தமிழ், தெலுங்கு, ஆங்கிலம், சமஸ்கிருதம், இந்தி ஆகிய மொழிகளில் நல்ல புலமைபெற்ற பேரா. அ.அ.மணவாளன் அவர்கள் தமது ‘இராமகாதையும் இராமாயணங்களும்’ என்ற நூலுக்காக ‘சரஸ்வதி சம்மான்’ விருது பெற்றுள்ளார். தொடர்ந்து இலக்கிய ஒப்பாய்வில் ஈடுபட்டுவருகிறார். சரஸ்வதி சம்மான் விருது இதற்கு முன்னர் இஸ்மத் சுக்தாயி, விஜய் டெண்டுல்கர், அய்யப்பப் பணிக்கர், இந்திரா பார்த்தசாரதி ஆகிய படைப்பாளிகளுக்கே அளிக்கப்பட்டு வந்தது. முதல்முறையாகக் கல்விப்புலம் சார் ஆய்வுக்காக இவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளதே இவரது சிறப்பைக் காட்டப்போதுமானது.

1935ஆம் ஆண்டில், அப்பாவு என்ற தெலுங்குக் கவிஞருக்கும் ஆதிலட்சுமி அம்மையாருக்கும், விழுப்புரம் மாவட்டம் அரும்பராபட்டு என்ற ஊரில் பேரா.அ.அ.மணவாளன் பிறந்தார். சென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறையிலும், ஆங்கிலத் துறையிலும் பேராசிரியராகப் பணியாற்றிய இவர், பழந்தமிழ்ச் செவ்வியல் இலக்கியங்கள் பற்றியும், நவீன மேலைக் கோட்பாடுகள் குறித்தும் தமிழ், ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளிலும் எழுதி வருபவர். தொல்காப்பிய ஆங்கில மொழிபெயர்ப்பு, அரிஸ்டாடிலின் கவிதையியல் நூலின் தமிழ் மொழிபெயர்ப்பு உள்ளிட்ட மொழிபெயர்ப்புகளும் செய்துள்ளார். இலக்கிய ஒப்பியல் ஆய்வுக்கான ‘புல்பிரைட்’ ஆய்வுத் தகைமையைப் பெற்ற இவர், கொலம்பியா பல்கலைக்கழகம் இந்தியானா பல்கலைக் கழகம் முதலான அமெரிக்கப் பல்கலைக்கழகங்களுக்கு ஆய்வு தொடர்பாகச் சென்று வந்துள்ளார். மீனாட்சி சுந்தரம் பிள்ளை நூற்றாண்டு விருதையும் பெற்றுள்ளார். தமிழக அரசு இவரது பன்மொழி ஆய்வுப் புலமைக்காக இவருக்கு 2012ஆம் ஆண்டிற்கான கபிலர் விருதை வழங்கிப் பெருமைப்படுத்தியது.

இத்தகைய சிறப்புகள் பெற்ற இவருடன் ஒரு கலந்துரையாடல்...

ரா.அழகரசன், இரா.சீனிவாசன்

தங்களது பள்ளி, கல்லூரிப் படிப்பு பற்றியும், தமிழாய்வுக்குள் வந்து சேர்ந்தமை குறித்தும் கூறுங்களேன்.

 1954 என நினைக்கிறேன். நான் பள்ளிப்படிப்பைப் படித்து முடித்து, தொடர்ந்து படிக்க ஆர்வம் தெரிவித்த போது, என் தந்தை, Ôஇங்க பஞ்சாயத்து போர்ட்ல இருக்கிற வேலையைப் பாருப்பா. நம்ம சொந்தக்கார பசங்க யாரும் 8ஆம் வகுப்புக்குமேல படிக்கலÕ என்றார். அதுக்கு மேல எனக்கு அங்கு இருக்க பிடிக்கல. எனக்குப் படிக்க வேண்டும் என்று விருப்பம் இருப்பதால், அங்கு எனக்கு எந்த வேலையும் இருப்பதாகத் தெரியவில்லை. பெட்டியி லிருந்து 15 ரூபாய் எடுத்துக்கொண்டு Ôநான் போகிறேன், என்னைத் தேடவேண்டாம்Õ என்று எழுதி வைத்துவிட்டுக் கிளம்பிவிட்டேன். அம்மா 10 ரூபாய் கொடுத்தார்கள். நேரே அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திற்குப் போய்ப் பார்த்தபோது அங்கு சேர்க்கை முடிந்து போயிருந்தது. அங்கிருந்த ஒருவர், Ôகோயம்புத்தூருக்குப் போ, அங்கு ஜி.டி.நாயுடு உனக்கு உதவி செய்வார். அவர் நடத்துற ஐடிஐஇல் சேர்ந்து படிக்கலாம்Õ என்றார். அங்குப் போன போது ஜி.டி.நாயுடு ஊரில் இல்லை, நவம்பர் மாதம்தான் வருவார் எனக் கூறிவிட்டார்கள். அதன்பின் இரயிலைப் பிடித்து சேலம் - கள்ளக்குறிச்சி வழியாக திருவண்ணாமலை போகலாம் என்று ரயில் நிலையத்தில் உட்கார்ந்திருந்தேன். அங்கு வந்த ஒருவர், யார் நீ? எங்க வந்த? என்று விசாரித்தார். நான் ஒரு விசயமாக வந்தேன் என்று பதில் கூறி அவரைத் தவிர்க்கப் பார்த்தேன். அவர் வற்புறுத்தியதால், முழு விவரத்தையும் கூறினேன்.நல்ல மார்க் இருக்கே, இன்ஜினியரிங் படிக்கலாமே என்றார். “பணம் கட்டணுமே, எங்க அப்பா பணம் கொடுக்க மாட்டாரே” என்றேன். “பணம் கட்டாத படிப்பு வேணுமா? சரி, ஊருக்குப் போகாதே, 2ஆம் நம்பர் பஸ் ஏறிப் பேரூர் போ. அங்க ஒரு சமயக் கல்லூரி இருக்கு. அங்க சும்மாவே தமிழ் கத்துத்தருவாங்க” என்றார். “அத படிச்சா என்ன வேலை கிடைக்கும்?” எனக் கேட்டேன். ”என்னப்பா, இப்படிக் கேட்டிட்ட? நாலு வருஷம் படி, அப்புறம் வாத்தியார் வேலை கிடைக்கும்” என்றார். “வாத்தியார் வேலைக்குத்தான் போகணும்மா” என்றேன்.

