Fukuoka Foundation 1995 ஆம் ஆண்டிற்கான Fukuoka Asian Cultural Prize1995 பரிசினை தென்னிந்தியா, தென்கிழக்காசியா பற்றி காத்திரமான ஆய்வுகளை மேற்கொண்டு வரும் பேராசிரியர் நொபொரு கரஷிமா அவர்களுக்கு வழங்கியபோது அதன் நினைவாக அவர் ஆற்றிய நினைவுச் சொற்பொழிவின் மொழிபெயர்ப்பு.

தென்னிந்தியா பற்றிய ஆய்வினை மொழியியல் பின்னணியில் போதகர் ராபர்ட் கால்ட்வெல் மேற் கொண்டார். இலக்கியப் பின்னணியில் பேரா.பெ.சுந்தரம் பிள்ளை செயற்படுத்தினார்.மானிடவியல் பின்னணியில், எட்கர்ட்ஸ் தர்ஸ்டன் தொகுத்தளித்தார். கே.வி.சுப்ரமண்ய அய்யர் கல்வெட்டுச்சான்றுகளின் அடிப்படையில் தென்னிந்தியாவினை ஆய்ந்தார்.

அவருக்குப் பின் தென்னிந்திய வரலாற்றினை ஆய்வதற்குக் கல்வெட்டுச் சான்றுகளைப் பெருமளவில் பயன்படுத்தியவர் பேரா.கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி. இவர்கள் அனைவருமே தென்னிந்திய மொழிகளில் நற்புலமை பெற்றோராவர்.

இவர்களின் ஆய்வுமுறையிலிருந்து முற்றாக வேறுபட்டு மார்க்சியத்தின் வரலாற்று இயங்கியல் கொள்கையினையும் உட்செறித்து அதனைக் கல்வெட்டுச் சான்றுகளுடன் பொருத்திப் பார்த்து தென்னிந்திய சமூக வரலாற்றினை நுணுகி ஆய்ந்து அவற்றினை நூல்களில் வெளியிட்டு வரும் வரலாற்றறிஞர் பேரா.நொபொரு கரஷிமா அவர்களுக்கு இந்தியாவின் பிரதமர் மாண்பு மிகு மன்மோகன் சிங் அவர்கள் அண்மையில் ஜப்பான் சென்றபோது பத்மஸ்ரீ பட்டத்தினை அளித்தார்.அவர் தென்னிந்தியா பற்றிய ஆய்வினை எந்தச் சூழலில் மேற்கொண்டார் என்பதனை ஏற்கனவே 1995-இல் Fukuoka Foundation 1995ஆம் ஆண்டிற்கான Fukuoka Asian Cultural Prize பெற்ற போது அவர் அளித்த சொற் பொழிவில் விளக்கியுள்ளார். அதுவே, இங்கு அளிக்கப்படுகிறது. இனி அவரின் குரலில்.

என் ஆய்வுப்புலம் தென்னிந்திய வரலாறும் பண் பாடும். இதன் மையக்கூறு தென்னிந்தியா. 35 ஆண்டு களுக்கு முன்பு 1961ஆம் ஆண்டு என் ஆய்வுத் தேடலைத் தொடங்கினேன். பட்டப்படிப்பிற்காக சென்னைப் பல்கலைக்கழகத்திற்கும்,இந்தியத் தொல்லியல் அளவீட்டுத்துறையின் கல்வெட்டியல் அலுவலகத் திற்கும் பயில்வதற்காக இந்தியாவிற்கு வந்தேன்.

மூன்று ஆண்டுகள் இந்தியாவில் தங்கினேன்.அதனை அடுத்தும் இந்தியாவிற்கு வந்தேன். மொத்தம் 7 ஆண்டுகள் இந்தி யாவில் தங்கினேன். இந்தியா தவிர, பாகிஸ்தான், நேபாளம், ஸ்ரீலங்கா, மற்றும் பிற தென்கிழக்காசிய நாடுகளுக்கும் சென்றேன்.

எப்போதெல்லாம் அந்நாடுகளுக்குச் செல் கிறேனோ,அப்போதெல்லாம் குறிப்பாக ஏன் இந்திய வரலாற்றினைப் பயிலவேண்டும் என்று இந்தியர்கள் என்னிடம் வினவினர். அடிக்கடி இது போன்று கேள்வி கேட்டதால் இருவகையான பதில்களை அவர்களுக்கு இறுத்தேன். என் குடும்பம் பற்றி முதலில் சொல்ல வேண்டும்.

