தமிழக அரசியல் வரலாற்றில் ஜீவா

ஜீவா என்றொரு மானிடனின் கருத்துக்கள் எவ்வாறு தமிழக அரசியல் வரலாற்றில் பொருத்தமாக இருக்கின்றன என்பதையும் நீண்ட வரலாற்றைக் கொண்ட தமிழ்ச் சமூகம் அதன் அரசியல் பண் பாட்டுப் பிரச்சினைகளை எவ்வாறு மீட்டெடுத்துக் கொண்டது, அதில் ஜீவாவின் பங்களிப்பு என்ன என்பது குறித்து குறிப்பிட விழைகிறேன்.

ஜீவாவின் தத்துவங்களைப் பொறுத்தவரை மாறுபாடுகளுக்குள் பொதுவான காரணங்களைப் பார்க்க வேண்டும்.  எதிர்நிலை அரசியல் தத்துவங் களிலும் ஜீவாவின் நோக்கை உணர்ந்திட வேண்டும்.  அரசியல் மாற்றம் ஏற்பட்ட போது அதற்கான தொலைநோக்குப் பார்வையை ஜீவாவால் கூற முடிந்திருந்தது.

ஜீவாவைப் பற்றிய நூல்களிலும் அவரது ஆளுமைகளை உணர முடிகிறது.  அவரது அரசியல் நிலைப்பாடுகள் குறித்து பாலதண்டாயுதம் தொகுப்பு நூலி லும், தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் தலைவர் பொன்னீலன் நூலிலும் விரிவாகக் காண முடிகிறது.

பேராசிரியர் வீ. அரசு பெரும் முயற்சி செய்து 1300 பக்கங்களில் ‘ஜீவாவின் ஆக்கங்கள்’ என்னும் தலைப்பிலான இரண்டு தொகுதிகளில் ஜீவாவின் உரைகள், எழுத்துக்களை நிரல்படுத்தி தமிழ்ச் சமூகத்துக்கு வழங்கியுள்ளார்.

1937 முதல் கடந்த 75 ஆண்டுகளாக ஜனசக்தி பத்திரிகை வெளி வந்து கொண்டிருக்கிறது.  அதனை நிறுவிய நாள் முதல் தான் இறக்கும் கடைசி நாள் வரை பத்திரிகையின் தலையங்கங்களை ஜீவா எழுதி வந்துள்ளார்.  தான் இறப்பதற்கு முதல் இரவு கூட ஜனசக்திக்குத் தலையங்கம் எழுதிக் கொடுத்துள்ளார்.

இவ்வாறான நூல்கள், பத்திரிகைப் பதிவுகளின் வழியாக ஜீவா யார் என்பதை நம்மால் அறிந்திட முடிகிறது; சென்னைப் பல்கலைக்கழகத்தில் ஜீவா அறக் கட்டளைச் சொற்பொழிவு மூலம் உங்களுக் கெல்லாம் எடுத்துரைக்க முடிந்திருக்கிறது.

இளமைக்காலம்

Jeeva_250இலக்கியப் பேராசான் என அறியப்பட்ட ஜீவா என்னும் ஜீவானந்தம் 1906-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 21-இல் குமரி மாவட்டத்தில் பூதப்பாண்டியில் ஒரு சிறிய குடிசை வீட்டில் பிறந்தார்.  எளிய விவசாயக் குடும்பத்தில் பிறந்த அவருக்கு சொரிமுத்து என்றே பெயரிடப்பட்டது.  1963 ஜனவரி 18-இல் சென்னையில் உயிர் துறந்தார்.  எளிமையான வாழ்க்கையோடு இறக்கும்போதும் குடிசை வீட்டிலேயே இறந்தார்.  ஆக, பிறந்தது இருந்தது வேறு வேறு இடங்களா னாலும் குடிசையி லேயே பிறந்து குடிசையிலேயே இறந்த ஒரே தலைவன் ஜீவாதான்!

