நான்கு நெறிகள்

கி.பி. 450 - 600 காலப்பகுதியில் வஞ்சி நகரில் ஓங்கிய கேள்வியில் உயர்ந்தோர் பலர் இருந்தனர்; அவர்பால் சென்று அறிந்த பொருளை மற்றவர் கேட்பர். அவர்களிடம் உயிர்களையும், உருவ முடைய பொருள்களையும் படைப்போர் யார்

என வினாவுவர்; அவர்கள் விளக்கம் உரைப்பர். வஞ்சி நகரம் சேரர் தலைநகராம் கருவூர் ஆகும். மேற்குக் கரையும், கிழக்குக் கரையும், இலங்கையும், வேங்கடம் கடந்த கங்கைப்புறமும் தொடர்பு கொண்டிருந்த நகரம். மேற்குக் கரையும், கங்கைக் கரையும், மத்திய தரைக்கடல் பகுதிகளான எகிப்து, கிரேக்க - ரோமாபுரி, அந்தியோக், அரபுப் பகுதி களுடன் தொடர்புற்று இருந்தது. இப்படியான ஒரு பரந்துபட்ட நெருங்கிய தொடர்புகள் கொண்ட தமிழகப் பகுதியில் கரூர் மையமாக இருந்தது. அப்படிப்பட்ட நகரில் கேள்வியில் உயர்ந்த ஞானியர் இருந்தனர்.

உருவமுடைய கடவுள் உயிர் மற்றும் உருவமுடைய அனைத்தையும் முறைமையில் படைத்தான் என்று ஒழுங்கு முறைமை பற்றிய உருவக்கடவுள் நெறியினரும், உருவம் இல்லாத கடவுள் பிற உருவமுடைய உயிர்ப் பொருள்களையும், அஃறிணைப் பொருள்களையும் படைத்தான் என்று அருவக் கடவுள் நெறியினரும், வினையும், இவற்றின் பந்தங்களும் நீங்கிய பின், இந்த உலகத்து உச்சியில் இருப்பர் எனக் கூறும் முக்திநெறியினரும், பஞ்ச பூதங்களின் சேர்க்கையில் உயிர்கள், பொருள்கள் தோன்றும் என்பவர்களான உலகாயதநெறியினரும் அந்த நகரில் குறிப்பிடும்படியாக இருந்தனர் (மணி மேகலை.21.92--102). இந்த நிலை கி.மு.800 முதல் கி.பி.300 வரையான தமிழகச் சிந்தனையின் குவி மையம். அடுத்து மலர்ந்த பக்தி காலத் தொடக்கத்தின் விரி மையம். இது அன்றைய தமிழகத்துச் சிந்தனையின் வரலாற்று நிலை என்பது உறுதி.

சாத்தனார் மணிமேகலையில் அறுசமய நெறியினர், வேதம் சார்ந்து, வேதம் சாராது என்ற வகையான பிரிவினராக அல்லாமல், இந்த நான்கு நெறியினராகக் காட்டியது விதந்து சுட்டுவதற்குரியது. மணிமேகலை பூதவாதியைச் சந்தித்தாள். மறுப்பு உரைத்தாள். அதோடு கடவுள் நெறிகொண்ட சைவர், வைணவர், பல கடவுள் முறைமை கொண்ட வைதிகர் ஆகியோர் அளித்த விளக்கத்தைக் கேட்டாள். மறுப்பு உரைக்கவில்லை.

வினை, பந்தம் நீக்கி, உலகத்து உச்சியில் பிறவாநிலையில் இருப்போர் கேவல ஞானம் பெற்ற சமணராவார். மனித உயிரே / ஆன்மாவே அப்படி யான பிறவா நிலை அடைகிறது. இது படைப்புக் கடவுள் ஆவதில்லை. படைப்புக் கடவுளை ஏற்காத சமணரைக் கூடச் சந்தித்துச் சமயத்திறம் அறிந்தாள். ஆனால் தனக்கென உருவம் இல்லாத கடவுளை முதல்வனாக வழிபடுவோரைக் கண்டு அவர்தம் சமயத்திறம் அறியவில்லை. இது வியப்பே!

தமிழகத்தில் அப்பாலைத் தத்துவம்

சாத்தனார் அளவையியல், சைவம், வைணவம், வேதநெறி, ஆசீவகம், சமணம், சாங்கியம், வைசேடிகம், பூதவாதம் (உலகாயதம்) ஆகிய நெறி சார்ந்த சமயக் கணக்கரைத் தம் திறம் உரைத்ததாகச் சுட்டுகிறார். இது அவருடைய மெய்யியல் ஞானத்தைப் புலப் படுத்துவது மட்டுமே.