என் குடும்பம் ஆசிரியர் பணியோடு தொடர் புடையது.என் அம்மாவின் அப்பா சீன இலக்கியத்தில் புலமை பெற்றவர். டோக்யோ பல்கலைக்கழகத்தில் இலக்கியப் புலத்தில் பேராசிரியர். அவருடைய மாணவர் தான் என் தந்தையார். அவர் 1945 வரை Keijo Imperial University- பெற்றவர். Lu Xun -க்கு நெருங்கிய நண்பர். இச்சூழலில், நானும் தந்தையினையினைப் போன்று சீனமொழி இலக்கியம் பயில வேண்டும் என்று எதிர்பார்த்தனர்.ஆனால், தந்தையின் பாதையினைத் தெரிவு செய்யவில்லை.சீனாவிற்குப் பதில் இந்தியா வினைத் தெரிவு செய்தேன். இலக்கியத்திற்குப் பதில், வரலாறு பிடித்தமானது. இப்படித்தான் இந்திய வரலாற்றினை ஆராயத் தொடங்கினேன்.

மேற்சொன்ன பதிலுக்குப் பெரும்பாலானவர்கள் திருப்தி அடைந்தனர்.இது புளுகு அன்று; நம்பலாம்.எனினும் ஏன் இப்புலத்தினைத் தெரிவு செய்தேன் என்று முழுமையாக விளங்கவில்லை. மிகவும் ஆர்வத்துடன் கேள்வி கேட்கும் நபர்களுக்குக் கீழ்வருமாறு பதில் இறுத் தேன்.

என் உயர்நிலைப் பள்ளிப்பருவத்தில் ஆசிய வரலாற்றில் ஆர்வம் இருந்தது. இயல்பாகவே, கல்லூரியில் நான் கீழைத்தேய வரலாற்றில் முதுகலைப் பட்டம் பெற்றேன்.படிக்கிற காலத்தில் உண்மையில் ஆசியா என்றால் என்ன என்பது பற்றி வியப்புடன் அறியத் தொடங்கினேன். நாம் மேலைநாட்டவர் அன்று; ஆசியர்கள் என்று அழைத்துக்கொள்கிறோம். ஆனால், ஏன் இப்படிக் குறிப்பிட வேண்டும்.முழுமையாக விளங்கவில்லை. ஆனால், ஆசியா என்ற கோட்பாடு தவறான பொருளில் புரிந்துகொள்ளப்பட்டுள்ளதோ என்று உணர்ந்தேன். மேலைநாட்டவர் இங்கு வந்த போதுதான் ஆசியா பற்றிய இப்போது நடைமுறையில் உள்ள கருத்துரு உருவாக்கப்பட்டது.ஆசியா மேலை நாட்டிற்கு நேர் எதிராக அமைந்துள்ளது. ஆசியா பற்றிய கோட்பாடு ஆசியர்களாகிய நம்மால் உருவாக்கப்பட்டது அன்று.

மேற்சொன்னவை உண்மையானால், கடந்த காலத்தில் என்ன நடந்தது. வரலாற்றினைத் திரும்பிப் பார்த்தால் ஆசியாவில் இருபெரும் நாகரிகங்கள் தோன்றியுள்ளன என்பதனை அறியலாம். ஒன்று சீன நாகரிகம். அதன் கூறுதான் ஜப்பானிய வரலாறும். மேற்குலகோடு நெருங்கிய தொடர்புடைய இஸ்லாமிய நாகரிகத்தினை ஒதுக்கிவிட்டால் அடுத்தது இந்திய நாகரிகம்தான்.பழங்காலத் தென்கிழக்காசியர்கள் இந்திய நாகரிகத்துடனோ, சீனநாகரிகத்துடனோ ஆளுமைப் பட்டிருந்தனர்;பிறகு தமக்கான தனித்த கூறினை உருவாக்கிக் கொண்டனர்.

ஜப்பான் என்றுமே சீனநாகரிகத்தின் ஆளுமைக்கு நெருக்கமாக ஆட்பட்டிருந்தது.என் குடும்பத்தின் புலமைத்துவம் சீனவியல் துறை என்பதால் சீனா ஜப்பான் மேல் நெருக்கமான ஆளுமையினைச் செலுத்தி யிருந்தது பற்றிப் பிறரைவிட என்னால் தெளிவாகப் புரிந்துகொள்ள முடியும் என்று நினைத்தேன்.ஆனால்,பவுத்தம் தவிர இந்தியா பற்றி எனக்குத் தெரியாது. இந்திய வரலாறும் இந்திய மக்களின் வரலாறும் தெரியாது. பவுத்தம் தற்போது இந்தியாவில் இல்லை என்று சொல்லப்படுகிறது.

