ஒரு கவிதை எழுதப்படுகிறது

குழந்தையின் சிறுநீரும் மலமும்

சிறிய இடைவேளையின் பின்பு

மீண்டும் எழுதப்படுகிறது

சமையல் கழிவு நீர்

காய்கறிகளின் கறையுடன்

துது எழுதப்படுகிறது

சிரித்துக் கொண்டே குழந்தைகள்

பாடசாலை செல்கிறார்கள்

சிணுங்கிக் கொண்டே

பின் தொடரும் குழந்தையை

சபிப்பதற்கில்லை

புருவம் நெரித்துச் சினப்பவனுடன்

சிறுபொழுது

தொலைபேசியில்

அழுதபடி முறையிடுகிறது

பரிச்சயமான பெண் குரல்

யார்யாரோ வருவதும் போவதுமென

பிறகு பேனாவைக் காணவில்லை

பேனா கிடைத்த போது-

எழுதி முடித்திராத கவிதையை

தேடி அலைதலும் பெறுதலுமற்ற

அந்தர மனோ நிலை

எங்கோ ஓரமாய்..... மௌனமாய்......

எனக்காக அது

காத்துக் கொண்டிருக்கிறது.

-          மைதிலி

உலகின் அற்புதங்கள் மட்டுமல்ல உலகப் பேரவலங்களும் பேரழிவுகளும் இலக்கியப் பதிவு களாக உருப்பெறும். ஈழத்தில் நடந்த /நடக்கும் போரும் இனஅழிப்பும் வன்கொடுமைகளும் இரத்த சாட்சிகளாக இலக்கியத்தில் உற்பத்தி ஆகின்றன.தமிழின் சங்கக் கவிதைகள் வீரயுகக் கவிதைகளாக, போரைப் போரின் அவலத்தைப் பாடி நின்றன. இன்றைய ஈழத்தின் படைப்புகளும் புலம் பெயர் எழுத்துக்களும் வாழ்வு குறித்தான சகலவித விசாரணையையும் செய்வனவாக வெளிப் படுகின்றன.

தமிழ்நாட்டோடு ஒப்பிடுகையில் ஈழத்தில் பெண் கவிஞர்கள் குறைவு. ஒரு வேளை இந்து மேட்டிமைச் சமூகத்தின் இறுக்கம் ஒரு காரணமாக இருக்கலாம். எண்பதுகளில் ஈழ இன நெருக்கடியும் போர்ச் சூழலும் பெரிய அளவிலான புலப் பெயர்வையும் நிலைத்த தன்மைத்தான வாழ்நிலை மீதான தகர்ப் பினையும் உருவாக்கியது. அதுவரை குடும்பத்துள் மரபார்ந்த பெண்களாக இருந்தவர்கள் பொது வெளிக்கு விரும்பியோ விருப்பமின்றியோ தள்ளப் பட்டனர். ஆயுதமேந்தவும் செய்தனர். இதன் ஒரு பகுதியாக எழுத்தாயுத வழியும் படிகளைத் தாண்டி மீறல்கள் நடந்தேறின “சொல்லாத சேதிகளை” (1986) சொல்ல நேர்ந்தது. தொடர்ந்து ஈழப் போர், போராளிக் குழுக்கள், இன அழிப்பு, புலப்பெயர்வு, இராணுவ அழித்தொழிப்புகள் ஆகிய அனைத்திலும் பெரிதும் பாதிப்புக்குள்ளானவர்கள் பெண்களாகவே இருந்தார்கள். உலகின் எந்த மூலையில் நடக்கும் போர், கலவரம், இராணுவ செயல்பாடு எதுவானாலும் முதலில் பலியாவது பெண்கள் என்பதே நியதியாகி விட்டது.

தாய், மகள், மனைவி, தோழி, பெண் நிலையில் தாக்குதலுக்குள்ளானபோதும் குடும்பம், சாதி, மதம், மொழி, இனம் ஆகியவற்றின் பாதுகாவலாளி யாகவே பெண் கட்டமைக்கப்படுகிறாள். இது உடைமைச் சமூகத்தின் தவிர்க்க வொண்ணாத நிலை. அகம் புறம் ஆகிய இரண்டிலும் ஆற்றமுடியா இரணப்பட்ட பெண்கள் பேசத் துணிந்தார்கள். பெரும்பகுதியும் இவர்களின் எழுத்துக்கள் கவிதை களாக அமைந்தன. எழுதுவதற்கான காலம், நேரடித் தன்மை, உணர்வுத் தெறிப்பைப் பதிவிறக்கம் செய்தல் ஆகிய கூறுகளில் கவிதை என்னும் வகைமையே பெண்களுக்குக் கைக்கெட்டுகிறது எனலாம்.

தான்யா, பிரதீபா கனகா-தில்லை நாதன் ஆகியோர் தொகுத்து வெளிவந்துள்ள “ஒலிக்காத இளவேனில்” (2009) ஈழப் பெண் கவிஞர்களின் தொகுப்பாக அமைந்துள்ளது. வட அமெரிக்காவை (கனடா) களமாகக் கொண்டு புலம்பெயர் வாழ்வை இக்கவிதைகள் மையப்படுத்துகின்றன.

