மும்பை என்று சொன்னாலே போதும். நான் எதைக் கூற வருகிறேன் என்பது உங்களுக்குப் புரிந்து விடும். பன்னிரண்டு தீவிரவாதிகளின் கோரச்செயல் அனைவரையும் உலுக்கியிருக்கிறது. 'எதற்குச் சுடுகிறார்கள் என்பதை அறிவதற்கு முன்னரே குண்டடிபட்டு பலர் கொலையாகி இருக்கிறார்கள். செய்தித்தாள்களில் இரண்டு வயதுக் குழந்தை தாயையும் தந்தையையும் இழந்து அழுது கொண்டிருப்பதை வெளியிடுகிறார்கள். அந்தக்குழந்தையைப் பார்த்தாவது கொடுஞ்செயல் புரிந்தவர்களுக்கு இரக்கம் வராதா? குழந்தையின் ஏக்கத்திற்குக் கல்நெஞ்சங்கள் கரையாதா? தொடர்வண்டியை விட்டுவிட்டதால் தங்கையின் இல்லத்திற்கு மகிழுந்தில் சென்ற ஐதராபாத்து வழக்கறிஞர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டிருக்கிறார். தாம் பயணிப்பது மரணப்பாதையில் என அப்போது அவர் அறிந்திருப்பாரா?

சென்னையைச் சேர்ந்த பெண் தொடர்வண்டி நிலையத்தில் துப்பாக்கிச்சூட்டிற்கு அஞ்சிக் கீழே விழுந்து தலையில் பலத்த அடிபட்டிருக்கிறார். நான்கு நாட்களில் திருமணம் என்ற கனவுடன் இருந்த அப்பெண் தற்போது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார். இதை அறிந்து அப்பெண்ணின் தாய் தந்தை எப்படிப் பதைபதைத்திருப்பார்கள்? இப்படிச் சொல்லில் அடங்காச் சோகங்கள் எத்தனையோ?

எதற்காகச் சுட்டார்கள்? யாரைக் குறிவைத்தார்கள்? எங்கிருந்து உருவாகியது இந்த அமைப்பு? இப்படி விடை தெரியா வினாக்கள் பல. எப்படி வந்தார்கள்? யார் இவர்களுக்கு உதவினார்கள்? கடல்வழியே வந்த இவர்களுக்குப் பாகிசுதான் உளவு நிறுவனம் உதவியிருக்கிறது. இதுதான் இந்தியாவின் குற்றச்சாற்று இப்போது. பாகிசுதான் நமக்குப் பகை நாடு என ஏற்கெனவே சித்திரிக்கப்பட்டுவிட் ட்டது. எனவே பாகிசுதான் ஏன் உதவியது என்ற கேள்வி யாருக்கும் எழவில்லை. கடல் வழியே வந்தார்கள் என்றால் கடலோரக்காவல் படை என்ன செய்து கொண்டிருந்தது? கடலோரத்தை விடுங்கள்; இந்தியக் கப்பற்படை என்ன செய்து கொண்டிருந்தது? உலகின் ஏழாவது மிகப்பெரிய கப்பற்படை என்று பறையறைந்துகொள்கிறார்கள்; சோமாலியத்தைச் சேர்ந்த கடல்கொள்ளையர்களிடமிருந்து இந்தியர்களை இந்தியக்கப்பற்படை மீட்டது எனப்பெருமைப்பட்டுக்கொள்கிறார்கள். (இவர்கள் கடல்கொள்ளையர்களைச் சுட்டு வீழ்த்தவில்லை என்பது வேறு செய்தி!)

