குழந்தைகள் கதைகளையும் விரும்புகிறார்கள்;பாடல்களையும் விரும்புகிறார்கள்.  கதைகளும் பாடல்களும் சேர்ந்திருந்தால் இன்னும் அதிக அதிகமாக விரும்புவார்கள், அல்லவா!இவ்வாறு கதை என்ற பாலும் பாடல் என்ற தேனும் கலந்து உருவானதுதான் கதைப் பாடல்.1950-60களில் தொடக்கப் பள்ளியில் படித்தவர்கள்,

‘பாட்டியின் வீட்டுப் பழம் பானை - அந்தப்
பானையின் ஒருபுறம் ஓட்டையடா!’

என்ற பாடலை மறந்திருக்க மாட்டார்கள். மறதியில் மன்னன் என்று பெயர் வாங்கியவர்களுக்குக் கூட நாலு வரிகளாவது நினைவில் இருக்கும்.

கவிமணி எழுதிய ‘நெற்பானையும் எலியும்’என்ற கதைப்பாடலில் வரும் வரிகள்தான் மேலே உள்ளவை. 16வரிகளில் அற்புதமாகக் கதையும் சொல்லி ஒரு நீதியையும் சொல்லியிருப்பார் கவி மணி.  ‘ஊகமுள்ள காகம்’ போன்ற ஐந்து கதைப் பாடல்களைத்தான் கவிமணி எழுதியுள்ளார். மிகக் குறைந்த படைப்புகள் என்றாலும் அவருக்கு நிறைந்த புகழைப் பெற்றுத்தந்தவை அவை. கதைப் பாடல்களைக் குழந்தைகள் விரும்புவதற்குக் காரண மாக அமைந்தவை அவை.

கதைப் பாடல்களின் வெற்றி குழந்தைக் கவிஞர்களைக் கதைப் பாடல்கள் எழுதத் தூண்டின எனலாம்.  ஆடு, மாடு, கோழி, கிளி, நிலா, காற்றாடி என்று தனிப் பாடல்களை எழுதிய பிறகு கடைசியில் இரண்டு கதைப் பாடல்களை எழுதிச் சேர்ப்பது வழக்கமாயிற்று.

இவ்வாறு ஒரு வழக்கத்தைத் தோற்றுவித்த கவிமணிக்கு முன்பாக யாராவது கதைப் பாடல்கள் எழுதியிருக்கிறார்களா என்று ஆராய்ந்தால் முதலில் கதைப்பாடல் எழுதிய பெருமையை வீரமார்த்தாண்ட தேவர் பெறுகிறார். 

19ஆம் நூற்றாண்டிலேயே பஞ்ச தந்திரக் கதைப்பாடல்களைத் தேவர் எழுதினார்.  கவிமணியின் கதைப் பாடலோடு ஒப்பிடும் போது இப்பாடல்கள் கடினமான சொற்களில் இருந்தன.  பொழிப்புரை, பதவுரை தேவைப்பட்டன.  எளிய சொற்களும் சந்த நயமுமே கதைப் பாடல்களைக் குழந்தைகளின் மனதில் நிலைநிறுத்த உதவும் என்பது கவிமணியின் கதைப் பாடல்களைப் படிப்பவர்களுக்குப் புரியும்.

அன்றைய நடுநிலைப்பள்ளித் தமிழ்ப் பாடப் புத்தகங்களில் செய்யுள் பகுதிகளில் கதைப் பாடல்கள் இடம்பெற்றது போல்,தொடக்கப்பள்ளித் தமிழ்ப் பாடப் புத்தகங்களில் ‘ஊகம் உள்ள காகம்’ கதை, ‘காகமும் நரியும்’ கதை, ‘நரியும் திராட்சைத் தோட்டமும்’ கதை படக் கதைகளாக இடம் பெற்றன.

கதையும் பாடலும் சேர்க்கையைப் போல் கதையும் படமும் சேர்க்கையும் குழந்தைகளை வெகுவாகக் கவர்ந்தது. கதையை எளிதாகப் புரிந்து கொள்ளவும் கதாபாத்திரங்களை உருவங்களாகக் காணவும் படங்கள் உதவுவதால் படக் கதைகள் குழந்தைகள் மத்தியில் பிரபலமாயின.  படக் கதைகள் குழந்தைகளின் வாசிக்கும் பழக்கத்தையும் அதிகப்படுத்தின.  ஆனால் படக்கதைகள் ‘காமிக்ஸ்’-ஆக உருவெடுத்தபோது அவற்றின் உள்ளடக்கம் மாய உலகைக் காட்டிடும் போக்காக உருவானது. எதார்த்தத்தை மறைத்தல் அல்லது மறக்கடித்தலுக்கு உதவும் வேலையையே ‘காமிக்ஸ்’கதைகள் செய்தன. 

