thavalai-kal-sirumi 400(கார்த்திக் நேத்தாவின் “தவளைக்கல் சிறுமி” தொகுப்பை முன்வைத்து)

அச்சுக்குப் போவதற்கு முன்பே கார்த்திக் நேத்தாவின் “தவளைக்கல் சிறுமி” நூலை வாசித்துப் பார்க்கும் வாய்ப்புக் கிட்டியது. அப் போது அதற்குத் “தொல்காப்பியனின் பூனை” என்று அவர் பெயரிட்டிருந்ததாக நினைவு. தொகுப்பைப் படித்து விட்டு ‘குழந்தையும் மனிதனும்’ என்கிற ஒரே ஒரு கவிதையை மட்டும் விலக்கும்படி  கேட்டுக் கொண்டேன். ‘நான் தற்கொலை செய்து கொள்ள வேறென்ன பெரிய காரணம் வேண்டும்’ என்று அக்கவிதை முடியும். அவர் கடைசி வரை அதை ஒப்புக் கொள்ளவில்லை.

ஒரு நண்பனாக அவருடைய மன உலகைப் புரிய முயன்று எப் போதும் தோற்றே வந்திருக்கிறேன். அதில் அவ்வப் போது வெற்றியும் கிடைத்துவிடும். “அம்மணமும் அற்றதே என் ஆடை” என்கிற அவரின் வரிகளே அதற்கு உதவி செய்யும். தற்கொலை செய்யக் காரணம் என்பது வாழ்வதற்கான முயற்சி என்று சொல்லி என்னை ஒரேயடியாகச் சாய்த்துவிட்டார்.

கருப்பட்டித் துண்டுக்கு ஏங்கிய நாய்போல நல்ல கவிதை ஒன்றைப் படித்து விட மாட்டோமா என்று ஏங்கி அலைவதென் இயல்பு. கவிதை ரசிகர்கள் அனைவருக்கும் இதுதான் இயல்பாக இருக்கும். உண்மையான கவிதை அனுபவத்திற்கு ஏங்கித் திரிபவர்கள் நீங்கள் என்றால் இந்தத் தொகுப்பை நீங்கள் படித்துத்தான் ஆக வேண்டும். கடந்த ஐந்து ஆண்டுகளில் ஒரு வாசகனாக என் அயற்சியைப் போக்கியது இத்தொகுப்பு.

ஏனென்றால் எந்தக் கோரிக்கையும் இந்தக் கவிதைகள் வைக்கவில்லை. இச் சமூகத்திலிருந்து எதையும் பெற்றுக் கொள்ளத் துடிக்கவில்லை. மாறாக அள்ளி வழங்குகிறது. “அந்தரத்தில் விதைத்த விதை ஆகாசமாய்ச் செழித்ததடி குட்டி என் செல்லம்” என்று புத்தரும் சித்தரும் கை கோத்துக் கொண்டு வருகிறார்கள். ‘நான் பெற்று எடுப்பதற்குள் பிறந்தும் விடுகிறாள் பொம்மு’, ‘கொடிக் கயிற்றில் காயும் வெயிலை எடுத்துப் போக இரவால் மட்டும் முடியும்’ என்று எளிய தரிசன வரிகளால் வாசகன் முகத்தில் கணம் தோறும் பச்சைத் தண்ணீரைத் தெளித்துக் கொண்டே இருக்கிறது. ஒருவரி குழந்தை போல் தவழ்ந்து நம்மை நோக்கி வருகிறது. மற்றொரு வரி, ருத்ர பிண்டனாய் ஆவேசமாய் வருகிறது.

‘காற்றின் தீராத பக்கங்களில்’ என்று சொல்லிச் சொல்லித் தேய்ந்து போன பிரமிளின் கவிதை. ராமச்சந்திரனா என்று கேட்டான்? என்ற நகுலனின் கவிதை, பிறகு ஆத்மநாமின் ஒன்றிரண்டு கவிதைகள், ‘காதலைக் காதலென்றும் சொல்லலாம்’ என்ற பூமா ஈஸ்வரமூர்த்தியின் கவிதை. இப்படி ஒரு சில வரிகள்தானா நவீன கவிதையின் மைல் கற்கள்? இல்லை நிறைய வந்துவிட்டது. ‘வானம் முழுக்க தெரியும்படி ஒரு ஜன்னல்’ கேட்கிற பிரான்சிஸ் கிருபா; ‘பிளாஸ்டிக் குவளையை மதுவை ஊற்றிப் பொன்னிறக் குவளை’ ஆக்குகிற இசை; உள்ளங்கையில் ‘அன்பின் குளத் தோடு’ திரிகிற கடற்கரய்; ‘நடனப் பெண்ணின் ஆடை அவிழ்ந்து கிடக்கிறது’, ‘நிறைவேறாத காதலின் இரண்டு பெரிய கண்ணீர்த் துளிகள்...’ என்று சொல்கிற குட்டி ரேவதி; ‘பாறையில் கசியும் நீரைப் பாறையின் கண்ணீர்’ என்கிற தேன்மொழி; ‘பெண் நபி’ கேட்கிற ஹெச்.ஜி.ரசூல், இப்படி நவீன கவிதையின் ஜீவ ஓட்டத்தில் பல வரிகள் இன்னும் சேர்க்கப்படாமலே இருக்கின்றன.

