரைப் புதைக்கும் இருவகைப் பண்பாட்டுக் கூறுகளாகும். ஆனால், இவையிரண்டுமே நீராதாரங்களின் அருகே அமைக்கப்பட்டன. ஆனால், இவை முன்பே சொன்னபடி குலத்தலைவர்களுக்கே உருவாக்கப்பட்டுள்ளன. இப்படி இரும்புத் தொழில்நுட்பம் உயர்நிலைச் சமூகங்களை வெளிப்படுத்துதற்கே பெரிதும் பயன்படுத்தப்பட்டுள்ளது. தொழில்நுட்பம் தனிப்பட்ட முறையில் ஒரு மனிதனுக்கும், பொதுநிலையில் ஒருசமூகத்திற்கும் அதிகாரத்தினைப் பெற்றுத் தரும் என்பது இயல்பு.7

செம்மொழியும் மேட்டுக்குடியும்

செம்மொழிப்பாக்களை இயற்றியோர் பலர் மேட்டுக்குடிச் சமூகத்தினைச் சார்ந்தவர் என்பதனை அவற்றை இயற்றிய ஆசிரியரின் பெயர்கள் உறுதிப்படுத்து கின்றன. பல புலவர்கள் வணிகர்களாகவும், ஆசிரியர் களாகவும், தொழில்நுட்பம் அறிந்த கொல்லர்களாகவும், பொற்கொல்லர்களாகவும் இருந்துள்ளனர். அறுவை வாணிகன், பொன்வாணிகன், கூலவாணிகன் என்ற இலக்கியப் பெயர்களும், அறுவைவணிகன், பணித வணிகன், கொழுவணிகன் என்ற கல்வெட்டுப் பாடங்களும் இவற்றை உறுதி செய்கின்றன. பல புலவர்கள் நிலவுடை மையினையும், சமூகத் தலைமையினையும், அதிகாரத் தினையும் வெளிப்படுத்தும் கிழார் என்ற பட்டத்தினால் சுட்டப்பட்டுள்ளனர். ஆசிரியன், பாலாசிரியன், கணக் காயன் என்ற பெயர்களில் அறியப்பட்ட புலவர்கள் மொழியாளுமையில் புடம்போட்டவர் என்பதனை விளக்குகின்றன. மேற்சொன்னவர்கள் வளம்பொருந்திய புலவர் கூட்டத்தினைச் சார்ந்தவர்கள் என்பதனையே அப்பெயர்கள் உறுதிசெய்கின்றன.8

வாய்மொழி இலக்கியத்தினைச் செம்மொழி இலக்கியமாக மாற்றுதற்கு அதிகாரம் கொண்ட மேட்டுக் குடியினர் புலவர் கூட்டமொன்றினை உருவாக்கினர். செம்மொழி இலக்கியத்தினை நுட்பமாக்குதற்கென்றே யாப்பறிபுலவர் குழு ஒன்று இயங்கியுள்ளது. யாப்பறி புலவர், யாப்பின் வழியது என்மனார் புலவர், மொழிப் புலவர், உயர்மொழிப்புலவர் என்ற தொடர்கள் மொழி யினைச் சீரிய முறையில் கையாளும் அல்லது வாயாளும் புலவர் குழாத்தினை விளக்குவதாக அறியலாம். இக் கூற்று இன்னொரு முனையில் யாப்பறிபுலவர் கூட்டத் தினைச் சுட்டுகிறது என்று கருதலாம். சொல்லியல் புலவர், என்ற தொடரினை one who is expert on semantics என்று பொருள் கொள்ளலாம். இத் தொடர்கள் செம்மொழி யுருவாக்கத்தினை விளக்குவதாயுள்ளன. இச் செம்மொழியின் பலகூறுகளையும் முதுமொழி, மறை மொழி, பொதுமொழி, இனமொழி, பொய்ம்மொழி, நகைமொழி, செய்யுள்மொழி, போன்ற தொடர்கள் பிரதி பலிக்கின்றன. வாய்மொழி இலக்கியம், செம்மொழி இலக்கியமாக மாறிவரும் நிலைகளையே இவை உணர்த்துகின்றன. பின்நாட்களில் நூல் நவில் புலவர் வாய்களில் மணந்த இம்மொழி முன்பு முதுவாய்ப் பெண்டிர்களால் மணம் பெற்றதனை முதுவாய்ப் பெண்டிர், கணிச்சி, முதுவாய்மொழி போன்ற சொற்கள் உணர்த்துகின்றன. இம்முதுவாய் மொழியே யாப்பு மொழியாக மாறும்போது நூலாக்கம் பெறுகிறது. முதுவாய் மொழி, முதுநூல் என்றாகிறது. வாய்மொழி நூல் மொழியாவது ஒரு சமூகமாற்றத்தின் விளைவு. எழுதாச் சட்டம் எழுத்தாக்கம் பெறுவதைப்போன்று.9 