‘வாத்தியார் வேலைக்குப் போக விருப்பமில்லைன்னா, வேற ஏதாவது வேலைக்குப் போ’ என்றார். பேரூர் போய் அங்கிருந்து 5 கி.மீ தொலைவில் உள்ள சாந்தலிங்கசாமி கலைக் கல்லூரி வந்தடைந்தேன். அங்கு ஒரு பெரியவர் பல் துலக்கிக் கொண்டிருந்தார். அவரிடம் நான், "சாந்தலிங்க அடிகளாரைப் பார்க்கணும்" என்றேன்.

“எட்டு மணிக்குத் தான் அவரைப் பார்க்க முடியும். அதுவரை அந்தத் திண்ணையில் உட்கார்ந்திரு” என்றார். மணி எட்டானதும் ஒருவர் வந்து என்னை உள்ளே அழைத்துச்சென்றார். உள்ளே பெரிய மணைபோட்டு நான் முன் பார்த்த பெரியவர் உட்கார்ந்திருந்தார். அவரிடம், “சாந்தலிங்க அடிகளாரைப் பார்க்கணும்” என்றேன். அவர், “நான்தான் சாந்தலிங்க அடிகள்” என்றார். படிக்க வந்திருப்பதாக அவரிடம் கூறினேன், ஒரு பேராசிரியரை வரச்சொல்லி அவரிடம், “இந்த மாணவன் படிக்கணும்னு சொல்றார், அவரோட சான்றிதழ்களைப் பாருங்கள்” என்று கூறினார். எனது சான்றிதழ்களைப் பார்த்தவர், “நமக்கு வர்ற மாணவர்கள் 40-45 மார்க்தான் வாங்கியிருப்பார்கள், இவர் 70-90 என்று மார்க் வாங்கியிருக்கிறார். பிஎஸ்ஜி கல்லூரியில் சேர்ந்து இன்ஜினியரிங் படிக்கட்டும்” என்றார்.

‘ஏன் அப்படிச் சொல்கிறீர்?’ என சுவாமிகள் கேட்டார். ‘இவர் எல்லாம் தமிழ் படித்தா தமிழ் வீணாகி விடும்’ எனக் கூறியதற்கு, அடிகளார், ‘நீர் நினைப்பது தவறு, சாதாரண எஸ்எஸ்எல்சி படித்துவிட்டு தமிழ் படிக்கணும்னு ஆசைப்பட்டு பிரைவேட்டாகத் தமிழ் படித்துப் பின்னர் சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேராசிரியராக ஆனவர் உள்ளார். அவர்தான் மு.வ. நல்ல மார்க் வாங்கி இங்க சேர்ந்து தமிழ் படிக்கணும்னு வந்திருக்கிறார். சேர்த்துக் கொள்ளுங்கள்’ என்றார். ‘ரூபாய் 5 கொடுத்து அப்ளிகேஷன் வாங்கி பில்அப் பண்ணிக்கொடு’ என்றார்.

‘பணம் இல்ல சார்’ என்றவுடன், ‘சரிப்பா, இவர்கிட்ட எதுவுமே கேட்காதே’ என்று சொல்லி விட்டார். இப்படித்தான் எனது தமிழ்ப் புலவர் படிப்பு தொடங்கியது. தொடர்ந்து பிரைவேட்டாக ஆங்கிலம் பி.ஏ. படித்தேன். அதன் பிறகு திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் எம்.ஏ. ஆங்கிலம் படித்தேன்.

முதலில் காஞ்சிபுரம் பச்சையப்பன் கல்லூரியிலும் அடுத்து உலகத்தமிழாராய்சி நிறுவனத்திலும் பணி யாற்றிய பின்னர், சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்த் துறையில் தமிழ் ஆங்கில அகராதித் திட்டத்தில் பணியாற்றுவதற்காகச் சேர்ந்தேன்.

பின்னாளில் நீங்கள் ஒப்பியல்துறை நோக்கி நகர்ந்ததற்கு உங்களது ஆங்கிலப் பயிற்சி முக்கிய காரண மாக இருந்ததென நினைக்கிறேன். அதைப் பற்றி...