மனிதனுக்கு எதிரியாக நிஜ வாழ்க்கையில் இல்லாத மாயாவிகளை உருவாக்கியதால் அந்த எதிரிகளை வெல்ல ‘சூப்பர் பவர்’கதாநாயகர்கள் எட்ட முடியாத கற்பனையாக உருவானார்கள்.  டார்ஜான், சூப்பர்மேன், ஸ்பைடர் மேன், சக்திமான் போன்ற கதாபாத்திரங்கள் நிஜமில்லை என்பதைக் குழந்தைகள் புரிந்துகொள்ளப் போராட வேண்டியிருந்தது.

தொடக்கத்திலிருந்தே இத்தகைய ஆபத்து, கதைப் பாடல்களில் இடம்பெற்ற உள்ளடக்கத்தில் நிகழவில்லை.  நல்ல நாடோடிக் கதைகளும் சிறந்த மனிதர்களின் வாழ்க்கை நிகழ்ச்சிகளும் கதைப் பாடல்களில் இடம் பெறக் கவிமணி வழிவகுத்தார் என்றே சொல்லலாம்.

‘ஒளவையும் இடைச் சிறுவனும்’ என்ற கதைப் பாடல் சங்க காலப் புலவரான ஒளவையாரின் வாழ்க்கையில் நடந்த ஒரு சுவையான நிகழ்ச்சியைச் சொல்வது. ‘புத்தரும் ஏழைச் சிறுவனும்’என்னும் கதைப் பாடல் பிறப்பினால் உயர்வு-தாழ்வுகள் இல்லை என்ற புத்தரின் போதனையை உள்ளடக்க மாகக் கொண்டது.கவிமணி போட்ட பாதையிலே முதலில் தமிழ்-குழந்தைக் கவிஞர்கள் பயணித்தார்கள் என்றாலும் நாளடைவில் கதைப் பாடல்களில் இடம்பெற்ற உள்ளடக்கத்தின் பரப்பு விரிவடைந்தது.

சங்க இலக்கியக் காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு கதைப் பாடல்கள் எழுதப்பட்டன.  புலவர் மோசிகீரனார் முரசு கட்டிலில் தூங்கியபோது சேர மன்னன் இரும்பொறை சாமரம் வீசிய சங்க இலக்கியக் கதையைக் கவிஞர் தமிழழகனும், அரிய கனியை ஒளவைக்கு ஈந்த அதியமானைப் பற்றிக் கவிஞர் சி.மாணிக்கமும் எழுதியதை உதாரணமாகக் குறிப்பிடலாம்.
வரலாற்றுச் சம்பவங்களும் கதைப் பாடலின் உள்ளடக்கங்களாயின.  கலிங்கப் போர் அசோக மன்னனிடம் ஏற்படுத்திய மனமாற்றத்தைக் கவிஞர் திருச்சி பாரதன் எழுதியது புதுமையான முயற்சியாக இருந்தது.

‘ஆடு + புலி + புல்லுக்கட்டு’ என்ற புதிர்க் கதையை வித்தியாசமான கதைப் பாடலாகத் தந்தார் கவிஞர் லெமன்.

நடப்பியல் கதைகளும் கதைப் பாடலுக்குக் கருவாயின. கவிஞர் புலேந்திரன் எழுதிய ‘பாலனும் வேலனும்’ கதை இரு சிறுவர்களைப் பற்றியது.  பெற்றோருக்கு உதவுதல், நட்பின் சிறப்பு போன்ற கருத்துக்களை விளக்கும் நடப்பியல் கதைகளைக் கவிஞர்கள் பலரும் கதைப் பாடலாக்கியுள்ளனர்.