எனவே, இந்திய வரலாற்றினைப் படித்தால் சீன நாகரிகத்தோடு ஒப்பிட்டு ஆசியா என்பது என்ன?என்ற என் கேள்விக்கு விடையினைக் கண்டுபிடிக்கலாம் என்று சிந்தித்தேன். இவ்விரு நாகரிகங்களுக்கும் இடையிலான ஒற்றுமையினைக் கண்டுபிடித்தால் அவை மேலை நாகரிகத்தினின்றும் வேறுபடும்.அவ்வேறுபாடுகளே நான் காண நினைத்த ஆசியாவாகும். இப்போது ஆசியா பற்றிய கோட்பாட்டினை அறிந்துவிட்டதாக அறிகிறேன். இதுவே, நான் இந்திய வரலாற்றினைப் படிக்கத் தொடங்கிய கதையாகும்.

உண்மையினைச் சொல்லவேண்டுமெனில்,தொடக்கத்திலிருந்தே இப்படி யுக்தியுடன் சிந்திக்க வில்லை. எப்படி, என் பாடத்தினை நான் தெரிவு செய் தேன் என்பதற்கான ஒரு மேலோட்டமான விளக்கம். இதனை பெரும்பாலானவர்கள் ஒப்புக்கொண்டார்கள். ஆனால், அதற்குப் பிறகு என்ன நடந்தது என்று வினவத் தொடங்கினார்கள்.இந்திய,சீன நாகரிகங்களின் இடையில் பொதுவான கூறுகளைக் கண்டுபிடித்தேனா என்றும் அவற்றினை விளக்கவேண்டும் என்றும் வேண்டினர்.

இக்கேள்வி சிக்கலில் மாட்டிவிட்டது. இக் கேள்விக்கு என்னால் பதிலிறுக்க முடியும் என்று தோன்ற வில்லை.இந்திய வரலாற்றினை ஓரளவிற்குப் படித்துக் கொண்டுள்ள என்னால் இக்கேள்விக்கு உடனே பதிலிறுக்க முடியுமென்று தோன்றவில்லை.எனினும் யாராவது என்னைப் பின்பற்றி இதற்கான விடையினைக் கண்டடைவர் என்று நம்புகிறேன். மேற்சொன்னவை ஒரு மேலோட்டமான பதில்கள். ஆசிய வரலாற்றில் ஆர்வம் கொண்டேன் என்பதன் முக்கியத்துவத்தினை முழுமை யாகச் சொல்லவில்லை.இன்று இதனைப் பேசலாம்.

இது என் அடையாளம் உருவான கதைத் தொடர்பானது.இக்கதை என் சிறுவன் காலத்திலிருந்து தொடங்கு கிறது. இரண்டாம் உலகப்போர் 1945-இல் முடிவுற்ற போது நான் பள்ளிமாணவன்.வான்படைத் தாக்குதலில் எங்கள் வீடு எரிந்து நாசமானதால் எங்கள் குடும்பம் சிதைவுற்றது; டோக்யோவை விட்டு வெளியேறினோம். காமகூரா என்னும் நகரில் ஒரு சிறிய வீட்டில் வசித்தோம்.

நான், என் அக்காள், எங்கள் பெற்றோர். போருக்குப்பின் அமெரிக்கத் துருப்புகள் காமகூரா நகரிலும் நிலை கொண்டன. படையினர் தரும் சாக்லேட், சூயிங்கம் போன்றவற்றுக்காகக் குழந்தைகள் அவர்களைச் சுற்றிச் சுற்றி வந்தனர். நானும் பலமுறை அவ்வாறு இனிப்புகளை வாங்கியுள்ளேன்.அவர்கள் என் போன்ற குழந்தைகள் மேல் பெரும் தாக்கத்தினை உண்டாக்கினர். அதுபோன்ற கனகச்சிதமான படையணி யினரை நான் முன்பு கண்டதில்லை.

அடுத்த ஆண்டு நான் Junior high school -இல் சேர்ந்தேன். அப்போது நாங்களாகவே அதாவது நானும் என் அக்காவும் காமகூராவிலிருந்து டோக்யோவிற்கு தனியாகவே சென்று வந்தோம். Yokosuka line வழியே டோக்யோ போகவேண்டும். சில ரயில்வண்டிகளே அப்போதெல்லாம் இருந்தன.அவையும் பயணிகளால் நிரம்பி வழியும்.மக்கள் மிக லாவகமாக ஜன்னல் வழியே உள்ளே நுழைவர்; வெளியில் வருவர். தங்கள் பிள்ளை களைத் தனியே டோக்யோவிற்கு அனுப்புவதற்கு எங்கள் அம்மா மிகவும் கவலையுற்றார்.

