பத்தொன்பதாம், இருபதாம் நூற்றாண்டு களில் அறிவியல் தொழில்நுட்பம் வளர்ச்சியுற்று, ஏராளமான கண்டுபிடிப்புகள் உலகெங்கும் நிகழ்ந்த வண்ணம் இருக்கின்றன. உலகம் இத்தகைய முன் னேற்றத்தை அடைந்தும்கூட உலகில் சில நாடு களில் சில தலைமைகள் மனிதநேயத்தை மீறி, மக்களை ஒடுக்கி, இழிவுபடுத்தி, கொன்று குவிக் கின்றன.

அத்தகைய உலகக் கொடூர நாடுகளுள் ஒன்று இலங்கை. அங்கு அந்த நாடு, இனவாத அடிப் படையில், தன் நாட்டு மக்களையே கொன்றழித்தது.

ஒரு நபர் ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டுக்குச் சென்றால், அந்த வெளி நபரால் அந்த நாட்டின் பாதுகாப்புக்கு எந்தத் தீங்கும் நேர்ந்து விடக் கூடாது என்று அந்த நாடு எவ்வாறு எச்சரிக்கை யாக இருக்கிறதோ, அதே போல் அந்த நபரின் பாதுகாப்புக்குப் பதில் கூற வேண்டிய கடமையும் பொறுப்பும் அந்த நாட்டுக்கு உண்டு.

இந்நிலையில், இந்தியக் கடலோரத்திலிருந்து சில கிலோ மீட்டர்கள் தொலைவில் உள்ள இலங்கைத் தீவில் நிகழ்ந்தது என்ன?

இலங்கையில் இனவெறி கொண்ட சிங்கள ஆட்சி யாளர்களால் தமிழர்கள் தாக்கப்பட்டுள்ளனர்; சொத்துகள், இல்லங்கள் சூறையாடப்பட்டுள்ளன. குழந்தைகள், முதியோர்கள், பெண்கள் உள்ளிட்ட தமிழர்கள் கொத்துக்கொத்தாகக் கொல்லப்பட்டுள்ளனர்.

இப்படியெல்லாம் தாக்கப்படுகிற அளவுக்கு, கொல்லப்படுகிற அளவுக்குத் தமிழர்கள் ஆங்கிலேயர் களைப் போலக் கொள்ளையடிப்பதற்கும், கொடுங் கோன்மை புரிவதற்கும் ஆட்சியைப் பிடிப்பதற்கும் இலங்கையில் சென்று குடியேறினரா? தமிழர் களுக்கும் இலங்கைத் தீவுக்கும் இடையேயான தொடர்புதான் என்ன?

தமிழ்மொழியையும், வரலாற்றையும் ஆய்ந்த கிறிஸ்டோர் கால்டுவெல் கூற்றுப்படி, மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே உலகெங்கும் வர்த்தக உறவு கொண்டிருந்த தமிழ் மக்கள், கடல் கடந்து பிற நாடுகளுக்குச் சென்று, அந்நாடுகளின் மொழியைக் கற்று, கலாசாரப் பண்பாட்டு வழிமுறைகளையும், நெறிமுறைகளையும் பழகிக்கொண்டு, அந்த மக்களுடன் திருமணம் வாயிலாக சமூக உறவில் இரண்டறக் கலந்துள்ளனர். இலங்கையின் பண்டைய வரலாற்றைக் கூறும் மகாவம்சம் என்னும் இலக்கியத்தின் சான்று களோடு இலங்கைக்கும் தமிழ்நாட்டுக்கும் தொன்று தொட்டு விளங்கிவந்த அன்புறவினை விளக்கியுள்ளார் கால்டுவெல்.

இலங்கை அரசன் விசயன் என்பவன் பாண்டிய நாட்டு இளவரசியை மணந்தான் என்றும் ஆண்டு தோறும் இருநூறாயிரம் ரூபாய் மதிப்புள்ள சங்கும் முத்தும் பாண்டிய மன்னனுக்கு அளித்தான் என்றும் குறிப்பிட்டுள்ளார் கால்டுவெல்.

திருநெல்வேலி நகருக்கு அருகிலுள்ள ஆதிச்ச நல்லூர் அகழ்வாராய்ச்சியில் கிடைக்கப் பெற்ற சான்றுகளும், மேற்குறிப்பிட்ட தமிழர்களுக்கும், இலங்கையர்களுக்கும் இடையே உள்ள தொல் உறவை மெய்ப்பிக்கின்றன.