ஐம்பதாயிரம் பேருக்கும் அதிகமானோர் பணியாற்றும் இந்தியக்கப்பற்படையால் இருபது பேர் ஊடுருவுவதைக் கண்காணிக்க முடியவில்லையா? கடல் எல்லை என்றெல்லாம் ஏதோ கூறுகிறார்களே! இந்தியக் கடல் எல்லைக்குள் யாரேனும் நுழைந்தால் உடனே கண்காணித்திட வேண்டாமா? இப்படிப்பட்ட பல கேள்விகளுக்கு விடைகளே தெரியாமல் போய்விடுகின்றன. மும்பையில் இருபதுபேர் இருநூறுபேரைக் கொன்றதும் இந்தியாவில் தீவிரவாதம் தலைதூக்கிவிட்டது; இந்தியர்களின் உயிர்களுக்குப் பாதுகாப்பு இல்லை எனக் கூக்குரலிடுகிறார்களே! இறந்தவர்களின் நிலை எண்ணி உருகுகிறார்களே!

மனித உயிர் விலை மதிப்பிட முடியாத ஒன்று தான். ஐந்து நட்சத்திர உணவகங்களில் தங்கியிருந்த, பல்லாயிரம் உரூபாய் வரி செலுத்தும் பணக்காரர்கள் நிலையே இப்படி எனில், அன்றாடங்காய்ச்சிகள் இறந்திருந்தால் அக்குடும்பங்களின் நிலை என்னவாகும்? அப்படிப்பட்ட குடும்பங்களில் வருமானத்திற்கு ஒரே வழியாக இருப்பவன் குடும்பத்தலைவன் மட்டுமே; பணத்தோடு வருவான் என நினைத்திருக்கும்போது அவனே பிணமாகத் திரும்பிவந்தால்? இலங்கைக் கடற்படையால் சுட்டுக்கொல்லப்பட்ட நூற்று முப்பத்தைந்து இந்திய மீனவர்கள் இப்படிப் பிணங்களாகத்தான் வந்தார்கள். கடலில் தெரியாமல் இலங்கைக் கடல் எல்லைக்குள் சென்றது மட்டுமே அவர்கள் செய்த தவறு.

குடும்பத்தின் ஒரே வருவாயும் போனபின் தெருவுக்கு வந்துவிட்டன அவர்களின் குடும்பங்கள். கடலன்னையின் ஆழிப்பேரலையின் சீற்றத்தில் தப்பியவர்கள் கூட இலங்கைக் கடற்படையின் கோரப்பிடியில் கொலையுண்டு போனார்கள். நடுக்கடலில், தான் செய்த தவறு என்ன என்பதை அறியும் முன்னரே துப்பாக்கிச்சூட்டிற்கு இரையாகும் மீனவர்களைக் காப்பாற்றுவாரே இல்லையா? மும்பையில் இறந்தவர்களுக்கும் இவர்களுக்கும் ஒரு வேறுபாடும் இல்லையே! 'கரைமேல் பிறக்க வைத்தான்! எங்களைக் கண்ணீரில் குளிக்க வைத்தான்' என்ற பாடல்வரிகள் இன்றளவும் உண்மையாகத்தானே இருக்கின்றன.

எதிரி நாடாகக் கூறப்படுகின்ற பாகிசுதான் கூட எல்லை தாண்டி வந்த 'சரப்சித்து சிங்கு' என்ற இந்திய மீனவனின் தூக்குத்தண்டனையை நிறுத்தி வைத்திருக்கிறதே! இருபது பேரைக் கொண்டு மும்பையில் இருநூறு பேரை ஈவு இரக்கமின்றிக் கொல்லத் தூண்டியதாகப் பாகிசுதான் மீது இந்திய அரசு குற்றம் சுமத்துகிறது. இதற்கு ஒரு படி மேலே போய்ப் 'பாகிசுதான் மீது போர் தொடுக்கத் தயங்க மாட்டோம்!' என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாபு முகர்சி அறிவிக்கிறார். இருநூறு பேர் சாவுக்குக் காரணமாகப் பாகிசுதான் இருக்கிறது என்றால் அதே தவற்றைத் தானே இலங்கையும் செய்கிறது ? பாகிசுதான் மீது போர் தொடுக்கத் துணியும் இந்திய அரசு இலங்கையைக் கண்டிக்கக்கூட இல்லையே!