எஸ்எஸ்எல்சிக்கு முன்னாலயே நான் ஹிந்தி படித்திருந்தேன். அப்புறம் இன்ஜினியரிங் காலேஜ்ல ஐடிஐ டிப்ளமோ படித்தேன். “நீ இங்கிலீஷ் படிச்சா நல்ல சம்பளத்துக்கு ஆசிரியர் வேலை கிடைக்கும்” என்று ஒருவர் சொன்னதைக்கேட்டு, ஜமால் முகம்மது கல்லூரில எம்.ஏ. ஆங்கிலப் படிப்பில் சேர்ந்தேன்.

தமிழ்ப் புலவர் படிப்புப் படித்துவிட்டு வந்ததால் எல்லோரும் என்னை வித்தியாசமாகத்தான் நடத்தி னார்கள். முதலாம் ஆண்டுத் தேர்வு முடிந்து முடிவுகள் வந்தப்ப எல்லாத் தேர்வுகளிலும் தேர்ச்சி பெற்றது நான் மட்டும்தான். அதன் பிறகு தான் என்னைத் தமிழ் படிச்சவன் என்று பார்ப்பதைத் தவிர்த்தார்கள். பின் எனக்குத் திருமணமாகி என் துணைவியார் காஞ்சி புரத்தில் இருந்ததால் அங்குள்ள பச்சையப்பன் கல்லூரியில் ஆங்கில விரிவுரையாளர் பதவி கிடைத்தபோது அங்குச் சேர்ந்தேன்.

மீண்டும் தமிழ்த்துறைக்கு எப்படி வந்து சேர்ந்தீர்கள்?

1973இல் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் நிறுவப்பட்டபோது, எனது தமிழ், ஆங்கிலப் பயிற்சி களைக் கேள்விப்பட்டு மு.வ. என்னைக் கூட்டி வரச் சொன்னார். மு.வ.வைப் போய்ப் பார்த்தபோது சாந்த லிங்க சுவாமி முன்னாளில் அவரைப்பற்றிச் சொன்னது நினைவுக்கு வந்தது. தரமணியில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் பணிசெய்துகொண்டிருந்தேன், ஒருநாள் அப்போதைய சென்னைப் பல்கலைக்கழகத் துணை வேந்தராக இருந்த மால்கம் ஆதிசேஷய்யா வந்திருந்தார்.

“தம்பி, இந்த நிறுவனம் நான் நினைக்கிற மாதிரி திருப்தியா வேலை செய்யல. அதனால இத விட்டுட்டு தமிழ்த்துறைக்கு வந்துடு. அங்கு ஒரு அகராதித் திட்டம் இருக்கிறது, அதில் இணைந்து பணியாற்று” என்று கூறினார். ‘சார் நான் காஞ்சிபுரத்தில இருந்து லீன்ல வந்திருக்கேன். அது முடியப் போகுது’ என்றேன். ‘மேலும் 5 வருடத்திற்கு லீனை நீட்டித்துத் தருகிறேன்’ என்று அவர் சொன்னதின் பேரில் அந்த அகராதித் திட்டத்தில் இணைந்தேன்.

அப்போது சி.பாலசுப்பிரமணியன் துறைத் தலைவராக இருந்தார். அகராதிப் பணி சுத்தமாக நடக்கவே இல்லை. அந்தச் சமயத்தில்தான் சென்னைப் பல்கலைக்கழக ஆங்கிலத்துறையில் பேராசிரியர் அப்பாசாமி அங்கு மொழியியல் பாடம் நடத்த யாரும் இல்லாததால், என்னை வரச் சொன்னார். அதனால், ஆங்கிலத் துறையில் பணியாற்றினேன். திரும்பி காஞ்சி புரத்திற்கே போயிடலாமா என்று யோசிச்சிக்கிட்டு இருந்த சமயத்தில்தான் புல்பிரைட் பெல்லோஷிப் கிடைத்தது.

என்ன நிலையில் அங்குப் போனீர்கள்? அங்கு நீங்கள் பெற்ற அனுபவம் குறித்துக் கூறுங்களேன்.

எனக்குக் கிடைத்தது ஒப்பிலக்கிய கௌரவ ஆய்வு உதவித்தொகை (Fulbright Honarary fellowship for comparative literature) ஒப்பியல் ஆய்வுக்குப் புகழ்பெற்ற இந்தியானா (Indiana) பல்கலைக்கழகத்திற்குச் சென்றேன். அப்போது அங்கே ஒப்பியல் ஆய்வில் தலைசிறந்த பேராசிரியர்கள் இருந்தனர். அதன்பின் சிகாகோ பல்கலைக்கழகம், கொலம்பியா பல்கலைக்கழகம், தெற்குக் கரோலினா பல்கலைக்கழகம் (University of South Corolina, Columbia) போன்றவற்றுக்குப் போயிருந்தேன்.