இப்படி வாய்மொழி இலக்கியம் அரசியல் தேவைக்காக, செம்மொழி இலக்கியமாக உருப் பெறுகிறது. இப்போக்கில் மிகக் கவனத்துடன் தெரிவு செய்யப்பட்ட பாடல்களே தொகுக்கப்பட்டிருக்க வேண்டும். அவை காதலையும், வீரத்தினையும் விதந்து ஓதுவதாயுள்ளன. எனவே, அக்காலகட்டத்தினை வீர யுகமாகவும், காதல்யுகமாகவும் பார்த்தனர்.10 மேட்டுக் குடிக்காக வீரச்சாயல்கள் பதிவுசெய்யப்பட்டன. அதற்கு வீரர்களின் மரணம் தேவைப்பட்டது. மேட்டுக்குடியின் காதல்கண்மணிகளுக்குக் காதலிப்பதற்கு வரையறைகள் வகுக்கப்பட்டன.11

வீரயுகம்

செம்மொழிப்பாக்களில் வீரம் செறிந்த தனிநபர்கள் புகழப்பட்டனர். அதற்கான தேவை அரசுருவாக்கத்தில் நிகழ்ந்தது. உலக வரலாற்றில் வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு நிலப்பரப்பியலில் நிகழ்ந்த வீரச்சம்பவங்களின் பின்புலத்தில் தமிழ்ப்பாக்களின் கூறுகள் அறியப்பட்டன. இப்பாடல்களின் இரு முக்கிய கூறுகளாக, புகழும், நாணமும் அறியப்பட்டுள்ளன. நாணமுள்ளவரே போரிட்டுச் சிறப்பர் என்பதும் அவர்கள் புகழினை விரும்புபவர் என்றும் அறியப்பட்டுள்ளது. வீரம் விதந்தோதப்படுவதும், அவ்வீரம் அரசுருவாக்கத்திற்குத் தேவைப்பட்டுள்ளது என்பதனையும் ஊகிக்கலாம். வீரத்துடன் போரில் இறந்தோர் போற்றப்பட்டனர். அதற்கு மறுபிறப்பு என்ற கொள்கை தேவைப்பட்டது. அதற்கான நீட்சியாக மேலோருலகம் என்ற கருத்தும் தேவைப்பட்டது. இவ்விரண்டினையும் இந்தியமயமாதல் என்ற பின்னணியில் வடபுலத்துச் சமய நம்பிக்கையில் இருந்து வாங்கிக்கொண்டன. தொடக்ககால இலக்கியங் களில் போரில் மடிந்தவர்களின் வீரம் புகழ்ந்து பேசப்பட, போகப்போகக் கடவுளர்களின் சினம் புகழப்பட்டது.12 சூரனைக் கூறிட்ட முருகனும், கோடரிக்கொலையாளி பரசுராமனும் போற்றப்பட்டனர். இப்போரும் புகழும் இயல்பாகவே அரசுருவாக்கத்திற்குத் துணைநின்றன.

அரசு

செம்மொழிப்பாக்களில் உள்ள நாடு கிழவோயே, மலை கிழவோயே, களம் கிழவோயே என்ற தொடர்கள் ஒரு குறிப்பிட்ட நிலவட்டத்தினை மையமிட்டு அதிகார மிக்கதலைவர்கள் எழுந்து இயற்கை வளத்தினைத் தம் கட்டுக்குள் இருத்திக்கொள்ள முற்பட்டனர் என்பதை உணர்த்துவன. இது ஒரு குறிப்பிட்ட திணைப்புலம் தம் இயற்கை வளத்தினை ஒரு தலைவரின்கீழ் இயங்கத் தலைப்பட்டதனை உணர்த்துவதாக அறியலாம். ஆர்ப்புடை ஊரே, மாறுபடு ஊரே, ஓம்புமூரே என்ற தொடர்கள் ஊர் என்ற உற்பத்திஅலகு முறைப்படி இயங்கத்தலைப்பட்டன என்பதனை உணர்த்தும்.13 ஊர்கள், நிலைபெற்ற வேளாண் சமூக இருக்கைகளாக மாறுவதனை இப்போக்கு விளக்குகிறது. இப்பின்னணியில் தான் கானாடு, கோனாடு என்ற சொற்களையும் கருத வேண்டும். காடுகள் நாடுகளாக மாறுகையில் அவற்றுக்கான அரசுத்தலைமைகள் வேளாண்மைக்கான நீரினை விடவும், அதனால் விளைந்த நெல்லினைவிடவும், உயர்ந்தோராக அறியப்பட்டனர். நெல் பற்றி ஒரு பழந்தமிழ்க் கல்வெட்டு பேசுகிறது. நெல் உமி, அகழாய்வில் கிடைத்துள்ளது.14 காடு நாடாகி விளையும் அமைப்புகள் கோவின் கை களுக்குள் வருகையில் அவர்களுக்கும், மக்களுக்கும் இடையிலான உறவினை இலகுவாக்குதற்கு ஒரு பேச்சாளர் தேவைப்படுகிறது. அவரே பாணர் என்றும் புலவர் என்றும் செவ்வியல் மரபில் அறியப்பட்டுள்ளனர். பாரிக்குக் கபிலர் என்ற புலவரும், அதியமானுக்கு அவ்வை என்ற பாடினியும் அமைந்தனர்.15 இருவரும் இரு தலைமுறைகளை வழிநடத்தியுள்ளனர். இப்படி குறுநிலவட்டத்தினை ஆளும் குலத்தினர் பாணர் களுக்கும், புலவர்களுக்கும் புரவலராய் இருந்தது போல் புதிதாக எழுந்த வம்ப வேந்தர் என்ற மூவேந்தர் தங்களுக்கான அறிந்தேற்பினைப் பெறுதற்கு அந்தணர் கொண்டு வேள்வி செய்தனர். இது ஒரு வகையான சமூக மாற்றம்.16