திறம் அறிந்தபின் மணிமேகலை ஐவகைச் சமயமும் அறிந்தவளாகக் காட்டப்படுவதும் இதனை அனுசரித்துக்கொண்டதே ஆகும். அளவையியல், ஆசீவகம், சமணம், சாங்கியம், வைசேடிகம் ஆகியன அந்த ஐந்துசமயங்கள். இவை கடவுள் என்பதைச் சம்மதிக்காதவை. ஆயினும் உடல் வேறு, உயிர் வேறு என்று உரைப்பன. வேதவாதம், சைவம், வைணவம் ஆகியன கடவுளைச் சம்மதிக்கும். இவையும் உடல் வேறு, உயிர் வேறு என்று உரைப்பன. இவற்றில் இருந்து மாறுபட்டு உலகாயதம் (பூதவாதம்) மட்டும் உடலும், உயிரும் ஒன்று என்று விளக்கி விவரிக்கும். உருவக்கடவுளரைச் சைவர், வைணவர், வேதவைதிகர் அனுசரித்தனர். அளவையர், சமணர்(நிகண்டர்), வைசேடிகர் உலகியல் உருவப் பொருள்களை மட்டும் அனு சரித்தனர். இவர்கள் அணுவியலாளர். இவர்களது திறத்தின்படி அணு என்பது பக்கங்கள் அற்ற ஒற்றை மூலப் பொருள்; கடவுள் அன்று, அணுக்களின் சேர்க்கையும் கடவுளால் நிகழ்வதன்று.

சாங்கியம் மூலப்பிரகிருதி என்ற பருப்பொருளை ஆதிமூலமாகக் கொண்டு உரைத்தது. இந்த மூலப் பிரகிருதி என்றும் உள்ளது, பிறப்பற்றது, படைக்கப்பட்டது அன்று. பண்பு உடையது. இதிலிருந்து பலவகை உருவப்பொருள்கள் உண்டாகின்றன. சாங்கியம் புருஷன் என்ற ஒரு அருவப் பொருளை அனுசரித்துக் கொள்கிறது. ஆனால் இந்தப் புருஷன் கடவுள் அல்லன், படைப்பாளியும் அல்லன், எனினும் உருவம் அற்றது. பூதவாதியர் உருவமுடைய பருப் பொருட்களை உரைத்தவர். இவர் அணுவியலாளர் அல்லர். மேலும் கடவுளை அனுசரிக்காதவர், கடவுள் படைப்பு என ஏற்காதவர். பௌத்தம் அணுவாதத்தை உடனுரைப்பது ஆகும். கடவுளின் படைப்பை ஏற்காதது. அறுவகைச் சமயங்களான சைவம், சமணம், சாங்கியம், வைசேடிகம், வேத வாதம், பூதவாதம் ஆகியவற்றுள் மணிமேகலை மீமாம்சையை உரைக்கவில்லை. சமயக்கணக்கராக உரைக்கப்பட்ட வேதவாதி சைமினி வழிப்பட்டவர் அல்லர். யசுர் மற்றும் சாமவேதங்கள் மட்டும் அவர் அறிவார். இருக்கு மற்றும் அதர்வணம் அவர் அறியார்.

தொல்காப்பியம் காட்டும், மாயோன், சேயோன், வேந்தன், வருணன் அப்போது படைப்புக் கடவுளர் அல்லர். புறநானுறு காட்டும் திருமால், சிவன், பலராமன், முருகன், இராமன் ஆகியோர் அப்போது படைப்புக்கடவுளர் அல்லர். திருமாலும், சிவனும் சமயத்துறையிலும், மெய்யியல் துறையிலும் உருவம் உடைய கடவுளராகவே விளங்கினர். கந்திற் பாவை வாயிலாக உருவம் உடைய கடவுளராகக் கூறப் படும் திருமாலும், சிவனும் இப்போது படைப்புக் கடவுளாகத் திகழ்ந்தனர். மற்றவர் வரம்தரும் வழிபடு கடவுளரே.

புறநானூற்றில் உறையூர் முதுகண்ணன் சாத்தனார், சோழன் நலங்கிள்ளியை எடுத்துக் கூறிச் சுட்டுவது சமூகத் துறையில் நோக்கத்தக்கது. வானியல் பொருட்களில் சூரியன், இதனைச் சூழ்ந்த மண்டிலமும், காற்றின் திசையையும், ஆதாரம் இன்றித் தானே நிற்கும் ஆகாயத்தையும் நேரில் சென்று அளந்து அறிந்தவருடைய அறிவாலும் அறியப்பட இயலாதவன் சோழன் நலங்கிள்ளி எனக் காட்டுவது நினைக்கத்தக்கது. புறப்பொருளுக்கும், அது சார்ந்த அறிவுக்கும் மேலான ஒன்று உள்ளது என்ற கருத்தியலின் சமூக வடிவமே நலங்கிள்ளி. இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி தான் பிறருக்கு உவமம் ஆவான், பிறர் இவனுக்கு உவமம் ஆகார். மேலான ஒன்று தோன்றி வருவதன் காட்சியே இது. இப்படி அப்பாலான ஒன்றை உருவம் உடைய திருமாலாகவும், சிவனாகவும் சமயத்துறையில் காட்டினர். தன்நேர் இல்லாதவர், தனக்கு உவமை இல்லாதவன் என்பது அவனுக்கு அவனே நிகர் என்பதாகி, தானாகவே தானாய் இருப்பது என்ற கருத்துநிலை தோன்றி வருவதன் காட்சியே இது. மனித உணர்வுக்கும் மேலே அப்பாலான ஒன்று உருவாவதன் நிகழ்வே இது.