கரிகால் சோழன், இராஜராஜசோழன், இரா ஜேந்திர சோழன் உள்ளிட்ட தமிழ் மன்னர்கள் இலங்கை மீது படையெடுப்பை நிகழ்த்தியிருக் கின்றனர். எல்லாளன் என்னும் தமிழ் மன்னர் இலங் கையை சுமார் 40 ஆண்டுகள் வரை ஆட்சி செய் திருக்கிறான்.

பின்னர், கி.பி.பதினாறாம் நூற்றாண்டில் போர்ச்சுகீசியர்கள், டச்சுக்காரர்கள் வருகையை அடுத்து, பதினெட்டாம் நூற்றாண்டில் வர்த்தக நோக்கில் இலங்கைக்கு வந்த ஆங்கிலேயர்கள் டச்சுக்காரர்களை வென்று இலங்கையைக் கைப்பற்றி ஆளத் தொடங்கினர்.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில், 1880களில் பௌத்தருக்கும் கத்தோலிக்கருக்கும் இடையே மோதல் ஏற்பட்ட இலங்கை நகர்களில் நூறாண்டுகளுக்குப் பிறகு 1980களில் சிங்களவர் களுக்கும் தமிழர்களுக்கும் இடையே மோதல்.

அந்நிய நாட்டினர், வர்த்தகம் என்ற பாதையில் நுழைந்து அரசியல் அதிகாரம் செலுத்துகிற வேளையில், அப்போது, இலங்கைச் சிங்களவர்கள் அதனை அரசியல் போராட்டமாக நோக்கவில்லை; மாறாக, பௌத்த சமயத்தினர் கத்தோலிக்கக் கிறித்தவ சமயத்தினை எதிர்த்தனர்.

ஆனால், இருபதாம் நூற்றாண்டில் தமிழர் களை - இந்தியாவிலிருந்து, இலங்கைத் தீவுக்குச் சென்று குடியேறி, அந்தத் தீவு முழுவதையும் பதப் படுத்தி, இயற்கையின் சீற்றங்களைத் தாங்கி, அதே இயற்கை இலங்கைத் தீவில் அளித்திருந்த அத்தனை செல்வங்களையும் மேம்படுத்தி, இன்று உலகில் இலங்கையும் ஒரு நாடு என்ற நிலைக்கு உயர்த்தி யுள்ள தமிழர்களை - வாழச் சென்று வாழ்வித்த தமிழர்களை, சிங்களவர்கள் இனவாத அடிப் படையில் புறக்கணிக்கின்றனர்; துரத்துகின்றனர்.

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இலங் கையில் ஏற்பட்ட சமூக, பொருளாதார மாற்றங் களால் 1920களில், 1930களில் தீவிரமடைந்த வர்க்க உணர்வு ஆங்கிலேயர்களின் சூழ்ச்சியால் வலு விழந்தது. தொழில், பண்பாடு தொடர்பாக மனம் ஒத்துப்போன நிலையில் திருமணம் மூலம் உறவு கொண்டிருந்த சிங்களவர்களுக்கும் தமிழர்களுக்கும் இடையில் விரிசல் தோன்றியது.

1960களின் நடுப்பகுதியில் சிங்களப் பெரும் பான்மை மக்களின் முக்கிய பகுதியினரை இனவாத வெறி என்னும் சனியன் கெட்டியாகப் பிடித்துக் கொண்டது.

இப்படி பரவிய வெறி வர்க்க உணர்வு வளர் வதைத் தடுத்தது.

“சிங்களத் தொழிலாளர் இன வேறுபாடுகளைக் கடந்து சமூக மாற்றம் ஒன்றை ஏற்படுத்தும் பொருட்டு உழைக்கத் தூண்டப்படுவதற்குப் பதிலாக வர்க்க ஏற்பாடுகளை மறந்து ஏனைய சிங்களவருடன் சேர்ந்து சிங்கள - பௌத்த அதிகாரத்தை ஏற்படுத்தத் தூண்டப்படுகின்றனர்” என்று சுட்டிக்காட்டுகிறார், இலங்கை சமூகச் செயற்பாட்டாளரும் ஆய்வாளருமான குமாரி ஜயவர்த்தன.

இவ்வாறாக, பிரித்தாளும் சூழ்ச்சியின் மூலம் சிங்களவரையும் தமிழரையும் ஆங்கிலேயர் சுரண்டிய அதே வித்தையைக் கையாண்டு இலங்கை அரசு முஸ்லிம்களையும், தமிழர்களையும் பிரித்ததுடன், அவர்களுக்கு எதிராகத் தம் இன (சிங்கள) மக்களைத் தூண்டிவிட்டது.