 இந்தியானா பல்கலைக்கழகத்தில் ஒப்பியல் ஆய்வில் முக்கிய அறிஞரான உல்ரிச் வெய்ஸ்ட்டின் (Ulrich Weistein) மற்றும் ஹென்றி ரீமாக் (Henry Remak) ஆகியோரைச் சந்தித்தேன். இவர்கள் இருவரிடத்திலும் ஒப்பியல் ஆய்வு நெறிமுறை பற்றியும், ஒப்பியல் துறைகடந்ததோர் ஆய்வாக இருப்பது குறித்தும் பயிற்சி பெற்றேன். நியூயார்க் பல்கலைக்கழகத்தில் உலக காப்பிய இலக்கியம் குறித்தும், இலக்கிய வகைமைகள், அவற்றின் கால ஆய்வுகள் குறித்தும் கற்றேன். அன்னா பாலக்கியன் (Anna Balakian) அவர்களிடம்தான் இலக்கிய வகைமைகள் குறித்த ஆய்வுகள் பண்பாட்டு அம்சங்களைக் கணக்கில் கொள்ள வேண்டிய தேவை உள்ளதைக் குறித்துக் கற்றேன்.

ஒப்பியல் துறையில் பணியாற்றிய பலர், குறிப்பாக ஆசிய கண்டத்திலிருந்து ஒப்பியல் துறையில் செயல் பட்ட காயத்ரி ஸ்பீவாக் (Gayathri Spivak), கௌரி விஸ்வ நாதன் முதலிய வர்கள் பின்காலனியம் பக்கம் திரும்பி யிருக்கிறார்கள். நீங்கள் இதுகுறித்து ஏதாவது பங்களிப்பு செய்திருக்கிறீர்களா?

அதுக்கு காலனியம், காலனியத்தின் தாக்கம் குறித்துப் பரந்த அளவில் ஆய்வு செய்திருக்கணும். நான் இதுகுறித்து எதுவும் செய்யல. ஏன்னா, அதுக்கு எனக்கு நேரமில்ல. தமிழாய்வில் வேலை செய்யவே நேரம் சரியாயிருக்கு. காப்பியங்களுக்கிடையே அடிப்படையில் காணப்படுகிற ஒப்புமை, உலகளாவிய அளவில் காப்பியக் கோட்பாடுகள் எப்படி இயங்குகின்றன என்பதே எனது பணியாக இருந்து வந்துள்ளது.

நீங்கள் அப்படிச் சொன்னாலும், (காலனியம் குறித்து நீங்க ஆய்வுசெய்யவில்லை என்றாலும்) தமிழாய்விற்கு நீங்கள் குறிப்பிடத்தக்க பங்களிப்புச் செய்திருப்பதாக எனக்குத் தோன்றுகிறது. ஏனென்றால், பின்காலனியம் குறித்து வேலை செய்றவங்க பலர் பிராந்திய இலக்கியம் குறித்து அறிமுகம்கூட இல்லாமல், தமது ஆங்கிலப் புலமையை மட்டுமே நம்பி இருக்கிறார்கள். பலர் பிராந்திய இலக்கியங்களைக்கூட ஆங்கில மொழி பெயர்ப்பில் தான் வாசிக்கக் கூடியவர்களாக உள்ளனர். கோட்பாட்டுப் பரிச்சயம் மட்டும் வைத்துக்கொண்டு பின்காலனியம் பேசுபவர்கள்தான் பரவலாகி இருக் கிறார்கள். ஆனால் நீங்கள் நவீன இலக்கிய, பண்பாட்டுக் கோட்பாடுகள் குறித்து நல்ல பரிச்சயம் இருந்தும், அவற்றைப் பற்றித் தனிப்பட்ட நூல்கள் எழுதி இருப்பினும் தங்களது தமிழாய்வுகளில் இக்கோட்பாடு களைக் கொண்டு வராமல் இருப்பது மிக முக்கியமான தாகப்படுகிறது. பின்காலனியவாதிகள் வலியுறுத்தும் பண்பாடு குறித்த கவனம் உங்களது எழுத்துகளில் இருப்பதாகக் கருதுகிறேன்.இருக்கலாம். ஆனால் இதைக் கவனமாகச் செய் துள்ளதாகக் கூறி என்னால் பெருமைப்பட்டுக்கொள்ள முடியாது. தேவைப்பட்டால் மேற்கத்திய கோட்பாடு களைப் பயன்படுத்தலாம், தவறில்லை. எனக்குத் தேவைப்படல. தேவைப்பட்ட இடங்களில் நான் பயன்படுத்தியிருக்கிறேன். மேற்கிலிருந்து வந்தது என்கிற காரணத்துக்காக அவற்றை ஒதுக்கிவிடவும் வேண்டிய தில்லை. ஒப்பியலுக்கு அடிப்படையே ஒப்புமை எந்த அளவு சாத்தியம் என்பது குறித்துதான். ஒப்பியல் ஆய்வுமுறையில் நாம் தெரிந்துகொள்ள வேண்டியது ஆய்வு முறைமை, நெறி என்பதுதான். இராமாயணங் களை ஒப்பிட்டு நான் இப்போது எழுதியுள்ள நூலிலும் இதைத்தான் நீங்கள் பார்க்கமுடியும். எந்த மொழி இராமாயணம் உயர்ந்தது எந்த மொழி இராமாயணம் தாழ்ந்தது என்கிற மதிப்பீட்டை நான் முற்றிலும் தவிர்த்து இருப்பதை நீங்கள் அதில் காணலாம்.

உங்களது இராமாயணம் குறித்த ஆய்வின் முக்கிய பங்களிப் பாக நீங்கள் எதைக் கருதுகிறீர்கள்?