ஜீவா தனது இளமைக் காலத்தில் திடகாத்திர மான உடல் கட்டமைப்போடு இருந்திருக்கிறார்.  தினமும் காலை உடற்பயிற்சியின்போது இரு கைகளைத் தரையில் ஊன்றியவாறு கைகளால் நடந்து வருவாராம்! அதிலும் பேசிக் கொண்டே, நகைச்சுவையான தகவல்களையும் கூறிக் கொண்டே வருவாராம்! அத்தகைய உடல்வாகு அவருக்கு அமைந்திருந்தது.  விவேகானந்தர், பகத்சிங் உடற் பயிற்சி மன்றங்களை நடத்தி வந்தபோது அந்தக் காலத்து அருணாசல பயில்வானுக்கு அறிமுகம் ஆகியிருக்கிறார்.  அவரைப் பற்றிய விஷயங்களை எல்லாம் சுந்தரராமசாமியிடம் பவ்யமாகக் கேட்டறிந்திருக்கிறார் ஜீவா.

ஐந்தாம் வகுப்பு வரையில் படித்திருந்தாலும் இளம்வயதிலேயே உலக இலக்கியங்கள் பலவற்றைப் படித்து அறிந்திருந்தார்.  பெரும் அறிஞர்களை எல்லாம் தனது பேச்சாற்றலால், கருத்தாற்றலால் வென்றெடுத்திருந்தார்.

சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறைப் பேராசிரியராக இருந்த தமிழறிஞர் மு.வரதராசனார் ஜீவாவின் பற்றாளராக இருந்துள்ளார்.  ஜீவா இறந்தபோது அவரது சவ ஊர்வலத்தில் இடுகாடு வரை நடந்தே வந்துள்ளார்.  கல்வியாளர்கள் போற்றிய மாமன்றத்தில் ஜீவா தலைமையிடத்தில் இருந்துள்ளார்.  ‘ஏட்டறிவு புட்டிப்பால், அனுபவ அறிவே தாய்ப்பால்’ என ஜீவா அவர்கள் எடுத் துரைத்திருக்கின்றார்கள்.  அதுபோல எதையுமே மேம்படுத்திக் கற்றுக்கொள்ள வேண்டுமென்பார்.

அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டு சமகால வரலாற்று மேன்மையை உணர்த்திய சில தலைவர்கள் இருந்திருக்கிறார்கள். ரஷ்ய நாட்டிலும் கியூபாவிலும் அத்தகைய தலைவர்களைக் காண முடிகிறது.  கிராம்ஸ்கியின் கருத்துக்கள் அவ்வாறான முக்கியத்துவம் பெற்றவை.  சிங்காரவேலர், ஜீவா ஆகியோரின் கருத்துக்களுக்கும் அவ்வாறான தொடர்பு இருந்தது.  அவர்கள் எந்தச் சிக்கலையும் மார்க்சியத்தின் அளவுகோல்களைக் கொண்டு அணு கினார்கள்.

21 ஆண்டுகள் சிறையில் இருந்து அனுபவ அறிவைப் பெற்றிருந்தார் கிராம்ஸ்கி.  சிறைகளில் இருந்தார்கள் என்பதே ஒரு பெரிய செய்தியாகும்.  அதுவே மக்களை அத்தலைவர்களின் பின்னால் அணி திரட்டிவிடும்; அவர் களைப் போராட வைத்திடும்.  சிறைகளை உடைத்து அத்தகைய தலைவர் களை விடுதலை செய்திடுவதே நாட்டை விடுதலை செய்த தாகும் என மக்கள் உணர்ந்தார்கள். கிராம்ஸ்கி, நெல்சன் மண்டேலா ஆகியோரின் வாழ்விலிருந்து இதனை அறிய முடிகிறது.

ஜீவாவின் போராட்ட வாழ்க்கை

ஜீவாவின் வாழ்க்கையும் அத்தகைய பிரமிப்புத் தன்மை உடையது; வைக்கம் போராட்டம், அரிஜன மக்கள் ஆலயப் பிரவேசப் போராட்டம் எனப் பல அரசியல் திருப்புமுனைப் போராட்டங்களைக் கொண்டது. தென் தமிழகத்தின் ஆலயங் களில் நாஞ்சில் நாட்டில் ஆலய வழிபாடு மிகவும் மரபு வழி கட்டுப்பாடுகளைக் கொண்டதாக இருந்தது.  எல்லா சாதி சனங்களும் கோவிலுக்குள் போய் வர முடியாது. தேரோடும் வீதிகளில் கூட கால் வைத்திட முடியாது. கோவில் திருவிழாக் காலங்களில் தெருமறிச்சான் நடவடிக்கை களில் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள், தலித்துகள் கோயில் இருக்கும் பகுதிகளில் கூட அனுமதிக்கப்படாத நிலைமைகள் இருந்தன.  கடுமையான உழைப்பாளி களான, பனையேறித் தொழிலாளிகளான நாடார் சமூகத்தைச் சேர்ந்த சாணார் கள் கூட கோயில் களில் அனுமதிக்கப் படவில்லை.