இலங்கையில் தமிழர்கள் தாக்கப்படத் தொடங்கியதும், சிங்கள அடித்தள மக்கள் அனை வரும் தங்களுக்குச் சமமான பொருளாதார நிலையில் உள்ள தமிழர்கள் மீது இரக்கம் கொண்டனர். அந்த இரக்கம் அரசின் மூளைச் சலவையாலும், அந்தத் தந்திரம் வெல்லாத நிலையில் கொலை மிரட்டலாலுமே சிறிது சிறிதாக மாற்றப்பட்டது.

அதன் பிறகு 1956-இல், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அரசினால் கொண்டு வரப்பட்ட ‘சிங்களம் மட்டும் ஆட்சிமொழி’ என்ற சட்ட முன்வரைவு அரசுப் பணிகளைப் பெறு வதிலும் அரசு அதிகாரிகளைத் தொடர்பு கொள் வதிலும் கூட தமிழர்களுக்கு மிகுந்த இன்னலைக் கொடுத்தது.

அடுத்த ஓரிரு ஆண்டுகளில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசிய கட்சி ஆகிய இரண்டு முக்கிய பூர்ஷ்வா கட்சிகளும் அரசியல் சூழலுக்கேற்ப ஒரு கட்டத்தில் தமிழர்களுக்கு ஆதரவளிப்பதாக வாக்குறுதியளித்திருந்தாலும், பின்னர் வேறொரு சூழலில் சிங்கள இனவாத வாக்கு வங்கியைக் குறி வைத்து, தமிழர்களைக் கைவிட்டன.

இந்நிலையில், மொழிச் சட்டத்துக்கும் பாகு பாடு காட்டுகிற மற்ற நடவடிக்கைக்கும் எதிராக தமிழர்கள் அமைதியாக அறப் போராட்டங்களை நடத்தினர். உடனே, சிங்கள இராணுவத்தினரும் காவல்துறையினரும் வன்முறையில் இறங்கித் தமிழர்களைத் தாக்கினர்.

இதன் எதிரொலியாகத்தான், 1976-இல் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் ‘தனித்தமிழ்நாடு’ கோரிக்கையை முன்வைத்தனர். 1977-இல் நடை பெற்ற இலங்கைப் பாராளுமன்றத் தேர்தலில் தமிழர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதிகளில் தமிழ்க் கட்சிகள் பெற்ற வெற்றியினைத் தாங்கிக் கொள்ள இயலாத சிங்கள ஆதிக்கவாதிகள் தேர்தல் முடிந்த வுடன் தமிழர்கள் மீது படுகொலை நடத்தினர். அதில் 300-க்கும் மேற்பட்ட தமிழர்கள் கொடூர மாகக் கொல்லப்பட்டனர். ஒரு லட்சம் தமிழ்க் குடும்பங்கள் வீடுகளை இழந்து வீதிக்கு வந்தன.

இந்தக் காலகட்டத்தில்தான் ஆயுதம் ஏந்திய பல தமிழ்க் குழுக்கள் தோன்றியிருந்தன. அவற்றுள், பிரபாகரன் தலைமையிலான ‘தமிழ் ஈழ விடுதலைப் புலிகள்’ அமைப்பு முன்னிலைக்கு வந்தது.

1987-இல் இலங்கையில் தீர்வு காணும் நோக்கில் இந்தியா, இராணுவப் படைகளை அனுப்பி வைத்தது. இந்திய இராணுவத்தினர் இயன்ற வரை போராடி, ஒரு வழியாக 1990-இல் இலங்கையிலிருந்து இந்தியா வுக்குத் திரும்பினர்.

இந்திய இராணுவத்தின் செயல்பாடுகள் பன்னாட்டு அரங்கில் இந்தியாவுக்குப் பெருத்த அவப் பெயரை வாங்கிக் கொடுத்தது, இந்தியாவுக்குக் கிடைத்த வெற்றி.

பின்னர் 1994-ஆம் ஆண்டிலும் 2002-ஆம் ஆண்டிலும் போர் நிறுத்த உடன்பாடுகள் மேற் கொள்ளப்பட்டும் 2009-ஆம் வரை போர் - அதாவது, இன அழிப்பு தொடர்ந்து நீடித்தது.

இலங்கைத் தீவின் கடற்கரைக் கிராமங்களுள் ஒன்றான முள்ளிவாய்க்கால் கிராமத்தில் 2009-ஆம் ஆண்டு இலட்சக்கணக்கான அப்பாவித் தமிழ் மக்களை இலங்கை அரசு தனது பயங்கரவாதத்தின் மூலம் கொன்றுகுவித்தது. இக்கொடிய நிகழ்வு உலக வரலாற்றில் இதுவரை நிகழ்ந்த தீங்கொடுமை களுள் மிக ஒன்று; அடிக்கோடிட்டுக் காட்டப்பட வேண்டிய மிக மிக அவலமான ஒன்று.