பொருள், உணர்வு நிலை என்ற இரண்டில் உணர்வு மேலானது, பொருள் அதற்குத் தாழ்ந்தது என்ற நிலை அல்லாமல், இரண்டிற்கும் மேலாய் அப்பாலைத் தத்துவம் தோன்றும்போது, பொருள் தனது தகுதி நிலையில் தாழ்வதோடு, சாத்தனார் மெய்ப்பொருளை அறிய மெய்யுணர்வு என்பது அகத்தினில் திகழ்ந்துகொண்டு இருக்க வேண்டும் என்ற கருத்தியலாக உணர்வை முன்னிறுத்தினார். இந்த நேரத்தில் உருவமற்ற படைப்புக் கடவுளே அனைத்து உருவங்களையும் படைக்கிறது என்ற கருத்தியல் மத்திய தரைக்கடல் பகுதியில் இருந்து கடல் கடந்து மேற்குக் கரை அடைந்து இங்கு யவனரால் விளக்கம் கொண்டது. அவரது வழிபாட்டுத் தொல் பொருள் தரவுகள் கிடைக்கின்றன. எனினும், யவனரது மெய்யியல் பற்றிய அப்போதைய தரவுகள் தமிழக மண்ணில் காணக் கிடைக்கவில்லை. இருப்பினும் அவர்களது மண்ணில் போற்றிக் காக்கப்பட்டு ஆய்வாளர்களுக்கு இன்றும் கிடைக்கின்றன. (எகிப்திய பெர்நிகே, குவாசிர் அல் காசிம் துறைமுகப் பகுதிகளில் கணன், சாதன், கோற்பூமான் போன்ற தமிழ் வாணிகர் பற்றிய தரவுகள் கிடைத்தாலும், தமிழர் தத்துவம் அங்குக் காணக் கிடைக்கவில்லை. இங்குதான் கிடைக்கிறது.)

உறையூர் முதுகண்ணன் சாத்தனார் ஞாயிறு, வானியல் பொருட்களைக் குறிப்பிட்டு, நேரில் சென்று அளந்து, அறிந்த பெரும் அறிவுபற்றிக் குறிப்பிட்டார். இவை மட்டும் அல்லாது கடல், கடல்படு பொருட்கள், நிலம், விளைபொருட்கள் என்பன அளவுக்கும் அறிவுக்கும் உட்படுவன. இவை பஞ்ச பூதங்களால் ஆக்கப்பட்டு அவற்றின் சேர்க் கையால் உயிர் / உணர்வு / அறிவு தோன்றி, தம்மி லிருந்து சந்ததித் தொடர்ச்சிகளைப் பிறப்பித்து அளவு, பண்போடு இருப்பவை. சுஸ்கிருத ஸம்ஹிதை பொருட்கள் பிறக்கும், இன்னொன்றைப் பிறப்பித்து விட்டு மறையும், எனினும் பொருட்கள் நித்திய மானவை என்றது. இதை உலகாயதம் அனுசரித்துப் பொருளும் அளவும் இவைகளின் மாற்றமும் என்றும் இருப்பன என உரைத்தது.

உலகாயதம் அல்லாதவை ஏதேனும் ஒரு வகையில் பொருள் அநித்தியமானது என்றன. பிறந்தது எதுவானாலும் அழியும் என்றது பௌத்தம். செய்யப்பட்டவை, வடிவமுடையன அழியும் என்றது நியாயம். பகுதிகள், உறுப்புகள் உடையன அழியும் என்றும், தொகைப் பொருட்கள் அழியும் என்றும் வைசேடிகம் உரைத்தது. காரணத்தி லிருந்தும், பிறந்த காரியங்களும், பொறிகளால் உணரப்படுபவையும் அநித்தியமானவை எனச் சமணம் உரைத்தது. இப்படிப் பொருள் நிலை யாமை ஆனவை என உரைத்தன. சாத்தனார் சார்புப் பொருட்கள் அழியும் என்று கூறியதோடு பொருட்கள் வெறுமையானவை என்ற எல்லைக்கு வந்திருந்தார் என்பது விதந்து சுட்டுதற்குரியது.

அறிவு, உணர்வு, மட்டுமல்லாமல் ஆன்மா என்ற ஒரு அகவயப்பொருள் இப்போது உணரப் பட்டு விளக்கப்பட்டது. ஆன்மா என்பது உடல், பொறிகள், உணர்வுகள், அறிவு, மனம் அன்று; இவைகள் அல்லாதது. உருவமற்றது, அளவு, பண்பு அற்றது. நித்தியமானது; அது உடலோடு கூடி உள்ளது. இதிலிருந்து பிரியும், மீண்டும் இன்னொரு உடலில் சேர்ந்து நிலவும். இப்படிப் பிறந்து, பிறந்து மீண்டும் மீண்டும் இந்தப் பொருட்களோடு வாழாமல், நிலையாக ஓரிடத்தில் பிறவாது இருக்க வேண்டும் என உலகாயதம் அல்லாத நெறிகள் உரைத்தன.