வேறுவேறு இராமாயணப் பிரதிகளுக்கிடையே கொடுக்கல் - வாங்கல் எப்படி நடந்துள்ளது என்பதைப் பற்றிப் படிப்பதுதான் எனது முக்கிய கவனமாக இருந்தது. ஒப்பியல் குறித்த எனது ஆய்வுமுறையில் நான் கவனம் செலுத்தினேன். ஒப்பியல் ஆய்வு நெறிமுறையில் விவாதிக்கப்படும் ‘தாக்கம்’ என்பதைக் கடந்து, ‘எதிர்த்தாக்கம்’ என்ற ஒன்று நடந்திருப்பதைத்தான் இராமாயணம் குறித்த எனது ஆய்வில் நான் கண்டறிந்தேன்.

மேற்கத்திய ஒப்பியல் ஆய்வுலகில் எதிர்த்தாக்கம் என்பது குறித்து யாராவது பேசியிருக்கிறார்களா?

இல்ல, அவங்க யாரும் பேசாததற்குக் காரணம் அவங்களுக்கு அது தேவைப்படல, அவ்வளவுதான்.

நீங்கள் எந்தச் சூழலில் இதைப் பேசினீர்கள், கொஞ்சம் விரிவாகக் சொல்லுங்களேன்.

டெல்லிப் பல்கலைக்கழகத்தில் என்னுடைய இராமாயணம் பற்றிய ஆய்வு குறித்துப் பேச அழைத் திருந்தார்கள்.

கூட்டத்திற்கு யார் தலைமைதாங்கப் போகிறார் எனக் கேட்டேன், அதற்கு 17 மொழித் துறைகள் இணைந்து நடத்துகிறபடியால், டெல்லிப் பல்கலைக்கழகத் துணை வேந்தர்தான் தலைமை தாங்குவார் என்றார் அமைப் பாளர். துணைவேந்தர் எந்தத் துறையைச் சார்ந்தவர் என்று கேட்டதற்கு சமூகவியல் என்றார். அப்போது நான் யாராவது சமஸ்கிருதத் துறையைச் சார்ந்தவர் இருந்தால் பரவாயில்லை. ஏனென்றால் என்னுடைய உரை தமிழ், சமஸ்கிருதத் தரவுகளைக்கொண்டு இரு மொழிகளையும் கலந்ததாக இருக்கும் என்றேன். அவர்களும் அதற்கு ஒப்புக்கொண்டு சமஸ்கிருத பல்கலைக்கழகத் துணைவேந்தர் சத்யவிராத் சாஸ்திரியின் தலைமையில் எனது உரையை ஏற்பாடு செய்திருந் தார்கள். எனது உரையின் இடையில் இராமநவமி பற்றிப் பேசும்போது இராமநவமி என்று கொண்டாடுகிறார் களே, அது யார் சொன்னது எனக் கேட்டேன். வால்மீகி இராமாயணத்தில் இராமர் பிறந்தது பற்றிய குறிப்பை வைத்து இராமநவமியைக் கொண்டாடுவதாகக் கூறினார்கள். வால்மீகி எங்க சொல்லி இருக்கிறார் எனக் கேட்டதற்கு அங்கிருந்த சமஸ்கிருத புலமை வாய்ந்த ஒரு அம்மையார் எழுந்து கடகடவென்று 6 சுலோகங்களைச் சொன்னார்கள். இந்த சுலோகங்கள் எங்க வருது?

என்று கேட்டேன். வால்மீகி இராமாயணத்துலதான் என்றார்கள். எந்த வால்மீகி இராமாயணம்? எனக் கேட்டேன். ஏனென்றால், வால்மீகி இராமாயணத்தில கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்குப் புலவழக்குகள் எனப் பல புலவழக்குகள் உள்ளதென்று கூறி, நீங்க சொன்ன சுலோகங்கள் தெற்கத்திய வால்மீகி இராமாயணத்தில் தான் இருக்கு என்றேன், ஆமாம் என்றார்கள். இந்திய மொழிகளில் உள்ள இராமாயணங்களைச் சேகரித்து, அவற்றில் முழுமையாக உள்ள 3,500 பிரதிகளை மட்டும் வைத்து அவற்றில் பொதுவாக உள்ளவற்றை எடுத்து ஒரு பதிப்புத் தயார்செய்யப்பட்டது. அதில் பாலகாண்டத்தில் தசரதனின் குழந்தைகள் பிறப்புப் பற்றியும் அவர்களின் ஜாதகம் பற்றியும் குறிப்புத் தரப்பட்டுள்ளது. அதை வைத்து எங்கெங்கு, எந்தெந்தப் பகுதிகள் இடைச் செருகலாகச் சேர்க்கப்பட்டுள்ளது என ஆய்வு செய்யப் பட்டது. அவ்வாய்வில் இராமன் பிறப்பு, நட்சத்திரம் குறித்த செய்தி கம்பராமாயணத்தில் இருந்துதான் தெற்கத்திய வால்மீகி இராமாயணத்தில் சேர்க்கப் பட்டுள்ளது என்று ஆய்வாளர்கள் நிறுவுகிறார்கள்.

இந்த இடைச்செருகல் எங்கு, எப்படிச் சாத்தியமானது?