வேதம், வேள்வி, அந்தணர் பற்றிய செம்மொழிப் பாக்கள் பிறிதொருவகையான சமூக அமைப்பினை விளக்குவதாயுள்ளன. வேதம், அந்தணர் முதுமொழி, மாயா வாய்மொழி என்றும் எழுதாக்கற்பு என்றும் சுட்டப்பட்டுள்ளது. இச்சொற்கள் தொடக்கத்தில் வேதம் நூலாக்க நிலையில்லாமல் வாய்மொழி நிலையில் ஓதப்பட்டு வந்ததனை விளக்குகின்றன. முது நூல் என்ற சொல் வேதம் எழுதப்பட்ட நிலையினை உணர்த்தும். இச்சொற்கள் பதிக்கப்பட்ட பாடல்களின் அடிப்படையில் அவற்றின் காலத்தினை நிர்ணயிக்கத் துணியலாம். வேள்விகளை நடத்தியவர் வேள்வியந்தணர் என்றும், வேள்விமுடித்த கேள்வியந்தணர் என்றும், நான் மறையோர் என்றும் சுட்டப்படுகின்றனர்.17 வடபுலத்துக் கடவுளர்கள் பற்றிக்கூறும் பாடல்களைவிட வேதங்கள், வேள்விகள் பற்றிய பாடல்கள் காலத்தால் முந்தியதாக இருத்தல் வேண்டும். தொடக்கத்தில் கடவுளர்கள் மறை முகமாகப் பாக்களில் சுட்டப்படுகின்றனர்.

வேள்வி முதல்வன், நூற்றுமெய்நயனத்தவன், ஈர்ஞ்சடையந்தணன், பிறங்கு நீர்ச்சடைக்கரந்தான், பால்புரைபிறைநுதற் பொலிந்த சென்னி, கொலைவன் சூடிய குவித்திங்கள், முக்கட்செல்வர், முக்கண்ணான், கண்மூன்றுடையான் போன்ற சொற்களால் சிவன் சுட்டப் படுகிறான். கணிச்சி மணிமிடற்றோன் என்றும், நீலமணி மிடற்றோன் என்றும் சுட்டப்படுகிறான். அரும்பெறல் ஆதிரையன் என்று சிவனின் பிறப்பு நட்சத்திரத்தினைச் சுட்டும் பாடல் காலத்தால் பிந்தியதாக இருக்க வாய்ப்பு உண்டு. நான்மறை முதல்நூல், முக்கட்செல்வன் என்ற பெயர் பதிக்கப்பட்ட பாடல் இசைவடிவில் அமைந்த பாடல்கள் எழுத்துவடிவம் பெற்று நூலாக்கம் பெறும் காலத்தில் எழுதப்பட்டதாகக் கருதலாம். மேற்சொன்ன பாடல்களில் சிவன் தனித்துச் சுட்டப்படுவதால் அப் பாடல்களைக் காலத்தால் முந்தியவை எனலாம். உமையடு புணர்ந்த காமவதுவையுள், உமையமர்ந்து விளங்குமிமைய முக்கணன், புங்கமூர்வோன் என்று சுட்டும் பாடல்கள் காலத்தால் பிந்தியவை எனலாம்.18 இவ்விருவகைப் பாடல்களும் இரு வெவ்வேறு வகையான சமூகக் கட்டமைப்பினைச் சுட்டுவதாகக் கொள்ளலாம்.

