bharathi_450“புரட்சிகரமான தத்துவம் இல்லாமல், புரட்சிகரமான இயக்கம் இயங்க முடியாது” என்றார் மாமேதை லெனின்.  உலகில் பல மாற்றங்களைக் கண்ட இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில், அந்த மாறுதல் தடத்தைக் கண்டுணர்ந்து, அதற்கேற்ப புதுமையாகச் சிந்தித்து எழுதி, தமிழக அரசியல், சமுதாயம், மொழி பண்பாட்டுச் செயல் நெறியில் பெரும் பங்கு அளித்தவர் மகாகவி பாரதியார்.  இவர் காத்திரமான கட்டுரைகளை மட்டு மின்றி, சமூக அக்கறையோடு புதினங்களையும் எழுதியவர்.  இவருடைய படைப்பே சந்திரிகையின் கதை.

இக்கதை முழுவதும் விசாலாக்ஷி என்ற ஒரு பிராமணப் பெண்ணைச் சுற்றி நடக்கும் சம்பவங்களைப் பற்றியே எழுதியிருக்கிறார்.

சாதாரண ஏழைப் பிராமணனின் தமக்கையான விசாலாக்ஷி தன்னுடைய பத்தாவது வயதிலேயே கணவனை இழந்து கைம்பெண்ணாக ஆகி விடுகிறாள்.  ஒரு சமயம் ஊரே பெரும் புயலில் சிக்கி அழியும் காலத்தில் தன்னுடைய அண்ணியைப் பிரசவத்திற்காக இவர் அழைத்துச் சென்ற சமயம் இவர்களைத் தவிர மற்ற அனைவரும் மாண்டு போய் விடுகின்றனர்.  தான் ஈன்ற பச்சிளம் குழந்தையை விசாலாக்ஷியிடம் ஒப்படைத்துவிட்டு அவளைக் காக்கும் பெரும் பாரத்தையும் தந்து அத்துடன் அவள் மறுமணம் செய்துகொள்ளவேண்டும் என்ற உறுதிமொழியையும் விசாலாக்ஷியிடம் பெற்றுக் கொண்டு இறந்துவிடுகிறாள்.

இன்றைய நவநாகரிக காலத்திலே ஒரு விதவை மறுமணம் செய்வதென்று எத்தனையோ பிரச்சினை களுக்குரியதாக இருக்கும் பட்சத்தில் அக்கால கட்டத்தில் மறுமணம் என்பது நினைத்துப் பார்க்கப் பட முடியாத ஒன்றுதானே! அத்தகைய சூழ்நிலையிலேயே கைம்பெண் மறுமணம் செய்வதாகப் பாரதி எழுதியிருக்கிறார் என்றால் அவரது எண்ணங்கள் எத்தனை முற்போக்கானவை, பெண் உரிமைகளுக்கான அவரது சிந்தனைகள் எவ்வளவு தெளிவாக உள்ளன என்பதனை அறியலாம்.

அத்தோடில்லாமல், யாருமற்ற அனாதையான விசாலாக்ஷிக்கு மறுமணம் செய்து வைப்பது யார்? இங்குதான் பாரதி மாபெரும் யுத்தியைக் கையாளுகிறார்.  அதாவது, விசாலாக்ஷியே தனக்கு மாப்பிள்ளை பார்க்கிறாள்.  இதனை அவள் ஜி.சுப்பிரமணிய அய்யர், வீரேசலிங்கம் பந்துலு ஆகியோரிடம் சென்று தனக்கு மறுமணம் செய்துவைக்க வேண்டும் என்பதை அவள் வேண்டுகோளாக வைக்கிறாள்.  இதை விடப் பெரிய திருப்பம், சன்னியாசம் சென்று திரும்பிய ஒருவரின் மனதைக் கவர்ந்து பின் அவரையே மணக்கிறாள் விசாலாக்ஷி.