அயல்நாட்டுத் தமிழ்க் கவிஞர்களும் கதைப் பாடல்களைத் தந்தனர். அவர்களில் குறிப்பிடத் தக்கவர் முரசு நெடுமாறன். அவர் எழுதிய ‘பூனையைக் கடித்த எலி’நல்ல கற்பனை நயமுடையது. அதே தொனியில் ‘எலி கடித்த பூனை’என்று நம் மழலைக் கவிஞர் குழ. கதிரேசன் தந்த கதைப் பாடல் குழந்தைகளின் மத்தியில் பிரபலமானது. இக்கதைப் பாடலோடு ‘தொப்பைக் கோழி’ கதைப்பாடலும் ஒலிப்பேழைகளாக வந்தது குறிப்பிடத்தக்கது.
நல்ல நீதிகளைக் கூறுகிற பிற நாட்டுக் கதைகள் கதைப் பாடல்களுக்குப் பயன்படுத்தப்பட்டன.  அறிஞர் பெ.நா.அப்புஸ்வாமி எழுதிய ‘கோழியும் தோழிகளும்’ இதற்கு நல்ல உதாரணம்.

கோழி ஒன்று குப்பை மேட்டைக் கிளறிய போது அதற்கு நெல்மணி கிடைக்கிறது. அதை விதையாக விதைத்தால் நிறைய விளையும்,பலரும் சாப்பிடலாம் என்று கோழி நினைக்கிறது.  தன் நண்பர்களான பன்றி, நாய், காக்கை, கிளி, கழுதை, கொக்கு, வாத்து, பூனை, குருவி,மயில் ஆகியோரை அழைக்கிறது. உழுது விதைக்கலாம் என்ற கோழியின் அழைப்பிற்கு யாரும் செவிசாய்க்கவில்லை. கோழி தன் குஞ்சுகளுடன் சேர்ந்து நிலத்தை உழுது விதைக்கிறது.

நெல் விளைந்த பிறகு நெல் குத்த தோழிகளை அழைக்கிறது கோழி. அப்போதும் யாரும் வேலை செய்ய வரவில்லை.

கோழி சோறு சமைத்த பிறகு உண்பதற்குத் தோழிகள் ஓடி வருகிறார்கள். உழைக்காமல் உண்பதற்கு உரிமையில்லை என்று கூறிக் கோழி தோழிகளை விரட்டியடிக்கிறது.

“வேலை என்றால் மாட்டீர்கள்
 வெட்கம் கெட்ட தோழியரே!
மேலை நாளில் நடந்ததெல்லாம்
 மீண்டும் நினைத்துப்பாருங்கள்!
உண்போம் சோற்றை நாம் என்றே
 ஓடி வந்த தோழியரே!
கண்ணின் முன்னால் நில்லாமல்
 காலை நீட்டி நடவுங்கள்!”

என்று அந்தக் கதைப்பாட்டு முடிகிறது. உழைப்பின் மேன்மையைக் கூறும் இந்தக் கதை சோவியத் குழந்தை இலக்கியமாகும்.

வெளிநாட்டுக் கதைகளைக் கதைப் பாடல்களாகத் தந்த வரிசையில் குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா ஈசாப் கதைப் பாடல்களைத் தனி நூலாகவே தந்தார்.  ஒவ்வொரு கதைப் பாடலிலும் படமும் இடம் பெற்றது.  1987-இல் இந்நூல் வெளிவந்தது.  ஆனால் 1948-லேயே அறிஞர் பெ. நா.அப்புஸ்வாமி அவர்கள் ‘சித்திரக் கதைப்பாட்டு’ என்ற பெயரில் கதை, பாட்டு, சித்திரமும் சேர்த்துத் தந்தது புதுமையும் பெருமையும் வாய்ந்ததாக இருந்தது. சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த இந்த அற்புதம் தமிழ்-குழந்தை இலக்கியத்தில் அதற்குப் பிறகு நடக்கவில்லை.

இதற்கு இணையான இன்னொரு அற்புதம் 1977-இல் நடந்தது. ஆங்கிலத்தில் குழந்தைகளுக்கு நிறைய கதைப் பாடல்கள் வந்துள்ளன. கவிஞர்கள் பலர் எழுதிய பல கதைப் பாடல்கள் (Story Poems for Children) ஒரே தொகுப்பாகவும் வந்துள்ளன.  இதைப் போலத் தமிழில் வெளிவரவில்லையே என்ற குறையை ‘சிறுவர் கதைப் பாடல்கள்’ என்ற பெயரில் 60 கவிஞர்கள் எழுதிய 60 கதைப் பாடல்களைத் தொகுத்து வெளியிட்டதன் மூலம் அழ.வள்ளியப்பா தீர்த்து வைத்தார்.

