sakathevan novelகொங்கு பகுதியைச் சேர்ந்த நாவலாசிரியர் பல ஆண்டுகளாக பெங்களூரில் வசித்து வருகிறார் இந்த நாவலின் தலைப்பு சொல்வது போலவே அவர் அந்திமத்தில் இருப்பதாகக் கருதுகிறார். ஒரு கல்லூரியில் பேராசிரியராகக் பணிபுரிந்து ஓய்வு பெற்றிருக்கிறார். இந்த ஓய்வு வாழ்க்கையை கூடுதல் போனஸாகவே கருதுகிறார்.

இந்தச் சூழலில் பெங்களூர் சார்ந்த அவரின் தனிப்பட்ட அனுபவங்களையும் அவர் சந்தித்த பல்வேறு தரப்பட்ட மனிதர்கள் பற்றியும் கொஞ்சம் குடும்பச் சூழ்நிலை பற்றியும் இந்த நாவலில் எழுதியிருக்கிறார். பெங்களூர் தமிழர்களின் வாழ்க்கைப் போக்கை இந்த நாவலின் பல பகுதிகள் சுட்டிக்காட்டுகின்றன. அதேபோல பெங்களூரில் வளர்ச்சியும் வளர்சிதை மாற்றங்களும் இணையாக வந்து செல்கின்றனர்.

சகதேவன் எழுத்துக்களில் வழக்கமாக இருக்கும் கிண்டல் துளியும் சற்றே நகைச்சுவையும் நாவல் முழுக்க நகைக்க வைக்கின்றன. இந்தக் கிண்டல் குடும்ப வாழ்க்கை சார்ந்த விஷயங்களில் அதிகமாக இருக்கிறது. சக மனிதர்கள் மீதான நேசத்தை கூட்டிக் கொண்டே போகிறது. ஒரு தனி மனித வாழ்க்கையின் விசாரமும் அவரின் குடும்பமும் இந்த நாவலில் விரிவாகச் சொல்லப்பட்டிருக்கின்றன.

கொங்கு மண்ணில் இருந்து இடம்பெயர்ந்தது முதல் பெங்களூர் வாழ்க்கையில் சுமார் 40 ஆண்டுகள் கழிந்தது வரை பல்வேறு அனுபவங்களின் சித்தரிப்பு இந்த நாவல். தனிமனித ஆர்வலர்களால் நிறைந்த இந்த நாவல் பெங்களூர் வாழ் தமிழர்கள் பற்றிய வேறு வகையான சிக்கல்களையும் அடையாள நெருக்கடி நிலையையும் அதிகமாகப் பேசவில்லை. அந்நகரின் 50 ஆண்டுகாலம் சரித்திரத்தில் பல முக்கிய சம்பவங்கள் சில கோடுகளாக வரையப்பட்டிருக்கின்றன. ஆனால் அவை மெலிதான கோடுகளாக இருக்கின்றன. தனிமனித வாழ்க்கையின் அனுபவங்கள் விரிவாக சொல்லப்பட்டிருக்கின்றன.

நாவலாசிரியர் மொழிபெயர்ப்புக்கான சாகித்திய அகாடமியின் பரிசு பெற்றவர். ஒரே ஒரு நாவல் மொழிபெயர்ப்பு செய்தார். இது ஒரே ஒரு நாவல் முயற்சி ஆகக்கூடாது. அவரின் படைப்பிலக்கிய முயற்சிகள் தொடர வேண்டும். அபூர்வமாகத் தென்படும் கட்டுரைகள் மற்றும் அது சார்ந்த முயற்சிகள் தொடர வேண்டும். அவர் தொடர்ந்து இலக்கிய முயற்சிகளில் இருக்கிறார் என்பதுவும் ஆறுதலைத் தருகிறது.

அந்திமம் (நாவல்) | ப. சகதேவன்

(யாவரும் பதிப்பகம்) வெளியீடு

விலை: ரூ. 550

- சுப்ரபாரதிமணியன்