 இரண்டாம் வகுப்பு டிக்கட்டிற்கான போதுமான பணம் தருவார். அது இப்போது ஜப்பானில் உள்ள பச்சைநிற ரயில் வண்டிகளுக்கு இணையானது.காமகூரா நிலையத்திலேயே இரண்டாம் வகுப்பிற்கான பயணச்சீட்டுகளை வாங்குவோம்.     இரண்டாம் வகுப்புப் பெட்டிகளிலும் அமெரிக்கத் துருப்புகளின் கூட்டம் நிரம்பி வழியும். கூட்ட நெரிசலில் தவித்த என் அக்காளின் கைகளைப் பற்றிக்கொள்வேன்.

அப்போது ஒரு வெண்ணிறக்கை வெளியே நீட்டி என்னை வண்டியிலிருந்து வெளியே தள்ளியது.அதில் பயணித்த ஆக்ரமிப்புப் படைத்துருப்புகளில் ஒருவர் என்னை மேலும் சரிந்து விழாமல் தடுத்தார்.அவரும் பிற படைவீரர்களும் என் அக்காளை கைகொடுத்துக் காப்பாற்றினர்; என்னைக் கைவிட்டனர்.

என்னை வண்டிக்குள் நுழையவிடாமல் தடுத்த அந்தக் கைகள் யாருடையது என்று நான் பார்க்கவில்லை. ஆனால், அந்தப் பெரிய வெள்ளைக்கை என்னை அருவருப் புடன் தொட்டு என்னுள் அச்சத்தினை உண்டாக்கியது. அதை என்னால் மறக்கவியலாது.

இப்பூமியில் என்னை ரயில்வண்டியிலிருந்து வெளியே தள்ளிவிட அந்த வீரர்கள் யார்? அவர்கள் மேலைநாட்டவர் என்றால் நான் யார்? நான் வெள்ளையாக இல்லையா? அப்போது அதை நான் ரொம்ப குயுக்தியாக யோசிக்கவில்லை.ஆனால்,அந்த உள்ளுணர்வு என்னை ஆசிய வரலாற்றினை ஆய்வதற்குத் தள்ளியது.

போரின் முடிவில் உண்டான தாக்கம் ஆக்கிர மிப்புப் படைகளால் மட்டும் அல்ல. சியோலில் அமைதி யாக வாழ்ந்த எங்கள் குடும்பம் டோக்யோ திரும்பிய பின் நொடிந்தனர்; நொந்தனர்.

எனக்குப் பலத்த அதிர்ச்சி உண்டானது.முற்றிலும் மாறியிருந்த சமூகத்தில் எங்கள் குடும்பத்தின் தலையெழுத்து மாறியிருந்ததனை உணர்ந்தேன்.இதுவே சமூக வரலாறு மாறும் இயங்கு போக்கினை நான் அறிவதற்கான் முனைப்பு என்று நம்புகிறேன்.என் பள்ளிக் காலங்களில் வரலாற்று உணர் வினை என் மனத்தில் உசுப்பிவிட நல்ல ஆசிரியர்கள் கிட்டினர்.

கீழைத்தேயத்து வரலாற்றினைப் பல்கலையில் கற்பதற்குத் தொடக்கத்தில் தயங்கினேன். பிறகு இப் பாடத்தினை விரும்பிப் படித்தாலும் ஆசியா என்றால் என்ன என்ற கேள்வி இன்னும் என்னுள் உள்ளது. ஆய்வுத் துறையில் ஒரு குறுகலான வட்டத்தினையே களமாகத் தெரிவு செய்ய முடியும். எனக்கு அது இடைக்காலத் தென்னிந்திய அரசகுடும்பம்.

என் பட்டப்படிப்பின் ஆய் வேடு சோழர் அரசவம்சம் பற்றியது. அறிவியல் பூர்வ மான ஆய்வினைப் படிப்படியாகவே மேற்கொள்ள வேண்டும். நீங்கள் விரும்பியது போன்று பறக்க முடியாது. ஜப்பானில் இந்திய ஆய்வு என்றால் அது இந்தியத் தத்துவம், சமூகப் பழக்கம், சமஸ்கிருத இலக்கியம் என்பவையே.

இத்துறையில் முன்னோடி ஆய்வாளர்கள் நிறைய சாதித்தனர்.ஜப்பான் பவுத்தநாடு என்பதால் சீனத்தில் மொழிபெயர்க்கப்பட்ட பவுத்த இலக்கியங்களைக் கற்கும் நெடிய மரபு உண்டு. இந்தியச் சமூகத் தினையும், வரலாற்றையும் கற்கும் ஆர்வம் உலகப் போருக்குப் பிறகே எழுந்தது. எங்கள் மூத்த அறிஞர்கள் 1950களில் இந்தியாவிற்குச் சென்றனர்.

என் பட்டப்படிப்பிற்கான ஆய்வேட்டிற்குத் தென்னிந்திய அரச மரபினைத் தெரிவுசெய்தேன். ஜப்பானில் அப்போது எவரும் தென்னிந்திய வரலாற்றினைக் கற்கவில்லை. ஆனால், பல மூத்த அறிஞர்கள் வட இந்திய வரலாற்றினைக் கற்றனர்.