உறையூர் முதுகண்ணன் சாத்தனார், கணியன் பூங்குன்றன், பக்குடுக்கை நன்கணியார், நரிவெரூஉத் தலையார் ஆகியோர் தத்தம் வழியில் பிறவா நிலை நாடியவர். திருவள்ளுவர் உடலில் உள்ள உயிருக்கு நிலையான ஓர் இடம் அமைய வில்லை போலும் என நெட்டுயிர்த்தார். எனினும் உயிர் மீண்டும் பிறவாநிலையையே வலியுறுத்தினார். புறப்பொருளோடு, உடலோடு கூடி வாழ்வதை விட்டு உயிரானது உலக உச்சியில் கேவலநிலை அடைந்து கடையிலா இன்பம், அறிவு, காட்சி, வீரியத்தோடு அனைத்தையும் அறிந்தபடி இருக்கும் என சமணர் உரைத்தனர்(நியமசாரம்.176). உடல் விட்டு உடல் செல்லும் உணர்வுகளின் தொகுதி, சிந்தனை, செயலற்ற நிலையில் இருப்பதுவே இறுதி நிலை எனப் பௌத்தர் உரைத்தனர் (தீ கநிகாயம்). துறக்கம், மேலுலகம் சென்றாலும் உயிர் மீண்டும், மீண்டும் வரும் என்பது உலகியல் வாழ்வாகக் குறிப்பிட்டனர்.

யவனர் போற்றிய அப்பாலைத் தத்துவம்

சாத்தனார் காலத்தில் யவனர் (யூதர், கிரேக்க-ரோமர், எகிப்தியர், சிரியன்கிறித்தவர்) போற்றிய அப்பாலைத் தத்துவமானது இங்கு நிலை கொண்டு இருந்தது. பொருள் மற்றும் உணர்விற்கு / ஆன்மா விற்கும் மேலே, முன்னமேயே, அப்பாலைத் தன் மையில் நித்தியமான, உருவமற்ற இறைவன் இருக் கிறான் எனத் தமிழக வழக்கில் விளக்கம் கொண்டு நின்றது. ‘அந்த இறைவன் தானே இருப்பவன், பிறப் பிலி. ஆதிமூலம். ஆன்மா உட்பட அனைத்திற்கும் மேலானவன். எவையும் அவன் இன்றி நிலவா. ஆனால் எவையும் இன்றி அவன் நிலவுவான். அவனிடமிருந்தே அனைத்தும் வந்து நிலவி, மீண்டும் அவனிடம் அடங்குகின்றன என்ற மெய்யியல்

வீறு கொண்டது. பிறப்பற்ற ஆதிமூலமான இறை வனோடு இருப்பதுவே உண்மையான, நித்திய மான வாழ்வு. மீண்டும் மீண்டும், பிறந்து பிறந்து வாழும் இந்த வாழ்வு துன்பமானது. இதிலிருந்து மீண்டு அந்த நிலையான, பிறப்பற்ற இறைவனோடு இருப்பதுவே நித்தியமானது, இன்பமானது என்ற கருத்தியல் உறுதியாய் நின்றது.

சங்க காலத்தில் கி.மு. 300--200 அளவில் வேத நெறியின்பாற்பட்ட வேள்வி, யூபத்தூண் ஆகியன தமிழகத்திற்கு வந்து நிலைத்தன. வணிகப் பெரு வழிகள் வழியாக வணிகர்களோடு வந்திருக்கலாம். பல்யாக சாலை முதுகுடுமிப் பெருவழுதி குறிப்பிடற் குரியவன். அவன் பெருவழுதி எனப் பொறித்த காசு களும் வெளியிட்டான். இக்காசுகள் கி.மு. மூன்றாம் நூற்றாண்டுக்குரியன. அப்போது வேதத்தில் பயிற்சி பெற்றோர், நான்மறை முனிவர் எனப்பட்டனர். அப்போது தைத்திரியம், பௌடிகம், தலவகாரம், சாமவேதம் அவர்களது பயிற்சியில் நிலவியது. உபநிடதப் பகுதிகளில் பயிற்சி இருந்ததாகத் தெரிய வில்லை. ஆதலால் பிருஹதாரண்யம், சாந்தோக்கியம் மற்றும் கௌடபாதகாரிகை சார்ந்த கருத்தியல்களின் பயிற்சி பிற்காலமாகும். கங்கைக் கரை முதல் மத்திய தரைக்கடல் வரையான பகுதியில் நடந்த மக்கள் மற்றும் வணிகப் போக்குவரத்து காரணமாக நிகழ்ந்த ஊடாட்டங்களால் உபநிடதக் கருத்தியல்கள் உருப்பெற்றன. அவை தமிழகத்திற்குப் பிற்காலத்தில் வந்தவையாகும்.

