நவீனம் தாண்டிய கவிதை, படைப்பாளியின் சட்டகத்தை மீறிப் படைப்பாளி, படைப்பு, வாசகன் முப்பரிமாண நிலைப்பாட்டில் உயிர்ப்புமிக்க மொழியின் செயல்பாடாக மாறுகிறது. ஒற்றை அர்த்தம் தாண்டி வாசகரின் அர்த்தப்படுத்தல்களில் மிக அதிக கவனத்தைக் குவிக்கிறது. நுகர்விய சந்தைப் பொருளாக மட்கிப்போகாமல், பயன்பாட்டுக்குப் பின்பும், புதுப்புது உலகங்களைக் கொண்டுவந்து சேர்க்கிறது. பிரதியின் பின்னணியில் கவிதையின் மேற்பரப்புத்தளம் ஆழ்நிலைத்தளத்தோடு, இருதள இயக்கமாகவும், பிரதியின் சூழல் பின்னணியில் பல்வித அர்த்தப் பரிமாணங்களோடு பன்னொலிமப் பண்பினையும் சொல்வெளியில் படைக்கிறது. இங்கு ஒற்றைப் பிரதிகூடப் பல்விதக்குரல்களின் ஊடிழைப்பனுவலாக மாறிவிடுகிறது.

ஆதிக்குலமனம் இயற்கைக்கும் கலாசாரத்திற்கு மிடையே நெருங்கிய உறவினைக் கொண்டிருக்கிறது. பிரபஞ்சத்தின் சகலவகை உயிர்களோடும், தனது உயிரைக் கரைத்துக் கொள்கிறது. பறவைகளாக, செடிகொடி தாவரங்களாக, விலங்குகளாக, தேவதை களாக உருமாறுகிறது. நம்பிக்கைகள், சடங்குகள், புதிர்களினூடே தனக்கானதொரு விசித்திர உலகைக் கட்டமைத்துக் கொள்கிறது. நவீனம் தாண்டிய பின்காலனிய கவிதைப் பயணம் அறிவினை இடப் பெயர்ச்சி செய்து கவிதையைப் புனைவுகளால் நிரப்புகிறது. ஆழ்மனம் புதிர்வழியில் பயணம் செய்யும் புனைவு மீதான மோகமாக உருவாகிறது. அறியப்பட்ட உலகத்தினுள் புதைந்துகிடக்கும் அறியப்படாத உலகைச் சொல்ல எத்தனிக்கிறது. காண்உலகில் பார்வைப் புலன்தாண்டி நிகழும் நுட்ப உலகை வாசகனோடு பகிர்ந்து கொள்கிறது. சொற்களின் மூல ஓசை அதிர்வுகளைமுடிவற்ற நிலையில் பெயர்த்துச் செல்கிறது. வாழும் பிரதேசமும் கலாசாரமும் சார்ந்ததொரு, உணர்வுலகமாகவும் இது தகவமைக்கப்படுகிறது.

இருப்பின் குரலை ஒற்றைப்போக்காக அல்லாமல் பன்மைத்துவ அடையாளமாக அணுகுதல் இன்றிச் சூழல் சார்ந்த படைப்பின் அடையாள அரசியலாகக் கருதலாம். இதுவே அடையாளம் ததும்பும் புது வெளிகளைக் கவிதைப்படைப்புலகில் பல மட்டங் களில் உருவாக்கிக் காட்டுகிறது. உயர் குடிமனோ பாவமும், நடுத்தர வர்க்கத்தின் முணுமுணுப்புகளும் விலக்கப்பட்டு அடித்தள மக்கள் மொழியும், தொன்ம வழக்காறுகளும், குறிமப்பண்புகளோடு விகசிக்கிறது. நவீனத்துவத்தில் மிகத் தீவிரமாக ஒலித்த தனிமனித பிரக்ஞை நவீனம் தாண்டிய கவிதைவெளியில் கூட்டுமனப் பிரக்ஞையாக முகிழ்க்கிறது.

நிலவியல் ஒலிகள், வாசனை, தட்பவெட்பம், மண்மணம், பூகோளரீதியாகவும் ஞாபகரீதியாகவும் நிலக்காட்சியாக உருவெடுக்கிறது. இங்கு மரபு வழி யிலான மொழி, ஆதிக்கத்திற்குப் பணிய மறுக்கும் மொழியாகிறது. கலக அழகியல் விரிகிறது. இது பன்மைத் தன்மைமிக்க தலித் /பழங்குடி / விளிம்போர / அடித்தள / பெண்ணிய / சிறுபான்மையின மொழி தலாகவும், கதை மொழிச் சொல்லாடல்களாகவும் உருவாகிறது.