சங்க காலப் புலவர்கள்,அரசர்களின் பெருமையை எடுத்துக் காட்டும் பாடல்கள், பெரியோர்களின் வாழ்க்கை நிகழ்ச்சிகளைப் படம் பிடித்துக் காட்டும் பாடல்கள்,ஆங்கிலக் கதைகள்,பாடல்களைத் தழுவி எழுதப் பெற்ற பாடல்கள்,நாடோடிக் கதை களை அடிப்படையாகக் கொண்ட பாடல்கள் என இத்தொகுப்பு பொக்கிஷமாகவே இருந்தது. பல வகையான உத்திகளில் பல வகையான சந்தங்களில் உண்மையை உணர்த்தும்.  உள்ளத்தைத் தொடும், நல்லதைப் போற்றும், நகைச்சுவை ஊட்டும் கதைப் பாடல்கள் என இத்தொகுப்பு கதைப் பாடல்களின் கதம்பம் எனலாம்.

அது மட்டுமில்லாமல் மிகப்பெரிய தமிழறிஞர்களும் கவிஞர்களும் தயக்கமில்லாமல் குழந்தை இலக்கியம் படைப்பதில் ஈடுபட்டார்கள் என்பதற்கு உதாரணமாக இத்தொகுப்பு திகழ்ந்தது.  அறிவியல் அறிஞர்கள் பெ.நா. அப்புஸ்வாமி, பெ.தூரன், பொருளியல் அறிஞர் மா.பா.குருசாமி, நாவலாசிரி யர்கள் சூடாமணி, கிருஷ்ணன் நம்பி, கவிஞர்கள் சௌந்தரா கைலாசம், தமிழ் ஒளி, தமிழ்முடி, ஈரோடு தமிழன்பன், மஹி, லெமன், தமிழறிஞர்கள் மயிலை சிவமுத்து, மனசை ப.கீரன், தணிகை உலக நாதன்,ஆலந்தூர் கோ.மோகனரங்கன் ஆகியோரே அத்தகைய பெருந்தன்மைமிக்க படைப்பாளிகள். ஏனென்றால் மிகப்பெரிய எழுத்தாளர்களின் பாரா முகம் இன்று வரை தமிழ்-குழந்தை இலக்கியத் தளத்தில் நீடிக்கிறது என்பதே உண்மை.  அதை மறைக்க வேண்டியதில்லை.

குழந்தைகளுக்கான கதைப் பாடலின் வலிமை 1960-70களில் வானொலி, திரைப்படங்களிலும் எதிரொலிக்கத் தவறவில்லை. வானொலி நிலையங்கள் கதைப் பாடல்களுக்கு முக்கியத்துவம் தந்தன.  கவிமணி, செல்வ கணபதி, அழ.வள்ளியப்பா, மின்னூர் சீனி வாசன், வெ.நல்லதம்பி ஆகியோரின் கதைப் பாடல்கள் ‘வானொலி அண்ணா’நடத்திய சிறுவர் நிகழ்ச்சி களில் இடம்பெற்றன.

திரைப்படங்கள் கதைப் பாடல்களைப் பயன் படுத்தியதால் அவ்வடிவம் குழந்தைகளுக்கு விருப்ப மான ஒன்றானது. களத்தூர் கண்ணம்மாவில் வந்த சிங்கமும் முயலும் கதைப் பாடல் சிறுவர்களை மிகவும் கவர்ந்தது.  ‘பாப்பா, பாப்பா, கதை கேளு, காக்கா நரியின் கதை கேளு, அப்பா அம்மா கேட்ட கதை, தாத்தா பாட்டி சொன்ன கதை’ என்ற ‘கண்ணே பாப்பா’ திரைப்படத்தில் இடம் பெற்ற கதைப் பாடல் பள்ளிக் குழந்தைகளைப் பாட வைத்தது.  ‘நீலச்சாயம் வெளுத்துப் போச்சு, நரியின் வேஷம் கலைஞ்சிப் போச்சு’.  ராஜா சின்ன ரோஜாவோடு வேட்டைக்கு வந்தாராம்’போன்ற கதைப் பாடல்கள் சமீபத்திய திரைப்படங்களில் இடம் பெற்றன.