இந்த இடைச்செருகல் எங்கு, எப்படி நடந்திருக்கு மெனப் பார்த்தோமென்றால் கும்பகோணத்தில் இருந்த சமஸ்கிருத பண்டிதர்கள் மூலமாகத்தான் நடந்திருக்கு. கம்பராமாயணத்தில் உள்ள பகுதியை அப்படியே சமஸ் கிருதத்தில் மொழியாக்கம் செய்து இணைத்திருக் கிறார்கள். இதை ஆய்வாளர்கள் இடைச்செருகல்தான் என எப்படி நிறுவுகிறார்கள் என்றால், வால்மீகி எழுதிய சமஸ்கிருத மொழியிலான இராமாயணம் வாய்மொழி மரபில் நிலவவில்லை என்பதன் மூலம்தான். பொதுவாக இதை யாரும் ஒப்புக்கொள்ளத் தயங்குவார்கள். இதை மறுப்பதின் மூலம் சமஸ்கிருத மொழியின் தனித் தன்மையை அவர்கள் கவனிக்கத் தவறுகிறார்கள். சென்னையில் இதனை மறுத்துக் கூறியவர்களிடையே நான் பேசும்போது சமஸ்கிருத மொழியானது எந்தக் காலத்திலும், எந்தத் தேசத்திலும் மக்களால் பேசப்பட்ட மொழியாக இருந்ததில்லை என்பது ஆராய்ந்து கண்டு கொள்ளப்பட்டது என்று சென்னை மைலாப்பூரிலிருந்து வெளிவந்த Law Journal இதழிலிருந்து ஒரு மேற்கோளாகக் குறிப்பிட்டேன். யார் இதைச் சொன்னது? எனக் கேட்டார்கள். காஞ்சி மடப் பெரியவரான சந்திரசேகர சுவாமிகள் என்றதும் எல்லோரும் அமைதி ஆனார்கள். சமஸ்கிருதம் போல ஒரு பண்பாட்டு மொழி உலகில் வேறெங்கும் கிடையாது.

பண்பாட்டு மொழி என்பதை விளக்குங்களேன்.

பண்பாட்டு மொழி என்பது பண்பாட்டுப் பிரச்சினை களை விவாதிக்கவும், பண்பாட்டு மேன்மையைப் பரிமாற்றம் செய்வதற்கு மட்டுமே பயன்படுத்தப்படும் மொழி என்பதாகும். இதனால் இந்த மொழி உயர்ந்தது, மக்களால் பேசப்படும் பிற மொழிகள் தாழ்ந்தது என்று பொருளல்ல. அது மொழியின் தன்மையைக் குறிக்கிறது. அவ்வளவுதான். அதனால்தான், சமஸ்கிருதத்துல எழுதப்பட்ட வால்மீகி இராமாயணம் என்பது இன்றும் அப்படியே மாறாமல் இருக்கிறது. பேச்சு மொழியில் மக்களால் பாடப்படுகின்ற ஒரு காப்பியத்தில் இடைச் செருகல் செய்தால் கண்டுபிடிக்க முடியாது. சமஸ்கிருதம் போன்ற பண்பாட்டு மொழியில் இடைச்செருகல் செய்தால் கண்டுபிடித்து விடலாம். ஆதாரங்களோடு நிறுவ முடியும். சமஸ்கிருதம் போன்ற பண்பாட்டு மொழிக்கு அனுகூலமான ஒரு அம்சம் உள்ளது. பிற மொழித் துறையில் அறிமுகப்படுத்தப்படும் கோட்பாடு களுக்குச் சமமான வார்த்தைகளை எளிதில் சமஸ் கிருதத்தில் கண்டுபிடித்துவிட முடியும் அல்லது உருவாக்கிட முடியும். மக்களால் பெருமளவில் பேசப்படும் தமிழில் இது அவ்வளவு எளிதில் சாத்திய மில்லை. மொழிகளின் தன்மை அப்படி.

இராமாயணம் இன்று பெருமளவில் குறிப்பாக வட இந்தியாவில் அரசியல் தளத்தில் ஒருவித பெரும்பான்மை வாதத்தை முன்வைக்கப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. ஆனால், கம்பராமாயணம் அதுபோல அரசியல் தளத்தில் தேவைக்குத் தகுந்தாற்போலச் சுருக்கிப் பயன்படுத்தப் படவில்லையே, இதற்குக் காரணம் அப்பிரதியின் இலக்கியத் திறன் என்று கூறலாமா?

அப்படித்தான் இருக்க முடியும். தமிழ் இலக்கிய/பண்பாட்டு வரலாற்றில் கம்பனுக்கு மட்டும்தான் இத்தனை சங்கங்கள் உள்ளன. இராமரைக் கண்டனம் செய்தவர்கள்கூட கம்பரையோ கம்பராமாயணத்தையோ எதிர்த்து எதுவும் கூறவில்லை. அதனை எரிக்கவும் இல்லை. ஏனென்றால், அது எதிர்ப்பாளர்களையும் தூண்டக்கூடிய (கவரக்கூடிய) ஒரு சிறந்த இலக்கியப் பிரதி. புலவர் குழந்தையின் இராவண காவியம்கூடக் கம்பன் படைத்த இராவணனால் உந்தப்பட்டே படைக்கப்பட்டது இராவண காவியம் குறித்து நாங்கள் கேட்டபோது எங்கள் ஆசிரியரான புலவர் குழந்தை இராமனுக்குப் பதிலாக இராவணனைப் பத்தி எழுதி இருக்கேன். இதுவும் அதே காப்பியம்தான் என்பார். அதனால் கம்பராமாயணத்துள் நுழைவதற்கு இலக்கியப் புலமை, ஆர்வம் வேண்டும். அப்படிப்பட்டவங்க அதனை வெறுமனே அரசியல் ஆதாயத்துக்கு மட்டும் பயன்படுத்த முடியாது.