தமிழகமும் இந்தியமயமாதலும்

வரலாற்றின் தொடக்க காலத்திலேயே இந்தியத் துணைக்கண்டத்தில் பண்பாட்டுப் பின்னணியில் ஓர் இந்தியமயமாதல் நிகழ்ந்துள்ளது / படர்ந்துள்ளது. சிந்துப் பண்பாட்டின் குறியீடுகளில் சில தென்னகத்தில் கிடைத்த பானையோடுகளில் காணப்படுகின்றன. இக்குறியீடுகளில் சில பிற்காலத்திய பழந்தமிழ் எழுத்துகளை ஒத்துள்ளன. மேற்சொன்ன இக்குறியீடுகள் வடக்கத்திய பிராமி எழுத்துகளுக்கும், பழந்தமிழ் எழுத்துகளுக்கும் முன் மாதிரிகளாக இருந்திருக்கலாம். இவை, பெரும்பாலும் முத்திரைகள், நாணயங்கள், பனையோடுகளில் உள்ளன. எனவே, இவற்றை வணிகத்தோடு தொடர்புடையதாகக் கருதவேண்டும். என்றால், சிந்துப் பண்பாட்டின் வணிகத் தொடர்ச்சி தென்னகம்வரை நீண்டிருக்க வேண்டும். இதனை இக்குறியீடுகள் நிறைந்துள்ள ஊர்கள் பெரும் பாலும் வணிகத்தளங்களாக அமைந்திருப்பதின் அடிப் படையில் உறுதி செய்யலாம். இக்குறியீடுகள் கொடு மணல் மண்ணடுக்கின் கீழ்த்தளத்தில் பெரிதும் கிடைத்து மேல்தளத்திற்கு வர வர எண்ணிக்கை குறைவதாலும் இவை குறையக் குறைய, பழந்தமிழ் எழுத்து வடிவங்கள் அதிகரிப்பதாலும் இவற்றைப் பழந்தமிழ் எழுத்துகளுக்கு முன்மாதிரி எனலாம். முன்சொல்லப்பட்ட குறியீடுகளை ஒத்த எழுத்து வடிவம் கொண்ட இரு சொற்கள் கோ என்றும் அதன் என்றும் படிக்கப்பட்டுள்ளன. இவ்விரு சொற்களும் ஒத்த காலத்திய பாறைக்கல்வெட்டுகளிலும் பதிக்கப்பட்டுள்ளன. இது ஒரு வரலாற்றுத் தொடர்ச்சி யினைக் காட்டும்.19 இத்தொல்லியல்கூறு இலக்கியத்தின் காலத்தினையும், பாறைக்கல்வெட்டின் காலத்தினையும் கணிக்கப் பயன்படும். எடக்கல் கல்வெட்டில் உள்ள கடுமிபுதோ என்ற சொல் அசோகர் கல்வெட்டில் உள்ள சதியபுதோ என்ற சொல்லோடு ஒப்பிடப்பட வேண்டும். இவ்விரு சொற்களும் வெவ்வேறு இனக்குழுக்களின் வழித்தோன்றல்களை அல்லது குடும்பங்களைச் சுட்டுகின்றன என்று கருதலாம்.20

இருவிதமான இந்தியமயமாதல் தமிழகத்தில் நடந்தேறியுள்ளது: (1) வைதீகமயமாதல் (2) அவைதீக மயமாதல். செம்மொழி இலக்கியத்தில் சுட்டப்பட்ட வேதம், வேள்வி, கடவுளர்கள் பற்றிய குறிப்புகளிலும் முருகு-சுப்ரமணியர் ஒருங்கிணைவு போன்றவையும் தமிழகம் இந்தியமயமாதல் என்ற பின்னணியில் வைதீக மயமானதனை விளக்குகின்றன. சமணம் தொடர்பான கல்வெட்டுக் குறிப்புகள் சமணத்துறவிகளுக்குக் குகைத் தலங்கள் அமைத்துத்தந்த தமிழர்கள் அவைதீக இந்திய மயமாதலை வரவேற்றனர் என்பதனையும் விளக்கும்.