கதைப் பாடல்கள் என்றாலே விலங்குகள்,பறவைகள் பாத்திரங்களாக இடம்பெறும் நாடோடிக் கதைகளை,பஞ்ச தந்திரக் கதைகளைச் சொல்வது என்பது பெரும் போக்காக இருந்த நிலையில் சிறுவர் சிறுமிகளைப் பாத்திரங்களாகக் கொண்ட நடப்பியல் கதைகளையும் சான்றோர் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களையும் கதைப்பாடலில் எழுதிய பெருமை குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பாவைச் சேரும்.

அழ.வள்ளியப்பாவின் ‘மலரும் உள்ளம்’நூலில் உள்ள ‘அழியாச் செல்வம்’என்ற கதைப் பாடல் மகாகவி பாரதியின் வாழ்க்கைச் சம்பவத்தைப் படம் பிடித்துக் காட்டியது.

‘வாழ்க்கைக்குப் பொருள் அவசியம்தான்; பொருள் மட்டுமே வாழ்க்கையாகி விடாது’. உண்மையில் அழியாச் செல்வம் எது என்பதைச் செல்லம்மாவுக்கு மட்டுமல்ல, குழந்தைகளுக்கும் புரிய வைக்கும் கதைப் பாடல் இதோ:

அழியாச் செல்வம்
எட்டய புரத்து மன்னருடன்
 இனிதாய்க் காலம் கழித்திடவே
பட்டணம் சென்றனர் பாரதியார்,
 பலநாள் சென்று திரும்பினரே,

வாசலில் குதிரை வண்டியுமே
 வந்து நின்றதைக் கண்டதுமே,
ஆசையாய் வாசலை நோக்கி வந்தார்
 அவரது மனைவி செல்லம்மா.

வண்டியை விட்டே பாரதியார்
 மகிழ்வுடன் கீழே இறங்கி வந்தார்
வண்டியிலிருந்த பொட்டணங்கள்
 வந்தன பாரதி பின் தொடர்ந்தே!

பட்டுப் புடவை, பாத்திரங்கள்,
 பற்பல நல்ல பொருள்களுமே
பொட்டணத்துள்ளே இருக்குமெனப்
 பிரித்துமே பார்த்தனர் செல்லம்மா.

பட்டுப் புடவையும், அங்கு இல்லை;
 பாத்திர பண்டமும் அங்கு இல்லை;
பொட்டணத்துள்ளே இருந்ததெல்லாம்
 புத்தகம், புத்தகம், புத்தகமே!

அரசர் கொடுத்தது ஐந்து நூறு,
 அத்தொகை யாவுமே புத்தமாய்
இருப்பதறிந்ததும் ‘ஐயையோ,
 ஏனோ இப்பிடிச் செய்து விட்டீர்!

எனக்குப் பிடித்ததாய் ஏதுமில்லை,
 இப்படிக் காசைக் கெடுப்பதுவோ?
சினத்துடன் மனைவி பேசிடவே
 சிரித்துமே பாரதி கூறினரே;

பட்டுப் புடவை, வெள்ளியிலே
 பாத்திரம், பண்டங்கள் வாங்காமல்
பட்டணம் சென்றே வீணாகப்
 பணத்தைக் கெடுத்ததாய் எண்ணுகிறாய்

அழிகின்ற செல்வம் நான் கொடுத்தே
 அழியாத செல்வம் கொண்டு வந்தேன்
அழகழகான கருத்தையெல்லாம்
 ஆனந்தமாய் படித்தறிவோம்.”

இதே போல் மகாகவி பாரதி போன்ற பெருமை மிகு பெரியோரின் வாழ்க்கை நிகழ்ச்சிகளைக் கதைப் பாடல்களாகக் கவிஞர் வெற்றிச் செழியன் தற்போது எழுதி வருவது குறிப்பிடத்தக்கது.

