lenin 350 copyரஷ்யப்புரட்சியின் தாக்கம் காலனியாதிக்கத்தின் பிடியிலிருந்த நாடுகள் விடுதலை அடைய உந்து சக்தியாக இருந்தது எனின் மிகையன்று. அதற்கு ரஷ்யப் புரட்சி குறித்தும் அப்புரட்சிக்குத் தலைமை தாங்கிய லெனின் குறித்தும் அக்காலகட்டத்தில் வெளியான படைப்புகளும் நூல்களும் பெரும் பங்காற்றின.

இந்திய விடுதலைப் போராளிகள், ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போராட, லெனினது உரைகளை, எழுத்துக்களை ஆர்வமுடன் கற்றறிந்தனர். மகாத்மா காந்தி, நேரு, ரவீந்திரநாத் தாகூர், மகாகவி பாரதியார், திரு.வி.க., சிங்காரவேலர் உள்ளிட்டோர் ரஷ்யப் புரட்சி குறித்தும் லெனின் குறித்தும் ஏராளமாக எழுதினர்.

ஆனால் மாமேதை லெனின் உயிருடனிருக்கும் போது சிலரே எழுதி வந்துள்ளனர்.

மராத்தி மொழியில் லெனினுடைய முதல் வாழ்க்கை வரலாறு 1922 ஆம் ஆண்டு வெளியிடப் பட்டது. அதை எழுதியவர் ராமகிருஷ்ண கோபால் பிடே என்பவர். அவர் பால கங்காதர திலகர் நடத்திய ஏடான 'கேசரி'யின் ஆசிரியர் குழுவில் 30 ஆண்டுக் காலம் பணிபுரிந்தவர். அதன் தலைப்பானது 'நிகோலாய் லெனின்: ரஷ்ய ஜனநாயகத்தின் ஸ்தாபகருடைய வரலாறு' என்பதாகும். கையெழுத்துப் பிரதி 1920ஆம் ஆண்டில் தயார் செய்யப்பட்டது. எனவே அது 1919ஆம் ஆண்டு வரையிலான சம்பவங்களை ஆராய்ந்தது.

நூலாசிரியர் அந்நூலில் "அது, ஆங்கிலேய ஏகாதி பத்தியம் கொடி கட்டிப் பறந்த நாட்களாகும்; இந்தியர் களாகிய நாங்கள் சுதந்திரத்திற்கான எங்களுடைய போராட்டத்திற்கான ஆதர்சத்தைப் பெற தெரிந்த ஒவ்வொரு ஆதாரத்தையும் நாடினோம்; லெனின் மற்றும் அவருடைய போல்ஷ்விக் ரஷ்யாவை விட சிறந்த ஆதாரம் வேறென்ன இருக்க முடியும்? ஆனால் அந்நாட்களில் இந்த ஆதாரங்கள் பொது மக்களுக்குத் தெரியாது; எனவே புரிபடாமல் இருந்தது; அந்தக் காரணத்திற்காகவே அது எங்களுக்கு மிகவும் கவர்ச்சி கரமாக இருந்தது. லெனினுடையதானது ஓர் இணை யற்ற தத்துவத்தோடு கூடிய புரட்சியின் முற்றிலும் புதிய பரிசோதனை என்று நாங்கள் உணர்ந்தோம்; அது நம்முடைய பண்டைக்கால தத்துவம் புகுந்திருந்த எங்களுடைய சிந்தனைக்கு ஒரு பெரும் ஈர்ப்பாக இருந்தது.