குறிப்புகள்

1.            இந்திய வரலாறு பற்றிய ஆய்வு இந்தியத்துணைக் கண்டத்தினை ஆள்வதற்கு முயற்சிக்கும் நிலையில் பிரிட்டிஷ் அலுவலர்கள் சட்டவரையறைகளை உருவாக்குதலில் தொடங்கியது. அதனால் அவர்களுக்கு இந்திய மொழிகளில் உள்ள இலக்கியங் களைக் கற்கும் தேவை எழுந்தது. கல்கத்தாவை மையமாகக்கொண்டு இயங்கிய அலுவலர்களுக்கும், சென்னையை மையமாகக்கொண்டு George Fort--இல் இயங்கிய அலுவலரான F White Ellis அவர்களுக்கும் இதில் கருத்துவேறுபாடு உண்டானது. அவரிடம் ஆரியர் என்ற கருத்திற்கு எதிரான ஆரியரல்லாதார் என்ற சிந்தனை இருந்ததாகக் கணிக்கப்படுகிறது ( Donald R .Davis Jr, Law in the Mirror of Language: The Madras School of Orientalism on Hindu Law in Madras School of Orientalism : Producing Knowledge in Colonial South India (ed) Thomas Trautman, OUP, 2009). F White

Ellis மொழிக்குடும்பங்களின் அடிப்படையில் இந்தியாவினை வடக்கு தெற்காகப் பிரிக்கிறார் என்று அறியமுடிகிறது. இதன் தொடர்ச்சியாகவே கல்கத்தாவின் தர்மசாஸ்திர மொழிபெயர்ப்பிற்கு மாற்றாக திருக்குறள் மொழிபெயர்ப்பினைக் காண வேண்டியுள்ளது. William Jones சமஸ்கிருதத்தினை கிரேக்கம், லத்தீன் போன்ற மொழிகளை விடவும் மேன்மையானது என்று கணிக்க, மாற்றாக F. White Ellis திராவிட மொழிகளின் பின்னணியில் தமிழை உயர்த்தியிருக்கலாம். இதன் தொடர்ச்சியாகவே Robert Caldwell, G U Pope போன்ற பாதிரி-அறிஞர்களின் இயக்கத்தினைக் கருதவேண்டும். இவ்விருவருமே Irishகாரர்கள். அன்றைய அயர் லாந்தின் விடுதலைப் போராட்டத்திற்கு ஆசிய நாடுகளின் ஆதரவினைத்தேடும் முயற்சியாக திராவிடக் கருத்தினையும், தமிழினை வணங்கும் முறையினையும் கையாண்டிருக்கலாம். காங்கிரசுடன் கைகோத்த அன்னிபெசண்டும், இந்திய விடுதலைக்கு முக்கிய பங்காற்றிய மவுண்ட் பேட்டனும் Irish காரர்களே. இவ்வரசியல் கலந்த அறிவுசார் சூழலில் தான் தமிழ்ச் செம்மொழி இலக்கியத்தினைச் சான்றாக வைத்து விதந்தோதும் முறை தமிழாய்வில் அரும்பியிருக்கக் கூடும்.

2.            மேலைநாட்டுக் கல்விமுறையில் பயின்ற தமிழறி ஞர்கள் மேலைநாட்டு வரலாற்றினை விதந்தோதும் முறையில் எழுதப்பட்ட நூல்களைக் கற்றதன் விளை வாகத் தாம் எழுதிய நூல்களில் மேலைநாட்டு வரலாற்றினை imitate செய்தனர். ஒரே சமயத்தில் தமிழர் பண்பாட்டுக்கூறுகளை வடபுலத்திற்கு எதிராகவும், மேலைப்பண்பாட்டிற்கு இணையாகவும் நிறுத்த முயன்றனர். இப்பின்னணியில்தான் V.Kanakasabhai செம்மொழி இலக்கியங்கள் எழுதப்பட்ட காலத்தினை Augustan age உடன் ஒப்பிட்டார். Augustan age ரோம் நாகரிகத்தின் பொற்காலம் என்று அறியப்பட்டது. செம்மொழி இலக்கியங்கள் பதிக்கப்பட்டுக்கொண்டுள்ள காலத்திலும், முற்றாக பதிப்பு முடிந்த பிறகும் அவற்றின் அடிப்படையில் எழுதப்பட்ட ஆய்வு நூல்களில் பன்மொழிப்புலமை கொண்ட பேரா சிரியர்கள் ச.வையாபுரிப்பிள்ளை, பி.எஸ்.சுப்பிர மணிய சாஸ்திரி போன்றோரின் ஆய்வுகள் அறிவியல் உத்தியுடன் எழுதப்பட்டவையாகக் கருதலாம். இன்னொருபுறம், இவ்விலக்கியங்களை வெகுசனப்படுத்தி திருக்குறள்மாநாடு, பத்துப் பாட்டு மாநாடு போன்றவையும் நடத்தப்பட்டன. ஒருபுறம் தமிழரின் தனித்த அடையாளத்தினையும், மறுபுறம் பொது நீரோட்டத்தில் அதன் இருப் பினையும் அடையாளம் காணும் முயற்சியும் நடந்தது. இதில் வரலாற்று ஆசிரியர்கள் ஒருபுறமும், மொழியாசிரியர்கள் மறுபுறமும் இயங்கினர். செம்மொழியினை மையமிட்டுச் செய்யப்பட்ட ஆய்வுகள் தனிநபரின் தூற்றுதலுக்கு இழுத்துச் சென்றது.