ஏனெனில், எதிராளி, போராளி என்றும், போருக்குத் தொடர்பில்லாத பொதுமக்கள் என்றும் போரிலக்கணப்படி வகைப்படுத்திப் பார்க்காமல் முதியோர், குழந்தைகள், பெண்கள் என அனைத்துத் தமிழர்கள் மீதும் குண்டுகளை வீசியது இலங்கை இராணுவம்.

‘மெனிக் ஃபாம்’ என்னும் சித்ரவதை முகாம் செய்த கொடுமைகள் ஐரோப்பிய, அமெரிக்கக் கொடுங்கோலர்கள் செய்யும் கொடுமைகளை விஞ்சியவை. அகதிகள் முகாம் என்றழைக்கப்பட்ட இடமும் குடிநீர்வசதி, கழிப்பிட வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாது, நம் சகோதர சகோதரிகள் துடிதுடித்தனர்.

‘போர்ச் சூழலில் எதிரிகளைத் தாக்குகிறோம்’ என்று உலக அரங்குக்குத் தகவல் அளித்துக் கொண்டே, உள்ளே இலங்கையில் தமிழ் மக்களைத் தாராள மாகக் கொன்று மடித்தது இராஜபக்ஷே அரசின் இராணுவம்.

எந்த நேரத்தில் நம் மீது குண்டு விழுமோ என்று அச்சமிகுந்த தமிழ்ச் சகோதரக் குடும்பங் களின் பதுங்குகுழி வாழ்க்கை, பட்டினியால் குழந்தை களின் உயிர் தாய்-தந்தையரின் கண்களுக்கெதிரே பிரிந்து போவது என நெஞ்சைப் பதறச் செய்யும் ஏராளமான துன்பங்கள் இலங்கைத் தீவில் நிகழ்த்தப் பட்டன.

இப்படிப்பட்ட பயங்கரவாத அரசான இராஜ பக்ஷே அரசு உலகத்திற்கு வேறொரு படத்தைக் காட்டியது. தமிழீழ விடுதலைப் புலிகள் போன்ற தமிழ்ப் போராளிகள் பயங்கரவாதிகளாம்! அவர் களை அடக்கும் செயலில் இலங்கை இராணுவம் ஈடுபட்டதால் இது பயங்கரவாதத் தடுப்பு நட வடிக்கையாம்! இப்படியெல்லாம் கதையளந்த இராஜபக்ஷே அரசு லத்தீன்-அமெரிக்க நாடு களிடையே தனது பொய்யை மெய்யாக்கியது. பின்னர், இந்தச் சிக்கலில் கவனம் செலுத்திய புரட்சிகரப் போராளியான ‘ரான் ரைடனவர்’ மார்க்சிய அடிப்படையில் முழுமையாக ஆராய்ந்து நூல் எழுதியும், கூட்டங்களில் பேசியும் இராஜ பக்ஷேவின் முகத்திரையைக் கிழித்தார்.

“தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் வன் முறை யுத்தியைப் பயன்படுத்தியது என்பது தேசிய விடுதலை இயக்கங்களிடையே புதுமையான ஒன்றல்ல. சிங்கள ஆதிக்கவாதிகள் வன்முறையைத் தொடங்கி வைத்தனர். பிறகு, வன்முறையால் பாதிக்கப்பட்ட வர்கள் இறுதியில் வேறுவழியின்றி தங்கள் பாதுகாப்புக்காக ஆயுதங்களைக் கையில் எடுத்து, தாக்குதலில் ஈடுபட நேரிட்டது” என்பது ரான் ரைடனவரின் வாதம்.

அத்துடன் இடதுசாரிக் கொள்கைகளுடைய கியூபா, வெனிசுவேலா, பொலிவியா உள்ளிட்ட இலத்தீன் அமெரிக்க நாடுகள் தமிழர்களின் போராட்டத்தின் மீது கொண்டுள்ள கொள்கை நிலைப்பாட்டைப் பற்றித் தெளிவுபடுத்தும் நோக்கில், “இலத்தீன் அமெரிக்கப் பிரதிநிதிகள் தமிழீழ விடுதலைப் புலிகளை ‘பயங்கரவாதிகள்’ என்று மிகச் சாதாரணமாக ஒதுக்கித் தள்ளிவிட்டு இலங்கை அரசை ஆதரித்தனர். அதற்கான காரணம் அறியா மையாக இருக்கலாம்” என்று ரான் ரைடனவர் குறிப்பிட்டிருக்கிறார்.