நண்பர்களைக் கேட்டால் இன்னும் சேர்க்க வேண்டிய நூறு வரிகளைச் சொல்வார்கள். என்னைக் கேட்டால், “பறவை இல்லாமல் பறக்கிறது இறகு” உயர உயரப் பறந்து உயர்திணையானதென எழுதி எழுதித் தெளிகிறது இறகு. “கடற் சிறுமியின் அல்குல்”, ‘புல் என்பது பனியின் வேர்’, ‘நிறையப் பூச்சிகளைத் தின்றும் பறக்கத் தெரியாத சுடர் மனமா?’ என்று நூறு வரிகளையும் கார்த்திக் நேத்தாவின் வரி களாகவே சொல்லிவிடுவேன்.

கார்த்திக் நேத்தா தன் முன்னோடியாகக் குறிப்பிடும் கவிஞர் பிரான்சிஸ் கிருபா இருவரும் வானவில் நுனியைக் கவிதையில் அடிக்கடி தொட்டுக் காட்டியவர்கள். தள்ளுவண்டிக் கடையை ‘தள்ளுவண்டி கோவில்காரன்’ என்று எழுதி காவியம் படைப்பான் பிரான்சிஸ். இந்த வரிகளை அவருடைய ‘ஏழு வால் நட்சத்திரம்’ தொகுப்பில் படித்தபோது வியந்தேன்.

இக்கவிதை படிக்காத மக்களுக்கும் விளங்கும். நவீன கவிதையை வாசிக்க உழைப்புத் தேவை என்ற பம்மாத்தைப் போக்கியது கிருபாவின் சில கவிதைகள். மவுன வாசிப்பை மக்கள் வாசிப்பாக மாற்றும் கூறு களோடு இருப்பதை உணர்ந்து கார்த்திக் நேத்தா விடம் இந்த அம்சத்தைத் தேடிப் பார்த்தேன். அமையவில்லை, எல்லாக் கவிதையின் அடியிலும் மொழியின் சுரங்கப் பாதை நீண்டு கொண்டே போகிறது.

தவளைக்கல் சிறுமியின் முக்கிய கருது கோள்கள் என்னவென்று பார்த்தால் இதில் உலவு கின்ற குழந்தைகள், பெண்கள், நாய், மீன், காற்று, வெளி எல்லாமே துறவு நிலையில் இருக்கின்றன. அஃறிணைகள் உயர்திணை ஆகிவிடுகின்றன. இதை அவர் கவிதைகளில் காணப்படும் ஆன்மிகக் கூறு என்று சொல்வதை வாசகனாக என்னால் ஏற்க இயலவில்லை.

குழந்தைகள் பிறக்கும் போதே துறவி களாகப் பிறந்து விடுகிறார்கள். கார்த்திக் நேத்தாவின் கடவுளாகவும் அவர்களே இருக்கிறார்கள். “குளத் திற்குக் கணநேரக் கண்களைத் திறந்து விட்டுச் சிரிக் கிறாள் தவளைக்கல் சிறுமி” என்று தொகுப்பின் தலைப்புக் கவிதையில் சொல்கிறவர் ‘மழைக்கல்’ என்கிற மற்றொரு கவிதையில் “குளத்தின் கண் களாக மீன்கள் மெல்ல மெல்ல மேலே வந்து பார்க்கின்றன” என்று அசாத்திய தரிசனத்தை அளிக்கிறார்.