இத்தகையவற்றிற்கான போராட்டங்களே நாட்டின் சுதந்திரப் போராட்டத்தை யும் முன்னோக்கி உந்தித் தள்ளின.  நாட்டின் விடுதலை ஒருபுறமும், சாதிய விடுதலை மறுபுறமுமாகப் போராட்டக்களம் முரண்பட்டிருந்தது. 

தமிழகத்தில் சேவா சங்கம்

அரிசன சேவா சங்கம் காந்தியடிகளால் வட நாட்டில் அமைக்கப்பட்டிருந்தது.  அதே காந்தி வழியில் தமிழகத்தில், காரைக்குடி செட்டிநாட்டில் காசிவிஸ்வநாதன் செட்டியார் உதவியுடன் சிரா வயல் என்னும் இடத்தில் ஜீவா அரிசன சேவா ஆசிரமத்தை உருவாக்கி நடத்தி வந்தார்.  அந்த ஆசிரமத்திலிருந்து பயன் பெற்ற பல தலித்துகள் இப்போதும் மலேசியா, சிங்கப்பூர் பகுதிகளில் தொழில் செய்து வசதியாக இருக்கிறார்கள்.  அவர்கள் ஜீவாவின் மீதும் மிகுந்த பற்றுள்ளவர் களாக இருக்கிறார்கள்.

மகாத்மா காந்திக்கு ஜீவா தொடர்ந்து கடிதம் எழுதிக் கொண்டிருந்தார்.  ஆசிரமம் நடத்துவதைப் பற்றியெல்லாம் தெரிவித்திருந்தார்.  தமிழ்நாட்டிற்கு வந்திருந்த காந்தி அப்போது காங்கிரஸ் கமிட்டித் தலைவராக இருந்த ராஜாஜியிடம் ஜீவாவைப் போய்ப் பார்க்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்; சிராவயல் ஆசிரமத்திற்கு வந்து ஜீவாவைப் பார்த்துப் பேசினார்.  பத்தொன்பது வயது இளைஞனாக இருந்த ஜீவாவிடம் “இந்த ஆசிரமத்தை நடத்துவதற்கான சொத்து பத்து ஏதாகிலும் உங்களிடம் இருக்கிறதா?” என்று காந்தி வினவினார்.  அதற்கு ஜீவா, “இந்தியாதான் எனது சொத்து!” எனப் பதில் அளித்திட, “இல்லை, இல்லை ஜீவா! நீங்கள்தான் இந்தியாவின் சொத்து!” என ஜீவாவைப் பாராட்டிப் பேசினார் காந்தியடிகள் என்பதை நீங்களெல்லாம் அறிந்திருப்பீர்கள்.

இதற்குப் பிறகு நாச்சியாபுரத்திலும் ஒரு ஆசிரமத்தை ஏற்படுத்தி ‘உண்மை விளக்க நிலையம்’ என்ற பெயரில் நடத்தி வந்தார் ஜீவா.  இந்தக் காலகட்டத்தில்தான் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அரிசன மக்களின் ஆலயப் பிரவேசப் போராட்டம் காங்கிரஸ் தலைவர் மதுரை வைத்தியநாத அய்யர் தலைமையில் நடைபெற்றது. அந்த வேளையில் பாப்பநாயக்கன் பட்டியில் ஜீவா ஆலயப்பிரவேசப் போராட்டத்தை நடத்தினார்.

அரசியல் திருப்பங்கள்!