“தனது அரசியல் நம்பிக்கைகளாலும் வாழ்வு முறைகளாலும் வேறுபடுகிற, சமூகத்தில் உலகின் வெவ்வேறு பாத்திரங்களைக் கொண்டிருக்கிற, உலகின் வெவ்வேறு நகரங்களில் உள்ளவர்களை, இலங்கைப் பெண்கள் என்கிற பொது உடன்பாட்டின் அடிப்படையில், கூட்டிணைக்க முனைந்திருக்கிறது. இதில் எழுதியிருக்கிற ஒவ்வொருவரது உலகும் ஓவ்வொரு தனித்தனி ஆட்களின் உலகங்கள்”

என்ற அறிமுக உரை வழி இக்கவிதைகளின் உருவாக்கப் பின்புலத்தை அறியலாம்.

இக்கவிதைகள் தனி மனித மனத் துயரத்தை, பிரிவை, காதலை, பெண் உடல் மீதான ஆக்கிரமிப்பை, சுயமழிப்பை, அடையாள மீட்டுருவாக்கத்தை, அந்நியமாதலை, இனஅழிப்பை, புலம் பெயர் வாழ்வுச் சிக்கல்களைப் பேசுகின்றன. சில கவிதைகள் உலக அரசியலையும் எள்ளலோடு எடுத்துரைக் கின்றன.

“பெண்ணின் விடுதலை பற்றிய ஆணின் நிராகரிப்பின் வரலாறு விடுதலையின் கதையை விட சுவாரசியமானது” என்ற வேர்ஜினியவுல்ப் பின் கூற்றின் அடிப்படையில் ஆண் என்கிற அதிகாரம் மீதான மீறலாகவும் பல கவிதைகள் அமைந்துள்ளன.

தனித்தன்மை

பெண்களின் தனித்தன்மைகள், துயருற்ற மனம், தன்னிரக்கம் கோரல் ஆகிய உணர்வலைகளாகப் பல கவிதைகளில் வெளிப்படுகின்றன.

மலர்களின் பார்வைகள்

அந்தியில் ஒடுங்கி விடுகின்றன

அவைகளின் கனவுகள் மாத்திரம்

காற்றில் அலைகின்றன

என் கவிதைகளைப் போல என்ற அனாரின் கவிதை, தனிமை, பிரிவு, அழிவு என்பவற்றைக் குறியீடாகத் தருகின்றது. கனவுகளும் கவிதைகளும் காற்றில் அலைகின்றன. நிச்சயம் ஒரு நாள் காற்று திசை மாறத்தானே செய்யும்........

இன்னொரு கவிதையில் ஆண்-பெண் உறவை இருட்டறைகளாகப் பார்க்கிறார் அனார்.

முடிச்சுக்களால்

தழும்புகளால்

புதிர்களாய் முளைத்தன அவ்வறைகள்...

எனத் தொடங்கி, அறையில் கட்டுண்ட உடலுக் காகவும் ஆன்மாவுக்காகவும் பரிதாபப்படுகின்றார்.

நீயும் நானும்

திறப்புகளை வீசிவிட்டு

வெளியே வருவோம்

கொஞ்சம் வாழ்வதற்கு

பூட்டியே கிடக்கட்டும்

அந்த இருட்டறைகள்

என முடிகிறது கவிதை. எல்லோர் மனதுள்ளும் பூட்டிக்கிடக்கின்றன பல இருட்டறைகள். அதுவும் குறிப்பாக, திறப்புகளைத் தூர வீச வேண்டியவர்கள் ஆண்களாகவே இருக்கிறார்கள். அனார் பொதுவில் திறப்பை வீசிவிடலாம் என்கிறார்.

இதே மனநிலையை இன்னொரு கவிதையில் அனார் வெளிப்படுத்துகிறார். கட்டிலை மீறிய ஆண்கள் நட்புறவு ஏக்கம் இப்படி முடிகிறது.

கடைசி முறையாக

அங்கு ஒரு வண்ணச்சிறகு

உதிர்ந்து போனது பற்றி

இங்கு ஒரு வெள்ளை நதி

வறண்டு போனது பற்றி

இங்குச் சிறகும் நதியும் சுதந்திரத்தின் குறியீடாகி நிற்கின்றன.

அந்நியமாதல்

கடுந்துயரின் நீட்சியாய் அந்நியமாதல் தன்மை பல கவிதைகளில் வெளிப்படுகின்றன. மனிதத்துவ அழிவும், மனஅழிவும், துயருற்று, அலைப்புற்று அடையாளமற்று அந்நியப்பட்ட இருத்தலின் வேதனையும் கவிச் சொற்களாகியுள்ளன. உடலும், நிலமும் கிழித்தெறியப்பட்ட பின்னால் மனம் வாழுமா என்ன?

