இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில 22-ஆவது மாநாடு பிப்ரவரி, 17-இல் தொடங்கி 19 வரை இராஜபாளையத்தில் நடைபெற்றது.  அந்த நகரமே அதுவரை கண்டிராத அளவுக்கு ஏராளமான தோழர்கள் உணர்வுடன் மாநாட்டில் பங்குகொள்ள, கட்சிப் பொறுப்புகளுக்கான தேர்ந் தெடுப்புக்கு அடுத்து, மார்க்ஸின் வார்த்தைச் சிக்கனத்தைப் போல, மக்களுக்கு மிக மிக அவசியமான தேவைகளையொட்டி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

சாலைப் போக்குவரத்து, ரயில் போக்கு வரத்து, நதிநீர் இணைப்பு, மின் பற்றாக்குறை நெருக்கடியைக் களைதல், வேளாண்மை, கல்வி, இலக்கியம், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் நலவாழ்வு, வேலைவாய்ப்பு, ‘பிப்ரவரி - 28 பொது வேலை நிறுத்தம், இனப் பேரழிவிலிருந்து இலங்கைத் தமிழர்களைக் காப்பாற்றுதல் ஆகியன இந்த மாநாட்டுத் தீர்மானங்களுள் சிறப்பாகக் குறிப்பிடத் தக்கவை.

இவற்றுள் பிப்ரவரி, 28 வேலைநிறுத்தம் ஏஐடியூசி, சிஐடியூ, ஐஎன்டியூசி, எச்எம்எஸ், பிஎம்எஸ், எல்பிஎஃப், ஏஐசிசிடியூ, ஏஐயூடியூசி உள்ளிட்ட தொழிலாளர் சங்கங்கள் இணைந்து விலைவாசி உயர்வுக்குக் கண்டனம் தெரிவித்தல், தொழிலாளர் நலனுக்கான கோரிக்கை என நாடு தழுவிய அளவில் பொது வேலைநிறுத்தத்தையும், பேரணியையும் நடத்தின.

அடுத்து, மார்ச்-6 அன்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் மாநிலத்தின் அனைத்து மாவட்டத் தலைநகரங் களிலும் நடைபெற்றது. 

மார்ச் 27-இல் ஜெனிவாவில் நடைபெற விருக்கும் போர்க்குற்ற விசாரணையில் இலங்கை அரசின் வன்முறை இன அழிப்புப் போர்க் குற்றம் என்றும் ராஜபக்சேவை இன அழிப்புப் போர்க் குற்றவாளி என்றும் அறிவிக்க வேண்டும் என்றும் இந்திய அரசை நோக்கி இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி உரத்த குரலெழுப்பியது.

ஐ.நா.சபையின் அறிவுறுத்தலை மதிக்காது அதன் விதிகளையெல்லாம் மீறி இஸ்ரேல் தொடர்ந்து பாலஸ்தீனர்களின் மீது தாக்குதல் நடத்தி பாலஸ் தீனர்களுக்குச் சொந்தமான இடங்களிலேயே அவர் களை (பாலஸ்தீனர்களை) சிறை வைத்திருக்கிறது.  அந்த வழியை அப்படியே பின்பற்றி வருகிறது இலங்கைப் பேரினவாத அரசு.

சுமார் 23,00,000 பேர் வாழ்ந்த பூமியில் 2009, மே மாதச் சோகத்திற்குப் பிறகு பல லட்சம் பேர் காணாமல் போய்விட்டனர்.  அந்த இனப் பேரின வாத அழிப்புப் படுகொலைகளுக்கு எதிராக,

உலக நாடுகள் உடனடி நடவடிக்கைகளை மேற் கொள்ளாது வாளாவிருந்தாலும், இப்போது நமது ஈழத்தமிழர்களின் வாழ்வுரிமைச் சிக்கல் உலகுக்குப் புரியத் தொடங்கிவிட்டது.

இலத்தீன் அமெரிக்க சோஷலிச நாடுகளில், தமிழீழ விடுதலைப் போராளிகளைப் பயங்கர வாதிகள் என்று பொய்க்குற்றம் சாட்டிய ராஜ பக்சேவின் ‘பம்மாத்து’ வேடமும் இப்போது உலக அரங்கில் கலையத் தொடங்கிவிட்டது.

தமிழகத்தில் கம்யூனிஸ்ட் கட்சியினர் உள்ளிட்ட புலமைத் துறையின் சமுதாய முற்போக்குச் சிந்தனை யாளர்கள் பேச்சும் எழுத்துமாக உழைத்து கருத்தியல் பணியைச் செம்மையாகச் செய்து வருகின்றனர்.

அந்தக் கருத்துநிலையின் செறிவான விளைவே இராஜபாளையத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ் மாநில 22-ஆவது மாநில மாநாட்டில் துவங்கி, ‘பிப்ரவரி - 28 பொது வேலை நிறுத்தம்’, ‘மார்ச் - 6 - ராஜபக்சேவை இனஅழிப்புப் போர்க் குற்றவாளியாக அறிவிக்கக் கோரி இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் உண்ணாவிரதப் போராட்டம்’ என்று தொடர்ந்திருக்கிறது.  மூன்று நிகழ்ச்சிகளும் வெவ்வேறு நிகழ்ச்சிகள் போலத் தோற்றமளித்தாலும், இந்த மூன்றிலும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சித் தோழர்களுக்கு ஆதரவாக, பொது மக்கள் முந்தைய நிலையைக் காட்டிலும் இப்போது மிகுந்த ஆர்வத்துடன் பங்கெடுத் திருப்பது வரலாற்றுப் போக்கின் வளர்ச்சி மாற்றத்தைத் தெளிவாகப் புலப்படுத்துகிறது.

இதன் அடுத்த கட்டமாக, நமது கவனத்தை ஈர்ப்பது எதிர்வரும் மார்ச் 29 முதல் 31 வரை பீகார் மாநிலம் பாட்னாவில் நடைபெற உள்ள இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாடு.  அங்கும், உழைப்பும், புலமையும் இரண்டற செல் வாக்கு செலுத்தும்; இலங்கைத் தமிழர்களின் வாழ்வுரிமையின் அடுத்த பரிணாமத்தை தேச அளவில் நகர்த்திச் செல்லும்; அதில் இந்தியப் பாட்டாளி இதயங்கள் உணர்வுபூர்வமாகப் பங்கெடுக்கும் என்று நம்புவோம்.

Pin It