1922களில் தமிழகத்தில் அரசியல் பரிமாணங்கள் புதிய திசை நோக்கித் திரும்புகின்றன.  ஒத்துழை யாமை இயக்கப் போராட்டத்தில் பங்கேற்று ஜீவா சிறை செல்கிறார்.  1925களில் கம்யூனிஸ்ட் கட்சியை சிங்காரவேலர் சென்னையில் தொடங்குகிறார்.  காங்கிரஸ் சோஷலிஸ்டுகளாகவும் பெரியார் சுயமரியாதை இயக்கத்தினருமாக இருந்தவர்கள் ஒருங்கிணைகிறார்கள்.  ஜீவாவின் அரசியல் பரிமாணம் புதிய வேகம் பெறுகிறது.

இந்த வேளையில் பகத்சிங் தோழர்கள் வட நாட்டில் ஏற்படுத்திய அரசியல் அலை இங்கும் மாற்றங்களை ஏற்படுத்துகிறது.  பகத்சிங் எழுதிய ‘நான் ஏன் நாத்திகனானேன்?’ என்னும் நூலை வாசித்த ஜீவா தமிழகத்தில் அந்த நூலுக்கான அவசியத்தை உணர்ந்து, அதைத் தமிழில் மொழி பெயர்த்து வெளியிட்டார்.  அவர் எதிர்பார்த்தது போல, அந்நூல் தமிழகத்தின் கருத்து நிலையில் பகுத்தறிவைச் செழிக்கச் செய்தது.  பெரியாரின் வேலைத் திட்டத்தோடு இணைந்து செயல்பட ஜீவா விரும்பினார்.  ஜீவா சுயமரியாதை இயக்கத்தில் இருந்தபோது, “நீங்கள் இன்னும் நிறைய சாதிக்க வேண்டியிருக் கிறது” எனச் சொல்வாராம் பெரியார்! ஜீவாவின் இரு பிள்ளைகளின் திருமண ஏற்பாடு களைப் பெரியாரே முன்னின்று நடத்தி வைத்தார்.

திருத்துறைப்பூண்டி மாநாட்டின்போது முரண் பாடு ஏற்பட்டு, பெரியாரும் ஜீவாவும் பிரிந்து விடுகிறார்கள்.  ஜீவா கம்யூனிஸ்ட் இயக்கத்தில் இணைந்து செயல்படுகிறார். 1937 களில் காங்கிரஸ் சோஷலிஸ்டுகளால் தோற்றுவிக்கப் பட்ட ஜன சக்தியைத் தொடர்ந்து நடத்துகிறார்.  காங்கிரஸ் கட்சியில் செயல் பட்டுக்கொண்டிருந்த பி.சி.ஜோஷி உள்ளிட்டோர் அப்போது கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்தனர்.  ஜீவாவும் கம்யூனிஸ்ட் கட்சியில் பொறுப்பேற்று, பல திடமான தோழர்களுக்குத் தைரியமான வார்த்தை சொல்லிக் கட்சியில் ஈடுபட வைத்துள்ளார்.  ஜீவா குறித்து இவ்வாறு எழுதியவற்றையெல்லாம் தா. பாண்டி யனின் புத்தகங்களில் படித்திருக்கிறேன்.

வேலூர் சிறையில் அனைத்துக் கைதிகளையும் போலீசார் அடித்து நொறுக்கினார்கள்.  ஜீவா ஒருவர் தான் போலீசாரின் தாக்குதல்களைப் பல்வேறு வழிமுறைகளில் தடுத்து, பெரிய அளவில் காயம் படாமல் இருந்தாராம்.  அத்தகைய போர்க் குணம் மிக்கவராக அவர் இருந்துள்ளார்.  இவ்வாறான பல்வேறு சிறப்புத் தன்மைகள் ஜீவாவிடம் இருந்தன.

கம்யூனிஸ்ட் அறிக்கையின் தாக்கம்

1878இல் கம்யூனிஸ்ட் அறிக்கையில் உழைப்புச் சுரண்டலைப் பற்றி எழுதப் பட்டிருக்கிறது.  ‘இழப் பதற்கு ஏதுமில்லை; பெறுவதற்கோர் பொன்னுலகம் இருக்கிறது’ என்று உழைப்புச் சுரண்டலுக்கு எதிரான கோஷமாக முன் வைக்கப்பட்டிருந்தது.  சுரண்டலுக்கான ஒடுக்குமுறை என்பதே இனத்தின் மீதான ஒடுக்குறைதான் என்றெல்லாம் அதில் குறிப் பிடப்பட்டிருக்கிறது.  இதைக் கூர்ந்து உணர்ந்தார் ஜீவா.