 மொழியியல், பண்பாட்டு அடிப்படையில் வட இந்தியாவிற்கும், தென்னிந்தியா விற்கும் பெருத்த வேறுபாடு இருந்தது. இந்திய வரலாற்றையும், பண்பாட்டினையும், முழுமையாகப் புரிந்து கொள்வதற்கு,தென்னிந்திய வரலாற்றினை முழுமை யாகப் படிக்கவேண்டும். எனவே, தென்னிந்தியாவினைத் தெரிவு செய்தேன்.

அக்காலகட்டத்தில் பேரா.கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி தென்னிந்திய வரலாற்றிற்கு உயிர் கொடுத்தவர். இத்துறையில் பல சாதனைகளைச் செய்தவர். இருந்த போதும் வட இந்தியா அறியப்பட்ட அளவிற்குத் தென் இந்தியா அறியப்படவில்லை. பல அறியப்படாத தளங்கள் இருந்தன. இது தென்னிந்திய ஆய்வில் சில சிக்கலை உண்டாக்கியது. தென்னிந்தியாவின் பண்டைக்கால, இடைக்கால, வரலாற்று ஆய்விற்குக் கோயில் சுவர்களின் கல்வெட்டுகளே முதன்மைச் சான்றுகள். சீனத்து அரச வம்சத்திற்கான வரலாற்று நூல்கட்டுகள் (annals) இங்கு இல்லை என்பதனை உணர்ந்தேன்.அவை பெரும் பாலும் தமிழ்க்கல்வெட்டுகள்.பல கல்வெட்டுகள் விடுபட்டுள்ளன. எனவே, நான் தமிழ் கற்றேன். சோழ அரசவம்சத்து வரலாற்றினைக் கற்றேன்.

டோக்யோ பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத் திற்காகப் பதிவு செய்து ஆய்வுமாணவனாக சென்னைப் பல்கலைக்கழகத்திற்குச் சென்றேன்.அப்போது பேரா.கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி ஓய்வு பெற்றிருந்தார்.ஓராண்டு அப்பல்கலைக்கழகத்தில் பயின்றேன்.ஈராண்டுகள் இந்திய அரசின் தொல்லியல் அளவீட்டுத் துறையின் கல்வெட்டியல் பிரிவு அலுவலகத்தில் பயின்றேன்.அது அப்போது உதகமண்டலத்தில் இயங்கியது.

தென்னிந்தியாவின் பண்டைக்கால,இடைக்கால வரலாற்றினை அறியவேண்டுமெனில் கல்வெட்டு களைப் படித்தறிதலில் போதுமான பயிற்சி இன்றி இயலாது என்பதனைப் புரிந்துகொண்டேன். எனவே, கல்வெட்டு அலுவலகத்தில் அப்பயிற்சியினைப் பெற்றேன்.

அவ்வலுவலகம் ஆய்வாளர்களை வெவ்வேறு வட்டாரங்களுக்கு அனுப்பியது. கோயில் சுவர் களிலுள்ள கல்வெட்டுகளைப் படியெடுத்து, வாசித்து அதனடிப்படையில் ஆய்வு நூல்களை எழுதுவதற்கு ஆய்வாளர்களைத் தயார்ப்படுத்தியது. அப்போது பல இளந்தலைமுறையினர், திறமையுடனும், ஆர்வத் துடனும், ஊக்கத்துடனும் பணியாற்றினர்.

 அச்சூழல் மிகவும் விருப்பமானது. அங்கு இரு ஆண்டுகள் தங்கிக் களஆய்வுகள் செய்தேன். உதகமண்டலத்தின் தட்ப வெப்பம் எனக்கு சாதகமாக இருந்தது. அங்குப் பயிற்சி பெற்ற இரு ஆண்டுகளும் முழுக்க முழுக்க வேலைகள் தான். மூத்த ஆய்வாளர்கள் இளைஞர்களை வழி நடத்துவதும்,இளைஞர்கள் வாதங்களில் ஒருவருக்கு ஒருவர் கருத்து பரிமாறுவதும் சுவாரஸ்யமானவை.

1969-இல் மீண்டும் இந்தியாவில் கற்கும் வாய்ப்பினைப் பெற்றேன்.இம்முறை மூன்றாண்டுகள் கல்வெட்டு அலுவலகத்தில் மைசூரில் தங்கிப் படித்தேன்.அதில் இரு ஆண்டுகள் குடும்பத்துடன் இருந்தேன். அங்குதான் எங்கள் இரண்டாம் மகன் பிறந்தான்.

