டாக்டர் மு.வரதராசனாருக்கு நூற்றாண்டு விழா நாடெங்கும் நடைபெற்று வருகிறது. தலை நகர் டெல்லியிலும் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் நடத்தப்பட்டது; கோவை, சென்னை ஆகிய நகர்களில் தமிழறிஞர்கள் விழா எடுத்துச் சிறப்பித்திருக்கிறார்கள். மு.வ. அவர்களின் இலக்கியப் படைப்பு களின் காலத்துக்கேற்ற புதிய சீர்திருத்த சிந்தனை களை இன்றைய இளம் சந்ததியினர்களுக்கு மீண்டும் நினைவூட்டத் தேவையுள்ளது; எல்லாக் கல்லூரி களிலும் மு.வ.வின் படைப்புகளைப் பற்றிய கருத்தரங்குகள் நடத்தப்படல் வேண்டும்.

mu_va_38062 ஆண்டுகளே வாழ்ந்த தமிழறிஞர் நூற்றுக்கு மேலான அரிய படைப்புகளைத் தமிழ் மக்களுக்குக் கொடுத்திருக்கிறார்.

பச்சையப்பன் கல்லூரியில் தமிழ்ப் பயிற்சி ஆசிரியராய்ப் பணியில் சேர்ந்து, படிப்படியாக முன்னேறினார். 1961இல் சென்னைப் பல்கலைக் கழகத்தில் தமிழ்த்துறைத் தலைவரானார்; 1971இல் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத் துணை வேந்தராகப் பணியாற்றினார்.

அவரின் இலக்கியப் படைப்புகளுக்கு இளைஞர்களின் மத்தியில் வரவேற்பு நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது; புதிதாக வாசிப்பு வட்டம் தமிழகத்தில் விரிவடைந்து வந்தது; விடுதலை இந்தியாவில் சமூக மாற்றத்தின் விளைவாக ஏற்படும் புதிய பிரச்சினைகளுக்கு மனித நேய நெறிப்படி அணுகித் தீர்வுகாணும் கருத்துக்களுக்கு வரவேற்பு இருந்தது; மு.வ. எழுதிய ‘அகல் விளக்கு’என்ற சமூக நாவலுக்கு சாகித்ய அகாடமி விருது கிடைத்தது.

டாக்டர் மு.வ. சிறந்த மொழியியல் வல்லு நராகத் திகழ்ந்தார்; சோவியத் யூனியன் மற்றும் சில நாடுகளிலிருந்தும் டாக்டர் மு.வரதராசனாரிடம் தமிழ் கற்றவர்கள் பலர்; அவர்களெல்லாம் பிற மொழிகளில் தமிழின் பெருமையைப் போற்றிப் பரப்பி வருகிறார்கள். தமிழ்நாட்டிலும் சிறந்த தமிழ்ப் பேராசிரியர்களை உருவாக்கிய பெருமை படைத்தவர்; தன்னிடம் பயின்ற சிறந்த மாணவர் களைக் கொண்டே தனது படைப்புகளுக்கு அணிந் துரை எழுத வைத்திருக்கிறார்.

தாய்மொழிதான் பயிற்றுமொழியாக இருக்க வேண்டும்; தாய்ப்பாலில் ஊட்டச்சத்து நிரம்பியிருக்கிறது; தாய்ப்பாலோடு சேர்த்து, மொழியையும் ஊட்டுவதைப்போல், அறிவியலைப் பெருக்குவதற்குத் தாய்மொழியே சிறப்புடையது என்று பல நூல்களில் வலியுறுத்தியிருக்கிறார். மொழியின் உயிர், புலவரிடம் இல்லை, பொது மக்களின் உள்ளத்தில் உள்ளது என்று தெளிவுபடுத்துகிறார்; குடியாட்சி, கற்பு போன்ற கருத்தியலுக்கு இன்றைய கால வளர்ச்சியின் அடித்தளத்திலிருந்து புதிய விளக்கங்களைக் கொடுத்திருக்கிறார்; டாக்டர் முற்போக்குக் கருத்துக்களை வெளிப்படையாகத் தெரிவிப்பதில் தயக்கங்காட்டாதவர்.

பொதுவுடைமை இயக்கத் தலைவரும் கலை இலக்கியத்தில் புதிய பாதையைக் கண்டவருமான அமரர் ஜீவானந்தம் அவர்களிடம் பற்றுக் கொண்டவர்.

ஜீவா நாட்டின் விடுதலைக்காகப் போராடியவர். விடுதலை இயக்கம், பகுத்தறிவு இயக்கம், பொதுவுடைமை இயக்கம் மூன்றிலும் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக்கொண்ட ஜீவா அவர்கள் 1963, ஜனவரி, 18ஆம் நாள் காலமானார்; பேச்சும் நின்றது; மூச்சும் அடங்கியது.