மேலும், “இலத்தீன் அமெரிக்க நாடுகளின் இந்த நிலைப்பாட்டுக்கான காரணம் எதுவாக இருந்தாலும் அதன் விளைவுகள் தீங்கானவையே. பன்னாட்டு மன்றங்களில் ஆதரவாக இருக்கும் தமிழர்களின் நட்புறவை இலத்தீன் அமெரிக்க நாடுகள் இழக்கின்றன. மேலும், தங்கள் சகோதரத் தமிழர்கள் இலங்கையில் படும் துயரங்களுக்காக இரக்கம் கொள்ளும் இந்தியாவில் உள்ள தமிழ் நாட்டு மக்கள் உட்பட உலகெங்கும் பிறநாடுகளில் வசிக்கும் தமிழர்களின் மத்தியில், இலங்கையில் தமிழ் மக்களுக்கு இழைக்கப்படும் துயரங்களைப் பற்றிய உண்மைநிலையை அறிந்திருப்போர் அனை வரின் மத்தியிலும் இலத்தீன் அமெரிக்க நாடு களுக்கு இருக்கும் நல்மதிப்பையும் சீர்குலைக்கிறது - இலங்கையரசுடனான இந்த ஆதரவு நிலைப் பாடு” என்றும் தனது நூலில் குறிப்பிடுகிறார் ரான் ரைடனவர்.

ரான் ரைடனவரின் இந்தக் கூற்று உலக அரசியல் அரங்குக்கே பொருத்தமானது என்றால், அதனை நமது இந்திய அரசு உணர்ந்து உரிய நடவடிக்கையை உரிய காலத்தில் எடுக்காமலே ஆண்டுகளை நகர்த்துவது என்பது கண்டனத்துக்குரியதுதானே!

இந்நிலையில், ஜெனிவாவில் 27-03-2012 அன்று போர்க்குற்ற விசாரணை நடைபெற்றது. அப்போது இந்திய அரசு இராஜ பக்ஷேவுக்கு - அதாவது, தமிழின அழிப்புக்கு ஆதரவு அளிக்கப் போவதாக நாடு முழுவதும் அய்ய அலை பரவியது.

இராஜபக்ஷேவை இன அழிப்புப் போர்க் குற்றவாளியாக அறிவிக்கக் கோரி இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி 06-03-2012 அன்று தமிழ்நாடு முழுவதும் உண்ணாவிரதத்தை நடத்தியது.

அதே காலகட்டத்தில், இலங்கை அரசு வன்முறைக்கு எதிராக, தமிழக சட்டமன்றம் தீர்மானம் நிறைவேற்றியது.

மார்ச், 2012-இல் பாட்னாவில் நடைபெற்ற இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் 21-ஆவது அகில இந்திய மாநாட்டிலும் தமிழ் மாநிலக் குழு சார்பில் தீர்மானம் ஒன்று முன்மொழியப் பட்டது. அதில் இலங்கை அரசு தமிழர்களுக்கு மறுவாழ்வு அளிப்ப தோடல்லாமல் “ஒரு குறிப்பிட்ட காலவரை யறைக்குச் சரியான ஓர் அரசியல் தீர்வினையும் இலங்கை அரசு உருவாக்க வேண்டும்” என்று மாநாட்டில் கேட்டுக் கொள்ளப்பட்டது.

தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள், அரசியல் சாரா இயக்கங்கள் உலகெங்கும் வசிக்கும் தமிழர்கள் அனைவரும் ஒருமனதாக முனைந்து, இலங்கைத் தமிழர்கள் உரிமை பெற்று, இனிமேலாவது அமைதியாக வாழ வழிசெய்ய வேண்டும்.

நம் சகோதர, சகோதரிகளின் கண்ணீரைத் துடைக்கும் பணியில் முதல் அடியை நாம் தானே எடுத்துவைக்க வேண்டும்!

துணை நின்ற நூல்கள்:

*     சி.மகேந்திரன், வீழ்வேனென்று நினைத் தாயோ?, விகடன் பிரசுரம்

*     ஆ.கோ.ராமலிங்கம், ஈழத்தமிழர் வரலாறு, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்

*     Ron Ridenour - Tamil Nation in Sri Lanka - New Century Book House

*     குமாரி ஜயவர்த்தன - இலங்கையின் இன வர்க்க முரண்பாடு - குமரன் புத்தக இல்லம்

*     Chris Slee - New Book on the History the Tamil People’s Struggle for Self - Determination - Journal for Socialist Renewal.

Pin It