1950களில் தேசிய இன ஒடுக்குமுறைக்கு எதிரான ஸ்காட்லாந்து, அயர்லாந்து விடுதலைப் போராட்டங்கள் நடந்தன.  தேசிய இன ஒடுக்கு முறைக்கு எதிரான சுதந்திரப் போராட்டத்தில் தேசிய இன சுய நிர்ணய உரிமை இன்றியமை யாதது எனத் தெளிவாகப் பார்த்தவர் ஜீவா.

மொழிவாரி மாநில அமைப்புப் போராட்டங்கள்

மொழியை அடிப்படையாகக் கொண்ட பிரதேசங்களில் மக்கள் வாழ்ந்து வருவதால் அவர் களைப் பிளவுபடுத்தும் போது இப்பகுதிகளில் போராட்டம் எழாது என்றும் மண் சார்ந்த உரிமையும் எழாது என்றும் ஆளும் காங்கிரசார் கருதினர்.  அப்போது சென்னை மாகாணம் சென்னை ராஜதானியாகப் பரந்து விரிந்திருந்தது.  மொழி வாரி மாநிலக் கனவுகளுடன் அவை இருந்தன.   ஆனால் காங்கிரஸ் கட்சி மொழிவாரி ராஜ்ய அமைப்பை ஏற்க முன்வரவில்லை.  பிரிட்டிஷ்காரர் களைப் போலவே ஆட்சி செய்யவே காங்கிரஸ் காரர்களும் விரும்பினார்கள்.  ‘1948களில் நேரு தலைமையிலான அரசை பிரிட்டிஷாரின் கைக்கூலி அரசு’ எனக் கூறி கம்யூனிஸ்ட் கட்சி போராடியது; அதனைக் கவிழ்த்துவிடவும் முயற்சி மேற்கொண்டது.  இதனால் கம்யூனிஸ்ட் கட்சி இந்தியாவில் தடை செய்யப்பட்டது.  அப்போது ஜீவா இலங்கையில் தலைமறைவாக இருந்தார்.  கம்யூனிஸ்ட் கட்சி மீது கடுமையான அடக்குமுறைகள் ஏவப்பட்டிருந்தன.

சுதந்திர இந்தியாவின் முதல் போராட்டமே மொழிவாரி மாநில அமைப்புப் போராட்டம்தான்.  சுதந்திர விடுதலைக் காலப் போராட்டத்திற்கு இணையானதாக அது மதிப்பு பெற்றது.  தனித் தமிழகம் வேண்டி ஜீவா, நேசமணி, ம.பொ.சி. தலைமையிலும் சம்யுக்த மகாராஷ்டிரா வேண்டி டாங்கே தலைமையிலும், நவகேரள போராட்டம் என ஆங்காங்கே மொழிவாரி மாநிலப் போராட்டங்கள் உருவாகின.  ஜீவா இதற்கான போராட்டங்களை முன்னின்று நடத்தியது வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த தாகும்.

வியட்நாம் இந்தோனேஷியாவிடம் இருந்தது.  அதன் ஆளுகையோ பிரான் சிடம் இருந்தது.  ஹோசிமின் பிரான்சிடம் இருந்து வியட்நாமை பெற்றுத் தருவதற்கான பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சியை அழைத்துப் பேசிப் பல போராட்டங்களை நடத்தி வியட்நாமுக்கு விடுதலை பெற்றுத் தந்தார்.  இவ்வாறாக மொழிவாரி மாநில அமைப்பு முறை என்பது உலகெங்கும் தேவையான ஒன்றாக இருந்தது.

