சென்னை நகரில் துறைமுகத்துக்கருகே கூவம் நதி கடலில் கலக்கிற பகுதியில் துவங்கி, அதன் தெற்கில் அடையாறு கழிமுகப் பகுதி, இன்னும் அதே திசையில் சற்றுத் தள்ளியும்கூட விசாலமாகப் பரவியிருக்கிறது சென்னை மெரீனா கடற்கரை. அதற்கு மேற்கேயுள்ள அகலமான சாலையின் மேற்குப் புறத்தில் சென்னைப் பல்கலைக்கழகம் முதல் அகில இந்திய வானொலி நிலையம் வரை அழகு மிளிரும் கட்டடங்கள் பல பரவி நிற்கின்றன.

இந்தக் கட்டடங்களுக்கு மேற்கில் கூவம் கழிமுகப் பகுதியிலிருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது நகரின் மிகப் பழைய பகுதிகளில் ஒன்றான திருவல்லிக்கேணி. அங்கே பார்த்தசாரதி சுவாமி கோயில் என்னும் வைணவக் கோயில் ஒன்று, அதன் எதிரே சதுர வடிவில் அமைந்த குளத்துடன் அமைந்துள்ளது. அந்தக் கோயிலையும், குளத்தையும் சுற்றி வசிப்பவர்கள் பெரும்பாலும் பார்ப்பனர்கள் - குறிப்பாக, வைணவக் குடும்பங்களே! இந்தக் குடும்பங்களுள் புகழ்பெற்று விளங்கியவர்கள் மண்டயம் குடும்பத்தைச் சேர்ந்த சிலர். அவர்களுடைய மூதாதையர்கள் பழைய மைசூர் மாகாணத்திலுள்ள மண்டயம் என்னும் சிற்றூரைச் சேர்ந்தவர்கள்.

இந்தக் குடும்பங்களுள் ஒன்றில்தான் எம்.பி.டி. ஆச்சாரியா பிறந்தார். அவருடைய முழுப் பெயர் மண்டயம் பிரதிவாடி திருமலாச்சாரியா. மண்டயம் என்பது அவருடைய மூதாதையர்களின் பூர்வீகக் கிராமத்தைக் குறிக்கும்; பிரதிவாடி மண்டயம் என்பது வைணவர்களிடையே அவரது குல மரபைக் குறிக்கும்; திருமலாச்சாரியா என்பது அவரது பெற்றோர் அவருக்குச் சூட்டிய பெயர். அவரது தந்தையார் எம்.பி.நரசிம்ம அய்யங்கார் (பொறி யியலில் பட்டயப் படிப்பு படித்தவர்). சென்னை மாகாண அரசாங்கத்தின் பொதுப் பணித் துறையில் மேற்பார்வையாளராகப் பணியாற்றினார். அவரது தாயார் பெயர் சிங்கம்மா. திருமலாச்சாரியா (ஏறத்தாழ) 1887-ஆம் ஆண்டில் பிறந்தார். அவருக்கு இரண்டு தம்பிகள். அவரது தந்தையார் ராஜமுந்திரி தவலேஸ்வரம் மண்டலத்தில் (கோதாவரி நதியின் குறுக்கே சர் ஆர்தர் கார்ட்டன் வடிவமைத்துக் கட்டிய புகழ்பெற்ற அணைக்கட்டு தவலேஸ்வரம் அணைக்கட்டு) பணியாற்றியதால், திருமலாச்சாரியா அவரது உறவினர்கள், பள்ளி மாணவர்களிடையே ‘கோதாவரிச் சாமி’ என்று அறியப்பட்டிருந்தார்.

திருமலாச்சாரியா சென்னை, திருவல்லிக் கேணியில் உள்ள இந்து உயர்நிலைப் பள்ளியில் கல்வி கற்றார். அப்போது திரு.வி.எஸ்.சீனிவாச சாஸ்திரி அந்தப் பள்ளியின் தலைமையாசிரியராகப் பணியாற்றினார். (இது அநேகமாக 1900 வாக்கில் இருக்கலாம், அல்லது வி.எஸ்.சீனிவாச சாஸ்திரி 1907-இல் இந்தியப் பணியாளர்கள் சங்கத்தில் (Servants of India Society) சேர்ந்தபோது இந்து உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியராக இருந் திருக்கலாம்.

தீவிர அரசியல் நிகழ்வுகளும் மண்டயம் குடும்பங்களும்

சுவாமி விவேகானந்தர் 1892-.இல் சென்னைக்கு வந்திருந்தார். எம்.சி.ஆலசிங்க பெருமாள், எம்.சி. கிருஷ்ணமாச்சாரியார், ஆர்.ஏ.கிருஷ்ணமாச்சாரியார் போன்ற மண்டயம் குடும்ப உறுப்பினர்களின் முயற்சியால்தான் விவேகானந்தர் சென்னைக்கு அழைக்கப்பட்டார். அவர் தென்னிந்தியாவில் தங்கவும், சுற்றுப்பயணம் செய்யவும் அவர்கள் தகுந்த ஏற்பாடுகளைச் செய்தனர். திலகர் 1898-இல் சிறையிலிருந்து விடுதலை பெற்ற சில தினங்கள் கழித்து, சென்னைக்கு வருகை புரிந்து, இங்கே ஆலசிங்க பெருமாள், இன்னும் சிலரைச் சந்தித்தார். திலகரின் வலக்கரமாக விளங்கிய வாசுதேவ் ஜோஷி ஜப்பான் அல்லது பர்மாவிலிருந்து திரும்பிய வேளையில் 1902-இல் சென்னைக்கு வருகை புரிந்தார். அதே ஆண்டில் சகோதரி நிவேதிதாவும் சென்னைக்கு வந்திருந்தார். இவர்கள் எல்லோரும் ஆலசிங்க பெருமாளையும், மண்டயம் குழுவினரையும் சந்தித்திருக்கின்றனர்; மேலும், இந்தக் குடும்பங்களைச் சேர்ந்த பள்ளி மாணவச் சிறார்களையும் சந்தித்துப் பேசியிருக்கின்றனர்.

சென்னையில் தீவிர அரசியலாளர்களுடன் சந்திப்பு

திருமலாச்சாரியா பச்சையப்பன் கல்லூரி உயர்நிலைப் பள்ளியில் படித்ததாக ஒரு குறிப்பு இருந்தாலும், அவர் மெட்ரிகுலேஷன் படித்து முடித்ததாகத் தகவல் இல்லை. “ரிட்டர்ன் ஆஃப் நியூஸ் பேப்பர்ஸ்”என்னும் குறிப்பில் இத்தகவல் இடம்பெற்றுள்ளது. அவர் 1906-இல் பாலபாரதம் இதழுக்கு வெளியீட்டாளராக இருந்தார் என்றொரு குறிப்பு உள்ளது. அவர் தமது பள்ளிப் படிப்பை முடிப்பதற்குள் அரசியல் நடவடிக்கைகளில் ஈர்க்கப்பட்ட இளைஞர்கள் குழுவினரிடையே மிகத் தீவிரமாய்ப் பணியாற்றத் தொடங்கிவிட்டார்.