கி.மு.முதல் இருநூற்றாண்டு சார்ந்து யூத சமயம் தமிழக மேற்குக் கரைக்கு வந்து இன்றளவும் உள்ளது. கி.மு.ஆறாம் நூற்றாண்டு அளவில் ஒரு கடவுள் கொள்கையைப் பெற்றது அது. கி.மு.40 -- கி.பி.40 காலத்தில் அலெக்ஸாண்டிரியாவில் வாழ்ந்த பிலோ என்ற யூத ஞானி, யூதர் தமது பைபிளை வாசித்து அப்பாலான கடவுளை விளக்கினார். அப்பாலான ஒரே கடவுள் தூயமனத்தைப் படைத்து உலகுக்கு உரியது ஆக்கினார். புலன் உணர்வுகள் அதற்கு அளித்து உடல் அமைத்தார். புலன் உணர்வுகள் வழியாக அந்த மனம் தீய வழிகளில் செல்ல அனுமதித்தார். துறவுப் பயிற்சி, அற நெறிகள், கடவுளின் இயல்பான இயற்கை அருள் கொண்டு அந்த மனத்தைத் தூயது ஆக்குகிறார். தனக்கும், படைக்கப்பட்ட மனம் (அ) ஆத்மா விற்கும் இடையே கடவுளின் மகன் லோகோ-மூலம் உலகைப் படைத்தார். இவைகளின் வழியாக மனம் (அ) ஆத்மா கடவுளை அடைகிறது. ஹெல்லனிய காலத்தில் ஸ்தோயிக் தத்துவத்திலிருந்து லோகோ பற்றிய கருத்தியலைப் பிலோ அனுசரித்துப் பெற்றார். அதன் வழி ஸ்தோயிக் தத்துவம் யூத சமயத்திலும் முத்திரை பதித்தது. தமிழக மேற்குக் கரை வாணிகம் வழியுடன் வரும் யூத சாதுக்கள் மூலம் இங்கிருந்த யூத சமூகத்தினர் அப்பாலைத் தத்துவத்தினைப் பெற்றனர்.

தமிழக மேற்குக் கரையில் வாழ்ந்த நெஸ்தோரிய கிறித்தவர் அப்பாலான கடவுளைப் போற்றினர். சிரிய தேசத்து அந்தியோக் நகரைத் தலைமையகமாகக் கொண்டு இங்கு வாழ்ந்த சிரியன் கிறித்தவர் நெஸ் தோரியர் பிரிவை மேற்கொண்டவர். இயேசு கிறிஸ்துவை மேரியின் மகனாக மட்டும் ஏற்றுப் பேசினர். மற்றபடி ‘அப்பாலைக் கடவுள் உலகைப் படைத்து, மனிதனை உண்டாக்கி உலகில் வாழ விட்டார். மனிதன் தீய வழியில் சென்றான். அவனை அதிலிருந்து மீட்டுத் தன்னிடம் அழைத்துக் கொண்டார்’ என்ற கருத்தியலை இன்றளவும் கொண்டுள்ளனர்.

ஹெல்லனிய காலத்து இறுதியில் ஸ்தோயிக் தத்துவத்தின் இறுதிக் காலத்தில் அதனுள் பிளாட்டோ, அரிஸ்டாட்டல், பிதகோரியன் கருத்தியல்கள் ஊடாட்டம் கொண்டன. அதனால் புதிய பிளாட்டோனியம் உருப்பெற்றது. கி.பி.150 முதல் 300 வரை அது நிகழ்ந்தது. பிளாட்டனஸ், போர்பைரி ஆகியோர் இதன் ஆசிரியர்கள். மேலான ஒன்று, அறிவு, ஆன்மா என்ற முப்பொருளைக் கூறினர். அந்த ஒன்று முழு நிறைவானது. பூர்ண மானது, வடிவம், பண்புகளற்றது. எல்லையற்றது, ஏகமானது, வேறுபாடுகளற்றது, பகுதிகளோ, பிரிவுகளோ, உறுப்புகளோ அற்றது. ஒன்றானது. சுதந்திரமானது, முதன்மையானது, நிர்ணயமற்றது. அதனிடம் பங்கு வகிக்கலாம். ஆனால் உணர முடியாத அளவுக்கு மேலானது. அந்த ஒன்று அறிதல், அறியாமை வேண்டாதது. எல்லாம் அறியும், அறிய வேண்டியது ஒன்றும் இல்லை! அதை விளக்க இயலாது. மதிப்பிட முடியாது. உணர எட்டாது. ஒன்று நல்லது. உயர்ந்த தத்துவம். எதுவும் தேவையில்லாதது, வேண்டாதது. அனைத் தையும் படைக்கிறது. எனினும் எதனுள்ளும் அது நிலவவில்லை. உட்புகுந்து குடி கொள்ளவில்லை. பிரவேசித்து விளக்கம் கொள்ளவில்லை. பண்பும், அளவும், ஆன்மாவும், ஆவியும் அன்று. இயக்கம், ஓய்வு, காலம், இடம் இல்லாதது. அனைத்தையும் படைத்து உண்டாக்கிய பின்பு அது அப்படியே உள்ளது.