மொழிவழிப் போராட்டங்கள் நாஞ்சில் நாட்டில் தீவிரமடைந்தன.  தலைமறைவு வாழ்க்கையில் இருந்துகொண்டே ஜீவா போராட்டங்களில் ஈடுபட்டு வந்தார்.  தலைமறைவு காலகட்டத்தில் ம.பொ.சி.யைச் சந்திக்க வைதீக முஸ்லிம் வேடத்தில் ஜீவா வந்திருக்கிறார்.  வந்தவர் காவல்துறையால் தேடப்படும் ஜீவானந்தம்தான் என்பதை அறிந்த ம.பொ.சி. அவரது தீரமான நடவடிக்கைகளைப் பாராட்டி மொழிவழி மாநிலப் போராட்டத் திற்கான ஆதரவு நடவடிக்கைகளில் ஜீவாவுடன் பங்கேற்றார்.  தலைமறைவு வாழ்க்கை அவ்வாறு கடுமையாக இருந்த காலகட்டத்திலும் ஜீவாவின் போராட்ட வாழ்க்கை முடங்கி விடவில்லை.  அந்த நிலையிலும் தமிழ்மக்களை ஒருங்கிணைத்து திருவிதாங்கூர் சமஸ்தான போராட்டத்தை நடத்த வேண்டும் என ஆதரவு கேட்டு வந்த ஜீவாவின் தீரத்தைக் கண்டு தான் ஆடிப்போய் விட்டதாக ம.பொ.சி. தனது நூலில் எழுதி உள்ளார்.

அன்றைய தேவிகுளம் பீர்மேடு போராட்டக் களமும் இன்றைய முல்லைப் பெரியாறு போராட்டக் களமும் ஒன்றுதான்.  ஜீவாவின் போராட்டம் தொடர்ந்து நடந்து 1984-இல் தேவிகுளம் பீர்

மேடு தினம் தமிழ்ப் பகுதி விடுவிப்பு தினமாகக் கொண்டாடப்பட்டது.  திருவிதாங்கூர் தமிழ் பேசும் காங்கிரஸ் கட்சி யோசனைகளை கம்யூனிஸ்ட் கட்சி ஏற்றுக்கொண்டது.  ஜீவா திருவிதாங்கூர் தமிழ் மக்கள் நாஞ்சில் நாட்டோடு இணைவதை வரவேற்றார்.  ஜீவாவின் செயல்பாடுகளை திரு விதாங்கூர் தமிழ்மக்கள் போராட்டக்குழு வரவேற்றது.

மொழிவாரி மாநிலம் வேண்டிக் கடையடைப்புப் போராட்டத்தின்போது சென்னையில் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் எம்.ஆர். வெங்கட்ராமன் உள்ளிட்ட பலர் தாக்கப்படுகிறார்கள்.  சங்கர லிங்கனார் போன்றோர் உயிர்துறக்கிறார்கள்.  ஜீவா, கே.டி.கே. தங்கமணி, மதுரை ஜானகி அம்மாள் போன்றோரெல்லாம் போராட்டத்தில் குதித்திட்டார்கள்.

1952-இல் ஜீவா சட்டமன்றத்திற்குத் தேர்ந் தெடுக்கப்படுகிறார்.  1956-களில் மொழிவாரி மாநிலங்கள் உருவாகின்றன.  ஆனாலும் நெய்யாற்று நீர், முல்லைப் பெரியாற்று நீர் இன்னமும் நமக்கு கிடைத்தபாடில்லை.

இலக்கியப் பேராசான் ஜீவா

1963 வரை ஜீவா உயிர் வாழ்ந்தார்.  தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் அவரால் தொடங்கப் பட்டது.  கம்பன் உயர்ந்த இலக்கியம் படைத் திட்டாலும் சிற்றின்பக் கதைகளையே இராமா யணத்தில் எழுதியுள்ளார் என்று அண்ணாதுரை ‘கம்பரசம்’, ‘காமரசம்’ என்றெல்லாம் அதனை விமர்சிக்கிறார்.  ஆனால், கம்பராமாயணத்தின் மீதான, இலக்கியப் பார்வை வேறாக இருந்தது.  “வேறுள குழுவையெல்லாம் மானுடம் வென்ற தம்மா” எனக் கம்பனின் உயர்ந்த இலக்கிய மரபை ஜீவா போற்றிப் புகழ்ந்து உரைக்கிறார்.

திராவிட இயக்கத் தோழர்கள் ஜீவாவை விமர்சித்து பல கட்டுரைகளை எழுதினார்கள்.  ‘கம்யூனிஸ்டுகள் சோற்றுப்பட்டாளம், திராவிட இனத்தவர்கள் மானஸ்தர்கள்’ என்றெல்லாம் விமர்சனங்களை முன்வைத்தார்கள்.