நவீனம் தாண்டிய கவிதையின் வேர்களை சாதீய முதன்மையைத் தக்கவைத்த வைதீக மரபுக்கு மாற்றாகச் செயல்பட்ட தாந்திரீய, சித்தரிக மரபு களிலிருந்தும்கூட உட்செரித்துக் கொள்ளமுடியும். சித்தனொருவன் கருவண்டாகிப் பறந்துபோவதும், எறும்பொன்று குழந்தையாய் உருமாறுவதும் கடலில் வீசப்பட்ட கரும்பாறை இலவம்பஞ்சாக மிதப்பதும், மயிலிறகு தூக்க முடியாதபளுவாக மாறுவதும், நினைத்த நேரத்தில் ஒரே உருவம் எல்லாத் திசைகளிலும் தோன்ற முடிவதும், இறந்து போன உயிர் இன்னொரு உடம்பில் நுழைந்து தோற்றம் கொள்வதும், பல துண்டுகளாக வெட்டப் பட்ட பறவைக்குத் திரும்பவும் உயிர்கொடுப்பதும், மிரண்டுவரும்யானையைப் பார்வையாலேயே தடுத்து நிறுத்துவதும், பறவைகளோடு பேசுவது மான ஜாலயதார்த்தம் நவீனம் தாண்டிய கவிதையைப் படைக்கும் படைப்பு மனத்தின் புதிய வகையான மொழியாக மாறுகிறது.

2) சமகால வாழ்வியல் யதார்த்தம் புதிர்த் தன்மையும், ஜாலமும் கலந்ததொரு புதிய எழுத்து முறையினூடே நவீனம் தாண்டிய தமிழ்க் கவிதையில் இடம் பெறுகின்றன. நேரடியான விவரிப்பாக இல்லாமல் சித்திரிப்பில் ஒன்றாகவும், அர்த்தத் தளத்தில் இன்னொன்றாகவும் இக்கவிதைகளின் வெளிப்பாடு அமைகிறது. ஐரோப்பிய வகைப்பட்ட யதார்த்தவாதம் தட்டையானதாகவும், காலனிய நீட்சியாகவும் வெளிப்பட்டதன் விளைவாக லத்தீன் அமெரிக்க நாடுகளின் படைப்பாளிகள் புராதன மனத்தின் பழங்கதை சொல்லல் மரபுசார்ந்த இவ் வடிவத்தை மறு உருவாக்கம் செய்தனர். பின்காலனிய எழுத்துமுறையை ஜாலயதார்த்தம் (மேஜிக்கல் ரியலிசம்) என்ற சொல்லாலும் அழைத்தனர்.

தமிழின் ஜால யதார்த்த தன்மை கொண்ட எழுத்துமுறையை பிரேம்ரமேஷின் கவிதைகளில் அடையாளம் காணலாம்.

மகாகவி இரவு முழுதும்/இருட்டில் அழுது கொண்டிருந்தான்; அழுகையில் கரைந்து விடியலில்/ ஒரு சொல்லாக மீந்துகிடந்தான். பழக்கமுள்ள சிட்டுக்குருவி/ஒளியோடு உள்நுழைந்து அங்கு மிங்கும் பார்த்துவிட்டு/தரையில் கிடந்த அச் சொல்லைக் கொத்திக் கொண்டு/வந்தவழியே பறந்துசென்றது.

இரவின் இருளில் அழுதுகொண்டிருந்த மகாகவி ஒரு சொல்லாக உருமாறுதல், அதிகாலையில் சிட்டுக்குருவி அச் சொல்லைக் கொத்திக்கொண்டு வந்தவழியே பறந்து செல்லுதல் என்பதான படிமங்கள் தன்னை அழித்து எழுத்தை உருவாக்கும் படைப்புச் செயல்பாட்டைப் புதிர்த்தன்மையோடு பேசுகிறது. அழுகையும் இருளும் கூடிய அகம், ஒளியும் விடுதலையும் கூடிய புறம் என்பதான இருமை முரண்களின் சித்திரமாகவும் விரிகிறது. இது வாசகனுக்கு இன்னும் புதிய அர்த்தங்களுக்கான வாசிப்புவெளியைக் கொடுக்கிறது.