இதற்குள் இக்கதைக்குள் வரும் அனைத்தும் நாம் இன்றும் இப்படி நடக்குமா என்று எண்ணக் கூடியவைதாம்! அனைத்தையுமே பாரதி சிந்தித்து, அன்றே ஒரு பெண் நினைத்தாள் என்றால் அனைத்துமே சாத்தியம் என்று சாட்டையடி கொடுத்திருக்கிறார்.  இப்புரட்சி மட்டுமின்றி, இக்கதை மாந்தருக்குள் நடக்கும் காதலைப் பற்றிய விவாதங்கள் ஆகட்டும், லௌகீக வாழ்க்கையைப் பற்றிய நெறிமுறைகளாட்டும், அனைத்தையும் சிறிதும் தன்நெறி நழுவாமல் அத்தனை இலக்கியமாய் எழுத பாரதிக்கு நிகர் பாரதிதான்.

இதில் வரும் கதாபாத்திரங்கள் மரபுவழியே தனது ஆளுமையில் படிந்திருக்கும் கருத்துக்கள், நவீனத் தாக்கத்தால் பாதிக்கப்பட்டு, இவற்றை இப்படி மாற்றிக் கொள்ளலாமே, அப்படிச் செய்தால், சமூகம் அதை எப்படி ஏற்றுக்கொள்ளும், அவ்வாறு ஏற்றுக்கொள்ளாத சூழலில், அதனை எவ்வாறு எதிர்கொள்ளுவது என்பதை ஆங்காங்கே பாரதி யார் தனது கதையினூடே இருத்திச் செல்கிறார்.  இதுவே சமூக மாறுதல் காலத்தில் (Transitional  Period) மக்கள் உள்ளங்களில் தோன்றி, அஞ்சி ஒதுங்கி, துணிந்து, எதிர்த்துத் தன் மாற்றத்தை உறுதி செய்யும் காலத்தின் தன்மை.  இதனைப் பாரதியார் தனது கதாபாத்திரங்கள் மூலம் மிக ஆழமாக வெளிப்படுத்துகிறார்.

இதில் ஒரு சிறு வருத்தம், இக்கதை முற்றுப் பெறும் காலத்திற்குள் பாரதி மறைந்ததுதான். விசலாக்ஷியின் மறுமணத்தை அத்தனை புரட்சியாய் யோசித்த பாரதி அவர் வளர்த்த சந்திரிகையின் வாழ்க்கையை வைத்து எத்தனை பெரிய மாற்றத்தை ஏற்படுத்த நினைத்தாரோ... 

அதனால்தான் இக்கதைக்கு சந்திரிகையின் கதை என்று பெயரிட்டார்.  ஆனால் அப்பெரிய பொக்கிஷம் நம் கைநழுவி விட்டது என்பது பெரும் வருத்தமே- பாரதியையும் சேர்த்து.  விசாலாக்ஷி என்னும் கதைமாந்தருக்கு அடுத்த தலை முறையாக வரும் சந்திரிகை எவ்வெப்படியெல்லாம்- வெறுமனே ஒன்றிலிருந்து இரண்டு, இரண்டிலிருந்து மூன்று...  என்ற நிலையில் இல்லாமல் - எவ்வாறு, தாம் வாழும் சமூகச் சூழலுக்கும், காலச் சூழலுக்கும் ஏற்ப ஒரு பாய்ச்சலை மேற்கொள்வார் என்பதை வாசகர்கள் அவரவர் விருப்பம் போல யூகித்துக் கொண்டு, அது தருக்க அளவில் முன்னேற்றம் கொள்ளும் என்று நம்புவோம்.

சந்திரிகையின் கதை

பாரதியார்

வெளியீடு: தாமரை பப்ளிகேஷ்ன்ஸ்

41-B, சிட்கோ இண்டஸ்ட்ரியல் எஸ்டேட்,

அம்பத்தூர், சென்னை - 98

விலை ரூ.60

Pin It