இது மனத்தைப் படைக்கிறது. அது அறி வானது. அறிவு, அறியப்படும் பொருள் என்ற இருநிலைகள் கொண்டது இதன் சிறப்பு. புறப் பொருளும், மனம் (அ) அறிவும், சேரும் போது மனத்தின் ஆற்றல் உண்மை நிலை ஆகிறது. அறியப் படும் புறப்பொருளும், அறியும் அக அறிவும் ஒன்று போல இருக்கும் என்பதைப் புதிய பிளாட்டோனியம் ஏற்கவில்லை. அறிவு வெளியே இல்லை. மனத்திற்கு அப்பால் உள்ஆழ்நிலையில் உள்ளது. மனம் ஆன்மாவை உண்டாக்குகிறது. இந்த ஆன்மா அறிவுலகாக விரியும், பிரியும். ஆனால் அறியப் படும் பொருள் உலகு ஆகாது. அறிவு உலகுக்கும் உணரப்படும் உலகுக்கும் இடையே நின்று அறிவு உலகில் சூழ்ந்து போகிறது. அப்போது, உணரப் படும் புலஉலகை ஆக்குகிறது. அதே சமயம் பல ஆன்மாக்களை உண்டாக்குகிறது. அதுதான் அவை, ஒன்றே பலவாக உள்ளது. இந்த ஆன்மாக்கள் தமது உடலை உண்டாக்குகின்றன. ஆன்மா அழியாதது. இது வானுலக நில உலகப் பொருள்களை உண்டாக் கியது. அவைகளை விளக்கம் செய்கிறது. ஆன்மா இல்லையெனில் புறப்பொருள்கள், உயிர் அற்றவை, ஜடம். இவைகளின் மேல் ஆன்மாவிற்கும் மேலான அறிவிலிருந்து வரும் உணர்வுகள், புலன் உண்டாக்க அதனால் ஆன்மா இருப்பு கொள்கிறது.

புறப்பொருள் முழு உண்மை. வரம்பற்றது. நிர்ணயமற்றது. வடிவம் தன்னுடைய இருப்பால் பொருளை நிர்ணயமாக்க இயலவில்லை. வடிவம் நீங்கும்போது பொருள் நிர்ணயமற்றதாகிறது. பொருள் உணர்வற்றது. வறுமையானது. பொருள் தீயது. கெட்டது. உள்ளதன் தன்மைக்கு எதிரானது. ஆன்மா புறப்பொருளோடு தொடர்புறும்போது பொருளை ஆக்கி வடிவம் தருகிறது. அதனுள் நுழைகிறது. களிப்பை அளிக்கிறது. பொருளை விட்டுத் தப்பி வெளியேறினால் தீங்கு வராது, விட்டுவிட இயலாத அவாவுடன் பொருளில் மூழ்கும் போது ஆன்மா, பொருளால் மாசு அடைகிறது. ஆன்மாவே தீயது ஆகிறது. இதிலிருந்து நீங்கி ஆன்மா தூய்மை பெறப் பொருளிலிருந்து வெளி யேற வேண்டும். உடலையும்விட வேண்டும். ஆன்மா மேலெழுந்து சென்று அந்த ஒன்றுடன் இணைந்து தனியாக நிலவுகிறது.

ரோமப் பேரரசின் ஹெல்லனிய கால இறுதியில் புதிய பிளாட்டோனியம் வீறுடன் நின்றபோது கிறித்தவம் எழுந்தது. ஸ்தோயிக் தத்துவத்தின் இறுதிக் காலக்கூறுகளைக் கிறித்தவம் தனது தொடக்க காலத்தில் கொண்டிருந்தது. எனினும் முதல் ஐந்து நூற்றாண்டுகள் வரை கிறித்தவம் தனது சொந்தத் தத்துவங்களைக் கொண்டிருக்கவில்லை. பிறத்தி யாருடைய தத்துவக் கூறுகளைக் கொண்டிருந்தது. செனேகா, எபிக்தேது ஆகியோரின் மெய்யியல் பகுதிகளைப் புனித பவுல் ஏற்றுக் கொண்டார். அதே சமயம் மனித மீட்சியைப் போற்றினார். ஒன்றும் இல்லாமையிலிருந்து உலகம் படைக்கப் பட்டது. மனிதன் மண்ணிலிருந்து உண்டாக்கப் பட்டான். அவன் முன் நிர்ப்பந்தமற்ற தெய்வீக விதி, மனிதனின் சுயதேர்வுத்தன்மை, மனித சித்தத்தினுடைய சுய சுதந்திரம், பாவத்திலிருந்து மீட்சி, எல்லாம் கடவுள் - மனிதன் உறவுப்படி, ஊழ், விதிப்படி அன்று என்ற கருத்தியல்களை அப்போது எடுத்துரைத்தனர். யோவானின் நான் காவது சுவிசேஷம் பிற்கால பிளாட்டோனியத்துடன் இணைப்புண்டிருந்தது. கடவுள் அனைத்தையும் படைத்தார். எனினும் எவற்றினுள்ளும் அவர் இடம்பெறவில்லை.