மழைத் துளியை உப்புச்சப்பற்ற பழ மென்று கார்த்திக் உவமிப்பது வெறும் கற்பனை நோக்கிலானது மட்டுமல்ல. எல்லா வார்த்தை களுக்கும் வாசகனின் அகத்திலிருந்து கவித்துவத்தை கிளறி எடுத்து வந்து கொட்டுகின்றன. வெறும் தரிசனமல்ல; எல்லாமே அசாத்திய தரிசனங்கள் தான். ‘ஒளி உருண்டை’, ‘இருள் முட்டை’, ‘கடவுளின் உதடுகளாய் கருப்பேறிய யோனி’, ‘மழையின் விந்துப் பிரவாகம்’, ‘சீப்பின் கூந்தல்’ இப்படிக் கவிதையில் கிடக்கும் ஒற்றை வரிகளை எப்படி எளிதில் கடப்பது! வறட்சியில் கிடக்கும் வாசகன் நூறு வரிகளையும் கார்த்திக் நேத்தாவின் வரிகளாகவே சொல்லி விடுவான் என்று சொன்ன தன் காரணம் இதுவே.

‘ஒவ்வொரு நாளும் மாற்ற வேண்டிய உடை யாக பிறப்புறுப்பும் இருக்க வேண்டும்’, ‘அறுந்து தொங்கும் கள்ளியில் ஒழுகும் பால் எனது காமம்’. ‘அப்போது போட்ட ஆட்டுப் புழுக்கைச் சூடு உனது காமம்’ எனக் காமத்தைக் கொண்டாட்டமாக்கி யவன், யோனியை “என் கடிதம் தொலைந்த  தபால் பெட்டி- அனாதிக்கனாதி அயனும்மாலும் பிறைமுடிச் சிவனும் பரிசாய் அனுப்பிய ஞானட்சரம்- சாத்தானின் கடவுள் பாகம்- போதிமரம் அறியாத பேரிலை- தேவன் காட்டும் சூடம்” என்றெழுதி தமிழ் நவீன கவிதையின் சாதனைக் கவிதையை நிகழ்த்துகிறான். அது என்ன? சாத்தானின் கடவுள் பாகம்? எத்தனை அடுக்குகளை வரலாற்றை இந்த வரி திறந்து கொண்டு போகிறது.

மண்டோதரியிடம் மணந்த ஒன்றை- நர்த்தன திலோத்தி மறுக்காத ஒன்றை- கவரி வீசிய கன்னியர் காட்டத் துடித்த ஒன்றை- சீதையிடம் கேட்டுச் சீரழிந்ததே நின் பெருங் காமம்- ராவணா. இதிகாசத்தை- புராணத்தை- மரபை- வேறொரு வார்ப்பாக்கி கான்யாற்றங் கரையமர்ந்து- காற்றதிரா வண்ணம் யாழ் மீட்டும் அற்புதத்திற்கு ராவணா ஒரு சாட்சி. பிரமிள், கார்த்திக்கின் ஆன்மாவுக்குள் இருப்பதற்கும் அந்தக் கவிதையே அத்தாட்சி.

தமிழில் பெரும்பான்மையான கவிதைகள் நனவிடைத் தோய்தலாகவே இருப்பதை- அதில் ஒரு மட்டையடித் தன்மை இருப்பதை வாசகராக அனைவரும் எளிதில் உணர்ந்திருப்போம். கார்த்திக் நேத்தாவின் கவிதைகள்தான் காட்டாற்று வெள்ள மாயிற்றே. அது எங்கேயும் தேங்கவில்லை. சொல் முறையில் கவிதைகள் நிகழ் தன்மையிலே இருக் கிறது. கவித்துவச் செறிவு ததும்பும் கவிதைகள் இப்படித்தாம் இருக்கும். ஆனால் நினைவுகூரல் கவிதை எழுதாமல் எவரும் இருக்கவே முடியாது. தவளைக்கல் சிறுமியில் அவ்வண்ணம் ‘மஞ்சள் மரணம்’ என்ற கவிதை உள்ளது. பிரபல வார இதழ் ஒன்றில் அது வெளியானது. அக் கவிதை யோடு மரபை உள்ளீடாகக் கொண்டு எழுதிய சில கவிதைகளையும் அவர் அனுப்பியதும் வெகுஜன இதழான அவ்விதழ் மஞ்சள் மரணத்தையே வெளி யிடும் என்ற எங்கள் இருவரின் முன்முடிவும் சரியாக இருந்தது.