கண்ணன் வழிபாடு பற்றி நீங்கள் பேசும்போது, கண்ணன் பாரதத்தில் முக்கிய பாத்திரமாக இருந்தும்கூட, கண்ணன் வழிபாடு தமிழகத்தில் இருந்துதான் வந்ததென்று குறிப் பிட்டிருக்கிறீர்களே?

கண்ணன் பற்றிய குறிப்பு சங்க இலக்கியத்தில் கலித்தொகையில் உள்ளது. கிருஷ்ணன் என்கிற பெயர் கருப்பு நிறத்தைக் குறிப்பதாக உள்ளது. கண்ணனைக் கடவுளாக்கியது தமிழ்நாட்டுக்காரர்கள்தான். வடபுல பாரதத்தில் சாதாரண சிற்றரசனாகக் காட்டப்பட்ட கண்ணனை நாங்கள் எல்லாம் கோயில் கட்டி வழிபடும் கடவுளாக்கியர்கள் தமிழர்களே என்று வடநாட்டு அறிஞர்கள் கூறுகின்றனர். இதுபோன்ற தரவுகளை மேற் கொண்டு ஆய்வு செய்வதால் கண்ணன் வழிபாட்டின் தோற்றம் பற்றிய வேறு பல பயனுள்ள செய்திகளைப் பெறலாம். இராமாயணத்திற்கு முன்னரே மகாபாரதம் தமிழுக்கு வந்துள்ளது. பல்லவர் காலச் சிற்பங்களில் இவற்றின் அம்சங்களைக் காணமுடிகிறது. இது குறித்து இன்னும் ஆய்வு செய்யப்பட வேண்டியுள்ளது.

தெ.பொ.மீ. அவர்களுடன் தங்களுக்கு இருந்த தொடர்பு குறித்து...

கோயம்புத்தூருக்கு அவர் அடிக்கடி வருவார். கல்லூரிகளில் அவருடைய சொற்பொழிவுகள் நடை பெறும். அப்பொழுது அவரது சொற்பொழிவுகளைக் கேட்டிருக்கிறேன். பின்னர் என்னைப்பற்றிக் கேள்விப் பட்டு, கம்பன் கழகம் கம்பராமாயணத்தைப் பதிப்பித்த போது கூப்பிட்டனுப்பி அதற்கு வேலை செய்யச் சொன்னார். பின்னாளில் அவரது எழுத்துக்களைத் தொகுக்கும் பணி ஆரம்பித்தபோது, அ.ச.ஞான சம்பந்தன் உங்களது கட்டுரைகள் தமிழ், ஆங்கிலம் கலந்து உள்ளன, அதனால் மணவாளனை வைத்துத் தொகுத்தால் நன்றாக இருக்கும். என்றார். அ.ச. ஞான சம்பந்தன் சென்னை மந்தவெளியில் இருந்தபோது அவரோடு போய் தெ.பொ.மீ. அவர்களை அடிக்கடி சந்திப்பதுண்டு. என்னுடைய கட்டுரைத் தொகுப்புக்கு அவர் தான் முன்னுரை அளித்தார்.

இலக்கிய ஆய்வுகளில் இன்று முக்கிய அம்சமாகத் திகழ்வது இலக்கியப் பாத்திரங்களில் இருந்து வரலாற்றுத் (பண்பாட்டுத்) தரவுகளைக் களைந்தெடுப்பதாகவே உள்ளது. காப்பியங்கள் குறித்த ஆய்வுகள் ஆனாலும் சரி, தலித்தியம் குறித்த ஆய்வுகள் ஆனாலும் சரி, இன்று இலக்கியப் பிரதிகளிலிருந்து வரலாற்றுத் தரவுகளைக் களைந்தெடுப்பதாகவே உள்ளது. எந்த அளவுக்கு இலக்கியப் பிரதிகளை வரலாற்றுத் தரவாக எடுத்துக் கொள்வது?

எல்லா இடங்களிலும் இது சாத்தியமில்லை,சில பிரதிகளில் சில கதாபாத்திரங்கள் பேசுவதை மட்டும் வரலாற்று உண்மையெனக் கருதமுடியாது. அதே சமயம், அந்த மொழிப்பிரயோகத்தில் காலம்,இடம் பற்றிய குறிப்புகள் கிடைக்கும்.சில பிரதிகளில் அரசர்களைப் பற்றிய நேரடிக் குறிப்பு வருகிறது. அவற்றை முற்றிலும் தவறு எனப் புறந்தள்ளிவிட முடியாது. ஒரே சம்பவங்கள் குறித்துப் பல பிரதிகளில் வருகின்ற குறிப்புகளை ஒப்பிட்டு ஏதாவது வரலாற்றுச் செய்தியைப் பெறலாம். எந்த மாதிரியான வரலாற்றுத் தரவுகளை யார் எதற்குப் பயன்படுத்துறாங்க, அப்படிங்கிறதுலதான் எல்லாம் இருக்கு. உதாரணத்திற்குப் பீகாரில் நந்தன் என்ற அரசன் பற்றிக் குறிப்பு கிடைக்குது, இங்கேயும் நந்தன் என்கிற அரசன் பற்றிய குறிப்புகள் ஆங்காங்கு கிடைக்கிறது. இது மாதிரி பயனுள்ள குறிப்புகள் கிடைக்கிற பட்சத்தில் இலக்கியப் பிரதிகளில் இருந்த வரலாற்றுத் தரவுகளைக் களைந்தெடுப்பதில் தவறில்லையே.