3.            பிறப்புச் சடங்கு, இறப்புச் சடங்கு, கடவுள் வழிபாடு மற்றும் திருமணச் சடங்குகள் ஒரு மக்கள் கூட்டத்தின் / இனக்குழுவின் தனித்த அடை யாளங்கள். செம்மொழி இலக்கியங்கள் வேறு வேறு இறப்புச் சடங்குகளை விளக்குகிறது. இதனை வேறு வேறு ecology-இல் வேறு வேறு மக்கள் வாழ்ந்தனர் என்று கருத வேண்டும். பார்க்க: கி.இரா.சங்கரன், இரும்புக் காலமும் சங்க இலக்கியமும், உங்கள் நூலகம், 2013.

4.            புதைகுழிகளில் வேட்டைக்கருவிகள், வேளாண் கருவிகள், உமி போன்ற நெல்மணிகளின் எச்சங்கள் கிடைப்பதால் அவற்றின் உற்பத்தி இனக்குழுத் தலைவர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது என்று கருதலாம். வேட்டைச் சமூகமும், வேளாண் சமூகமும், வணிகச்சமூகமும் கலந்த ஒரு பொருளியல் வாழ்க்கை யினைப் புதைகுழிச்சான்றுகள் விளக்குகின்றன. மிக அண்மைக்காலம் வரைக்கும் தமிழகத்தில் வேட்டைச் சமூகமும், வேளாண்சமூகமும் அருகருகே இயங்கின. வரிச்சியுர் பழந்தமிழ்க் கல்வெட்டு ஒருகல நெல் என்ற சொல்லைப் பொறித்துள்ளது.

5.            செம்மொழிப் பாக்களை இயற்றியோர் அரசுரு வாகும் சமூகச் சூழலில் ஒரு கருத்தியலை உரு வாக்கியுள்ளனர். ஆள்வோருக்கும், வீரர்க்கும், அவர்களைப் பெற்றோருக்குமான கடமைகளை வலியுறுத்தியுள்ளனர். இக்கருத்துருவாக்கம் சமூகக் கட்டமைப்பில் புலவருக்கு இருந்த பங்கினை விளக்குகிறது. இக்கருத்தியல் இரும்பு என்ற உலோகம் வளமையான பயன்பாட்டிற்கு வந்த பின்னரே உருவாகியிருக்க வேண்டும். புலவரின் கருத்துரு பின்வருமாறு அமைந்துள்ளது

நபர்      கடன்

தாய்    ஆண் பிள்ளையினைப் பெற வேண்டும்          

தந்தை              மகனைச் சான்றோனாக்குதல் வேண்டும். அதாவது நாணுடை மறவர் என்னும் போர் வீரர்

கொல்லர்       போருக்கான கொலைவேலினைச் செய்தல்              

வேந்தன்        போரிட்ட வீரர்க்குப் பரிசளித்தல்

இவற்றையெல்லாம் கற்பித்தல் பாண் கடன் எனப்பட்டது.

6.            கி.இரா.சங்கரன், இரும்புக்காலமும் சங்க இலக் கியமும், உங்கள் நூலகம், 2013.

7.            வட இந்தியாவில் இரும்பின் பயன்பாடும், குதிரையின் பயன்பாடும் ஒரு தொழில் நுட்பமாக பரிணமித்த பிறகே அரசுகள் தோன்றின; தென்னிந்தி யாவிற்கும் குதிரைகள் வந்திறங்கியதனைப் பட்டினப்பாலை சுட்டுகிறது. குதிரையின் பயன் பாட்டினை வலியுறுத்தியே பல்லவர்கள் அஸ்வ மேத யாகம் நடத்தியதாகச் செப்பேட்டில் பதித்திருக்க வேண்டும். ஆனால், குதிரையுருவச் சிற்பங்களை பல்லவர் கட்டடக்கலையில் காணமுடியவில்லை. ஆனால், இரும்புத்தொழில் நுட்பம் இன்றிப் பல்லவர் குகைக் கோயில்களை அமைத்திருக்க முடியாது; பாசனத்திற்கான ஏரிகளையும் தோண்டியிருக்க முடியாது.

8.            கி.இரா.சங்கரன்,2013.

9.            கி.இரா.சங்கரன், 2013.