70 வயதான என் தாய் கடைசி பத்து மாதங்கள் என்னுடன் இருந்தார். அலுவலக நண்பர்களும்,அண்டை வீட்டுக் காரர்களும் நாங்கள் அங்கேயே கடைசிவரை இருக்க வற்புறுத்தினர்.

நானும் ஒரு கல்வெட்டு ஆய்வாளனாக ஏற்றுக்கொள்ளப்பட்டேன்.மூத்த கல்வெட்டு அறிஞர்கள் என்னைத் தம்முள் ஒருவராக எண்ணினர்.அவ்வலுவலகத்தில் நான் பயின்றதன் விளைவாகவே எனக்கு அந்த மரியாதை வந்தது.1970-இல் இந்தியக் கல்வெட்டியல் கழகம் நிறுவப்பட்டது.அதன் 11ஆம் ஆண்டுக்கூட்டம் 1985-இல் நடந்தது.அதற்கு நான் தலைமை தாங்கினேன்;21ஆம் கூட்டத்திற்கும் தலைமை தாங்கினேன்.என்னை மதிப்புமிகு தலை வராகத் தெரிவு செய்தனர். செப்புப்பட்டயத்தில் சான்று வழங்கினர்.

 இந்தியக் கல்வெட்டியல் அறிஞர்களுடன் முப்பதாண்டுக்கால நட்பு இம்மரியாதையினைத் தந்தது.என்னை அந்நியன் என்று ஒதுக்காமல் பெருந்தன்மையுடன் இன்முகம் காட்டினர். இது மிக மதிப்புள்ளது.

நான் அடிப்படையில் ஒரு வரலாற்று ஆசிரியன்.எனக்கு நான் கண்டுபிடித்த கல்வெட்டுகளைப் படித்தறிதலில் ஆர்வம். அதனைவிட படித்தவற்றை ஆய்விற்குப் பயன் படுத்துதல்.இதனடிப்படையில் தென்னிந்தியாவின் சமூக,பொருளியல் வரலாற்றினை ஆய்கிறேன்.இப்போக்கு எப்படிச் சோழர் ஆட்சிக்காலத்தில் இருந்து விஜயநகர் ஆட்சிக் காலம் வரை வளர்ந்தது என்பதனையும் ஆய்வேன்.

 மரபுரீதியான கல்வெட்டு ஆய்வில் ஓரிரு கல்வெட்டுகளின் அடிப்படையில் ஒரு தலைப்பினை விவாதிப்பர். இதிலிருந்து நான் மாறுகிறேன். ஒரு குறிப்பிட காலகட்டத்தினை முற்றாக எடுத்து அக் காலத்திய அனைத்துக் கல்வெட்டுகளையும் புள்ளியியல் முறையில் என்ன சொல்கின்றன என்பதனை ஆய்கிறேன். இந்திய அறிஞர்களோடு இப்புதியமுறையில் ஆய்கிறேன். இதனால் முன்பு சொல்லப்படாத சில உண்மைகள் வெளிக்கொணரப்பட்டன.

சமூக வளர்ச்சி பற்றிய ஆய்விற்கு நிலவுரிமை பற்றியும் அதனால் உருவான சமூக மாற்றம் பற்றிய ஆய்விலும் கவனம் செலுத்தினேன்.பிறகு மெள்ள மெள்ள அக்காலத்திலுள்ள மக்கள் சிந்தனை பற்றி யோசிக்கலானேன். சாதிய நெருடல்கள் பற்றியும் ஆய்ந்தேன். சீனத்து பீங்கான் சில்லுகள் இந்தியாவிற்கு வந்தன; உணவுமுறையும்தான். வரலாற்றாய்வுகள் பண்டைக் காலத்தினை மையப்படுத்துகிற காலத்தினைத் தொடக்கப்புள்ளியாகக் கொள்ளவேண்டும்.எனவே,இன்றுள்ள சாதிய நெருடல்கள், இனச்சிக்கல் போன்ற வற்றையும் என்னுடைய கருத்தாக்கப் போக்குகளில் பதிக்கிறேன்.

நானும்,என் மனைவியும் இந்தியப்பண்பாடு பற்றிய ஆய்வில் இந்தியச்சமையல் கலையினையும் எழுதியுள்ளோம். ஜப்பானின் ஒரு புகழ்பெற்ற பொம்மைப் படத்தில் (cartoon) நான் தோன்றியுள்ளேன்.இந்தியச் சமையல்வகை ஜப்பானியச் சமையலில் இருந்து வித்தியாசமானது.இந்தியச் சமையல்முறை மணப் பொருள்களின் கலவை; பருவகாலத்திற்குத் தக்கபடி மாறும்.