கனவுக்கும் யதார்த்தத்திற்குமான இடை வெளியை அழித்து இதுவரை காணாத உலகைக் காண்பிக்க வைக்கிற எழுத்தின் சாத்தியத்தை ஜால யதார்த்த கவிதைகள் உருவாக்குகின்றன. இங்கு யதார்த்தம், நடப்பியல், உண்மை என்பவை உண்மை யற்றதொரு புனைவாகத் தளமாற்றம் அடைகிறது. காலம் வெளி நேர்க்கோட்டுப் பார்வையைக் கலைத்துப் போடுகிறது. மாயமந்திரத்தன்மை கொண்ட யதார்த்த மாக, இயல்பு பிறழ்ந்த, இயற்கையை மீறியதாக இக்கவிதைகள் தம்மை அடையாளப்படுத்திக் கொள் கின்றன.

இசை எழுதிய ஒரு கவிதையை இனி கவனிப் போம். ஒழுங்கு சிதறிக்கிடந்த மேசையில் பிரிக்கப் பட்ட கவிதைப் புத்தகத்தின் மீது அமர்ந்திருந்த பூனை அதன் கூரிய நகங்களால் கவிதைத்தாளைக் கிழித்துவிடும் காட்சியைச் சித்திரிக்கும் இசையின் அக்கவிதை இவ்வாறாக முடிவுகிறது.

பூனைகள் குழுமியிருந்த அரங்கில் / மியாவ் மொழியில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிற / முதல்தமிழ்க்கவிதை என்கிற அறிவிப்போடு / கிழிபட்ட என்கவிதையை / என்வீட்டுப் பூனை எழுந்து வாசித்தது.

மியாவ் மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட பூனை வாசித்த முதல் தமிழ்க்கவிதை என்கிற சித்திரம் சொந்தப் பண்பாட்டிலிருந்து உருவாகாத மேற்கின் தாராளவாத மொழிபெயர்ப்பின் இறக்கு மதியைப் பகடி செய்வதாகவும் நுண்ணிய அளவில் செயல்படுகிறது.

மாலதிமைத்ரியின் ஒரு கவிதை, அறைமுழுதும் சிறிதும் பெரிதுமாக நிரம்பிச்சரிகின்ற பந்துகளை எந்த இடத்திலும் பத்திரப்படுத்தி வைக்க முடியாத துயரத்தைச் சொல்கிறது. வேறு பொருட்களை எடுக்கும்போது பந்துகள் வெளியே வந்து விழு கின்றன. எங்கே பத்திரப்படுத்துவது இவற்றை என இயலாமையில் தவிக்கும் கவிதை அந்தப் பந்துகளைத் தன் மகள் வரைந்த ஓவியத்தின் அறைக்குள் வைத்துப் பூட்டுகிறது. இது ஒரு விசித்திரம் சார்ந்த மன நிலையின் வெளிப்பாடு. யதார்த்த வாழ்வு நெருக்கடி யிலும், சிக்கல்களுக்குள்ளும் அவதிப்படும் மனம், புனைவிலும் கற்பனையிலும் மாற்று உலகத்தைக் கலைரீதியாக படைத்துக் காட்டுகிறது.

3) பின்காலனிய தமிழ்க் கவிதைமரபு விளிம்பு களைப் பற்றியும், விலக்கப்பட்டவைகள் குறித்த கவனிப்பையும் முன்வைக்கிறது. காலங்காலமாக வரலாற்றாலும், மரபுகளாலும், குடும்ப நிறுவனத் தாலும் ஒடுக்குமுறைக்கு ஆளான பெண் குறித்த சிந்தனையை மீள வாசிக்கிறது. பெண்மீது மொழி ரீதியாகவும், சமூகரீதியாகவும் கட்டமைக்கப்பட்ட கற்பிதங்களையும் கட்டுடைத்துக் காட்டுகிறது. பெண் விடுதலை குறித்து ஆண்பேசிய நிலையைக் கடந்து பெண்ணின் மன உலகங்களையும் உடல்மொழி அரசியலையும் பெண்மொழியையும் ஒடுக்கப்பட்ட பாலியல் அரசியலையும் தீவிரமான முறையில் படைப்பு ரீதியாக படைப்புலகங்களை உருவாக்கியவர்களாகப் பெண்ணியக் கவிஞர்கள் இருக்கிறார்கள்.