நாட்டுக்குப் புதியதொரு கொள்கையும் செயல் திட்டமும் தேவை என்று கண்டுணர்ந்தவர்களும், காங்கிரஸ் கட்சியை நிர்வகித்துக் கொண்டிருந்த பெரிய மனிதர்களின் செயல்பாடுகளில் அதிருப்தியடைந்தவர்களுமான செயல்பாட்டாளர்களால் 1906-ஆம் ஆண்டு மே மாதத்திற்குள் ‘இந்தியா’ என்னும் பெயரில் தமிழ் அரசியல் வார இதழ் ஒன்று தொடங்கப்பட்டது. அவர்கள் சில தீர்மானங்களை நிறைவேற்றி, அவற்றை அரசுக்கு அனுப்பினர்.

இண்டியா ஸ்டீம் பிரிண்டிங் பிரஸ் நிறுவனத்தின் உரிமையாளரான எஸ்.என்.திருமலாச்சாரியின் உறவினர் எம்.பி.டி.திருமலாச்சாரியா. அந்த அச்சகத்தில் தான் ‘இந்தியா’இதழும், ஆங்கிலம், தமிழ் மொழிகளில் பிபன் சந்திரா பாலின் உரைகள், புதிய கட்சியின் கொள்கைகள் போன்றவையும் அச்சிடப் பட்டன. பிபன் சந்திரா பால் இளைஞர்களின் அழைப்பை ஏற்று 1907-ஆம் ஆண்டு, மே மாதத்தில் சென்னைக்கு வந்திருந்து, பத்து நாட்கள் தொடர் விரிவுரைகள் நிகழ்த்தினார். அவர்களுள் வி.சக்கரைச் செட்டியும், சுப்பிரமணிய பாரதியும் முக்கியமானவர்கள்.

பிபன் சந்திரா பால் எம்.பி.திருமலாச்சாரியாவின் இன்னொரு உறவினரான எஸ்.சீனிவாசாச் சாரியாவைச் சந்தித்தார். அந்த வருகையின்போது, அவர் தங்கியிருந்த வீடு புதுச்சேரியார் வீடு என்று அழைக்கப்பட்டது. இந்த நிகழ்வுகள் எம்.பி.திருமலாச் சாரியாவும் அவரது உறவினர்களும் சென்னையில் முக்கியமான அமைப்புடன் நெருக்கமான உறவு வைத்திருந்ததையும் மற்ற மாகாணங்களில் உள்ள ஒத்த கருத்துடைய தலைவர்களுடன் தொடர்பு வைத்திருந்ததையும் காட்டுகின்றன. முற்போக்கு இயக்கத்தில் ஈர்க்கப்பட்டிருந்தவர்களுடன் மிகவும் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்த இளைஞன் என்ற வகையில், ஆச்சாரியா சுமார் 1905 முதல் 1908 வரை கணிசமான செயல்பாடுகளில் ஈடுபடுத்தப்பட்டார்.

1906 ஆம் ஆண்டு, நவம்பரில், சி.சுப்ரமணிய பாரதியை ஆசிரியராகக் கொண்ட பாலபாரதம் என்னும் ஆங்கில வார இதழுக்குத் தன்னை உரிமையாளர் என்றும் வெளியீட்டாளர் என்றும் எம்.பி. திருமலாச்சாரியா சட்டபூர்வமாக அறிவிக்கை செய்தார். பிரமாவாதின் அச்சகத்தில் பத்திரிகை அச்சிடப்பட்டது. இதழின் அச்சகர் சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் இளங்கலை படித்த எம்.சி.ஆலசிங்க பெருமாள்.

மிதவாதிகளுக்கும் நாடு அளவிலான சுதேச மற்றும் புறக்கணிப்பு இயக்கத்தின் வளர்ச்சியை எட்டியிருந்த தீவிரவாதிகளுக்கும் இடையேயான வேறுபாடுகளின் தீவிரம் இந்தக் காலகட்டத்தில் தான் வெளியே தெரிய வந்தது. மிகப் பெருவாரியான மக்கள் சுயராஜ்யத்துக்கான - அதாவது, தங்களைத் தாங்களே பராமரித்துக் கொள்வதற்கான உரிமைக்கான போரில் ஈடுபட ஈர்க்கப்பட்டனர்.

1907-இல் பூனாவிற்குச் சென்று திலகரைச் சந்தித்தது, அந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் நடை பெற்ற சூரத் காங்கிரஸில் பங்கு கொண்டது என ஆச்சாரியாவின் செயல்பாடுகள் தீவிரமாக இருந்தன. 1908ஆம் ஆண்டு தொடக்கத்தில் அவரது செயல்பாடுகள் அமைதியாக இருப்பது போலக் காணப்பட்டாலும், 15, ஆகஸ்ட், 1908 அன்று, ‘இந்தியா’அலுவலகம் சூறையாடப்பட்டு, தீய சக்தி என்ற குற்றச்சாட்டின் பேரில் அதன் அலுவல் ரீதியான ஆசிரியர் கைது செய்யப்படுவதற்கு ஒரு வார காலத்துக்கு முன்னர்தான், ஆச்சாரியா அறிவிக்கை தாக்கல் செய்து இந்தியா இதழுக்கு உரிமையாளரானார்.

1908, ஆகஸ்ட், 21, 22 தேதிகளில் ‘இந்தியா’அலுவலகமும், அச்சகமும் பரிசோதனைக்குள்ளான போது, காவல்துறையால் கைப்பற்றப்பட்ட பொருட்களின் பட்டியலில், அச்சக உரிமையாளர் என்ற முறையில் ஆச்சாரியா கையொப்பமிட்டார். சோதனைக்குப் பிறகும் செய்தித்தாளின் ஓரிரு இதழ்கள் வெளியிடப்பட்டன. இருப்பினும், 1908, செப்டம்பர் மாத இறுதிவாக்கில் ஆச்சாரியா எஸ்.சீனிவாசாச்சாரியா, எஸ்.என்.திருமலாச்சாரி, சி.சுப்ரமணிய பாரதி ஆகியோருடன் புதுச்சேரிக்குப் புறப்பட்டுச் சென்றார். அச்சகம் புதுச்சேரிக்கு மாற்றப்பட்டது. அங்கிருந்து 10, அக்டோபர், 1908 முதல் ‘இந்தியா’ வெளிவரத் தொடங்கியது. அஞ்சல் சலுகை பெறுவதற்காக இதழைப் பதிவு செய்யவேண்டி அஞ்சல்துறை உயர் அலுவலரைத் தொடர்பு கொண்டார் ஆச்சாரியா.