இலக்கியம், வரலாறு, பண்பாடு குறித்த உங்களது இத்தகைய அணுகுமுறைக்கு மேற்கத்திய இலக்கிய ஆய்வுகள், கோட் பாடுகள் குறித்த பயிற்சிதான் காரணம் எனக் கூறலாமா?

ஆமாம்.குறிப்பாக ஒப்பியல் ஆய்வு முறைமை முன்வைக்கிற அறிவியல் பூர்வமான அணுகுமுறைதான் எனது ஆய்வுகளுக்குப் பெருமளவில் உதவியது.

அப்படி என்றால் ‘ஒப்பியல்துறை செத்துவிட்டது’என்று காயத்ரி ஸ்பீவாக் பிரகடனம் செய்வது குறித்து உங்களது கருத்து. இப்பிரச்சினை ஏன் இன்று முக்கியத் துவம் பெறுகிறது என்றால்,இன்று முக்கிய கோட் பாட்டாளர்களாகக் கருதப்படுகின்ற தெரிதா,எட்வர்ட் ஸெயத், பால்தி மென், கௌரிவிஸ்வநாதன், காயத்ரி ஸ்பீவாக் முதலியவர்கள் ஒப்பியல் துறையில் பேராசிரி யராகப் பணியாற்றுகிறார்களே தவிர ஒப்பியல் குறித்து எதுவுமே எழுதியதில்லை என்பதால்தான்.

ஒப்பியல் ஆய்வு வரலாற்றைப் பார்த்தால் இதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். அப்போது இந்தக் கோட்பாட்டாளர்களின் பணிகள், எழுத்துகள் ஏதோ ஒரு வகையில் ஒப்பியல் துறையின் அங்கமாக இருப்பது புரியும். குறிப்பாக இவர்களது எழுத்துகள் ஒப்பியல் ஆய்வுமுறை வலியுறுத்துகிற மாதிரி துறை களைக் கடந்ததாக உள்ளன. இதுபோலவே துறைகளின் எல்லைகளைக் கடக்க வேண்டிய தேவையைத்தான் ஒப்பியல் வலியுறுத்தி வந்துள்ளது. ஸ்பீவாக் சொல்வதற்கு ‘அந்தத் துறை செத்துவிட்டது’ என்ற அர்த்தமில்லை. ‘ஒப்பியல் என்கிற பேர் வேண்டாமே’ என்றுதான் சொல்றாங்க. ‘அதுக்குப் பதிலா இலக்கியப் பண்பாடுகள் குறித்த ஆய்வுகள்’எனக் கூறலாமே என்றுதான் அவர் கருதுகிறார்.

இங்கு இலக்கியப் பண்பாடுகள் குறித்த ஆய்வுகள் எனக் குறிப்பிடப்படுவதில் மேற்கத்திய கோட்பாட்டு வளர்ச்சியின் தாக்கம் பெருமளவு உள்ளதாகத் தோன்றுகிறதே. இது நமது பண்பாட்டைப் பற்றிய தவறுதலான கோட்பாட்டளவிலான புரிதலுக்கு வழிவகுக்காதா?

பின் அமைப்புவாதம் என்பதை வெறுமனே மேற்கி லிருந்து வந்த ஒரு கோட்பாடாகப் பார்க்க வேண்டிய தில்லை. பின் அமைப்புவாதம் என்பதே எதையோ ஒன்றைக் கடப்பதாகப் புரிந்துகொள்ள வேண்டுமென நினைக்கிறேன். இதில் கிழக்கு, மேற்கு எனப்பார்ப்பதே தவறு எனத்தோன்றுகிறது. ஏனென்றால், மேற்கத்தியப் பண்பாடு என நாம் குறிப்பிடுவது பலவகைப்பட்டதாக உள்ளது. ஆசியா என்பது ஆசியப் பண்பாடுகளின் தொகுப்பாக உள்ளதோ, அதேபோலத்தான் மேற் கத்தியப் பண்பாடு என்பதும் ஐரோப்பியப் பண்பாடு களின் தொகுப்பாகத்தான் உள்ளது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். இது சிறந்தது, அது சிறந்தது என்று எதையும் கூறிவிட முடியாது. இது நமக்குத் தேவைப்படுவதாய் உள்ளது. இது நமக்குத் தேவைப் படாது என்றுதான் சொல்லலாம். எந்த உணவு நல்லது, சுவையானது என்று எப்படிச் சொல்ல முடியாதோ அதேபோலத்தான் இலக்கியம், பண்பாடு குறித்த பிரச்சினைகளும் உள்ளன.

Pin It