பள்ளிமைதானத்தில் விளையாடும்போது / ருதுவான கணத்தில் என் கைபிடித்து சந்தோசம் கொண்ட / முகம் எது நினைவில்லை.

என எழுதிச் சென்ற சுகந்தி சுப்பிரமணியனின் கவிதையின் பதிவுகளிலிருந்து கூட இதனை துவக்கிப் பார்க்கலாம்.

கருவறைவாசனையை அள்ளி அள்ளி வீடெங்கும் தெளித்துச் சுருண்டு படுத்துத் தூங்கிப் போகவேண்டுமென விரும்பும் கனிமொழியின் கவிதை, குழந்தமையை மீட்டெடுக்கும் உலகமாக விரிகிறது. பால்யத்திற்கு முந்தைய கருவறையில் வாழ்ந்த குழந்தையின் இழந்துபோன உலகத்தை மிகுந்த நுண்ணுணர்ச்சியோடு பதிவு செய்கிறது.

சின்ன வயதில் செய்த தவறுகளுக்கெல்லாம் / பூச்சாண்டியாய் உன் பெயரைத்தான் சொன்னாள் அம்மா

வாழ்வின் அனுபவம் கவிதையாய் இடம் மாறும் தருணம் இது. அப்பாக்களைப் பூச்சாண்டியாய்க் காண் பித்து குழந்தையைப் பயமுறுத்தும், சோறூட்டும் அம்மாவின் நுட்பமான உலகமும் கனிமொழியிடம் உருவாகியுள்ளது. படிம உருவக ஜோடனைகளற்று எளிமையான சொற்களினூடே உருவான கனி மொழியின் எதிர்க்கவிதை ஒன்று

எந்நாடு போனாலும் / தென்னாடுடைய சிவனுக்கு மாதவிலக்குள்ள பெண்கள் மட்டும் / ஆவதே இல்லை

என வைதீக சமயகலாசார ஆணதிகாரத்தைக் கலைத்துப் போடுகிறது. கருவறைவாசனை, அகத்திணை, சிகரங்களில் உறைகிறதுகாலமென நீண்டுபடரும் கனிமொழியின் கவிதை எழுத்து தமிழ்ச்சூழலின் பெண்ணியக் கவிதை அடையாளங்களில் மிகக் குறிப்பான ஒன்று. கிளிக்கதை கேட்டாள்குழந்தை, சொன்னேன். எங்கள் வீட்டில் முன்பொரு கிளி இருந்ததென. கதை சொல்லலில் நிகழ்ந்த கல்பனாவின் கவிதை ஒன்று கிளியைப்பிடித்துச் சென்ற பூனைக் குறியீட்டின் மூலமாக மண உறவுகளில் உருவான வாழ்வின் துயரை எழுதிச் செல்கிறது.

எல்லாக் கிளிகளையும் போலவே/ அதையும் ஒருநாளில் / பூனை பிடித்துக் கொண்டு போனது / பிறகென்ன நடந்ததென்று யாருக்கும் தெரியாது

யதார்த்த மொழியில் பெண்ணுடலை எழுதிச் செல்லும் வெண்ணிலாவின் கவிதை பிறப்பின் வாசம் உடலெங்கும் பரவி நிற்க, ரத்தம் தோய்ந்த ஆடைகளோடும் நடுங்கும் கால்களோடும் சாய்ந்து கொள்ளத் துழாவுவதைச் சித்திரிக்கிறது.

தொடாதே தள்ளிநில் என்கிறாள் அம்மாவும், எறும்புக்கும் நாய்க்கும் எப்படியோ இந்த அவஸ்தை

என விலக்கப்பட்ட வாழ்வையும் உறவு அந்நிய மாதலையும் காட்சிப்படுத்துகிறது.

பூனையைப்போல் அலையும் வெளிச்சத்தை உருவகப்படுத்திய குட்டிரேவதியின் உடல்மொழி எழுத்தின் வழி பெண்ணுடலின் அரசியலை, வேட் கையை, கலைப்படிமங்களாகச் சித்திரப்படுத்து கிறது. இட்டபுள்ளிகள் இறைபட்டுக்கிடக்கும் கோலத்தின் சிதைவையும் உயிர்ப்பித்தலையும் குறியீடாக்கிப் பேசும் உமாமகேஸ்வரியின் கவிதை தூரத்திலிருந்தாலும் என்னை நனைக்கிறது, நானறிந்த நதியின் ஈரமெனப் படிமங்களின் ஊடாக உணர் வெழுச்சியைப் பரப்புகிறது.