‘இரவோடு இரவாகத் தூக்கு மாட்டிக் கொண்டே பார்வதி ஏன் என்னிடம் மட்டும் எலுமிச்சை தந்தாள்? எலுமிச்சை என்பது பழ மில்லை எனக்கு -மஞ்சள் மரணம்- மரணத்தின் புளிப்பு- சுழி உதட்டுப் பார்வதியின் சுரோணிதம் “(சுரோணிதம்- தூமை) என்று முடியும் கவிதையின் தொடக்க வரிகள் “சைக்கிள் பயிலக் கற்றுத் தந்த தாத்தாவின் விரல் பிடித்து என் ஞாபகம் நடக்கும் இந்த வீதி அதே பழைய வீதியாக இருக்குமா? எனத் தொடங்கும். இக்கவிதையின் மற்ற வரிகளும் கதைத் தன்மையோடு இருக்கும். சொல்முறையில் தொகுப்பிலிருந்து தனித்து நிற்கும் ஒரே கவிதை இது. ஆச்சரியம் என்னவென்றால் இந்தக் கவிதை முடியும் இடத்தில் கவிஞர் சாம்ராஜ் எழுதிய ‘அவள் நைட்டி அணிந்ததில்லை’ என்ற கவிதை தொடங்குகிறது.

“மரித்தலுக்குப்பின் அம்மணமாய்க் கிடக் கிறாள் மார்ச்சுவரியில். ஈக்களும் கண்களும் ‘அங்கேயே’ மொய்க்க இப்படி ஆகுமெனில் அன்பு லட்சுமி தற்கொலையே செய்திருக்க மாட்டாள்” வாழ்நிலையும் அனுபவமும் வேறு வேறு என்றாலும் இந்த இரண்டு கவிதைகளும் ஒன்றுக்கொன்று கவித்துவப் பரிமாற்றத்தை நிகழ்த்திக் கொள்கின்றன. பார்வதி- அன்பு லட்சுமி பெயர்களை மாற்றிவிட்டு இரண்டு கவிதைகளையும் ஒன்று சேர்த்துப் படிக்கலாம்.

மற்றுமொரு மாபெரும் வியப்பு என்ன வென்றால் வாழ்வே மதுவாகிப் போனவன் கவிதையில் மது எங்கேயும் இடம் பெறவில்லை. ஒருவேளை மதுவைப் புத்தராக- இலையாக- மீனாக- காற்றாக- யோனியாக- மாற்றிப் பாடி விட்டாரா, புரியவில்லை. அதைப்போல மழை கார்த்திக் நேத்தாவின் கவிதைகளில் பெரிய கவனம் பெறவில்லை. உண்மையில் மழை பெரிய கவனம் பெறாதது அவரின் கவிதைகளுக்குச் சிறப்பான அம்சம்தான். மலையாளக் கவிஞர் ஆ.அய்யப்பன் குறித்து அழகிய பெரியவன் எழுதிய சிறிய கட்டுரை ஒன்றைப் படித்தேன். அவரைப் போன்ற கட்டுடைத்த வாழ்க்கையும் எழுத்தும் தான் கார்த்திக் நேத்தாவினுடையது. இன்னும் சொல்லப் போனால் பழைய பாலச்சந்திரன் சுள்ளிக்காடு.

“தவளைக்கல் சிறுமி” தொகுப்பை ‘க்ரியா’ பதிப்பகம் தேடிப்பிடித்து வெளியிட்ட வரலாறு எனக்குத் தெரியும். இத்தொகுப்பை வெளியிட்டதன் மூலம் க்ரியா நவீன தமிழ்க் கவிதைக்கு ஒரு பொக்கி சத்தை வழங்கியுள்ளது. தமிழின் கவிதை விமர்ச கர்கள் இதனை மேலும் மதிப்பிட வேண்டும். இது எப்போதாவது நிகழக்கூடிய அற்புதம். என் நண்பர் என்பதால் மிகக் குறைவாகவே இதை மதிப்பிட்டு உள்ளேன். நீங்கள் வேறொரு கவிதா அனுபவத்தை இதில் பெறக்கூடும்.

மீண்டும் சொல்கிறேன், நீங்கள் உண்மையான கவிதை அனுபவத்திற்கு ஏங்கித் திரிபவர்கள் என்றால் இந்தத் தொகுப்பைப் படியுங்கள்.

தவளைக்கல் சிறுமி

ஆசிரியர்: கார்த்திக் நேத்தா

வெளியீடு: க்ரியா

புதிய எண்.2, பழைய எண்.25

17வது கிழக்க தெரு, திருவான்மியூர்,

சென்னை - 600 041

விலை : ரூ.100/-

Pin It