10.          உலகின் வேறு வேறு காலகட்டங்களில் வேறு வேறு திணைப்புலங்களில் இயற்றப்பட்ட பாடல்களின் வீரயுகக் கூறுகளுக்குள் செம்மொழிப்பாக்களை க.கைலாசபதி பொருத்திப் பார்த்தார். அகப்பாடல் களையும் ஆய்விற்கு எடுத்துக் கொண்டார். வ.சுப. மாணிக்கம், அகப்பாடல்கள் பாலியல் கல்விக்கு இயற்றப்பட்டதென முன்மொழிந்தார். செம் மொழிப் பாக்களை Heroic Poetry என்றும் Love Poetry என்றும் சொல்வதைவிடவும் standardized poetry of primitive society என்று வரையறுக்கலாம். 

11.          வெவ்வேறு திணைப்புலங்களின் ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையில் இயல்பாக அரும்பிய காதலைச் செம்மொழிப்பாக்கள் பதிவு செய்ய, தொல்காப்பியம் சமூக பொருளியல் நிலையில் சம அந்தஸ்து உள்ள கிழவனுக்கும், கிழத்திக்கும் இடையே ஊழ்வினையால் காதல் உண்டாகும் என்று ஆரூடம் சொல்கிறது(1039). களவொழுக்க உணர்வினையும், தலைவனின் இயல்பினையும் புலவர்கள் வரையறுத்துள்ளனர் (1047). காதலில் தலைவிக்கென்று சில கட்டுப்பாடுகளைத் தொல் காப்பியர் விதிக்கிறார் (1056; 1057).

12.          போரிடும் வீரருக்குச் செம்மொழிப்பாக்கள் நாணம் என்ற குணத்தினை ஊட்டுகிறது. நாணத்திற்கு அஞ்சி வீரர்கள் வினை எய்துவர் என்று எதிர்பார்க்கப் பட்டது. அவர்கள் நாணுடை மறவர் எனப்பட்டனர் (அகம்:67, 387). புகழ் பலவகையில் சுட்டப் பட்டுள்ளது. வீரர்கள் புகழெனின் உயிருங் கொடுக்குவர் (புறம்:182) என்று உசுப்பேற்றப் பட்டனர். இப்புகழ், வான்புகழ். விண்புகழ், வியங்கு புகழ், நின்புகழ் என்று பலவாறாகச் சுட்டப்பட்டுள்ளது. விண்பெரு புகழ் (புறம்:116) என்ற தொடரும், புகழெனின் உயிருங் கொடுக்குவர் (புறம்:182) என்ற தொடரும் யாருடைய நலத்திற் கென்று புலவர் இயற்றினர். இதனையே காலத்தால் பிந்திய பதிற்றுப் பத்து (பதிற்று:37) வான்தோய் நல்லிசை என்று இயம்புகிறது. போரில் மாண்ட வீரனை, அவன் தேவர் உலகம் எய்தினான் என்று (புறம்:228) புலவர் வாழ்த்தியுள்ளார். இதனைப் புலவர் புகழ்ந்த நாண் (அகம்:227) என்று ஒரு பாடல் வரையறுக்கிறது. முருகன் சினம்மிகு முருகன் (அகம்:59) என்றும் செருமிகு சேய் என்றும் (149) சுட்டப்படுகிறான். பெண்ணுக்கு உயிரினும் சிறந்தது நாணம் என்று தொல்காப்பியம் (1059 ) பாடம் நடத்துகிறது.

13.          ஊர் என்ற வேளாண் இருக்கைகள் உற்பத்தி அலகு களாக உருப்பெற்றுவிட்டன என்பதனையே இச் சொற்கள் காட்டும். படிநிலை கொண்ட சமூகம் அங்கு இயங்கியுள்ளதனையும் வெளிப்படுத்தும். இது கூட்டுடைமையின் வெளிப்பாடாகும். Egalitarian society உடைபட்டு இனக்குழுத்தலைவரின் கீழ் ஒரு குறித்த நிலப்பகுதியின் மக்கள் இயங்கி யுள்ளதனைக் குறிக்கும் எனக் கொள்ளலாம். ஒரு நிலையான வாழ்க்கைக்கு மக்கள் திரும்புவதனைச் சுட்டும் என்றும் கொள்ளலாம். 