இது ஜப்பானிய சோயா கஞ்சியினைப் போன்றது. என் நோக்கம் இந்தியாவில் எப்போது ஏன் சமையல் தோன்றியது என்பதாகும். இன்று அது பற்றி விரிவாகப் பேச இயலாது. ஆனால், தமிழ்க் கல்வெட்டுகள் உணவுமுறை பற்றி நிறைய சான்றுகளைத் தருகின்றன.

பீங்கான் சில்லுகள் பொறுத்து சீனா கி.பி.ஒன்பதாம் நூற்றாண்டு தொடக்கம் ஏற்றுமதி செய்துள்ளது. சீனத்து பீங்கான்சில்லுகள் கொரியா, ஜப்பான், தென்கிழக்காசிய நாடுகள் மேற்காசிய நாடுகள், எகிப்து போன்ற நாடுகளில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. திuளீuஷீளீணீ என்ற இவ்விடத்தில் உயர்வகை பீங்கான் சில்லுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இந்தியாவில் பெருமளவில் மட்கலங்கள் கண்டெடுக்கப் படவில்லை.இவை இந்தியாவில் இந்துப்பண்பாடான தீட்டு, உண்ணுதல், அருந்துதல் போன்றவற்றோடு தொடர்புடையன. கி.பி. 13-14 ஆம் நூற்றாண்டுகளில் இந்தியாவில் இஸ்லாமிய அரசுகள் எழுந்தன.

பட்டுப்பாதையும்,கடற்பாதைகளும் பெரிதும் பயன்பட்டன.எனவே,இக்காலத்திய பீங்கான்சில்லுகள் அரண்மனை வளாகங்களிலும்,கடற்கரை வணிகநகரங்களிலும் கிடைக்கலாம்.

இந்நம்பிக்கையில் இந்திய அறிஞர்களோடு சில ஆய்வுகளை மேற்கொண்டேன். பெருமளவில் பீங்கான் சில்லுகள் கிடைத்தன.

பெருமளவில் கிடைத்த பீங்கான் சில்லுகள் பண்டைக்காலத்திய,இடைக்காலத்திய தெற்காசிய,தென்கிழக்காசிய நாடுகளிடையேயான தொடர்பினை மறுஆய்விற்கு உட்படுத்தின. இந்தியப் பண்பாட்டில் இந்துத்துவமும், பவுத்தமும் பண்டைய தென்கிழக்காசிய நாடுகளில் பரவின.

அவ்வட்டாரத்தின் சமூக வளர்ச்சிக்குப் பெரிதும் உதவின.முந்தைய ஆய்வுகளில் இது முழுமை யாகப் பார்க்கப்படவில்லை.தென்கிழக்காசிய அறிஞர்கள் நிக்ஷீமீணீtமீக்ஷீ மிஸீபீவீணீ என்ற பதத்திற்குப் பதிலாக தென்கிழக்காசிய, தென்கிழக்காசிய நாடுகள், இந்தியக் காலனிகள் என்ற பதங்களைப் பயன்படுத்துவதில் தயக்கம் காட்டினர்.

தென்கிழக்காசியப் பண்பாட்டுக்கூறுகள் இந்தியப் பண்பாட்டில் தாக்கத்தினை ஏற்படுத்தின. ஜாவாவில் கி.பி.8ஆம் நூற்றாண்டில் போராபுதூர் என்ற இடத்தில் கட்டப்பட்ட பவுத்த கோயில் போன்று பிரமாண்ட மான கோயிலை அதே காலகட்டத்தில் இந்தியாவில் காணவியலாது.

 12ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கம்போடியாவில் சிதைவடையும் அங்கோவர்ட் போன்று இந்தியாவில் இல்லை. இதனடிப்படையில் ஜப்பான் அரசில் கல்வித்துறையின் நல்கையுடன் உலக அளவில் ஓர் ஆய்வுத்திட்டத்தினை உருவாக்கினேன். இதன் நோக்கம், பண்டைய, இடைக்காலத்திய,தென் கிழக்காசிய நாடுகளிடையேயான உறவுகளை மீளாய்வு செய்வது. இவ்வாய்வுக்குழு கடந்த 4ஆண்டுகளாகச் சிதைவடையும் இடங்களைக் கண்டறிந்து வருகிறோம்.

உலகப்போருக்கு முந்திய காலகட்டத்தில் இந்தியப்பண்பாடு,தென்கிழக்காசியப் பண்பாடு பற்றிய ஆய்வுகள் பிரஞ்சு,டச்சு அறிஞர்களால் மேற்கொள்ளப்பட்டன.இந்தியா, தென்கிழக்காசிய நாடுகள் விடுதலைக்குப் பிறகு அறிவியல்பூர்வமான ஆய்வுகள் நின்றுவிட்டன. இதனால் தென்னிந்திய ஆய்வாளர்களும், தென்கிழக்காசிய ஆய்வாளர்களும் ஒருவரை ஒருவர் ஆய்வினைப் பகிர்ந்துகொள்ளவில்லை.