வெகு விரைவில் அச்சக உரிமையை எஸ்.சீனி வாசாச்சாரியாவிடம் மாற்றிக் கொடுத்துவிட்டு திருமலாச்சாரியா புதுச்சேரியை விட்டு வெளி யேறினார். புதுச்சேரியில் புறப்பட்ட அவர் இங்கிலாந்துக்குச் சென்றார். அங்கு, எண் : 65, கிராம்வெல் அவின்யூ, ஹைகேட், இலண்டன் என்ற முகவரியில் ஷ்யாமாஜி கிருஷ்ண வர்மா நடத்திய இந்தியா ஹவுஸ் சென்றடைந்தார். அவர் ஏன் புதுச்சேரியை விட்டு வெளியேறி, இலண்டனுக்குச் சென்றார் என்பது புதிராகவே உள்ளது. ஆச்சாரியா தனது முன் நினைவுச் செய்திகளின் திரட்டில் (Reminisciences) (இதன் சில பகுதிகள் மஹாராட்டா இதழில் வெளியிடப்பட்டன) எழுதிய குறிப்பு அவர் மார்ஸீல்லஸ் செல்லும் ஜப்பானியக் கப்பலில் எதேச்சையாக ஏறிவிட்டதாகவும், ஐரோப்பாவுக்கு எந்த ஒரு நோக்கத்தோடும் செல்லவில்லை என்றும் சொல்கிறது.

மேலும் ‘இந்தியா’ இதழுக்குத் தொடர்ந்து செய்தி எழுதியனுப்பிக் கொண்டிருந்த ஒரு நபரிடமிருந்து ஓர் உதவி பெறுவதற்காக மார்ஸீல்லஸிலிருந்து பாரிஸுக்குச் சென்றதாகவும், பிறகு, இலண்டனில் தங்கியிருந்த வ.வே.சு.அய்யரிடமிருந்து ஏதோ உதவியை எதிர்பார்த்து பாரிஸி லிருந்து இலண்டனுக்குச் சென்றதாகவும் குறிப் பிட்டுள்ளார். இன்னொரு புறம், அவர் ஒரு வங்காளியுடன் பாரிசுக்குச் சென்றார் என்று குற்றப் புலனாய்வுத் துறை அறிக்கை கூறுகிறது.

ஓசையின்றி வெடிக்கும் வெடிகுண்டுகளைத் தயாரிப்பதற்கு, எம்.எட்டியீன் (M.Etienne) என்பவரிடமிருந்து கற்றுக்கொள்வதற்காக அங்கே சென்றிருந்த நந்தகுமார் சென் என்பவருடன் ஆச்சாரியா டிசம்பர், 1908 - இல் பாரிஸில் தங்கியிருந்தார் என்று அரசு புலனாய்வு முகமை அறிக்கை தெரிவிக்கிறது. ‘இந்தியா’தமிழ் வார இதழை வெளியிடுவதில் மிகவும் ஆர்வமாக இருந்த ஆச்சாரி யாவைப் போன்ற ஒருவர் புதுச்சேரியை விட்டு வெளியேறி, எந்த நோக்கமும் இன்றி ஐரோப்பாவில் சுற்றித் திரிந்திருக்க முடியாது என்று நாம் கருதலாம். ஷ்யாமாஜி கிருஷ்ண வர்மாவின் வெளியீடான ‘இந்தியன் சோஸியாலஜிஸ்ட்’டைப் பற்றியும், அவர் அறிவித்திருந்த அறிஞர்களுக்கான விருதுத் தொகையைப் பற்றியும் இந்தியப் புரட்சி யாளர்களுக்குத் தெரியும் என்பதால், திருமலாச் சாரியா இலண்டனுக்குச் சென்று அவர்களைத் தொடர்புகொள்ள வேண்டும் என்ற எண்ணம் புதுச்சேரியில் தஞ்சம் புகுந்த இந்தத் தீவிரவாதி களிடையே இருந்திருக்க வேண்டும்.

வெளிநாடுகளில் புரட்சியாளர்களுடன்...

ஆச்சாரியாவின் அரசியல் நடவடிக்கையின் முதல் பகுதி ஆங்கிலேயருக்குட்பட்ட இந்தியா விலும் புதுச்சேரியிலும் இயங்கியது. அடுத்த கட்ட இரண்டாம் பகுதி, இலண்டனில் இந்தியப் புரட்சி யாளர்கள் குழுவில் அவர் சேர்ந்த 1909ஆம் ஆண்டைய தொடக்கத்திலிருந்து ஆரம்பிக்கிறது. அவர் 24, ஜனவரி 1909 அன்று முதன்முதலாக ‘இந்தியா ஹவுஸ்’ கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டதாகக் கூறப்படுகிறது. பிறகு பாரிசுக்குச் சென்று, கர்ஸான் - வில்லீ (Curzon - Wyllie) படுகொலையின் போது இலண்டனுக்குத் திரும்பி வந்திருக்கிறார். ஸ்பானியர்டுகளுக்கு (Spaniards) எதிரான போரில் ரிஃப்ஸ் (Rifts) உடன் சேர்ந்து பணியாற்றவும் போர்க் கலையைக் கற்றுக்கொள்ளவும் திட்டமிட்டு ஆகஸ்ட், 1909 - இல் ஜிப்ரால்டர் வழியாக சுக்சாகர் தத்துடன் (Sukh Sagar Dutt) ஆச்சாரியா இலண்டனுக்குச் சென்றார்.

அந்த முயற்சியினால் எந்தப் பலனும் விளையவில்லை. எனவே ஆச்சாரியா 4, அக்டோபர், 1909 அன்று லிஸ்பனிலிருந்து பாரிசுக்குத் திரும்பினார். அதற்கு முன்பே, அவரது நண்பர் ஜிப்ரால்டிலிருந்து திரும்பியிருந்தார். ஆச்சாரியா இலண்டனிலிருந்து கிப்ரால்டருக்குச் சென்றிருந்த வேளையில், சென்னை மாகாண அரசாங்கம், 1907-இல் அவர் வெளியீட்டாளராக அறிவிக்கை செய்திருந்த கால எல்லையில் ‘இந்தியா’இதழில் வெளியிடப்பட்ட குறிப்பிட்ட செய்திக் கட்டுரைகளை முன்னிட்டு, அவரைக் கைது செய்ய ஆணை பிறப்பித்திருந்தது. இலண்டனில் ஆச்சாரியாவை அடையாளம் கண்டு, இந்தியாவுக்குக் கொண்டு வருமாறு காவல் அதிகாரி ஒருவரைப் பணித்தது அரசாங்கம்.