நிச்சயமற்ற வாழ்விற்குப் பழக்கப்பட்டவர்கள்

எதற்காகவும்காத்திருப்பதை விரும்புவதில்லை

இன்றைய நிமிடத்தை வாழ்வதுடன்

நாளைய நிமிடத்தை எதிர் கொள்ளவும் தயாராகிறார்கள்.

என்கிறார் ரேவதி. சமூக வாழ்வு மட்டுமல்ல. தனி மனித வாழ்வும், இல்லறமும், காதலன்பும் கூட தூர தூரமாகிப் போவதை “சிதிலமடைந்த வாழ்க்கை” என்கிறார் இவர்.

அனார், “எனக்குள் வசிக்க முடியாத நான்” என்னும் கவிதையில் மிக இயல்பாக இதனைப் பேசுகிறார்.

எந்த சிதையில் எரிகின்றது

என் உடல்?

எந்த மழைக்குள் கரைந்தது

என் கவிதை?

யாருடைய அறையில் தொங்குகிறது

என் ஓவியம்?

யாருடைய வர்ணங்களில் இருக்கின்றன

எனது நிறங்கள்?

எவருடைய கனவுகள் சுமக்கின்றன

என் கண்களை?

கேட்காத செவிகளைத் தட்டித் தட்டி

என் இருதயம்-ஏன்

பாடிக் கொண்டே இருக்கிறது?

சுயம் இழந்து அகம் அந்நியப்பட்டுத் தவிப் பதை எளிமையாக முன்வைக்கிறது இக் கவிதை. துர்க்கா, புலம் பெயர்வுப் பின்புலத்தில் இப்படி அணுகுகிறார்:

உலகம் துண்டிக்கப்பட

துயரின் துருப்பிடிப்பில்

மௌனப் போராட்டங்கள்

உறவுகள் தூரமாகி

வீழ்ச்சிக்கும் தோல்விகளும்

துரத்த,

பயங்களின் விரிப்பில்

குமிழுடைக்கும் நம்பிக்கைகள்

மனக்கோகளின் வாசிப்புக்களை

சில ஆத்மாக்கள் அலட்சியப்படுத்த

கறுப்புக் கூட்டுக்குள்

விழித்தபடி அவள்

பால்கனிக் கம்பிகள் மீறி

ஒரு உயிர் கூட்டின் சிதைவு

புலம் பெயர்வில்

அவள் கறை படிந்த

இன்னுமோர் குருதித் துளி.

துண்டிப்பு, துயரம், வீழ்ச்சி, தோல்வி, பயம், நம்பிக்கையின்மை, உயிர்க் கூட்டின் சிதைவு... என அடுக்கிச் சென்று குருதித்துளி எஞ்சும் பெண் நிலையைக் கூர்மையாகக் காட்சிப்படுத்துகிறது இக்கவிதை.

கௌசலா, பச்சையம் என்னும் கவிதையில்,

விறைத்து போன நிலத்தில்

வேர்விட முயன்று போராடிக் கொண்டிருக்கிறது புல்லு என்று

சிறுதுளி எழுப்பிய நம்பிக்கையின் அடியிலும்

எரிக்கத் துடிக்கும் பெரு நெருப்பு மணம்,

மூச்சித் தேடி நீண்ட மூக்கில்அரிக்கத் தொடங்கியது

ஆதிக்க ஓவ்வாமை

என எழுதிச் செல்கிறார். நம்பிக்கைக்கும் நம்பிக்கை யின்மைக்கும் ஊடாக அறுபட்டு உழலும் மனம். அதிகாரமும் ஆதிக்கமும் மனிதத்தைக் காவு கொள்கின்றன. உறவுகள் சீர் குலைக்கின்றன. உயிர் என்கிற அடிப்படையே கேள்விக்குள்ளாகின்றது. எனவே,

தக்கன பிழைத்தல் என்பது

உணர்வைச் செத்தன வாழ்தல்

என்கிறார். தாவரத்திற்குப் பச்சையம், மனிதனுக்கு உணர்வு. உணர்வுப் பச்சையங்கள் பறி போனால்? கௌசலாவின் கவிதை அந்நியப்பட்ட வாழ்வையும் மனதையும் ஒருசேர பிரதிபலிக்கிறது.

போர் அவலம்

பேரிலக்கியங்கள் முளைத்த மண்ணில் இப் போது போர் இலக்கியங்களே முகிழ்க்கின்றன. போரினால் கிழித்தெறியப்பட்ட நிலமும் உடலும் வாழ்வும் பல கவிதைகளில் சாட்சிகளாய்ப் பதிவாகி உள்ளன. கற்பகம் யசோதரா “புதைகுழி” என்னும் கவிதையில் இந்திய/இலங்கை இராணுவத்தினால் கொலையுண்ட, வன்புணரப்பட்ட குடும்ப நினைவு களை ஓலமிட்டு அரட்டுகிறார். உயர்த்திய கை களுடன் அபயரக்குரல் எழுப்பி நிலத்துள் நிற்கும் குழந்தைகள்... உடல் இயந்திரம் உடைப்பட்டு பழுதாகிக் கிடக்கிறது. புதைகுழியை புதை குழி களுக்குள் நாறும் உண்மைகளை ஐக்கிய நாடுகள் சபை திறந்து திறந்து மூடுகிறது. கவிஞர் நவீன நல்லதங்காளாகிக் கைவிரித்துக் கூக்குரலிடுகிறார்.

