சட்டமன்றத்தில் எதிர்க் கட்சிகள் புறக்கணிக்கப்படுகின்றன. விவாதங்கள் மறுக்கப்படுகின்றன. 40 நாட்கள், 60 நாட்கள் விவாதம் நடத்தி முடிவெடுக்க வேண்டிய நிதி நிலை அறிக்கை மீது விவாதமே இல்லாமல் ஒரே நாளில் எல்லாம் நிறைவேற்றப்படுகின்றன என்று எதிர்க்கட்சிகள் சட்டமன்ற உரிமைகளுக்காகவும் மரபுகளுக்காகவும் போராட நேர்ந்தது. ஆனால், ஜெயலலிதா தனது முடிவில் கறாராக இருந்தார். அவரைப் பொறுத்த வரை நாடாளுமன்ற ஜனநாயகம் என்பதும், விவாதங்கள் என்பதும் அர்த்தமற்றவை.

Hitler‘மந்தைக் கூட்டத்தால்’ தேர்ந்தெடுக்கப்பட்ட முட்டாள்களுடன் விவாதிப்பது அழகல்ல என்று நம்பிய இட்லர் ‘மெய்காம்ப்’ என்னும் தனது நூலில் ஜெயலலிதாவின் உணர்வுக்கு இதந்தரும் விதத்தில் எழுதிய பகுதி இது: இவ்வுலகில் எப்போதுமே மேதாவியின் நடவடிக்கையானது பொது ஜனங்களின் அறியாமையையும், அசமந்தத்தையும் கண்டிப்பதாகவே இருக்கும். அப்படியிருக்க தமது கொள்கைக்கு ஆதரவைத் தேடுவதற்காக நாடாளுமன்ற (சட்டமன்ற) அங்கத்தினர்களைத் திருப்தி செய்ய முடியாவிடில் (உன்னைப் போல்) ஒரு ராஜதந்திர நிபுணர் என்ன செய்வது? பிடிவாதமும் மடத்தனமும் உள்ள ஒரு கூட்டத்தைத் திருப்தி செய்ய முடியவில்லை என்றால், தேசத்தின் வாழ்விற்கே உயிர்நாடி போல் தோன்றும் முறைகளை நடைமுறைக்குக் கொண்டு வராமல் விட்டு விடுவதா அல்லது விலகி விடுவதா?

(உன்னைப்போல்) உண்மையான தலைவர், தம்மை வயிற்றுப் பிழைப்பு அரசியல்வாதிகளுக்குச் சமமாக (சட்டமன்றத்தைக் கூட்டி) இழிவுபடுத்திக் கொள்ள முடியுமா? பெரும்பான்மையோரின் முடிவை ஆதாரமாகக் கொண்ட நம் நாடாளுமன்ற ஜனநாயக முறை, உண்மையான தலைவர்கள் வருவதற்கே வழியின்றிச் செய்வதாக இல்லையா?

மானிட இனத்தின் முன்னேற்ற முறைகள் தனி நபரின் மூளையிலிருந்து உதயமாகின்றனவா அல்லது பெரும்பான்மையோரின் மூளையிலிருந்து உதயமாகின்றனவா?

(உன்னைப் போன்ற) மேதாவிகளின்றி மனித இனம் எதிர்காலத்தில் திருப்திகரமாகத் திகழ முடியுமா? அதிலும் முக்கியமாக தற்போது மகத்தான படைப்பாற்றல் பொருந்திய தனி நபரின் மூளை இன்றியமையாததல்லவா! பெரும்பான்மையோரின் தீர்ப்பை ஆதாரமாகக் கொண்ட நாடாளுமன்ற முறையானது, தனி நபரின் அதிகாரத்தை அதாவது அவரது புத்தி சாதுர்யத்தினால் ஏற்படக் கூடிய பலனை நிராகரிக்கிறது.

‘அறிவாளிகளின்’ அதிகார முறை என்ற மூலாதாரமான இயற்கை நியதிக்கு (அதாவது மனுதர்மத்துக்கு) நாடாளுமன்ற ஆட்சி எதிர்ப்பானதாகும். நாடாளுமன்ற ஜனநாயக முறையின் நாசகரமான பலனை பத்திரிகைகளை வாசிப்போர் உணர்ந்துக் கொள்ள முடியாது.