ஜனவரி, 1909-இல் ஆச்சாரியா இலண்டனுக்குச் சென்றிருக்க வேண்டும். சவர்க்கார், வ.வே.சு.அய்யர், டி.எஸ்.எஸ்.ராஜன் உள்ளிட்டோர் தங்கியிருந்த எண் : 65, கிராம்வெல் அவின்யூவிலுள்ள ‘இந்தியா ஹவு’ஸுக்குச் சென்றார். ஆயுதங்களைப் பயன் படுத்துவதில் பயிற்சி, நாட்டு விடுதலைக்கான போராட்டம் என்ற வகையில் இந்தியர்களின் நாட்டுப்பற்றைத் தூண்டக்கூடிய இலக்கியங்களை வெளியிடுதல் போன்ற இலண்டன் குழுவின் செயல்பாடுகள் சிலவற்றில் ஆச்சாரியா தொடர்பு கொண்டிருந்தார் என்பதை சவர்க்காரின் இந்திய விடுதலைப் போர் (Indian War of Independance) மூலம் அறியலாம். சர் கர்ஸான் – வில்லி படுகொலையும் 1909, ஜூலை மாதத்தில் இந்தியா ஹவுஸ் மூடப்பட்டது.

இலண்டனில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் கர்ஸான் - வில்லீ-யைப் படுகொலை செய்ததாக மதன் லால் திங்ராவைக் (Madan Lal Thingara) கண்டித்து நிறைவேற்றப்பட்ட ஒரு தீர்மானத்துக்கு சவர்க்கார் எதிர்ப்புக் குரல் எழுப்பிய போது சவர்க்காரை ஆச்சாரியா ஆதரித்து நின்றார் என்ற நிகழ்விலிருந்து இலண்டன் இந்தியா ஹவுஸ் புரட்சியாளர்கள் குழுவின் தீவிர உறுப்பினர் களுள் ஆச்சாரியாவும் ஒருவர் என்பது தெளிவாகத் தெரிகிறது. பாமர் (Palmar) என்னும் ஐரோப்ப - ஆசியரால் சவர்க்கார் தாக்கப்பட்ட போது ஆச்சாரியா பாமருக்குப் பதிலடி கொடுத்தார்; பின்னர் “டைம்ஸ்” (8, ஜூலை, 1909 நாளிடப்பட்டது) இதழில் “ட்ரூலி பிரிட்டிஷ் ப்ளோ” (Truely British Blow) என்ற தலைப்பில் வெளியான பாமரின் கடிதத்துக்கு ஆச்சாரியா மறுப்பு ஒன்றை எழுதினார். இந்தக் கடிதம் “எ ஸ்ட்ரெய்ட் இண்டியன் லத்தி” (A Straight Indian Lathi) என்ற தலைப்பில் ‘டைம்ஸ்’ இதழில் வெளியானது.

ஆச்சாரியா 1909 - ஆம் ஆண்டு ஆகஸ்டில் மூர்களுடன் இணைந்து பணியாற்றுமாறு அனுப்பப் பட்டார்; பின்னர் வ.வே.சு. அய்யருடன் சேர்ந்து செயலாற்றுவதற்காக 5, அக்டோபர், 1909 - அன்று பாரிசுக்குத் திரும்பினார்.

வ.வே.சு.அய்யர், டி.எஸ்.எஸ்.ராஜன், ஆச்சாரியா ஆகிய மூவரும் 1909-இல் புரட்சியாளர்கள் குழுவில் புகழ்பெற்ற செயல்பாடுடைய தென்னிந்தியர்கள். அவர்களும் புதுச்சேரியிலிருந்து ‘இந்தியா’ என்னும் தமிழ் வார இதழை நடத்திய குழுவினரும் தொடர்பில் இருந்தனர். இலண்டனில் இருந்த இந்தியப் புரட்சி யாளர்களுக்கும் பிரிட்டிஷ் இந்தியாவிலிருந்து புதுச்சேரிக்குச் சென்று தஞ்சமடைந்திருந்த அரசியல் வாதிகளுக்கும் இடையேயான தொடர்பை ‘இந்தியா’ இதழில் வெளியிடப்பட்ட ‘லெட்டர் ஃப்ரம் லண்டன்’ (Letter From London) என்னும் செய்திக் கட்டுரையில் காணலாம். அதில் “மூர்களின் விடுதலைப் போராட்டத்தில் இணைந்து செயலாற்றுவதற்காக மொராக்கோவுக்குச் செல்லும் தென்னிந்தியப் பார்ப்பனர்”என்றொரு குறிப்பு இடம்பெற்றுள்ளது.

1909-ஆம் ஆண்டு இலண்டனிலிருந்து வ.வே.சு. அய்யருக்குப் புதுச்சேரியிலிருந்து அனுப்பப்பட்ட கடிதங்களும் புதுச்சேரியில் இருந்த ‘இந்தியா’செய்தித்தாள் முகவரிக்கு அனுப்பப்பட்ட துண்டறிக்கைகளும், வெளியீடுகளும் (காவல்துறையால் கைப்பற்றப்பட்டவை) முக்கியமான ஆதாரங்களாகும்.

ரோட்டர்டாமில் சவர்க்காரின் இந்திய விடுதலைப் போரை (Indian War of Independance) அச்சிடுவதற்கும், மாடம் காமா கொண்டு வந்த தல்வார் (Talwar), வந்தே மாதரம் (Bande Matheram) ஆகிய செய்தித்தாள்களை அச்சிட்டு, வெளியிடு வதற்கும் மேற்கொள்ளப்பட்ட பணிகளில் ஆச்சாரியா நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார் என்று கூறப்படுகிறது.

1910-க்கும், 1912-க்கும் இடைப்பட்ட காலத்தில் ஆச்சாரியா இந்தியாவில் நடைபெற்ற ஆங்கில ஆட்சிக்கு எதிரான கொள்கைப் பிரசாரத்தை மேற் கொண்ட இந்தியப் புரட்சியாளர்கள் குழுவுடன் பணியாற்றியதுடன், ஆங்கிலேயரை எதிர்த்த, எகிப்தியப் புரட்சியாளர்கள், அதே போன்று ஆங்கிலேயரை எதிர்த்து நின்ற துருக்கிய தேசிய வாதிகளுடனும் தொடர்பில் இருந்தார். இந்தச் செயல்பாடுகளின் போக்கில் ஆச்சாரியா 1911, அக்டோபர் மாதத்தில் சர்தார் அஜித்சிங்கிட மிருந்து ஒரு கடிதத்தைப் பெற்றுக் கொண்டு, கான்ஸ்டான்டிநோபிளுக்குச் சென்றார் எனத் தெரியவருகிறது. கான்ஸ்டான்டிநோபிளிலிருந்து ஆச்சாரியா எழுதியனுப்பிய இரண்டு கடிதங் களையும் காவல்துறையினர் கைப்பற்றியிருந்தனர். இதற்கு முன்பே, ஜெர்மனியில் படித்துக் கொண் டிருந்த இந்திய மாணவர்களிடையே கொள்கைப் பிரசாரம் செய்வதற்காக பெர்லின், மியூனிச் ஆகிய நகரங்களில் தங்கியிருந்தார் ஆச்சாரியா.