தெய்வமே, நீ எங்கிருக்கிறாய்

நான் காற்றோடும் மரத்தோடும்

கோடை நிலத்தின் மேலாய்

என்னோடு தோன்றிடும்

நிழல் தோறும் பேசினேனே...

பிள்ளைகளின் பிணத்தில் நிலம்

பிள்ளைகளின் கனவில் கொலை

பிள்ளைகளின் விளையாட்டில் சூடு

நிகழும் எதிர்வும் இறந்த காலமாகி நிற்கும் அவலம். எல்லாம் தொலைத்த ஆன்மாவின் அழு குரல். எந்த நியாயமுமின்றிப் பழிவாங்கப்பட்டு, பறிமுதலாகி நிற்கும் வாழ்வை எப்படிச் சமாதானப் படுத்துவது?

“அவன் என்னுடையவன்” என்னும் கவிதையில் பிள்ளைகளைக் கண்முன் காவு கொடுத்த துயரினை இப்படி எழுதிச் செல்கிறார்.

நெஞ்சின் கதகதப்புள்

பாலருந்திச் சுருண்டிருந்த சிறு பூனை

எனது சிருஷ்டி.

சோட்டியைப் பிடித்தபடி திரிந்த பிள்ளையைக்

 கொண்டு போனீர்கள்

குண்டுதாரியென வீரரென வந்து சொன்னீர்கள்

ஓ... ஓர் பிணத்திடம் சொன்னீர்கள்.

நடை பிணமாகிப் போன தாய்மையின் துடிப்பு இது. “அருந்தும் நீரில் அவர்களது கண்ணீரின் அமிலச்சுவையாய்” வாழ்வு நாசமாகிக் கிடக்கிறது. சாவை விட செத்து செத்துப்பிழைப்பது கொடிய தாகிறது.

றெஜியின் “தெரியா விம்பங்கள்” வன்முறையை பயங்கரவாதத்தை, போரை இவற்றினால் உருவான கொடூரங்களை உலகின் முன் நிறுத்தி நாகரிக சமுதாயத்திடம் நீதி கோருகிறது.

30 ஆண்டுகளாக

எம் உடல்

துப்பாக்கிகளாலும், செல் துண்டுகளாலும்

துளைக்கப்பட்டு

வீதியில் கிடப்பது

எப்படி உன் கண்களுக்குத் தெரியாது போனது?

என வினவி, போதரினதும், சமாதானத்தினதும் பேரால் நிகழ்ந்தவற்றைச் சுட்டி குரல் அழிந்து முகமொழிந்து, அடையாளமற்றுப் போன போதும் நம்பிக்கையோடு முழங்குகிறது கவிதை.

பயங்கரமான உன் பாதங்களாலும் துப்பாக்கிகளாலும்

எம் உன் குரல் புதைக்கப்பட்டு, அழிக்கப்பட்ட போதிலும்

உங்கள் பாதங்கள் எம் காயத்தின் கசிவை உணரும் வரை

உங்கள் செவிகளில் எம் குரல் கேட்கும் வரை

உரத்துக் கத்துவோம் யுத்தம் வேண்டாம்

உடலும் மனமும் கெட்டு, நிலம் நிர்மூலமாகி, உறவுகள் உதிர்ந்து போன கையறு நிலை உடைமை, உரிமைப் பறிப்புகள் யாவும் சேர்ந்து இருத்தலின் அவசியமாக யுத்தம் வேண்டாம் எனக் கோருகிறது.

சுயம் அழிப்பு

போர், அவலங்கள், புலப் பெயர்வு, நிலையற்ற வாழ்வு தன்னிலையைத் தகர்த்தத்தானே செய்யும்? பால் மேட்டிமைச் சமூகத்தில் பெண்ணின் சுயம் ஏற்கெனவே களவாடப்பட்டுக் கிடக்கிறது. நடப்பு நிலைமை உயிர் வாழ்தலையே விசனப்படுத்தி யிருக்கும் வேளை தன் அடையாளங்களைக் காப்பதும், மீட்பதும் சிக்கலானது. பல கவிதைகள் சுயம் அழிபடுவதையும், சுய மீட்புக்கான ஏக்கத் தையும், பெண் மன வெளியாகப் பதிவாக்கிடக் காணலாம்.

ஜெபா, “வெளிகளில் தோற்கும் பிணங் களாகப்” பெண்களை முன்வைக்கிறார். எங்கும் எல்லாருக்கும் உணர்வற்ற பிண்டங்களாகப் பெண்கள் ஆகிப் போவதைச் சுட்டுகிறார்.

ஒரு தடவையே தோற்றோம் என எண்ணி

ஒவ்வொரு தடவையும் தோற்றே போனோம்

ஆனாலும் வாழ்கிறோம்.