இந்நிலையில், காரைக்குடி கம்பன் விழாவில் முதன்முறையாகப் பேச அழைக்கப்பட்ட பொது வுடைமைக் கட்சிக்காரர் ஜீவா.  தொடர்ந்து

80 நிமிடங்கள் பேசினார்.  அனைவருக்கும் பேச அனுமதிக்கப்பட்ட கால அவகாசம் 45 நிமிடங்கள் மட்டுமே.  ஜீவாவின் பேச்சுக்குக் கால நிர்ணயம் செய்திட முடியாமல் அனைவரும் அவரது இலக்கியச் சுவை நிறைந்த பேச்சினைக் கேட்டு மகிழ்ந்தார்கள்.  கம்பன் விழா நடத்தும் சா.கணேசன் எப்போதும் 45 நிமிடங்கள் முடியும்போது ஆரஞ்சு வண்ண விளக்கை ஒளிரச் செய்து கூட்டத்தினைக் கட்டுப் பாட்டுக்குள் கொண்டுவந்து விடுவது வழக்கம்! ஆனால் அன்று அவரால் அந்த ஆரஞ்சு விளக்கைப் போட முடியவில்லை.  “ஜீவாவின் வடிவிலே கம்பனே நேரடியாக வந்து பேசியது போல் இருந்தது” என்று தலைமை வகித்த சரவண முதலியார் விழாவின் முடிவில் வெளிப்படுத்திய கூற்றே ஜீவாவின் இலக்கிய ஆளுமையை வெளிப் படுத்திவிட்டது. 

அதைப்போலவே பாரதியை வரிக்கு வரி பாராட்டிப் பேசியிருக்கிறார் ஜீவா.  ஜீவாவின் “புதுமைப் பெண்” போன்ற நூல்களையெல்லாம் படித்திட வேண்டும்.  அவரது நூல்களில் மொழியின் சுவையையும் உணரலாம்; முற்போக்குச் சிந்தனை யையும் நுகரலாம்.

இலங்கை ஈழத் தமிழர் பிரச்சினை குறித்து ஜீவா

மரபு ஒன்றிலிருந்துதான் புதிது உருவாகிறது.  இலங்கை வன்னிப் பகுதிப்படுகொலைகளைப் பற்றிய ஆவணங்களை மனித உரிமை ஆணையம் வரும் மார்ச் 27-இல் ஐ.நா. சபையில் முன்வைக்கிறது.

ஜீவா 1954-ஆம் ஆண்டிலேயே இலங்கை நிலைமை குறித்து, தமிழக சட்டமன்றத்தில் பேசுகிறார், “1948-இல் இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்தும் தமிழ்க் குடிமக்களின் வாழ்வுரிமை மறுக்கப்பட்டிருக்கிறது.  மலைப்பகுதி களைச் சீர்ப்படுத்தி மண்ணைக் குவித்து ரயில் பாதைகளை அமைத் திட்டவர்கள் தமிழர்கள்தான்.  மலையகங் களில் தேயிலைத் தோட்டங்களை யும், அனைத்து வளங்களையும் அந்நாட்டின் செல்வக் களஞ்சிய மாக்கியவர் களை அந்நாடு அலட்சியப்படுத்தி யிருப்பது வேதனையளிக்கிறது.  தமிழர் களின் வாழ்வுரிமை மறுக்கப்படுவதையும் தமிழ் மக்களின் துயரத்தையும் பாட்டாளி மக்களின் நிலைப் பாட்டையும் எடுத்துரைத்து அதற்கான நடவடிக் கையைத் தமிழ்நாடு சட்டமன்றம் மேற்கொள்ள வேண்டும்” என்று அந் நாளைய காங்கிரஸ் அமைச்சர் சி. சுப்பிரமணியத்திடம் ஜீவா கேட்டுக் கொண்டது, இன்றைய நிலையிலும் உண்மையாக அல்லவா இருக்கிறது.