1912-ஆம் ஆண்டின் தொடக்கம் முதல் 1914-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டம், ஆச்சாரியா முக்கியமான பணிகளில் ஈடுபட்டார் என்று சொல்லப்பட முடியாத காலகட்டமாகும். அவர் நியூயார்க் நகரிலும், பின்னர் பெர்க்லி, காலி ஃபோனியா ஆகிய நகரங்களிலும் தங்கி, இந்துஸ் தான் காதர் அசோஸியேஷனுடன் தொடர்பில் இருந்துள்ளார். 1914-ஆம் ஆண்டு ஏப்ரலில் அந்த அசோஸியேஷன் நடத்திய கூட்டம் ஒன்றில் அவர் கலந்துகொண்டார் என்றொரு தகவல் உள்ளது.

1910-ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில், வ.வே.சு அய்யர், தான் கைது செய்யப்படலாம் என்ற எதிர்பார்ப்பில், இஸ்லாமியரைப் போல வேடம் தரித்து, புதுச்சேரிக்குச் சென்றார். ஆச்சாரியாவும் புதுச்சேரிக்குத் திரும்பும் எண்ணத்தில் இருந்திருக் கலாம். அல்லது, ஆச்சாரியாவுக்கு மாடம் காமா எழுதி, காவல்துறையால் கைப்பற்றப்பட்ட ஒரு கடிதத்தின்படி பார்த்தால், புதுச்சேரிக்குச் செல்லு மாறு ஆச்சாரியாவை மாடம் காமா வலியுறுத்தி யிருக்கக்கூடும். வெளிநாட்டுப் புரட்சியாளர் களிடையே நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட அல்லது திட்டமிடப்பட்டு, ஒருங்கிணைக்கப்பட்ட செயல் பாடு இல்லாத நிலையில், ஆச்சாரியா அமெரிக்க ஐக்கிய நாடுகளுக்குச் செல்ல முடிவெடுத்ததாகப் புலப்படுகிறது. அவர் அங்கு 1914 ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதத்தில் தங்கியிருந்தார் என்றாலும், அதைத் தவிர இரண்டு ஆண்டுக் காலம் என்ன செய்தார் என்று தெளிவாகத் தெரியவில்லை. காதர் இயக்கத்தில் பணியாற்றிய ஒரு சிலர் அவரைப் பற்றி அளித்த ஒரு குறிப்பைத் தவிர, ஆச்சாரியா உள்ளபடியே அமெரிக்க ஐக்கிய நாடுகளில் என்ன செய்தார் என்ற தகவல் எதுவும் இல்லை.

தொடக்ககாலப் புரட்சியாளர்களுள் சிலர் பெர்லினில் முகாமிட்டிருந்தனர்; இலண்டன் குழுவிலும், பின்னர் பாரிஸ் குழுவிலும் இணைந் திருந்த வீரேந்திரநாத் சட்டோபாத்தியாய பெர்லினில் தான் தங்கியிருந்தார். பிரிட்டனுக்கும், ஜெர்மனிக்கும் இடையே ஏற்பட்ட பகைமையின் காரணமாக, ஜெர்மனியில் முகாமிட்டிருந்த இந்தியர்கள் அநேகமாக ஜெர்மன் அரசாங்கத்தின் உதவியை எதிர்நோக்கினர். அதே போன்று விடுதலை நோக்கில் ஆங்கிலேயரின் ஆட்சியை அகற்ற விரும்பிய இந்தியர்களை ஜெர்மனிக்குச் சாதகமாய்ப் பயன்படுத்திக்கொள்ள எண்ணியது கேய்ஸர் அரசாங்கம். முதல் உலகப் போர் திடீரெனத் தோன்றிய ஒரு மாதத்துக்குள் - அதாவது, 1914, செப்டம்பர் மாதத்தில் பெர்லினில் இந்திய விடுதலைக் குழு இந்திய தேசியகட்சி பெர்லின் இந்தியக்குழு என வெவ்வேறு பெயர்களில் பரிச்சயமாகியிருந்த ஓர் இந்தியக் குழு இருந்ததாக அறிகிறோம். முகம்மது பரக்கத்துல்லா, பூபேந்திர நாத் தத்தா, செம்பகராமன் பிள்ளை, சந்திரகாந்த் சக்கரவர்த்தி ஆகியோர் இடம்பெற்றிருந்த இந்தக் குழுவில் ஆச்சாரியாவும் இருந்ததாகக் கூறப் படுகிறது. ஆகவே, 1914, செப்டம்பர் மாதத்திற்குள் ஆச்சாரியா ஐரோப்பா கண்டத்துக்கு வந்திருந்தார்.

முதல் உலகப் போர் நடைபெற்ற வேளையில், பெர்லின் நகரில் செயல்பட்டுக் கொண்டிருந்த இந்தியர்களுடன் ஜெர்மனி நாட்டு வெளியுறவுத் துறை நட்பு கொண்டிருந்தது. ஆங்கில அரசின் புலனாய்வுத்துறை அறிக்கைகளின்படி, இந்திய வீரர்களிடையே அரசுக்கு எதிரான துண்டறிக்கை களை விநியோகிப்பதற்காக சூயஸ் கால்வாய் பகுதிக்கு ஜெர்மானிய வெளியுறவுத் துறையினர் ஒரு குழுவை அனுப்ப ஏற்பாடு செய்துள்ளனர். ஆச்சாரியா இந்தக் குழுவில் உறுப்பினராக இருந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், மேற்படி அதே ஆதாரத்தின்படி பார்த்தால், இந்தக் குழுவினர் கான்ஸ்டாண்டி நோபிளுக்குச் சென்றிருந்தாலும், மேற்கொண்டு அவர்கள் என்ன செய்தனர் என்பது தெளிவாகத் தெரியவில்லை. இருப்பினும், 1916, மார்ச் மாதத்தில் கான்ஸ்டாண்டி நோபிளில் ‘யங் இந்துஸ்தான் அசோஸியேஷன்’(Young Hindustan Association) என்றொரு அமைப்பு தோற்றுவிக்கப்பட்டு, 1917, மார்ச் மாதத்தில் அது முடிவுக்கு வந்தது.

வெளிநாடுகளிலும் சோவியத் ரஷ்யாவிலும் சோஷலிசவாதிகளுடன்...