சல்மாவின் கவிதை உலகம் தாளிடப்பட்ட அறைகளின் பதற்றங்களையும், சலசலக்கும் அரச மரமும் பறவையின் பாடலும் அறிந்துகொள்ள முடியாத சிறகின்மைகளையும், சூல் கொள்ளாது உடைந்த கருமுட்டைகளின் கறைபடிந்த நாப்கின் களைக் கண்டு வீட்டுக் குப்பைகளை அள்ளுபவன் என்ன நினைத்துக்கொள்கிறானோவென நடுங்கிக் கூசும் கருப்பையையும்பெண்மொழி அடையாளங் களோடு எழுதிச் செல்கிறது.

நவீன வாழ்வில் நகர்மயமாகிச் சிதைந்து போன புராதன கிராமத்து மண்ணின் வாழ்வை மீட்டெடுக்கும் தமிழச்சியின் கவிதைப் பரப்பில் தொன்ம உருவாக்கமாகப் பழங்குடிமரபின் வனப் பேச்சி அலைந்து திரிகிறாள். நம் மண்ணின் பூர்வீக அடையாளமாய் மஞ்சணத்திகளும் கவிதையில் முளைத்து நிற்கின்றன.

பறவையாகவும் செடிகொடியாகவும் மீன் குஞ்சாகவும், இயற்கையின் உடலாகப் பெண்ணுடலை உருமாற்றும் திணைசார் சூழலிய பெண்ணியத்தின் (எக்கோ பெமினிசம்) புனைவின் நுட்பங்களோடு மாலதி மைத்ரியின் கவிதை உலகம் இயங்குகிறது. கைகளை வெட்டி நட்டு காடாக்குவதும், மார்புகளை வீசி எறிய மலைகளாவதும், கண்களை எடுத்து ஆற்றில் விட மீன்குஞ்சுகள் துள்ளிப் பெருகுவதும், நாவை அறுத்து வானில் எறிய சிறுபறவை கானத்துடன் பறப்பதுமாக இப் புனைவுகளின் அரசியல் வெளிப்படுகிறது.

மித, தீவிர, சூழலிய பெண்ணியச் சிந்தனைக் களங்களிலிருந்து மாறுபடுவது வித்தியாசப் பெண்ணியம். அடித்தள மக்கள் வாழ்விலிருந்து இன வரைவியல் அடையாளம் சேர்ந்து உருவாகும் வித்தி யாசப் பெண்ணியம், பெண்சார்ந்த படைப்புலகத்தைப் பெண்மொழி, யதார்த்த மொழி, புனைவுமொழி, கலகமொழி என முன்னிறுத்திப் பார்க்கும் நிலைப் பாட்டோடு தலித் பெண்ணிய அடையாள அரசியல் குரலையும் பேசுகிறது. இதுவரை எவரும் பேசி யிராத குறிகளாலும் கைகளாலும் உணர்த்தமுடியாத கர்ப்பத்தில் மிதக்கும் மொழி ஒன்று வேண்டுமென சுகிர்தராணி தன் கவிதையில் கேட்கிறார். செத்துப் போனமாட்டைத் தோலுரிக்கும் போது காகம் விரட்டு வதும், தப்பட்டை மாட்டிய அப்பா, தெருவில் எதிர்ப்படும் போது முகம் மறைத்து நடந்து விடு வதும், அப்பாவின் தொழிலும் ஆண்டு வருமானமும் சொல்ல முடியாமல் வாத்தியாரிடம் அடிவாங்குவது மான தலித் சிறுமியின் தாழ்வுமனக் கட்டமைப் பையும் பிறகான அதன் மீறலையும் சமூக அனுபவ வெளியில் சுகிர்தராணியின் எழுத்து எழுதிச் செல்கிறது.