முள்ளிவாய்க்கால் பகுதியில் நடந்தேறிய தமிழ் மக்கள் படுகொலைகளைப் பற்றி அறிந்திருந்தும் நாம் மரக்கட்டைகளாக இருப்பது வேதனை யளிக்கிறது.  பிரபஞ்சத்தில் தமிழ்க் குடும்பத்தினர் 10 கோடிப் பேர் இருக்கின்றனர்.  சிலிக்கான், நாசா உள்ளிட்ட உலக நாடுகளில் முன்னணியில் இருப் பவர்கள் தமிழர்களும் ஈழத் தமிழர்களும்.  கனடாவில் தமிழ்ப்பெண் ராதிகா அந்த நாட்டின் நாடாளு மன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது எத்தனை பெருமையான விஷயம்!

மிகச் சரியான மாற்றங்களைக் கொண்டு வரும் முழுமையான சீர்திருத்தக் கருத்துக்களாக ஜீவாவின் கருத்துக்கள் முன்நிற்கின்றன.  அவற்றைப் பயன் படுத்தி மிகத் தவறான அரசியல் மாற்றங்களை யெல்லாம் உடைத்தெறிந்திட வேண்டும்.

இலத்தீன் அமெரிக்காவின் 12 நாடுகளில் அவற்றின் சமூக இனங்கள் இணைந்துதான் அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்த்து விடுதலை பெற்றிருக்கின்றன.  அந்த வெற்றிக்குப் பின்னால் அந்நாடுகளின் பண்பாட்டு அரசியல் சிறப்பாகப் பங்கு வகித்தன என்பதை மறுக்க முடியாது.  அதே போன்றும் தமிழ்ச் சமூகத்துக்கென்று தனித்துவமான ஒரு பண்பாட்டு அரசியல் உண்டு.  அதனை மேன்மைப் படுத்தி வளர்த்தெடுக்க வேண்டும். 

ஈழத் தமிழர் பிரச்சினைக்கான டில்லிப் பேரணிக்கு பீகார் மாநிலத்திலிருந்து விஜயேந்திர கேசரி என்னும் இளைஞர் வந்திருந்தார்.  ‘அவர் ஏன் இந்தப் பேரணியில் கலந்துகொள்ள வந்தார்?’ எனக் கேட்ட போது “நான் இந்தி மொழி பேசுபவன் அல்லன்.  எனது தாய்மொழியான ‘மைத்திலி போஜ்புரி’ மொழியினை இந்தி மொழி அழித்து விட்டது.  மராட்டிய மொழியையும் அழித்துக் கொண்டிருக்கிறது.  இவ்வாறான மொழி, இன அழித்தொழிப்பு கண்டிக்கப்படத்தக்கது” என்றார்.

2000, 3000 ஆண்டுகளாக முதன்மை பெற்ற, பழமைமிக்க மொழிகளையெல்லாம் சமஸ்கிருதமும், இந்தியும் போட்டி போட்டுக் கொண்டு அழித்து வருகின்றன.  அந்தந்த மொழி பேசும் இனங்களும் அழிக்கப்பட்டு வருகிற இந்த நிலையில் நாம் ஜீவாவின் வழியில் தீரமிக்க போராட்டங்களை நடத்திடுவோம்.  அவற்றினை ஏற்றுக்கொண்டு மேல் எடுத்திடுவோம்.

சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ் இலக்கியத் துறையின் சார்பில் தோழர் ஜீவானந்தம் நூற்றாண்டு நினைவு அறக்கட்டளைச் சொற் பொழிவு பிப்-27-இல் சென்னை மெரினா கடற்கரை பரிதிமாற் கலைஞர் வளாகத்திலுள்ள பவள விழாக் கலை அரங்கில் நடந்தேறியது.

சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த் துறைத் தலைவர் பேராசிரியர் வீ.அரசு வரவேற்புரை நிகழ்த்தினார்.  திரு.ஏகாம்பரம் நன்றியுரையாற்றினார்.  இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களில் ஒருவரும் தாமரை இலக்கிய இதழ் ஆசிரியருமான சி.மகேந்திரன் பங்குகொண்டு தமிழக அரசியல் வரலாற்றில் ஜீவா என்ற தலைப்பில் ஆற்றிய சொற்பொழிவின் தொகுப்பே இக்கட்டுரை.

உரைத் தொகுப்பு: ஜனசக்தி இசைக்கும் மணி

நன்றி : ஜனசக்தி நாளிதழ் / 4-3-2012

Pin It