1917, மே மாதத்தில் ஸ்டாக்ஹோமில் இந்திய தேசிய குழு ஒன்று அல்லது அதன் கிளை ஒன்று தோற்றுவிக்கப்பட்டது. இந்திய தேசிய குழுவின் ஸ்டாக்ஹோம் செயலகத்தைப் பற்றியும், ஆச்சாரி யாவும் வீரேந்திரநாத் சட்டோபாத்தியாயாவும் அதில் முக்கிய பங்காற்றியவர்கள் என்றும் தகவல் உள்ளது. அதை ‘அகில உலக மொழிபெயர்ப்புச் செயலகம்’ என்றும், ‘தலைமை வர்த்தகச் செயலகம்’ என்றும் ஆச்சாரியா குறிப்பிட்டுள்ளார். ஸ்டாக் ஹோமில் உள்ள பிரிட்டிஷ் தூதரகம் அந்நாட்டு வெளியுறவுத் துறைக்கு அனுப்பிய ஒரு தந்தியில் ரஷ்யப் பிரதிநிதிகள் உள்ளிட்ட பல தேசங்களைச் சேர்ந்தவர்கள் பங்கு கொள்ளும் ஒரு கூட்டத்தில் இந்தியப் புரட்சியாளர்கள் கலந்துகொள்வர் என்று தகவல் அனுப்பியது.

ஸ்டாக்ஹோமில்தான் “சர்வதேச சோஷலிஸ்ட் காங்கிரஸ் - இந்தியாவைப்பற்றிய உரைகளும், தீர்மானங்களும்” என்னும் துண்டறிக்கை ஒன்றை இந்தக் குழு அச்சிட்டு வெளியிட்டது. 1917-ஆம் ஆண்டில் சட்டோபாத்யாய, ஆச்சாரியா ஆகிய இருவரும் ஆற்றிய செயல்வழிப் பங்களிப்புகள் குறிப்பிடத்தக்கவை. இந்தக் காலகட்டத்தில்தான் அவர்கள் ரஷ்யன் சோஷலிச ஜனநாயக தொழி லாளர் கட்சியுடன் தொடர்பு கொண்டனர். இந்த அமைப்பின் முன்னணி உறுப்பினரான டிரா யனாவ்ஸ்கி சட்டோபாத்யாய, திருமலாச்சாரியா ஆகிய இருவருடன் நெருங்கிய நட்புடன் இருந்தார்.

ரஷ்யாவில் இந்தியப் புரட்சிக்கான ஆயத்தப் பணிகளை ஒழுங்கமைக்குமாறு பெர்லின் குழுவுக்கு வீரேந்திரநாத் சட்டோபாத்யாய கடிதம் எழுதினர். ஆச்சாரியா பிரதான பொறுப்பில் இருந்த இந்திய தேசிய குழுவின் ஸ்டாக்ஹோம் செயலகம், பெட்ரோகிராட் சோவியத்துக்குத் தந்தி மூலம் பின்வருமாறு தகவல் அனுப்பியது: “எல்லா தேசிய இனங்களுக்கும் உத்தரவாதமான சுயநிர்ணய உரிமை என்ற அடிப்படையில் நீடித்த அமைதிக்காகப் போராடிக் கொண்டிருக்கிறது புரட்சிகர ரஷ்யா.”

1917-ஆம் ஆண்டுக்கும், 1917-ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் ஸ்டாக்ஹோமில் நடை பெற்ற புரட்சிப் பணிகள் நீங்கலாக பெர்லின் குழுவிலுள்ள மற்ற உறுப்பினர்களுடனும் இணைந்து பணியாற்றினார் ஆச்சாரியா. ஜெர்மனி தோல்வியின் எல்லையைத் தொடுகிற நிலையில் போர் முடிவை நெருங்கிக்கொண்டிருந்தது. ரஷ்யாவில் போல்ஸ் விக்குகள் ஆட்சியைக் கைப்பற்றினர். லெனினின் புகழ்பெற்ற அமைதிக்கான கோட்பாடு 1917 ஆம் ஆண்டு, நவம்பரில் வெளிக்கொணரப்பட்டது. 1915, டிசம்பர் மாதத்தில் இந்தியாவின் தற்காலிக அரசாங்கம் என்ற பெயரில் காபூலில் ஓர் அரசாங்கத்தை உருவமைத்த மகேந்திர பிரதாப் 1918, பிப்ரவரி மாத இறுதியில் அல்லது மார்ச் முதல் வாரத்தில் பெட்ரோகிராட் வந்திருந்தார். சோவியத் அரசின் உயர்நிலைப் பிரதிநிதிகள் சிலர் மகேந்திர பிரதாபுக்கு வாழ்த்து தெரிவித்தனர். பின்னர் அவர் ஜெர்மானிய அரசிடமிருந்து என்ன உதவியை அடைய முடியும் என்று கண்டறி வதற்காக பெர்லினுக்குப் புறப்பட்டுச் சென்றார். ஜெர்மனி மீதும் இன்றோ, நாளையோ எனத் தள்ளாடிக் கொண்டிருந்த கேய்ஸர் ஆட்சியின் மீதும் அதிருப்தி வளர்ந்து 1918-ஆம் ஆண்டு இறுதியில் பெர்லின் குழு கலைந்தது. இருந்த போதிலும், ரஷ்யப் புரட்சியாளர்களுடன் கொண் டிருந்த உறவு தொடர்ந்து நீடித்தது.

1919-இல் மகேந்திர பிரதாப், அப்துல் ராப் பார்க் ஆகியோருடன் ஆச்சாரியா பெர்லினிலிருந்து மாஸ்கோவுக்குச் சென்றார். 1919-இல் லெனினைச் சந்தித்த இந்தியப் புரட்சியாளர்களின் சிறப்புத் தூதுக்குழுவில் ஆச்சாரியாவும் ஒருவர். இந்தத் தூதுக்குழுவிற்கு மகேந்திர பிரதாப் தலைமை யேற்றிருந்தார். முகமது பரக்கத்துல்லா, அப்துல் ராப், ஆச்சாரியா, தலிப் சிங் கில், இப்ராஹிம் ஆகியோர் குழுவில் இடம்பெற்றிருந்தனர். இந்தக் குழு 1919 மே மாதத்தில் லெனினைச் சந்தித்ததாக சில ஆண்டுகளுக்கு முன்பு கூறப்பட்டது. ஆனால், அநேகமாக 1919, ஜூலை மாதத்தில் இந்தச் சந்திப்பு நிகழ்ந்திருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது. லெனினுடனான சந்திப்பை முடித்து சிறிது நேரத்தில், மகேந்திர பிரதாப், ஆச்சாரியா, அப்துல் ராப் பார்க் ஆகிய மூவரும் காபூலுக்குச் சென்றனர். ஆப்கன் அரசுக்கு அரசியல் நிமித்தமாகச் சென்ற சோவியத் அரசுத் தூதரான சூரிட்ஸ் என்பவருடன் சேர்ந்து இவர்களும் காபூல் செல்லும்படி ஏற்பாடு செய்யப்பட்டது.