விளிம்புநிலைப் பெண்ணியத்தின் தீவிரத்தன்மை மிக்கதாகவும், உலகமயத்தை ஆண் மையமாகக் குறியீடாக்கியும் நிறுவப்பட்ட எல்லாவித அதிகாரங்களுக்கும் எதிராக லீனாமணிமேகலையின் கவிதை கலகம் செய்கிறது. ஒடுக்கப்பட்ட பாலியல் அரசியலின் இந்தக்குரல் வாசகனிடத்தில் புனிதங் களைக் கட்டுடைத்து அதிர்ச்சி அலைகளைப் பரப்பு கிறது. இவ்வகையில் எழுத்தின்வழி இடைவிடாது இயங்கிக்கொண்டிருக்கும் கிருஷாங்கினி,, இளம் பிறை, தேன்மொழி, விசயலட்சுமி, பரமேஸ்வரி, இன்பா, தாராகணேசன், திலகபாமா புதிய தலை முறைப் பெண்படைப்பாளிகளான சக்திஜோதி, சத்யா, சந்திரா, புலம்பெயர் கவிதையை எழுதிச் செல்லும் ஆழியாள், அனார், பஹிமாஜஹான், தமிழ்நதி எனப் பெண்ணியக் கவிதையாளர்களின் கவிதை எழுத்து நீட்சி பெறுகிறது.

வெறிபிடித்த தெருக்களில் உறையும் அதே ரத்தம் / சாவின் தடயமாய் / என்னைப் பின் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

அனாரின் கவிதைவரிகளில் அழிக்கப்பட்ட ஈழத்தமிழ்வாழ்வின் துயரம் தொடர்ந்து சாவின் தடயமாய்த் துரத்திக்கொண்டிருக்கிறது. ஈழத் தமிழ் மக்களின் துயரங்களையும் குண்டுவீச்சுக்குப் பயந்து காடுகளில் பதுங்குகுழிகளில் பெண்கள் குழந்தைகள் தஞ்சம் புகுந்தபோது பாம்புதீண்டி இறந்த உயிர்களின் துக்கத்தைத் தமிழ்நதி தன் கவிதையில் குறியீடாக்கிப் பதிவு செய்கிறார்.

கடலின் நீலத்தை காகிதத்தில் எழுதவே அமர்ந்தேன் / காடுகளில் விஷம்தீண்டி / மரித்த குழந்தைகளின் நிறமாகித் திரிந்தது கடல்

புலம்பெயர் கவிதைப்பரப்பெங்கும் தீவிரமாக முகங்காட்டுகிற பேரழிவுகள் உலக இலக்கிய வகை மைகளில் ஒன்றாக விளங்குகிற பேரழிவு இலக்கிய மாகப் பதிவாகி உள்ளன.

4) இந்த உலகம் கதைகளால் நிரம்பி இருக் கிறது. தேவதைக் கதைகள், ஆதிகாலக் காவியக் கதைகள், வாழ்ந்திராத கதாபாத்திரங்கள்பற்றிய கட்டுக்கதைகள், பாரம்பர்ய புராணவியல் கதைகள் தொன்மக்கதைகள் என இந்த வடிவங்கள் பல விதமாய்த் திகழ்கின்றன. தொன்மக் கதைகளில் வாய்மொழிமரபுகள், நம்பிக்கைகள், ஒருசேர உருப்பெற்றுவிடுகின்றன. இத்தகைய பின்னணியைக் கொண்ட தாணுபிச்சையாவின் ஒரு கவிதை முழாக் கோல்.

தச்சன் ஒருவன் கூடாரத்தினுள் யாரும் பார்க்கக் கூடாது என்ற உத்தரவாதத்துடன் கதவைத் தாழிட்டுக் கொண்டு இரவும் பகலுமாக தேர் ஒன்றை உரு வாக்கிக்கொண்டிருக்கிறான். ஊரில் உள்ளோருக்குத் தேர் வளரும் அழகைக் காணவேண்டுமென்று ஆவல் மேலிடுகிறது. நாளுக்குநாள் கூடாரத்தினுள் பல பேர் சேர்ந்து பணி செய்வதைப் போன்று பெருஞ் சத்தம் கேட்கிறது. கீற்றுகளில் துளையிட்டு ஒளிந்து பார்த்தபோது வெற்றிலையை மென்றவாறு கண் ணோட்டம் விட்டபடி இருந்த தச்சனின் குரலுக்குப் பூதம் ஒன்று ஏவல்களைச் செய்துகொண்டிருந்தது. சத்தியத்தை மீறித் துளையிட்டுப் பார்த்ததால் அந்தப் பூதம் ஒரு முழாக்கோலாய் உருமாறி தச்சனின் முன்னே விழுந்தது. அந்த முழாக்கோலின் தொடர்ச்சிதான் இன்று தச்சர்கள் வைத்திருக்கும் முழாக்கோல். இது மந்திர சக்தி வாய்ந்த கோல் என்பது ஒரு நம்பிக்கையுமாக இருக்கிறது. தாணுபிச்சையாவின் கவிதை இவ்வாறு நிறைவுறுகிறது.