படைக்கப்பட்ட, செய்யப் பட்ட பொருள்களுக்குள் கடவுள் குடிகொள்ளு வதில்லை என்ற பிற்கால பிளாட்டோனியக் கருத்தியலைக் கிறித்தவச் சான்றோர்களான அலெக்சாண்டிரியா நகரத்துக் கிளிமெந்து, ஓரிகென் ஆகியோர் கொண்டிருந்தனர். புனித அகுஸ்த்தின் மற்றும் கப்பதோசியன் அருள் தந்தையர் புதிய பிளாட்டோனிய சார்பாளர். தமிழக மேற்குக் கரை நெஸ்தோரிய - சிரியன் கிறித்தவர் இவர்களுடைய செல்வாக்கிற்கு உட் பட்டவர் என்பது உறுதி செய்யப்படாத செய்தி. எனினும் புதிய பிளாட்டோனிய சிந்தனைத் தாக்கம் கொண்டவர் இங்கு வந்திருக்கலாம். அவர்கள் கிறித்தவர்களாகவும் இருக்கலாம். கிறித்தவர் அல்லாதவராகவும் இருக்கலாம். தமிழகத்தில் கிரேக்க-ரோமக் காசுகள் கி.பி.ஐந்தாம் நூற்றாண்டு வரையானவை தரவுகள் கிடைத்துள்ளன. யவனர்கள் பெருங்கதை காப்பியத்திலும் குறிப்பிடப்படுகின்றனர். ஆதலால் புதிய பிளாட்டோனியத் தத்துவக் கருத் தியல்களில் பயிற்சி பெற்றோர் இங்கு வாழ்ந்ததாகக் கருதலாம்.

சங்ககாலத் தொடக்கத்தில் புறம் அகம் சமமாகக் கருதப்பட்டது. இறுதியில் அகம் முன்னிலை வகிக்கும் நிலை ஏற்பட்டது. கூடவே அரசு ஏற்பட்ட சூழலில் புறம் அகம் இரண்டிற்கும் மேலான அறிவு இங்கு உணரப்பட்டது. இந்த நேரத்தில் அப்பாலைத் தத்துவம் இங்குப் பேசப் பட்டது. அப்பாலைத் தத்துவம் தமிழர் வாழ்வில் விளைந்தது. அன்று, கிரேக்க - ரோம வணிகத் தாலும் வந்தது. அப்பாலைத் தத்துவம் பற்றிய விளக்கத்தில் ஒன்று அதைப் போன்ற ஒன்றையே தோற்றுவிக்கும். புறப்பொருள் சடம், சடம் சடத்தையே பிறப்பிக்கும் என்ற கொள்கை சிறப் பிடம் பெற்றது. உணர்வு அப்பாலான ஒன்றிலிருந்து வருவது. உணர்விலிருந்து உணர்வே தோன்றும். உணர்வு / ஆன்மா சுதந்திரமானது. புறப்பொரு ளோடு அதற்குள்ள உறவு எதிர்மறையானது. தீமையானது. மேலும் அப்பாலான அந்த ஒன்று சடப் பொருளில் குடிகொள்ளவில்லை. அப்படிக் குடிகொள்வது என்பது எதிர்மறையானது.

இந்த நிலையில் இங்கிருந்த உலகாயதம், ஆசீவகம், இருந்ததாகக் கருதப்படும் வைசேடிகம், சாங்கியம் ஆகியனவற்றின் இயல்புகள் அப்படியே இருந்தாலும் மறுப்புகளுக்குட்பட்டன.

பௌத்தத்தில் ஏற்பட்ட விளைவுகள்

நாகார்ஜுனர் மாத்யமிக பௌத்தம் கண்டவர், சூன்யவாதத்தை நிறுவியவர், உலகியல் பொருள் களே இல்லாத அலோகசம்விருத்தி நிலைமையில் மனித அகவியல் விஞ்ஞானம் படைத்துக்கொண்டதே இந்த லோக சம்விருத்தி நிலை. அனுபவ வாழ் வுண்மை, எனினும் பிழையானது. இதை விளக்க பிரதீத்ய சமுத்பாத முறையியலை மேற்கொள்ளு கிறார். பிறந்தது அழிவுறும் என்ற கருத்தியலைக் கொண்டு செலுத்தி அனைத்தும் சூன்யம் என விளக்குகிறார். இந்த லோக சம்விருத்தி அனுபவம் வழியாகப் பரமார்த்த சத்தியத்தைக் காண்

கிறார். உள்ளுணர்வுக்கும் அப்பாலுக்கு அப்பால் உள்ளார்ந்து உணர்கிறார். இந்தப் பரமார்த்தம் இருமையற்ற உள்ளுணர்வு அனுபவம். புறப் பொருளால் தரப்படும் அனைத்து உட்பொருளையும் ஏற்பது. நிர்வாணம் என்ற தான், எனது நிலைக்கும் அப்பாலானது. தானே உள்ளே உணரப்படுவது எல்லையற்றதாக, சொல்ல இயலாத அமைதியுடன், புறப்பற்று அகப்பற்று நீங்கி, யான், எனது என்ற தன்னிலை கடந்த உள் ஆழ்ந்த இருமையற்ற பேருணர்வு. இதனை ஒப்ப ஒரு நிலைமையை வசுபந்துவின் ஆலய விஞ்ஞானம் கொண்டிருந்தது. கிரேக்க-ரோம, யூத, கிறித்தவ அப்பாலைத் தத்துவங் களுடன் கொண்ட ஊடாட்ட விளைவு இது ஆகும்.