சென்னைத் துறைமுகத் தொழிலாளர் சங்கம் பிராட்வேயில் இருந்தது; அங்கிருந்து அவரது பூத உடல் எடுத்துச் செல்லப்பட்டது. பல்லாயிரக் கணக்கான மக்கள் கண் கலங்கி அணி அணியாகச் சென்றார்கள். பல்வேறு அரசியல் கட்சித் தலை வர்கள், தொண்டர்கள் அணிவகுத்துச் சென்றார்கள். பல துறை அறிஞர்களும் கலந்துகொண்டார்கள். டாக்டர் மு.வரதராசனார் அவர்கள் கறுப்பு பனியனும், கறுப்பு முழுக் கால்சட்டையும் அணிந்து முன்னணித் தலைவர்களுடன் சோகமாக நடந்து வந்தார்; பேரணி திருவொற்றியூர் காசி மேட்டுக்குச் சென்றது; வழி நெடுக நின்று பெண்கள் “சட்ட சபையில் காசிமேட்டில் சுடுகாடு வேண்டுமென்று வலியுறுத்திப் பேசிய ஜீவாவே!” என்று அழுது புலம்பினார்கள்; அதே காசிமேடு சுடுகாட்டில்தான் ஜீவாவின் உடலும் எரியூட்டப் பட்டது; அதே இடத்தில் இறுதி அஞ்சலிக் கூட்டமும் நடந்தது; கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் களோடு நாடகத்துறைக்குப் புகழ் சேர்த்த - நூற்றாண்டு விழாக் காணும் ஒளவை.சண்முகம் ஜீவா எழுதிய “காலுக்குச் செருப்புமில்லை”என்ற பாடலைப் பாடினார்; எல்லோரையும் கதறியழ வைத்துவிட்டார்.

அமரர் ஜீவா அவர்களுக்கு அஞ்சலி செலுத்திய டாக்டர் மு.வ. அவர்கள் இந்திய நாட்டின் விடுதலைக்கும், உழைக்கும் மக்களின் வாழ்வுக்கும், தமிழ்மொழிக்கும் தன்னை முழுமையாக அர்ப் பணித்த தலைவர் ஜீவானந்தம் அவர்களின் மறைவுக்கு இரண்டு வரிச் செய்தி மட்டும் வெளியிட்ட ஒருசில ஆங்கில நாளிதழ்களுக்குக் கண்டனத்தைத் தெரிவித்து தன் மன வேதனையை வெளிப்படுத்தினார். அதை இன்றும் மறக்கமுடியவில்லை.

தலைவர் ஜீவா மறைவுக்குப் பின்னர், அவரின் நினைவாக 1964இல் தாமரை மலர் வெளியிடப் பட்டது; அரசியல் கட்சிகளின் தலைவர்கள், தமிழறிஞர்கள், எழுத்தாளர்கள், திரைப்பட நடிகர்கள் மற்றும் பலர் கட்டுரை, கவிதைகள் எழுதினார்கள்.

டாக்டர் மு.வரதராசனார் எழுதிய கவிதை:

ஏழை பங்க!

-       டாக்டர் மு.வரதராசனார்

பாரதியின் பாடல்களால் தமிழர் உய்யப்

பலமேடை ஏறிமிகப் பரப்பி வந்தாய்

நேரியலாய் வள்ளுவனைக் கம்பன் தன்னை

நெஞ்சிலுறப் பதியும் வகைச் சுவைகள் போற்றிச்

சீரசைகள் எழுத்தெல்லாம் உணர்ச்சி பொங்கச்

சிறப்பெல்லாம் கண்முன்னே காட்சி நல்கப்

பாரெல்லாம் புகழ்ந்திடவே பேசும் ஜீவா!

பைந்தமிழின் இனிமையிலே மறைந்தாய் நீயோ,

பாட்டாளிப் பெருமக்கள் உய்ய நாளும்

பலவிடத்தும் சென்றுழைத்த ஏழை பங்க!

நாட்டிலுள்ள கொடுமைபல நலிந்தே போக

நாடோறும் முழங்கி வந்த ஆர்வ தோழ!

கூட்டார்ந்த நட்புரிமை மறவா நண்ப!

குறுகிய நோக்கில்லாத பொதுமைச் சிற்பி

வாட்டமிலா உன்னுள்ளம் ஊக்கம் எல்லாம்

வையத்தார் வாழ்வுக்கே ஈந்து சென்றாய்!

இக்கவிதை டாக்டர் மு.வரதராசனாருக்கு கம்யூனிஸ்ட் இயக்கத் தலைவர் மீதுள்ள உள்ளார்ந்த ஈடுபாட்டை வெளிப்படுத்துகிறது. “கற்றாரைக் கற்றாரே காமுறுவர்”என்ற பாடலுக்கு இலக்கணமாக ஜீவா - மு.வ. இருவரின் கருத்துறவு காணப்படுகிறது.

Pin It