வினை புரிந்த பூதம் / சத்தியத்தின் மீறலால் பலிதம் இழந்து தச்சன்முன் வீழ்ந்தது முழாக் கோலாய் / பாதியில் நிற்குது தேர்.

சத்தியம், சத்தியத்தை மீறல் என்பதான அறவியல் கருத்தோடு, தீராத கடும் உழைப்பின் குறியீடாக முழாக்கோலாய் மாறிய பூதம் அர்த்தம் பெறுகிறது. பாதியில் நிற்கும் தேர்முழுமையுறாத கனவுகளின் நம்பிக்கைகளின் குறியீடாக மாறுகிறது.

நவீனம் தாண்டிய தமிழ்க்கவிதை புழங்குபொருள் கலாசாரத்தையும் உழைப்புக் கருவியையும் குறி யீடாக்கிப் படைப்பாய் உருவாகியுள்ளன. பழ மலையின் கவிதைகள் இனவரைவியல் வகைப் பாட்டுடன் மிக்க நெகிழ்ச்சியோடு விவசாய மண்சார் வாழ்வை எழுதிச் செல்லும்.

அப்பாவின் கொடுவாள் படமெடுத்த ராச நாகம் / நஞ்சை சேற்றுக்குத் தழைகழிக்கவும் / கரும்புப் பயிருக்கு வேலி எடுக்கவும் / தனியாக உழைக்கும் அப்பாவைப் போல.

ஒடுக்கப்பட்ட வாழ்வின் குரலைப் பதிவு செய்யும் மதிவண்ணனின் கவிதை இன்னொரு கொடுவாளைச் சொல்லிச் செல்லும்.

வழிநெடுக என்மேல் பிசிறியடிக்கும் சைவ, அசைவ பீக்களை வழித்துவழித்தே ஓய்ந்து கொண் டிருக்கிறேன் என்ற புகாருடன் எதிர்ப்பட்ட தொல் குடித் தெய்வம் எதிரேவந்து என்ன வரம் வேண்டும் கேள் என்று கேட்கும்போது கவிதையின் அருந்ததிய கதாபாத்திரம் சொல்கிறது.

வெட்ட வெட்ட துளிர்க்கும் மரம் மாதிரி / எங்கள் மைனாரிட்டி தலைகளும் / கொப்படித்து துளிர்க்கவேண்டுமென்றான். / கிழிக்க முடியாத வகையில் எம் குலப் பெண்களின் குறிகளை / உலோகக் குறிகளாய் மாற்றித்தரவேண்டு மென்றான். / அரண்டு போனவன் / தன்னால் தரமுடிந்தது இதுதானென்று / பீவழித்துக் கொண்டிருந்த கொடுவாளைக் கூர்தீட்டிக் கையில் தந்து / ஊளையிட்டுப் போனானொரு காட்டு மிருகம்போல.

இன்றின் நவீனத்திற்குப் பிந்தைய கவிதை இவ்வாறாக உச்சபட்சநிலையில் ஒடுக்கப்பட்ட அடையாளம் சார்ந்தும் இயங்குகிறது. காணிப் பழங்குடிகளின் தொன்மங்களை எழுதிச் செல்லும் என்.டி.ராஜ்குமாரும், புரதவண்ணார்களின் மாந்திரீக உலகைக் கவிதையாக்கும் நட.சிவகுமாரும் இந்த வகையில் குறிப்பிடத்தக்கவர்கள்

பெருங்கதையாடல்களின் மீதான கட்டுடைப்பும், மொழி, குடும்பம், பாலியல், உடல் என நுண் அளவில் செயல்படும் அதிகாரத்தின் மீதான எதிர்ப்புணர்வும். புலம்பெயர்தலின் வலிகளும், அடையாள அரசியலும் பின்காலனிய கவிதைகளில் நிகழ்கிறது. மைய நீரோட்டத்திலிருந்துவிலகிய புறக்கணிக்கப்பட்ட குரல்களின் கலாசாரம் சார்ந்த தொன்மங்களோடும் யதார்த்தமும் புனைவும் கலந்ததொரு எழுத்தாகவும் நவீனம் தாண்டிய பின்காலனிய கவிதைகளின் இடையறாத பயணம் தொடர்கிறது.

Pin It