கண்டிப்பது இருக்கட்டும்! வட்டியில்லாமல் இலங்கை இராணுவத்திற்கு இரண்டாயிரம் கோடி ரூபாய் உதவியளிக்கிறதே! விடுதலைப்புலிகளை அழிக்கிறோம் என்கிற சாக்கில் தமிழ் மக்களைப் பூண்டோடு அழிக்க எண்ணுகிறது இலங்கை. அந்த நாட்டிற்கு 'இராடார்' கருவி, கருவிப்பயிற்சி, 'தொழில்நுட்ப வல்லுநர்களை அனுப்பிவைப்பது என உதவிகளை இந்தியா வாரி வழங்குவது ஏன்? 'வானத்திலிருந்து போடப்படும் குண்டுகள் விடுதலைப்புலிகளை மட்டுமே கொல்லும்; மற்ற தமிழர்களைக் கொல்லா' என இலங்கை கூறுவதைப் படிக்காத மக்கள் கூட நம்பமாட்டார்கள். ஆனால் இந்திய அரசு நம்புகிறது. உலகச்சாதனை எனக்கூறக்கூடிய அளவில் அறுபது ஐரத்திற்கு (கிலோமீட்டர்) மனிதச்சங்கிலி, அனைத்துக் கட்சித் தலைவர்களின் வேண்டுகோள்கள், சட்டமன்றத்தில் தீர்மானம், திரைத்துறைப் போராட்டம், வணிகர் போராட்டம், உண்ணாநிலை என காந்திய வழியில் அனைத்துப் போராட்டங்களையும் நடத்தியிருக்கிறோம். அதன்பின்னும் இலங்கை அதிபர் 'போரைத் தொடர்வோம்' என மன்மோகன்சிங்கைச் சந்தித்தபிறகு புதுதில்லியிலேயே அறிவிக்கிறார்.

நாட்டுக்குள் தீவிரவாதிகளை ஏவிவிடும் பாகிசுதான் மீது போர் தொடுக்கக் காட்டும் துணிச்சலை 'எங்கள் மீனவர்களைக் கொல்லாதே! மீறிக் கொன்றால் உன் நாட்டின் மீது பொருளாதாரத் தடை விதிப்பேன்!' என இலங்கையிடம் கூறிக் காட்டி இருக்கலாமே! அருணாச்சலப்பிரதேசம் எங்கள் பகுதி எனக் கூறுகிறது சீனம்; அந்நாட்டிற்குத் தென்னிந்தியாவைத் தாக்க உதவும் வகையில் இடம் அளித்து அண்மையில் இலங்கை உதவியிருக்கிறது; எழுபதுகளில் இந்திய - பாகிசுதான் போர் நடந்தபோது பாகிசுதான் வான் ஊர்திகள் எரிபொருள் நிரப்ப இடம் அளித்து இலங்கை உதவியதை யாரும் மறந்திருக்க முடியாது. இப்படிக் கூட இருந்தே குழி பறிக்கும் 'உற்ற நண்பனாக' விளங்கும் இலங்கைக்கு ஏன் இத்தனை உதவிகள் செய்யப்படுகின்றன?

மும்பையில் நடந்தது மனிதநேயமற்ற படுகொலை எனில் நம்முடைய இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் சுட்டுக் கொல்லப்படுவது ஈவு இரக்கமற்ற படுகொலை இல்லையா? அல்லது அந்த மீனவர்களின் உயிர்கள் அவ்வளவு முதன்மை இல்லையா? எத்தனையோ முறை இந்திய அரசைத் தமிழகத் தலைவர்கள் வேண்டிய பிறகும் இந்திய அரசு செவி சாய்க்க மறுக்கிறதே! ஏன்? எங்களின் சொந்தங்களான மீனவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கும் கடமை இந்திய அரசுக்கு உள்ளதா இல்லையா? நீங்களே ஒரு விடை கூறுங்கள்! விடை கூற முடியாதவர்கள் தயவு செய்து இக்கட்டுரையின் தலைப்புக்காவது விடை கூறுங்களேன்!

ஏங்கித் தவிக்கும்
ஓர் இந்தியத்தமிழன்

-
முத்து

Pin It