வாழும் வெளியில் பெண்களாக.

வசந்தி, “பூட்டுகளும் சாவிகளும்” என்ற கவிதையில் பெண்கள் எப்போதும் பூட்டப்பட்ட அறைகளாக வலம் வர வேண்டியதைப் பூட்டு இல்லாவிட்டாலும் கூட மிக நுட்பமாகப் பதிவு செய்கிறார்.

பூட்டப்படவில்லை என்று

சொல்லப் பட்டாலும்

பழக்கப்பட்டுப் போனதில்

சாவி இல்லாதிருத்தில் கூட

இம்சை தருவதாய்....

காலம் காலமாக அடிமைப்படுத்திக் கட்டுக்குள் வைத்திருக்கும் பொழுது, காவல் இல்லையென் றாலும் எழுந்து பறக்க முடியாத, சிறகுகள் இருப்பதையே உணராத, உரைக்காத நிலையாக எளிமை யாகக் கவிதையாகிறது.

துர்க்கா, பெண்ணின் பிம்பங்களாகி நிற்ப வற்றை முன்னிறுத்திப் பெண்ணின் தன்னிலையைத் தேடுகிறார்.

அவரின் மகள்

இவரின் மனைவி

உங்களின் தாய் என்பதை விட

நான் என்பதாக

விட்டுச் செல்ல விரும்புகிறேன்.

எனக்கான என் சுவடுகளை.

ஆம். பெண், ஆண் மைய உறவாலேயே தாய், மனைவி, மகள், தங்கை என அறியப்படுகிறாள். தனக்காக சுவடுகளைத் தேடுவது இயல்பு தானே?

தர்சினி, பெண்ணின் தன அடையாளத் தேட்டத்தை வேறு ஒரு வகையில் இனம் காண் கிறார்.

உரத்த உச்சரிக்கத்தான் ஆசை

எனது குரலை

ஆனாலும்

அலையாய் ஆர்ப்பரிக்கும்

ஏனைய குரல்களில்

அது அர்த்தமிழந்து விடுகிறது.

பிரிவுத்துயரும் தனிமை மனமும்

இயல்பாய் அமையாத பிரிவும், தனித்து விடப் பட்ட மனமுமே பெண்வெளியாகச் சுருங்கிவிட்ட நிலை பல கவிதைகளில் வெளிப்படுகிறது.

நிவேதா ஒரு கவிதையை இப்படி நிறைவு செய்கிறார்.

அடையாள அட்டையையும்

தேசிய மறுப்பையும் எதிர்பார்க்கும்

ஆளும் வர்க்கத்தினரின்

அடிமைக்கு நினைவிருக்குமா...

என்னைப் போலவே ஒரு பெண்

கிரிவெஹரப் பாதையினோரத்தில்

அலரிப் பூக்கள் நிறைந்த கனவுகளுடன்

அவனுக்காய்க் காத்திருப்பது?

காதலின் குறியீடாக அமையும் இக்கவிதை, காதல் மனமிருந்தும் சூழல் நிர்ப்பந்தம் தனிமையை மட்டுமே விட்டுச் செல்லும் துயரினைப் பேசுகின்றது

“தமிழினி”, என் தாயுமானவளுக்கு என்னும் கவிதையில் தலைவிரித்தாடும் தனிமையைப் பாடுகிறார். சங்கப் பாடல்களுடன் மிக நெருங்கி வரும் கவி வரிகள் சிலிர்ப்பைத் தருகின்றன.

ஒற்றைக் குயிலின் அழுகையின்

நீட்சியில் எழுகிறது

என் சோகம்

பொழியும் மழையின் ஒவ்வொரு துளியிலும்

வழிகிறது என் கண்ணீர்.

நெஞ்சப் பிழிவாய் உருவெடுக்கும் சொற்கள் உயிர் சிசுக்களாய் வலம் வருகின்றன.

சரண்யா, உடலும் மனமும் ஒத்திசைய முடியாத பிரிவினைத் தம் கவிதையில் சுட்டுகிறார். மரணத்தைப் போல் உறுத்தும் பிரிவு

காதலின் கலவியல்

இசைய முடியா (த) மனம்

காற்றில் பறக்கும் கொடியாய்

அங்கும் இங்கும்.

“ஒப்பாரி” என்னும் இவரின் கவிதையோ கையறுநிலைப் புலம்பலாக ஒலிக்கிறது.

சிதறும் என நினைத்தா கனவுகளை

வளர்த்தோம்

ஆசையால், அழகால், காதலால், கனவுகளால்

வளர்த்த உடம்பை

ஈக்களும் நாய்களும்

மொய்க்க விட்டேனே... ஐயோ.

வலியின் சூட்டில் வந்து விழும் உணர்வுத் திவலைகளாக இங்கே சுவிச் சொற்கள். தர்சினி, “விலகலுக்கான நெருக்கத்தில்” என்னும் கவிதையில் ஆண் பெண் காதலுறவின் பிரிவு நிலையைக் கடந்த காலத்து நினைவுத் தடத்தினூடாக எளிமையாக அதே நேரத்தில் மனப்பேச்சாக வெளிப்படுத்துகிறார்.