ஆனால் அந்நேரத்தில் ஒரு புத்தகத்தை எழுது வதற்கான விவரங்கள் முற்றிலும் அற்பமாகவே இருந்தன; ரஷ்யாவிலிருந்து எந்தவொரு அதிகாரப்பூர்வ ஆவணமும் இந்தியாவிற்குள் நுழைய அனுமதிக்கப்பட வில்லை. கேசரி அலுவலகத்திலும் நூலகத்திலும் கிடைத்த அன்னிய செய்தித்தாட்களும், இதர வார மாத ஏடுகளும் இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவிலிருந்து வந்தவையே..." என்று குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு லெனின் உயிரோடிருந்த காலத்திலேயே வெளிவந்த மராட்டிய வாழ்க்கை வரலாற்று நூலுக்குப் பின்னிருந்த வழிகாட்டும் சக்தி லோகமான்ய திலகரின் பிரதான தளபதிகளுள் ஒருவரும் டாடா எதிர்ப்பு முல்ஷி பேத்தா சத்யாகிரகத்தின் தலைவரும், மூன்று தலை முறைகளாக எண்ணற்ற மகாராஷ்டிர இடதுசாரிகள், சோஷலிஸ்ட் மற்றும் கம்யூனிஸ்டுகளின் வழிகாட்டி மற்றும் நண்பரும் மரியாதைக்குரியவருமான முதுபெரும் சேனாதிபதி பாபட்டே ஆவார். சேனாதிபதி பாபட்டிற்கு மற்றுமொரு சிறப்புமுண்டு; 1917 ஆம் ஆண்டில் ரஷ்யாவின் மகத்தான நவம்பர் சோஷலிஸ்ட் புரட்சி வெற்றி பெற்றது என்ற செய்தியைக் கேட்ட வுடன் அவர் அதைப் பெரி மற்றும் வறுத்த பயறை வினியோகித்துக் கொண்டாடினார். (இவைதான் ஏழை மகாராஷ்டிரர்களின் நொறுக்குத் தீனி)

இங்கிலாந்திலிருந்தபோது, ஒரு ரஷ்யப் பெண்ணிட மிருந்து எவ்வாறு வெடிகுண்டுகள் தயாரிப்பது என்ற விபரத்தைத் தான் தெரிந்து கொண்டதாக சேனாபதி பட் நினைவு கூர்ந்துள்ளார். லெனினைச் சந்திக்கக் கிடைத்த வாய்ப்பைத் தவறவிட்டது குறித்து அவர் மிகவும் வருத்தப்படுவார். அவர் லண்டனிலிருந்த பொழுது லெனினும்அவர் வசித்த அதே கட்டிடத்தில் சில நாட்கள் தங்கியிருக்க நேர்ந்ததுண்டு.

1920ஆம் ஆண்டு ஆகஸ்ட் 17ஆம் தேதிய 'கேசரி' வார ஏடு 'லெனினுக்கு தார்மீக வெற்றி' என்ற தலைப்பில் கட்டுரை ஒன்றை வெளியிட்டது அதில்...

"போல்ஷ்வியம் என்பது ஒரு பொருளாதாரக் கொள்கை; ஆனால் சந்தர்ப்பசூழ்நிலைகளால் அதை உருவாக்கியவர்கள் ரஷ்யப் புரட்சியுடன் தொடர்புடை யவர்கள்; அதனால் அவர்கள் இங்கிலாந்தின் எதிரிகளாக கணக்கிடப்பட்டார்கள்; அந்தக்கோட்டை குறித்த தகவல்களைப் பெறுவது மற்றும் அதை விவாதிப்பது நீண்டகாலமாகவே ஒரு துணிச்சல்மிக்க மற்றும் ஆபத்தான கடமையாகக் கருதப்பட்டது" என்று கூறப் பட்டிருந்தது.

லெனினுடைய வாழ்க்கை வரலாறு இந்தி மொழியில் 1921ஆம் ஆண்டில் வெளிவந்தது. "போல்ஷ்விக் ஜாதுகர்" (போல்ஷ்விக் மந்திரவாதி) என்ற தலைப்பில் கல்கத்தாவிலிருந்து வெளிவந்தது. அதை எழுதியவர் ராம்சங்கர் அவஸ்தி என்பவர். அவர் கான்பூரிலிருந்து வெளிவந்த 'வர்த்மான்' என்ற இந்தி நாளிதழின் ஆசிரியர் ஆவார். அதன் முன்பக்கத்தில் லெனின் படம் அச்சிடப்பட்டு அதன் கீழே பின்வரும் வரிகள் இருந்தன.

"இவர்தான் லெனின். அசமத்துவத்தை அழிப்பவர். சோஷலிசத்திற்காக சிங்கம்போல் கர்ஜிப்பவர்."