அவர்கள் 26, டிசம்பர், 1919 அன்று காபூலைச் சென்றடைந்தனர். இந்தியாவிலிருந்து ஆப்கானிஸ் தான் உள்ளே வந்துகொண்டிருந்த முகஜிரின் களிடையேயும், இந்திய எல்லையில் வசித்துவந்த இந்தியர்களிடையேயும் செய்யப்படவேண்டிய புரட்சிக் கொள்கைப் பிரசாரம், செயல்பாடு தொடர்பாக மகேந்திர பிரதாப் இன்னும் அவருடன் சென்ற சிலருக்கும், ஆச்சாரியா, அப்துல்ராப் உள்ளிட்டோருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. ஆச்சாரியாவும், அப்துல்ராவும் சேர்ந்து ‘இன்குலாப் - இன் - ஹிண்ட்’ (இந்தியப் புரட்சியாளர் சங்கம்) என்னும் தனிக்கட்சி ஒன்றை நிறுவினர். அமீர் ஆங்கிலேயர் களுடன் பேச்சு வார்த்தை நடத்தி, அவர்களுடன் ஓர் ஒப்பந்தம் செய்துகொள்ளும் முயற்சியில் இறங்கியிருந்ததால் ஆப்கானிஸ்தானில் ஆங்கிலேயர் களுக்கு எதிரான எந்த நடவடிக்கையையும் எந்த ஓர் அமைப்போ, கட்சியோ மேற்கொள்ள அனுமதிக்க விரும்பவில்லை. அவர் (அமீர்) அப்துல்ராப், ஆச்சாரியா, இன்னும் அவர்கள் கட்சியினர்கள் காபூலை விட்டு வெளியேற வேண்டும் என்று ஆணையிட்டார். உடனே, ரஷ்யத் தூதரான சூரிட்ஸ் அவர்களைத் தாஷ்கண்டுக்கு அனுப்பி வைத்தார். 1920 ஜூலையில், ஆச்சாரியாவும், அப்துல்ராபும் தாஷ்கண்டுக்குச் சென்றனர்.

ஆச்சாரியா இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக சோவியத் யூனியனில் தங்கியிருந்தார். 1920, ஜூலையில் நடைபெற்ற மூன்றாம் அகிலத்தின் இரண்டாவது மாநாட்டில் தூதுக்குழு என்ற தகு நிலையுடன் கலந்துகொண்ட ஆச்சாரியா, 1921, ஜூலையில் நடைபெற்ற மூன்றாவது மாநாட்டிலும் பங்கு கொண்டார்.

சோவியத் யூனியனில் தங்கியிருந்தபோது, ஆச்சாரியா, எம்.என்.ராய் 17, அக்டோபர், 1920-இல் தாஷ்கண்டில் தோற்றுவித்த இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினராக இருந்தார். அவர் அவ்வப் போது இந்தியாவுக்கு ஆயுதங்களை அனுப்பும் முயற்சியில் எல்லைவாழ் பழங்குடியினரைத் தயார்ப் படுத்திக் கொண்டிருந்தார். அதற்காக இந்திய - ஆப்கன் எல்லையில் உள்ள ஃபெர்கானாவில் சில சமயங்களில் முகாமிட்டிருந்தார். ராயுடனும், அவரது செயல்படு முறையிலும் வேறுபாடு கொண்ட ஆச்சாரியா ஓரிருமுறை தாஷ்கண்டிற்கும் மாஸ் கோவிற்கும் போவதும் வருவதுமாக இருந்து, பின்னர் 1921-ஆம் ஆண்டு இறுதியில், வீரேந்திர நாத் சட்டோபாத்யாயவுடன் மாஸ்கோவுக்கு வந்திருந்த இந்தியப் புரட்சியாளர்களுடன் களப் பணியாற்றினார்.

இந்தியப் புரட்சியாளர்களால் செய்ய முடிந்த கொள்கைப் பிரசாரம், களப்பணியைப் பற்றிய சிக்கல் குறித்தும், மூன்றாம் அகிலத்தில் நோக்குநிலை, செயல்பாட்டு அணுக வேண்டிய முறை குறித்தும் விவாதிப்பதற்காக வீரேந்திரநாத் மாஸ்கோவுக்கு வந்திருந்தார். ஆனால், இந்தப் புரட்சியாளர்களுக்குள்ளேயே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள், கம்யூனிஸ்ட் அகிலத்தின் செயலாளருடன் அந்தக் காலகட்டத்தில் மிகுந்த செல் வாக்கு கொண்டிருந்த எம்.என்.ராயின் அதிகாரப் போக்கு ஆகிய காரணங்களால், 1921ஆம் ஆண்டு இறுதிக்குள் அவர்களுள் பெரும்பாலோர் மாஸ் கோவிலிருந்து வெளியேறி பெர்லினுக்குச் சென்றனர். 1922-ஆம் ஆண்டு இறுதியில் எம்.பி.டி. ஆச்சாரியாவும் அவர்களோடு இணைந்துகொண்டார்.

1922 இறுதியில் அல்லது 1923 தொடக்கத்தில் ஆச்சாரியா பெர்லினில் இருந்தார் அல்லது இரண்டு ஆண்டுகளிலும் தங்கியிருந்திருப்பார் என்றும் கருதலாம். 1917 முதல் 1922 இறுதி வரை அவரது வாழ்க்கையையும், இயக்க நடிவடிக்கை களையும்பற்றி நமக்குக் கிடைக்கப்பெறும் தகவல்கள் மிகவும் சுவையானவை.

1923-க்குப் பிறகு ஆச்சாரியா அரசியல் நடவடிக் கைகளில் மிகவும் மிதமாகப் பெயரளவிலே செயல் பட்டதாகத்தான் தெரிகிறது. 1923 முதல் அவர் இந்தியாவுக்குத் திரும்புவதற்கான முயற்சிகளை மேற்கொண்டார். 1927-இல் தோற்றுவிக்கப்பட்ட ஏகாதிபத்தியத்திற்கு எதிரான அணியின் முன்னோடி யான ஒடுக்கப்பட்ட தேசிய இனங்களின் அணிக் கான நிர்வாக அலுவலில் வீரேந்திரநாத் சட்டோ பாத்யாயவுடன் அவர் செயலாற்றிக் கொண்டிருந் தார். சுபாஷ் போஸ் பெர்லினில் இருந்தபோது, ஆச்சாரியா அவரைச் சந்தித்தார்.