புன்மனமும் மத்தியதர வர்க்கத்து அறிவும் படைத்த (சூத்திரப்) பேர்வழிகளால் ஆக்கிரமிக்கப்படும் ஒரு சபையில் (சட்டமன்றத்தில்) இணையற்ற மேதைமையும் நிர்மாண சக்தியும் வாய்க்கப் பெற்ற தனி நபர் எவ்விதம் இடம் பெற்றுத் தம்முடைய கருத்துக்களையும் கொள்கைகளையும் உருவகப்படுத்த முடியும்?

அத்தகைய அறிவாளியைக் கண்டால் அக்கூட்டத்தினருக்குப் பொறாமையும் வெறுப்புமே உண்டாகும். பெரும்பான்மையோரை எப்படியாவது திருப்தி செய்யும் பேர்வழிகள்தான் அதில் வெற்றியடைய முடியும். எனவே அத்தகைய சபை அற்ப புத்தி படைத்தவர்களையே ஆதரிக்கும்.

Hitlerபொறுப்பேற்கப் பயந்து பதுங்குவோருக்குத்தான் பார்லிமெண்ட் (சட்டமன்றம்) தகுதியான இடம். அஞ்சா நெஞ்சமும், துணிவும், பொறுப்பேற்று மார் தட்டும் தைரியமும் உள்ளவர்களுக்கு அங்கு இடமில்லை. தப்பித்தவறி ஒரு சிறந்த மேதை அச்சபைக்கு வந்து விட்டால் அவரை வீழ்த்தும் விஷயத்தில் மற்றெல்லோரும் ஒன்று சேர்ந்து விடு வார்கள். ‘பெரும்பான்மை யோர்’ அறியாமைக்கு மாத்திரமல்ல; கோழைத்தனத்திற்கும் பிரதிநிதிகளாக இருக்கிறார்கள். நூறு மடையர்கள் ஒரு மேதாவிக்கு (உனக்குச்) சமமாவார்களா?

பொதுஜன வாக்குரிமையின் மூலம் ராஜ தந்திரிகளைச் சிருஷ்டித்துவிட முடியாது. அனைத்து மக்களின் வாக்குரிமையிலிருந்து மேதாவிகள் உருவாகிறார்கள் என்பதைக் காட்டிலும் மடத்தனமான எண்ணம் வேறெதுவும் இல்லை.

பேரவையின் நூற்றுக் கணக்கான அங்கத்தினர்களில் ஒரு சிறந்த ராஜதந்திரி இருப்பதே அபூர்வம். சர்வ சாதாரண அறிவு படைத்த - இந்த உறுப்பினர்களையொட்டி மிக மிக முக்கியப் பிரச்சினைகளில் முடிவு செய்ய வேண்டியிருக்கிறது. அவர்களில் பத்தில் ஒருவர்கூட பொருளாதாரப் பிரச்சினையின் அரிச்சுவடியை அறிந்திருக்க மாட்டார். இந்நிலையில் தேசத்தின் விதியையே நிர்ணயிக்கக் கூடிய விஷயங்களில் இவர்களால் என்ன முடிவு எடுக்க முடியும்?

இந்த உறுப்பினர்கள் பல்வேறு பிரச்சினைகளில் திருப்திகரமான முடிவெடுக்கத் தகுதியானவர்கள் என்று எவரும் கூற முடியாது. சிறந்த முடிவெடுக்கும் மேதை ஒரு நூற்றாண்டுக்கு ஒருமுறைதான் பிறப்பார். எனவே பார்லிமெண்ட் - சட்டமன்றத்தை அலங்கரிக்கும் பெரும்பாலோரும் அரசியல் சூதாட்ட மேஜைக்குத் தகுதி உடையவர்கள் அல்ல.

ஒரு சபை என்றிருந்தால் அதிலுள்ள சகலரும் குறிப்பிட்ட பிரச்சினைகளில் நிபுணர்களாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஒரு சில நிபுணர்கள் அடங்கிய கமிட்டிகள் இருந்தால் போதும், அவை கூறும் ஆலோசனைகளை ஆதாரமாகக் கொண்டு சபை முடிவு செய்யலாம் என்று சிலர் வாதிக்கலாம். அவ்விதமாயின் ஒரு சில நிபுணர்கள் முடிவு செய்ய வேண்டிய பிரச்சினைகளை ஒன்றுக்கும் உதவாத ஐந்நூறு பேர் ஏன் விவாதித்துக் காலத்தைக் கழிக்க வேண்டும்?

- இளவேனில்

Pin It