வாழ்வற்ற வாக்குறுதிகளிலும்

ஆதாரமற்ற நம்பிக்கைகளிலும்

சுமக்கவியலாத இந்தப் பிரிவுச் சுமையிறக்கிட

கொஞ்சம் சாய்ந்து கொள்ள

உள்ளம் கெஞ்சுகிறது...

விழியடைப்பும், விடையளிப்புமாக அடையும் இந்தக் கவிதையும் சங்கத் தலைவியின் தனிமை இரக்கத்தை நினைவூட்டத்தக்கது.

தான்யா, தன் கவிதைகளில் பிரிவையும் தனிமையையுமே பாடுகிறார். உடைபட்ட மனதை இப்படி வெளிப்படுத்துகிறார்.

நீ என்பது உடைவின் குறியீடு

போரின் குறியீடு சமூகத்தின் குறியீடு

நானின் குறியீடு

இப்படியிருக்க, உன்னை எப்படிப் புறக்கணிப்பேன்.

புறக்கணிக்க முடியாத புள்ளியில் நானும் நீயும்

இணைந்திருக்கிறோம், காதலால் அல்ல,

பிறழ்விலிருந்து எழுதுங்கள் முறிவின் முதற் குறிப்பை

பிறழ்வும் முறிவுமே வாழ்வாகிப் போனது. அன்பும் இரக்கமும் பிணைப்பும் காணாமல் போய் பிடுங்கியெறியப்பட்ட வாழ்வுத் தூண் அச்சுறுத்து கிறது. இன்னொரு கவிதையில் தான்யா. இப்படிக் கேட்கிறார்.

உன்னுடைய தனிமை

பிறழ்வை உண்டு பண்ணிய தில்லையா?

யாருமின்றி ஒரு நாள்

நிர்வாணமாய் ஓடுவாயோ என்கிற அச்சத்தை

அது தரவில்லையாடி உனக்கு.

யாருமற்ற வெளி சுருங்கிய தனிமை என்பது கொடுமை. அது மனநோயாளி நிலைக்குத்தான் இட்டுச் செல்லும் என்கிறது இக்கவிதை.

உடல் மொழி

பெண் எழுத்து குறித்தும் உடல் மொழி குறித்தும் ஏராளம் விவாதங்கள் நடக்கத் தான் செய்கின்றன. உடலை மட்டுமே வைத்து அறியப் பட்ட பெண்ணின் அகத் தவிப்பு தன் உடலைத் தீனியாக அல்ல தீயாக முன் நிறுத்தி தன்னுரிமை கோருகிறது. நிவேதா, பெண்ணைப் பின் தொடரும் ஏராளம் சாயல்களை “அகமெங்கும்பொழியும் முன்பனிக்கால மந்தாரங்களாகத்” தருகிறார்.

இனியெதற்கு என் தயவு

முலைகளே பேசட்டும்....

கழுத்தை நெரிக்கும்

“ஆம்பிளைத்” தனாங்களைப் பற்றி....

கால்களை பிணைக்கும்

யுத்தச் சங்கிலியைப் பற்றி....

இன்னமும்

அந்தரத்தில் அலைவுண்டிருக்கும்

என் எப்போதைக்குமான

கனவுகளைப் பற்றி....

சரண்யா, இழந்த சுகங்களை மீட்க வழியற்ற நிலையினை இருத்தலின் மீதேற்றி எழுதுகிறார்.

அங்கங்கே அலையும் மனிதர்கள்,

தேடல்களுக்கான தவிப்புடன்

விறைத்துப் போக வைக்கும் குளிரில்

சுருங்கிப் போன முலையும்

மரத்துப் போன கைகாலும்

(இருப்பதைவிட)

பிளந்துபோன காதும் மூக்கும்

அமர்ந்து போன குறியுடன்

எதை வேண்டி நிற்கிறேன்?

ஏதேதோ செய்திகளுடன் வரவிருக்கும்

கணங்களும் நாட்களும்

என்ன தரக் காத்திருக்கின்றன

உதிரப் போகும் தோலும் வயசும்

திரும்பி வரா நாட்களும் இளமையும்

இன்னும் எதைத்தரும் என யோசிக்கிறேன்

உடைத்து விட்ட உறவும்

கட்டில்லா காதலும் காமமும்

எதைக் கொண்டு வருமெனப் பார்த்திருக்கிறேன்.

போரும் புலப் பெயர்வும்உறவும் இழப்பும் கடந்த தன் உடல்/உள்ளத் தேடல் மிச்சமாய் நீள்வதைக் கவிதை சுட்டி நிற்கிறது.