சோவியத் ரஷ்யா பள்ளிக்கு அயல்நாட்டுக் கல்வியாளர் ஒருவர் வந்திருந்தார். அவர் அப்பள்ளி மாணவர்களோடு கலந்துரையாடிய போது மாணவர் ஒருவரின் கணித அறிவைச் சோதித்தறியும் நோக்கில் ஒரு கேள்வி கேட்டார். ஒரு பொருளை ரூ.100/-க்கு வாங்கி ரூ.150/-க்கு விற்றால் என்ன லாபம் கிடைக்கும்? என்பது கேள்வி.  கேள்விக்கு அம்மாணவன் ‘ஜெயில் கிடைக்கும்’ என்று பதிலளித்தது திடுக்கிட வைத்தது.  மாணவனின் பதிலுக்குக் காரணம் புதிய சமூக மதிப்பீடுகள். சோவியத் ரஷ்யா குழந்தை இலக்கியம் புதிய மதிப்பீடுகளை முன் வைத்தது.  அப்புதிய மதிப்பீடுகளை அடிப்படையாகக் கொண்ட ரஷ்யச் சிறுவர் கதைகளைத் தழுவிய கதைப் பாடல்களைக் கவிஞர் தண்டரை முகில் வண்ணன் ‘புதுமழை’ என்ற நூலில் வழங்கியுள்ளார்.  உண்மையில் இந்நூல் புதுமழைதான்.  1991-இல் என்.சி.பி.எச். புத்தக நிறுவனம் இப்புது மழையைப் பொழிய வைத்தது.

அந்நூலில் ‘தாய் அன்பு’என்ற கதைப்பாடல் சோவியத் குழந்தைக் கதையைத் தழுவி எழுதப்பட்டுள்ளது.

“தந்தந் தந்தந் தன தனனா...
தாயின் அன்புக் கொரு கதை கேள்!

கோழி ஒன்று முட்டையிட்டுக்
குஞ்சுகள் பத்து பொரித்ததுவாம்.
பூப் போல் அந்தக் குஞ்சுகளைப்
போற்றிக் காத்து வளர்த்ததுவாம்.

பாசத்தோடு உணவினையும்
பகிர்ந்து சமமாய் அளித்ததுவாம்
புசித்தால் சமமாய்ப் புசித்திருக்கும்
பசித்தால் சமமாய்ப் பசித்திருக்கும்.

இப்படி வாழ்வை வகுத்தனவாம்
எல்லாம் வளர்ந்து பருத்தனவாம்
ஒருநாள் நண்பகல் வேளை வரை
உணவே யார்க்கும் கிடைக்கவில்லை.

பசியால் எல்லாம் துடித்தனவாம்
பத்தும் கண்ணீர் வடித்தனவாம்!
தத்தம் போக்கில் தரை கிளறித்
தம் பசிக் குணவைத் தேடினவாம்!

அவற்றுள் ஒன்றின் முயற்சியினால்
அரை முழ மண்புழு கிடைத்ததுவாம்
தான் கண்டெடுத்த உணவதனைத்
தனியே உண்ண முனைந்ததுவாம்.

ஒன்பது குஞ்சுகள் பசித்திருக்க
ஒன்று மட்டும் புசித்திருக்கப்
பார்த்து தாயும் சினந்ததுவாம்
பறந்து குஞ்சிடம் விரைந்ததுவாம்.

கூர் அலகால் அதைக் கொத்தியதாம்
குஞ்சின் உணவைப் பற்றியதாம்
பத்தாய்ப் புழுவைப் பகிர்ந்ததுவாம்.
பத்துக்கும் உண்ணக் கொடுத்ததுவாம்.

‘உழைப்பதைச் சமமாய் உழையுங்கள்
உண்பதைச் சமமாய் உண்ணுங்கள்
பலரும் பட்டினி கிடக்கையிலே
சிலரே உண்பதை ஒழியுங்கள்’

என்றே தாயும் சொன்னதுவாம்
எல்லாம் ஒப்புக் கொண்டனவாம்!
தாயின் இந்த அறிவுரைகள்
தவறா சொல்வீர் தம்பிகளே!

‘எல்லோரும் சமமே’ என்பதை இக்கதைப் பாடல் குழந்தைகளுக்குப் புரிய வைத்துவிடும்.  இத்தகைய புதிய விழுமியங்களை உள்ளடக்கமாகக் கொண்ட கதைப் பாடல்களே இன்றைய தேவை.  இப்போது குழந்தைக் கவிஞர்கள் கதைப் பாடல்கள் எழுதுவது குறைந்து விட்டது.  சிறுவர் இதழ்களும் பதிப்பகங்களும் பாடப்புத்தகங்களும் கதைப்பாடல் களை அதிகமாக வெளியிட முன் வரவேண்டும். அப்போது கதைப்பாடலுக்கான முன்பிருந்த ‘பொற்காலம்’ மீண்டும் மலரும்.

Pin It