நாகார்ஜுனர் பொருள்களின் பொதுத் தன்மையை ஏற்கவில்லை. ஆனால் பிறகு வந்த தர்மகீர்த்தி பொருள்களில் தனிப்பட்ட தன்மையும், பொதுத்தன்மையும் சேர்ந்தே உள்ளன. எனினும் பொருள், பண்பு என எதுவும் இல்லை. பல தன்மைகள் சேர்ந்ததே பொருள் என உரைத்தார். பொதுத்தன்மையைச் சாமானிய லட்சணம் எனவும், தனித்தன்மையைச் சுவலட்சணம் எனவும் கூறிப் பொதுத் தன்மையின் மேல் சுவலட்சணத் தன்மை களை அதிகமாக வைத்து தருமகீர்த்தி உரைத்தார். பொருளின் சுவலட்சணம் சொந்த இயல்பானது, குறிப்பானது, தனிப்பட்டது, தனக்குள்ளானது என விளக்கினார். அதே சமயத்தில் கண நேரமானது என பிரதீத்யசமுத்பாத வழியில் பொருள்படுத்தினார். பொருள் தனிப்பட்ட தன்மை நடப்பில் உள்ளது ஆகும். பொதுத்தன்மை அனுமானத்தால் அறியப் படுவது ஆகும். சாத்தியமானதும் ஆகும். மேலும் பொருளின் தனிப்பட்ட தன்மையே பரமார்த்த சத்து, பொதுத்தன்மை உலக சம்விருத்தி சத்து எனவும் கொண்டார். இரண்டுமே அறியக் கூடியவை.

பொருள்களின் இயல்பு கணநேரத் தன்மையன. அழிவதுவும், ஆவதுவும் தொடர்ந்து நிகழ்கின்றன. காரணம் அழிந்து, காரியம் ஆகிறது. எனினும் காரணச் செயல்திறன் தொடர்ந்து உள்ளது என தர்மகீர்த்தி விளக்கினார். அப்படி இல்லையெனில் காரியம், எதுவும் அற்ற நிலையிலிருந்து பிறப்பதாக ஆகிவிடும். சூனியத்தில் இருந்து பிறப்பது தர்ம அழியும் என்ற நிலைக்கு முன்னேறுகிறார்.

சாத்தனார் எதையும் அப்பாலைப் படுத்த வில்லை. அகவய சூழ்நிலையில் ஆழ்த்தவும் இல்லை. கணபங்க வாதத்தை (க்ஷணிகநிலையை) அவர் மேற்கொள்ளவில்லை. எனினும் உணர்வுகளே பொருளை அர்த்தப்படுத்துகின்றன என்ற கருத் தியலைப் புலப்படுத்தினார். ஒரு பொருளினுடைய இருப்பு மட்டுமே உணரப்படுகின்றது. இதனுடைய பொருள், வடிவம், நிறம், குணம், சாதி என்ற ஐந்தும் காண்பவருடைய அகவய உணர்வுகளால் பஞ்ச கற்பனைகளாகத் தரப்படுகின்றன (மணிமேகலை. 29.49--51). அதே சமயம் பொருளின் புறநிலைத் தன்மையை ஏற்றார். இந்தப் பொருளைப் பற்றிய அறிவானது நேரடிக் காட்சி வழியில் புலப்படுத்தப் படுவது ஐயத்திற்கு உரியதுவே. மெய்யுணர்வு வழிப் பட்ட அனுமான அளவையே மெய்ப் பொருளைப் புலப்படுத்தும் என்று சாத்தனார் வலியுறுத்தினார் (மணிமேகலை.27.286--287). இது தமிழகப் பௌத்தத்தில் ஏற்பட்ட விளைவு ஆகும்.

ஆதார நூல்கள்

1)            அகளங்க கிரந்த திரயம்   அகளங்கர்    

2)            அங்குத்தர நிகாயம்             பௌத்த நூல்

3)            சாங்கியகாரிகை     ஈஸ்வர கிருஷ்ணர்

4)            சார்வாகம் / உலகாயதம்                தேபிப்பிரசாத் சட்டோபாத்யாயா

5)            தத்துவார்த்த சூத்திரம்      உமாஸ்வாதி

6)            தீகநிகாயம்  பௌத்த நூல்

7)            நியமசாரம்   குந்தகுந்தர்

8)            நீலகேசி          பெ.வெ.சோமசுந்தரன் (உரை)

9)            புத்ததர்க்கம்               ஸ்டெச்சர் பாட்ஸ்கி

10)          மணிமேகலை         சீத்தலைச்சாத்தனார்

11)          ஹெல்லனிய ரோமர் காலம்      சிகாகோ பல்கலைக்கழகம்

12)          Neoplatonism R.T. Wallis              Cambridge 1972

13)          Neoplatonic Philosophy John Dillon         Hackett Publishers          Cambridge 2004

14)          Philo of Alexandria          David Winston Paulist Press        Newyork 1981.

15)          The Neoplatonists Thomas Wittaker       Cambridge 1901.

16)          The Works of Philo Hindricson Publishers              Newyork 2004.

Pin It