1935ஆம் ஆண்டு ஆச்சாரியா இந்தியாவுக்குத் திரும்பினார். அதற்கு முன்னரே இந்தியாவுக்கு வருவதற்கான முயற்சியை மேற்கொண்டிருந்தார் ஆச்சாரியா. 1925-இல் பெர்லினில் உள்ள பிரிட்டிஷ் தூதரகத்தில் கடவுச்சீட்டு கேட்டு விண்ணப்பித் திருந்தார். இலண்டனில் உள்ள வெளியுறவுத் துறை அலுவலகத்திடம் கலந்தாலோசித்து, அவர் இந்தியாவுக்குச் செல்வதற்கென்று விதிக்கப்படும் கட்டுப்பாடுகளுக்கு உட்படவேண்டுமென்றும், இந்தியாவில் நுழையும் வேளையில் அவர் கைது செய்யப்படமாட்டார் என்று உத்தரவாதம் அளிக்கப்பட முடியாது என்றும் அவருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆகவே அவர் 1935 வரை இந்தியாவுக்கு வரவில்லை. அவர் மக்தா நாட்ச்மான் என்னும் ரஷ்யப் பெண்ணைத் திருமணம் செய்திருந்தார்; அவர் ஒரு கலைஞர். ஆச்சாரியா சென்னை, இன்னும் சில முக்கிய நகரங்களுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இறுதியில் பம்பாயில் குடியேறினார்; அதன் பிறகு 1954, மார்ச் மாதம் அவர் இயற்கை எய்திய காலம் வரை அங்கேயே நிரந்தரமாக வசித்து வந்தார்.

ஆச்சாரியா இந்தியாவுக்கு வந்த பிறகு 19 ஆண்டுகள் வரை வாழ்ந்திருந்தாலும், தீவிர அரசியல் பணிகளில் அவருடைய பங்களிப்பு மிகமிகக் குறைவு என்று கூறப்படுகிறது. அவர் செய்தித்தாள்களுக்குச் சில கட்டுரைகளை எழுதினார். 1951-1953 காலத்தில் ‘ஹரிஜன்’இதழுக்கு எழுதினார். இந்தக் கால கட்டத்தின் விடுதலைப் போரில் - அதாவது, விடுதலைப் போரின் இறுதிக் கட்டத்தில் அவர் ஒரு பங்களிப்பாளர் என்று சொல்லக்கூடிய அளவுக்குத் தகவல் எதுவும் கிடைக்கப் பெறவில்லை.

மூன்று முக்கியமான காலப் பகுதிகள்

ஆச்சாரியாவின் வாழ்க்கையிலும், பணியிலும் மிக முக்கியமான காவல் பகுதிகள் மூன்று என்று பிரித்துக் கொள்ளலாம்.

1905-1908 முதலாக தீவிர அரசியல் இயக்கத்தில் அவர் முனைப்பாகப் பங்கு வகித்த காலப் பகுதி முதல் காலப் பகுதியாகும். தொடக்ககால ஏகாதி பத்திய எதிர்ப்புக் காலமான இந்தக் காலப்பகுதி தான் இந்திய விடுதலை இயக்கத்தில் மிகமிக முக்கியமான காலம் ஆகும். இந்த வேளையில் அவர் தென் இந்தியாவில், குறிப்பாக, தமிழ் நாட்டில் ஆற்றிய பணிகள் முக்கியமானவை.

இரண்டாவது முக்கியமான காலப்பகுதி 1909-1917 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் வெளிநாடுகளில் முகாமிட்ட காலம். இந்தக் காலப் பகுதியில்தான் வெளிநாடுகளில் இருந்த இந்தியப் புரட்சியாளர்களின் செயல்பாடுகள் சிலவற்றுடன் ஆச்சாரியா நெருக்கமாகத் தொடர்பு கொண்டிருந்தார்.

மூன்றாவது காலப்பகுதி 1917-க்கும் 1923-க்கும் இடைப்பட்ட பகுதி. இந்தக் காலப் பகுதியில்தான் வீரேந்திரநாத் சட்டோபாத்யாயவுடன் சேர்ந்து சமதர்மவாதிகளுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொண்ட காலம். அதாவது, எல்லாத் தேசிய இனங்களுக்கும் சுயநிர்ணய உரிமை கோரி போல்ஸ்விக்குகள் போராடுவார்கள் என்று அறியப்பட்ட காலத்துக்கு, (போல்ஸ்விக்குகளின் புரட்சி) சற்று முன்பு, சீர்திருத்தவாதிகளாகவும், ரஷ்ய புரட்சிகர சமதர்ம ஜனநாயகவாதிகளாகவும் (Revolutionary Social Democrats of Russia) உருவெடுத் திருந்த சமதர்மவாதிகளுடன் (Socialists) தொடர்பு ஏற்படுத்திக் கொண்ட காலப்பகுதி.

வெளிநாடுகளில் முகாமிட்டிருந்த இந்தியப் புரட்சியாளர்கள் இந்தியாவில் ஆங்கிலேய ஆட்சிக்கு எதிரான போராட்டத்தில் எகிப்திய தேசியவாதிகள், பிரிட்டிஷ் ஆதிக்கத்திற்கு எதிரான விடுதலைப் போராட்டத்தை நடத்திக் கொண்டிருந்த அயர் லாந்து போராளிகள் போன்றவர்களிடமிருந்து ஆதரவையும், தோழமையையும் எதிர்பார்த்தனர். இங்கிலாந்துக்கும் ஜெர்மனிக்கும் இடையேயான தீவிரப் பகைமை முதல் உலகப் போர் என்கிற அளவுக்கு வெடித்த வேளையில், அவர்கள் இங்கி லாந்தின் பகைவரிடமிருந்து ஆயுத வகையில் ஆதரவை எதிர்பார்க்க வேண்டிய நிலையைக் கடந்தனர். இறுதியாக, போர் முடிகிற வேளையில் சமதர்மம் என்று கருத்துரைத்துவிட்டு, ஏகாதி பத்தியத்தை ஆதரித்த சமதர்மவாதிகளுக்கும், உண்மையிலேயே ஒடுக்கப்பட்ட அனைத்துத் தேசிய இனங்களின் விடுதலையை ஆதரித்து நின்ற சமதர்ம வாதிகளுக்கும் இடையேயான வேறுபாட்டை இந்தியப் புரட்சியாளர்களுள் ஒரு சிலராவது புரிந்துகொள்ள முடிந்தது. அப்படிப் புரிந்துகொண்ட வெகு சிலருள் ஆச்சாரியாவும் ஒருவர்; அந்தப் புரிதல்தான் அவரை 1919-இல் சோவியத் ரஷ்யாவை நோக்கி உந்தித் தள்ளியது. அங்கே அவர் 1922 ஆம் ஆண்டு இறுதிவரை சில புரட்சி நடவடிக்கைகளில் பங்கு கொண்டார்.

தென்இந்திய ஆய்வுமையம் வெளியிட்ட “M.P.T.ACHARYA : HIS LIFE AND TIMES” என்னும் நூலில் “M.P.T. ACHARYA’S LIFE – A BRIEF SKETCH” என்னும் தலைப்பில் இடம்பெற்றுள்ள இயலின் தமிழாக்கம்.

Pin It