புலம்பெயர்வு வாழ்வும் சிக்கல்களும்

சொந்த மண்ணில் இனமும் மொழியும் நிலமும் உறவும் அழிந்து கண்ணீரும் கம்பலையுமாகப் புலம் பெயர்ந்து குடியுரிமை /ஏதிலிக்காப்பு பெற்று வாழும் வாழ்வின் புதிய சிக்கல்கள் பலவும் ஒலிக்காத இளவேனில் தொகுப்பில் இடம் பெறுகின்றன. போர் இலக்கியம் என்பதைக் கடந்து புலம் பெயர்வு இலக்கியமாக இவை விரிகின்றன. இனம், மொழி, மதம், கலாச்சாரம், தொழில், அரசியல், நுகர்வு... என எல்லாமும் மாறுபட்ட புதியதான சூழல். மொழி, இனம் சார்ந்து வெளியேறி வந்துள்ள அடையாளம் முகத்தில் அப்பிக்கிடக்கிறது சொந்தப் பண்பாட்டு மரபை மட்டுமின்றி சாதி, நிறம் போன்ற ஒட்டுக்களையும் காக்கத் துடிக்கும் மனம். வந்தேறிகளாக, குற்றவாளிகளாகப் பார்க்கும் பார்வையும், நிலமும் சூழல், இவற்றை எதிர் கொள்ளும் மனநிலையை இக்கவிதைகள் பிரதி பலிக்கின்றன.

இந்திரா, தன் கவிதையொன்றில் புலம் பெயர்ந்த மனித மனதின் சோகத்தை, ஏக்கத்தை இப்படி எழுதுகிறார்.

எனக்குள் ஒரு ஜிப்சி

எப்போதும் இருந்து கொண்டே இருக்கிறாள்

அவள்,

வரம்புகளை உடைத்தெறிந்து

ஒரு புறாவைப் போலப் பறந்திட

ஏங்கிக் கொண்டிருக்கிறாள்.

நாடற்று

நிலமற்று

சுதந்திரமில்லா இந்த வாழ்வற்றும்

பறந்திடக் காத்திருக்கிறாள்.

தான்யா, சொந்த மண்ணில் பிள்ளைகளை இழந்த தவிப்பையும், புலம் பெயர்வில் சக மாணவ னொருவனால் காரேற்றிக் கொல்லப்பட்ட பிள்ளையை இழந்த தவிப்பையும் இணைத்து ஒரு கவிதையில் தருகிறார். புத்திரசோகம் பொதுவாய் விரிகிறது.

முற்பகல் 11. 30

அதைக் கடக்கவே விரும்பாமல்

மலர்ப் படுக்கையில்

கிடத்தி வைக்கப்பட்டிருக்கும்

மகனை வருடி

சில்லிடும் கைகளைப் பற்றி

அம்மா கதறுகிறாள்

கடிகாரத்தைப் பார்த்தபடி

அவனை எடுத்துச் செல்ல

யமனாய் காத்திருக்கும்

எரியூட்டிகளுக்கு நேரம் முக்கியம்,

நிமிடத்தில் நீறாக்கப்படும்

குழந்தையின் உடலை

முழுதாய் இனியொரு போதும்

அவள் காணப் போவதில்லை.

சவக்குழிகளுக்குள் புதைக்கப்படும்

பிள்ளைகளை மண்ணைக் கிளறி

தேடித் தேடி கதறுகிறாள் அம்மா

சரியாய் எந்த கிரியைகளையும்

செய்யாது போர் திண்ட பிள்ளைகளை விட்டு

நூகர்கிறார்கள் அம்மாக்கள்

பிள்ளையின் எல்லாவற்றையும்

எடுத்துச் செல்லும் அகாலத்தின் கதவாய்

தீ வார்க்கப்படுகிறது.

காவெடுத்தவர்கள் நினைக்கப் போவதில்லை

ஒரு பயித்தியக்காரியைப் போல

தமக்கான குழிகளை வெட்டியபடி

காத்திருக்கும் பெற்றவர்களை

போர் இழப்பும் புலம் பெயர்வு இழப்பும் இங்கே ஒருங்கே காட்டப்படுகின்றன. புலம் பெயர் மண்ணில் சந்திக்கும் அவலங்களை பிரதீபா மிக இயல்பாகப் பதிவு செய்கிறார்.

“இது உன்னுடைய நாடாகாது

வெகு தொலைவில்

ஈரேழு கடல்கள் தாண்டி

உன் ஊர் உன் வீடு உன் மொழி

உன் இனம் உன் அடையாளம்

இருப்பதாக நீள் பட்டியல் ஒன்று

தந்தாய் நீ.”

“வீதிகளில்

தோழர்களுடன் செல்கையில்

உன் இனத்தவன் ஒருவன்

எங்களில் யாரேனும் ஒருத்தியை

உன் இனத்து மொழியிலேயே

வேசைகள் என்று

எம்பால் உறுப்புகள் சொல்லிக் கத்துவான்

அவர்களை எவ்வின அடையாளமுமின்றி

ஆண்கள் எனவே

அழைத்துப் பழகினோம்.”

தன் ஊடகங்களில் அமெரிக்காவும்

என்னை ஆதரி அல்லது பயங்கரவாதத்தை ஆதரி

என்னிடம் அதையொத்ததையே நீயும் சொல்வாய்?