இவ்விரு நிலப்பிரதேசங்களிலும் உள்ள தமிழ்,சம்ஸ்கிருத கல்வெட்டுகள் அவ்வளவு கவனம்பெறவில்லை.எனவேதான் மிகச்சிறந்த அறிஞர்களைக் குழுவாக்கி என்னோடு இப்பகுதிகளுக்குக் கள ஆய்விற்கு இட்டுச் செல்கிறேன்.இப்போக்கு ஆய்வில் ஓர் உத்தியினை உருவாக்கும்.

என் ஆய்வு தெளிவினை உண்டாக்கியது.வட விந்தியாவினின்றும் மொழிநிலையிலும், பண்பாட்டு நிலையிலும் தென்னிந்தியாவினை முழுமையாகப்புரிந்து கொள்ளமுயன்றேன்.

டோக்யோ பல்கலைக்கழகத்தின் சிறப்புநிலைப் பேராசிரியர் Tatsuro Yamamoto (Professor Emeritus of the University of Tokyo and the member of Japan Academy) என்னுள் தென்கிழக்காசியா பற்றிய ஆர்வத்தினைத் தூண்டினார். பல்கலைக்கழகத்தில் அவரிடம் தான் பயின்றேன். அவருடைய தூண்டுதலே என்னை ஆய்விற்கு இழுத்தது.

ஆனால், இந்திய, தென்கிழக்காசியப் பண்பாடுகளிடையேயான தாக்கம், ஒருங்கிணைவு, முரண் இவையே இவ்வாய்வின் மீதான தாக்கத்தினை எனக்கு ஏற்படுத்தியது. பண்பாட்டு உரசல் களிடையே புதிய பண்பாடு தோன்றுவது என்னை ஈர்த்தது.

ஆசியா என்றால் என்ன என்று நான் தொடர்ந்து கேட்ட கேள்விக்கு கிழக்கு,மேற்கு இடையிலான பண் பாட்டு வித்தியாசமே காரணமாகலாம்.இக்கேள்வி இன்னும் மனத்தில் உறுத்திக்கொண்டுள்ளது. இதுவே ஆசியாவினை நன்றாகப் புரிந்துகொள்ள சீன, இந்தியப் பண்பாட்டுக் கூறுகளை ஒப்புநோக்க வைக்கிறது.அதே நேரத்தில் ஆசியாவினைப் புரிந்துகொள்ள ஆசிய நாடு களிடையேயான பண்பாட்டுக்கூறுகளைப் புரிந்து கொள்ள வேண்டும். இதனைச் சிலவழிகளில் மேற் கொள்கிறேன். இருவகைகளில் அதனைப் புரிந்து கொள்ள முடியும்

(1) பண்டைக்காலத்தில் இந்தியப் பண்பாடு தென்கிழக்காசிய நாடுகளில் பரவியமை

(2) தற்காலத்தின் இனச்சிக்கல். ஆசியாவிற்குள் பல்வேறு பண்பாடுகள் உள்ளன. அவற்றுள் சில ஒத்த கூறுகள் பண்பாட்டு உள்ளுறவினாலும், சில மோதல்களாலும் எழுந்தன.

 இவ்விரு போக்குகளைக் கண்டுணர்வதன் மூலம் ஆசியா எப்படி உருவானது என்பதனை அறியலாம்.முரண்பாடு என்பது ஆசிய நிலப்பிரதேசங்களில் உள்ள பண்பாட்டு உள்ளுறவுகளிலும்,முறைப்பாட்டிலும் நிலவும் அல்லது மேற்குலகினைப் புறக்கணிப்பதன் மூலம் நிகழும்.தொடக்கத்தில் முரண்பாடு எதிர் நிலையில் வைத்துப் பார்க்கப்பட்டது. ஆனால், அவற்றி லிருந்து புதிதாக ஒன்று எழும். பண்பாட்டு உருவாக்கம், எதிர்நிலையை நேர்நிலையாக மாற்றும் ஒன்று.இதுவரை நான் சொன்னது ஒரு பாதிதான்.உங்களுடன் பேசியது முதல் ஆசியா என்றால் என்ன என்ற கேள்விக்கு விடை கண்டேன்.எனக்குப் பெருமை மிகு Fukuoka Asian Cultural Prize வழங்கியமைக்கு நன்றி. இன்று நான் இந்த உள்ளுணர்வால் ஆசியாவின் முழு உருவத்தினைக் காணும் முயற்சியினை மேற்கொள்வேன்.

-  பத்மஸ்ரீ நொபொரு கரஷிமா கி.இரா.சங்கரன்

Pin It