14.          கோ நாடு என்பது அரசுக்கு /ஆட்சிக்கு உட்பட்ட நிலப்பகுதி (ruled territory). ஆட்சிப்படிநிலை கொண்ட சமூகக் கட்டமைப்பு இயங்கும் தளம். கா நாடு அரசுக்கு உட்படாத egalitarian society யை உள்ளடக்கிய படிநிலைச்சமூகமற்ற நிலப்பகுதி என்றும் கருதலாம். நெல்லும் நீரும் உயிரன்று மன்னனே உயிர் (புறம்:189) என்றொரு பாடல் ஆட்சியரின் உயர்நிலையினை விளக்குகிறது. அன்றாட வாழ்விற்குத் தேவையான நீரும், நெற் சோறோடு கலந்துண்ணும் உப்பும் கூட ஆளும் மன்னனைவிட உயர்ந்ததல்ல என்று வலியுறுத்தப் பட்டுள்ளது.

15.          அவ்வைப்பாடினி அதியமானுடனும், அவன்மகன் எழினியுடனும் நட்பு கொண்டிருந்தார். கபிலர் பாரியுடனும் அவரின் புதல்விகளுடனும் நட்பு கொண்டிருந்தார். ஒரு புறம் புலவரும், மறுபுறம் பாணரும் ஆட்சித்தலைவர்களுக்கு வழிகாட்டி களாக அமைந்தனர் என்பதுதான் பின்னாட்களில் அரச குலத்தினருக்கு ராஜகுருக்கள் அமைவதற்கு வழிவிட்டது.

16.          வேந்தர்கள் எழத்தொடங்கும்போதே ஆட்சியாளர் களை முன்னிறுத்திய பட்டினப்பாலை போன்ற நெடும் பாடல்கள் இயற்றப்பட்டிருக்க வேண்டும். இவை ஒவ்வொரு வேந்தருக்குமான அறிந்தேற்பினைத் தந்திருக்கும். திணைப்புலம் சார்ந்த சீறூர் மன்னர், குறுநில மன்னர் போன்றோர், புலங்கள் தாண்டிய ஆட்சியர்களாக எழமுடியாத நிலையில் மொழி யினை முன்னிறுத்தி வேந்தர்கள் புலங்களை உட் கொண்ட நிலப்பிரதேசங்களை ஆளும் சிந்தனைக்கு வந்தனர். உச்சாடனமும், சடங்கும் மக்களைத் திரட்டும் சாதனங்களாகும். எனவே, வேத உச்சாடனங்களையும், வேள்விச் சடங்குகளையும் வேந்தர்கள் நிறுவனங் களாகக் கொண்டனர் எனலாம்.

17.          தமிழக வரலாற்றில் பிராமணர், பார்ப்பனர் என்றும், அந்தணர் என்றும் அறியப்பட்டுள்ளனர். செம்மொழிப்பாக்கள், வேள்விச் சடங்கு செய்யும் பிராமணர்குழு ஒருபுறமும் வேதம் ஓதி சடங்கு செய்யும் பிராமணர் இயங்கிவந்ததனை மறுபுறமும் விளக்குகின்றன.

18.          கடவுளர்களைத் தனித்துச்சுட்டும் பாடல்களைக் காலத்தால் முந்தியவை என்றும், இணையுடன் சுட்டும் பாடல்கள் காலத்தால் பிந்தியவை என்றும் நம்பலாம். குடும்பம் ஒரு நிறுவனமாகப் பரிணமிக்கத் துவங்கிய காலகட்டங்களில் இவை போன்ற பாடல்கள் எழுதப்பட்டிருக்கலாம். தமிழக வரலாற்றில் சிவ வழிபாடு தொடக்கத்தில் லிங்கோத்பவர் வடிவிலேயே அறிமுகப்படுத்தப்பட்டது. பல்லவர் காலத்தில் அது சோமாஸ்கந்தர் என்ற நிலைக்குப் படிமலர்ச்சி பெற்றது என்பதனை நினைவுகூர வேண்டும். பெண் கடவுளர்கள்கூட தொடக்கத்தில் தனித்தே சுட்டப் பட்டனர்.

19.          மேய்ச்சல் நிலம் கொண்ட முல்லைத்திணையில் அகழ்ந்தெடுக்கப்பட்ட கொடுமணல் மட்கலத்தில் கோ என்ற சொல் கீறப்பட்டுள்ளது. இச்சொல் ஆயர் குலத்தலைவனைச் சுட்டுவதாகக் கருதலாம். அண்மைக்காலம் வரையிலும் அந்நிலப்பகுதியில் வேட்டைச் சமூகமும், வேளாண்சமூகமும் இயங்கி வந்தன என்பது உண்மை.

20.          கடுமிபுதோ என்ற சொல்லின் முன்னொட்டிலுள்ள கடு என்ற வேர்ச்சொல் கடுங்கோ என்ற பெயர்ச் சொல்லின் முன்னொட்டாக அமைந்ததனைக் கருத வேண்டும். புகளூர்க் கல்வெட்டில் கடு என்ற முன்னொட்டு பதியப்பட்டுள்ளது.

Pin It