நிலம், பால், மொழி சார்ந்த ஆதிக்கங்களுக்கு எதிரான குரலாக இக்கவிதை அமைகின்றது. தனக்காக அரசியலை இக்கவிதை பேசுகின்றது.

நம்பிக்கைக் கீற்று

பெண் வெளியில் நின்று சர்வதேசிய சமூக வெளிக்குள் ஊடுருவிப் படைப்பாக்கம் செய்துள்ள இக்கவிஞர்கள் தங்கள் கவிதைகளினூடாக நம்பிக்கைக் கீற்றையும் தெளித்துள்ளனர்.

சரண்யா, நடப்பு நிர்மூலங்களை அடுக்கிச் சென்று இறுதியில்

காலம் என்னும் களிம்புடன் இதோ காற்று

மீண்டும் பிறப்பேன்

என்கிறார்.காற்று காலம் பார்த்து வீசும் இரணங் களுக்கு மருந்தாகும்,மீண்டும் வாழ்வு பிறக்கும் என்பதான நம்பிக்கை வரிகள் இவை

கௌசலா, அரசியல் சார்ந்து விமர்சனங் களை முன்வைத்து விட்டு இப்படிச் சொல்கிறார்.

என் எல்லாக்

காயங்களிலிருந்தும்

உடைவுகளிலிருந்தும்

நோவுகளிலிருந்தும்

ஆத்திரங்களிலிருந்தும்

ஏமாற்றங்களிலிருந்தும்...

வாழ்வேன்.

திரும்ப திரும்ப

முதற்படியிலிருந்து...

என் குழந்தைக்குப் பாடும் பாடலில் வாழும்

ஒரு சிலந்தி போல.

விழ விழ எழும் இந்த சக்திதான் இன்றைய தேவை. இயக்கங்கள், போராட்டங்கள் பின்னடைவை அடையும் போது நம்பிக்கை சார்ந்த முன்னெடுப்பு களே அவசர அவசியம், பல கவிதைகள் இத்தகு நம்பிக்கைகளை முன்மொழிவது இதமளிக்கின்றது.

“காவிய திரைச்சீலைகள்பற்றிய புலம்பல்களை நிறுத்த வேண்டும். ஏனெனில் அரண்களிலே போர் நடந்து கொண்டிருக்கும் போது, திரைச் சீலை யெல்லாம் சுக்கல் சுக்கலாகப் கிழிபட்டுப் போகும்” என்பான் மகாகவி மாயகோவஸ்கி. கவிதையின் அழகியல் விழுமியங்கள் பற்றிப் பேசுவோருக்கு இது சரியான பதிலீடாக அமையும்.

“ஒலிக்காத இளவேனில்” கவிதைகள் யாவும் பெண்களால் எழுதப்பட்டவை. உலகின் எத்தகு துயரமும் கூட பெண்ணையே மையமிட்டு நிலை கொள்கிறது. காதல், பாசம், தாய்மை, மென்மை, அழகு, நளினம் என முன் வரையறை செய்யப் பட்ட பெண்களின் உலகம் இக்கவிதைகளில் குறைவு.

மொழி, இனம், நிலம் சார்ந்து ஆதிக்க அழிப்பு குத்திக் கிழித்த இரணங்களை வீரியத் தோடு உலக சமுதாயத்தின் முன் காட்சிப்படுத்தும் முயற்சிகளும் உண்டு, சகிப்பும் ஜனநாயகமும், கூட்டுறவும், மாந்தநேயமும் கூடிக் கலந்து வாழ்தல் பற்றிய எதிர்பார்ப்பும் கவிதைகளாகியிருக்கின்றது.

பிடுங்கி நடப்பட்ட இடங்களின் புதிய சிக்கல்களை மரபு மனம் எதிர் கொள்ளும் விதமும் கவிதை களாகி நிற்கின்றது. சொந்த சகோதரர்கள் முதற் கொண்டு உலகின் காவலனாக வலம் வரும் அமெரிக்கா வரையான விசனமும், விமர்சனமும் இக்கவிதைகளில் உண்டு.

உலக அரசியலை, உலக மயப் பின்னணியிலான பண்பாட்டு அரசியலைப் பேச முயலும் கவிதைகளும் இத்தொகுப்பில் உண்டு. பெண்ணின் சிந்தனை வெளியை உலக அரங்கின் நடுவே கொண்டு சென்ற (இது பற்றிய எவ்வித ஆரவாரமும் திட்டமிடலும் இன்றி) ஒரே காரணத்துக்காக இக்கவிதைகளைக் கொண்டாடலாம்.

(புலம்பெயர்வுக் கோட்பாட்டு நோக்கில் அயலகத் தமிழ் இலக்கியங்கள் என்னும் பொருண் மையில் காந்தி கிராம கிராமியப் பல்கலைக்கழகத்தில் (23.04.2013- 24.04.2013 நடைபெற்றக் கருத்தரங்கின் உரை.)

Pin It